KAATRE-6

KAATRE-6

“கிருஷ்ணா! கிருஷ்ணா!” விருத்தாசலம் கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டிய பின்பே தன் சுயநினைவுக்கு வந்தான் கவிகிருஷ்ணா.

“ஹான்! என்ன சொன்னீங்க டாக்டர்?” என்றவனைப் பார்த்து புன்னகத்தவர் தேன்மதியை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறி விட்டு கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டி கொடுத்தவாறே அவனை அழைத்து சென்றார்.

“என்ன கிருஷ்ணா இன்னும் அதிர்ச்சியில் இருந்து நீ வெளி வரல போல இருக்கே?” கேள்வியாக விருத்தாசலம் தன் தாடையை தடவிக் கொடுக்க அவரை பார்த்து விழித்தவன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“நீ இங்க டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை கிருஷ்ணா அவங்க மாமா பையன் கவி பார்க்க ஒரு வேளை உன்னை மாதிரி இருக்கலாம் அதனால அவங்க கன்பியுஸ் ஆகி இருக்கலாம்”

“பட் டாக்டர் இதை நாம இப்படியே விட்டால் அவங்க லைஃப்?”

“நான் அப்படியே விடப்போறதாக சொல்லலயே! கொஞ்சம் கொஞ்சமாக அவங்களுக்கு உண்மை என்னனு புரிய வைக்கணும் இப்போ அந்த பொண்ணு ஒரு கண்ணாடி பாத்திரம் மாதிரி ரொம்ப கேர்புல்லா ஹேண்டல் பண்ணணும் கொஞ்சம் தடுமாறி போனாலும் அவங்க பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடியாமலும் போகலாம்”

“அய்யோ டாக்டர்!”

“பதட்டப்படாதே கிருஷ்ணா இவங்களை எப்படி கையாளுவதுனு நான் சொல்லித் தர்றேன் பட் இந்த விஷயத்தில் உன்னோட பங்களிப்பு தான் ரொம்ப அவசியம் ஏன்னா அவங்க ஒரு பாதுகாப்பான உணர்வை உன் கிட்ட தான் எடுத்துக்கிறாங்க ஷோ நீ தான் அவங்க பழைய நினைவுகளை மீட்டெடுக்க போறதுல முக்கியமான ஒரு ஆளாக இருக்கப்போற”

“ஓகே டாக்டர்” வெளியில் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்ட கவிகிருஷ்ணாவின் மனதோ

“டேய் கிருஷ்ணா! நீ வசமாக எதையோ இழுத்து விடப்போற! இன்னும் என்னனென்ன உனக்கு காத்திருக்கோ?” என புலம்பித் தவித்தது.

தேன்மதி இருந்த பக்கமாக நடந்து செல்லும் போதெல்லாம் கவிகிருஷ்ணாவின் பார்வையோ அவளை நேராக சந்திக்க முடியாமல் தட்டுத் தடுமாறியது.

சற்று உடல் நிலை தேறி இருந்த தேன்மதி கவிகிருஷ்ணாவின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்படி என்ன என்கிட்ட தயக்கம் இவனுக்கு? வழக்கமாக நான் தான் கவியைப் பார்த்து ஓடி ஒழிந்து கொள்ளுவேன் இப்போ இவன் ஓடி ஒழியுறான் நான் விலகி விலகி போனாலும் என்னைத் தேடி வந்த கவி எங்கே போனான்? இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தே ஆகணும்” மனதிற்குள் திட்டமிட்டு கொண்ட தேன்மதி கவிகிருஷ்ணாவை அடுத்து எப்படி சந்திப்பது என்று திட்டம் போடத் தொடங்கினாள்.

கவிகிருஷ்ணா மாலை நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து கொண்டு வருகையில் தற்செயலாக தேன்மதியின் கட்டில் புறமாக திரும்பி பார்க்க அங்கே தேன்மதி இருக்கவில்லை.

தன் அருகில் நின்ற நர்ஸிடம்
“சிஸ்டர் அந்த பெட்ல இருந்த தேன்மதி எங்கே போனாங்க?” என்று கேட்க அவரோ அப்போது தான் அந்த பக்கத்தையே திரும்பி பார்த்தார்.

