மேஜிக் 18
நந்தனா எவ்வளவு சொல்லியும் கேளாத சுகன்யா, மயூரா இருவரும் நந்தனாவிற்கும் நிரஞ்சனிற்கும் சேர்த்து சினிமா டிக்கெட் வாங்க முடிவு செய்தனர்.
தோழிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க “ப்ளீஸ் பா! அவர் பிஸியா இருப்பார். நாம போயிட்டு வருவோம், வேணும்னா ஒன்னு பண்ணுவோம் காஞ்சுவையும், நிவியையும் கூப்பிடுவோம். என்ன சொல்றீங்க?” புன்னகையுடன் அவர்கள் கையில் சாக்லேட்டை கொடுத்தபடி அவள் கேட்டாள்.
“ஹேய் ஒரு ஐடியா!” சுகன்யா உற்சாகமாக சொல்ல
“என்ன?” சாக்லேட்டை கடித்தபடி நந்தனா கேட்க
“நான், சுகன்யா, நீ, காஞ்சனா அத்தை, நிவேதா, ராம் அண்ணா, கிரி அண்ணா, அப்புறம் உன் நிரஞ்சன் சார் எல்லாருமா போகலாமா?” சுகன்யா கேட்க
“அடியே ஊர்வலத்துக்கா போறோம்? சினிமாக்கு இப்படியா ஊரைக் குட்டி கிளம்புவா?” நந்தனா முறைத்தபடி கேட்டுக் கொண்டிருக்க, ப்ரோபெஸ்ஸர் அழைப்பதாக ஒரு மாணவி வந்து சொல்லவும் நந்தனா எழுந்து சென்றாள்.
அவள் சென்றதும் சுகன்யாவிடம், மயூரா “இவகிட்ட பேசி ஒன்னும் வேலைக்காகாது.” என்றபடி நந்தனாவின் பையைத் திறந்து அதில் நிரஞ்சனின் கைப்பேசி எண்ணைத் தேடி அவனிற்குக் கால் செய்தாள்.
சுகன்யா நந்தனாவின் கைப்பேசியைப் பறிக்க முயன்றாள்.
“வேண்டாம் மயூ. அவ வந்தா உன்னைப் பிச்சுடுவா பிச்சு!”
அவளை ஏய்த்து ஓடியபடி மீண்டும் மீண்டும் நிரஞ்சனிற்கு அழைக்க, ஒரு வழியாக அழைப்பை ஏற்றவனின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது.
“பேபி என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?”
அவன் குரலில் இருந்த பதட்டமோ, அவன் பேபி என்று அழைத்த விதமோ, எதோ ஒன்று மயூராவை உரக்கச் சிரிக்க வைத்தது. அவள் சிரிப்பில் அழைத்தது நந்தனா இல்லையென்று உணர்ந்தவன் இன்னும் பதட்டமானான்.
“ஹலோ…ஹலோ! யாரு?”
சிரித்தபடி இருந்த மயூரா “அண்ணா நான் மயூரா, நந்து பிரென்ட். நந்துக்கு ஒன்னும் இல்லை. நாங்க தான் உங்ககிட்ட பேச…” அவள் கையிலிருந்து கைபேசியை பிடுங்கினாள் சுகன்யா.
“அண்ணா சாரி! நான் சுகன்யா பேசறேன். நான் சொன்னேன் மயூ கேட்க…” அவளிடமிருந்து கைபேசியை பிடுங்கினாள் மயூரா
“அண்ணா நாங்க சினிமாக்கு போகலாம்னு பிளான் போட்டோம் ஆனா நீங்க வர…” கைப்பேசி சுகன்யாவிடம் கைமாறியது
“நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்…” இம்முறை மயூரா பிடுங்க
“ப்ளீஸ் யாரவது ஒருத்தர் பேசுங்க, எனக்குப் புரியலை” நிரஞ்சன் கடுகடுக்க, சுகன்யா மயூராவின் கையிலிருந்த ஃபோனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.
