SST— EPI 13

அத்தியாயம் 13

தொடக்கப் பள்ளிகளாக இங்கு தமிழ், மலாய், சீன பள்ளிகள் செயல் படுகின்றன. இவையாவும் அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. அதோடு ப்ரைவேட் பள்ளிகளும் இங்கே நிறைய இருக்கின்றன. அரசாங்கப் பள்ளி முடித்து பதிமூன்று வயதில் மூவினமும் இடைநிலைப்பள்ளியில் ஒன்றாக இணைவார்கள். இங்கே பாடங்கள் மலாய் மொழியிலே போதிக்கப் படுகின்றன. தத்தம் தாய் மொழியைப் பயில சனிக்கிழமைகளில் அல்லது பள்ளி முடிந்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

 

“என்னாது?” அதிர்ச்சியில் கூவினாள் மிரு.

குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எவ்வளவு அடக்கியும் சிரிப்பு புன்னகையாக வெளியானது.

“இங்க என்ன காமெடி ஷோவா நடத்தறேன் பாஸ்? ஈன்னு வச்சிருக்கீங்க முகத்த! நான் கஸ்டப்பட்டு மரியாதைய மேய்ண்டேய்ன் பண்ணுறேன்! என்னையும் மீறி எதாச்சும் சொல்லுறதுக்குள்ள எது என்ன ‘டெஸ்பெரேட்’னு ஒழுங்கு மரியாதையா சொல்லுங்க” படபடவென பொரிந்தாள் மிரு.

குருவுக்கு எப்பொழுதுமே அவளை வம்பிழுத்து கோபப்படுத்தி பார்ப்பதில் அவ்வளவு இன்பம். கோபத்தில் அவளது ‘ஐ டேண்ட் கேர்’ பாலிசியெல்லாம் தவிடு பொடியாகி கடித்துக் குதறி விடும் வெறியுடன் முகம் சிவக்க, உதடு துடிக்க, மூக்கு விடைக்க நிற்பதைப் பார்க்க பார்க்க அவனுக்கு செம்ம எண்டெர்டெயிண்ட்மெண்டாக இருக்கும். அதற்குப் பிறகு மூக்குடைப்பட்டு அவள் சிந்தும் அசட்டு சிரிப்பும் அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். இன்றும் அவனை ஏமாற்றாமல் முறைத்தப்படி நின்றாள் மிரு.

“ப்ரேக்பஸ்ட் சாப்டியா மிரு?”

“ஆச்சு, ஆச்சு! அடிச்சுப் புடிச்சு ஆன் டைம்கு வேலைக்கு வரதுக்குள்ள எல்லாம் கரைஞ்சும் போச்சு!”

கோபத்தில் கூட இவளுக்கு ரைமிங்காக பேச வருகிறதே என எண்ணியவனின் விழிகள் சிரிப்பைக் காட்டின.

“முதல்ல உட்காரு மிரு. சாப்டியான்னு கேட்டா, பதிலுக்கு நீங்க சாப்டீங்களான்னு கேக்கற பேசிக் மேனர்ஸ் கூட தெரியல உனக்கு”

‘ஷப்பா!!!! மறுபடியும் கிளாஸ் எடுக்கப் போறானா? முடியலடா சாமி!’

“சாப்டீங்களா பாஸ்?”

“இன்னும் இல்ல மிரு.  ரொம்ப பசிக்குது. வர வர என் எடத்துகிட்ட கிரேப், டாக்சிலாம் கிடைக்க ரொம்ப கஸ்டமா இருக்கு. அதனாலயே சீக்கிரமா கிளம்ப வேண்டியதா இருக்கு. நிம்மதியா காலை உணவு கூட எடுக்க முடியல”

“அடப்பாவமே! இந்த மாதிரி எமெர்ஜென்சி டைம்காக நான் பிஸ்கட் வாங்கி வச்சிருக்கேன். வேணுமா பாஸ்?” பசி எனும் வார்த்தையைக் கேட்டதும் இவளுக்குப் பாவமாகிப் போனது. ஆபிசில் கிளினிங் வேலை செய்பவனுக்கே உணவு கொடுப்பவள், சம்பளம் கொடுக்கும் முதலாளி பசி என்றதும் கோபத்தை மறந்து இரக்கத்தை தத்தெடுத்தாள்.

