காம்யவனம் 4
“ப்ரத்யும்னனா.?” மாயா சற்று குழம்பினாள்.
“ஆமாம். உனக்கு பிடிச்சிருக்கா?” அவன் கேட்க,
“எனக்கு எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு” அவன் முகத்தைப் பார்த்து சொல்ல, அப்போது தான் அவன் கைக்குள் அவள் இருப்பது புரிந்தது.
அவனை விலக்கும் எண்ணம் இல்லாமல், அவன் கைக்குள் எப்போது வந்தோம் எப்படி வந்தோம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
“உன் மனசுல நான் முன்னமே வந்துட்டேன் போலிருக்கே.” அவளது இடையை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டு அவளது தலை மேல் கன்னம் வைத்தான்.
ஒரு நொடி அவன் பேச்சிலும் அணைப்பிலும் மயங்கியவள்,
“ச்சீ .. விடு” என அவனை உதறினாள்.
அவனோ அவளது இடையை விட்டு , உதறிய அவளது கரங்களை கெட்டியாகப் பிடித்திருந்தான்.
“விடறது இனிமே என்னால முடியாது. உன் ஸ்பரிசம் என்னை தீண்டிய மறுகணமே எனக்குள் தூங்கிட்டு இருந்த ஆசைகளை மொத்தமா எழுப்பி விட்டுடுச்சு. இனிமே நீ என் சொத்து. அதை மாத்த யாராலும் முடியாது.” உறுதியாகக் கூறினான்.
“என்ன..!” கோபம் வந்தது மாயாவிற்கு.
“நீ யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உன் சொத்தா? எந்த உரிமைல இப்படி எல்லாம் பேசற? என்கிட்டே இப்படி எல்லாம் பேசினவங்கள பாத்து பயந்தது ஒரு காலம். ஆனா இப்போ நான் அப்படி இல்லை.” அவனிடம் சீறினாள்.
“உன்கிட்ட இனிமே யாரும் என்னை தாண்டி வம்பு செய்ய முடியாது. எல்லாமே இனி என் பொறுப்பு” அவளை மீண்டும் அணைக்க முயன்றான் ப்ரத்யும்னன்.
“உன்ன நான் வம்பு பண்ணாதன்னு சொன்னா.. நீ என்னமோ கட்டின புருஷன் மாதிரி நான் பாத்துக்கறேன்னு சொல்ற. லூசா நீ!” அவன் கைகளுக்கு அகப் படாமல் விலகினாள்.
அவளது இந்தச் செயலைப் பார்த்து ரசித்தான் அவன்.
“போக போக உனக்கே தெரியும்.சரி நீ போ. நாளைக்கு மறுபடியும் உன்னை சந்திக்கறேன்” எனக் கூறிவிட்டு எதிர்பார்க்கும் முன்னர் அவளை அனைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான்.
அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் அந்த ஆறுதல் வார்த்தையும் அந்த அணைப்பும் அவளுக்குத் தேவையாகவே இருந்தது.
அனைத்துக் கொண்டிருந்தவன் அவளுக்குள் கரைந்தது போல , காற்றோடு மறைந்திருந்தான்.
சட்டென கண்விழித்தவள், இன்னும் அந்த பலகையில் அமர்ந்திருப்பது புரிய, நடந்தவை அனைத்தும் கனவா நனவா என்று குழம்பினாள்.
தேவா எழுந்து அவள் அருகில் வர, மிகவும் சோர்ந்து தெரிந்தாலும் அதையும் மீறிய ஒரு துள்ளல் அவளிடம் தெரிந்தது.
“மாயா . ஆர் யூ ஓகே?” அவளுக்கு கை கொடுத்தான்.
அவளும் அவன் கை பிடித்து மெல்ல எழுந்தாள்.
“ஐம் ஓகே தேவா.” வேறு எதுவும் சொல்லும் உத்தேசமில்லை.
என்னவென்று சொல்வது. அதனால் பேசாமல் இருந்தாள்.
“ரொம்ப அழுதியே மாயா.” தோழிக்காக வருந்தினான் தேவா.
“அழுதது தான் ரொம்ப ரிலாக்ஸ்சா இருக்கு. மனசு லேசான மாதிரி ஒரு பீல்” அவள் சொல்லும்போதே அதில் ப்ரத்யும்னனின் நினைவும் அவளுக்கு அந்த நிம்மிதையின் ஒரு அங்கம் என உணர்த்தியது.
உடுக்கை அடிப்பவர் மாயாவிடம் எழுந்து வந்தார்.
