MT 10

மாடிவீடு – 1௦

அறுவடை நடந்துக் கொண்டிருப்பதால் அந்தக் குளத்தில் நீர் வற்றாமல் நிரம்பி இருந்தது.

அதைப் பார்த்ததும் அமுதனுக்கும் குளிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவள் குளித்துக் கொண்டிருந்தாளே?

அவளையே, அவள் முகத்தையே பார்த்திருந்தான்… பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.

குளத்தில் கிடந்த அல்லி பூக்களைப் போல் அவன் கண்களுக்குத் தோன்றினாள்.

ஆனால், அதற்குள் அவன் நிற்பதை அவள் பார்த்துவிட்டாள்.
திடுக்கிட்டுப் போனாள். கண்கள் சிவக்க, அவனை நோக்கி மேலேறி வந்தாள்.

தாவணியைக் கொண்டு முழுதாக மேனியை சுற்றிக் கொண்டவள், டவலை எடுத்து மேலோடு போர்த்திக் கொள்ள,

இவன் வேகமாய்த் திரும்பி நடந்தான். முதல் நாள் ஏற்பட்ட, சேறு அபிசேகம் நியாபகத்தில் வர, வேகமாக நடந்தான்.

“இங்க வாருங்க” வேகமாகத் திரும்பி நடந்தவனை அழைத்தாள்.

ஒரு நொடி நின்றவன், மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

“உங்களத்தேன் இங்க வாருங்க”

அவள் அருகில் வந்தான் அமுதன்.

‘சட்’ என அவனைப் பிடித்துக் குளத்தில் தள்ளிவிட்டாள்.

‘தொப்’ என அவன் குளத்தில் விழுந்தான்.

‘குளத்தில் குளித்ததைப் பார்த்தவனுக்கு, தண்டனைக் கொடுத்துவிட்டோம்’
இரு கைகளையும் தூசி தட்டுவது போல் தட்டியவள், கொண்டு வந்த துணியைக் கையில் எடுத்து திரும்பி நடந்தாள்.

ஒரு நொடி நின்றாள்.

‘குளத்தில் நின்றவனின் சத்தத்தைக் காணுமே’ திரும்பிப் பார்த்தாள் அவனைக் காணும்.
“உம்” தோளை குலுக்கியவள், பின்னே திரும்பி நடந்தாள்.

அப்பொழுது அவன் மேலே வந்தான், இருகைகளையும் மேலே தூக்கி தத்தளித்தான். மைனா குஞ்சைப் போல் வாயை பிளந்து தண்ணீரை குடித்தான், மீண்டும் உள்ளே சென்றான்.

இக்காட்சி அன்பு கண்ணில் பட, வேகமாகத் தண்ணீரில் குதித்தாள். அவனைக் காப்பாற்ற வேண்டுமே?

அவனைப் பிடித்து இழுக்க, அவளை இழுத்துக் கொண்டு நீரின் உள்ளே சென்றான் அவன்.

அவன் முடியை கொத்தாகப் பிடித்தாள். பங்க் வளர்திருந்தான் போல, கையில் வசமாய்ச் சிக்கியது… இழுத்துக் கொண்டு தண்ணீருக்குள் இருந்து வெளியில் வந்தாள்.

‘இவனை இழுப்பதற்குள் அம்மா தந்த சத்து எல்லாம் போயிருமே… இன்னைக்கு இந்தச் சத்து எல்லாம் சேர்த்து சாப்டோணும்’ மனம் கணக்கிட்டபடி இருந்தது,

அவன், அவள் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

‘அன்பு, யாருகிட்டனாலும் எட்டி நின்னு பேசோணும்… பேக்கு மாதிரி கையைப் பிடிச்சு எல்லாம் போச விட்டுடாத புள்ள’

‘ஏன் மதனி, கையைப் பிடிச்சா தான் என்னாவாம்?’

‘அப்புறம் புள்ள வந்தா அய்யோ… அம்மான்னு கத்தப்புடாது சொல்லிப் போட்டேன்’

‘கையைப் புடிச்சா புள்ள வருமா?’