“பரவாயில்ல மிரு! நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கீழ போவேன். அப்போ சாப்பிட்டுக்குவேன்”

“ஓ சரி, சரி! எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு நான் போறேன் பாஸ்” என எழுந்தவள் மீண்டும் அமர்ந்தாள்.

“ஏன் பாஸ் அதையும் இதையும் பேசி பேச்ச மாத்தி விடறீங்க? அந்த டெஸ்பெரெட்லி என்னன்னு சொன்னீங்கன்னா, கேட்டுட்டு நான் பாட்டுக்கு போய் கிட்டே இருப்பேன்” என மீண்டும் முறைக்க ஆரம்பித்தாள்.

‘சை! இவன் கிட்ட எதையும் உருப்படியா பேச முடியாது. அங்கயும் இங்கயும் என்னைத் திசை திருப்பி கடைசியில பெரிய பல்பா குடுத்துருவான்’

“நான் இவ்வளவு நேரம் சொன்னத நீ சரியாவே கவனிக்கல மிரு! ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ் தெரியாம எப்படி நீ கிளையண்ட் மீட் பண்ணி அவங்க கிட்ட பேசி, ப்ராஜெக்ட முடிச்சுக் குடுக்கப் போற?” என ஆரம்பித்து ரீடிங் பிட்வீன் லைன்ஸ் பற்றி அரை மணி நேரம் பாடம் எடுத்தான் குரு.

இவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அவன் பின்னால் சுவற்றில் இருந்த கடிகாரத்தையும், அவன் மேசையில் இருந்த தண்ணீர் கிளாசையும், பக்கத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில தாள்களையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள் மிரு.

“மிரு!!!”

“யெஸ் பாஸ்”

“சொன்னது புரிஞ்சுச்சா?”

“யெஸ் பாஸ்! ஆனாலும் இந்த தடவை மட்டும் கொஞ்சம் விளக்கி சொல்லிருங்க பாஸ். நெக்ஸ்ட் டைம் அப்படியே பிட்வீன் லைன்லாம் கப்புன்னு புடிச்சுக்குவா இந்த மிரு”

“ஐ நீட் யூ டு பிக் மீ அப் எவ்ரி மார்னீங். ஐ நீட் தட் ஹெல்ப் டெஸ்பெரெட்லி மிரு”

‘அடப்பாவி! டேக்சி கிடைக்கல, பசியாற முடியலைக்கு ரீடிங் பிட்வீன் லைன் வந்து உனக்கு நான் ட்ரைவர் வேலைப் பார்க்கனும்ங்கறது தானா? அத நேரா கேட்டா உன் வாயில இருந்து ரூபி(எத்தனைக் காலத்துக்குத்தான் முத்தைப் புடுச்சு தொங்கறது) சிந்திருமா?’

“நான் வேலைக்கு ட்ரேன்ல தான் பாஸ் வரேன்!”

“வொய் வொய்? ஏன் ட்ரேன்ல வர? கார் என்னாச்சு?”

