Nan Un Adimayadi–EPI 8

Nan Un Adimayadi–EPI 8

அத்தியாயம் 8

இதுவரை இல்லாத உணர்விது

இதயத்தில் உண்டான கனவிது

பலித்திடும் அந்நாளை தேடிடும்

பாடல் கேட்டாயோ!! (தவமங்கை)

 

“ஆத்தா!!!”

அவன் கத்திய கத்தலில் குடித்துக் கொண்டிருந்த சொம்பு தண்ணீரைத் தவறவிட்ட காமாட்சி வெளியே ஓடி வந்தார்.

காலியாகிப் போயிருந்த அறையை வெறித்தப்படி கோபமாக நின்றிருந்தான் காளை. துடைத்து சுத்தமாக இருந்த இடத்தில், அவளது வாசம் மட்டும் நிறைந்திருந்தது. அவளுடன் இருக்கும் போது ஆசையாய் அவன் உள்ளிழுத்துக் கொள்ளும் அவளுக்கே அவளுக்கான வாசனை, ஸ்கூட்டியில் அவள் பின்னால் அமர்ந்தப் போது சுகமாய் அவனைத் தீண்டிப் போன அவள் வாசனை அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது.

அருகே வந்து நின்ற தன் ஆத்தாவை ஆழ நோக்கினான் முத்துக்காளை.

“எ..என்னடா?” அவன் பார்வையில் தடுமாறினார் காமாட்சி.

“டீச்சர் எங்க ஆத்தா?” கட்டுப்படுத்தப்பட்ட கோபம் அவன் குரலில்.

“மாடசாமி வீட்டுல ரூம்பு பார்த்துக் குடுத்துட்டாரு பெரியதனக்காரரு. ஸ்கோலு முடிச்சு வந்து கெளம்பிட்டாங்க”

“ஏன் ஆத்தா? ஏன் போக விட்ட? நான் தான் அவங்க இருக்கற திசைக்கே போக மாட்டேன்னு சத்தியமெல்லாம் வச்சேன்ல! அப்புறமும் ஏன் ஆத்தா?” கோபமாய் கேட்டான். கண்கள் சிவந்துப் போய் கிடந்தது.

“டேய் வேணான்டா காளை! என் வாயக் கிண்டாத! டீச்சர் மேல எனக்கு ஒன்னும் இல்ல, மண்ணும் இல்லன்னு நீ சொன்னாலும் ஒன் பார்வை முழுக்க அவங்க மேலத்தான் அப்பிக் கெடக்குது. இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா? நான் உன் ஆத்தாடா! எல்லாம் தெரியும்! இதெல்லாம் சரிப்படாதுன்னு தான் அனுப்பி விட்டேன்!” அமைதியாக ஆரம்பித்துக் கோபமாக முடித்தார் அவர்.

“ஐயோ ஆத்தா! ஒனக்கு நான் எப்படி புரிய வைப்பேன்! ஆமா! டீச்சர எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு! அந்த சாமிக்கும் மேல புடிச்சிருக்கு! அதுக்குன்னு அவங்க கூட வாழனும்னு நான் நெனைக்கலத்தா! அதெல்லாம் நடக்காதுன்னும் எனக்குத் தெரியும். என் ஆசை தெரிஞ்சா அவங்களே என் மூஞ்சு மேல துப்பிருவாங்க! ஏன்த்தா புரிஞ்சுக்க மாட்டற! அவங்களுக்குப் பாத்து பாத்து எல்லாம் செய்யறேன் தான். அத எந்த பிரதிபலனும் எதிர்ப்பார்க்காத உதவியாத்தான் செய்யறேன். சாமிக்கு நாம நைவேத்தியம் செஞ்சா சாமி நமக்குத் திருப்பி செஞ்சுத்தான் ஆகனும்னு கட்டாயம் இருக்கா ஆத்தா? அப்படித்தான் இதுவும்! சரக்கடிச்சா என் ஆசை என்னையும் மீறி வெளிய வந்துடுதுன்னு தான் அதையும் விட்டுத் தொலைச்சிட்டேன்! இன்னும் என்னத்தா வேணும்?”

