காலை முதலே ப்ரீத்தாவுக்கு சற்று சுனக்கத்திலேயே இருந்தது மனது. எழும் போதே கடும் தலைவலி கூடவே மாதாந்திர தொல்லை வேறு. மற்ற நாட்களிலெல்லாம் பறந்து பறந்து வேலை செய்பவளுக்கு இந்த நாட்களானால் கடும் கடுப்பாகி விடும்.
அசையக் கூட முடியாது. சில நாட்கள் மயக்கம் வருமளவு கூட இருக்கும். அதிலும் வீட்டுப் பிரச்சனை வேறு சேர்ந்து கொண்டதில் அவளது உடலும் மனமும் சேர்ந்து சோர்ந்து போனது.
ஆனால் வேலையிலிருந்து ஓய்வெடுக்க முடியாது. அவள் சுனங்குவதை பார்த்து சஷாங்கனாக புரிந்து கொள்வான், உடல்நிலை சரியில்லை என்று!
எப்போதுமே அவளை உடன் வைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தாலும், அந்த நாட்களில் மட்டும் அவளை கொஞ்சம் ஓய்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்வான்.
இவை அத்தனையும் கூட கண்களை பார்த்துப் புரிந்து கொள்வதுதான். எப்போதும் வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டது கிடையாது.
அதுவும் கூட அவன் வெளியூரில் போகும் நாட்களில் இல்லையென்றாகிவிடும்.
மணி ஏழாகியதை பேசியின் அலாரம் அறிவித்தது. இந்நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும். ஆனால் அவளால் முடியவில்லை. யாரேனும் கொஞ்சம் சூடாக காபியோ ஹார்லிக்ஸோ கலந்து தந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது! ஊரிலிருந்தால் சீதாலக்ஷ்மி எழும் போதே ஹார்லிக்ஸ் போட்டு தயாராக வைத்திருப்பார்.
சுத்தம் செய்தவுடன் அவளது முதல் வேலை சூடாக பானத்தை உள்ளே இறக்குவது தான்.
அதற்குப் பின் அன்றைய தின மெனுவில் வெந்தயக் களியோ, உளுந்தங்கஞ்சியோ கட்டாயமிருக்கும்.
சிறு வயதில் அவற்றை சாப்பிட ஏக போராட்டமாக இருக்கும்!
செய்து வைத்துக் கொண்டு ப்ரீத்தாவையும் காயத்ரியையும் மிரட்டிக் கொண்டிருப்பார்.
ஆனால் இப்போதெல்லாம் அந்த தேங்காய் பால், சுக்கு, ஏலக்காய் வாசத்தோடு கூடிய அந்த உளுந்தங்கஞ்சிக்கு ஏங்கியது மனது. அதென்னவோ சீதாலக்ஷ்மி சொல்லி சொல்லி, அதைக் குடித்தப் பின், உடலே புத்துணர்வு கொண்டது போலத்தான் இருக்கும்.
இங்கு ஹாஸ்டலில் அவளாக எதையாவது வாங்கிப் பருகினால் தான் உண்டு! என்ன செய்வது? ஹாஸ்டல் எல்லாம் அம்மா வீடாக இருக்க முடியுமா?
செல்பேசி அழைத்தது!
உடலை முறுக்கிக் கொண்டு திரும்பி பேசியைப் பார்த்தாள்.
எடுக்க சொன்னது அறிவு. எடுக்க முடியாமல் திணறியது உடல். ஒரு வழியாகத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, பேசியை எடுத்தாள்!
வேறு யார்? சஷாங்கன் தான்!
உற்சாகம் வருவதற்கு பதில் சலிப்புத்தான் வந்தது!
இந்த நேரத்தில் லீ மின் ஹோவும் லீ ஜோங் சுக்கும் சேர்ந்தது போல யாரேனும் வந்தாலும் கூட, மண்டையை உடைக்கலாமா என்று தான் கோபம் வரும். இவ்வளவுக்கும் அவர்கள் இருவரின் அடிமை இவள். அதாவது கொரியன் டிராமா ப்ரியை. ஒய்வு நேரம் கிடைப்பதே அரிது. அப்படி அரிதாக கிடைக்கும் நேரங்களிலும் அவளது பொழுதுபோக்கு கொரியன் டிராமாவும், நாவல்களும் தான். தினசரி வாழ்க்கையின் கனத்தை போக்க வேறென்ன செய்ய முடியும்? அலுத்து சலித்து வந்து படுக்கும் போது, சம்பூர்ண ராமாயணமா பார்க்க முடியும்? அவளுக்குத் தேவை சற்று நேர ஒய்வு… அதோடு மூளைக்கும் சற்று புத்துணர்வு!
