Kadha 28

சித்தார்த்தின் பின்னால் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்த மேக்னாவையும், நர்மதாவையும் பார்த்து யசோதாவின் முகம் சட்டென்று தன் புன்னகையை தவிர்த்து கொண்டது.

தான் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் தன் பேச்சை கேட்காமல் அவர்கள் இருவரையும் சந்தித்தது மட்டுமன்றி அவர்களை தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்த தன் மகனை கோபமாக முறைத்து பார்த்தவர் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் திரும்பி சென்று விட அவனோ தர்ம சங்கடமாக மேக்னாவின் புறம் திரும்பி
“மேக்னா! அது வந்து” என்று கூற

“பரவாயில்லை இன்ஸ்பெக்டர் சார்! ஜெயிலுக்குப் போயிட்டு வந்த எனக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும்னு எனக்கு தெரியும் நான் ஒன்றும் தப்பாக நினைக்கல எனக்கு நீங்க இதற்கு முதல் பண்ண உதவியே பெரிசு எங்களால் உங்களுக்கு வீண் பிரச்சனைகள் வேண்டாம் நாங்க அந்த வீட்டிற்கே போயிடுறோம்”

“அக்கா! வேண்டாம் க்கா!”

“மேக்னா! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை சரி உங்களுக்கு நான் பெரிய உதவி பண்ணதாக சொல்லுறீங்க தானே அதற்கு பதிலாக எனக்கு ஒரு உதவி பண்ணணும் சரியா?”

“கண்டிப்பாக சார்! என்ன பண்ணணும் சொல்லுங்க?”

“நீங்க இந்த இடத்தில் தான் தங்க வேண்டும் சரியா?”

“ஸார் ஆனால்…”

“நோ காம்ப்ரமைஸ் கண்டிப்பாக பண்ணுவேன்னு சொல்லி இருக்கீங்க” சிறிது நேரம் யோசித்தவள்

“சரி ஸார் நான் இருக்கேன்” புன்னகை முகமாக கூறவும் அவளை பார்த்து சிறு புன்னகை செய்தவன் அவர்கள் இருவரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு யசோதாவை தேடிச் சென்றான்.

சற்று விசாலமான அந்த ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கையில் புத்தகம் ஒன்றுடன் தாமோதரன் அமர்ந்திருக்க அவரருகில் யசோதா அமர்ந்திருந்தார்.

மேக்னாவையும், நர்மதாவையும் தன்னுடன் வரும்படி சைகை செய்தவன் தன் பெற்றோரின் முன்னால் சென்று நிற்க அவர்களோ அவனை நிமிர்ந்தும் பாராமல் தங்கள் வேலைகளை செய்வது போல அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“அம்மா! அப்பா!” சித்தார்த்தின் அழைப்பில் தாமோதரன் மட்டும் அவனை நிமிர்ந்து கேள்வியாக நோக்கினார்.

“அம்மா! அப்பா! மேக்னாவிற்கு…”

“சித்தார்த்! எதுவும் பேசாதே! காலையில் அவ்வளவு தூரம் சொல்லியும் உனக்கு எதுவுமே புரியல இல்லையா?” யசோதா கோபமாக அவனை பார்த்து கேட்க

அவர் முன்னால் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவன்
“அம்மா! உங்க பேச்சை நான் எப்போதும்மா கேட்காமல் இருந்து இருக்கேன்? இவங்களை நம்ம வீட்டில் தங்க வைக்க நான் கூட்டிட்டு வரல நம்ம பழைய வீடு சும்மா தானே கிடக்கு அதை வாடகைக்கு விடலாமேன்னு நீங்கதானே சொன்னீங்க? அதற்காகத்தான் கூட்டிட்டு வந்தேன்” என்று கூற

அவனைப் பார்த்து சிரித்தவர்
“அப்படியா? நான் நீ சொல்றதெல்லாம் நம்பிட்டேன் சித்தார்த்!” என்று விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

“அம்மா! ப்ளீஸ் இப்படி கோபப்படுவதால் எதுவும் ஆகாதும்மா மேக்னா யாருன்னு எனக்கு தெரியுறதுக்கு முதலே நான் அவங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன் அவங்க நம்ம சொந்தம்னு தெரிந்ததற்கு அப்புறம் எப்படிம்மா நான் எதுவும் பண்ணாம இருக்க முடியும்? கொஞ்சம் உங்க கோபத்தை விட்டு இறங்கி வாங்கம்மா ப்ளீஸ்”

“சித்தார்த் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் பழைய வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு சாவியையும் கொடுத்துட்டு வா” அத்தனை நேரம் அமைதியாக இருந்த தாமோதரன் இறுதியில் கூறிய விடயத்தை கேட்டு யசோதா, சித்தார்த் மட்டுமன்றி மேக்னா கூட அவரை ஆச்சிரியமாக திரும்பிப் பார்த்தாள்.

