Jeevan 26

Jeevan 26

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 26

கௌதமின் நெஞ்சத்தில் அடைக்கலம் ஆனவளை, அணைக்காமலேயே அவளின் காதோரம் சரிந்தவன், “செல்லம்மா, நா எப்பவும் குட் பாயா தான் இருக்கேன். நீயா  என்னை பேட் பாயா மாத்திடாத!” என கிசுகிசுக்க, சட்டென அவனிடமிருந்து விலகியவள், ‘அடப்பாவி! பார்த்த பார்வையிலேயே, எல்லாத்தையும் செஞ்சிட்டு, இப்படி பேசறாரே!’ என தனது விழிகள் விரிய, ஆச்சரியத்தில் மிதந்தவளை கண்டவன் சிரிப்போடு,

“என்ன… என்னைய, அடப்பாவின்னு யோசிக்கறையா?!  நீயே சொல்லு, இதுவரைக்கும், நா உன்ன டச் பண்ணினேனா, எ..வ்..வ..ள..வு கேப் விட்டு நின்னுட்டு இருந்தேன். பேச கூட இல்ல. ஆனா நீ, நீயா… வந்து கட்டிக்கிட்ட!” என நமுட்டு சிரிப்போடு, நிகழ்ந்த அனைத்திற்கும், அவளை காரணிக்கி கொண்டிருந்தவனை பார்த்தவள், அருகே இருந்த கரண்டியை எடுத்த படி,

“எங்கே, இப்ப சொல்லுங்கோ! நீங்க சமத்து சக்கரகட்டி, நா, வந்து தான் அறியா பிள்ளைய, இப்படி ஆக்கிட்டனா?! பெருமாளே! இவர… என்ன செய்ய?!” என சொல்லியபடியே அடிக்க துரத்த,

“செல்லம்மா…வேணான்டீ, அடுச்சா வலிக்கும். இதுவரைக்கும் யார்கிட்டையும் அடிவாங்காம வளந்த உடம்புடீ..!” என சொல்லியபடியே ஓட,

“அதான்னா… கொழுப்பு ஓவரா கூடி போச்சு. அத ரெண்டு போடு போட்டு, குறைக்காத விடமாட்டேன். பாருங்கோ..” என்றபடியே, விடாமல் காயத்ரி துரத்தியதிலும், காயத்ரி கையில் சிக்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்த கௌதமாலும்,  அந்த இல்லத்தில், அதுவரை இருந்த அமைதி நீங்கி, உயிர்ப்பு தோன்றியதை கண்ணில் சந்தோஷம் நிறைய பார்த்திருந்தனர், அப்போது தான் அங்கே வந்திருந்த ஆரனும், மாரியும்….

ஓடி கலைத்தவர்கள், ஒருவாறு அடங்கி, சிரிப்போடு திரும்ப, அப்போது தான், மற்ற இருவரையும் நின்றிருந்த நிலையை பார்த்தவர்கள்,

“ஆரா, மாரியண்ணா, என்ன ரெண்டு பேரும், இப்படி ப்ரீஸ் ஆகி நிக்கறீங்க?!” என மாறா புன்னகையோடு கேட்ட கௌதமை, ஆரன் அணைக்க, அவன் வார்த்தை சொல்லாத பல விசயத்தை அழகாய் விளக்கியது அந்த அணைப்பு.

‘பெண் வீட்டில் இருந்தால் தான் அது எப்போதும் உயிர்ப்போடு இருக்கும், தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய் என எந்த வடிவில் இருந்தாலும் பெண் இல்லாத இல்லம் வெறுமையான கல் கட்டிடமே!’ என மாரி நினைப்பது, அவரின் பார்வையில் புரிந்து கொண்ட கௌதம்,

அவரிடம், “அண்ணா ! இனி இந்த சந்தோஷமும், குதூகலமும் எப்பவும் நம்ம வீட்டுல இருந்துட்டே தான் இருக்கும்” என சொல்லிய நேரம், “அப்படியா..!!!”  என கேட்ட விதியின் கேலிக்குரல், அவர்கள் செவியை எட்டவில்லையே…

