ஆவடி காவல் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பினுள் சித்தார்த் அமர்ந்திருக்க அவன் முன்னால் ஜெஸ்ஸி கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.
பெஷன்ட் நகரில் ஒரு பிரபலமான அரசியல்வாதியின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்திருக்க அதை பற்றி விசாரணை செய்து கொண்டிருந்தவள் சித்தார்த்திடம் இருந்து அவசரமாக அவளைப் பார்க்க வேண்டும் என்று அழைப்பு வரவும் விரைந்து அடித்துப் பிடித்து கொண்டு அவனை காண ஓடோடி வந்தாள்.
அவன் ஏதாவது பேசுவான் என்று ஆவலுடன் அவள் காத்திருக்க அவனோ தான் பேச வந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமல் சிந்தித்து கொண்டு இருந்தான்.
“என்ன சித்தார்த் ஏதோ பேசணும்னு சொன்ன இப்போ அமைதியாக இருக்க?” ஜெஸ்ஸி பேச்சை ஆரம்பிக்க
தயக்கத்துடன் அவளை ஏறிட்டவன்
“பர்ஸ்ட் என்னை மன்னிச்சுடு ஜெஸ்ஸி” என்று கூறவும் அவளோ குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“மன்னிப்பா? எதற்கு? அப்படி நீ என்ன பண்ண?”
“அது வந்து ஜெஸ்ஸி அது நான் உன் கிட்ட சொல்லாமல் மேக்னாவை போய் சந்திச்சுட்டேன்”
“வாட்?” ஜெஸ்ஸி அதிர்ச்சியில் போட்ட சத்தத்தில் அந்த காஃபி ஷாப்பினுள் இருந்த அனைவரும் அவர்கள் இருந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.
“ஜெஸ்ஸி ப்ளீஸ் ரிலாக்ஸ்” அவளது தோளில் சிறிது ஆறுதலாக தட்டி கொடுத்தவன்
பொதுவாக அங்கிருந்தோரின் புறம் திரும்பி
“ஸாரி ஸாரி கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க அவ்வளவு தான் ஸாரி” என்றவாறே அவளின் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டான்.
“ஜெஸ்ஸி!”
“பேசாதே டா இடியட்! உன் கிட்ட நேற்று அவ்வளவு தூரம் சொன்னேன் தானே? இந்த மேக்னா கேஸைப் பற்றி இனி தேட வேண்டாம்னு அப்படி இருந்தும் நீ அந்த பொண்ணை போய் மீட் பண்ணி இருக்க
அய்யோ! கடவுளே! இந்த விஷயம் மட்டும் அந்த ஏ.சி காதிற்கு போனால் உன் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் கூட யோசித்து பார்த்தியா? நானாவது இந்த கேஸை டீல் பண்ணேன்னு சொல்லி சமாளிக்கலாம் ஆனா நீ! தேவையில்லாமல் ஏன்டா சித்தார்த் இப்படி எல்லா பண்ணுற?”
“இல்லை ஜெஸ்ஸி நான் தப்பாக எதுவும் பண்ணல இந்த கேஸில் நிறைய மர்மம் இருக்குன்னு தோணுச்சு அது தான்…”
“மர்மமாம் மர்மம் மண்ணாங்கட்டி மர்மம்! சரி அந்த பொண்ணை போய் பார்த்தியே அப்படி என்ன புதுசா கண்டுபிடிச்ச?”
“மேக்னா என் கிட்ட முக்கியமாக தனியாக ஏதோ பேசணும் மீட் பண்ண முடியுமான்னு கேட்டா?”
“என்ன?” மறுபடியும் ஜெஸ்ஸி அதிர்ச்சியில் சத்தமிடப் போக அதற்குள் சித்தார்த் அவளது வாயை தன் கை கொண்டு மூடி இருந்தான்.
“ப்ளீஸ் திரும்பவும் சத்தம் போட்டுடாதேம்மா! இவங்க எல்லோருக்கும் திரும்பவும் என்னால பதில் சொல்ல முடியாது” சித்தார்த் அங்கிருந்தோரை சுட்டிக் காட்டிய படி கூறவும்
“இப்போ இது ஒண்ணு தான் பிரச்சினை” கோபமாக அவனது கையை தட்டி விட்டவள்
“இன்னும் என்ன என்ன பண்ணி வைத்து இருக்க? எல்லாவற்றையும் இப்போவே சொல்லு நீ கொடுக்குற அதிர்ச்சியை எல்லாம் ஒரேயடியாக கேட்டுக்கிறேன்” என்று கூற சிறிது தயக்கத்துடன் அவளை ஏறிட்டவன் மேக்னாவை சிறைச்சாலையில் சந்தித்தது முதல் அவள் தன்னை தொடர்பு கொண்டு பேசியவரை எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கூறி முடித்தான்.