சுகன்யா “ஸ்பீக்கர் போட்டுட்டேன் அண்ணா, நாங்க வாரக் கடைசியில் எல்லாரும் சினிமா போகலாம்னு நெனச்சோம். உங்களை, நிவேதாவை, ஸ்ரீராம் அண்ணாவ , கிரி சார எல்லாரையும் கூப்பிட நினைச்சோம். ஆனா நந்து நீங்க பிசியா இருப்பீங்க உங்களைத் தொந்தரவு செய்ய கூடாதுன்னு சொல்றா…” என்றபடி தயங்க
மயூரா தொடர்ந்தாள் “அண்ணா நீங்க சம்மதம் சொன்னா நாங்க எல்லார் கிட்டயும் கேட்போம். இப்போ விட்டா அடுத்து ப்ராஜெக்ட், பரீட்சை இப்படியே ஓடிடும். அப்புறம் நாங்க எங்க சொந்த ஊருக்கு திரும்ப போகணும். அப்புறம் எங்க நந்துவை எப்போ பார்ப்போமா? ” மயூரா போலியாய் வருந்த
நிரஞ்சன் “இல்லை நான்…” என்று துவங்கும் பொழுதே
சுகன்யா மயூராவை போலவே முகத்தில் சிரிப்பும் குரலில் சோகமுமாய் “ஆமா அண்ணா ப்ளீஸ். எங்களுக்காக…இனி அவ உங்க நந்துவாக போறா அப்போ நாங்க பாவம்ல? ப்ளீஸ் ப்ளீஸ்” என்று ஆரம்பிக்க
தன் அறையில் அதுவரை சில கோப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தவன், இவர்கள் இருவரும் செய்யும் ரகளையில் புன்னகைத்தபடி கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாகக் கேட்டிருந்தான்.
இப்பொழுது இரு பெண்களும் சேர்ந்து “ப்ளீஸ்…ப்ளீஸ்…ப்ளீஸ்…ப்ளீஈஈஈஸ் ப்ளீஈஈஸ்” என்று ராகத்துடன் கெஞ்ச,
நிரஞ்சன் “ஹே ஹே ஓகே ஓகே. நான் நாளைக்கு சொல்லலாமா?” தப்பிக்க முயன்றான்.
“இல்லை அண்ணா இப்போவே சொல்லுங்க. ப்ளீஸ்…ப்ளீஸ்” மயூரா துவங்கவும்
“ சரி சரி சரி. இந்த ப்ளீஸ் மட்டும் வேண்டாம். தலை வலிக்குது. நான் நிவி, கிரிகிட்ட கேட்டு சொல்றேன். இப்போ ஃபோனை வைக்கவா?”
“அண்ணா நாங்க ஃபோன் செஞ்சதை நந்து கிட்ட சொல்ல வேண்டாம் ப்ளீஸ். அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்றோம். நீங்க கேட்டு நிவேதா கிட்ட சொல்லிடுங்க அவங்க எங்களுக்கு சொல்லிடுவாங்க” சுகன்யா மயூரா கெஞ்ச
“அவகிட்டிட உங்க நம்பர்?” அவன் கேள்வியை முடிக்கும் முன்பே
மயூரா “நாங்க உங்க நிச்சயதார்த்தத்துக்கு வந்தபொழுது எங்க நம்பர் கொடுத்துருக்கோம்.பை சார். கால் ஹிஸ்டரி டெலீட் செய்யணும். பை” வைத்துவிட்டனர்
அழைப்பைத் துண்டித்தவன் கண்களை மூடிக்கொண்டான். “இனி அவ உங்க நந்துவாக போறா” என்று அவர்கள் சொன்னது காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருந்தது.
“என் நந்து…” புன்னகையுடன் தன்னையறியாமல் சொல்லிக்கொண்டவன் சட்டென உறக்கம் கலைந்ததை போல கண்களைப் பாடார் என்று திறந்து தலையை உலுக்கிக்கொண்டான்.
‘ச்சே அவங்கதான் சின்ன பசங்க தெரியாம எதோ சொல்றாங்க, நான் எப்படி…’ அவன் என்ன ஓட்டத்தைக் கலைத்தது நர்ஸின் குரல்
“டாக்! அப்பாயிண்ட்மெண்ட் பேஷண்ட் வந்தாச்சு அனுப்ப சொல்லவா?”