“என்னங்க! என்ன இதெல்லாம்? அவன் தன் சின்ன பையன் ஏதோ புரியாமல் பண்ணுறான்னா நீங்களும் அவன் கூட சேர்ந்து…”

“இல்லை யசோதா! நான் சொன்னால் சொன்னதுதான் காலையிலிருந்து நீ பேசறதுக்கு எல்லாம் எந்த மறுப்பும் நான் சொல்லல தானே! அதுவரைக்கும் நீ சந்தோஷப்பட்டுக்க

சுந்திரியை 25 வருசத்துக்கு முதல் நான் வீட்டை விட்டு அனுப்பாமல் இருந்திருந்தால் இன்னைக்கு இந்த பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காது வீட்டை விட்டு போனவ ஒவ்வொரு வருஷமும் கடிதம் அனுப்பினா அதைக் கூட நான் படித்துப் பார்க்கல ஏன்? ஒருவேளை அதை எல்லாம் படித்திப் பார்த்தால் என் மனசு மாறிடுமோன்னு ஒரு பயம்! இத்தனை வருஷமா என் சுந்தரி எங்கோ ஓரிடத்தில் சந்தோசமாக இருப்பான்னு தான் நினைத்து இருந்தேன் ஆனா காலையில் சித்தார்த் அவ பொண்ணை இந்த நிலைமை காட்டினப்போ நான் மொத்தமாக செத்துட்டேன்!”

“அப்பா!”

“என்னங்க!”

“இல்லை யசோதா! உண்மையில் எல்லா தப்பும் என் மேல தான் நான் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தமாகத் தான் நம்ம பையன் கண்ணுல அவ பொண்ணை அந்த கடவுள் காண்பித்திருக்கிறார் போல! சுந்தரியை வீட்டை விட்டு அனுப்பி நான் பண்ண தப்புக்கு அவ பொண்ணுக்கு உதவி செய்து போக்கிக்கிறேன் அதனால நம்ம பழைய வீட்டில் அவங்க தங்கிகட்டும்
அப்புறம் சித்தார்த் அந்த வீட்டிற்கு வாடகை எல்லாம் வேண்டாம் யாருமே இல்லாமல் பூட்டி கிடக்கும் வீடு அவங்களுக்கு உபயோகமானதாக இருக்கட்டும்” தாமோதரன் கட்டளையிடுவது போல கூறவும் அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது.

“அப்புறம் இன்னொரு விஷயம் நான் எடுத்த இந்த முடிவில் இனி எந்த மாற்றமும் இல்லை யாரும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் நான் என் மனதை நான் மாற்றுவேன் நினைக்க வேண்டாம் புரியுதா?” யசோதாவின் புறம் திரும்பி தாமோதரன் கேட்க அவரும் அதற்கு மேலும் தன் கணவரின் கூற்றுக்கு மறுத்து பேச முடியாது எனத் தெரிந்ததால் அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

யசோதா அங்கிருந்து செல்வதைப் பார்த்து விட்டு மேக்னா தயக்கத்துடன் சித்தார்த்தைப் பார்க்க அவளைப் பார்த்து “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தவன் அங்கே நின்று கொண்டிருந்த தன் தம்பிகள் இருவரையும் உள்ளே செல்லும் படி சைகை செய்தான்.