சித்தார்த் எல்லாவற்றையும் கூறி முடித்து விட்டு ஜெஸ்ஸியை நிமிர்ந்து பார்க்க அவளோ இறுகிய முகத்துடன் கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஜெஸ்ஸி!”
“நீ மேக்னாவை விரும்புறியா சித்தார்த்?” ஜெஸ்ஸியின் கேள்வியில் அதிர்ச்சியாக அவளை பார்த்தவன்
“ஹேய்! நீ என்ன பேசுற? நான்…லவ் எல்லாம் சான்ஸே இல்லை” முயன்று இயல்பான குரலில் கூற முனைந்தும் அவனது குரல் தடுமாறவே செய்தது.
“இல்லை நீ சொன்னதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஒரு வேளை அப்படி இருக்குமோன்னு தோணுச்சு அது தான் கேட்டேன்”
ஜெஸ்ஸியின் கூற்றில் அவசரமாக அவளைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவன்
“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை” என்று கூற அவன் மனமோ சிறிது நேரத்திற்கு முன்பு மேக்னாவின் குரலை கேட்டு சலனமுற்றதை எண்ணிப் பார்த்தது.
“சரி இப்போ என்ன எதற்கு வரச் சொன்ன? அது தான் நீங்க இரண்டு பேரும் போனில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகிட்டீங்களே!” ஜெஸ்ஸி வேண்டுமென்றே நெருக்கம் என்ற வார்த்தையை சற்று அழுத்தி கேலி கலந்த குரலில் கூற சித்தார்த் சற்று சங்கடத்துடன் நெளிந்து கொண்டே அவளை பார்த்து புன்னகைத்து கொண்டான்.
“சரி! சரி! ரொம்ப நெளியாதே! சொல்லு நான் என்ன பண்ணணும்?” ஜெஸ்ஸி அந்த கேள்வியை கேட்டதும் தான் தாமதம் அவளருகில் வந்து அவளது கைகளை பற்றி கொண்டவன்
“நீ தான் எப்படியாவது மேக்னாவை சந்திக்க வழி பண்ணணும்” என்று கூற
அவளோ
‘இவன் என்ன லூஸா?’ என்பது போல அவனை மேலிருந்து கீழாக பார்த்தாள்.
“என்ன ஜெஸ்ஸி அப்படி பார்க்குற?”
“இல்லை நீ உண்மையாகவே லூஸா? இல்லை அப்படி நடிக்குறியான்னு பார்க்கிறேன்”
“ஜெஸ்ஸி!”
“பின்ன என்னடா? ஜெயிலில் இருக்குற ஒரு ஆளை அங்கே இல்லாமல் வேறு எப்படி டா சந்திக்க முடியும்?”
“அது தான் ஜெஸ்ஸி ரொம்ப நேரம் நான் யோசித்து பார்த்தேன் எந்த வழியும் கிடைக்கல அதனால தான் உன்னை சந்தித்து கேட்கலாம்னு வரச் சொன்னேன்”
“அய்யோ! கடவுளே! இப்படி ஒரு இம்சை கையில் என்னை சிக்க வைத்துட்டியே!” சற்று சத்தமாகவே புலம்பியவள் கண்களை மூடிக் கொண்டு முகத்தை தன் இரு கரங்களினாலும் மூடிய படி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருக்க தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டே ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“அடுத்த வாரம் குடியரசு தின நிகழ்வு எல்லா இடங்களிலும் நடக்க ஏற்பாடு பண்ணி இருக்கு இல்லையா? அப்போ மேக்னா இருக்கும் இடத்திலும் அந்த நிகழ்வு நடக்கும் சோ அந்த நேரம் எல்லோரும் வேலையில் மும்முரமாக இருப்பாங்க அந்த பங்ஷன் ஆரம்பித்து முடியுற நேரத்திற்குள்ள நீ மேக்னாவை சந்தித்து என்ன பேசணுமோ பேசிக்கோ வேற வழி இல்லை” என்று கூறவும்
சித்தார்த் சிறிது யோசனையுடன்
“இது சாத்தியம் ஆகுமா?” என்று கேட்டான்.