“ ம்ம் எஸ். ஒரு 5 நிமிஷம் கழித்து அனுப்புங்க” என்றவன் தன் முகத்தை அலம்பிக்கொண்டு சூடாக ஒரு கப் காபியைக் குடித்து பணியைத் தொடர தயாரானான்.
***
நந்தனா ஸ்ரீராமுடன் வாதம் செய்துகொண்டிருந்தாள் “டேய் ஒரு நாள் லீவ் போட்டு என்னை கடைக்குக் கூட்டிண்டு போயேன். எனக்கு சிலதெல்லாம் வாங்கியே ஆகணும். காஞ்சுமா பிசியா இருக்கா, இல்லைனா உன்னை தொல்லை செய்வேனா சொல்லு?”
“அம்மா தாயே, போதும் இரு. நான் பாஸ் கிட்டக் கேட்டு பாக்கறேன். வேலைக்கு சேர்ந்து ஒருவருஷம் ஆகலை. இத்தனை லீவ் போட்டா என்ன நினைப்பான்? நிச்சயதார்த்தம் அதுக்கு ஷாப்பிங்ன்னு 3 நாள் போச்சு. இப்போ இது, இன்னும் கல்யாணம், அப்புறம் ஹனிமூன் வேற வரும்…” அலுத்துக்கொண்டவாறே தன் மேலதிகாரியைத் தொடர்புகொண்டான்.
சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்தவன் “அவ்வளவு பெரிய கம்பெனியே என்னை நம்பித்தான் ஓடுதுன்றதே இவன்கிட்ட லீவு கேட்கும் போதுதான் தெரியுது” என்று தொளை குலுக்கியவன் “கிளம்பு சீக்கிரம் அப்புறம் என் மனசு மாறிடும்”.
இருவரும் சென்னையில் எங்கெங்கோ தேடி நந்தனாவிற்கு தேவையானவற்றை வாங்கினார். மாலை வீடு திரும்பும் நேரம் ஸ்ரீராமிற்கு நிவேதாவின் அழைப்பு வர,
“ராம்! பக்கத்துல நந்து இருந்தா கொஞ்சம் தூரமா வா. ஒரு ரகசியம்” அவள் சொல்ல, பழச்சாறை குடித்துக்கொண்டிருந்த நந்தனாவிடம் ஸ்ரீராம்.
“ஒரு நிமிஷம் நந்து” என்றபடி சிறிது தள்ளிச் சென்று பேசிவிட்டு வந்தான்.
நந்தனவோ அண்ணனைப் பார்த்தபடி “காதல், கல்யாணம்ன்னு சொன்னாலே பக்கத்துக்கு ஊரு வரை ஓடினவன், இப்போ நிவி நில்லுன்னா நிக்கிறே, உட்க்காருன்னா உட்க்காருறே! நீ பண்ண அழும்பல் தாங்காம கடவுள் உனக்குன்னு அனுப்பி வச்சிருக்காரு பார்” கேலியாய் சிரிக்க
புன்னகையைப் பூசி வெட்கத்தை மறைக்க முயன்ற ஸ்ரீராம் “போதும் போதும் சீக்கிரம் குடி. நான் பில் கட்டிட்டு வரேன்” அவசரமாக நழுவி சென்றான்.
‘எல்லாம் காதல் செய்யும் மாயம்.’ என்று புன்னகைத்துக் கொண்டவள் மனம் தானாய் நிரஞ்சனை பற்றி என்ன துவங்கியது.
‘நான் எதை செஞ்சாலும் உன் நினைப்பு வருதே, உனக்கும் என்னைப் பற்றின நினைப்பு வருமா ? என் பெயரை சொல்லி உன்னை இப்படி யாரவது கேலி பேசினா, நீ இப்படி வெட்க படுவியா?’ அவள் மனம் மானசீகமாய் பல கேள்விகளை நிரஞ்சனிடம் கேட்டது.
