kaamyavanam14

காம்யவனம் 14

 

உலகத்தில் உள்ள மிக அழகானவற்றில் அருவியும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்ணுக்கு எட்டாத உயரத்திலிருந்து விழும் அருவி அந்த விண்ணையே பொத்துக் கொண்டு வருவது போலத் தான் இருக்கும். அதைக் காணும் அழகே தனி தான்.

அப்படிப்பட்ட அருவியைக் கண்ட மாயா, அவன் கொடுத்த வெண்பட்டுப் புடவையில் தேவலோக மங்கை போலவே காட்சியளித்து கொட்டும் நீரின் கீழே பாதி நனைந்தும் நனையாமலும் சென்று கொண்டிருந்தாள்.

நனைந்த இடங்கள் அவளின் மேனியோடு அந்த பட்டுப் புடவையை ஒட்டி உறவாட வைத்தது.

வெள்ளியை உருக்கி வார்த்தது போல விழும் அந்த அருவியில் இப்போது முழுதாக சென்று நின்றாள் மாயா. அந்த அருவியின் அழகும் வேகமாக கொட்டும் நீரும் அவள் மேல் விழுந்து அவளுக்கு மூச்சு முட்ட வைத்தது.

ஆனால் இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த பிரத்யும்னனுக்கு அந்த அருவியின் அழகை விட மேலாக மாயாவின் அழகே மயக்கியது.

அந்த அருவியின் கீழ் நிற்கும் அவளிடம் வெகுவாக தொலைந்து போய்க்கொண்டிருந்தான்.

ரப்பர்பேன்டினால் தூக்கி முடிந்திருந்த அவளது கூந்தலை அவிழ்த்து விடுதலை அளித்தாள். நீண்ட கூந்தலை தன் இரு கைகளாலும் நன்றாக அலச, அவளின் செயல் பிரத்யும்னனை மூச்சுக்குத் தவிக்க வைத்தது.

அவன் எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனது கூரிய கண் பார்வை அவளைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்பதை பாவம் அவள் அறியவில்லை.

அவளது ஈர உடை அவளது உடல் அழகை அங்குலம் அங்குலமாக அவனுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பாடிய அந்தச் சிறிய பாடல் அவளது அழகுக்கு ஈடில்லை என்பதை இப்போது உணர்ந்தான்.

எந்தப் பாடலும் அவளுடைய அழகை முழுதாக விளக்கிவிட முடியாது.

மானின் கண்களும், செதுக்கிய சிற்பத்தின் மூக்கும் அவளுடையதற்கு முன் நிற்கத் தயங்கும். அழகாகச் சிரிக்கும் அவளது உதடுகள், ‘என்னை முத்தமிடு’ என்று பிரத்யும்னனுக்கு அழைப்பு விடுத்தது.

வளைந்த அவளது கழுத்தும், செழுத்த அவளது பெண்மையும் ஒருசேரக் காண்கையில் அவனுக்கு மயக்கமே வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பசியாறும் ஒருவனின் நிலையில் இருந்தான் பிரத்யு. எதை எடுக்க, எதை தவிர்க்க என்று புரியாமல் திக்குமுக்காடிப் போனான்.

சரியான அளவில் அளவுகோலை வைத்து வரைந்தது போன்ற இடையோ அவனை அலைகழித்தது. அதனைத் தாங்கி நின்ற அவளது நீண்ட கால்களும் அவனுக்கு அவள் பெண்மையை  பறைசாற்றியது.

‘ இயற்கையே! என்னை வேடிக்கை பார்க்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறாயே!’ எதுவும் செய்ய முடியாத தன் கைகளை மடக்கி தன் தொடையிலேயே குத்திக் கொண்டான்.

“இவளுக்காக நான் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” அவன் உதடுகள் முணுமுணுத்தன.

மாயாவை தன் வாழ்வில் முதன்முறை கண்ட போதிலிருந்தே அவளை எத்தனை முறை கண்டாலும் அவனுக்கு கிறுக்குப் பிடித்தது போல ஆக்கி விடும் அவளது அழகு.