“வேறு வழி இல்லையே! மேக்னாவை வெளியே சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பே இல்லை அதோடு இப்படி கூட்டத்தோடு கூட்டமாக வைத்து பேசும் போது வேறு யாருக்கும் சந்தேகமும் வராது”
“……..”
“என்ன எதுவும் பேசாமல் இருக்க?”
“இல்லை நீ சொன்னதை தான் யோசித்து பார்த்தேன் நீ சொன்ன வழி தான் கரெக்டா இருக்கும் சரி நீ கொஞ்சம் இங்கேயே வெயிட் பண்ணு நான் இதை மேக்னா கிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்றவாறு சித்தார்த் தன் போனை எடுத்து கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல ஜெஸ்ஸி அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
‘எதற்காக இவன் இந்தளவிற்கு மேக்னாவிற்காக யோசிக்கணும்? உண்மையாகவே சித்தார்த்திற்கு அந்த பெண் மேல் ஏதாவது ஈர்ப்பு இருக்குமோ?’ ஜெஸ்ஸி தன் மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சற்று தள்ளி நின்று போனைப் பார்த்து கொண்டிருந்தவனையே பார்த்த வண்ணம் இருக்க அவனோ அந்த ஒரு எண்ணமும் இன்றி மேக்னாவை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு நின்று கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு முன்பு அவளிடம் இருந்து அழைப்பு வந்த அதே எண்ணிற்கு அவன் அழைப்பை மேற்கொள்ள இரண்டு, மூன்று தடவைகள் முழுமையாக அழைப்பு சென்றும் யாரும் அந்த அழைப்பை எடுக்கவில்லை.
சித்தார்த்தின் தவிப்பான தோற்றத்தை பார்த்து அவனருகில் வந்து நின்ற ஜெஸ்ஸி
“என்ன ஆச்சு சித்தார்த்?” என்று கேட்கவும்
சற்று சோர்ந்து போன தோற்றத்தோடு அவளை திரும்பி பார்த்தவன்
“மேக்னா போனை எடுக்கல ஏதும் பிரச்சினையோ தெரியல கடைசியாக பேசிட்டு இருக்கும் போது தான் திடீர்னு போனும் கட் ஆச்சு” உள் வாங்கிய குரலில் கூற
அவனது தோளில் ஆதரவாக தன் கரம் பதித்தவள்
“ஹேய்! இதற்கு எல்லாம் போய் பீல் பண்ணலாமா? அவ இருக்குறது அரண்மனை இல்லை ஜெயில் அங்கே நீ நினைத்த நேரத்திற்கு எல்லாம் எல்லோர் கூடவும் பேச முடியாது அவ போன் வந்ததைப் பார்த்து மறுபடியும் உனக்கு போன் பண்ணுவா தானே அப்போ எல்லாம் தெளிவாக சொல்லு இப்போ பீல் பண்ணாமல் ஸ்டேஷனுக்கு கிளம்பு நானும் கிளம்புறேன் கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறியவாறே அவன் கரம் பற்றி அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றாள்.
“சரி ஜெஸ்ஸி நீ கிளம்பு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் நான் கூப்பிட்ட உடனே வந்ததற்கு”
“ஏய்! அடி வாங்குவ தாங்க்ஸ் எல்லாம் சொல்லுற அளவுக்கு நான் போயிட்டேன்னா?” ஜெஸ்ஸியின் முறைப்பை பார்த்து அவசரமாக தன் இரு கைகளையும் எடுத்து தலைக்கு மேல் கும்பிடுவது போல செய்தவன்
“இல்லை ம்மா இல்லை மன்னிச்சுடு!” என்று கூற
“அது!” என அவனை பார்த்து புன்னகைத்து கொண்டவள் தன் ஸ்கூட்டரில் ஏறி புறப்பட்டு செல்ல சித்தார்த்தும் அந்த காஃபி ஷாப்பில் இருந்து தன் ஸ்டேஷனை நோக்கி நடக்க தொடங்கினான்.