அப்படியொரு கொரியன் டிராமா ரசிகையின் முன் அவர்கள் வந்தாலே எரிச்சலாக தான் இருக்கும் என்றால்? எப்போதும் அவளை படுத்தியெடுத்துவரும் சஷாங்கன் என்றால் வராதா? இப்போது பார்த்து ஏதாவது பீல்ட் வொர்க் என்று அழைத்துப் போகப் போகிறான், சித்திரை வெயிலில் குளிர் காய வைக்கப் போகிறான் என்ற எண்ணம் வந்தவுடனேயே, அந்த எரிச்சல் இன்னும் பல மடங்காகியது. முதலாளியோ, தோழனோ, தோழியோ எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது!
“சொல்லுங்க பாஸ்…” எரிச்சலை எல்லாம் அடக்கிக் கொண்டு கேட்க, அவளது தொனியிலேயே ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு!
“என்ன பண்றீங்க ஆபீசர்?” எப்போதும் போல கிண்டலாக கேட்க,
“நடுவானத்துல பறந்துட்டு இருக்கேன் பாஸ்…” சிரிக்காமல் கூற,
“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் ஏன் போனீங்க ஆபீசர்?”
“உங்க கிட்ட சொல்லிட்டு போனா எதுவுமே உருப்புட மாட்டேங்குது பாஸ்… அதான் நான் தனியா பறக்க வந்தேன்…”
“சொல்லீட்டீங்கள்ல ஆபீசர்… இனிமே எப்படி நீங்க உருப்படறீங்கன்னு நானும் பார்த்துடறேன்…” என்று சிரிக்க,
“அது தெரிஞ்ச கதை தானே பாஸ். என் விதி… உங்க கிட்ட வந்து சிக்கிட்டேனே!”
“திருவாரூர் பார்ட்டில கூப்பிட்டாக… பொன்னமராவதி பார்ட்டில கூப்பிட்டாக… அவ்வளவு ஏன்? காரைக்குடி பார்ட்டில கூட கூப்பிட்டாக… அங்கெல்லாம் போகாம, என் கெரகம்… இந்த கெரக கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்…” என்று கோவை சரளாவின் பாணியில் கரகாட்டக்காரன் பட வசனத்தை அவன் சொல்லி சிரிக்க, அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“பாஸ்…” என்று சிரித்தவள், மீதம் உள்ளதை சொல்ல முடியாமல் சிரிக்க,
“ஸ்டாப்… ஸ்டாப்… ஐ நோ.. ஐ நோ… ஐ நோ…” ரகுவரன் பாணியில் கூறியவன், “செந்தில் மாதிரி திருட்டு முழியோட நான் நிக்கற மாதிரி உனக்கு தோணி இருக்குமே…” என்று கேட்க,
“எக்சாக்ட்லி பாஸ்…” என்று சிரித்தாள்.
“கூடவே கோவை சரளா ட்ரெஸ்ல நீங்க நிக்கறது உங்களுக்குத் தெரியலையா ஆபீசர்…”
“அந்த அளவுக்கு நான் இன்னும் வைல்ட்டா இமேஜின் பண்ணல பாஸ்.” சிரிக்காமல் அவள் கூற,
“எல்லாம் என் நேரம் தான்…” என்றவன், “சரி… படுக்கைய விட்டு எழுந்திருங்க ஆபீசர்…” நக்கலாக கூறிவிட்டு, “உனக்கு பதினஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். குவிக்கா கிளம்பி வா. ஐ ல் பீ வைட்டிங் பார் யூ…” என்று அவளை விரட்ட,
‘அடப்பாவி… இத்தனை வாயடித்துவிட்டு இனிமேல் உடல்நிலையை காரணம் கூட காட்ட முடியாதே முருகேசா…’ என்று அலுத்துக் கொண்டாலும், அவளையும் அறியாமல் உற்சாகம் பிறந்திருந்தது.