பதில் கூறாமல் தடுமாறி கொண்டு நின்ற நர்ஸை கோபமாக பார்த்தவன்
“இப்படி தான் நீங்க வேலை பார்க்குறதா? ஒரு பேஷண்ட் எங்கே போனாங்க? என்ன பண்ணுறாங்கனு பார்க்க மாட்டீங்களா?” சற்று காட்டமாகவே கேட்க அந்த நர்ஸ் தன் கையை பிசைந்து கொண்டு நின்றார்.

“போங்க போய் பாருங்க” என்றவன் ஒரு புறம் தேன்மதியை தேடி செல்ல மற்றைய புறம் நர்ஸ் ஒரு சிலரும் அவளைத் தேடிக் கொண்டு சென்றனர்.

ரெஸ்ட் ரூம், பால்கனி, மொட்டை மாடி, டிஸ்பன்ஸரி என எல்லா இடங்களிலும் தேன்மதியை தேடி பார்க்க எந்த ஒரு இடத்திலும் அவள் இருக்கவில்லை.

“எங்கே போனா இவ? சீஃப் டாக்டர் கேட்டால் என்ன சொல்லுவேன்?” தன்னறைக்குள் தலையில் கை வைத்து கொண்டு நின்றவன் ஜன்னல் ஊடாக வந்து தன் முகம் மோதிய காற்றில் ஜன்னல் வழியே திரும்பி பார்த்தான்.

அந்த ஹாஸ்பிடலுக்குரிய தோட்டத்தில் கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டி கொண்டு அவனது ஜன்னல் வழியாக அறையில் நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையேப் பார்த்து கொண்டு நின்றாள் தேன்மதி.

ஒரு சில நொடிகள் அவர்கள் இருவரது பார்வையும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ள ஷாக் அடித்தாற் போல சட்டென்று தன் பார்வையை திருப்பிக் கொண்டான் கவிகிருஷ்ணா.

ஊட்டியின் குளிரையும் தாண்டி அங்கங்கே முகம் எங்கும் வியர்வை துளிகள் படர்ந்து இருக்க மேஜை மேல் இருந்த பாட்டிலை எடுத்தவன் ஒரே மூச்சில் அதில் இருந்த நீர் முழுவதையும் குடித்து முடித்தான்.

ஒரு சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்
வேகமாக படியிறங்கி சென்று கோபமாக தேன்மதியின் முன்னால் வந்து நின்றான்.

“உன்னை காணாமல் எல்லோரும் அங்கே தேடிட்டு இருக்கோம் நீ இங்கே கையை கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா?” கோபத்தில் அவளை ஒருமையில் அழைத்தது கூட உணராமல் கோபமாக கேட்டவனைப் பார்த்து அழகாக புன்னகத்தவள்

“நாள் முழுவதும் அந்த பெட்லயே இருந்தா எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும் அது தான் கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் ஆக நடந்து வந்தேன் அது தப்பா?” தலையை சரித்து அவள் கேட்ட பாணியில் கவிகிருஷ்ணா அவனை அறியாமலே இல்லை என்று தலை அசைத்தான்.

“அப்புறம் என்ன?” தேன்மதி சற்று கேலி கலந்த குரலில் கேட்கவும்

கண்களை இறுக மூடி திறந்தவன்
“இப்படி யார் கிட்டயும் சொல்லாமல் நீங்க வெளியே போறது சரி இல்லை தேன்மதி நீங்க இன்னும் பரிபூரணமாக குணமாக இல்லை அப்படி உங்களுக்கு அவசியம் வெளியே போகணும்னா நர்ஸ் இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி அவங்க ஒருத்தரை துணைக்கு கூட்டிட்டு போங்க” எனவும்

அவனது கண்களையே பார்த்து கொண்டு நின்றவள்
“அது தான் எனக்கு காலம் பூராவும் துணையாக வர்றதுக்கு நீ இருக்கியே கவி! அப்புறம் எனக்கு எதுக்கு கவலை?” என்க அவனோ அடுத்து என்ன சொல்வது எனப் புரியாமல் நின்றான்.

