அமுதன் நினைவுகள் வேறு புறம் இருந்தாலும், அவன் கையில் பறந்த வாகனம், மாலை மறைந்து, இருள் போர்வை போர்த்திய வேளையில், பெங்களூரை அடைந்து, ஆரன் வீட்டினுள் நுழைந்தது.
வண்டியின் ஒலியில், இதுவரை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த, அம்மு, “டாடி, வந்தாச்சி!” என்றபடி, வேகமாய் வாயிலை நோக்கி ஓட, உணவு வேளையை தாண்டி நேரம் சென்றதை உணர்ந்த காயத்ரி, வந்த உடன் சாப்பிட சொல்ல, தயாராக அனைத்து உணவையும் எடுத்து வைக்கவென கிச்சனை நோக்கி சென்றாள்.
“டாடி….!” என்று கூவியபடியே, தாவிவந்த அந்த தேவதையை, நேரில் கண்டபோது கௌதமின் உள்ளத்தில், பாசவெள்ளம் பெருக்கெடுக்க, அதன் தாக்கத்தால் மேனியும் சில்லிட்டு போனது.
ஆரன் இறங்கியதும், “டாடி கிப்ட் …! பட்டு கிப்ட் !” என்று ஆர்ப்பரிக்க, “பட்டூ.. டாடி கொண்டு வந்த கிப்ட், அந்த பக்கம் இருக்கு..!” என்றிட, அவனுக்கு அடுத்த பக்கமாய் சென்றவள், அந்த புறம் கதவை திறந்து இறங்கியவனை, ஒரு நொடி கண்களை விரித்து பார்த்தவள், “அப்பா…!!!!” என்ற கூவலோடு கைவிரிக்க,
கௌதமின் உணர்வை சொல்லிட வார்த்தைகளற்று போயின.. தன் மகள், தன்னை அறிந்து வைத்திருப்பதோடு, அவளின் பாசமான அழைப்பு தந்த உவகை, அவனை ஊமையாய் மாற்றினாலும், தன் மகளை வாரி அணைத்திருந்தான், அவள் கரம் விரித்த நொடியில்..
கிடைப்பதற்கரிய பொக்கிஷம், தன் கை சேர்ந்தது போல, தன் நெஞ்சுக்கூட்டுக்குள், அந்த சிறு தேவதையை பொதித்துக் கொண்டவனின் இதழ்கள், அவளின் முகம் முழுதும் பாசத்தோடு, அச்சாரத்தை தந்தவண்ணம் இருந்தது.
“அப்பா..! அப்பா..!” என்ற வார்த்தை தவிர, வேறு சொல்லாது, கௌதமின் முகத்தை பார்த்தபடியே, அவன் தந்த முத்தத்தை, ஆசையோட பெற்ற மகளின் விழியும் தான் கலங்கி போனதோ.. அந்நொடி..
அவளின், “அப்பா..!” என்ற குரலில் வந்த கரகரப்பு, கௌதமின் வேகத்தையும், ஆசையையும் அணைபோட, அவளின் முகத்தை பார்த்து.. “ஆராகுட்டி.. செல்லம்.. சாரிடா.. அப்பா ரொம்ப உன்ன தவிக்க வச்சிட்டேன். சாரிம்மா..!!!” என்றபடியே, தன் மகளின் உள்ளம்பாதத்தில் இதழ் பதித்து, தனது பாவத்திற்கு பரிகாரம் தேட துவங்கினான் கௌதம்.
“அப்பா, எப்ப பாதின்ல இதுந்து வந்த.. நீ..?! டாடி உன்ன கூப்பிட தான் வந்தாங்களா..?!” என்று பெரிய மனுஷி போல, பேசும் செல்ல மகளின் மழலையில், நெஞ்சுருகி நின்றவனை, பார்த்திருந்த ஆரன், “ஆமாம் பட்டு, அப்பாக்கு பாரின்ல வேலை முடுஞ்சிடுச்சு. அதான் வந்திட்டாங்க. இனி பட்டு கூட தான் இருப்பாங்க!” என்றதும்..
ஆச்சர்யம் போல விழி விரித்தவள், “நிஜமாவா அப்பா! இனி இங்க தான் இதுப்பீங்களா..?!” என்றிட..
