Kadhal 24

மேக்னாவின் அதட்டலாக குரலைக் கேட்டதும் சித்தார்த்தும், ஜெஸ்ஸியும் அதிர்ந்து போய் நின்றனர்.

“மேக்னா நீங்க எதற்காக இந்தளவிற்கு கோபப்படுறீங்க? நாங்க எதுவும் தப்பா சொல்லலயே!” ஜெஸ்ஸி தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு தன்னால் முடிந்த மட்டும் பொறுமையாக இருந்தவாறே அவளை சமாதானப்படுத்தும் விதமாக கூற

கோபத்தில் கண்கள் இரண்டும் கோவைப்பழம் என சிவக்க அவளை முறைத்துப் பார்த்தவள்
“இந்த விஷயத்தில் நர்மதாவை இழுக்க வேண்டாம்” ஒரே வசனத்தில் சீற்றத்துடன் கூறி முடித்தாள்.

“நீங்க புரிஞ்சிக்காம தேவையில்லாமல் கோபப்படுறீங்க மேக்னா கொஞ்சம் அமைதியாக நாங்க சொல்ல வர்றதை கேளுங்க” சித்தார்த் சற்று கண்டிப்பான குரலில் கூறவும்

அவனையும் கோபத்துடன் முறைத்துப் பார்த்தவள்
“நர்மதாவை இதில் இன்வால்வ் பண்ணாமல் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்க அதை விட்டு விட்டு அவளை தேவையில்லாமல் இதில் இழுக்க வேண்டாம்” உறுதியான குரலில் கூறினாள்.

“இல்ல மேக்…”

“இன்ஸ்பெக்டர் சார் நான் சொல்வது உங்களுக்கு புரியலையா?” மீண்டும் அவள் சத்தமிட சுற்றி நின்ற அனைவரும் அவர்களை திரும்பி பார்த்தனர்.

“என்ன ஸார் ஏதாவது பிரச்சினையா!” அங்கே காவலுக்கு நிற்கும் நபர் ஒருவர் அவர்கள் அருகில் வந்தவாறே கேட்க

அவரைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தவன்
“இல்லை ஸார் ஜஸ்ட் பேசிட்டு இருந்தோம் வேறு ஒன்றுமில்லை” என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

“மேக்னா நீங்க இப்படி கோபப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை
சித்தார்த் கேட்ட ஒரே காரணத்தினால் தான் நான் வந்தேன் நீங்க இப்படி கோபப்படுவதால் எதுவும் ஆகாது உங்களுக்கு இதற்கு மேலும் உதவி செய்ய எனக்கு இஷ்டம் இல்லை இனி நீங்களே ஏதாவது செய்து கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு சித்தார்த்தை போன் பண்ணி மிரட்டுவது எல்லாம் வேண்டாம் வா சித்தார்த் போகலாம்” பதிலுக்கு ஜெஸ்ஸியும் அவளை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்தே செல்லப் போக

அவசரமாக அவளது கையை பிடித்துக்கொண்ட சித்தார்த்
“ப்ளீஸ் ஜெஸ்ஸி நீயும் இப்படி கோபப்பட்டால் நான் என்ன தான் பண்ணுவேன்?” கேள்வியாக அவளை நோக்கினான்.

“உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது டா ஏன் தான் இப்படி இருக்கியோ? உதவி செய்வதற்கும் ஒரு அளவு உண்டு அதைத்தாண்டி நீ ஓவரா போற சித்தார்த்!” கோபமாக அவன் மீதும் கத்தியவள் மேக்னாவை திரும்பி முறைத்துப் பார்த்துவிட்டு

“நீ என்னமோ பண்ணி தொலை நான் வெளியே போறேன் நீ சாவகாசமாக பேசி முடித்துவிட்டு வா” என்று விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியே சென்றாள்.

“ஜெஸ்ஸி கொஞ்சம் நான் சொல்றதை கேளு” சித்தார்த் எவ்வளவு முயன்றும் அவள் அவன் பேச்சை கேட்காமல் அங்கிருந்து கோபமாக வெளியேறி சென்றிருந்தாள்