‘ஆமா வருந்தேன்’

இதெல்லாம் இப்பொழுது நியாபகத்தில் வந்து தொலைத்தது. கரைக்கு வருவதற்குள். அவன், அவளை இடுப்போடு அணைத்துக் கொண்டான்.

‘யப்பா இதென்ன இப்படிப் புடிக்குறான்.. அப்படிக்கா வுட்டுட்டு போகலாமா?’ என்று கூட அன்பு எண்ணினாள்.

ஆனால் தண்ணீரில் விழுந்தவர்கள் இப்படித் தான் பிடிப்பார்கள் என அவள் பார்த்திருக்கிறாள். வேகமாக அவனை இழுத்துக் கரையில் படுக்க வைத்தாள்.
அவனுக்கு வேகமாக மூச்சு வாங்கியது.

‘இழுத்துட்டு வந்தது நானு, மூச்சு எனக்குத்தேன் வாங்கோணும்’ எண்ணியபடியே அவனின் பேண்ட் கொஞ்சம் லூசாக்கினாள்.

அந்த நிலையிலும் அவளின் கைகளைத் தட்டி விட்டான் அவன். லேசானதொரு நல்லெண்ணம் அன்பு மனதில்.

கைகளை வைத்து வயிற்றில் அழுத்த, கண்களை மெதுவாகத் திறந்தான்.

“உங்களுக்கு நீச்சல் தெரியாதா?”

“தெரியாது”

“மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்”

அவன் அப்படியே செய்தான்.

“தண்ணி நிறையக் குடிச்சிட்டீங்களா’

அவன் தலையை மெதுவாக அசைத்தான்.

அவனின், சட்டை பனியனை விலக்கி அவனின் வயிற்றில் அமுக்கினாள்.
அவன் குடித்த நீர் எல்லாம் வெளியில் வர, எழுந்து நிற்க உதவியாக, கைகளை நீட்டினாள் அன்பு. அவள் கைகளைப் பிடித்து எழுந்து நின்றான்.

தென்றல் காற்று வீச, ஈர உடையுடன் இருக்கக் கால் கொஞ்சமாய் நடுங்கியது அவனுக்கு..

அவனைப் பார்க்க பாவமாய் இருக்கத் தன் இரண்டு கைகளையும் சூடு வர, தேய்த்து அவன் கன்னங்களில் வைத்தாள்.

அவனுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது.

அவன் கைகளைப் பிடித்தும் தேய்த்து விட்டாள். கைகளின் வழியாக அவன் இதயம் தொட்டாள் அன்பு.

என்னவோ போல் இருக்க, டக்கென்று கைகளை விலக்கிக் கொண்டாள்.

“உங்களுக்கு நீச்சல் தெரியாதா?”

“இல்ல” என இருபக்கமும் தலையாட்டினான் அவன்.

“நீச்சல் தெரியாவிட்டால், குளக்கரைக்கு எதுக்கு வரோணும்? குளிக்கிற பெண்களைப் பார்க்க அத்தனை ஆசையா?”

“நான் அந்தப் பக்கம் போனேன். நீ இந்தப் பக்கம் வந்தாய். உன்னைப் பார்க்கணும்னு ஆசையா இருந்திச்சி, திரும்பி பார்த்தேன்… இந்தப் பக்கமாய் வந்த உன்னைக் காணும், எங்கே போயிருப்பனு அப்படியே தேடி வந்தேன். நீ குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாய். தாவணியுடன் குளித்துக் கொண்டிருந்தல்ல, அது தான் பார்த்தா பரவாயிலன்னு பார்த்துட்டு இருந்தேன்”

பால்குடி பாப்பா போல் அவன் பேசிக் கொண்டிருந்த பேச்சில் மயங்கித் தான் போனாள் கன்னியவள். அவன் சொல்வது பொய்யில்லை என நம்பினாள். தான் தான் அவசர பட்டுட்டோம் என்று வருந்தினாள்.