தேன்மதியின் கண்களில் தெரிந்த காதல் கவிகிருஷ்ணாவை மொத்தமாக புரட்டிப் போட்டது.

‘இந்த காதலுக்கு நான் உரிமையாளன் இல்லை’ என வாய் விட்டு கத்த தோன்றினாலும் அவனால் அதை அவ்வளவு எளிதாக செய்ய முடியவில்லை.

ஏதோ ஒன்று அவனை வாய் திறந்து பேச விடாமல் தடுத்து கொண்டே இருந்தது.

விருத்தாசலம் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலிக்க கையாலாகாத தனத்தோடு அவளை வெறித்துப் பார்த்தவன்
“வெளியே குளிர் காற்று அடிக்கிற நேரத்தில் ரொம்ப நேரம் நிற்க வேண்டாம் உள்ளே போகலாம் வாங்க” என்று விட்டு முன்னே செல்ல

ஒரே எட்டில் அவனைப் பின்னால் நின்று அணைத்துக் கொண்டவள்
“ஏன் என்னை இப்படி அவாய்ட் பண்ணுற கவி? நான் என்ன தப்பு பண்ணுணேன்? நான் என்ன பண்ணுணா நீ பழைய மாதிரி என்கூட பேசுவ சொல்லு?” விசும்பிக் கொண்டே கூற கவிகிருஷ்ணாவோ அவளது கேள்வியிலும், அணைப்பிலும் திக்குமுக்காடி போனான்.

தன்னை அணைத்திருந்த தேன்மதியின் கரங்களை பிரித்து அவளைத் தன் முன்னால் நிற்கச் செய்தவன் அவள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து விட்டான்.

சிறிது நேரம் அவளையே அமைதியாக பார்த்து கொண்டு நின்றவன் பின்பு பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான்.

“நான் சொல்லப் போறதை மறுத்து பேசாமல் கேட்கணும் சரியா?” என்ற கவிகிருஷ்ணாவைப் பார்த்து சரியென்று தலை அசைத்தாள் தேன்மதி.

“இப்போ பிரச்சினை நீங்களோ நானோ இல்லை தேன்மதி நீங்க எப்படி இங்க வந்தீங்கனு கண்டு பிடிக்குறது தான் இப்போதைக்கு நம்ம ஒரே குறிக்கோள் இதற்கு நடுவில் வீணாக எந்த ஒரு விஷயத்தையும் பற்றி நீங்க யோசிக்க கூடாது அது சரியும் இல்லை உங்க காதல் உங்களோட கவிக்கு மட்டும் தான் சொந்தம் அதை யாராலும் மாற்ற முடியாது ஆனா இப்போ நீங்க கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் உங்க ஹெல்த்தை எப்படி சரி பண்ணுறதுனு தான் நிச்சயமாக உங்க கவி எப்போதும் உங்க கூடவே இருப்பான் அது தான் நடக்கும் இப்போ நீங்க உள்ளே போக வாங்க நாளாக நாளாக நான் சொன்னது எல்லாம் உங்களுக்கு புரியும் சரியா?” கவிகிருஷ்ணா சொன்னவற்றை எல்லாம் சிறிது சிறிதாக உள் வாங்கிக் கொண்டவள் புன்னகையோடு அவனை பார்த்து சரியென்று தலை அசைத்தாள்.

கவிகிருஷ்ணா முன்னே நடந்து செல்ல தேன்மதி அமைதியாக அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

தேன்மதியின் பார்வை தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் அதை சிறிதும் கண்டு கொள்ளாதவன் போல அவளை அவளுக்குரிய இடத்தில் விட்டு விட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

தேன்மதியோ கவிகிருஷ்ணா கூறிய வார்த்தைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை தன் மனதிற்குள் மீட்டிப் பார்த்து கொண்டிருந்தாள்.

“கவி உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்” அந்த வார்த்தைகளை நினைக்கும் போதே தேன்மதியின் கன்னங்கள் இரண்டும் குங்குமமாய் சிவந்து போனது.

அவள் மனமோ முதன்முதலாக கவி தன்னிடம் தன் காதலை கூறிய தருணத்தை எண்ணிப் பார்த்தது.