அவள் கேள்வியின் நாயகனோ இதைப் பற்றி இம்மியும் அறியாது டிரஸ்ட் வேலை நிமித்தம் சில மருத்துவர்களுடன் கலந்தாய்விலிருந்தான்.
***
வார இறுதியில் நந்தனா, காஞ்சனா, நிவேதா, சுகன்யா, மயூரா, ஸ்ரீராம், கிரிதர் என்று ஒரு பட்டாளமே சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் அமர்ந்திருந்தனர்.
ஜோடிகளாய் நிவேதா ஸ்ரீராம் , காஞ்சனா கிரிதர், சுகன்யா மயூரா என்று அமர்ந்திருக்க, தனியாய் இருந்த நந்தனா மட்டும் நிரஞ்சனை எண்ணி ஏங்கி கொண்டிருந்தாள்.
‘ச்சே இவன் மட்டும் இங்க இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்காங்க. நான் மட்டும் இப்படி தனியா…’ கோவமாக பாப்கார்ன் தின்றுகொண்டிருந்தாள்.
அவள் கையிருந்து வெடுக்கெனப் பாப்கார்ன் டப்பாவை யாரோ பிடுங்க “ஹெய்!” என்று கோவமாக அவள் திரும்ப, அவள் அருகில் அழகாய் இரண்டு கண்களையும் சிறுபிள்ளை போல் சிமிட்டியபடி அமர்ந்தான் நிரஞ்சன்!
“ஹாய் பேபி!” அவன் வசீகரமாய் புன்னகைக்க, இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத கண்கள் விரிந்து நந்தனா அவனையே கண்ணிமைக்காமல் பார்க்க
“வாயை மூடு ஈ போயிட போகுது” அவளைப் பார்த்துக் கண்ணடித்துத் திரையின் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
‘நீ என்னடா நான் நினைக்கும்போதெல்லாம் உடனே உடனே ஓடிவந்து நின்னு இன்ப அதிர்ச்சி தர!’
“நீங்க எப்படி?” நந்தனாவின் குரலில் அவள் ஆச்சார்யம் வெளிப்பட்டது.
நிரஞ்சனோ புன்னகையும் நக்கலுமாய் “என்னை மட்டும் கழட்டி விட்டு சினிமா பார்க்க வந்திருக்க. என்ன நியாயம்? நல்ல வேளை எனக்கு உங்க கூட்டத்துல ஆதரவு இருந்ததால விஷயம் தெரிஞ்சு வந்தேன்.” என்றவன், பாப்கார்னை சாப்பிட
“நான் நீங்க பிசியா இருப்பீங்கன்னு நெனச்சேன். அதான்…” நந்தனா தயங்க
அவன் பதில் சொல்லாமல் போலி கோவத்துடன் திரையில் ஓடிக்கொண்டிருந்த விளம்பரங்களைப் பார்த்திருந்தவன், அவள் காதருகில் குனிந்து “ஆமா என்ன சினிமா பேபி பாக்கபோறோம்?” திரையைப் பார்த்தபடியே கேட்க,
‘அடப்பாவி இவ்வளவு அப்பாவியா நீ ?’
“அது தெரியாம, எப்படி இந்த தியேட்டர் குள்ள வந்தீங்க?”
“கிரிதர் இந்த தியேட்டர் நம்பர், சீட் நம்பர் எல்லாம் மெசேஜ் அனுப்பினான், அதை வச்சு தான் வந்தேன். சினிமா பெயரை பார்க்கலை மா. சரி சொல்லு பேபி என்ன சினிமா?”
சினிமாவின் பெயரை அவள் சொல்ல, “என்ன மாதிரிப் படம் ?” பாப்கார்னை கொறித்தபடி அவன் கேட்க
‘அடேய், படம் பேர் சொல்லியுமா தெரியலை ? ஊரே இப்படியொரு திகில் படமான்னு அலறுது’
“பேய் படம்” என்று அவள் சொன்னதுதான் தாமதம், கண்கள் விரிய அவளைப் பார்த்தவன்,
“எ…என்ன? ப்…பேய் படமா?” திக்கித் திணற, நந்தனாவிற்கு சிரிப்பு பொத்திக்கொண்டு வந்தது.
