Kaalam Yaavum Anbe – 1
Kaalam Yaavum Anbe – 1
காலம் யாவும் அன்பே – 1
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் உதவும் செங்கதிர் வேலோன்
பாதமில்ரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட
கிண்கிணி யாட ……..
அதிகாலையில் மெல்லிதாக தன்னுடைய செல்போனில் பாடலை ஓடவிட்டு , அழகாக இடியாப்பம் பிழிந்து கொண்டிருந்தார் திருக்குமரன். தன்னுடைய ஒரே மகள் இயல் இன்று இன்டர்வியூ ! அவளை விட இவருக்கே ஆர்வமும் படபடப்பும் அதிகமாக இருந்தது.
தாயில்லாமல் வளர்ந்த பெண் அவள். அவளது பண்ணிரண்டு வயதில் ஒரு விபத்தில் அவள் தாய் இறந்துவிட, மிகவும் சோர்ந்து போனாள்.
ஒரு பெண்ணிற்கு டீன் வயதை நெருங்கும் நேரம் அவசியாமான ஒன்று, தாயின் அருகாமை. உடலில் ஏற்படும் மாற்றங்களும், சமூகத்தில் அவள் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் ஒரு தாய் தான் தோழியாகவும் இருந்து வழிநடத்த வேண்டியதாக இருக்கும்.
அப்படிப்பட்ட தாயை பரிகொடுத்து மீள முடியாத வருத்தத்தில் சிக்கி இருந்தாள் இயல்.
அவளை தேற்றும் வழி தெறியாமல் , வேலைக்குச் செல்லும் போது கூட தன்னுடனேயே அழைத்துச் செல்வார் திருக்குமரன்.
அவர் வேலை செய்தது ஒரு தொல் பொருள் மையம். அங்கே பலதரப்பட்ட அக்காலப் பொருட்கள் ஆராய்ந்த பின்பு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டிருக்கும். அவற்றை பார்த்துக் கொள்வதும், புதிதாக ஏதாவது கண்டுபிடித்தால் அதைப் பற்றிய தொகுப்பை எடுத்து வைத்துக் கொள்வதும் தான் அவரது வேலை.
இந்தப் பழைய பொருட்களையும் அவற்றின் பின் இருக்கும் அந்தக் காலத்தின் கதையைக் கேட்பதிலும் இயல் மிகுந்த ஆர்வம் காட்டினாள்.
அந்தக் கதைகளைக் கேட்ட பின், அவற்றைப் பற்றி எங்காவது பழைய புத்தகங்களில் படித்தால், உடனே இங்கு வந்து அதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வாள். புத்தகத்தில் இருப்பதும் இந்தப் பொருளும் ஒன்று என்று தெரியவரும் போது அவளுக்குள் ஏற்படும் அந்த பிரமிப்பிற்கு அளவே இல்லை.
அதற்காகவே நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் இருக்கும் , பாட்டியின் பாட்டி கொடுத்த சில பரம்பரை நகைகள் , சின்னச் சின்ன பித்தளை , வெள்ளிப் பொருட்கள் இவற்றை அவ்வப்போது எடுத்து அழகு பார்ப்பாள். அதை எப்படி எந்த நேரத்தில் உபயோகப் படுத்தி இருப்பார்கள், யார் எல்லாம் இதை போட்டிருப்பார்கள் என்பதில் அவளது கற்பனை செல்லும்.
நாவல்களின் ஹீரோக்களும் , சில சமயம் வில்லன்கள் கூட அவளது கனவில் வருவதுண்டு. காட்சிக்கு காட்சி கனவு காண்பாள்.
சிறுது சிறிதாக தாயின் இழப்பிலிருந்து வெளியே வந்தாள். திருக்குமரனும் மகளின் இந்த கற்பனைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். தன்னுடைய முன்னோர்களைப் பற்றி அவளுக்கு இருந்த ஆர்வமும் இந்தக் கதைகளும் இப்போது அவளது இழப்பை ஈடு செய்ததால் அவருக்கு அது மகிழ்ச்சியே!
இந்தப் பழைய புத்தகங்களும் பழைய பொருட்களும் அவள் வளர வளர, அவளை தொல்லியல் துறையில் இழுத்தது.
தந்தை பழைய பொருட்களைப் பாதுகாக்கும் பனி செய்கிறார், தானோ அவற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து அவற்றின் பின்புலம் அறிந்து மற்றவருக்கும் தெரியப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்தாள்.
இப்போது கூட அவள் இருக்கும் தஞ்சாவூரிலேயே ஆர்கியாலாஜி துறையில் தான் படித்தாள்.
தனக்குப் பிடித்த துறையிலேயே படித்ததால் மேலும் ஆர்வமாக அனைத்தையும் கற்றாள். எப்படியும் ஒரு பெரிய நிலையை இதில் அடைய வேண்டும் என்பது அவளது இலட்ச்சியம்.