அவளோடு இல்லாத சமயங்களில் கூட கனவுகளில் அவளோடு கூடிக் களித்திருக்கிறான்.

மறுநாள் அவளிடம் அந்தக் கனவைப் பற்றிக் கூறி அவளைச் செம்மையுறச் செய்து ரசிப்பான்.

அதே போல அவளது கனவுகளையும் களவாடி அவளுக்கும் காதல் உணர்வுகளைப் புகுத்தி, மறுநாள் அவளிடமே அதைக் கேட்டு ரசிப்பான். அவளும் தயக்கமில்லாமல் தன்னுடைய உணர்வுகளை அவனிடம் பகிர்வாள்.

பேசியே பல நாட்கள் இன்பமாக கழித்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு இப்போதும் இன்பம் தந்தது.

“மாயா! அந்த சம்பாஷனைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதடி என்னை ஏற்றுக் கொண்டு என் கைகளில் தவழப் போகிறாய்?” அவளுக்குக் கேட்காத போதும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இன்னும் அங்கே ஆனந்தமாகக் குளிப்பவளின் இடையைப் பற்றிக் கொண்டு தானும் அங்கே அவளோடு நனையவேண்டும் என்ற ஆவல் அவனை அதற்குமேல் அங்கே உட்கார முடியாமல் எழுந்து நிற்க வைத்தது.

இன்று இதற்குமேல் அவளைக் கண்டால் இன்றே எல்லைமீற சிறிதும் தயங்கமாட்டான் என்பது அவனுக்கே தெரியும். மனதை அடக்கிக் கொண்டு அவளை அழைத்துவிட்டான்.

“மாயா!” கூச்சலிட்டாலும் அவளுக்கு மட்டுமே அது கேட்கும்.

அவளிடம் பதிலில்லை. மெய் மறந்து குளித்தாள்.

“மாயா, போதும் வா!” மறுமுறை அவளுக்குக் கேட்கும்படி அவனது குரல் அருகில் ஒலித்தது.

அவன் தன் பக்கத்தில் இருக்கிறானோ என அஞ்சித் திரும்பிப் பார்க்க, தூரத்தில் நின்று வா என்பதுபோல கை அசைத்தான்.

நேரமாகிவிட்டதென உணர்ந்து அவளும் அவசரமாக இறங்கி வந்தாள். வேகமாக வந்தவளின் உடல் அசைவைக் கண்டு ஒருமுறை வாயாயடைத்துப் போனவன், கண்களை இருக்க மூடித் திறந்து தன்னை கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

அவன் அருகில் வந்ததும் நிற்காமல் தான் கொண்டு வந்திருந்த துவாலையில் உடலைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மரத்தின் மறைவில் சென்று உடைமாற்றி வந்தாள்.

அவள் தன்னிடம் சற்றும் தயக்கமின்றி பழக ஆரம்பித்திருக்கிறாள் என மகிழ்ந்தான் பிரத்யு.

“ரொம்ப நேரம் ஆயிடுச்சா?” பழையபடி ஒரு ஜீன்ஸ் டாப்பில் வந்து நின்றாள்.

நேரம் போனதே அவனுக்கும் தெரியவில்லை தான். இருந்தாலும்,

“அப்படி இல்ல. ரொம்ப நேரம் தண்ணீல இருந்தா உன் உடம்பு தாங்காது. அதுனால தான் கூப்டேன். நீ போயிட்டு நாளைக்கு இதே நேரம் தயாரா வா. நான் முதல் பொருளை எடுத்துட்டு வரேன்.”

அதற்கு மேல் அங்கு நின்றாள் அவன் தன்வசமிழப்பது உறுதி என்று நகர்ந்தான்.

ஆனால் அவனது பொறுமையை சோதிப்பது போல மாய அவனை நிறுத்தினாள்.

 

“மிஸ்டர் ப்ரத்யு.. உங்க மாயா பாவம்.”

 

அவளது அந்த வாக்கியம் அவனைப் புரட்டிப் போட்டது.

‘அதற்குள் அவள் தன்னை அவனுடைய மாயா என்றாளா!’ கண்களில் காதல் பெறுக அவளை பார்த்தான்.

