Kathiruntha kathal 1

அத்தியாயம் 1

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு.

இப்புவியில் உன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கீழே விழுந்தாலும் குதிரையை போல் நொடிக்குள் மீண்டு வர வேண்டும்.

இல்லையென்றால் இந்த உலகம் உன்னை மிதித்து தாண்டி உருத்தெரியாமல் அழித்து விடும். இதுபோல் விழுந்து அழிந்தவர்கள் ஏராளம். நீந்திக் கரை கண்டவர்கள் சொற்பமே.

அதிகாலை ஐந்து முப்பத்தியிரண்டு. மார்கழி மாதப் பனி நீயா? நானா? பார்க்கலாம் என புவியின் மேல் தன் ஆதிக்கத்தைச் செலுத்த, அதன் தாக்கம் தாங்காமல் பூமியே நடுங்கத் தொடங்கியது.

ரீபாக் ஷுக்களின் தட்…தட்…தட் என்ற சத்தம் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு கேட்டது அந்த மாளிகையில். ஸ்லீவ்லெஸ் டீசர்ட் உடலை இறுக்கி பிடிக்க, டிராக் பாண்ட் அணிந்து முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், ” உன்னால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது” என்று பனிக்கு சவால் விட்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.

அவன் ஆருஷ் மணிவண்ணன். ருக்மணி இன்டஸ்ட்ரீஸின் ஜாய்ண்ட் எம். டி.

ஒருமணி நேர ஓட்டம். வியர்த்து விறுவிறுக்க ஒருவாராக தன் ஓட்டத்தை முடித்தவன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து வானத்தை பார்த்தான் கிழக்கு வெளுக்க தொடங்கியது.

பகலவன் கரிய இருளை விலக்கி வெளிச்சத்தை பரப்பியவாறு மேலெழும்பிக் கொண்டிருந்தான்.

அவன் சூரிய உதயத்தில் லயித்திருக்க, மாளிகையின் மாடத்திலிருந்து கன்னி ஒருத்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் தீப்தி. ருக்மணி இன்டஸ்ட்ரீஸீன் எம்.டி. சபரிநாதனின் புதல்வி.

தூக்கத்தில் கலைந்த முடியுடன், நைட் டிரசின் மேல் ஓவர்கோட் அணிந்து ‘தன்’ பகலவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

இது இன்று நேற்றல்ல கடந்த ஆறு வருடமாக நடப்பதுதான். இது அவனுக்கும் தெரியும் என்பதுதான் சுவாரசியம்!

தடுத்துப் பார்த்தான் கேட்கவில்லை. இவனும் நெருங்க விட்டதில்லை. ஏனெனில் அவன் காத்திருப்பு அப்படிபட்டது. அது நிறைவேறாது என்று தெரிந்தும்! அவன் மனம் ‘அவளுக்காக’ ஏங்கிதான் காத்திருக்கிறது.

தீப்தியும் எல்லை தாண்டி நெருங்க முயன்றதில்லை. ஆனால் சில நாட்களாக இன்னும் எத்தனை நாள் விலகியே இருப்பது என்ற சலிப்பு மனதில் தோன்ற ஆரம்பித்தது.

சுகந்தமான காலைப் பொழுது. அடுத்ததாக தியானம் செய்ய அமர்ந்தவன் அடுத்த அரைமணி நேரம் அமைதியாகி போனான்.

தியானத்தை முடித்தவன் தனது தங்குமிடமான மாளிகையின் பக்கவாட்டில் இருக்கும் அவுட் ஹவுஸை நோக்கி செல்ல ஆரம்பித்தான். அதன்பின்தான் தீப்தியும் தன் அறையினுள் சென்றாள்.

அது அனைத்து வசதிகளும் உடைய சிறு வீடு. ஒரு படுக்கையறை, ஒருவர் மட்டுமே நின்று சமைக்க கூடிய அளவிலான சிறிய சமையலறை, இரண்டு சோபாக்கள் போடப்பட்டிருக்கும் ஒரு வரவேற்பறை என சிக்கனமான, சுத்தமான வீடு.

அடுத்த பத்து நிமிடத்தில் குளித்து கோட் சூட் அணிந்து தயாரானவன் படுக்கையறையில் ஒரு பக்க சுவரை அடைத்தவாறு மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தின் முன் நின்றான் வழக்கம்போல். அதில் அழகுப் பூவாய் பெண்ணொருத்தி!