“கார் நல்லாத்தான் இருக்கு பாஸ்! இங்க பார்க்கிங் எக்ஸ்பென்சஸ்லாம் எனக்கு கட்டுப்படி ஆகாது. ஒரு ஹவர்க்கு இவ்வளவு விலைன்னு சொன்னா ஓகே! ஆனா முதல் ரெண்டு ஹவர்க்கு இவ்வளவு, அதுக்கு மேல போகற ஹவர்க்கு மீட்டர் வட்டி மாதிரி காச ஏத்திட்டே போறாங்களே இதெல்லாம் பகல் கொள்ளை பாஸ்! அதான் ட்ரேன்ல வரேன்”

“ஓஹோ! சரி, என்னோட பார்க்கிங் லாட் ஃப்ரீயாத்தான் இருக்கு. இனிமே அங்க பார்க் பண்ணிக்க மிரு.” சொன்னவன் அவளது பதிலைக் கூட கேட்காமல் ட்ராவரில் இருந்த பார்க்கிங் அக்சஸ் கார்டை எடுத்து அவள் புறம் நகர்த்தினான்.

“காலைல ஷார்ப்பா எட்டு மணிக்கு என்னை பிக் அப் பண்ணிக்க! வீட்டுக்குப் போறப்ப சேம் டைம் வேலை முடிஞ்சா ஒன்னா போகலாம், இல்லைனா நீ கிளம்பிரு! சரி, நான் சாப்பிடப் போறேன்!” என எழுந்தான்.

“நான் இன்னும் சரின்னு சொல்லல பாஸ்”

அவளும் எழுந்து நின்றிருந்தாள். அவளை ஏறிட்டுப் பார்த்த குரு,

“ட்ராண்ஸ்போர்ட் அலாவண்ஸ் தரேன் மிரு! பார்க்கிங்கும் ஃப்ரீ! இன்னும் வேற என்ன வேணும்? கிரேப் ஓட்டற மாதிரி நினைச்சுக்கோ” என்றான்.

மனக்கணக்குப் போட்டுப் பார்த்தாள் மிரு.

‘அலவுன்ஸ் கிடச்சா எண்ணெய் அதுல ஊத்திக்கலாம். அதோட பார்க்கிங் காசு வெளியாக்க வேணாம். ரொம்ப முக்கியமா ட்ரேன் ஏற வேண்டாம்.’

இந்த சில மாதங்களிலே காலை நேரத்து ஜன நெரிசலில் சிக்கி சின்னாப்பின்னமாகி இருந்தாள் மிரு. ட்ரேன் எந்நேரமும் நிறைந்து வழிந்துதான் இருக்கும். பிடிமானத்துக்காக இருக்கும் ரயிலின் கம்பியைப் பிடிக்க கைத்தூக்கும் மக்களின் வாசனை(வாடை என சொல்ல வேண்டுமோ) அப்பு கப்பு என இவளை வாட்டி எடுக்கும். காலையில் சாப்பிட்ட பிஸ்கட் எல்லாம் இப்போ வருமோ எப்போ வருமோ என தொண்டையில் வந்து நிற்கும். போதாதற்கு இடித்துப் பிடித்து ஏறும் மக்கள் மத்தியில் பேக்கை முன்னே வைத்து மறைத்து தன் முக்கியமான இடத்தில் இடிபடாமல் காத்துக் கொள்வாள். எப்படி முயன்றாலும் பல நேரங்களில் அடி பிடி இடியைத் தவிர்க்க முடியாமல் விழி பிதுங்கிப் போவாள் மிரு.

குருவை ஏற்றிக் கொள்வதால் அவனுக்கு ஒரே ஒரு நன்மை. ஆனால் தனக்கு பல நன்மைகள் என கணக்கிட்டாலும் ஏதோ தயக்கம் மனதை அழுத்தியது. பெண்களுக்கே உள்ள முன் ஜாக்கிரதை குணமோ!

அவள் யோசிக்கவும்,

“முடியாதுனா பரவாயில்ல மிரு. இட்ஸ் ஓகே! நான் ட்ரைவர் அரேஞ் பண்ணிக்கறேன். அடிக்கடி வெளிநாடு போறதுக்கு, வீணா ட்ரைவர் ஹையர் பண்ணி ஏன் காசு வேஸ்ட் பண்ணனும்னு நெனைச்சேன். தட்ஸ் ஓகே! யூ மே கோ நவ்” என சொன்னான்.