“ஆமாம்டா, ஆராகுட்டி, இனி ஒரு நிமிஷம் கூட இந்த செல்லத்த பிரிஞ்சு எங்கையும், போக மாட்டேன். இட்ஸ் ஏ ப்ராமிஸ்..!” என்றதும், தந்தை, மகளுக்கு இதுவரை அளித்த பரிசை, வஞ்சனையில்லாது அவனின் முகம் முழுதும் வாரி தந்தாள் வள்ளலாய் மாறி…
தந்தை, மகளின் பாச பிணைப்பை வாயை திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்த அமுதனை பார்த்த போது, ஆரனுக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியாது போக, கஷ்டப்பட்டு அடக்கியவன், அருகே இருந்த செடியின் இலையை பரித்து, அவனின் திறந்திருந்த வாயில் வைக்க, அதன் குறுகுறுப்பில் தன்னிலை அடைந்த அமுதன்… “த்தூ..! த்தூ..!” என்றபடி, வாயிலிருந்ததை துப்பிவிட்டு, “அண்ணா உங்கள…!” என்ற படி துரத்த, ஆரன், அமுதனிடம் சிக்காமல் போக்கு காட்டியபடி, தோட்டத்திற்குள் சென்றான்.
அவர்கள் இருவரின் சேட்டையில், சிரித்து முடித்த கௌதமிடம், அதே புன்னகை தாங்கிய முகத்தோடு.. “அப்பா வாங்க வீட்டுக்குள்ள போலாம். அம்மா பாக்க…!” என்றதும், அதுவரை இருந்த உற்சாகமும், சிரிப்பும் மறைய, இதயம் படபடவென துடிக்க துவங்கியது கௌதமிற்கு…
தனது செல்லம்மா, தன் வருகையை எவ்வாறு ஏற்பாள்! அவள் தன்னை கண்டதும் கோபம் கொள்வாளா?! அல்லது அவளின் இத்தனை நாள் சோகத்தை தனது கண்ணீரில் கரைப்பாளா?! என்று எண்ணம் அனைத்தும், எல்லா வழியிலும் யோசித்து கொண்டிருக்க,
அவனின் செல்ல மகளோ, தந்தைக்கு தான் சொன்னது கேட்க வில்லையோ! என்று மீண்டும் அதையே, அவனின் தாடையே பற்றி, தன்னை பார்க்க வைத்து சொல்லிட, நகர மறுத்த கால்களை கஷ்டப்பட்டு நகர்த்தி, கணத்த இதயத்தோடு உள்ளே நுழைந்தான் கௌதம், தனது மகளை சுமந்தபடியே….
ஹாலின் உள்ளே சென்ற நேரம், டைனிங் டேபிளில் திரும்பி நின்ற படியே, “வாங்க ஆரன்… என்ன போன வேலை முடுஞ்சுதா..?! அப்ப..அப்பா..! உங்க பொண்ண சமாளிக்க முடியல.. டாடி.. புராணத்த சொல்லி, சொல்லி காதே செவிடா போச்சு. கிப்ட் வருமின்னு, தேவி கிட்ட சொல்லி, அதுக்கு வேற ஆட்டம்! சீக்கிரமா ப்ரஸ்ஷப் ஆகிட்டு வாங்க டின்னர் ரெடியா இருக்கு..” என்று திரும்பியும் பாராமல், செய்து வைத்திருக்கும் உணவை அடுக்கியவள்,
“நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்.. நீங்..!” என்று இதுவரையிலும் படபடவென, பேசிக்கொண்டே இருந்தவள், இதயம் தனது துடிப்பை அதிகரிக்க செய்ய, தன்னிடம் வருபவரின் ஸ்பரிசம், தன்னை தொடும் முன்பே, அது யாரென உணர்ந்தது போல, பாத்திரத்தில் வைக்க எடுத்த கரண்டியோடு கை அந்தரத்திலேயே நிலைத்திருக்க,
நடுங்கும் தன் உதடுகளை, பற்களால் அழுத்த பற்றி நின்றவளின், கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தாலும், அது விழியை தாண்டி வராது அதிலேயே தேங்கி நின்றது…
காயத்ரியை மெல்ல நெருங்கியவன், அவளின் பெயருக்கே வலிக்குமோ என்பதை போல,மென்மையாகி போன குரலில், “செல்லம்மா…..!!!!” என்றிட.. அதுவரை அணைக்கு கட்டுப்பட்ட வெள்ளம் போல கட்டுபட்ட கண்ணீரும், கரையை உடைத்து, அவளின் முகத்தில் பாய்ந்து, நெஞ்சத்தை நனைத்தது.