அவனது கண்கள் சொந்தத்துடன் தழுவியது அப்புகைப்படத்தை. தீராத சோகத்துடன் கூடிய மெல்லிய சிரிப்பொன்று உதித்தது அவனிதழில்.

“ஹாய் … குட்மார்னிங்.” என்றவன் இருகைகளையும் விரித்து “இன்னைக்கு எப்படி இருக்கறேன், நல்லாருக்கேனா! நீ நினைச்ச மாதிரி வாழ்க்கைல பலபடி முன்னேறிட்டேன். இன்னைக்கு கூட பெரிய பிஸினஸ் டீலிங் ஒன்னு! ஆனா அதை பார்க்கத்தான் நீ என்கூட இல்ல. ஏழு வருஷம்…” என்றவனது குரல் தொய்ந்தது, கண்களை மூடி, மாயமாய் மறைந்து போனவளை எண்ணி, சோகத்தை கிரகிக்க முயன்றான்.

ஏழு வருடம் கழித்தும் இன்னும் பச்சை ரணமாய் வலித்தால் அவனும் என்னசெய்வான்!

திறக்கப்பட்ட கண்களில் மெல்லிய நீர்ப்படலம் , ஆனாலும் சிரிப்பு மறையவில்லை “விட்டுட்டு போய்ட்ட நீ… என்னை மட்டும் தனியா! ” என்றவன் அவள் மேல்(அதாவது புகைப்படத்தின் மேல்) சாய்ந்து நின்றான்.

அடுத்த சில நிமிடங்கள் அவளுக்கும் அவனுக்குமாய். சிறிது நேரம் கழித்து அவளிடம் விடைபெற்று மாளிகையை நோக்கி சென்றான்.

இவனது பதினாறு வயதில் தொழிலில் ஏற்பட்ட நொடிப்பால் இதயம் துடிப்பது நின்று இறந்துபோன தந்தை.

இறப்பிலும் அவரைப் பிரியாமல் அவர் போன சில மாதங்களிலேயே மகனை விட்டு தன்னவரை பின்தொடர்ந்த தாய். அதன்பின் தாய்மாமனின் தயவில் படிப்பு இதுதான் அவன்குடும்ப வரலாறு.

அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போதே கால்கள் தானாக இடது புற அறைக்குச் சென்றது.

அங்குதான் சபரிநாதன் அறை. “ருக்மணி” சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவர். இரண்டு மாதங்களுக்கு முன் பக்கவாதம் வந்து, ஒரு கையும் காலும் செயல்படாததால் வீட்டுக்குள் முடங்கினார்.

ஆனாலும் ஒரு கவலையும் இல்லை அவருக்கு. மகளையும், கம்பெனியையும் பார்த்துக் கொள்ள ஆருஷ் இருக்கிறான் என்ற தைரியம்.

மகள் அவனை விரும்புவதும் தெரியும், இவன் அவளை தவிர்ப்பதும் தெரியும். இருந்தாலும் இதுவரை அதைப்பற்றி இருவரிடமும் எதுவும் கேட்டதில்லை.

சொல்லி கேட்கும் நிலையில் இருவரும் இல்லையே! இருவரும் ஒரு கம்பெனியை திறம்பட நிர்வகிப்பவர்கள்.

தாய், தந்தை என்பவர்கள் பிள்ளைக்கு வழிகாட்டியாக நின்று அவர்கள் செல்லும் பாதையை கண்காணிக்க வேண்டுமே தவிர, வழித்துணையாக கூடவே பயணிக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவர்.

பாதை மாறினாலும், கீழே விழுந்தாலும் தாங்களே சமாளிக்க வேண்டும். அதன் விளைவுகளை மனமாற ஏற்க வேண்டும். அது நல்லதோ? கெட்டதோ?

இவன் சென்ற போது அவர் அவருக்கான ப்ரத்யேக நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

இத்தனை வருடங்களாய் சுறுசுறுப்பாய் வலம் வந்தவருக்கு இந்த நிலை சகிக்க முடியாததாய் இருந்தாலும், அந்த கம்பீரம் குறையாமல் இன்றளவும் இருப்பது வியப்பே!

“குட் மார்னிங் அங்கிள்” என பாதம் பணிய,

“நல்லாருப்பா ஆருஷ்” என குழறலாக வாழ்த்தியவர், அதன்பின் சில நிமிடங்கள் கம்பெனியைப் பற்றி விவாதித்து விட்டு அவனுடனேயே வெளியே வந்தார்.