தன் தம்பிகள் இருவரும் அவர்களது அறைக்குள் சென்ற பின் முகம் வாட செல்லும் தன் அன்னையைப் பார்த்து மனம் நெருட தயக்கத்துடன் தன் தந்தையின் அருகில் வந்தவன்
“அப்பா! அம்மாவோட முகமே வாடி போச்சுப்பா! நான் பண்ணது தப்பாப்பா?” கேள்வியாக நோக்க

அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்ய உனக்கு சொல்லி சொல்லி வளர்த்ததே உன் அம்மா தான் சித்தார்த்! இன்னிக்கு நீ பண்ண உதவிக்கும் அவ கொடுத்த அந்த ஆதரவு தான் மறைமுகமாக காரணம் நல்லவங்களுக்கு உதவிசெய்ய சொல்லித் தந்தவ இந்த உதவியை ஒரு நாளும் தப்பு சொல்ல மாட்டா! என்ன கொஞ்சம் வீம்பு அவ்வளவு தான்!” சற்று சத்தமாகவே கூற தங்கள் அறைக்குள் நின்றுகொண்டிருந்த யசோதாவிற்கு தன் கணவரின் தன் மீதான புரிந்துணர்வை எண்ணி இதழோரம் சிறு புன்னகை வரவே செய்தது.

இருந்தாலும் உடனே தன் கோபம் இல்லாமல் போனதாக காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக எதுவும் பேசாமல் அமைதியாக அங்கேயே அமர்ந்திருந்தார்.

“சித்தார்த்! உங்கம்மா இந்த பதினாறு வருஷமா சுந்தரியை பற்றி ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து ரொம்பத் தவிச்சுப் போயிட்டா! அதை வெளியே யாரு கிட்டயும் சொல்ல முடியாம அவ ரொம்ப வேதனை அனுபவிச்சுட்டா

நானும் வீராப்பாக சுந்தரியை பற்றி பேசக் கூடாதுன்னு சொன்னேன் தான் ஆனால் அவளைப் பற்றி நினைக்காத நாள் இல்லை சுந்தரியை பற்றி என் கிட்ட கூட சொல்ல முடியாமல் யசோதா பட்ட அந்த தவிப்பு தான் இன்னிக்கி அவ பொண்ணை அந்த நிலையில் பார்த்ததும் கோபமாக வந்துடுச்சு நீ ஒன்னும் தப்பா நினைக்காதே! அது தான் என் மருமகள் வந்துட்டா இல்லையா? இனி கூடிய சீக்கிரமே உங்க அம்மாவை அவ கோபத்தில் இருந்து வெளியே வரவைத்து விடுவா!” சித்தார்த்தின் தோளில் தட்டி கூறியவர் அவ்வளவு நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த மேக்னாவின் முன்னால் சென்று நின்று அவளை மேலிருந்து கீழாக கண்கள் கலங்க பார்த்து கொண்டு நின்றார்.

கைகள் நடுங்க அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தவர்
“சின்ன வயதில் சுந்தரியும் உன்னை மாதிரித்தான் நன்றாக மெலிந்து போய் தான் இருப்பா! எப்போ பார்த்தாலும் படிப்பு படிப்புன்னு சரியாக சாப்பிடவே மாட்டா! இப்போ உன்னை பார்க்கும் போது அவளே திரும்பி வந்த மாதிரி இருக்கு நான் உங்க அம்மாவுக்கு பண்ண தப்பிற்காக என்னை மன்னித்துவிடும்மா!” தன் இரு கரங்களையும் கூப்பி மன்னிப்பு கேட்கப் போக

அவசரமாக அவரது கையைப் பிடித்துக்கொண்டு வேண்டாம் என்பது போல தலையசைத்தவள்
“எல்லா விடயங்களிலும் ஒரு நல்லது இருக்கும் அதே மாதிரி நீங்க அன்னைக்கு பண்ண விடயத்திலும் ஒரு நன்மை இருக்கும்பா அதனால என்கிட்ட இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டாம்பா!” சிறிது தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்து

“நான் உங்களை அப்பான்னு சொல்லலாம் இல்லையா?” கேள்வியாக அவரை நோக்கினாள்.

“தாரளமாக கண்ணா! ஆமா உன் பேரு என்னம்மா?”

“மேக்னா!”

“இது?” மேக்னாவின் அருகில் அவளோடு ஒன்றியபடி நின்று கொண்டிருந்த நர்மதாவை தாமோதரன் கேள்வியாக நோக்க

அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் “என்னோட தங்கை நர்மதா!” என்று கூற குழப்பமாக சித்தார்த்தின் புறம் திரும்பி பார்த்தவர்

அவனது ஜாடையைப் புரிந்து கொண்டு புன்னகையோடு அவளின் புறம் திருப்பி “நீயும் எனக்கு மகள் தான் நர்மதா!” என்றவாறே அவளது தலையையும் ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“அப்பா நான் இவங்களை அந்த வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வர்றேன் ரொம்ப நேரம் ஆச்சு!”