“என்னை மன்னிச்சு போடுங்க, நான்தேன் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன்”

“கோபம் கண்ணை மறைக்கும்னு சொல்லுவாங்க. அந்தக் கோபம் தான் என்னைக் காப்பாத்திச்சி நீ நல்லது தான் பண்ணிருக்க. மன்னிப்பெல்லாம் வேண்டாம்”

நேரம் ஆகுவதை உணர்ந்த அன்பு, “நீங்க எங்க போகணும்?” என்று கேட்டாள்.

“நான் எங்கும் போகவேண்டாமே?”

“உங்க வீட்டுக்கு போகாண்டாமா?”

“போகணுமே, இதோ இங்கே தானே இருக்கு”

“இங்கேயா? எங்கே?”

“பக்கத்துல தான்”

“ஓ… யாருனா வீட்டுக்கு வந்திருகீகளா?”

“இல்லையே இது தான் என் ஊர்?”

அவனை ஏற இறங்க பார்த்தாள் அன்பு… ‘இந்த ஊரில் இப்படி ஒருவனா? பார்த்த நொடி எல்லாம் வம்பில் தான் கழிந்தன… வேறு எதற்கோ வருகிறான் என்று பார்த்தால்? இதே ஊராமே?’

“உங்கள் வீடு எங்கே?”

“இங்கே தான்”

“எங்கே?”

“அதோ அங்கே?”

“வாத்தியார் வீட்டுக்கு வந்துருகீகளா?” அப்பொழுது கூட அவன் வாத்தியாராக இருக்கக் கூடும் என எண்ணவில்லை.

“இந்த ஊர் பள்ளி வாத்தியார் அமுதன் தான் நான்?”

“நாந்தேன் தினமும் சாப்பாடு கொடுப்பேன், அவகளா நீங்க?”

“என்ன, சாப்பாடு வச்சுட்டு ஓடி ஒளியுறது நீ தானா?” ஆச்சரிய குரல் அவனிடம்.

“ஆமா, நாந்தேன் இந்த அன்பாக்கும்”

“உன் பேரு அன்புவா?”

“ஆமா… அன்பரசி ”

“ரொம்ப அழகான பேரு உன்னைப் போல?”

அன்புக்கு அதிசயமாய் வெட்கம் வந்தது. கன்னம் இரண்டும் பளிச்சிட்டது. அவள் கன்னத்தைத் தொட அவனுக்கு ஆசை… ஆனாலும் பயம். நீண்ட கைகளை மடக்கிக் கொண்டான்.

அவன் அவளையே பார்த்திருந்தான்… இந்தக் கொஞ்ச நாளில் நிறைய வித்தியாசம் அவளிடம்… மஞ்சள் தேய்த்த முகம். மஞ்சள் பூசியிருப்பாள் போல, அதன் வாசம் அவன் வரை வீசியது…

அவனின் பார்வை மாற்றத்தைக் கண்டு எழுந்தாள். அவளின் மதனி கூறியவை நினைவில் வர,

“நேரம் ஆகிட்டு” என்றபடி திரும்பி நடந்தாள்.

“அன்பு நில்லு?” அவளின் கையைப் பிடித்தான்…

அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், கைகளை விலக்கி விலகி நடந்தாள். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அவனைப் பிடித்து விடுமோ என்ற பயம் நடந்து விட்டாள்.

#######

வாய்க்கால் வரப்பில் அமைதியாக அமர்ந்திருந்தாள் தமிழ். இருமுறை அவள் முகத்தை முகத்தைப் பார்த்தான் அழகு.

வாய்கால் பாதையை வாழை மரங்களுக்குத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தான் அழகு.

“இப்படி உச்சி வெயில இருகாதீகனு எத்தனை நாள் சொல்லுறது அம்மணி?”

“நான் சொன்னா மட்டும் நீ கேட்கவா செய்யுற?”

“நீங்க சொல்லி நான் என்ன கேட்கலீங்கம்மணி?”

“என் கழுத்தில மூனு முடிச்சி போட சொன்னேனே?”

எழுந்து நடந்தான் அழகு. வேறு பக்கம் நீரை திருப்பி விடச் சென்றான்.

“அழகு நான் கேட்டுட்டே இருக்கேன் நீ போயிட்டே இருக்க?”