அவர் அமைதியாகவே மறுப்பைக் காட்டவும்,

“மாடசாமி வூட்டுல எப்படித்தா அவங்க இருப்பாங்க? அவன் கக்கூஸ்னு ஒரு குழிய தோண்டி வச்சிருக்கான்! அதுல போய் அவங்க… எப்படித்தா உனக்கு மனசு வந்துச்சு? ராத்திரி மூனு வாட்டி எழுந்து பாத்ரூம் போவாங்காத்தா அவங்க! ஒரு பொண்ணா, ஒரு பொட்டப்புள்ளய பெத்தவளா, ஒரு பேத்திய வச்சிருக்க பாட்டியா ஒனக்கு அவங்க படப் போற கஸ்டம் புரியலையா ஆத்தா? பாவம்த்தா அவங்க! கூப்டுக்கலாம் ஆத்தா! நான் இனிமே கண்ணால கூட பார்க்க மாட்டேன் அவங்கள! கூப்டுக்கலாம்த்தா” குரல் கலங்கி வந்தது அவனுக்கு.

“காளை! டீச்சர கிட்ட வச்சுப் பார்த்து பார்த்து நீ மனசு வாடி போயிருவடா ராஜா! தூரமா இருந்தா எந்த சபலமும், சலனமும் மனச விட்டுப் போயிரும்டா. எனக்கு என் மகன் வாழ்க்கைத்தானே முக்கியம்” ஒரு அம்மாவாக கண் கலங்கினாலும் ஆத்தா என சிரித்த முகமாய் தன்னோடு பேசி வளைய வரும் அந்த பூமுகம் அவர் அகக்கண் முன் வந்து வாட்டியது. பிள்ளைப் பாசத்துக்கும் தவா மேல் வைத்த அன்புக்கும் நடுவில் அல்லாடினார் காமாட்சி.

“தூரமாத்தானே இருக்கனும்? சரி நான் போயிடறேன் செவல வீட்டுக்கு! டீச்சர் இங்க இருக்கட்டும்! என்னால அவங்க கண்ட இடத்துல கஸ்டப்படறத தாங்கிக்க முடியாது ஆத்தா!” என சொன்னவன் மடமடவென வெளியேறி மாடசாமி வீட்டுக்கு பைக்கை விட்டான்.

அந்த நேரம் மச்சக்காளை வீட்டுக்கு வர,

“கெளம்புய்யா மாடசாமி வீட்டுக்கு. உன் பையன் அங்கப் போய் என்ன ஒரண்டையா இழுப்பான்னு தெரியல. நாம போய் டீச்சர கூட்டிட்டு வந்துடலாம். எனக்கும் அவங்க போனதுல இருந்து, மனசு கெடந்து அடிச்சுக்குது. சாப்டிங்களா ஆத்தா, நல்லா தூங்கனீங்களா ஆத்தா, உடம்பு வலி எப்படி இருக்கு ஆத்தான்னு ஆயிரெத்தெட்டு ஆத்தா போட்டு பாசமா இருக்கும் அந்தப் புள்ள. அது இல்லாம வீடே வெறிச்சோடிப் போய் கிடக்கு!” என சொன்னவர் இரண்டு தெரு தள்ளி இருக்கும் மாடசாமி வீட்டுக்கு நடையை எட்டிப் போட்டார். மச்சக்காளையும் அவர் பின்னாலேயே ஓடினார்.

மாடசாமி வீட்டில் இவளுக்கு ஒரு ரூமை ஒதுக்கி இருந்தார்கள். அது வீட்டுக்குள்ளேயே இருந்தது. வீட்டு ஹாலில் மெதுவாக டீவி வைத்தாலும் இவள் ரூமில் எதிரொலித்தது. மாடசாமியின் மனைவிக்கோ வெண்கலத் தொண்டை. பிள்ளைகளை அவர் கத்தும் சத்தம் இவள் காதில் வந்து அறைந்தது. ஸ்டேண்ட் ஃபேன் ஒன்று இருந்தது தூசியாக. கடக் மொடக்கென சத்தம் போட்டு சுற்றியது அது. ரூமில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. குண்டு பல்பு வெளிச்சத்தில் அவளால் நோட்டைக் கூட திருத்த முடியவில்லை. தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. கட்டில் இல்லை, ஆனால் தரையில் மெல்லியதாக ஒரு மெத்தை விரித்திருந்தார்கள். சுத்தமான விரிப்பு போட்டு வைத்திருந்தார்கள். அதைத் தவிர ரூமில் வேறு ஒன்றும் இல்லை.