 

“பாதி பேசிட்டு இருக்கும் போது இப்படி நழுவிப் போறீங்களே! உங்க மாயா இதை எப்படித் தான் சகிச்சிக்கிட்டாங்களோ?!” அவளது வார்த்தையில் எள்ளல் மிதந்தது.

பிறகு தான் அவள் கூறியதன் பொருள் அவனுக்கு விளங்கியது. ‘இவள் என்னுடைய மாயா வேறொருத்தி என்றே நினைக்கிறாள்.’  அவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

 

“நான் பாதில போறது உனக்குத் தான் நல்லது. சீக்கிரம் வீட்டுக்குப் போ” அவளது இந்தக் குறும்புப் பேச்சு அவனை மேலும் ஈர்க்கத்தான் செய்தது.

“என்ன சொல்றீங்க?” கன்னத்தில் விறல் வைத்து மாயா யோசிக்க,

 

கீழே கிடந்த அவளது ஈர உடைகளை கையில் எடுத்து அவளிடம் கொடுத்தான்.

 

“என்னோட மாயா பாவம் இல்ல. நான் தான் பாவம். அவளோட காதல் அவளுக்கே புரியும் போது, என்னை என்ன பாடு படுத்தப் போராளோன்னு இப்போவே பயமா இருக்கு. கிளம்பு.” அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டான்.

 

அவளும் துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு அவன் சொன்னதை யோசித்துக் கொண்டே நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு தான், அவன் சொன்னதின் அர்த்தம் விளங்கியது. முகம் சிவந்து போனாள்.

 

‘ச்சீ ப்ரத்யு ரொம்ப மோசம்’ அவள் மனம் சிணுங்கியது.

 

மஹதியை வழியில் பார்க்க , அவள் இன்னும் மெதுவாக நடந்து  வந்து கொண்டிருந்தாள்.

‘ஐயோ இந்த ப்ரத்யு எனக்காக இவளை இவ்வ்ளோ மெதுவா ஆக்கிட்டான்.’ அவள் தனக்காக என்று நினைத்து பார்க்கையிலே சிறு  கர்வம் தோன்றியது.

“மஹதி வா வீட்டுக்கு போலாம்.” அவளைப் பிடித்து உலுக்க,அவளோ இன்னும் பிரம்மை பிடித்தவள் போல இருந்தாள்.

“மதி…” என உரக்கக் கத்த, உறக்கத்திலிருந்து விழித்தவள் போல எழுந்தாள்.

“ஆங்.. என்ன மாயா.?” சாவதானமாகக் கேட்டாள்.

“சரியா போச்சு… வா வீட்டுக்குப் போகலாம். நீ அங்கேயே குளிச்சுக்கோ” என அவளைத் தள்ளிக் கொண்டு போனாள்.இருந்தாலும் ஒரு புறம் அவளைக் காண பாவமாவனும் இருந்தது, அதனால் இனிமேல் வந்தால் தனியாக வரவேண்டும் என முடிவெடுத்தாள்.

‘எப்படியாவது இவங்க மூணு பேரையும் சமாளிக்கணும். அதுக்கு.. ம்ம் பிரத்யு கிட்டயே ஐடியா கேட்க வேண்டியது தான்’ அதையும் தெளிவாக எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர,

தேவாவும் குருவும் இவர்களை ஒரு தினுசாகக் கண்டனர்.

“என்ன மகதி நீ குளிக்கலையா? மாயா மட்டும் குளிச்ச மாதிரி தெரியறா?” என கிண்டலாகக் கேட்க,

“இவ வேகமா ஓடி போய்ட்டு குளிச்சுட்டு வந்துட்டா, எனக்கு இவளோட அளவு வேகமா போக முடியல, கால் வலி வருது.” என அலுத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்துவிட்டாள்.

மாயாவைப் பார்க்க, அவள் மனதுக்குள் சிரிப்பது போலத் தோன்றியது தேவாவிற்கு.

ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் அவன் உணர்ந்தான்.