வாயைப் பொத்தி சிரித்தவள் “என்ன டாக்டர் சாருக்கு பேய் படமுன்னா பயமோ?”
‘ஆஹா சின்ன பொண்ணு கிட்ட கெத்தை மெயின்டெய்ன் பண்ணுடா’ சமாளிக்க எண்ணியவன்,
“அதெல்லாம் இல்லையே. சின்ன பொண்ணு பேய் படம் பார்க்க வந்துருக்கே, அதுவும் தியேட்டர்ல. நீ தனியா இருப்பேன்ன்னு கிரி சொன்னான் அதான் உனக்கு சப்போர்ட்டா இருக்க வந்தேன்”
முகத்தைச் சுருக்கி அவனைப் பழிப்பு காட்டியவள் “நம்பிட்டேன்! நம்பிட்டேன்! குப்புற விழுந்தாலும்…” தொடராமல் சிரித்துக்கொண்டாள்.
“என்ன? என்ன? நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு…” அவளை நோக்கிக் குனிய,
“ம்ம் மீசையில் மண்ணு ஒட்டலையாம்” கடகடவெனச் சொன்னவள் திரும்பிக்கொண்டாள்.
சிரித்துக்கொண்டவனோ அமைதியாகத் திரையை நோக்கித் திரும்பிக்கொண்டான்.
நந்தனாவின் மனம் படபடவென அடித்துக்கொள்ள
‘லூசு மிரட்ட இப்படியா கிட்ட வருவே? இவன் கிட்ட இனி பேசாம கம்முன்னு சினிமா பார்த்துப்புட்டு ஓடிடனும் சாமி’ அதன் பிறகு அவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை.
திரைப்படம் துவங்கி சில நிமிடங்கள் கழிய, திகில் காட்சிகள் வரத் துவங்க, திரையரங்கில் ஆங்காங்கே பெண்கள் ‘ஆ! ஊ!’ என்று கூச்சலிட்டு பயத்தை வெளிக்காட்டத் துவங்கினர்.
எதிர்பாராமல், தன் காதருகில் அவன் சூடான மூச்சுக்காற்று தீண்ட உறைந்தவள், அவன்புறம் திரும்பாமல் மெதுவாக ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, அவனோ கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் திரையைப் பார்த்திருந்தான்.
‘என்ன பன்றான்?’ அவன் யோசித்திருக்கும்பொழுது, ஒரு நொடி பேய் திரையில் தோன்றி மறைய திரையரங்கே பயத்தில் அலற, எதிர்பாராமல் அவள் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டான் நிரஞ்சன்!
அவள் புறம் திரும்பியவன் ஈ என்று இளித்தபடி
“உனக்கு பயமா இருக்கும்ல அதான்…நீ தயங்காம என் கையை பிடிச்சுக்கலாம் இப்போ பிடிச்சுருக்க மாதிரி. நான் தப்பா நினைக்கமாட்டேன்.” தன் பயத்திற்குப் பெருந்தன்மை முலாம் பூசி அவன் சமாளிக்க,
‘பேயைவிட உன்னை நினைச்சாதான்டா பயமா இருக்கு. நீ பார்க்கத்தான் கம்பீரமா இருக்கேடா…என்னைவிட நீதான் குழந்தையா இருப்ப போல இருக்கே’ அவனை மனதில் கொஞ்சிக்கொண்டவள், அவன் பயத்தை இனம் கண்டுகொண்டாள்.
“நானா உங்க கையை பிடிச்சுருக்கேன்? நீங்க தான் என் கையை பிடிச்சுருக்கீங்க!”
அவனோ தெனாவெட்டாய் “உன் தயக்கத்தைப் போக்க நானா முதல் அடி எடுத்துவச்சேன்” பெருமையாய் சொன்னபடி திரையைப் பார்க்க, அதே நொடி மீண்டும் திரையில் பேய் உருவம் தோன்ற,
மெல்லிய ஒலியில் “பேபி” என்றலறையவன் அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டான்.