“சரிப்பா! சித்தார்த் பார்த்து பத்திரமாக விட்டுட்டு வா” சித்தார்த்தைப் பார்த்து கூறியவர்

மேக்னா வின் புறம் திரும்பி
“அம்மாடி மேக்னா! உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேட்கணும் சரியா? இதுவும் உன்னோட வீடு தான் சரியா மேக்னா?” என்று கூற

“சரிப்பா” புன்னகையோடு அவரைப் பார்த்து தலையசைத்தவள் தங்கள் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சித்தார்த்தைப் பின் தொடர்ந்து சென்றாள்.

“சாரி இன்ஸ்பெக்டர் சார்! எங்களால் உங்களுக்கு வீண் சிரமம் வீட்டிலும் அம்மாவோடு மனஸ்தாபம் ஆயிடுச்சு” மனம் வருந்திக் கூறிய மேக்னாவைத் திரும்பி பார்த்து புன்னகைத்தவன்

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லை மேக்னா! என் அம்மாவைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லா தெரியும் அவங்க கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான் காலையில் என் கிட்ட கோபப்பட்டு பேசிட்டு இப்போ எனக்காக வாசலிலேயே காத்துட்டு இருந்தாங்க பாத்தீங்களா? அவ்வளவுதான் அவங்க கோபம்

அவங்க ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு இந்த கோபம் எல்லாம் செட்டே ஆகாது இப்போ மறுபடியும் நான் வீட்டுக்கு போய் அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசுனாலே போதும் இவங்கதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோபப்பட்டவங்களான்னு நாம நினைக்கிற அளவுக்கு பேசுவாங்க அதோடு அம்மாவுக்கு நான் கொடுத்த வாக்கு இது! நான் என்ன பாடுபட்டாலும் செய்து கொடுக்கணும்னு முடிவோடு இருக்கேன் அம்மாவை நான் சமாளிச்சுக்குவேன் அதனால நீங்க அது எதையும் யோசிக்காமல் ரெஸ்ட் எடுங்க! சரியா? நான் அப்புறமாக வந்து பார்க்கிறேன்” என்றவாறே அங்கிருந்து வெளியேறி சென்றவன் மீண்டும் அவள் முன்னால் வந்து நின்றான்.

சித்தார்த் திரும்பி வருவான் என்று எதிர்பாராத மேக்னா அவனது அந்த திடீர் வருகையில் தடுமாற்றம் கொண்டு அவன் மேல் மோதப் போக உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை விட்டு விலகி நிற்க பார்த்தாள்.

ஆனால் அவள் பின்னால் இருந்த பெட்டி அவளை நிலை நிறுத்தாமல் கீழே விழச் செய்யப் போகவே சித்தார்த் அவசரமாக அவள் இடையில் கரம் கொடுத்து அவளை நிதானமாக பிடித்து நிறுத்தினான்.

முதன் முதலாக தன் மேல் பட்ட‌ அந்த ஆண் மகனின் ஸ்பரிசம் அவள் விழிகளை அதிர்ச்சியில் விரியச் செய்ய காதல் கொண்ட அந்த காவல்காரனின் மனம் அவள் விழி விரிப்பில் தாளமின்றி குத்தாட்டம் போட ஆரம்பித்தது.

‘மேக்னான்னு சரியாகத் தான் இல் அம்மா, அப்பா பேரு வைத்து இருக்காங்க ப்ப்ப்பா! அவ கண்ணே காந்தம் மாதிரி இழுக்குதே!’ அவள் ஈர்ப்பு விசை கண்களுக்குள் தன்னை தொலைத்துக் கொண்டே சித்தார்த் மெய் மறந்து நிற்க மேக்னாவோ அவன் கழுத்தில் பதிந்து இருந்த தன் கையை விலக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றி அதிர்ச்சியாகி நின்று கொண்டிருந்தாள்.