இக்கட்டான நிலையில் இருந்தப் பொழுது வேலை கொடுத்தவன், இது வரை நிறைய தடவை வம்பிழுத்திருந்தாலும் ஒரு முறை கூட வரம்பு மீறாதவன், உதவி என கேட்கும் போது மறுப்பது அநாகரிகமாகப் பட்டது மிருவுக்கு. அதோடு ஒரு விஷயம் கிடைக்கும் போது இருக்கும் மதிப்பை விட இல்லாமல் போகும் போதுதான் அதன் மதிப்பு பன்மடங்கு கூடும். மீண்டும் ட்ரேயின் ஏற வேண்டாம் எனும் ஒன்றே அவளை சட்டென தலை ஆட்ட வைத்தது.

“இல்ல, இல்ல நானே ஏத்திக்கறேன் பாஸ்!” என தன் வாயாலேயே ஒத்துக் கொண்டாள் மிரு.

“ரொம்ப தயங்கற மாதிரி இருந்துச்சே மிரு! பரவாயில்ல விடு! உனக்கு ஏன் வீண் சிரமம்!” அவள் தயங்கி நின்றதில் கோபம் வர பிகு பண்ணிக் கொண்டான் குரு.

“சிரம்மம்லாம் ஒன்னும் இல்ல பாஸ், நான் ஏத்திக்கறேன்! எத்தனைப் பேரை கிரேப்ல ஏத்துறேன்! அது மாதிரி தானே இதுவும். இதெல்லாம் சிரமமே இல்ல” அவளது அசட்டு சிரிப்பை எடுத்து விட்டாள் மிரு.

‘நானும், உன் கூட கிரேப்ல ஏறும் மத்தவங்களும் ஒன்னா மிரு?’ லேசாக கோபம் எட்டிப் பார்த்தது அவனுக்கு.

“டுமோரோ, ஷார்ப் ஏட்! நவ் கிளியர் மை ப்ளேஸ்”

‘என்னடா குப்பையைக் கூட்டித் தள்ளற மாதிரி தள்ளற?’

“யெஸ் பாஸ்” என்றவள் அவள் இடத்துக்குக் கிளம்பி விட்டாள்.

அவள் இடத்தில் அமர்ந்து வேலையைப் பார்த்தவளுக்கு வாட்சாப் மேசேஜ் வந்தது.

“என்னோட பெர்சனல் நம்பர் இது! சேவ் பண்ணி வச்சிக்கோ!  யார் கிட்டயும் இந்த நம்பர ஷேர் பண்ணாத! நாளைக்கு என் இடத்துக்கு வர பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கீவ் மீ அ மிஸ்ட் கால்” என இருந்தது.

உடனே சேவ் செய்தவள்,

“யெஸ் பாஸ்” என அனுப்பி வைத்தாள்.

‘பெர்சனல் நம்பராமே! யாருக்கும் குடுக்கக் கூடாதாமே! நீட் மை சர்விஸ்? கால் திஸ் நம்பர்னு டாய்லட்டுல எழுதி வச்சிட்டுப் போகுங்களே பக்கீஸ், அந்த மாதிரி எழுதி கீழ பாஸ் நம்பர கிறுக்கி வச்சிருவோமா?’

நினைக்கும் போதே இவளுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

‘சேச்சே பாவம்! நமக்கு வேலை குடுத்த தெய்வம்’ என எண்ணிக் கொண்டே தன் வேலையில் மூழ்கிப் போனாள் மிரு.

சப்வேயில் அமர்ந்து சாண்ட்வீச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரு, மிருவின் டீபீயைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அம்மா நடுவில் இருக்க, அக்காவும் தம்பியும் அவர் கன்னத்தை இரு பக்கமும் தேய்த்தவாறே செல்பீ எடுத்திருந்தார்கள். அதைத்தான் டிஸ்ப்ளேயில் வைத்திருந்தாள். மூவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. வலது புறம் இருந்த மிருவின் முகத்தை மெல்லத் தடவிக் கொடுத்தான் குரு.