அதே நிறைவோடு உணவை உண்ண வர, தனது செல்லம்மாவின் கைமணத்தில் உருவானதை ஆசையாய் உண்ட கௌதமின் முகத்தில் மிளிந்த பெருமிதத்தை கண்ட ஆரன், ‘இதுபோல, தன் மீது உயிர்நேசம் கொள்ளும் துணை, எப்போது தனக்கு அமையுமோ?!’ என்ற ஏக்கம் எழுவதை தடுக்க இயலாது தவித்தவன், விரைவாக சாப்பிட்டு, அங்கிருந்து விரைந்தது கூட அறியாது, தனி உலகில் இருந்தனர் மற்ற இருவரும்…

*****

கௌதமின் திட்டப்படி பெரிய துணிக்கடைக்கு சென்றவர்கள், ஆரனை ஆண்கள் பகுதிக்கு அனுப்பிவிட்டு, பெண்கள் பகுதிக்கு வந்ததும், “செல்லம்மா நல்லா கிரேன்டா, ஒரு ட்ரஸ் எடு.. நீ பாடும் போது போட” என்று  கௌதம் சொல்லிட, “அதெல்லாம் வேணாம்ன்னா, இருக்கறதயே போட்டுக்கறேன்” என்று மறுப்பு சொன்ன நொடி,

“செல்லம்மா! நீ எடுக்கறையா?! இல்லையான்னு?! சஜஷன் கேட்கல. எடுன்னு மட்டும் தான் சொல்லிட்டு இருக்கேன்” என்று கூறுயவனின் குரலே சொல்லாமல் சொன்னது, ‘நீ செய்து தான் ஆக வேண்டும்!’ என்பதை..

வேறு வழியில்லாது, மிகவும் எளிதான, விலை குறைவான ஒன்றை எடுத்த காயத்ரி, “இது எப்படி இருக்குன்னா..? நன்னா இருக்கில்ல! இதையே எடுத்துக்கவா?!” என்றவளையும், அவள் கையில் இருந்ததையும் பார்த்தவன்,

“உன்ன போய் எடுக்க சொன்னதுக்கு, என்னை சொல்லணும்!” என சொல்லியபடியே, கடையை அலசியவன், நீண்ட நேர தேடலுக்கு பின், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதாரை எடுக்க, அதை பார்த்தவள் அதன் அழகில் மயங்கி தான் போனாள்.

“ரொம்ப நன்னா இருக்குன்னா! நேக்கு இப்படி பார்த்து எடுக்க வரல. எங்க அம்மா தான் நேக்கு எடுத்து தருவா..!” என பேசியபடியே, விலையை பார்த்தவள் நிஜமாகவே மயங்கிவிழ போனாள். “என்னன்னா! இவ்வளவு காஸ்ட்டிலியா இருக்கு! நேக்கு இவ்வளவு விலையில வேண்டாம்” என மறுக்க, இறுதியில் வென்றது கௌதமின் பிடிவாதமே…

அதோடு நில்லாமல், பட்டுபுடவை பகுதிக்கு அழைத்து செல்ல, கேள்வியாய் பார்த்தவளிடம், “செல்லம்மா, பட்டுபுடவை எதுக்கு எடுப்பாங்க. கல்யாணத்துக்கு தானே.. அதான் இங்க வந்திருக்கோம்!”  என குறும்சிரிப்போடு சொல்ல, அதிர்ந்து விழித்தவள்,

“என்ன சொல்றேள்! கல்யாணமா..?! வீட்டுல சொல்லவே இல்லையே?!” என தடுமாற, சத்தம் போட்டு சிரித்தவன்,

“செல்லம்மா, கல்யாணம் தான், நம்ம கல்யாணம் இல்ல, உங்க அண்ணா கல்யாணத்துக்கு … காலேஜ் பங்ஷன் முடிஞ்ச, அடுத்த நாள் நீ திருச்சி போகணுமே, உங்க ராம் அண்ணா கல்யாணத்துக்கு…” என்றதும், எப்போதோ தன் சொன்ன விசயத்தை, இவ்வளவு தூரம் நியாபகம் வைத்து, அதற்காக தனக்கு செய்பவனை பார்த்தவளுக்கு, காலம் முழுவதும் இந்த அன்பை பெற போகும் கர்வம் வந்தது அந்த நொடி…..