அந்நொடி உரைந்தவள் சுவாசிக்கவும் மறந்தாள். திகிலான காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் அவன் அதிர, அந்த அதிர்வில் நந்தனாவின் இருக்கையும் அதிர்ந்தது.
திரைப்படம் முடியும் வரை அவள் கையை பற்றிக்கொண்டும் அவ்வப்போது லேசாக அணைத்துக்கொண்டும் ஒரு வழியாகப் படத்தைப் பார்த்து முடித்தான் நிரஞ்சன்.
அவன் தீண்டலில் தொலைந்தவளின் மனம் இவ்வுலகில் இல்லை, அவன்மேல் அவள் கொண்ட ஈர்ப்பு அவளை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது.
திரைப்படம் முடிந்ததோ, அதன் பிறகு அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி பேசிக்கொண்டு இரவு உணவருந்தியதோ, ஏன், தான் வீடு வந்ததை கூட நந்தனா உணரவில்லை.
முழுக்க முழக்கக் காதலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தாள்.
பலமுறை நிரஞ்சனுடன் பேச தன் கைப்பேசியை எடுப்பதும் கீழே வைப்பதுமெனத் தயங்கித் தயங்கிக் குழம்பிக் கொண்டிருந்தாள்.
அங்கே அவன் நிலையும் குழப்பமாகவே இருந்தது,
‘ச்ச்சே எதுக்கு நான் இப்படி நடந்துக்கிட்டேன். என்னை பயந்தாங்குலின்னு நினைச்சிருப்பா . இதுல அவ கையை வேற பிடிச்சுக்கிட்டு…போச்சு போச்சு என்னைக் கண்டிப்பா அவ கிண்டலா தான் பார்த்திருப்பா’
‘அடேய் அவ கையை மட்டுமா பிடிச்ச? கட்டி பிடிச்சது மறந்துபோச்சோ?’ மனம் அவனை விடாது கேள்வி கேட்க,
‘ஐயோ என்னை என்ன நினைச்சாளோ?’
குழப்பம் தலைக்கேறக் குட்டி போட்ட பூனையைப் போல அறையில் இங்கும் அங்கும் உலாவிக்கொண்டிருந்தான்.
கைபேசி ஒலித்தது, நந்தனாதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
முதல் முறை அவள் அழைப்பை ஏற்கத் தயங்கியபடி நின்றிருந்தான் நிரஞ்சன்.
கைப்பேசியைக் கையில் எடுத்தும், அழைப்பை ஏற்காமல் இருக்க, நீண்ட ரிங்கிற்கு பிறகு தானாக ஓய்ந்தது. அதுவரை பொறுமையாக இருந்தவன், ஏனோ தாளாது உடனே நந்தனாவிற்கு கால் செய்தான்.
‘வேண்டாம் ஃபோனை கட் பண்ணு!’ மனம் எச்சரிக்கை செய்தும் அழைப்பைத் துண்டிக்காமல் இருந்தவனுக்கு ஒவ்வொரு மணித்துளியும் இம்சையாய் கழிய, நந்தனா அழைப்பை ஏற்றாள்.
படபடவென அடித்துக் கொண்டிருந்தவனின் மனம் அவள் குரல் கேட்டதும், அமைதியானது.
“சாரி தூங்கிட்டு இருந்தீர்களா ? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?”
எத்தனை முறை கேட்டாலும் அவள் குரல் ஒவ்வொருமுறையும் தனக்குப் புதிதாகத் தோன்றும் மாயம் அவனுக்குப் புரியவில்லை. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன்
“இல்லை பேபி, கொஞ்சம் எதோ…அதை விடு என்ன விஷயமா ஃபோன் பண்ணே ?”
‘காரணம் தெரிஞ்சா சொல்லமாட்டேனா ?’
“அது…படம் எப்படி இருக்குனு நீங்க சொல்லவே இல்லை அதான்…” எதோ கேட்க வேண்டுமே என்று அவள் கேட்டுவைக்க
ஒருமுறை கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்து திரையைப் பார்த்தவன், மீண்டும் காதில் வைத்துக்கொண்டு, புன்னகையுடன் “இதுக்கா இப்படி அர்த்த ராத்திரியில் ஃபோன் பண்ணே?” என்று கேட்க, அவன் குரலே சொன்னது அவன் நம்பவில்லை என்று.