“மிருது! ஐ நீட் டூ கெட் ஓவர் யூ” மெல்ல முணுமுணுத்தான்.

மறுநாள் இவள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, வாட்சாப் மேசேஜ் வந்தது. தூக்கக் கலக்கத்தில் எடுத்துப் பார்த்தாள் மிரு. போன் இப்பொழுதுதான் காலை மணி ஐந்து என காட்டியது. அதெல்லாம் மிரு அகராதியில்  நள்ளிரவு ஆகும். இரவு கிரேப் ஓட்டி விட்டு வீட்டுக்கு வந்து அம்மாவைக் கொஞ்சி தம்பிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து தூங்கவே பணிரெண்டுக்கு மேல் ஆகும். காலை மணி ஏழுக்குத்தான் எழுவாள் அவள்.

“யார்டா இது நடுராத்திரியில என்னை எழுப்பறது?” கடுப்புடன் எடுத்துப் பார்த்தாள்.

“எட்டு மணிக்கு பார்க்கலாம் மிரு!” என அனுப்பி இருந்தான் குரு.

‘ஆவ்வ்வ்வ்வ்! அலாவன்ஸ் தரேன், ஃப்ரீ பார்க்கிங் தரேன்னு மட்டும்தானே டீலிங்! அலாரம் சர்விஸ் பத்தி பேசனதா ஞாபகமே இல்லையே! இதெல்லாம் உனக்கு தேவையா மிரு???’ பெரிதாக கொட்டாவியை விட்டவள் மறுபடியும் தலையணையில் சாய்ந்துக் கொண்டாள். மறுபடியும் இன்னொரு மேசேஜ். காண்டாகிப் போனாள் மிரு. கடுப்பில் திறந்துப் பார்த்தாள்.

“ப்ளூ டிக் காட்டுச்சே, படிச்சுட்டு ஒரு கேர்ட்டசிக்காகவாச்சும் ஓகேன்னு ரிப்ளை பண்ண மாட்டியா மிரு?”

போர்வையை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள் மிரு.

“யோவ்! நீ பாஸ்னா, அது ஆபிஸ்சோட! வீட்டுல தூங்கிட்டு இருக்கறவள இப்படித்தான் எழுப்பி கேர்ட்டசி, புரட்டாசி, ஐப்பசின்னு பாடம் எடுப்பியா? தோ பாரு, தூக்கத்துல மட்டும் என்னை சீண்டுன ரம்பாவா இருக்கற இந்து மிரு கொத்துற ப்ளேக் மம்பாவா(ஒரு வகை கொடிய பாம்பு) ஆகிடுவா”

சத்தம் எல்லாம் வீட்டோடுதான். விரல்கள் தானாக டைப் செய்ய ஆரம்பித்திருந்தன.

“குட் மார்னிங் பாஸ். சீ யூ லேட்டர்” என அனுப்பிவிட்டு, தூக்கம் கலைந்த கடுப்பில் அப்படியே அவள் படுத்திருக்கும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

“க்கா, என்னக்கா?”” இவள் சத்ததில் எழுந்திருந்தான் கணே.

“கொசுத் தொல்லைடா! ஓவரா கடிக்கிது!”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் அலாரம் அடித்தது.

“எப்போதும், நீ தூங்கறியேன்னு அலாரம் அடிச்சதும் பட்டுன்னு அடைச்சுப் போட்டுட்டு எழுந்துருவேன். இன்னிக்கு என்னனா என் அலாரம் முன்னுக்கே நீ எழுந்து உட்கார்ந்துருக்க” என சொல்லியபடியே எழுந்து பள்ளிக்கு கிளம்ப போனான் கணே.