“பாஸ்… இப்பத்தான் ஏழரை…”
“இருக்கட்டும்… இப்பவே கிளம்பினாத்தான் சென்னை ட்ராபிக்ல நீந்தி ஏர்போர்ட் போக முடியும் ஆபீசர்…” அலட்டிக்கொள்ளாமல் கூற,
“எங்க பாஸ் போறீங்க?” பொதுவாக அவன் வெளியூர் வெளிநாடு போகும் போதெல்லாம், அவள் வண்டியோட்டிப் போவதுதான் வழக்கம். அதை நினைத்துக் கொண்டு அவள் கேட்க,
“போறீங்க இல்ல. போறோம்…” என்று கூற, ‘ஓ மை கடவுளே’ என்று கற்பனையில் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
“பாஸ்…”
“கம்மான் கெட் ரெடி…” என்று பேசியிலேயே விரட்ட, கண்களில் நின்ற கண்ணீர், விழவா எழவா என்று கேட்டது!
“ஓகே பாஸ்…” என்றவள், அதே சுணக்கத்தோடு எழுந்து ஏனோதானோவென்று கிளம்பி, முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டே அவனது காரிலும் ஏறி விட்டாள். காலை உணவை கூட அவள் உண்ணவில்லை!
சோர்வான முகத்தோடு, உற்சாகமே இல்லாமல் கிளம்பி வந்தவளை பார்த்தவனுக்கு, ஏதோ சோர்வில் இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. முந்தைய தினம் அவனது பேசிக்கு வந்த படங்கள் நினைவிலேயே ஓடிக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றி பேச முனையவில்லை.
சொல்வதாக இருந்தால், எப்போதோ சொல்லியிருப்பாளே!
“என்னாச்சு?” காரோட்டிக் கொண்டே அவன் கேட்க,
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “என்ன பாஸ்?” என்று கேட்க,
“ஒரு மாதிரியா இருக்க ப்ரீத்…”
“இன்னைக்கு பவுடர் போடல பாஸ்…” என்றவளின் குரலில் சோர்வு.
“அப்படீன்னா ரெண்டு கிலோ குறைஞ்சு இருப்பீங்களே ஆபீசர்?” சிரிக்காமல் அவன் கேட்க,
“அப்சலியுட்லி பாஸ்…” அலட்டிக் கொள்ளாமல் பதில் கூறினாள் ப்ரீத்தா.
“பாண்ட்ஸ் பவுடரை வாழ வைக்கும் வள்ளலேன்னு போஸ்டர் ஒட்டிரலாமா ஆபீசர்…”
“ஒரு கரெக்ஷன் பாஸ்… இப்ப நான் யார்ட்லி லண்டன தான் வாழ வெச்சுட்டு இருக்கேன்…”
“இந்திய துரோகி…” என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.
“அப்படீன்னா ஜாகுவார் மேட் இன் மடிப்பாக்கமா?” அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் காரை சொல்லி அவள் கிண்டலாக கேட்க,
“இல்லையே… மேட் இன் போட் கிளப்…”
“ரூவாய்க்கு நாலா பாஸ்?”
“ஏன் பிசுனாரியா இருக்க? ஒரு ஏழெட்டு வெச்சுக்க…”
“எது? அந்த தாவர சிறுத்தைபுலியா? தவ்வறது கூட கிடைக்காதே பாஸ்…”
“தவ்வித்தான் பாருங்க ஆபீசர்!” மனம் விட்டு சிரித்தான்.
“எனக்கு தேவையா பாஸ்? நான் பாட்டுக்கு முடியாம படுத்துட்டு இருந்தா, வம்படியா இழுத்துட்டு வந்துட்டு, இப்ப தவ்வ சொல்றீங்க?”
“எனக்கும் தான் முடியல. சைட்டை உன்னையே பாக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன்…”
“அதான் எப்பவும் பண்ணுவீங்களே பாஸ்…”
“பண்ணிருப்பேன். ஆனா அதுக்குள்ளே நம்ம ஸ்வேதா இருக்கால்ல…” என்றவன் இழுக்க,
“உங்க ஸ்வேதா…” அவனை வெகு சிரத்தையாக திருத்தினாள் ப்ரீத்தா.