‘வீட்டில் என்ன சொல்வது!’ என தயங்கியவளை, பேசியே சரி செய்தவன், அவளின் சங்கடம் புரிந்து, விலை மிகவும் அதிகம் இல்லாமல், அதே நேரம் தனது தகுதியையும் கொண்டு, ஒரு புடவையை தேர்ந்தெடுக்க, வேறு வழியே இல்லாது போனது காயத்ரிக்கு…  

 

அவளின் இப்போதைய தவிப்பு, ‘இதை எப்படி தனது சொந்தங்களின் முன் அணிவது?!’ என்பதே…. அவன் தகுதிக்காக பார்த்து வாங்கிவிட்டாலும், அதுவே அவளை பொருத்த மட்டிலும் மிகவும் அதிகம் தானே ! அதுவும் ‘தான் தனித்து எடுத்ததாக, எப்படி சொல்வது!’ என்பதே மாபெரும் குழப்பமாகவும், தவிப்பாவும் இருந்தது.

விழாவில் அணிவதற்காக, காயத்ரிக்கு தேர்ந்தெடுத்த, அதே நிறத்தில், தனக்கும் ஒரு கோட்டை எடுத்தவன், ஆரனுக்கும் எடுத்து முடித்து, காயத்ரியை ஹாஸ்டலில் விட்டு, வீடு திரும்பிய கௌதமின் மனம் என்றும் இல்லாத வகையில், ஒருவித நிறைவோடு இருந்தது.

*******

 

கௌதமின் சந்தோஷமான மனநிலைக்கு எதிரான நிலையில் விழித்திருந்தாள் காயத்ரி மிகவும் பதட்டத்தோடும், பயத்தோடும்.. காரணம் அவள் கண்ட கனவின் தாக்கம்….

கௌதம் விட்டு சென்றதும், அறைக்கு வந்தவள், சுமியிடம் தனது உடையை காட்டி பேசி முடித்தவள், அவளின் பெற்றோருடனும் பேசிவிட்டு, உறங்க துவங்க, சிறிது நேரத்தில் தோன்றிய கொடிய கனவின் விளைவால், அன்று போல் தனது இறைவனை துணைக்கு அழைத்தபடி எழுந்தவள், தான் கண்ட கனவு, இதற்கு முன்பு பலித்தது போல் நடந்திடுமோ…?! அப்படி நடந்தால் கௌதம் நிலை?! என்ற எண்ணம் அவளை வேதனைகொள்ள செய்ய, தூக்கம் வராது தவித்தவள், எப்போதும் போல சஷ்டி கவசத்தை துணையாக்கி கொண்டுருந்தாள் மீதமிருந்த இரவை கழிக்க….


**********

இன்னும் சில தினங்களே கல்லூரி விழாவிற்கு என்னும் நிலையில், ஸ்வேதாவோ தனது அண்ணனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள், கௌதம் காயத்ரியின் நெருக்கத்தால் வந்த கோபத்தில்…..

“டேய், உன்ன நம்பினேன் பாரு, என்ன சொல்லணும். அவனோட சேர்ந்து, அந்த பெக்கர் போடுற ஆட்டத்த பார்க்க முடியல. மகராணி மாதிரி காருல போறதென்ன, வர்றதென்ன… அப்ப, அவள பார்க்கறப்பா, அப்படியே…. அந்த காரோட சேர்த்து கொளுத்தணும் போல இருக்கு” என ஆங்காரமாய் கத்தியவளை, நெருங்கிய துஷ்யந்த்,

“குட்டிம்மா, கொஞ்சம் பொறுமையா இருடா” என கூற,

“டேய் ! இதையே தான் இத்தன மாசமா சொல்லிட்டு இருக்க, இப்படியே போனா, இளவு காத்த கிளியா போக வேண்டியது தான். அவள பார்க்கும் போது, அவனோட கண்ணுல தெரியற காதல்… அந்த பார்வைய அவன் என்ன பார்த்து விடணும்.. ஒரு சின்ன பொண்ணு, அவள உன்னால அவன்கிட்ட இருந்து பிரிக்க முடியல, நீயெல்லாம் பெரிய பிஸ்தான்னு சொல்லிக்காத” என தமையன் என்றும் பாராது, தனது கர்வத்தால் பேசுபவளின் மீது, அப்போதும் கோபம் கொள்ளதவன்,