எப்போதும் தேன்மதி தன் பிறந்த தினத்தில் அவளது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயர் கோயிலுக்கு கவியரசனுடன் செல்வது வழக்கம்.

அன்று அவளது இருபத்தி இரண்டாம் வயது பூர்த்தியடைந்த நாள்.

காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தவள் குளித்து முடித்து விட்டு கவியரசனுக்கு பிடித்த ஆரஞ்சு நிற சுடிதாரை போட்டு கொண்டு பூஜையறையை நோக்கி சென்றாள்.

காலை நேரப் பூஜையை முடித்தவள் முதல் வேலையாக தன் பெற்றோரிடமும், தன் பாசத்துக்குரிய மாமா, அத்தையிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டே தன் பார்வையை அங்குமிங்கும் சுழல விட்டாள்.

“என்ன மருமகளே? யாரையோ பலமாக தேடுற போல இருக்கே?” நரசிம்மனின் கேலி கலந்த கேள்வியில் அவரைப் பார்த்து புன்னகத்தவள்

“வேற யாரை நான் இப்படி காலங்கார்த்தாலேயே தேடுவேன்? எல்லாம் உங்க தவப்புதல்வன் கவியை தான் இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு தெரியும் தானே அவனுக்கு? ஒரு நாளாவது காலையில் நேரத்துக்கு எழுந்து இருப்பானா அவன்?”

“மதி என்ன பேச்சு இது? வயசுல பெரிய பையனை அவன், இவன்னு மரியாதை இல்லாமல் பேசுற?” சம்யுக்தா சற்று கண்டிப்பாக கேட்க அவரின் அருகில் வந்து நின்றவள்

“அம்மா அவனா பெரிய பையன்? அய்யோ! இதை எல்லாம் கேட்டால் அவனே சிரிச்சுடுவானே!” என்க சம்யுக்தா அவளை முறைத்து பார்த்தார்.

“வை டென்ஷன்? கூல் மம்மி” என்றவள் சம்யுக்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு நேரே மாடிப்படியேறி செல்ல அவரோ புன்னகையோடு தேன்மதியைப் பார்த்து கொண்டு நின்றார்.

“கவி! டேய் கவி!” கதவில் தட்டி விட்டு காத்து நின்றவள் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக கதவு திறக்கப்படாமல் இருக்கவும் கதவைத் திறந்து கொண்டு நேராக அறைக்குள் நுழைந்தாள்.

“டேய் கவி! இன்னும் என்னடா உனக்கு தூக்கம்? என் பர்த்டே அதுவுமா ஒரு விஷ் கூட பண்ணல” என்றவாறே கட்டிலின் அருகில் சென்றவள் அங்கே அவனை காணாமல் போகவே அறையை சுற்றிலும் நோட்டம் விட்டாள்.

“எங்கே போனான் இவன்?” மனதிற்குள் அவனை சாரமரியாக வறுத்தெடுத்தவள் பால்கனி, குளியலறை, ஸ்டடி ரூம் என எல்லா பக்கமும் தேடிப் பார்க்க எந்த ஒரு இடத்திலும் அவன் இருக்கவில்லை.

அவனது போனிற்கு அழைத்து பார்த்த போதும் அவனது போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

தேடி தேடி கலைத்துப் போனவள் சோர்ந்து போய் அமர அந்த நேரம் பார்த்து அவளது போனும் அடித்தது.

கவியரசனாக இருக்கக்கூடும் என்ற ஆவலோடு போனை எடுத்து பார்த்தவள் அதில் புதிய எண் இருக்கவும் மனம் சோர்வடைய போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ தேன்மதி மேடம் உங்க ரிலேஷன் கவியரசன் இங்க பெசன்ட் நகர் பக்கத்தில் இருக்குற ஆஞ்சநேயர் கோவிலில் மயக்கம் ஆகி இருக்காரு சீக்கிரமாக வாங்க” மறுமுனையில் பதட்டத்துடன் கூறிய செய்தியில் அதிர்ச்சியாகிப் போனவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே தன் காரை எடுத்துக்கொண்டு அந்த கோவிலை நோக்கி புறப்பட்டாள்.