“ஏன் அம்மணி இப்படி அடம் புடிக்குறீக. யாருனா பார்த்தா ஏதாவது பிரச்சனை ஆகிட போகுது”

அவனுடன் பேசாமல் நடந்தாள். தன்னால் அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது எண்ணியபடியே சென்றாள். எந்தக் காலத்திலும் அவளால் அவனுக்கொரு பிரச்சனை வரவிடமாட்டாள் தமிழ்.

அவன் கை, கால்களைக் கழுவி கொண்டிருக்க, அங்கிருந்த கல்லில் அமர்ந்து நாடியில் கைவைத்து அவனையே பார்த்திருந்தாள் தமிழ்.

“அப்படிப் பாக்காதீங்கம்மணி?”

“ஏன்?”

“நான் உங்களுக்கு ஏற்றவன் இல்லை?”

“ஆனா எனக்கு நீதேன் ஏற்றவன்?”

“குள்ளன் எட்டாத நிலவுக்கு ஆசைப்படக் கூடாது?”

“நிலவு, உன் கை எட்டும் தூரத்தில் வரும்பொழுது பிடிக்கக் கூடாதா?”

“நிலவு தேடி வரும் அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை”

“முள் குத்தும் என்பதால் யாரும் பாதையில் நடக்காமல் இருப்பதில்லை?”

“உங்களுக்கு இந்த முள் பாதை வேண்டாம்?”

“நீ என்னுடன் இருந்தால், முள் பாதையையும் மலர் பாதையாக மாற்றிவிடுவேன்?”

“வேண்டாம், உங்களுக்கு எத்தனையோ மலர் பாதைகள் காத்திருக்கு… காலமெல்லாம் இந்த முள் பாதையில் பயணிக்க வேண்டாம்”

“முள் பாதையை மலர் சோலையாய் மாற்ற என்னால் முடியும்… நீ இருக்கும் பட்சத்தில். உன்னோட நானும் ஒரு ஓரமாய்ப் பயணிக்கிறேன் அழகு. உன் பாசக் கூட்டில் எனக்கொரு இடம் கொடு” உணர்ச்சி பெருக்கில் தமிழ் கண் கலங்கிப் போனாள்.

“அம்மணி என்ன இது?” அவன் அந்தக் கண்ணீரை துடைத்து விட்டான். தன் அம்மணியின் கண்ணீரை காணும் சக்தி அவனுக்கில்லை.

“எனக்கு இந்த ஒரு ஆறுதல் கை போதும் அழகு” அவன் கைகளைப் பற்றி அவள் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

“எனக்கு இது போதாது?” என்றான் அவன்.

அவள் புரிந்துக் கொண்டாள். அவனின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

“நீங்க ரொம்ப நல்லா இருக்கோணும் அம்மணி. எங்கய்யா பார்த்து பூரிச்சு போற அளவுக்கு நீங்க நல்லா இருக்கோணும். அது என்னால தவறக்கூடாதுங்கம்மணி… என்னை விட்டு விடுங்கள்” அவள் கைகளை அகற்றினான்.

“நான் என் தகுதிக்கு மீறி ஆசைப்படகூடாது”

“நான்தேன் ஆசைபடுதேன்?”

“நீங்களும் உங்க தகுதிக்கு குறைந்து ஆசை படக்கூடாதுங்கம்மணி?”

“அழகு! நான் உன்னைச் சின்ன வயசில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். உன்னை எனக்குத் தெரியும். எனக்கு உன்னைத் தெரியும். உன்னோட காதல் கூட வேண்டாம் அழகு, உன் அருகில் உன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும், வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் உன்னை, உன் முகத்தைப் பார்க்காமல் மட்டும் என்னால் இருக்க முடியாது. என்னை ஏற்றுக் கொள், எனக்கு நீ வேணும் அழகு”
சிறு குழந்தையாய் அவள் கெஞ்சினாள்.

அவன் பதறிப் போனான் “நான் உங்களை ஏற்றுக் கொள்வதா? நான் உங்க காலடியில் கிடக்க வேண்டியவன் அம்மணி?”