“அது … இல்லை நீங்க பயந்து பயந்து பார்த்த மாதிரி இருந்தது அதான் ஒழுங்கா பார்த்தீங்களா இல்லையான்னு கேட்கலாம்னு கேட்டேன்” சமாளிக்க முயன்றாள்.
“யாருக்குப் பயம் ? பின்னாடி இருந்த பொண்ணுங்க கத்தினத்துல தான் கொஞ்சம் ஜெர்க் ஆனேன்.”
“நம்பிட்டேன் !” அவள் குரலிலிருந்த கிண்டலை உணர்ந்தவன்
“பேபி! நான் இதற்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை. இனி கொஞ்சம்…சரி சரி இதைத்தான் உங்க செமஸ்டர் பரிட்சைல கேட்க போறாங்களோ ? நீ மொதல்ல எப்படி படிச்சிட்டு இருக்கே ? ப்ராஜெக்ட் என்னாச்சு ?” சாமர்த்தியமாகச் சமாளித்தவன் அவளை எதிர்க் கேள்வி கேட்க
“செமஸ்டர் எக்ஸாம் கெடக்கு இப்போ அதுவா முக்கியம்?”அலட்சியமாக அவள் சொல்ல
அவன் குரலிலிருந்த குழைவு மறைந்து “பேபி என்ன இது பதில் ? படிப்பு முக்கியம். இந்த சினிமா பொழுது போக்கெல்லாம் அப்புறம் தான்!” என்று கண்டிக்க
‘ஆஹா நீ என்ன எனக்குக் காதலனா இல்லை ப்ரொபசரா? ஐயோ படிப்பாளியை காதலிச்சா இதெல்லாம் சமாளிக்கணும் போல இருக்கே !’ மனதில் அலுத்துக் கொண்டாள்.
“நான் அப்படி சொல்லலை, இன்னும் பரிட்சைக்கு நாள் இருக்கு. பிளஸ் நான் ஒன்னும் வெட்டியா பொழுதை போக்கல, சினிமா எடுக்குறது எங்களுக்கு ஒரு சப்ஜெக்ட் தெரியுமா?”
“ஆஹான்!” அவன் கிண்டலாய் சொல்லவும்
“நெஜமாத்தான் சொல்றேன்! இப்போ கூட நாங்க ஊட்டிக்குப் போகத்தான் பிளான் பன்னிட்டு இருக்கோம் தெரியுமா?”
“படிக்கிறதுக்கு ஊட்டிக்குத்தான் போகணுமோ?”
“படிக்க இல்ல, குறும்படம் எடுக்க போறோம். ஹீரோ அதுல டீ எஸ்டேட்ல வேலை பாக்குறவன்.”
கேலியாக உரக்கச் சிரித்தவனோ“படிக்காம ஊரைச் சுத்த ஒரு சாக்கு, அதானே? ஆமா யாரு ஹீரோ?”
“என் சீனியர் ஒரு பையன் இருக்கான் சித்தார்த்ன்னு, அவன் தான் ஹீரோ. செமயா இருப்பான் தெரியுமா? அவன்…” அவள் பெருமையாகச் சொல்லிக்கொண்டே போக, முகம் தெரியா அந்தச் சித்தார்த்தை நொடியில் பிடிக்காமல் போனது நிரஞ்சனுக்கு.
“போதும் போதும்! இப்போ என்ன சொல்லவர?” எரிந்து விழுந்தான்.
இதில் கடுப்பான நந்தனா, “நான் வெட்டியா பொழுதை போக்கலன்னு சொல்றேன். இன்னும் ரெண்டு நாள்ல ஊட்டி கிளம்பறேன்.” அவ்வளவு தான் என்பதைப் போல் மௌனமானாள்.