“அம்மா. நீ இனிமே எந்த பயமும் இல்லாம இருக்கலாம். எல்லாமே உன் வாழ்க்கையில இனி வசந்தம் தான்” அவளது கையில் பூஜை செய்த இரு பூக்களும் பழங்களும் கொடுத்தார். கடற்கரையுடன் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்.
“ஐயா ஒரு நிமிஷம்” தேவா அவரை நிறுத்த,
என்ன என்பது போல நின்றனர்.
“எனக்கு இந்தக் காட்டைப் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” என்றான்.
“உங்களுக்கு இப்போ அசதியா இருக்கும். நாளைக்குள் பொறுமையா வாங்க சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
மாயாவும் தேவாவும் தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு , கோவமாக இருந்தான் குரு. அவனது கோபம் நியாயமானது தான் என்பதை மாயவும் தேவாவும் புரிந்து கொண்டனர்.
அவனுக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பு அவர்களுடையது. தேவா அவனிடம் சென்று , “குரு..நீ கோவமா இருக்கன்னு புரியுது” என ஆரம்பிக்க,
“மொதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று எழுந்து சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
“அவன் சரி ஆயிடுவான் நீங்க சாப்பிடுங்க” என்று மகதி அவர்களுக்கு உணவளித்தாள்.
இருவரும் உண்டுவிட்டு , “வாங்க நாலு பேரும் கொஞ்ச தூரம் பேசிட்டே நடந்துட்டு வருவோம் என்றான் தேவா.
குரு அமைதியாகவே இருக்க,
“டேய்.. கேட்டுத் தொல டா.இப்படி அமைதியா இருந்து சாவடிக்காத” கத்தினாள் மாயா.
“சரி கேக்கறேன். ஏன் எங்க கிட்ட பொய் சொன்னீங்க. அதுவும் சீப்பா பணம் விஷயத்தை சொல்லி.. என்னை ரொம்ப மட்டமா நெனச்சுடீங்க இல்ல. உங்க பிரச்சனைய என்கிட்ட சொன்னா நான் புரிஞ்சுக்கமாட்டேனா? அவ்வளவு தானா என்னை நீங்க நம்புனது?” மனதில் இருப்பதைக் கேட்க,
மாயாவுக்கும் தேவாவிற்கும் சங்கடமாகிப் போனது.
“ஹே ! இங்க பாரு. உன்கிட்ட மறச்சு வைக்கணும்னு நான் எப்பவும் நினைக்கல. ஒரு தாத்தா வந்து இப்படி சொல்லிட்டுப் போனாருனு சொன்னா கண்டிப்பா நீ அதுக்கு முக்கியத்துவம் குடுக்க மாட்டா. கூட வரவும் சம்மதிக்க மாட்ட. நீ என்கூட வரணும்னு தான் எனக்கு அப்போ இருந்த பணக் கஷ்டத்தை வெச்சு அப்படி சொல்லிட்டேன். சாரி டா.” அவளது பக்கத்தின் விளக்கத்தை கொடுக்க,
ஒரு வகையில் அவனுக்கு அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தான் இருந்தது. இருந்தாலும் உடனே சரியென தலையாட்டி விட்டுப் போகவும் முடியவில்லை.
” இது ஒரு ரீசனா? நீ கூட என்னை அப்படி நெனச்சியா டா.” தேவாவின் பக்கம் திரும்பினான் குரு.
“டேய் மச்சான். இது அவளோட ஃபீலிங்ஸ். அதுல நாம விளையாட்டாக எதுவும் செஞ்சுடக் கூடாது. அதுனால தான் நான் எதுவும் சொல்லல.” தேவா சொல்ல.
“சரி ஆக மொத்தம் இந்தக் காட்டுல ஒண்ணுமில்ல அப்படி தான?” அழுத்துக் கொண்டான் குரு.
“இல்ல இங்க நாம எதிர்ப்பாக்கிக்கறதுக்கும் மேல நிறைய விஷயம் இருக்கு” மாயா நிச்சயமாக சொன்னாள்.
“என்ன வைரம் வைடூர்யம் இருக்குன்னு சொல்லப் போறியா?” குகு கிண்டல் செய்தான்.
“இல்ல குரு. இங்க நம்ம சக்திக்கு மீறின விஷயங்கள் இருக்கு. அது உனக்கே போகப் போக தெரியும். நான் நிச்சயமா சொல்லுவேன்” மாயாவின் குரல் அவனை மேற்கொண்டு வாதம் செய்து மல்லுக்கு நிற்க விடவில்லை.