“நீ கோபுரத்தில் இருக்க வேண்டியவன் அழகு”

“உங்க அன்புக்கு நான் தகுதியானவன் இல்ல?” இந்தச் சிறுப்பெண்ணின் காதலை தாங்கும் சக்தி அவனுக்கில்லை.

தமிழை அவனுக்கு அத்தனை பிடிக்கும். சில நேரங்களில் தன் ஐயா, அம்மணி என்று வந்து விட்டால், தன் தங்கையைக் கூட மறந்து விடுவான் அவன். இப்பொழுது அவளின் இந்தப் பாசம், அன்பு, காதல் அவனை, அவனையே மறக்க வைத்தது.

தன்னை மறைந்து, அவளின் இரு கன்னங்களில் வழிந்த நீரை துடைத்து விட்டான்.
அவன் இரு கைகளையும் பிடித்து, அவள் முகம் புதைத்தாள்.

அந்தக் காய்ப்பு ஏறிய அந்தக் கைகளின் கடினம் அவள் மனதை லேசாக்குவதாய் இருந்தது.

####################

மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்திருந்தான் அழகு. தமிழை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. அவள் கண்களில் தெரியும் தீவிரம் அவனை மிகவும் பயமுறுத்தியது.

அவன் ஒரு வளர்ந்த ஆண் மகன் ஆனாலும் பயந்தான். இந்தப் பயம் ஆலமரத்தானை கண்டில்லை. தமிழின் காதலைக் கண்டு! எனக்காக எதையும் செய்யும் தீவிரம் அவள் கண்களில்.

வீட்டில் லிங்கம் அமர்ந்திருந்தான். பட்டணத்திற்குச் சென்றிருந்தான். கோவில் கொடை வருவதால் அன்புக்குப் புதுத் துணியும், வளையலும் வாங்கி வந்திருந்தான்.

அன்பு முகத்தில் ஒரு பரவசம்… ஒரு சந்தோசம்… அதைக் காண அழகு மனதில் இருந்த சஞ்சலம் ஓடியது. தங்கையை நல்ல படியாகக் கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வர எல்லாம் ஒரம்கட்டினான்.

அதில் கொஞ்சமாய்த் தமிழ் மேல் சாய்ந்த மனதும் ஓரமாய் அமர்ந்து கொண்டது.

இன்று ஐயா வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்திருந்தார் அமுதா. அதையும் கொண்டு வந்திருந்தான்.

‘எல்லாம் மறந்துப் போனேனே’ குற்ற உணர்ச்சி தாக்கியது.

பாசமாக லிங்கம் வாங்கிய துணியைக் காட்டி குதித்துக் கொண்டிருந்தாள் அன்பு. அவள் தலையை வருடி விட்டவன் உள்ளே சென்று சாப்பாட்டைத் தட்டில் இட்டு வந்தான்.

ஒன்றை லிங்கம் கையில் கொடுக்க மற்றொன்றோடு தங்கை அருகில் அமர்ந்து கொண்டான்.

அவளின் சந்தோசத்தைப் பார்த்தபடியே ஊட்டி விட, அண்ணன் முகத்தைப் பார்த்தபடியே உணவை உண்டாள் அந்தப் பாசக்கார தங்கை.

அண்ணன் ஊட்டி விட்டதாலோ என்னவோ அளவுக்கதிகமாக உணவை உண்டாள். அதிலும் லிங்கம் வாங்கி வந்த தீனியும் சேர்த்து கட்டியிருந்தாள்.

லிங்கம் கோவில் திருவிழா முடிந்ததும், ஊரில் சின்னப் பெட்டி கடை வைக்கபோகிறான், அதற்காகத் தான் பட்டணம் வரை சென்றிருந்தான்.

லிங்கம் வீட்டுக்கு செல்லவே, தங்கை அண்ணன் மடியில் படுத்துக் கொள்ள, அப்படியே தட்டிக் கொடுத்தான்.

எந்தக் கவலையும் இல்லாமல் படுத்திருந்தாள் அவள். இதே போல் எப்பொழுதும் தன் தங்கை இருக்க வேண்டும் மனதார வேண்டிக் கொண்டான் அழகு.