சிறு சிறு ஆராய்ச்சிகளும் கல்லூரி படிப்பிற்காகச் செய்தாள். தன்னுடைய வீட்டில் இருந்த பழைய பொருட்களையே வைத்துக் கொண்டு , அது செய்யப் பட்டக் காலம் , தேதி என கண்டுபிடித்து வைத்தாள்.
இதை பெரிய அளவில் செய்ய இன்று ஒரு வாய்ப்பு அவளைத் தேடி வந்தது. தொல்லியல் துறையில் இருந்து இப்போது உதவி ஆட்கள் தேவைப் படுவதாக அறிவிப்பு வர, அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவளது ஆசிரியர் கூறியிருந்தார்.
இதன் மூலம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அருகில் இருந்து அவர்களின் வேலை நுணுக்கங்களையும் , பலபல புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்வதோடு, அங்கேயே நிரந்தரமாகப் பனி புரியும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் அவர் சொல்ல,
‘ இத இத இதத் தான் நான் எதிர்ப்பார்த்தேன்’ என்று முதல் ஆளாக நின்றாள் இயல்.
முதலில் அவர்களுக்கு எடுபடி வேலை செய்யும்படி தான் இருக்கும் என்று தெறிந்தும் கூட அவள் சம்மதித்திருந்தாள். அந்த எடுபடி வேலைக்குக் கூட அவர்களின் தொல்லியல் அறிவை வைத்தே தேர்ந்தெடுக்கப் படுவதால், இந்த நேர்காணலை அவர்கள் வைத்திருதார்கள்.
இன்று இண்டர்வியூ இருப்பது தெரிந்தும் இரவு முழுவதும் நாவல் படித்துவிட்டு தாமதமாகவே உறங்கியிருந்தாள். மணி ஏழு ஆனதும் தன் சமையலை முடித்து வெளியே வந்த திருக்குமரன் மகளை எழுப்பினார்.
“ அம்மாடி , நேரமாச்சு டா, எந்திரிச்சு கிளம்பு . இப்போ குளிச்சு வந்தாத் தான் நீ சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்” அவளது கையில் இருந்த புத்தகத்தை மூடி அருகில் வைத்தவர் அவளது தலையை வருட,
“ அப்பா, ஒரு பத்து நிமிஷம்ப்பா, நைட் லேட்டா தான் தூங்கினேன்.” செல்லம் கொஞ்சி, இன்னும் கொஞ்சம் நகர்ந்து அவரது மடியிலேயே தலை வைத்து மீண்டும் உறங்கினாள்.
“ இன்னைக்காவது இதை படிக்காம இருக்கக் கூடாத, அது சரி நீ எக்ஸாம் டைம்ல கூட படிச்சவளாச்சே! சரி இங்க பாரு நான் மதியம் சாப்பாடு கூட செஞ்சு வெச்சுட்டேன். நீ இன்டெர்வியூக்கு போயிட்டு வந்து சாப்டுட்டு தூங்கு கொஞ்ச நேரம். இப்போ எந்திரி மா!”
“ என்ன சாம்பார் செஞ்சீங்க?” கண்ணை மூடிக் கொண்டே கேட்க,
“ முள்ளங்கி சாம்பார் , வெண்டைக்காய் பொரியல் , எந்திரி டா” அவளை தூக்கி நிறுத்த, மீண்டும் அவரது தோளில் சாய்ந்தாள்.
“ உனக்கு நான் ரொம்ப செல்லம் குடுத்துட்டேன், உன்னை கட்டிக்க வர்றவன் இதை எல்லாம் எப்படி சமாளிக்கப் போறானோ!” சலித்துக் கொண்டு அவளை உலுக்க,
“ உங்கள மாதிரியே இப்படி சமைச்சு வெச்சுட்டு என்னை எழுப்புறவனா பாருங்கப்பா .. ப்லீலீலீஜ்ஜ்ஜ்……” ‘ஈஈஈஈ…..’ என இளித்துக் கொண்டே ஓடினாள்.
“ அவனும் கஷ்டப் படனும்னு அவன் தலைல இருந்தா என்ன செய்யறது, நம்ம பெரிய கோயில்ல இருக்கற ப்ரஹதீஸ்வரர் தான் வழி காட்டனும்” புலம்பிக் கொண்டே அவரும் வழக்கம் போல ஆபீசுக்குக் கிளம்பித் தயாராகி வந்தார்.
இருவரும் இடியாப்பம் தேங்காய்ப் பாலை ருசித்து விட்டு, கூடவே சூடாக பிளாஸ்கில் இருந்த காபியையும் அருந்தி விட்டு கிளம்பினார்கள்.
“ அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கிளம்பு டா “ எனவும்,
அவளும் சென்று தனக்குப் பிடித்த இந்த வேலை சுலபமாக தனக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
“ சரிப்பா , நான் கிளம்பறேன். “
“ ஆல் தி பெஸ்ட் டா தங்கம். நீ வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்ல, இருந்தாலும் உனக்கு பிடிச்சத நீ செய்யணும், அதுக்குத் தான் நான் சம்மதிச்சேன். சரியா.. வா நானே உன்னை டிராப் பண்ணிட்டு வரேன்” கூடவே கிளம்ப,
“ சரிப்பா, வரப்ப நானே பஸ்ல இல்ல ஆட்டோ புடிச்சு வந்துக்கறேன். வாங்க போலாம்” அவருடைய பழைய ஹீரோ ஹோண்டா வில் கிளம்பினர்.
புதிதாக எதையுமே அவ்வளவு சீக்கிரம் வாங்கிவிட மாட்டாள் இயல். தன் வீடு கூட அதே பழைய வாசனையுடன் இருக்க வேண்டும் , அப்போது தான் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி சொல்வாள். அந்த பழையது மீது அவளுக்கு அத்தனை காதல்.
தன் மகளின் விருப்பமே தன் விருப்பமாக வாழும் திருக்குமரனும் அப்படியே.
மிகவும் இன்பமாகவும் நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்தது அவர்களது வாழ்வு.
அவளை அந்த அலுவலக வாசலில் இறக்கிவிட்டு தன் வேலைக்குச் சென்றார்.
இயல் வாசலிலேயே நின்று அந்தக் கட்டிடத்தை ஏற இறங்கப் பார்த்தாள். அது ஒரு பழைய அலுவலகம் தான். வாசலில் போடப்பட்டிருந்த மர நாற்காலியும் டேபிளும் அவளுக்கு அக்கால குமாஸ்த்தாக்கள் இப்படித் தான் உபயோகப் படுத்தியிருப்பார்கள் என்று எண்ண வைத்தது.
ஏனோ அங்கு வந்து நின்ற பிறகு தான் அவளுக்குள் சிறு நடுக்கம் வந்தது.
‘என்னோட கனவு ஆசை எல்லாம் இந்த வேலை தான். எப்படியாவது இது எனக்குக் கிடைக்கணும் ஈஸ்வரா! ‘ மனதிற்குள் அந்த ப்ரஹதீஸ்வரனை வேண்டிக்கொண்டு தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்.
வாசலில் இருந்த ஒரு பியூன் , அவளைப் பார்த்து ,
“ இண்டர்வியூவுக்கா?!” ஒற்றை வார்த்தையில் அவளை நிறுத்தினான்.
“ ஆமா!” கையில் வைத்திருந்த பைலை மார்போடு அணைத்தபடி நின்று பதில் கூற,
“ இரண்டாவது மாடி, பக்கத்துல லிப்ட் இருக்கு பாரு அதுல போ” அவளை வழிநடத்த,
“ தேங்க்ஸ் ண்ணா” அவன் காட்டிய பாதையை பார்த்துக் கொண்டே சென்றாள்.
லிப்டில் ஏறியதும் கதவு மூடியது. அந்த மூடிய கதவு பளிச்சென்று அவளது உருவத்தைக் காட்ட, வண்டியில் வந்ததில் தலை கலைந்திருப்பதை உணர்ந்தாள்.
அதற்குள் இரண்டாம் தளம் வந்து விட, முதலில் அங்கிருந்த ரெஸ்ட் ரூமை நோக்கிச் சென்றாள்.
ஹான்ட்பேக்கில் இருந்த சிறு சீப்பினால் தலையை சரி செய்து கொண்டு , தனது உருவத்தையும் பார்த்துக் கொண்டாள்.
“ அழகு ராஜாத்தி !” சிறு வயதில் அவளது தாய் இவ்வாறு கொஞ்சுவது ஏனோ நினைவிற்கு வந்தது.
ஆம்! அவள் அழகுச் சிலை தான். சிவந்த நிறம். எந்த உடை போட்டாலும் கச்சிதமாகப் பொருந்தும் . சராசரி உயரம் தான். வட்ட முகம் அதில் உதடோரம் திருஷ்டிப் பொட்டு வைத்ததைப் போன்ற சிறு மச்சம்.
அதுவே மேலும் அவளது அழகை கூட்டியது. ஆனால் அவளது அழகைப் பற்றி அவள் என்றுமே கர்வம் கொண்டதில்லை.
சற்றே நலிந்திருந்த அந்த இளமஞ்சள் நிற சுடிதாரின் துப்பட்டாவை சரி செய்து கொண்டு , வெளியே வந்தாள். அங்கே வெளியில் இருந்த நாற்காலிகளில் அவளுக்கு முன்பே ஆறு பேர் அமர்ந்திருந்தனர்.