“ஆமா டா எனக்கும் அப்படித் தான் தோணுது. அந்த பெரியவர் நாளைக்கு இந்தக் காட்டைப் பத்தி சொல்றேன்னு சொல்லிருக்காரு. நாம போய் கேட்கலாம்.” தேவா குருவின் தோளில் கை போட்டுக் கொண்டு சொல்ல,
“ம்ம்.. பாப்போம். இவளோட கஷ்டம் சரி ஆனா போதும். நாம ஊற பார்க்க போகலாம். இங்க நெட்ஒர்க் கூட இல்ல. நாளைக்கு ஒரு போன் பண்ணி பஞ்சபூதம் கிட்ட அப்டேட் கொடுப்போம். அந்த எல்லைக்குத் தான் போகணும். அப்புறம் வந்து கதை கேட்போம்” சகஜமானான் குரு.
இவர்கள் இங்கே இத்தனை ரணகளம் பண்ணிக்கொண்டிருக்க அதற்குள் உண்ட களைப்பில் உறங்கியே போயிருந்தாள் மகதி.
“இவள பாரு. தூங்க இடம் கெடச்சா போதும். எதப் பத்தியும் கவலைப் படமாட்டா” சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தான் தேவா.
அனைவரும் நிம்மதியாக உறங்கச் சென்றனர்.
மாயாவிற்கு மட்டும் தான் கனவில் கண்டது, கண்மூடி இருந்த போது வந்தது , இவை உண்மையா இல்லையா என அறிந்து கொள்ளும் ஆர்வம் அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். நாளை காலை இவர்கள் போன் செய்ய போகும் நேரம் அந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று யோசித்தாள்.
“ப்ரத்யும்னன்” மனதில் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். உதட்டோரத்தில் புன்னகை எட்டிப் பார்ப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.
எப்போது விடியும் என்று உறங்கச் சென்றாள்.
கடற்கரையும் அந்த பெரியவரும் பௌர்ணமி பூஜை முடிந்த பிறகு நள்ளிரவில் அங்கிருக்கும் ஒரு சிறு ஓடையில் நிலவைக் கண்டு வரச் செல்வது வழக்கம்.
குறி சொல்பவர்கள் அப்படிச் செய்யும் போது அன்றைய பூஜை அந்தக் கடவுள் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியுமாம். நிலவின் முழு வடிவமும் அந்த நீரில் அவர்கள் காணும் நேரம் தெளிந்த நீராக இருந்தால் ஆனந்தம் என்றும் கலங்கிய நீரில் கண்டால் ஏற்கவில்லை என்றும் பொருள்.
இன்று அதே போல அவர்கள் செல்ல, அவர்கள் கண்டது மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நிலவினை நீரில் காணும் போது கண்ணாடியில் பார்ப்பது போன்று தெரிந்தது.
மகிழ்ச்சியில் திளைத்து திரும்பி வந்தனர்.
“எனக்கு என்னமோ நல்லது நடக்கும்னு தோணுது கடற்கரை.” பெரியவர் சொல்ல,
“அந்தப் பொண்ண பாத்ததுமே நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஐயா. இனி எல்லாமே சுகம் தான். கடவுள் சித்தம். நாம வாழற இந்த யுகத்துல நடக்கப் போகுது. நம்ம முன்னோர்க்கு கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைச்சிருக்கு. நாம ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கோம்.” கடற்கரையின் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.
“நீ சொல்றது சரி தான். எல்லோரோட புண்ணியமும் சேந்து நமக்கு கிடைச்சிருக்கு. சரி அவங்கள இனி நாம இங்க இருக்கற வரை நல்லா கவனிச்சுக்கணும்.” உடுக்கைக்காரர் சொல்ல,
“நாளைக்கு அவங்க காட்டைப் பத்தி கேட்க வரப்ப எல்லாம் சொல்லப் போறீங்களா?” கடற்கரை அடுத்த சந்தேகத்தை கேட்டார்.
“சொல்லித் தானே ஆகணும். அவங்ககிட்ட உண்மைய மறச்சு ஒன்னும் ஆகப் போறதில்ல.” பேசிக்கொண்டே நடந்தனர்.
“அது சரி தான் ஐயா. ஆனா அவங்க அந்த பஞ்சபூதம் கிட்ட இதப் பத்தி சொல்லி, அது வெளி உலகத்துக்கு இந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சா…?” கடற்கரை இழுக்க ,
“அவங்க சொல்ல மாட்டாங்க. அவங்க மனநிலை கண்டிப்பா மாறிடும். நீ கவலைப் படாதே.” அவருக்கு ஆறுதல் கூறினார்.