நடு இரவில் திடீரென விழித்துக் கொண்டாள் அன்பு. தன் அண்ணனைப் பார்க்க அவன் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

வயிறு எதுவோ செய்ய, வயிற்றை வருடியவள் வேகமாக எழுந்தமர்ந்தாள்.

வேகமாகக் குனிந்து வயிற்றைப் பார்க்க, அது தாவணிக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

அதே நேரம் மனதில், அவன் கட்டிப் பிடித்ததும், மதனி கூறியதும் நினைவு வர, ‘மதனி சொன்ன போல, புள்ள வரப்போதா?’ பயம் பிடித்துக் கொண்டது.

அங்கும் இங்கும் நெளிந்துக் கொண்டிருந்தாள்.

இனிப்பும், காரமும் சேர்ந்து வயிற்றை மந்தமாய் நிரப்பி இருந்தது. இதில் தண்ணீர் தாகம் வேறு ஒரு சொம்பு தண்ணீர் குடிக்க, இன்னும் வளர்ந்தது வயிறு.

அங்கும், இங்கும் உருண்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் பயம் மதனி சொன்ன போல ஆகிட்டா? மேற்கொண்டு யோசிக்கும் அளவுக்கு அன்பு வளரவில்லை.

தாய் இல்லா பிள்ளை என்று அவளின் மதினி நிறையப் பத்திரம் என்று பயமுறுத்தி வைத்திருந்தார். எல்லாம் அவளின் நலனை முன் கொண்டு. வெகுளி யாரையும் நம்பி ஏமாந்திட கூடாதே என்ற நல்லெண்ணத்தில்.

கொஞ்சம் நேரத்தில் வயிறு சத்தம் போட, கொல்லை பக்கம் போனவள் நிம்மதியாய் வந்து படுத்துக் கொண்டாள்.

‘நல்ல வேளை மதனிக்கு தெரியும் முன்ன, புள்ளை வெளிய போச்சு’ என்ற நிம்மதி அவளிடம். இப்படித் தான் அவள் எண்ணம் இருந்தது.

ஏனோ அவன் கையைப் பிடித்ததும், கட்டி பிடித்ததும் அவளில் ஒரு பயத்தை விதைத்திருந்தது.

#############

லிங்கம் நேராகச் செல்வி வீட்டுக்கு தான் சென்றிருந்தான். அவனின் அத்தை கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

செல்வி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள். முத்தார் பயங்கரமாய் அவளைத் திட்டியிருந்தார். என்றும் இல்லாமல் இன்று அவள் முகம் மிகவும் வாடி இருந்தது.

இன்று முத்தார் தண்ணி எடுக்கச் சென்றிருந்தார். தினமும் செல்வி தான் செல்வாள். இன்று ஏனோ போகவில்லை எனக் கூறவும் அவரே குடத்தை எடுத்து ஊர் கிணற்றுக்குச் சென்றார்.

“என்ன முத்தார் நீ தண்ணீ எடுக்க வந்திருக்கவ? செல்வி புள்ள எங்க?”

“அவ, வீட்டுல இருக்காங்க மதனி”

“செல்வி வயசுக்கு வந்துட்டா போலன்னு நினைச்சுப் போட்டேன். எப்பவும் அங்கும் இங்கும் சுத்தி அல்லாரையும் வம்பிழுக்குமே, அதேன் கேட்டேன்”

“இல்லிங்க மதனி. சும்மா தேன் இருக்கா?”

“ஆசுபித்திரில போய்க் காட்டு புள்ள. அவ சோட்டு புள்ளைங்க எல்லாம் வயசுக்கு வந்தாச்சி. இன்னும் செல்வி மட்டுந்தேன் வரேல, வயசு பதினாரு ஆவ போதில்ல” சொல்லியபடியே குடத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் நடந்து விட்டார்.

அன்புவை விட இரண்டு வயது மூத்தவள் செல்வி. சின்ன வயதில் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அவள் அலறிய அலறல், போட்ட ஆட்டம் எல்லாம் அவளை மிகவும் தாமதமாகப் பள்ளியில் சேர்க்க வைத்தது.

வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரே ஏச்சி தான் செல்விக்கு. “பொட்ட புள்ள மாதிரி வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்கோணும், பையன் மாதிரி ஊரை இப்படிச் சுத்தினா கண்டவளுக இப்படித்தேன் பேசுவாளுக. அவளுக வாய்க்கு நாம ஏன் அவலா இருக்கோணும்”

“ம்மா… அதுக்கு நா என்னம்மா செய்யோணும். என் ஊரை நான் சுத்துறேன் அவளுகளுக்கு என்னவாம்?”

“வாய் பேசாத, இந்த வாய் இப்படிப் பேசுறதினால தேன் அவளுக ஒன்னை பேசுறாளுகா”

“அவளுக பேசுறாங்கனு நான் வீடுகுள்ளாற அடைஞ்சு கிடக்கோணுமா?” எகிற,

முதுகில் நான்கைந்து வைத்திருந்தார். “இப்படிப் பேசுறதினாலதேன். இன்னும் பெரிய புள்ளையா ஆவாம இருக்க, நீ பொட்ட புள்ளையான்னு ஆசுபத்திரில போய்ப் பாக்கோணுமாம்? எல்லாரும் சொல்லுறாளுக… என்ன புள்ளன்னு பாக்க சொல்லுறாளுக, பெத்த தாயிக்கு தெரியாததா ஆசுபித்திரில சொல்லிட போறாக” கூறியபடியே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

இவளை நம்பி தாயில்லா புள்ளை லிங்கம் இருக்கிறானே அது தான் மிகவும் கவலையாக இருந்தது.

செல்விக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. வெளியில் செல்லும் போது “என்ன புள்ள நீ எப்போ குத்தவைக்கப் போரவ?” இப்படி எல்லாரும் கேலியாகக் கேட்கும் பொழுது அவர்களுக்கேற்ற போல் கிண்டலாக ஏதாவது சொல்லி செல்வாள்.

இன்று தன் தாய் கேட்கவுமே மிகவும் கவலையாக இருந்தது. அதிலும் அவர் அடிக்கவும் அப்படியே அமர்ந்து விட்டாள்.

லிங்கம் எப்பொழுதும் செல்வி வீட்டில் தான் இருப்பான். அத்தை அவனுக்கு நிரம்பவே பிடிக்கும்.

“என்னடா பெண் பிள்ளை வீட்டில் சுற்றுகிறாயா? இப்பொழுதே கல்யாணம் கட்டிப்ப போல” ஊரில் கிண்டல் செய்தால்,

“ஆமா” என்பான் அவன்.

செல்வி தவழ தொடங்கிய பொழுது லிங்கம் தான் அவளுக்கு விளையாட்டுப் பொருள். அப்படித் தான் அவனைப் பாடாய் படுத்துவாள்.

அவள் அழுதால் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றுவான். அவளுக்கு மூக்கு பிடித்து விடுறது வரை அவன் தான்.

செல்வியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் அவன் தான். அழுதால் தோளில் தூக்கி செல்வான்… பள்ளிக்கு வேண்டாம் என்றால் எங்காவது ஊர் சுற்ற அழைத்துச் செல்வான்.

இப்படிச் செல்விக்கு எல்லாமே லிங்கம் தான். அவனுடன் மட்டும் தான் விளையாடுவாள். அவனும் இணைந்துக் கொள்வான். அவனை என்ன தான் அவள் கிண்டல், கேலி செய்தாலும் அவள் கடைசியாகச் சிரிப்பு சிரிப்பாள் அதில் சொக்கித்தான் போவான்.

இன்று அவளைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. எதற்காகவும் அவளை அவன் விட்டு விடமாட்டான். அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு காதல் பிச்சைக்காரன் அவன்.

அவள் அருகில் வந்தவன், தான் கொண்டு வந்த பையை அங்கு வைத்துக் கொண்டு அந்த இருட்டிய மாலை நேரம் அவளை அழைத்துக் கொண்டு ஐயா வயலுக்குச் சென்றான். இனி அவளின் சந்தோசம் அவன் பொறுப்பு!

அவளின் கஷ்டத்தை போக்கும் இடம் அந்த இயற்கை அளித்த பசுமையே!