“செல்லம்மா” என்று தான் அழைத்தும், தன்னை நோக்கி திரும்பிடாத காயத்ரியின் செய்கையில், இருப்பது அவளின் கோபமோ, என்று எண்ணியவன், “ஐ’ம் சாரி செல்ல….” என சொல்ல ஆரம்பித்தவனின் வார்த்தையை, சட்டென திரும்பிய நொடியில், தனது கரம் கொண்டு வாயை மூடி, தலையை இட வலமாய் அசைத்து, ‘வேண்டாம்..!’ என்றவளை பார்த்தவன்,
அவளின் விழியில் வழியும் கண்ணீரையும் தாண்டி, அந்த கண்ணில் தெரிந்த நம்பிக்கைக்கும், காதலுக்கும், தான் தகுதியானவன் தானா?! என்று தோன்றியதோடு, மன்னிப்பு என்ற வார்த்தையை மட்டுமில்லாது, அவளின் பாதத்தில் விழுந்தாலும் தீராதே, என்று தவிப்போடு பார்த்தவனை, அதை வார்த்தையால் கூட கேட்கவிடாதவளின் செய்கை கௌதமை கொல்லாமல் கொன்றதோ…
இரு ஜோடி கண்ணிலும் வழிந்த நீர் துளியை தவிர, வேறு எந்த விதமான அசைவும் இல்லாது சிலையாகி போனது போல் நின்றிருந்தவர்களை, கலைத்தது ஆராதனாவின் குரல்… “அம்மா, அப்பா இனி நம்ம கூட தான் இதுப்பாங்களாம். டாடி சொன்னாங்களே..! அம்மூ.. ச்சோ ஹேப்பி…! ஆனா அம்மா, அப்பா தெண்டு பேதும் அழுது… ஒய்…?” என்று அவர்களின் அழுகைக்கு காரணம் தெரியாமலும், புரியாமலும் கேட்க,
“கண்ணுல தூசிடா… அம்மூ!” என்றபடி கண்ணை துடைத்துவிட்டு, மீண்டும் டேபிளை நோக்கி காயத்ரி திரும்பிவிட, அடுத்து தந்தையின் பதிலுக்காக அவனின் முகம் பார்த்தாள், அந்த குட்டி தேவதை.. அவள் பார்வையால் கேட்ட செய்கையில், சிறு புன்னகை இதழில் தோன்றிட, “எனக்கும் தூசி தான் விழுந்துச்சுடா…!” என்றதும்..
‘பார்த்தா.. அப்படி இல்லையே?!’ என்பது போல, தனது பளுப்பு நிற விழிகளால் கௌதமின் முகத்தை ஊடுருவியபடி, தாடையில் ஒற்றை விரலால் தட்டி, சந்தேகத்தோடு, தலையை இருபுறமும் ஆட்டியபடி, பாவனை காட்டியவளின் செய்கையில் வாய்விட்டே சிரித்துவிட்டான் கௌதம்…
சரியாக அதே நேரம், அங்கு வந்த ஆரனுக்கும், அமுதனுக்கும் கௌதமின் மலர்ந்த முகமும், சிரிப்பும் நிம்மதியை தர, “என்னடா ஜோக்.. சொன்னா, நாங்களும் சிரிப்போமில்ல..?” என்றபடியே வர,
“அம்மூக்கு வயசு மூனு தானே ஆகுது…?! ஆனா, செய்கை எல்லாமே பெரிய மனுஷி மாதிரி தான். அதான் பட்டுன்னு சிரிப்பு வந்திடுச்சு..!” என அம்மூவின் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட, “ஹா…ஹா..” என்ற படி கௌதமிடமிருந்து, வளைந்து நெளிந்து இறங்கிட முயற்சிக்க, அதை தடுத்த படியே, மேலும் அவளை சிரிக்க வைத்தவனை சுற்றியிருந்த அனைவருமே நிறைவோடு பார்த்திருந்தனர்.
ஆரன், “ஏய் மாமி, என்ன உன் ஆள் வந்ததும், சைட் அடுச்சிட்டே இருந்தா.. உன் வயிறு வேணுமின்னா நிறையும், ஆனா எங்களுக்கு…!, சோத்த கண்ணுல காட்டு தாயே!” என்று வம்பிழுக்க,
ஏற்கனவே, எடுத்து வைத்திருந்த உணவு அனைத்தையும், பரிமாற தயாராக்கியவள், கௌதம், ஆரனுக்கு கொடுத்துவிட்டு அமுதனுக்கும் அளிக்க அருகே செல்ல, “செல்லம்மா, அவன் அமுதன். என் பி ஏ. அதோட, என்னோட இன்னொரு தம்பியும்…!” என்று கௌதம் சொல்ல, சம்மதமாய் தலையசைத்தவள், அவனுக்கும் வைக்க, “தேங்க்ஸ் அண்ணி” என்றவனை வாஞ்சயோடு பார்த்தவள், “வீட்டு ஆளுங்களுக்குள்ள, தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சா, அதுக்கு தான் டைம் இருக்கும், சாப்பிடுங்க..!” என்றவளின் பேச்சில், நிம்மதியோடு சாப்பிட துவங்கினர்.