ரதியையும் மிருவையும் எழுப்பாமலே அவனே கிளம்பி, டீ கலக்கி குடித்து விட்டுப் போய் விடுவான். மிரு லேட்டாக கிளம்புவதால் அவளுக்கு மட்டும் ரதி டீ கலந்துக் கொடுப்பார். இன்று இவளே எழுந்துப் போய் தம்பிக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து, டீயும் கலந்து வைத்தாள்.

குளித்து விட்டு வந்தவன், டீயைப் பார்த்ததும் மகிழ்ந்துப் போனான்.

“தேங்க்ஸ் கா! இப்படி யாராச்சும் காலைல கலக்கிக் குடுக்க மாட்டாங்களான்னு ஆசையா இருக்கும். அம்மாக்கு முடில, நீ உழைச்சு களைச்சு வரன்னு எனக்கு கேக்க மனசே வராது. இன்னிக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” என கேட்டவன் பிஸ்கட்டோடு சாப்பிட அமர்ந்தான்.

மிருவுக்கு மனம் கசிந்தது. ஆசையோடு அவனைப் பார்த்திருந்தாள். அவனாகவே எப்பொழுதும் கதவைப் பூட்டிவிட்டு சென்று விடுவான். இன்று வாசல் வரை நின்று பாய் சொல்லி அனுப்பி வைத்தாள் மிரு. சந்தோசமாகக் கையாட்டிக் கொண்டே போனான் கணே.

குரு மேல் கோபமாக இருந்தவள், தம்பியின் சந்தோஷத்தில் தன் பாஸை மன்னித்து விட்டு விட்டாள். மிஈண்டும் தூங்கப் போகாமல், அம்மா எழும் முன் சாதம் வடித்து வைத்தாள். முட்டையை வேக வைத்து முட்டைக் குழம்பு வைத்தாள். கறி கொதிக்கும் வாசத்தில் எழுந்து வந்தார் ரதி.

“என்னடி பண்ணற? இன்னிக்கு மழை அடிச்சு ஊத்தப் போகுது போ” என சிரித்தார்.

இடுப்பில் கை வைத்து அவரை முறைத்தவள்,

“பாவம் நம்ம ரதி, இன்னிக்கு ஒரு நாளாச்சும் சமையல் வேலைக்கு லீவ் குடுக்கலாம்னு நினைச்சேன் பாரு என்னை சொல்லனும்” என வம்பிழுத்தாள்.

“உன் கையால சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுடி மிரு! வேலை வேலைன்னு ஓடற! உன்னை நிறுத்தி, உன் கையால சமைச்சுக் குடும்மா, ஆசையா இருக்குன்னு கேக்கவும் மனசு வரல” என சொல்லியவர் பல் துலக்கி விட்டு வந்து மிரு வைத்த குழம்பை ஊற்றி அவரின் சோள ரொட்டியைத் தொட்டு சாப்பிட ஆரம்பித்தார். இரண்டாவது முறையாக அன்று காலையிலேயே மிருவுக்கு கண்ணீர் வரும் போல இருந்தது.

அம்மாவுக்கும் தனக்கும் டீ கலக்கிக் கொண்டு அவரோடு அமர்ந்தாள். இருவரும் ஒரு தட்டிலேயே குழம்பைத் தொட்டுக் கொண்டு ரொட்டியை சாப்பிட்டார்கள்.

“உனக்கு அப்படியே எங்கம்மாவோட கைமணம்டி மிரு” ரசித்து சாப்பிட்டார் ரதி. இத்தனைக்கும் தடபுடலான சமையல் இல்லை. ஆனால் அங்கே அன்பு நிறைந்து இருந்தது.