இதையெல்லாம் கூட அட்ஜஸ்ட் செய்துக் கொள்வாள் தவமங்கை. அவளுக்குப் பெரிய சவாலாக இருந்தது அவர்கள் உபயோகிக்கும் கழிப்பறைதான். இவளுக்கு கொஞ்சம் நீர் அருந்தினாலே ஓன் பாத்ரூம் வந்துவிடும். சின்ன பிள்ளையில் இருந்தே அப்படித்தான். சிறு தடுப்பு போட்டு வீட்டு வெளியே பாத்ரூம் என அவர்கள் கட்டி வைத்திருந்த இடத்தைப் பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. கரப்பான் வேறு இவளைப் பார்த்து ஹாய் சொல்ல இவள், வந்ததைக் கூட அடக்கிக் கொண்டு மீண்டும் ரூமில் வந்து முடங்கிக் கொண்டாள்.

கண்கள் கலங்கி கன்னத்தில் நீர் வழிந்தது தவமங்கைக்கு. சுத்தமான கழிப்பறை இருப்பது எவ்வளவு பெரிய ப்லெஸ்ஸிங் என மனதில் நினைத்துக் கொண்டாள். இன்னும் இது போல எல்லாம் வசதிகள் இல்லாத குக்கிராமத்து பெண்களை நினைக்கும் போது மனதைப் பிசைந்தது அவளுக்கு. பாத்ரூம் போக வெளியே போன குட்டிப் பெண்ணை கற்பழித்து கொன்ற கதைகள் எல்லாம் இன்னுமே நடந்தேறிக் கொண்டிருக்கும் அவலம் எப்பொழுது தீரும் என மனம் சிந்திக்க, உடலோ அவஸ்த்தையில் நெளிந்துக் கொண்டிருந்தது.

காளையின் அட்டகாசத்தால் முதலில் வீட்டை விட்டு வேறு இடம் பார்க்கத்தான் நினைத்தாள் மங்கை. ஆனால் போன வெள்ளி குடிக்காமல் வந்தவனை பார்த்ததில் இருந்து ஒரு மாற்றம் அவளுள். அடிக்கடி அவன் இவளை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதும் இவளுக்குத் தெரிந்தே இருந்தது. பட்டணத்துப் பெண்ணிடம் கிராமத்துக் காளைக்குத் தோன்றும் ஈர்ப்பு அது என சாதாரணமாக அவ்விஷயத்தை ஒதுக்கி இருந்தாள்.

ஆனால் காமாட்சி மகனை நினைத்து பயப்படுவது இவளுக்குப் புரிந்தது. அதோடு மகன் தன்னிடம் நடந்துக் கொள்ளும் விதம் அவருக்கு அவமானமாக இருக்கிறது என உணர்ந்துக் கொண்டவள், அந்த நல்ல பெண்மணியை நோகடிக்க வேண்டாம் எனத்தான் இந்த ரூம் கிடைத்ததும் அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். இவளை அனுப்பும் முன் அவர் சொன்ன ஆயிரம் பத்திரங்களையும், பிடிக்காவிட்டால் வந்து விடும்படி கண் கலங்கி சொன்ன வார்த்தையும், இனிமேல் அவருக்கு இந்த மன உளைச்சலைக் கொடுக்கக் கூடாது என இவளை எண்ண வைத்து விட்டது.

‘எதை எதையோ சமாளிக்கிறாங்க பொண்ணுங்க! என்னால நாலு கரப்பான் பூச்சியையும், நாத்தமடிக்கும் டாய்லட்டையும் சமாளிக்க முடியாதா! முடியும், முடிஞ்சே ஆகனும்’ என மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனாலும் மூளையின் ஒரு ஓரத்தில் ஓல ஓல குடிசையிலே பாட்டில் அந்தப் பெண் ஜன்னலின் வழியாக கழிவறையையே ஆசையாக எட்டிப் பார்க்கும் காட்சி மனக்கண் முன் விரிய கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை சொரிந்தது.

“டீச்சர், டீச்சர்!” என வீட்டு வாசலில் இருந்து காளையின் குரல் ஓங்கி ஒலித்தது.

“என்ன காளை, என்ன இந்தப் பக்கம்?” வெளியே வந்து நின்றான் மாடசாமி.