“என்ன? ஊட்டி? யார் கூடத் துணைக்கு வராங்க? ஏன் சென்னையில் எடுத்தா என்ன?” அவன் கேள்விகளைக் கடகடவென அடுக்க
“ஹலோ என் ப்ராஜெக்ட் எங்க படப்பிடிப்பு வைக்கணும்னு கதைக்கு ஏத்த மாதிரி நான் தான் முடிவு பண்ணனும். தேயிலைத் தோட்டத்துக்கு சென்னையில நான் எங்கபோவேன்? துணைக்கு யார் வரணும்? நான் ஒன்னும் குழந்தை இல்லை.
நான், சுகன்யா, மயூரா, என் கிளாஸ் மேட் விக்னேஷ், சித்து எல்லாரும் சேர்ந்து சித்து கார்ல போறோம்.” பொரிந்து தள்ளினாள்.
“யார் சித்து” வேகமாக வந்தது அவன் கேள்வி
“சித்தார்த் சொன்னேனே என் ஹீரோ”அலுப்பும் கோவமும் ஒன்றுசேர அவள் சொல்லக் குங்குமமாய் சிவந்தவன் மிரட்டும் குரலில்
“அதெல்லாம் சேஃப் இல்லை. சின்னப் பசங்க கூட அவ்வளவு தூரம் தனியா, மலை மேல டிரைவிங் வேற ரிஸ்க். சும்மா லூசுத்தனமா பிளான் போடாம சென்னலையே ஒரு நல்லா கதையா எடு”
கோவமாகவே பதிலும் வந்தது, “ஹலோ நான் ஒன்னும் உங்க கிட்ட அனுமதி கேட்கலை! சொல்லிட்டு போணுமேன்னு சொன்னேன் அவளோதான்”
அவனோ கோவம் தலைக்கேற “நீ எங்கேயும் தனியா போகலை அவளோதான்.”
“அதை நீங்க சொல்ல வேண்டாம்!”
“நந்து!” அவன் கத்தியதில் ஒரு நொடி மிரண்டவள்
“எதுக்கு இப்போ கத்துறீங்க ? நான் பத்திரமா போயிட்டு வந்துருவேன். சித்து பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்பத்தூர்ல தான். அவனுக்கு அந்த ரோடு அத்துப்படி. சூப்பெரா கார் ஓட்டுவான்” அவள் பெருமையாய் சொல்ல, அதில் இன்னும் இதுவரை கண்டீரா சித்தார்த்தை வெறுக்கவே துவங்கிவிட்டான் நிரஞ்சன்.
“நீ எங்கேயும் போகலை அவ்வளவு தான். குட் நயிட் எனக்குத் தூக்கம் வருது” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.
‘அடேய் என்ன இது நியாயம்? நான் என்ன பண்ணா உனக்கென்ன? எல்லாம் நீ சொல்ற படிதானா? நீ போகக்கூடாதுன்னு சொன்னதுக்காகவே நான் ஊட்டிக்கு போயே தீருவேன்!’ மனதில் கங்கணம் கட்டிக்கொண்டாள்.
நிரஞ்சனோ அழைப்பைத் துண்டித்த மறுநொடி கோவமாய் கைப்பேசியை மெத்தையில் விட்டெறிந்தான்.
கோவமாகப் பால்கனி கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றான்.
‘ஊட்டிக்கு போயிதான் ஷூட்டிங் வைக்கணுமா? பெரிய டைரக்டர்! மேடம் லொகேஷன் மாத்த மாட்டாங்களாம். நீ எப்படி என் பேச்சை மீறி அவன் கூடப் போறேன்னு பாக்கறேன்.’
வானில் அழகாய் ஜொலித்த நிலவும், நட்சத்திரங்களும் அவனுக்கு மேலும் எரிச்சலைத் தர, அறைக்குள் விரைந்தவன் தலையணையைக் கசக்கி, குவித்து, தூக்கி எரிந்து நிலைகொள்ளாது தவிக்கத் துவங்கினான்.
தனக்குள் நடக்கும் மாற்றத்தை உணர தவறினான்.
தன் கோவத்திற்கு அக்கறை என்று பெயர் வைத்துக்கொண்டான்.
அவன் அறியவில்லை அது அவன் நந்தனாவின் மேல் கொண்ட காதலினால் வந்த உரிமையினால் உண்டான அக்கறை என்று.