சாப்பாட்டு மேஜையில் தீப்தியும் அமர்ந்திருக்க, இவர்களும் அங்கு சென்று உணவருந்தினர். அதன்பின் தீப்தியும், ஆருஷ் ம் கம்பெனிக்கு புறப்பட்டனர். தனித்தனி வாகனத்தில்.

ஒளிமிகு லண்டன் மாநகரம். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் குறைவில்லாமல் இருக்கும் இளமையான நகரம்.

அதன் பிரபலமான நைட் க்ளப் ஒன்றில், அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத தோரணையுடன் இரு பெண்கள்.

லாங் கவுன் போன்ற உடையுடன் ஒருத்தி, தன் சுருள் முடியை சாதாரணமாக விரித்து விட்டவாறு அமர்ந்திருக்க, அதுவே அவளுக்கு அழகை அள்ளித் தெளித்தது.

சிரிக்கும் போது தெரியும் தெத்துப்பல் அழகிற்கு அடிமை சாசனமே எழுதி தரலாம். ஆனால் அதை பார்க்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

அதற்காக அவள் சிடுமூஞ்சியும் இல்லை. இதோ இப்போதுகூட மிதமான புன்னகையுடன் சுற்றிப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

தன்னை நடனமாட அழைக்கும் வெள்ளைக்கார ரோமியோக்களை, “நாட் இன்ட்ரஸ்டட்” எனத் தன்மையாக மறுத்து விடுவாள்.

அடுத்து இருப்பவளோ ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்து கழுத்து வரையிலான கூந்தலை விரித்து விட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தாள்.

ஆனால் கண்களிலோ மிதமிஞ்சிய கோபம், வெறுப்பு. ஹர்ஷிதா, தர்ஷிகா. இருவரும் அக்கா, தங்கை என்றாலும் தோழியைப் போல பழகுவர்.

இருவருக்கும் ஒளிவு மறைவு என்பதே இல்லை. இது பெரியவளுக்குப் பொருந்தும், ஆனால் சிறியவளுக்கு பொருந்தாது.

“ஹர்ஷ் இன்னொரு தடவ யோசியேன்…இந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?” முகத்தை சுளித்தவாறு தமக்கையிடம் கேட்டாள் தர்ஷி.

அவளது கேள்வியில் மெல்லிய சிரிப்பு இழையோட, “ஏன் தர்ஷ் உனக்கு ஆதிய பிடிக்கலயா?”

“அப்ப உனக்கு பிடிச்சிருக்கா?” தங்கை கிடுக்கிபிடி போட, ஹர்ஷியிடம் மெல்லிய நடுக்கம்.

சற்று தூரத்தில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் லாவகமாக ஆடிக் கொண்டிருந்தான் ஆதித்யா.

இன்னும் இரண்டு மாதத்தில் ஹர்ஷிதாவிற்கும், ஆதித்யாவிற்கும் திருமணம். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

அவனை தவிர்க்க பெரிதாக எந்த காரனமும் இல்லையென்றாலும், ஏற்கவும் பெரும்தடையாக இருக்கிறதே! என எண்ணாத நாள் இல்லை.

ஏதோ ஒன்று தடுத்தது…இது உனக்கானது இல்லை என்ற எண்ணம் வேரூன்றியிருந்தது. அதற்கு காரனம் அந்த நிழல் உருவம்.

சில நாட்களாய் கனவில் நனவாகவே தோன்றும் தெளிவில்லாத சில காட்சிகள். அவை ஏன் தனக்கு வருகின்றது என்ற எண்ணம் தலைதூக்கி வருகிறது.

ஆனால் அதற்கு விடையளிப்பவர் யார்? யாரோ தன்னை அழைப்பது போல அவ்வப்போது தோன்றும் பிரம்மை. இதை யாரிடம் சொல்வது! என சில நாட்களாக அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்து வருகிறது.

ஆனால் அதையே நினைத்து திருமணம் என்ற வாழ்க்கையின் அடுத்த நிலையை தவிர்ப்பது நியாயமா? தனக்குப் பின் தங்கை இருக்கிறாளே. அவளுக்கு வழிவிட வேண்டுமே!