“பொறுமையா இருன்னு, சொன்னது இந்த காலேஜ் பங்ஷன் வரை தான் குட்டிம்மா. அந்த விழா முடியும் போது காயத்ரி இருக்கமாட்டா. பக்காவா ப்ளான் போட்டாச்சு. அதோட, இந்த தடவ நம்ம தான் செஞ்சோமின்னு தெரியாத மாதிரி, எதார்த்தமா நடக்கற விதத்துல ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றதும், கண்களில் இதுவரை இருந்த கோபம் நீங்க, அங்கே ஒருவித ஆர்வம் தோன்றிட,

“டேய் துஷ்…! என்ன சொல்ற..! நிஜமாவா..?! எப்படிடா…?!” என கேட்டவளிடம்,

“கௌதம், ப்ரோகிராமுக்காக தனித்தனியா, டீம் ஃபார்ம் பண்ணினானே, அத சரியா பயன்படுத்திட்டேன். பணத்திற்காக விலை போக ஆளா கிடைக்காது, இந்த கலியுகத்துல. சோ எல்லாமே பக்காவா இருக்கு. நீ ஜாலியா இருடா. இந்த விழா அவளோட எல்லா சந்தோஷத்திற்கும் மூடுவிழாவா தான் இருக்க போகுது…” என சொல்லி சிரித்தவனுடன், சேர்ந்து சிரித்த ஸ்வேதாவின் எண்ணம் ஈடேறுமா..?! அல்லது கௌதம் கொண்ட நேசம் அவளை காக்குமா?

******

ஸ்வேதா ஆவலோடும், காயத்ரி ‘என்ன ஆகுமோ?!’ என்ற பயத்தோடும் காத்திருந்த, அந்த கல்லூரியின் கலைவிழா ஆர்ப்பாட்டமாக அரங்கேற்றத்தை துவங்கி இருந்தது நல்ல முறையில்… மூன்று நாட்கள் நடைபெறும் விழாவின் கடைசி நாளில் தான், அனைத்து பிரிவு மாணவ, மாணவியரின் திறமையை வெளிக்கொணரும் ‘டேலண்ட் ஷோ’ என்பதால், மற்ற நாட்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பிசியாகி இருந்த கௌதமை பார்த்தாலும், நெருங்கி பேசிடவோ, தனது மனதில் உள்ள பயத்தை வெளிப்படுத்தவோ, வழி இல்லாது போயிற்று காயத்ரிக்கு…


கவலையோடு திரிந்த காயத்ரியின் உண்மையான நிலை அறியாது, சுமி, அவளாகவே ஊகித்து, கௌதமோடு சேர்த்து கலாய்க்க, அதை ஏற்கவும் இயலாது, இருக்கும் மனநிலையில் அதை தடுத்து, உண்மையை சொல்லவும் முடியாது இருந்தாள். இரண்டு நாட்கள் மற்றவருக்கு இரண்டு மணி நேரமாய் கழிய, காயத்ரிக்கோ இரு யுகமாய் மாறி போனது.

யாருக்கும் காத்திருக்காமல் கௌதம், காயத்ரி வாழ்க்கையில் துஷ்யந்த் மூலமாய் விதி ஆடப் போகும் ஆட்டத்திற்கான நாள் அழகாய் விடிய, கௌதம், காயத்ரியோடு சேர்ந்து எடுத்த உடையில் தயாரானவன், மனதில் அவள் பாடப்போகும் தருணத்தை ரசிப்பதற்காகவும், அவன் தேர்வு செய்த உடையில் தன்னவளை காண போகும் ஆவலோடும், விரைந்து கல்லூரிக்கு வந்திட,

பலதரப்பட்ட நிகழ்ச்சிகள், ஒன்றன் பின் ஒன்றாக, மாறி மாறி நடக்க போவதால், அது குறித்த சரியான தொகுப்பை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும்  கௌதம் மேற்பார்வை பார்த்து முடித்து காயத்ரியிடம் வந்த போது, கண்டது அவளின் பயம்கலந்த முகத்தையே…