கௌதம், தன் கரத்தில் இருந்த கட்டோடு உண்ண தடுமாற, அவனின் மடியிலேயே அமர்ந்திருந்த அம்மூ.. “அப்பா, கையில எப்படி காயம் ஆச்சு..? கீழ விழுந்தியா…?! அம்மூக்கு, அம்மா ஊட்டி விடற மாதிரி அம்மூ ஊட்டி விடவா?!” என கேட்க,
வார்த்தையால், கூட சம்மதத்தை சொல்லிட முடியாது, நெகிழ்ந்து போய் இருந்தவன், தலையை சரியென ஆட்டிட, தனது தளிர் கரத்தால், உணவை சிறு துண்டாக்கி, தந்தைக்கு உணவூட்டினாள் தாயாய் மாறி….
ஒரு காலத்தில், தன் தாயிடம் எதிர்பார்த்த விசயம், இன்று தன் தாயையே உரித்து வைத்து பிறந்திருக்கும், தன் மகளின் மூலம் நிறைவேற, மனதின் நிறைவால் உணவு கூட தொண்டையுள் செல்லாது அடம்பிடித்தது கௌதமிற்கு…
உணவு வேளை முடிந்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவித நிம்மதியும் நிறைவும் தோன்றிட ஆரன், “கௌதம் பட்டுவ நா போய் தூக்கிட்டு வந்து, என் கூட வச்சுக்கறேன். நீ மேல போ…!” என்று கௌதம், காயத்ரிக்கு தனிமையை அளிக்கவென யோசித்து சொல்ல,
“இல்ல ஆரா, அம்மூ எங்க கூடவே இருக்கட்டும்..” என்று மறுக்க, “டேய், புரியாம பேசாத, உங்க ரெண்டு பேருக்கும் பேச எத்தனையோ இருக்கும். அப்ப பட்டு…!” என்றவனின் வார்த்தையை முடிக்கவிடாமல்,
கௌதம், “ஆரன் இப்ப தான் என்னோட வாழ்க்கை நிறைவான மாதிரி இருக்கு.. அம்மூவ விட்டுட்டு எப்படிடா.. எங்ககூடவே இருக்கட்டும்!” என்று சொல்ல, அவனின் மனநிலை புரிந்தாலும், மறுப்பு சொல்ல வந்த ஆரனை, பேசியே சமாளித்தவன், ஒரு வழியாக மேலே அறைக்கு வர, காயத்ரி மடியில் தலைவைத்து படுத்தபடியே கதை பேசிக்கொண்டிருந்தாள் அவர்களின் தேவதை..
கௌதம் வந்ததும், “அப்பா, அம்மா சூப்பதா கதை சொல்வாங்க தெதியுமா…?! நா, டெய்லி கதை கேட்டு தான் தூங்குவேன். நீங்க கதை சொல்வீங்களா..?!” என்று, அவனின் மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்க,
“இல்லடா, அம்மூ, எனக்கு கதை சொல்ல தெரியாது” என்றிட, “ஏன் அப்பா, உங்களுக்கு உங்க அம்மா கதை சொல்லி ததலையா?!” என்று கேட்க, “ஆமாம்..” என்று தலையசைத்தவன்,
“நா சின்ன பையனா இருக்கும் போதே, என்னோட அம்மா, அதான் உன்னோட பாட்டி சாமிகிட்ட போயிட்டாங்க, அம்மூ. அதனால, எனக்கு கதை சொல்லி தூங்க வைக்க ஆளே இல்லடா..!” என்றதும்,
“அப்பா படுத்துக்கோ, அம்மா சொன்ன கதைய அம்மூ உனக்கு சொல்லுவா..” என்றதும், அவளின் மடியில் தலை வைக்க, காயத்ரி சொன்ன கிருஷ்ணலீலாவிலிருந்து கிருஷ்ணரின் சேட்டையை, அவளின் மழலை மொழியில் சொல்ல, கேட்டிருந்த இருவரின் மனமும் நெகிழ்ந்து போனது தங்கள் மகளின் செயலில்….
விரைவிலேயே, அம்மூ உறக்கத்தை தழுவ, அவளை மாற்றி, தன் மடியில் படுக்க வைத்தவன், அதுவரை தள்ளி அமர்ந்து தந்தை, மகளின் பாசப்பினைப்பை பார்த்தவாறு அமர்ந்திருந்த, தனது செல்லம்மாவை இழுத்து, தன் நெஞ்சோடு அணைத்தவன், திக்கு தெரியா காட்டில் சுற்றியவனுக்கு, இழைப்பாற இல்லம் வந்த நிறைவு எழுந்தது.
எதுவும் பேசாது, அமைதியாய் இருந்தாலும், தூங்காது, ஒரு கரத்தால் தனது மகளின் தலையை அதுரமாய் வருடியவன், தன்னவளின் வெற்று வயிற்றில், தனது உள்ளங்கை பதித்து, தனது வெம்மையை காயத்ரிக்கு கடத்தியவன், அதில் தனது மகளின் அசைவை, இப்போது உணர முயல்வது புரிய, கண்ணீரோடு அவனிடம் சரணடைந்தாள் கௌதமின் செல்லம்மா…