மறுபுறம் மேக்னா விமலம்மாள் மறுபடியும் தன்னை தேடி வர மாட்டாரா என ஆவலுடன் தன் சிறைக் கதவருகிலேயே தஞ்சம் நிற்க அவரோ வேறு பல வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு நின்றார்.
‘இன்ஸ்பெக்டர் ஸார் நான் உங்க கிட்ட பேசணும்’ மேக்னா மனதிற்குள் சித்தார்த்திடம் பேசுவதற்காக பலமுறை கடவுளை எண்ணிப் பார்த்து கொண்டு நிற்க
அவள் மனமோ
‘நான் கடவுளை வேண்டுகிறேனா?’ என தன் செய்கையை எண்ணி ஒரு கணம் ஆச்சரியம் கொண்டது.
ஏனெனில் மேக்னாவிற்கு கடவுள் மீது நம்பிக்கை கிடையாது.
ஆரம்பத்தில் அவள் மனதிற்குள் ஒரு சிறு ஓரத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் நாளாக நாளாக அந்த எண்ணம் முற்றிலும் மாறிப் போய் இருந்தது.
அதுவும் நடராஜனின் சத்திர சிகிச்சைக்காக பணம் சேர்த்த அந்த நாட்களில் கடவுளே இல்லை என்று எண்ணுமளவிற்கு மேக்னா சென்று இருந்தாள்.
எங்கிருந்தோ மனம் கொடுத்த தைரியத்தில் வள்ளியிடம் பணத்தோடு வருவதாக உறுதி அளித்து விட்டு வந்தவள் அதன் பின்பே தான் செய்த தவற்றை உணர்ந்தாள்.
தன்னிடம் எந்தவித பணமோ, சொத்தோ ஏன் வேலையோ இல்லை என்ற நிலையில் தான் எதை நம்பி அவருக்கு உறுதி அளித்தோம் என்பது அவளுக்கு புரியவில்லை.
‘இப்போ பணத்திற்கு என்ன செய்யப் போற மேக்னா? ஆயிரம், இரண்டாயிரம் என்றாலும் பரவாயில்லை மொத்தமாக பத்து இலட்சம்! யாரு கிட்ட போய் என்ன சொல்லி கேட்ப? உனக்கு இந்த சென்னையில் யாரைத் தெரியும்? அதுவும் இல்லாமல் முன்ன பின்ன தெரியாதவர்களுக்காக நீ ஏன் இது எல்லாம் பண்ணணும்?’ அவளது மனசாட்சி அவளை பார்த்து கேள்வி எழுப்ப
‘அவங்களைப் பார்த்தாலும் பாவமாக இருக்கே! அவங்களை பார்த்ததுமே என் சுந்தரி ம்மா ஞாபகம் தான் வந்தது’ என அதற்கு பதிலளித்தவள்
‘ராணி அம்மா கிட்ட கூட உதவி கேட்க முடியாது அவங்களுக்கு ஏற்கனவே பல பிரச்சினை இந்த நிலையில் என்ன செய்வது?’ என்று சிறிது நேரம் யோசிக்க அவளது மூளையோ சட்டென்று தனபாலனை ஒரு முறை எண்ணி பார்த்தது.
‘இல்லை! இல்லை! அந்த ஆளு தப்பான ஆளு’ தலையை உலுக்கி உடனே தன் சிந்தனையை கலைத்தவள் சிந்தனை வயப்பட்டவளாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
அப்போது சட்டென்று அவள் முன்னால் ஒரு கார் கடந்து செல்ல அந்த காரை சிறிது கூர்ந்து கவனித்தவள் உடனே ஓட்டமும், நடையுமாக அந்த காரைப் பின் தொடர்ந்து சென்று அந்த காரை வழி மறித்தவாறு வந்து நின்றாள்.
மேக்னா திடீரென்று காரின் முன்னால் சென்று நிற்க ஒரு நொடிக்குள் அந்த கார் சட்டென்று அவளை மோதி விடாமல் விலகி நின்றது.
“ஏய்! உனக்கு அறிவு இருக்கா? நீ விழுந்து சாக என் கார் தான் கிடைத்ததா? உன்னை எல்லாம்…” கோபமாக சத்தமிட்ட வண்ணம் காரில் இருந்து இறங்கி நின்ற சுதர்சன் தன் முன்னால் நின்று கொண்டிருந்தவளை பார்த்து சட்டென்று அமைதியாகிப் போனார்.