“சரி வாங்க, இன்னைக்கு நாங்க சமச்சிருக்கோம்.சாப்பிடலாம்” என அனைவர்க்கும் உணவு எடுத்து வைத்தான்.

வழக்கம் போல் அனைவரும் கலகலப்பாக இருக்க, மாயா மட்டும் வேறு ஒரு சிந்தனையில் லயித்திருந்தாள்.

நாளை பிரத்யும்னன் கேட்கப் போகும் கேள்விக்கு எப்படியும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் இந்த நடவடிக்கை தேவாவிற்கு தனியாகத் தெரிய,

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொண்டான்.

“மாயா, அடுத்து நீ!” என குரு அவளைக் கை காட்டினான்.

அவர்கள் அங்கே என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“எ..என்ன..?” எனத் தடுமாற,

தேவா அவளுக்கு உதவினான். உயிர் தோழி, மற்ற நண்பர்களிடத்தில் கூட விட்டுக்கொடுக்க அவனால் முடியவில்லை.

“அடுத்து மாயா இல்லை.. மகதி.. நீ தான் இப்போ அடுத்த பாட்டு பாடனும்.” என ஏதோ காரணம் சொல்லி மாயாவை தவிர்த்து விட்டு  ஓரக் கண்ணால் பார்த்தான்.

அவள் மெல்லிதாக தலையசைத்து நன்றி சொன்னாள்.

அதன் பிறகு அவர்கள் பாட்டுப் பாடி விளையாடுவது புரிந்து அவளும் கலந்து கொண்டாள். ஆனால் தேவா அவளைக் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டான் என்று அவளுக்கும் புரிந்தது.

சிறு பொறி போதும் உற்ற தோழர்கள் நம் மனதை அறிந்து கொள்ள!

அதன் பிறகு அவர்கள் நால்வரும் உலவச் சென்றனர்.

குரு தான் பேச்சைத் தொடர்ந்தான்.

“நாம இங்கயே வெட்டியா பொழுதைக் கழிக்கறதுல எனக்கு விருப்பமில்ல. ஊருக்குத் திரும்பிப் போலாம்னா நீங்க எல்லாரும் சம்மதிக்க மாட்டீங்க. வேற என்ன பண்ணாலாம்னு இப்போ முடிவெடுக்கணும்.” பொதுவாகக் கேட்க,

மகதி குருவின் பக்கம் சாய்ந்தாள்.

“எனக்கும் ஊருக்கு போலாம்னு தோணுது.” அவள் இப்படிச் சொல்ல மாயா அவளை வியப்பாகப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு மகி உனக்கு. உனக்கும் காடுன்னா பிடிக்கும் தானே!” காரணம் கேட்டாள்.

“பிடிக்கும் மாயா. ஆனா இனி இங்க இருந்து என்ன செய்யப் போறோம்? உனக்கு ஒரு காரணம் இருக்கு மாயா. நீ அந்த பிரத்யும்னனுக்காக காத்திருக்கலாம். ஆனா நான் என்ன செய்யப் போறேன்? முன்னாடி நாம எதாவது இங்க ஆராய்ச்சி செய்வோம். இப்போ அப்படி இல்லையே!” வெளிப்படையாகவே கேட்டுவிட,

அனைவருக்கும் அவள் சொல்வதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இவர்கள் செல்கிறேன் என்று சொன்னது மாயாவின் மனதை வருத்தப் பட வைத்தது.

 

“தேவா நீ சொல்ற?” குரு அவன் விருப்பத்தைக் கேட்க,

“நானும் ஓபனாவே சொல்றேன். மாயாக்காக நான் இங்க கண்டிப்பா இருப்பேன். அவளோட வாழ்க்கைக்கு இங்க ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்னா, நான் அது கெடைக்கற வரைக்கும் அவ கூட தான் இருப்பேன்.” அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அவனுக்கு மாயாவின் மீதிருக்கும் அன்பினை பெருமிதமாகப் பார்த்தனர்.