“சரி… எங்க ஸ்வேதா தான்…” என்று சிரித்தபடி நிறுத்தியவன், “ஒரு பெரிய சண்டைக்கு ப்ளான் பண்ணிட்டு இருந்தா… எஸ்கேப் ஆகிடு முருகேசான்னு ஓடி வந்துட்டேன்…” என்று சிரிக்க, அவனையே ஆழ்ந்து பார்த்தாள் ப்ரீத்தா.
“என்ன?” என்று புருவத்தை உயர்த்தியபடி இவன் கேட்க,
“ஸ்வேதாவ ரொம்ப லவ் பண்றீங்களா பாஸ்?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க, புன்னகையோடு சாலையை பார்த்தான் சசாங்கன்.
“ஏன்டா? திடீர்ன்னு இந்த சந்தேகம்?” அவனது குரல் அவ்வளவு மென்மையாகி இருந்தது.
“சும்மாதான்… சொல்லுங்க…”
“எஸ்… ரொம்ப பிடிக்கும்…”
“பிடிக்கும் வேற… லவ் வேற…”
“ம்ம்ம்… அப்படியா? எப்ப இருந்து இதுக்கெல்லாம் டிக்ஷனரி போட ஆரம்பிச்சீங்க ஆபீசர்?” கேலியாக கேட்டான்.
“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிடறது தான் பாஸ்…” என்று அவனுக்கே திருப்பிக் கொடுத்தவள், “பதிலை சொல்லுங்க…” விடாப்பிடியாகக் கேட்டாள்.
“ரொம்ப பிடிக்கும். வாழ்க்கையை அவ கூட ஷேர் பண்ணிக்கணும்ங்கற அளவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்கு பேர் தான் லவ்னா, அப்போ இது லவ் தானே?” கர்மசிரத்தையாக கேட்க, எந்த பதிலும் கூறாமல் அவனையே பார்த்தாள்.
விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்து, புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க, ஒன்றுமில்லையென தலையை இடம் வலமாக ஆட்டினாள். என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்த ஒரு விஷயத்துக்காக இவனது மரியாதையை ஒவ்வொருவரும் ஏலம் விடுவதை ஏற்கவும் முடியவில்லை.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமே…?” என்று இழுக்க,
“லாமே…” என்று சிரித்தவன், “தாலி கட்டினாத்தான் கல்யாணமா ஆபீசர்?” என்று கேட்க,
“சமுதாயத்துக்கு அதுதான கல்யாணம்?” என்று பதிலுக்கு இவள் கேட்டாள்.
“களவும் காதல் தான் ஆபீசர்!”
“ரொம்ப முக்கியம்… அப்படியே இலக்கியம் மாறா தலைவன் தலைவின்னு நினைப்பா?” சற்று கடுப்பாக இவள் கூற,
“அப்கோர்ஸ்…” மீண்டும் சிரித்தவன், “உனக்குப் பொறாமை… எங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தை பார்த்து…” என்று அவளையும் வார, அந்த கிண்டலில் பொங்கி விட்டாள் ப்ரீத்தா.
“என்னாது? பொறாமையா? எல்லாம் நேரம் தான். அப்படியே இவங்க ரெண்டு பேரும் லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜூலியட்… இவங்கள பாத்து பொறாமைப் பட…”
“சரி சரி… விடு… உனக்கொருத்தனை பாத்து செட் பண்ணி விடல… என் பேர்…” என்று ஆரம்பிக்க, ப்ரீத்தி பட்டென கையெடுத்து கும்பிட்டாள்.
“வேண்டாம். நிறுத்துங்க. அந்த வேலைய நானே பார்த்துக்கறேன்…”
“இனிமேதான் பார்க்கனுமா? இல்ல பார்த்துட்டீங்களா ஆபீசர்?” முழு பார்மில் இருந்தான், அவளை கலாய்ப்பது என்று முடிவு செய்து கொண்டு!
