Kadal
Kadal
காதலின் நினைவலைகள்…!
நீ! எனக்குள் நுழைந்தாயா? – இல்லை
நான் உனக்குள் விழுந்தேனா?
தெரியவில்லை…
புரியவும் இல்லை…
ஆனால் நான்…
ஓடமாக மிதக்கிறேன்,
பட்டமாகப் பறக்கிறேன்,
இதமாக உணர்கிறேன்,
இது காதல்தான் என்று…!
காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது.
உண்மை காதலை
உணர்ந்தவருக்கு அது உயிரானது.
மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உணர்வானது.
காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது.
ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது.
காதலே செய்யாமல் வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது.
காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது.
எப்படி இருந்தாலும் காதலானது நாம் சாகும் வரை அள்ள அள்ள குறையாமல் வளர்ந்து கொண்டே போகும் அளவில்லாதது.
முதலில் புற உணர்வுகளால் தூண்டப்பட்டு, அதற்குபின் உண்மையான அன்பினால் அடைகாக்கப்பட்டு, நம் மனதை வெல்லும் உண்மையான நேசமே காதல்.
என்னை அவளை நோக்கி ஈர்த்ததென்னவோ அவளது புற அழகுதான். ஆனால் ஒவ்வொரு நொடியும் அவள் காட்டும் பல பரிணாமங்களில் தெரிவது அழகைவிட அன்புதான்.
இடுப்பளவு மட்டுமே நீர் இருந்த அந்த சிறு ஓடையில் வினோத்தையும் மாதவியையும் பிடித்துத் தள்ளியிருந்தவள்,
“காலையில என்மேல ஒரு டம்ளர் தண்ணிதான ஊத்துனீங்க. இப்ப ஜோடியா நனைங்க.” என்றபடி துள்ளிக் குதித்தோட, இளவட்டங்கள் அனைத்தும் அவளைப் பிடிக்க அவளின் பின்னே!
சற்று நேரத்துக்குள் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஓடைக்குள் தள்ளி தானும் குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் பூரணி. எங்கள் வீட்டிலும் சிறுசு முதல் பெருசுவரை அனைத்தும் உள்ளே குதித்து ஆட்டம் போட, அனைவரின் முகத்திலும் ஆனந்த அலைதான்.
“நீ குளிக்கலையா ராசா?” என் அத்தையின் கேள்வியில் பார்வையை விலக்கி அவரைப் பார்த்தேன். அவரது முகமும் பூரித்துப் போயிருந்தது.
“நம்ம புள்ளைகளை எல்லாம் இதுவரைக்கும் மதுர, மதுரையச் சுத்தின்னு கைக்குள்ளயே கட்டிக் குடுத்திட்டு, இப்ப சின்னவளுக்கு மட்டும் இம்புட்டு தொலைவு வந்து குடுக்கனுமான்னு ஒரு விசனம் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சி ராசா.
ஆனா இப்ப மனசு அவ்வளவு நிறைவா இருக்கு. எம்புட்டு நல்ல மனுசங்க இவக எல்லாம்.
கொஞ்சம்கூட மாப்ள வீட்டுக்காரகன்னு பந்தா இல்லாம, ஒரு முறுக்கு இல்லாம எளிமையா பழகுறாக. இப்படி ஒரு குடும்பம் கிடைக்க மாதவி புண்ணியம் பண்ணியிருக்கனும் அப்பு.”
உண்மைதான் சிறு துரும்பை மாப்பிள்ளை என்று கிள்ளிப் போட்டால்கூட, அதுவும் முறுக்கிக் கொண்டு போகுமாம் சொலவடை உண்டு கிராமத்தில். இவர்கள்தான் எவ்வளவு எளிமையாக இனிமையாக எங்களோடு பழகிவிட்டனர்.
சண்டை சச்சரவு இன்றி அனைவரையும் திருப்தி படுத்தி ஒரு திருமணத்தை முடிப்பது எளிதா என்ன? மாப்பிள்ளை வீட்டாரின் முகம் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டுமே! ஆனால் இங்கு அனைத்தும் தலைகீழ்தான். எங்களைத்தான் அவர்கள் அனைவரும் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டனர்.
அங்கேயே தயாரான உணவைச் சுடச்சுட அனைவரும் உண்ட பிறகு, அங்கிருந்து கிளம்பி மீண்டும் மண்டபம் வரும் போதும் இளையவர்கள் அனைவரும் ஒரு வேனில் ஏறிக்கொள்ள கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது அந்த பயணம்.
தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தன்னையறியாமல் என்னுள் தடத்தைப் பதித்துக் கொண்டிருந்தாள் பெண். கண்களை அகல விரித்து கதை சொல்லும் பாங்காகட்டும், சிறு பிள்ளைகளுக்கு ஈடாக வரிந்துகட்டி சண்டை போடும் அழகாகட்டும். மூக்கையும் முகத்தையும் சுருக்கி செல்லம் கொஞ்சும் விதமாகட்டும் அனைத்துமே அவள்பால் ஈர்த்தது என்னை.
மண்டபத்தை வந்தடைந்ததும் சிறிது நேரம் அறையில் ஓய்வெடுத்து பின் மாலையில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு கிளம்பினேன்.
மெகந்தி, சங்கீத் இதெல்லாம் எங்களுடைய திருமண முறையில் பழக்கமே இல்லை. அதெல்லாம் வடநாட்டினருக்குரிய பழக்கங்கள்.
ஆனால் ஆட்டம் பாட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்த அந்த நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது அனைவரையும்.
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ…
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…
கோலாகலமாக பாடலுடன் ஆடலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது, நான் உள்ளே நுழைகையிலே. முழங்கை வரை மருதாணியால் அலங்கரிக்கப்பட்டிருக்க, நுனி விரலால் தழையத் தழைய உடுத்தியிருந்த செஞ்சாந்து நிற பாவாடையை உயர்த்திப் பிடித்தபடி ஆடிக்கொண்டிருந்தாள் பூரணி.
வெட்கத்தில் தயங்கிய மாதவியையும் வினோத்தையும் விட்டு வைக்கவில்லை அவள்.
அவர்களையும் தங்களது ஆட்டத்தில் உள்ளே இழுத்திருந்தாள்.
இளங்காலைச் சூரியனின் பிரகாசமான செஞ்சாந்து நிறத்தில் பாவாடைக்குத் தோதான சட்டையும், தங்க நிறத்தில் தகதகத்த மேலாடைத் தாவணியும் சுற்றிச் சுழல, முகம் முழுக்க சந்தோஷத்தோடு ஆடியவளை விட்டு, பார்வையை நொடிகூட பிரிக்காமல் பார்த்தபடி இருந்தேன்.
எங்கள் வீட்டிலும் வாண்டுகள் முதற் கொண்டு அனைவரும் உற்சாகமாக ஆடியும் கைதட்டி ரசித்துக் கொண்டும் இருந்தனர்.
அடுத்த பாடலாக ‘கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்…’ ஒலிக்க, பூரணி எனக்காகவே பாடுவது போலத் தோன்றியது. என் மதினிகள் இருவரும் என்னையும் ஆட அழைக்க, இயல்பிலேயே சற்று அமைதியான கூச்ச சுபாவமுடைய நான் அதை மறுத்துவிட்டு ஆடுபவர்களை ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.
அப்போது பூரணியின் மாமன் மகன்களான பிரசாந்தும் பிரவீனும் அவளோடு இணைந்து ஆட, ஏனோ என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளது சொந்த மாமன் மகன்கள்தான், சிறுவயதிலிருந்து அவளோடு வளர்ந்த சொந்தங்கள்தான், எனக்கு மாதவி எப்படியோ அவளுக்கும் அவர்கள் அப்படிதான், அறிவுக்குப் புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. பிரசாந்தையும் பிரவீனையும் விரோதமாக முறைத்தன என் கண்கள்.
இன்னும் படிப்பை முடிக்காத சிறுபெண்ணாகதான் இருப்பாள்.
அவளிடம் காதலைக்கூறுவதை விட அவள் படிப்பை முடித்ததும் பெற்றோரிடம் சொல்லி திருமணம் பேசவேண்டும் என்று எண்ணியிருந்த என் எண்ணங்கள் மாறின.
முதலில் அவளிடம் பேசவேண்டும் என்மனதில் நீக்கமற நிறைந்து அவளிருப்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும். நான் தாமதித்தால் வேறு யாராவது முந்திக் கொள்ளக்கூடும். உறுதியாக மனதில் எண்ணிக்கொண்டவன், அவளிடம் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
—-அலையடிக்கும்.