தன் சம்பாத்தியத்தை எதிர்பார்த்து வாழ்ந்தாலும், இவர்கள் இருவரும் தன் அருகாமைமையும் தேடுகிறார்கள் என நன்றாக புரிந்துக் கொண்டாள் மிரு. ஓரளவு தேவையான சம்பளம் வருகிறதே, இனி கிரேப் ஓட்டுவதை கொஞ்சமாக குறைத்துக் கொண்டு, இவர்களுக்கு தேவையானதையும் கவனிக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள் மிரு.

‘தேங்க்ஸ் பாஸ்’ என குருவுக்கு மனதால் நன்றி சொல்லிக் கொண்டாள் அவள்.

சரியாக எட்டு மணிக்கு அவன் குடியிருப்பு வளாகத்தை அடைந்திருந்தாள் மிரு. ஏற்கனவே மிஸ்ட் கால் கொடுத்திருந்ததால் ஆட்களை ஏற்றி இறக்கும் இடத்தில் நின்றிருந்தான் குரு. அவளது காரைப் பார்த்தவன், அருகில் வந்து ட்ரைவரின் மறு பக்கம் அமர்ந்துக் கொண்டான்.

“குட் மார்னிங் மிரு”

“குட் மார்னிங் பாஸ்” என சொன்னவள், காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

அமர்ந்தவுடனே சீட்டை நன்றாக பின்னால் இழுத்து சாய்ந்து சொகுசாக அமர்ந்துக் கொண்டான் குரு. கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டான்.

“ரேடியோ திறக்கவா பாஸ்?”

“உன்னோட பாட்ட கேட்டுட்டியா?” கண்ணை மூடிக் கொண்டே கேட்டான்.

“சந்தோஷம் பாட்டா பாஸ்? அத முன்னயே கேட்டுட்டேன்”

“சரி”

‘எதுக்கு சரி? பாட்ட கேட்டதுக்கா இல்ல ரேடியா ஆன் பண்ணறதுக்கா? தெளிவா சொல்லாம ஞானி மாதிரி கண்ண மூடிட்டு போஸ் குடுக்கறது!’

ரெடியோவைத் திறந்து தமிழ் சென்னல் வைத்தாள். ஏற்கனவே முடிந்துப் போன தந்தையர் தினத்தைப் பற்றி நிகழ்ச்சிப் போய் கொண்டிருந்தது. நிறைய பேர் அழைத்து என் அப்பா இப்படி, என் அப்பா இப்படி என சொல்லி பாடல்களை விரும்பிக் கேட்டார்கள். அதில் ஒருவர் விரும்பிக் கேட்டிருந்த டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே என ஓடியது!

பட்டென கண்ணைத் திறந்தான் குரு. அவனாகவே வோலுயூமைக் கூட்டி வைத்தான். முகம் முழுக்க புன்னகை. ரோட்டில் கவனத்தை வைத்திருந்த மிரு சத்தம் அதிகரிக்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் சிரித்த முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தவள், மீண்டும் கவனத்தை ரோட்டில் வைத்தாள்.

பாடல் முடிந்ததும் வோலுயூமை மீண்டும் குறைத்து வைத்துக் கண்ணை மூடிக் கொண்டான் குரு.

“இந்த பாட்டு என் சைல்ட்ஹூட் மெமரிய கொண்டு வந்துருச்சு மிரு. தேங்க்ஸ் டூ யூ”

“நான் ஒன்னும் பண்ணல பாஸ்! ரேடியோல அதுவா வந்துச்சு”

“நான் தமிழ் பாட்டுலாம் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு மிரு.”

‘நீ பெரிய அப்பாடக்கரோ’ என்பதைப் போல இவள் பார்க்க அவன் மெலிதாக புன்னகைத்தான்.