அவளின் பயத்தை உணர்ந்து கொண்ட கௌதம், ஆரனின் உதவியோடு யாருமற்ற பகுதிக்கு அவளை அழைத்து வந்தவன், “ஏய் செல்லம்மா! என்னடா இப்படி இருக்க?! எதுக்கு பயம் ! நானும் அங்க தானே இருக்க போறேன்?!” என சொல்ல, காயத்ரிக்கோ, ‘அதான் நேக்கு பயமே!’ என்ற வார்த்தை, நாவிலிருந்து வெளிவரவே இல்ல, மனதில் இருந்த அழுத்தத்தால்…

“இங்க பாருடா, இவ்வளவு தூரம் பயப்பட எதுவுமே இல்ல. நா, ஸ்டேஜ் கிட்ட கீழ தான் இருப்பேன். சோ, பயப்படாம தைரியமா பாடு..” என சொன்னவன் அவளை ஆறுதலுக்காவும், தைரியத்திற்காகவும் அவனின் நெஞ்சோடு அனைத்திட, அதுவரை இருந்த பயத்திற்கு, அவனின் அந்த அணைப்பு தேவையாகி போக, அவனைவிட இறுக்கமாய் அவனை அணைத்திருந்தாள்.


அவளின் அணைப்பு, ‘தனது நெஞ்சில் புதைந்து போயிட மாட்டோமா!’ என்ற விதமாய் இருந்ததை உணர்ந்தவன், மெல்ல அவளை நிமிர்த்தி, அவளின் நெற்றியில் தன் இதழ் பதிக்க, கண் மூடி அதை ஆழ்ந்து அனுபவித்தவளின், மதிமுகத்தில் இதுவரை இருந்த பாவம் மாறியதை நிறைவோடு பார்த்தவன், அவளுக்கு தேர்ந்தெடுத்த உடையில், அழகான ஒரு பார்பி டால் போல காட்சி அளித்தவளை, ஆசையோடு மீண்டும் அணைத்து விடுவிக்க,

அப்போது தான் காயத்ரியும், அவனின் தோற்றத்தை பார்க்க, “எப்படி?” எனும் விதமாய் கௌதம் கண்ணசைக்க, “செம…” என பாவனையாய் சொன்னவளை, புன்னகையோடு மீண்டும் அணைத்தவன், “இப்ப ஓகே தானே, ராக் மை டியர் டால்..” என சொல்லிட, ‘சரி…’ என்று தலையசைத்தவளை பார்க்கும் போது,
ஒரு விதத்தில் நிறைவை கௌதமிற்கு தந்தாலும், ‘அவசரப்பட்டு விட்டோமோ! அவளின் இயல்பு தெரிந்தும், இந்த நிகழ்ச்சியில் அவளை பாட சொன்னது தவறோ?!’ என்று நினைத்தானே, ஒழிய அவளின் பயம் வேறு காரணத்திற்காக, என்பதை அவளும் சொல்லாததால், அறியாமலேயே போனான் கௌதம்.

நிகழ்ச்சி துவங்க, கம்பீரமாக மேடை ஏறியவன், அன்று அணிந்திருந்த உடையழகும், சற்று முன் நடந்த நிகழ்வால், முகத்தில் மிளிர்ந்த சிறு புன்னகையாலும், மேலும் ஆணழகனாய் தெரிய, அந்த கலையரங்கம் எங்கும் இருந்த பெண்களின் உற்சாக கூச்சல் அடங்க வெகு நேரம் பிடித்தது.

அதையும் புன்னகையோடு கடந்தவன், அழகான ஆங்கிலத்தில், வந்திருந்த முக்கிய விருந்தினரை வரவேற்று பேசி,
நிகழ்ச்சி பற்றி சிறு உரையை முடித்தவன், அடுத்து மேடையில் நடக்கப்போகும் நடனத்திற்கு, அழகான கவிதை நடையில், அறிமுகம் தந்து மேடையிலிருந்து இறங்க, நடனத்தை விட, அவனின் உரைக்கே கைத்தட்டல் அதிகமாக இருந்தது.