மாயாவுக்கும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

‘இவன் எப்படிப் பட்ட நண்பன். யாருக்கும் வைக்காத ஒரு உன்னத நண்பன். இவனிடம் நான் பிரத்யும்னனை சந்தித்ததை அன்றே சொல்லியிருக்க வேண்டுமோ!’ குற்றவுணர்ச்சி அவளைக் கவ்விக் கொண்டது.

“அதுக்காக இங்க சும்மா இருக்கணும்னு இல்ல. இந்தக் காட்டைப் பத்தி கடற்கறை இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன் . இங்க பிரத்யும்னனையும் தாண்டி பலவிதமான அதிசயங்கள் இருக்கு. அதை நாம தெரிஞ்சுக்கறதுக்கு நமக்குத் தனி அறிவு வேணும். இனி நான் அதைத் தான் தேடலாம்னு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இருக்கறதுன்னா சொல்லுங்க. சேர்ந்து அதை தெரிஞ்சுக்கலாம். ஆனா விருப்பமில்லனா நீங்க கெளம்பலாம். நான் தடுக்க மாட்டேன். அதுக்காக உங்கள தப்பாவும் நினைக்கல. இட்ஸ் ஆல் யுவர் விஷ்”.

அவன் சொன்னது உண்மை தான். அன்று அவர்கள் இங்கு பல விஷயம் இருப்பதாகக் கூறியது ஏனோ மனதில் பதியவில்லை. ப்ரத்யும்னன் கதையே பெரிதாகத் தெரிந்தது. இப்போது தேவா சொல்வதில் அவர்களுக்குமே ஆர்வம் இருக்கத்தான் செய்தது.

“சரி தேவா நான் இருக்கேன்.” மகதி உடனே சொல்ல,

“நானும்” என குரு முடித்தான்.

அவர்களின் இந்தத் தேடலுக்கு அச்சாரமாக அப்போதே ஒன்று நிகழ்ந்தது.

அவர்கள் நின்றிருந்த மரத்தின் அருகில் இருந்து ஒரு மெல்லிய இசை வந்து கொண்டே இருந்தது.

இவர்களின் பேச்சு சுவாரசியத்தில் அது காதில் விழவில்லை. ஆனால் இப்போது அனைவரும் அமைதியாக இருக்கும் போது அது நன்றாகவே கேட்டது.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அது மரத்தின் பின்னால் இருந்து வந்தது புரிந்தது. மெல்ல அந்த மரத்தைச் சுற்றி வந்தனர்.

அந்த மரத்தின் கீழே ஒரு சிறிய வெளிச்சம் மின்னியது.

“ஹே! இது என்ன எதாவது ஜெம் ஸ்டோன்னா?” குரு ஆச்சரியாமாகப் பார்க்க,

“இல்ல, இது ஒரு பூ மாதிரி தெரியுது. சீக்கிரம் போய் நம்ம கிட்ட இருக்கற பூதக் கண்ணாடிய கொண்டு வா” தேவா அவசரப் படுத்த, மாயா உடனே ஓடினாள்.

அந்த வெளிச்சம் வந்த இடத்திலிருந்து தான் இசையும் வந்தது.

பூதக் கண்ணாடி வழியாக அதை உற்றுப் பார்க்க,

அழகிய பொன்வண்டு ஒன்று அந்த சிறிய மஞ்சள் நிற அழகிய மலரின் மேல் அமர்ந்து தேனை உருஞ்சிச் கொண்டிருந்தது. தேனை அது எடுக்கும் நேரத்தில் பூவுக்கு வலிக்காமல் இருக்கும் பொருட்டு அது ஓசை எழுப்பி அந்தப் பூவினை மயக்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்தது.

நால்வரும் அதை அதிசயத்திலும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இனி எங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்தனர்.

இவர்களின் இந்த மனமாற்றத்தை அந்த மரத்தின் மேல் இருந்த பிரத்யும்னனும் அறிந்தான்.

மாயாவிற்கு தன் நண்பர்களில் ஒருவர் அங்கிருந்து சென்றாலும் மனம் தாங்காது என்பதால் அவர்களுக்கு இங்கே இருக்க ஒரு பிடிப்பை ஏற்படுத்தினான் அவளது ஆருயிர்க் காதலன்.