“சின்ன வயசுல அம்மா கூட கேட்டுருக்கேன்! அதுக்கப்புறம் அவங்க சேர்த்து விட்டதோ இண்டெர்னெஷனல் ஸ்கூல். பழகனது எல்லாம் என்னை மாதிரியே பணக்கார பசங்கதான். பேச்சு, பாட்டு, சினிமா எல்லாமே இங்கிலீஸ்ல தான். சோ அப்படியே டச் விட்டுருச்சு. அம்மா வீட்டுல தமிழுல பேசவும் தான் இன்னும் தமிழ் மறக்காம இருக்கு” இவளிடம் கூட பத்து வார்த்தைப் பேசினால் அதில் ஐந்து ஆங்கிலத்தில் இருக்கும்.

“ஓ, பீட்டர் கேங்கா நீங்க! சரி சரி”

“ஆமா! அந்த கேங்தான். இந்தப் பாட்டு டேடி டேடி இருக்கே, ஒரு தடவை ரெடியோல கேட்டுட்டு அப்பா கிட்ட பாடிக் காட்டுனேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். என்னைத் தூக்கி மேல போட்டு பிடிச்சாரு. அம்மாவ பார்த்து, உன் மகன் எனக்குப் பாட்டுப் பாடனாலும் அதுலயும் ஆனந்தமேன்னு உன்னையும் சேர்த்துக்கறான் அப்படின்னு சொல்லி சிரிச்சாரு. எங்கயோ மைண்ட்ல மறைஞ்சிருந்த நினைவு இந்த பாட்டக் கேட்டதும் பட்டுன்னு ஞாபகம் வந்துருச்சு மிரு. ஐ மிஸ் மை அப்பா!” கரகரத்த குரலை செறுமிக் கொண்டான் குரு.

யாரிடமும் காட்டிடாத தன் பலவீனமான பக்கத்தை மிருவிடம் சட்டென காட்டி விட்டதில் அதிர்ச்சியாக இருந்தது குருவுக்கு. அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை அவன்.

“பாஸ்”

“ஹ்ம்ம்”

“அப்பாவோட மெமரிஸ் இருக்கறவங்க எல்லாம் குடுத்து வச்சவங்க பாஸ். கூட இல்லைனாலும் அட் லீஸ்ட் மெமரியோட வாழ்ந்திரலாம். நீங்க ரொம்ப லக்கி!”

“உனக்கு அப்படி எதுவும் மெமரிஸ் இல்லையா மிரு?” அவளின் குரலில் தெரிந்த ஏக்கத்தில் கண் திறந்து அவளைப் பார்த்தான் குரு.

“எனக்கு அம்மான்னாலும் ரதிதான் அப்பானாலும் ரதிதான். ஷீ இஸ் மை வோர்ல்ட்!” என சொன்னவள் அதற்கு மேல் பேச விரும்பாமல் ரெடியோ வோல்யூமை அதிகரித்தாள்.

ஆபிஸ் வளாகத்தில் பார்க்கிங் செய்யும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் காரை பூட்டவும், அவளோடு சேர்ந்து நடந்தான் குரு. அவளது அமைதி குருவை என்னவோ செய்தது. எப்பொழுதும் படபட பட்டாசாய் பார்த்தவளை அமைதியாகப் பார்க்க முடியவில்லை அவனால்.

“மிரு”

“யெஸ் பாஸ்!”

“அப்பாவோட மெமெரி இல்லைனா என்ன மிரு! உனக்கு வர போற புருஷன் உன்னை அப்பா மாதிரி நல்லாப் பாத்துப்பான்! அவன் கிட்ட இருந்து உனக்கு நிறைய மெமரிஸ் கிடைக்கும்”

“நெஜமாவா பாஸ்? எங்கிருக்கான் அவன்? எப்ப வருவான்?”

“உன் பக்கத்துல தான் இருக்கான்! உன் கூட தான் நடந்து வரான்”

“யாரு?”

“நான் தான் மிரு பேபி! தி கிரேட் குரு”

“ங்கொய்யால!” மரியாதை காற்றில் பறந்திருந்தது அவளுக்கு….

 

(தவிப்பான்)