“மேக்னா!?” அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அவர் மேக்னாவை பார்க்க
அவர் முன்னால் இரு கரம் கூப்பி வந்து நின்றவள்
“ஸார்! எனக்கு அவசரமாக ஒரு உதவி பண்ணுங்க ஸார்” என்று கூற அவர் கேள்வியாக அவளை நோக்கினார்.
“எனக்கு அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுது ஸார் எனக்கு தெரிந்த ஒருவருக்கு ஆபரேஷன் பண்ணணும் நீங்க கடனாக கொடுத்தால் போதும் எப்படியாவது அந்த பணத்தை தந்து விடுவேன் ப்ளீஸ் ஸார் உதவி பண்ணுங்க எனக்கு இங்க உங்களை தவிர வேறு யாரையும் தெரியாது ப்ளீஸ் ஸார்” என்று மேக்னா கூறவும்
அவளை மேலிருந்து கீழாக அலட்சியமாக பார்த்தவர்
“அன்னைக்கு ஏதோ பெரிய இவளாட்டம் வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு போன இப்போ பணம் தேவைன்னு வந்ததும் வந்து கெஞ்சிக் கேட்குற உனக்கு காரியம் ஆகணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவ போல!” என்று கூற அவளோ உதட்டை கடித்து கொண்டு தலை குனிந்து நின்றாள்.
“சரி உன்னை பார்த்தாலும் பாவமாக தான் இருக்கு ஆமா எவ்வளவு பணம் வேணும்?” சுதர்சன் உடனே ஒப்புக் கொள்வது போல பேச
வியப்பாக அவரை நிமிர்ந்து பார்த்தவள்
“பத்…பத்து இலட்சம்” தடுமாறியபடியே கூறினாள்.
“வாட்? பத்து இலட்சமா? ஹா! ஹா! ஹா! மேக்னா நீ ஒண்ணும் காமெடி பண்ணலயே!” கண்களில் நீர் வருமளவிற்கு வாய் விட்டு சிரித்தபடியே சுதர்சன் கேட்க மேக்னா தவிப்போடு அவர் முகத்தை பார்த்து கொண்டு நின்றாள்.
“நீ என் கிட்ட பேசுன பேச்சுக்கு நான் ஐந்து, பத்து ரூபாய் தந்தாலே பெரிது இதில் என்ன நம்பிக்கையில் நீ என் கிட்ட பத்து இலட்சம் கேட்டு வந்து இருக்க?” சுதர்சனின் கேள்வியில் முகம் சுருங்க நின்றவள்
“ஸார் அன்னைக்கு நான் பேசுனது தப்பு இல்லை நீங்க தப்பு பண்ணீங்க நான் சுட்டிக் காட்டினேன் ஆனா அதை வைத்து ஒரு உயிரை அநியாயமாக போக விட்டுடாதீங்க ஸார்! நீங்க கொடுக்கப் போற பணத்தில் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ஸார்” என்று கூற
கேலியாக தன் உதட்டை சுளித்தவர்
“புண்ணியமா? அதை வைத்து நான் என்ன நா…” கூற வந்த வசனத்தை பாதியில் நிறுத்தி விட்டு கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தார்.
“இதோ பாரு மேக்னா நான் ஒரு பிசினஸ் மேன் எதிலும் ஒரு லாபம் எதிர்பார்க்குற ஆளு அதனால…” சுதர்சனின் கை தன்னை நோக்கி வருவதைப் பார்த்து
“ஸார்!” என்றவாறே சட்டென்று அவரது கையை பற்றி முறுக்கியவள்
“நீங்க மறுபடியும் மறுபடியும் தப்பான வழியை பின்பற்ற பார்க்குறீங்க அதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் உங்களை ஒரு மனிதனாக மதித்து உதவி கேட்டு வந்தது என் தப்பு” என்று விட்டு கோபமாக அங்கிருந்து நடந்து செல்ல
கை வலி தாளாமல் தன் கையை உதறி விட்டு கொண்டவர்
“போடி போ இந்த வீராப்பு பேச்சுக்கு எல்லாம் ஒரு நாள் நீ நல்லா அனுபவிப்ப அதை நான் பார்க்கப் போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை ஓவரா ஆடுற உன் ஆட்டம் அடங்கத் தான் போகுது” எனவும் அவள் மறுபடியும் திரும்பி கோபத்துடன் அவர் முன்னால் வந்து நின்றாள்.