“அக்கா! இந்த வீடு சூப்பராக இருக்கு!” வீட்டை சுற்றி பார்த்தபடியே வந்த நர்மதாவின் குரலில் தன்னை மீட்டுக் கொண்ட சித்தார்த் உடனே மேக்னாவை நிற்கச் செய்து விட்டு தன் கைகளை விலக்கி எடுத்துக் கொண்டான்.

சற்றே தயக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“நீங்க ரெண்டு பேரும் காலையில் இருந்து சாப்பிடவே இல்லையே! வாங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு வரலாம்” என்று அழைக்க

கண்களை மூடி தன்னை சற்று நிதானப் படுத்திக் கொண்டவள் அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்து
“இல்லை! இல்லை! இன்ஸ்பெக்டர் சார் நீங்க இதுவரைக்கும் பண்ணதே ரொம்ப பெரிய உதவி! எங்களுக்காக இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து செய்து இருக்கீங்க! அதற்கே எப்படி கைமாறு செய்ய போறேன்னு தெரியல அதோடு இன்னும் உதவி செய்து மேலும் மேலும் என்னை கடன்காரி ஆக்கிடாதிங்க!

தனபாலனுக்கு இன்னைக்கு தண்டனை கிடைத்ததற்கே எனக்கு மனசும், வயிறும் நிறைந்து போச்சு! எனக்கு பசியே இல்லை நர்மதாவுக்கு வேணும்னா நானே ஏதாவது சிம்பிளா பண்ணி கொடுத்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார்!” உறுதியான குரலில் கூற அதற்கு மேல் அவளது அந்த உறுதியான குரலைக் கேட்ட பின்பும் அவளை வற்புறுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டவன் தன் கரங்கள் இரண்டையும் ஒரு தடவை பார்த்து விட்டு சிறு புன்னகையுடன் அவளை பார்த்து தலையசைத்து விட்டு தன் வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

மேக்னா அவனது செய்கையில் சற்று முகம் சிவந்து போனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க வேலைகளை செய்வது போல அவன் முன்னிலையிலும், நர்மதா முன்னிலையிலும் தன்னைக் காட்டிக் கொண்டாள்.

எந்த ஜென்மத்தில் தான் செய்த நன்மைகளோ இப்போது தனக்கு இத்தனை நன்மைகளையும் சந்தோசங்களையும் வாரி வழங்குகிறது என்று எண்ணி நிம்மதி கொண்டவனுக்கு தெரியவில்லை வாழ்க்கை என்பது வெறும் ஏற்றங்களையும் சந்தோசங்களையும் மட்டுமே கொண்டிருப்பதில்லை என்பது.

தன் அருகிலேயே மேக்னா இருந்தால் அவளிடம் இலகுவாக தன் காதலை தெரியப்படுத்த முடியும் என்று அவன் போட்ட கணக்கு தவறாகப் போனால்!

மேக்னாவை தங்கள் வீட்டின் அருகிலேயே குடியமர்த்தியது போல தன் காதலும் அத்தனை இலகுவாக தனக்கு கிடைத்துவிடும் என்று அவன் எண்ணியிருக்க அந்த கனவுகளை எல்லாம் முற்றாக தகர்ப்பது போலவே இனிவரும் நாட்கள் அமைய போகிறது என்பதை அவனுக்கு யார் புரிய வைக்கப் போகிறார்கள்?

தனபாலனை தன் கையால் பழி தீர்க்கவே அவள் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருக்கிறாள் என்ற உண்மை சித்தார்த்திற்கு தெரிய வந்தால் அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

யசோதாவிற்கு கொடுத்த வாக்கும், தன் மனதிற்குள் எழுந்த காதலும் கை கூட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் இருக்க அவனுக்கு நேர் எதிர் எண்ணத்தோடு அமர்ந்திருந்தாள் மேக்னா.

மனம் முழுவதும் ஏதோ சொல்லிலடங்கா பரவசம் பரந்து விரிந்து இருக்க அதே மனநிலையுடன் தான் எல்லா வேலைகளையும் முடித்தவன் யசோதாவையும் பேசிப் பேசி சமாதானப் படுத்தி விட்டு என்றுமில்லாத மிகப் பெரும் சந்தோசமான மனநிலையுடன் உறக்கத்தை தழுவிக்கொண்டான் இனிவரும் நாட்களில் தன் உறக்கத்தை இழந்து தவிக்க போவதை அறியாமல்…..