“உன் வூட்டுல வடை பாயசத்தோட விருந்தாமே! அதான் மொக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்! கேக்கறான் பாரு கேள்வி! போய் டீச்சர கூப்டுடா! எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்”

“இது என்னடா கதையா இருக்குது! இன்னிக்குத்தான் டீச்சரு எங்க வீட்டுக்கு குடி வந்துருக்காங்க! வீடு வேற அவங்களுக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு! இப்போ வந்து வா வான்னு கூப்படற! என்ன வெளாண்டுப் பார்க்கறியா என் கூட?” மங்கை கொடுத்திருந்த அட்வான்சைத் திருப்பிக் கேட்டு விடுவாளோ என அவளை அங்கேயே தங்க வைக்க முயன்றான் மாடசாமி.

“ஆமா, நீ என் மொறைப்பொண்ணு! உன் கூட அப்டி இப்டி வெளாண்டு வெவகாரம் பண்ணப் போறேன்! போடாங்!! வாயில வண்ண வண்ணமா வந்துரும்! டீச்சர் என் வீட்டுல தான் தங்குவாங்க! வேற எங்க தங்கவும் நான் விட மாட்டேன்! கூப்டுன்னு சொல்றேன்ல! டீச்சர், வாங்க டீச்சர்” என குரலை உயர்த்தினான் முத்துக்காளை.

“காளை வேணாம்! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்! டீச்சர் இங்கனத்தான் இருப்பாங்க! நீ ஒன் சோலிய பார்த்துட்டுப் போயிடு” என கணவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள் மாடசாமியின் தர்மபத்தினி.

அதற்குள் அக்கம் பக்கம் எல்லாம் மாடசாமி வீட்டின் முன் கூடி இருந்தார்கள். கோபம் மண்டைக்கு ஏறி இருந்தது காளைக்கு.

“என்ன வேணாம்? இல்ல என்ன வேணாம்? நல்லபடியா டீச்சர அனுப்புங்கன்னு சொன்னா, இங்க நின்னுகிட்டு சலம்பிகிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்! உன் புருஷன் சங்க கடிச்சுத் துப்பறதுதான் இப்போதைக்கு என் சோலி! சொல்லுடா வெண்ணெய் கடிச்சுத் துப்பவா?” என அவன் மனைவியிடம் ஆரம்பித்து மாடசாமியிடம் முடித்தான் காளை.

“டீச்சர் என்ன உங்க வூட்டுக்கு ஒட்டா உறவா? சொந்தம் கொண்டாடற! அவங்க பொது சொத்துடா!”

“அடேய், என்னடா சொன்ன? டீச்சர் பொது சொத்தா? அவங்க என்ன நாட்டாமை டீச்சராடா ஊரே சொந்தம் கொண்டாட! இப்ப நான் அப்புற அப்புல, பேசனதுதெல்லாம் தப்புன்னு நீ சொல்லுறியா இல்லையான்னு பாருடா என் சிப்சு!” என எகிறிக் கொண்டு அடிக்கப் போனான் காளை.

“நிறுத்துங்க, மிஸ்டர் காளை!”

ஓங்கி ஒலித்த மங்கையின் குரலில் கை அப்படியே கீழே இறங்கியது அவனுக்கு. மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான் காளை. சிவந்து போயிருந்த முகமும், கலங்கி இருந்த கண்களும் அவனை என்னவோ செய்தது.

“நம்ம வீட்டுக்குப் போயிடலாம் டீச்சர்!” கெஞ்சலாக வந்தது குரல்.

இவ்வளவு நேரம் ஆக்ரோஷமாக பேசி அடிக்கப் போனவனா இவன் என ஊரே வேடிக்கைப் பார்த்தது.

“ஆமாத்தா, வா நம்ம வீட்டுக்குப் போயிடலாம்!”

அதற்குள் அங்கு வந்திருந்த காமாட்சியும் அவளை அழைத்தார். கலங்கிக் கிடந்த அவள் முகத்தைப் பார்க்கவே தாளவில்லை அவருக்கு.

“இல்லத்தா!” என சொல்லி மறுக்கப் போனவளை,

“இங்கலாம் உனக்கு வசதிப்படாதுத்தா! கெளம்பறப்போவே வேணான்னு சொல்லிருக்கனும்! நான் ஒரு கூறு கெட்ட கெழவி! என்னை மன்னிச்சுடுத்தா! வாத்தா போலாம்” என தாடையைப் பற்றிக் கெஞ்சியவரை மறுக்க முடியவில்லை அவளால்.