“மரியாதையாக பேசுங்க உங்க வயதுக்கு நான் கொடுக்குற மரியாதையையும் வீணாக வார்த்தையை விட்டு இல்லாமல் பண்ணிடாதீங்க!”
“அப்படி தான் டி பேசுவேன் உன்னால என்ன பண்ண முடியும் என் கிட்ட கை கட்டி சம்பளம் வாங்குன வேலைக்காரி உனக்கு என்ன டி மரியாதை சரி தான் போடி!”
“ஏய்!” கோபமாக சுதர்சனின் சட்டைக் காலரைப் பற்றியவள் மாறி மாறி அவர் கன்னத்தில் அறைய அவரோ அவளை சமாளிக்க முடியாமல் போகவே கோபமாக தள்ளி விட்டார்.
இத்தனைக்கும் அவர்கள் நின்று கொண்டிருந்தது ஆள் நடமாட்டம் அற்ற வீதியாக இருந்ததால் அவர்கள் இருவரும் வாக்கு வாதப் பட்டுக் கொண்டு நின்றது யாருக்கும் தெரியவில்லை.
மறுபடியும் மேக்னா அவரை அடிக்க போக அவளது கையை தட்டி விட முயன்ற சுதர்சன் அது முடியாமல் போகவே தன் பலம் கொண்டும் அவளை தள்ளி விட அவளோ நிலை தடுமாறி அங்கிருந்த புற் தரையில் சென்று வீழ்ந்தாள்.
“போனப் போகுதுன்னு கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுனால் ஓவராக தான் போற உன்னை மாதிரி அனாதை கழுதைகளுக்கு எல்லாம் அடுத்தவங்க முன்னாடி எப்படி நடக்கணும்னு கூட தெரியாது அனாதை கழுதை!” இன்னும் சில அவள் கேட்க தகாத, விரும்பாத வார்த்தைகளை கூறி விட்டு சுதர்சன் அங்கிருந்து நகர்ந்து செல்ல தன் ஒட்டுமொத்த ஈகோவும் தூண்டப்பட்ட கோபத்தில் ரௌத்திரமாக எழுந்து கொண்டவள் சுற்றிலும் திரும்பி பார்க்க ஒரு இரும்பு கம்பி அங்கே அநாதரவாக கிடந்தது.
கோபத்துடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அந்த கம்பியை எடுத்தவள் சுதர்சனின் பின்னந்தலையில் அடிக்க
“அம்மா!” என்ற அலறலோடு அவர் தன் தலையை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தார்.
அவள் அடித்த வேகத்தில் அவரது தலையில் இருந்து இரத்தம் வடியத் தொடங்க அதைப் பார்த்த பின்பே மேக்னாவிற்கு தான் செய்த காரியத்தின் விபரீதம் புரிந்தது.
பதட்டத்துடன் தன் கையில் இருந்த கம்பியை தவற விட்டவள் அவசரமாக சுதர்சன் அருகில் ஓடி வந்து
“ஸார்! ஸார்!” என்று அவரை உலுக்க அவரோ மயக்க நிலைக்கு சென்று இருந்தார்.
‘அய்யோ! மேக்னா என்ன காரியம் பண்ணிட்ட? கோபத்தில் கண் மண் தெரியாமல் என்ன என்னவோ பண்ணிட்டேனே! யாருக்கோ உதவி செய்ய போய் இப்படி தப்பு மேல் தப்பு பண்ணுறேனே!’ தன் தலையில் மாறி மாறி அடித்துக் கொண்ட மேக்னா அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.
‘மேக்னா! இப்போ என்ன பண்ண போற? என்ன பண்ண போற? என்ன பண்ண போற?’ ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே கேட்டு கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிறிது நேரத்தின் பின்னர் மெல்ல எழுந்து சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டவள் அந்த தெருவில் யாரும் இல்லை என்பதை பார்த்த பின்பு மயக்கத்தில் இருந்த சுதர்சனை அவரது காரின் பின் இருக்கையில் கிடத்தி விட்டு தான் தவற விட்ட கம்பியையும் எடுத்து கொண்டு அந்த காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
ஹாஸ்டலில் தங்கி இருந்த போது அவளது அறையில் அவளுடன் இருந்தவர்கள் ஒன்றிரண்டு தடவைகள் அவளுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்திருக்க அந்த பழக்கத்தை மனதிற்குள் கொண்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தவள் மெது மெதுவாக காரை ஓட்டத் தொடங்கினாள்.