அன்றிரவும் மாயா பிரத்யும்னனைப் பற்றி நினைத்துக் கொண்டே உறங்க, மீண்டும் அவனே கனவில் வந்தான்.
அந்த ஆற்றங்கரையில் அமர்ந்து நீரில் கை விட்டு அதனை அளாவிக் கொண்டிருந்தாள். அவனது தலை முதல் கால் வரை அவளது மனதில் தோன்ற அது அந்த நீரில் பிரதி பிம்பமாக தெரிந்தது.
அவளுக்கு அருகில் அவன் அமர்ந்து இருப்பதாக உணர்ந்தாள். அவளது முதுகில் அவன் மார்பின் ஸ்பரிசம் பட சிலிர்த்துப் போனாள்.
‘இல்ல இல்ல இது வெறும் கனவு. நான் கனவுல தான் இருக்கேன்’ அவளது மனம் ஒரு புறம் அடித்துக் கொண்டாலும், அது நிஜமாக நடக்க வேண்டும் என அவளது உள் மனம் ஏங்கியது போலும்.
ஆழ் மனதின் ஆசைகள் தானே கனவு.
‘இது கனவா இல்லனா அவன் என் கிட்ட பேசட்டும்’ மீண்டும் இவ்வாறு நினைத்துக் கொண்டாள்.
“மாயா..” அவன் குரல் காதருகில் ஒலித்தது.
மனம் படபடத்தது. இருந்தாலும் அவனைத் திரும்பிப் பார்க்கும் தைரியம் இல்லை. அவனது அழகில் அவள் மயங்குவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
‘இப்போதும் நான் நம்ப மாட்டேன். இது கனவே தான். இல்லன்னா அவன் என் கையைத் தொடட்டும’ அவளது மனம் இன்னும் சற்று முன்னேறியது.
அந்தச் செயலும் உடனே நடந்தது. அவனது வலிய கைகளால் அவளது கரத்தைத் தீண்டி, கையேடு கை கோர்த்துக் கொண்டான்.
மாயாவின் உள்ளம் பூரித்தது. அவன் தொட்டவுடன் , கனவென்பதும் தான் ஒரு பெண் என்பதும் மறந்து, ‘இது கனவில்லாமலே இருக்கட்டும்’ என்று சற்றும் யோசிக்காமல் தன் முதுகைத் தீண்டிக் கொண்டிருக்கும் அவன் மார்பில் சாய்ந்தாள்.
பேச மொழி தேவையில்லை, உன் அருகாமையே போதும் என்பது போல அவளது இடையை மறு கையால் வளைத்து தன் மேல் அவளைக் கிடத்திக் கொண்டான்.
அவன் தன்னைத் தொட்டவுடன் அவளுக்குள் இருக்கும் பெண்மை அதை ரசிக்கத் தொடங்கியது. மேலும் மேலும் அவனது கைக்குள்ளும் மார்பிலும் புகுந்து கொண்டாள். அது தான் அவளது இடம் என்பது போல!
முழு நிலா.., அருகே நீர் நிலை.., தன்னை இன்பக் கடலில் ஆழ்த்தும் காதலன்.., கவலைகள் மறந்து அந்த சுகத்தில் மூழ்கிப் போனாள் பெண்.
மறு நொடி, ‘இவன் என் காதலனா?’ நான் என்ன யோசிக்கறேன்?’ என்ற எண்ணம் வந்ததும் கண் விழித்தாள்.
விடியல் நேரம் குயில்களின் கானமும், லேசாக வெளுக்கும் வானமும் அவளுக்குக் காட்சியளிக்க, ‘இது கனவா!’ நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கறேன். ச்சை!’ என தன்னையே நொந்து கொண்டு மீண்டும் கண்ணை இருக்க மூடிக் கொண்டாள்.
இது கனவென்பதால் யாரும் அறிய மாட்டார் என்று நினைத்தாள். ஆனால் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் காரணகர்த்தா அவளை நினைத்து காதல் செய்யக் காத்திருந்தான்.
சற்று நன்றாக விடிந்ததும் , ஆண்கள் இருவரும் காட்டின் எல்லைக்குச் சென்று வரக் கிளம்பினர்.
மகதி மாயாவை எழுப்பி , “குளிக்கப் போகலாம் வா” என்றாள்.
இது தான் சமயம் என்று, கனவில் கண்ட இடம் நிஜமாகவே உள்ளதா என்பதைக் காண கிளம்பிவிட்டாள் மாயா.
“இங்க பக்கத்துல எதாவது ஆறு குளம் இருக்கும் வா அப்டியே நடந்து போய் பார்க்கலாம்” என அவளை துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.