“காலைல ஏழரை மணிக்கே என்னை கிளப்பிட்டு போய், நைட் ஒம்பது மணிக்கு ஹாஸ்டல்ல தள்ளிவிட்டு போறீங்க. அதுக்கப்புறம் எவனை பார்த்து, நான் கரெக்ட் பண்ணி…” என்று நிறுத்தியவள், “சான்ஸே இல்ல…” என்று முடிக்க, வாய் விட்டு சிரித்தவன்,
“ப்ச்… அப்படி ஒன்னு இருக்கோ?” என்று உரக்க யோசித்து விட்டு, “இனிமே நம்ம டெய்லி அஜெண்டால உனக்கொருத்தனை கரெக்ட் பண்றதையும் சேர்க்கலாம். ஓகேவா?” கொஞ்சம் கூட சிரிக்காமல் சீரியசாகவே சொல்ல,
“நிஜமாத்தான் சொல்றீங்களா பாஸ்?” என்று சிரிக்காமல் அவளும் கேட்க,
“அப்கோர்ஸ்… எஸ்…” என்றான், அவனது சீரியஸ் முகத்தை மாற்றாமல்!
“கிரேட் பாஸ். செம… செம… சோ…” என்று நிறுத்தியவள், “இனிமே நீங்க எனக்கு அஃபிசியலாக மாமா வேலை பார்க்கப் போவதால், இன்றுமுதல் நீங்கள் மாமா என்றே அறியப்படுகிறீர்கள்…” என்று இம்சை அரசியாக கூற, அதுவரை அவளைக் கலாய்ப்பதில் பிசியாக இருந்தவனுக்கு நெஞ்சில் வலி வந்துவிடும் போல இருந்தது.
“இன்னாது… மாமாவா?” என்றவன், “விட்டா எனக்கொரு வெத்தலைப் பொட்டி குடுத்து உக்கார வெச்சுருவ போல இருக்கே…” என்று பல்லைக் கடிக்க,
“நீங்க தான பாஸ் ஆசைப்பட்டீங்க. பார்க்கறதுதான் பார்க்கறீங்க, ஒரு லீ ஜோங் சுக் அளவுக்காச்சும் பாருங்க. அதுக்கு கீழ இருந்தால்லாம் நான் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்.” சீரியசான மோடில் சொல்வது இப்போது இவளது முறையானது.
“எவன் அவன்?”
“என்ன பாஸ் நீங்க? லீ ஜோங் சுக் தெரியலன்னு சொல்றீங்க? நீங்க வேஸ்ட்…” என்று கிண்டலாக கூறியவள், “என்னோட கனவுகண்ணன் நம்பர் ஒன் அவன்தான்…” என்று சிரிக்க,
“அந்த நம்பர் டூ, நம்பர் த்ரீ எல்லாம் இருக்கா?” என்று கேட்க,
“அப்கோர்ஸ்… லீ மின் ஹோ தான் நம்பர் டூ… லீ ஜூன் கி தான் நம்பர் த்ரீ… ஆனா லிஸ்ட் இதோட முடியல பாஸ். அது ரொம்ப பெருசு…” கண்கள் முழுக்க காதலோடு அனுபவித்து கூறியவளை, வேற்று கிரக பிராணியை பார்ப்பது போல பார்த்து வைத்தான்.
“எல்லாம் உன்னோட கொரியன் டிராமா ஹீரோஸா…” என்று பாகற்காயை தின்ற குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டவன், “உவ்வேக்…” என்று வேன்றுமென்றே வாந்தி வருவதை போல நடித்து, “அதுங்களை எல்லாம் பாத்தா ஹீரோயின்ஸ் மாதிரி இருக்குங்க… அதுங்கள போய்?” என்று தலையிலடித்துக் கொள்ள,
“ஹலோ… அவங்க என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சா போதும். உங்க கண்ணுக்கு தெரிய தேவையில்ல. உங்களுக்கு உங்க ஸ்வேதா அழகுன்னா, எனக்கு லீ மின் ஹோ தான் அழகு…” பொங்கியெழுந்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“அடப்பாவி… ஸ்வேதாவுக்கும் லீ மின் ஹோவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அவ என்னோட…” என்றவன், சற்று யோசித்து, “பார்ட்னர்..” என்று கூற,
“உங்களுக்கு உங்க பார்ட்னர்ஷிப் பெருசுன்னா, எனக்கு என்னோட கனவு கண்ணன்கள் முக்கியம் பாஸ்…” சொன்னவளின் கடைவாயிலில் குறும்புச் சிரிப்பு!