ஆள் நடமாட்டம் இல்லாத தெருவாக பார்த்து பார்த்து காரை ஓட்டி சென்றவள் ஒரு தெருவில் பாழடைந்த நிலையில் இருந்த ஒரு கட்டடத்தை பார்த்து விட்டு அந்த கட்டடத்தை நோக்கி காரை செலுத்தினாள்.
மறுபடியும் சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டவள் காரை அந்த கட்டடத்தின் பின்னால் மறைவாக நிறுத்தி விட்டு அதில் இருந்த சுதர்சனை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு அந்த கட்டடத்திற்குள் நுழைந்து கொண்டாள்.
முற்றிலும் இருளடர்ந்து போய் திரும்பும் பக்கம் எல்லாம் தூசு நிறைந்த அந்த கட்டடத்தை பார்க்கும் போதே மேக்னாவிற்கு மனதிற்குள் சிறு அச்சம் பரவத் தொடங்கியது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறி நடந்து சென்றவள் தூசு நிறைந்த நாற்காலி ஒன்று இருப்பதை பார்த்து விட்டு அதில் சுதர்சனை அமர்த்தி விட்டு அங்கே கிடந்த கயிற்றால் அவரை கட்டி வைத்தாள்.
தன் தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அதை பாதியாக கிழித்தவள் இரத்தம் உறைந்து போய் இருந்த அவரது தலையில் கட்டி விட்டு மீண்டும் அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறி வந்து அங்கிருந்த புற் தரையில் அமர்ந்து கொண்டாள்.
அவசரப்பட்டு கோபத்தில் சுதர்சனை தாக்கியவள் அவரது தலையில் இருந்து இரத்தம் கசிந்ததைப் பார்த்ததுமே சர்வமும் நடுங்கி போனாள்.
வெளியே யாருக்காவது தெரிந்தால், இல்லை சுதர்சன் யாரிடமும் இதை பற்றி கூறினால் தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்திலேயே அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி வந்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போடு அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து தொலைபேசி ஒன்று ஒலிக்கும் ஓசை கேட்டது.
அவசரமாக காரை நோக்கி ஓடி சென்றவள் அதற்குள் எட்டிப் பார்க்க அங்கே அவளது தொலைபேசி வெகு அமைதியாக உறக்கத்தில் இருப்பதை போல இருந்தது.
‘என் போன் ரிங் பண்ணலயே! அப்போ இந்த ரிங் எங்கே இருந்து வருது?’ சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டவள் சிறிது நேரம் அந்த சத்தத்தையே நன்கு கூர்ந்து கவனித்தாள்.
அந்த பாழடைந்த வீட்டிற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்பதை கண்டு கொண்டவள் பதட்டத்துடன் வேகமாக வீட்டை நோக்கி ஓடி செல்ல அங்கே சுதர்சன் மெல்ல மெல்ல தன் மயக்கத்தில் இருந்து விழித்து கொண்டு இருந்தார்.
சுதர்சன் மயக்கத்தில் இருந்து எழுந்து கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியில் மேக்னா உறைந்து நிற்க
“மேக்னா! மேக்னா!” வார்டன் பெண்மணியின் குரல் கேட்டு தன் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்து திடுக்கிட்டு அவரை பார்த்தவள்
“என்…என்ன ஆச்சு?” என்று கேட்கவும்
“இன்ஸ்பெக்டர் இரண்டு, மூணு தடவை
போன் பண்ணி இருக்காங்க என்னன்னு தெரியல நான் வேலையாக இருந்ததால் போனை இப்போ தான் பார்த்தேன் இந்தா போன் யாரும் பார்க்க முன்னாடி சீக்கிரம் பேசிட்டு கொடு” என்றவாறே அவர் தன் போனை கொடுக்க அவசரமாக அவரது போனை வாங்கியவள் வேக வேகமாக சித்தார்த்தின் தொலைபேசி எண்களை அழுத்தினாள்……