தொடரும், ஒவ்வொரு முறையும், அதுவே நடக்க, ஆரன் கிண்டலால் துழைத்தான் எனில், காயத்ரியோ அவளை கனல்விழியால் பொசுக்கினாள், தன்னவனை மற்றவர் பார்க்கும் பார்வை பொறுக்காமல்…! கீழே வந்த போதெல்லாம், ஜாடையால் ‘சாரி..!’ சொல்லிய வண்ணம் இருந்த கௌதமை, மேலும் கலாய்த்து ஒரு வழி செய்த ஆரனை, நேரம் கிடைத்தால் நன்றாக கவனிக்கும் நிலையில் இருந்தான் கௌதம்…

ஸ்வேதாவோ தனது அண்ணனின் திட்டப்படி அனைத்தும் சரியாக நடக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு, அதற்கான நேரம் வரை, ஆர்வத்தோடு காத்திருக்க, காயத்ரியின் முறையும் வந்தது.

காயத்ரி பாட போகும் பாடலுக்கான அறிமுகபடலத்திற்காக மேடை ஏறியவன், அவள் கண்ணில் தெரிந்த மிரட்சியில், அவள் மேடை ஏறிய பிறகும் இறங்காமல், அங்கிருந்த தூண் போன்ற பகுதியில் நிற்க, காயத்ரியின் பார்வையில், அவன் நிற்பது நன்கு தெரிந்தது. அவன் கண்ணால் சொன்ன தைரியம், ‘நிச்சயம் தவறாக எதுவும் நடக்காது!’ என்ற தெம்பை கொடுக்க, சிறு புன்னகையோடு, தனது திறனை வெளிப்படுத்த தயாரானாள் காயத்ரி…

பின்னணியில் ஒலித்த இசையை கேட்டதும், கண்ணில் தோன்றிய மின்னலோடு காயத்ரியை காண, அவளின் பார்வையை சற்றும் மாற்றாது அவனிடமே நிலைத்த படி,

“என்ன சொல்ல, ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள்”

என்ற வரிகளுக்கு கண்ணால், ‘எப்போது..?’ என கேட்க, தன் செல்லம்மாவின் வினாவிற்கு விடையாக, கௌதம் மெதுவாக, தனது கரத்தில் தாலி கட்டிவது போல பாவனை காட்டிட, அதை கண்டவள் முகம் அந்திவானமாய் மாறி போனது.  

“சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்
கை கோர்த்துப் போகும் பாதை
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே
தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே”

என கௌதம் உடனான வாழ்க்கையை மனதில் கொண்டு ஆசையோடு பாட,
அந்த வரிகளும், அவளின் இனிமையான குரலும், பாடலுக்கு ஏற்ற பாவனையும் அந்த இடத்தையே மயக்கி, அமைதியாக்கி இருந்ததில் ஐயமில்லை.

மாயலோகத்தில் மிதந்து கொண்டிருந்த  கௌதம், மனதின் உந்துதலால், அவ்விடத்தை பார்வையால் அலச, பாடலில் கட்டுண்ட அரங்கத்தின் அமைதியும், கௌதம் நின்றிருந்த இடமும் அடுத்து நடக்க போவதை அவனுக்கு உணர்ந்த, அடுத்த கணம், “மை காட்! செல்லம்மா….!!!” என்ற கூச்சலுடன் மேடையின் நடுபகுதிக்கு சொல்லவும், கீழிருந்தாலும் காயத்ரி பாடுவதை கேட்டபடி நின்றிருந்த ஆரனுக்கும் நடக்கும் நிகழ்வு புரிய கௌதமுக்கு பின்னால், “காயத்ரி…!” என்றபடியே மேடையை நோக்கி ஓடவும், சரியாகிட,

மேடையில், அந்த மூடுக்கு ஏற்ப ஒளிற செய்யவென, மேலே கட்டியிருந்த வண்ண வண்ண  போக்கஸ் லைட்ஸ் கட்டிப்பட்டிருந்த இரும்பாலான கம்பம், மேடையின் நடுவே விழவும் சரியாக இருந்தது.

அந்த அரங்கில், இதுவரை இருந்த உற்சாகத்தை குழைத்து, பதட்டத்தை கொடுக்க, விழா குழுவை சேர்ந்தவர்களும், மற்ற வாலண்டியர்களும் மேடையை நோக்கி ஓடினர், அவர்களின் நிலையை காண…..









error: Content is protected !!