அந்த வேலை ஒருவருக்கு மட்டும் தான். இந்த ஆறு பேரையும் சமாளித்து பின் தனக்கு இந்த வேலை கிடைக்க வேண்டுமே என்ற பயம் லேசாக தொற்றிக்கொண்டது.
அவள் பயந்துகொண்டிருக்க, முதலாம் ஆளை உள்ளே அழைத்தனர். உள்ளே சென்று ஒரு பத்து நிமிடத்திலேயே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே சென்றார்.
அடுத்தடுத்து மற்றவர்களை அழைக்க இவள் பெயரும் வந்தது.
உள்ளே சென்றவளை இரு நடுத்தர வயதினர் வரவேற்றனர். அவர்கள் முன் ஒரு லேப்டாப் மட்டுமே இருந்தது.
“ உங்க ரெசியூம் பாத்தோம் . ஏற்கனவே ஆற்கியாலஜி படிச்சிருக்கீங்க, சில சின்ன சின்ன ஆராய்ச்சிகளும் செஞ்சு ப்ராஜெக்ட் பண்ணிருக்கீங்க. எங்களுக்கு உங்க ப்ரோஃபைல் ரொம்ப திருப்தியா தான் இருக்கு. “ ஒருவர் சொல்லி முடிக்கவும், இயலுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
மற்றவர் ஆரம்பித்தார். “ இது சாதாரண ஒரு அசிஸ்டன்ட் வேலை தான். ஆனா, நீங்க ரொம்ப கஷ்டப் பட வேண்டியதா இருக்கும். ப்ராஜெக்ட்ல ஏற்கனவே இருக்கறவங்க கூட நீங்க போகவேண்டியதா இருக்கும். நைட் ஸ்டே கூட இருக்கலாம், நீங்க ஒரு பொண்ணு, சோ அதையெல்லாம் உங்களால சமாளிக்க முடியுமா?”
அரை நிமிடம் யோசித்தவள், உடனே , “ சார், இது மத்தவங்க மாதிரி நான் வெறும் பணம் சம்பாதிக்க இங்க வரல, என்னோட கனவு இது. சின்ன வயசுலேந்தே இந்த மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சி , அகழ்வாராய்ச்சி , ஓலைச்சுவடி , குறியீடுகளை மொழி பெயர்ப்பது இதெல்லாம் அதிக ஆர்வம் உண்டு, இதைப் பத்தி மேல படிக்கணும்னு கூட நெனச்சுட்டு இருக்கேன் சார். அதனால எனக்கு இந்த வேலை ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்கும்னு நெனச்சு தான் இங்க வந்தேன்.
அவள் தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்த வேளையில், ஒருவர் அங்கிருந்த லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தார்.
உடனே அவர் , “ உன்னை நாங்க அப்பாயின்ட் செய்றோம் , அடுத்த திங்கட்கிழமை நீங்க சென்னைல இருக்கற எங்களோட மெயின் ஆபீசுக்கு போகணும். அங்க நீங்க மிஸ்டர் . வாகீஸ்வரன் கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க, அவர் தான் உங்க லீடர். அவர் உங்கள ப்ராஜெக்ட்ல அல்லோகேட் பண்ணுவாரு.
நீங்க தங்க வேண்டிய இடம் எல்லாம் அவரே பாத்துப்பாரு. உங்களுக்கு எல்லா டீடைல்சும் அவரே மெயில் அனுப்புவாரு.
ஆல் தி பெஸ்ட் “
அவளை இரண்டு நிமிடத்தில் திக்குமுக்காடச் செய்து விட்டனர்.
“ ரொம்ப நன்றி சார். ரொம்ப நன்றி. “ என இருவருக்கும் சொன்னவள் ஆனந்தத்தின் எல்லையில் இருந்தாள்.
அவள் முகம் மலர்ந்ததை அங்கிருந்த இருவர் மட்டும் அல்ல, லேப்டாப்பில் சைலென்ட்டாக அவளை இண்டர்வியூ செய்த வாகீஸ்வரனும் கண்டான்.
அவளைக் கண்டதும் அவனுக்குள் ஏதோ தன்னை விட்டுப் போன பொருள் மீண்டும் தன்னிடமே வருவது போன்ற உணர்வு.
அவள் வரவிற்காகக் காத்திருந்தான்.
அவளும் வீட்டிற்குச் செல்கையில் , “வாகீஸ்வரன் .. அட பேர்லயே நம்ம ஈஸ்வரன் இருக்காரே, கவலையே இல்ல, இனி எல்லாம் அவன் பாத்துப்பான். “ தன்னுடைய இஷ்ட தெய்வமான அந்த பிரகதீஸ்வரனை நினைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
*************************************************************
திருவாசகம் :
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க