ஆதியை பிடிக்கும். நல்ல நண்பனை போல. இதோ இப்போது கூட இவளை ஆட அழைக்க, இவள் டயர்டாக இருப்பதாக கூறவே, தர்ஷியை அழைத்தான். அவள் ஒரு முறைப்பையே பதிலாய் அளித்தாள்.

தோளை குலுக்கி விட்டு, வெள்ளை அழகியுடன் ஆடலை தொடர்கிறான்.

ஆனால் ஒரு கணவனாக இருவரில் ஒருவராக லயித்து இல்லற வாழ்வு அவனோடு என்பது கற்பனைக்கும் எட்டவில்லை என்பதே நிஜம்.

மற்றபடி இந்த திருமணத்தில் குறை கூற எதுவுமில்லை என்பது ஹர்ஷியின் எண்ணம்.

ஆனால் தன் போராட்டத்தை வெளிக்காட்டாமல் “ஆதிக்கு என்ன தர்ஷி… நைஸ் பர்சன்” என தங்கைக்கு கூறினாளா? இல்லை தனக்குத்தானே கூறிக் கொண்டாளா என்பதை யார் அறிவர்.

ஆனால் தர்ஷிக்கோ ஆதியை சுத்தமாக பிடிக்கவில்லை. அக்காவின் கணவனாக அவனை ஏற்க முடியவில்லை. அதன் காரணம்?

அவ்வப்போது போகிற போக்கில் இவளை வம்பிழுக்கும் அவனை என்ன செய்தால் தகும் என நினைப்பதுண்டு.

இப்போது கூட கட்டிக் கொள்ள போகும் பெண் இங்கேயே இருக்க அவள் எதிரிலேயே இன்னொரு பெண்ணுடன் ஆடிக் கொண்டிருக்கும் அவனை பார்வையால் பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள்.

இதையும் அவன் அறிந்து ஒரு கண்சிமிட்டலை அவளை நோக்கி செலுத்த ” கொன்றுவேன் ” என சைகை செய்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

இத்தனைக்கும் தர்ஷி பெண்களை தொட்டு ஆடக்கூடாது என்று நினைக்கும் கட்டுப்பெட்டியெல்லாம் இல்லை. நவநாகரிக மங்கைதான்.

ஆனால் ஏனோ ஆதியை அவளுக்கு பிடிக்கவில்லை… அக்காவின் வருங்கால கணவன் என்ற பந்தம் ஒன்றை தவிர்த்தால் அவன் ரசிக்கும் ரகம்தான் அவளுக்கு.

ஆட்டம் முடிந்தபின் கலைத்து போய் இவர்கள் அருகில் வந்து அமர்ந்தவன் “செம டேன்ஸ் பேப்ஸ்” என்றவாறு பானத்தை எடுத்து பருக தொடங்கினான்.

அதில் ஹர்ஷி சிரிக்க, தர்ஷியோ முறைத்தாள்.

சரி செல்லலாம் என கிளம்ப, அவனோடு ஆடிய பெண் இவனை “அன்றைக்காக” அழைக்க, அவளை நாசூக்காக தவிர்த்து விட்டு ஓடிவந்து விட்டான்.

இவன் பதில் சொல்வதற்குள் ஹர்ஷியை விட தர்ஷிக்குதான் படபடப்பாக இருந்தது என்ன சொல்வானோ என்று!

ஆனால் இவன் மறுக்கவே பெரிய நிம்மதி அவளிடத்தில். அதை ஏன் என்று மனம் கேள்வி கேட்க, ஹர்ஷிக்காக என எண்ணிக் கொண்டாள்.

ஹர்ஷி முன்னே சென்றுவிட, தர்ஷி ஆதியை பற்றி யோசித்துக் கொண்டே சற்று பின்தங்கினாள்.

அப்போதுஅவளோடு இணைந்த ஆதி, “என்ன டார்லிங் உன்னோட ஆடலன்னு கோபமா! என்னை பார்வையிலயே எரிச்சிட்டு இருந்த” என வம்பிழுக்க,

அவனுக்கு முறைப்பையே பதிலாக தந்தவள், “இன் யுவர் ட்ரீம்” என தலையை சிலுப்பிக் கொண்டு விடுவிடுவெனச் சென்று விட்டாள்.

“என் கனவுதான, அதில் என்னென்னவோ வருதே!” என புலம்பியவாறு மந்தகாச புன்னகையுடன் அவனும் காரை நோக்கிச் சென்றான்.