யார் தனக்கு போன் செய்தது? தன்னை எப்படி அவர்களுக்கு தெரியும்? என எதைப்பற்றியும் யோசித்து பார்க்காமல் ஐந்தே நிமிடத்தில் அந்த கோவில் வாயிலை வந்து சேர்ந்தாள் தேன்மதி.

இரண்டிரண்டு படிகளாக பாய்ந்து சென்றவள் உள்ளே சந்நிதானத்தை நோக்கி செல்ல அங்கே பெரும் கூட்டம் ஒன்று கூடி இருந்தது.

அச்சத்தோடு கால்கள் பின்ன தட்டுத்தடுமாறி கூட்டத்தை விலக்கி கொண்டு செல்ல அங்கே கவியரசன் கைகள் இரண்டையும் கட்டி கொண்டு புன்னகையோடு தேன்மதியைப் பார்த்து கொண்டு நின்றான்.

“ஹேப்பி பர்த்டே மை டியர் மதி” என்றவாறே பூங்கொத்து ஒன்றை கவியரசன் நீட்ட

கோபமாக அவன் கைகளை தட்டி விட்டவள்
“லூசாடா நீ? இப்படியா பைத்தியக்காரத் தனமாக பண்ணுவ? உனக்கு உண்மையாகவே ஏதோ ஆச்சுன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு, மூன்று அடிகளை அவன் தோள்களில் மாற்றி மாற்றி கொடுத்து கொண்டே இருந்தாள் தேன்மதி.

அவர்களை சுற்றி இருந்த கூட்டம் விலகி செல்ல மெல்ல அவள் கைகளை பற்றி கொண்டவன்
“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னால தாங்கிக்க முடியாதா?” என்று ஆவல் ததும்ப கேட்க

அவன் மேல் சாய்ந்து நின்றவள்
“சும்மா பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத கவி” எனவும் அவள் முகம் பற்றி அவளது பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டான் கவியரசன்.

சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டவன்
“கடவுளே! ஐ யம் சாரி” என்றவாறு அவளது முன் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.

“நீயும் சொல்லுவ சொல்லுவனு பார்க்குறேன் நடக்குற மாதிரி தெரியலை அதனால….” அவள் முன்னால் ஒற்றை காலை மடித்து
மண்டியிட்டு அமர்ந்தவன் தன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய மோதிரப் பெட்டியை அவள் புறமாக நீட்டினான்.

“கவி!” ஆச்சரியமாக பார்த்த தேன்மதியின் கையை தன் ஒற்றை கையால் பிடித்தவன்

“வாழ்க்கை பூராவும் நான் உன்னை சீண்ட நீ என்னை சீண்ட இப்படியே சந்தோஷமாக சண்டை பிடிச்சுகிட்டு வாழலாமா?” என்று கேட்கவும்

கண்கள் கலங்க அவன் தோளில் செல்லமாக தட்டியவள்
“நீ ப்ரபோஸ் பண்ணுறது உன்னை மாதிரியே கிறுக்குத்தனமாக தான் டா இருக்கு” என்று கூற

அவள் கைகளை பற்றி எழுந்து நின்றவன்
“ஒரு கிறுக்கோட மனசு இன்னொரு கிறுக்குக்குத் தான் தெரியும் சரி சொல்லு சண்டை பிடிக்கலாமா?”
கண்ணடித்துக் கேட்டவன் தோளில் புன்னகையோடு சாய்ந்து கொண்டவள்

“நீ சொன்னாலும் சொல்லலேனாலும் அப்படி தான் நான் இருப்பேன்டா என் கிறுக்கு கவி” என்று அவன் கன்னத்தில் கடித்து விட்டு ஓட

“ஆஆஆஆ! அம்மா ராட்சசி! நில்லு மதி ஓடாதே!” என்றவாறே கவியரசனும் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.

பழைய நினைவுகளை நினைத்து மோன நிலையில் தேன்மதி அமர்ந்திருக்க அந்த வழியாக வந்த கவிகிருஷ்ணா தேன்மதியின் அந்த அமைதியான நிலையை விழியகலாது பார்த்து கொண்டு நின்றான்……

error: Content is protected !!