சரி என தலையாட்டியவள், ரொம்ப நேரமாக ஓன் பாத்ரூம் அடக்கிக் கொண்டிருக்கும் அவஸ்த்தையில் கஸ்டப்பட்டு காளையின் அருகே நடந்துப் போனாள். மெல்ல அவனை நெருங்கி அவன் காதோரம்,

“என்னால முடியல காளை! நம்ம வீட்டுக்குப் போயிடலாம்!” என கலங்கிய குரலில் மெல்ல சொன்னாள். பசி வந்தால் மட்டும் பத்தும் பறந்துப் போகாது, இயற்கை உபாதை வந்தாலும் தான் பறந்துப் போகும்!

நான் நீ என பேசுபவள், நம்ம என சொல்லியதை அவளே உணராவிட்டாலும், காளையின் கண்கள் அதனை உணர்ந்து ஒளிர்ந்தது.

பைக்கில் ஏற்றிக் கொள்ளவா என தன் ஆத்தாவிடம் கண்ணால் கேட்க, அவர் சரியென தலையாட்டினார்.

“வாங்க டீச்சர்!” என அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டான். அவன் தோளை சப்போர்டுக்காகப் பிடித்துக் கொண்டாள் மங்கை. அதன் பின் யாரையும் பார்க்காமல் கிளம்பி விட்டான் காளை.

மாடசாமியிடம் அட்வான்சை வைத்துக் கொள்ள சொல்லி மச்சக்காளை செட்டில்மேண்ட் பேச, காமாட்சி மங்கையின் பொருட்களை சேகரித்துக் கொண்டார். இங்கு நடந்த கூத்தை ஊரே வேடிக்கைப் பார்த்தது. அதுவும் டீச்சர் காளையிடம் நெருங்கி நின்று காதில் எதையோ குசுகுசுத்ததும், அவன் தோள் பிடித்து பைக்கில் ஏறியதும் எல்லோரின் கண்ணையும் கருத்தையும் உறுத்தியது.

அன்றிரவுக்குள் ‘டீச்சர் காளைய வச்சிருக்காங்க டோய்!’ என ஊரே போஸ்டர் அடிக்காத குறையாக கூடி கூடிப் பேசியது.(நோட் திஸ் பாயிண்ட். டீச்சர்தான் காளைய வச்சிருக்காங்க! காளை டீச்சர வச்சிருக்கல! அவனுக்கு அந்த அளவுக்கு கெப்பாகுட்டி (கெப்பாபிலிட்டி) இல்லைனு அவங்க ஃபீல் பண்ணுறாங்க! நான் இல்லப்பா) தவமங்கை அவர்கள் வீட்டிலேயே இருந்திருந்தால் இந்த வதந்தி பரவி இருக்க வாய்ப்பு கம்மிதான். வீட்டில் இருந்து வெளியேறி, காளை வந்து தடாலடியாக அவளை அழைத்துப் போனது ஊர் வாய்க்கு அவலாகப் போனது.

வீட்டை அடைந்து அவன் பைக்கை நிறுத்தியது தான் தாமதம், இறங்கி குடுகுடுவென பாத்ரூம் நோக்கி ஓடினாள் மங்கை. அதைப் பார்த்த காளைக்கு கண்கள் கலங்கிப் போனது.

‘நான் இருக்கற வரைக்கும் உனக்கு எந்த வித கஸ்டமும் வராம பாத்துக்குவேன் எலிசு! ஏன்னா நான் உன்னைக் காதலிக்கல, ஆராதிக்கறேன் மை எலிசு!’

‘நீ அவளைப் பார்த்து “அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்” அப்படின்னு பாட, ஊரு மக்கள் உங்க ரெண்டு பேரையும் வச்சு ஆர்மோனியம் வாசிக்க, நான் இனிமே என் ஆட்டத்த ஆரம்பிச்சுடறேன்’ என விதி ஆப்பை வைத்துக் கொண்டு ஆர்ப்பரித்தது!!!!

 

(அடி பணிவான்….)

எபி செவ்வாயும் வெள்ளியும் வரும்னு சொல்லிருந்தேன், சிலர் பார்க்கல போல! அதான் எபியோட சேர்த்து சொல்லிட்டேன்! டேக் கேர் டியர்ஸ்…

error: Content is protected !!