சற்றே சலிப்போடு மேக்னாவின் முன்னால் வந்து நின்றவன்
“மேக்னா உனக்கு கொஞ்சம் கூட நாங்க சொல்றது புரியலையா இல்ல புரிந்தும் புரியாம நடிக்கிறீயா? நான் இந்த அளவுக்கு உனக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறேன் ஆனா நீ அதை புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் கூட ஒத்துழைப்பு தராமல் உன் இஷ்டத்திற்கு சத்தம் போடுற போலீஸ் உங்களுக்கு உதவி செய்வதற்கு தான் இருக்கோம் அதற்காக அதையே தனக்கு சாதகமாக அடிமைப்படுத்தும் எண்ணம் கூடாது இதற்கு மேலும் உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை நான் வரேன்” இதுநாள் வரை அவள் முன்னிலையில் தனது கோபத்தை காட்டி பேசியிருக்காதவன் இன்று தன்னை மறந்து கோபமாக பேசி இருக்க
அவளோ தனது முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லாமல் அமைதியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இன்ஸ்பெக்டர் சார் அன்னைக்கு நான் போனில் பேசியது மறந்து போச்சா? இது ஒரு வழி பாதை நீங்க வந்துட்டீங்க திரும்பி என் அனுமதி இல்லாமல் போக முடியாது அது ஞாபகம் இருக்கா? இல்ல மறுபடியும் ஞாபகப்படுத்தனுமா? எனக்கு உதவி செய்யாமல் பாதியிலே விட்டு விட்டு போவதாக உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது”

“என்ன மறுபடியும் மிரட்டுறியா?” சித்தார்த் கோபமாக தன் முன்னால் இருந்த கம்பியை பற்றிப் பிடிக்க

புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“போனவாரம் தான் நான் உங்களுக்கு ரொம்ப பொறுமை என்று நினைத்தேன் ஆனால் நீங்க இன்னைக்கு உங்களுக்கும் பொறுமையில்லை என்பதை எனக்கு காட்டிட்டீங்க” என்று கூறவும் அவனோ விடாமல் அவளை முறைத்துப் பார்த்தபடி நின்றான்.

சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து மூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை சமநிலைப்படுத்தி கொண்டவன் மனமோ அவளுக்கு உதவி செய்ய சொல்லி அவனைத் தூண்ட தன் நிலையை எண்ணி நொந்து கொண்டே தன் கண்களை திறந்து கொண்டவன்
“சரி இப்போ உனக்கு என்ன வேணும் சொல்லு?” தன்னால் முடிந்த மட்டும் இயல்பாக அவளைப் பார்த்து வினவினான்.

பதிலுக்கு சிறிது நேரம் யோசனையுடன் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றவள்
“நர்மதாவின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று எனக்கு உறுதியளித்தால் மாத்திரமே நான் நர்மதா இருக்கும் இடத்தை சொல்லுவேன் நர்மதா சென்னை வந்து விட்டு மறுபடியும் அவள் இருக்கும் இடத்திற்கு திரும்பும் வரை அவளுக்கு எந்தவித ஆபத்தும் வரக்கூடாது அதையும் மீறி ஏதாவது நடந்தால் அதற்கு அப்புறம் நான் மறுபடியும் இன்னொரு கொலை செய்ய வேண்டி வரும்” மெல்லிய குரலில் ஆனால் அதேநேரம் மிரட்டலாக அவனை பார்த்துக் கூறவும் அவளைப் பார்த்து தன் பற்களை கடித்துக் கொண்டவன் சரி என்று தலையசைத்தான்.

“எல்லாம் சரி தானே?” மேக்னா கேள்வியாக அவனை நோக்க

“சரி சரி! நர்மதா இருக்கும் இடத்தை பற்றி சொல்லு!” சற்றே சலிப்போடு கூறியவன் நர்மதா இருக்கும் இடத்தை பற்றிய தகவல்களை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

“உனக்கு உதவி செய்ய நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்பதான் எனக்கு புரியுது” அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கூறி விட்டு சித்தார்த் அங்கிருந்து சென்று விட அத்தனை நேரமும் விறைப்பாக நின்று கொண்டிருந்தவள் அவன் சென்றதை உறுதிப்படுத்திய பின் தடுமாற்றத்துடன் தன் முன்னால் இருந்த கம்பியை இறுகப் பற்றிக்கொண்டாள்.

‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இன்ஸ்பெக்டர் சார் எனக்கு உங்களை விட்டால் இங்கே இருந்து வெளியே வர வேறு வழி இல்லை அதனால்தான் உங்களிடம் கோபமாக பேச வேண்டியிருக்கிறது என் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு புரியும் வெளியே ஆபத்தை வைத்துக்கொண்டு என்னால் உள்ளே நிம்மதியாக மூச்சுக் கூட விட முடியவில்லை நான் நினைத்தபடி எல்லாம் நல்லபடியாக முடிந்தால் கண்டிப்பாக நான் உங்களிடமும் ஜெஸ்ஸி மேடமிடமும் மன்னிப்பு கேட்பேன்’ தன் மனதிற்குள் மன்றாடுவது போல கேட்டுக்கொண்டவள் அதே மனநிலையுடன் தனது சிறை அறையை நோக்கி சென்றாள்.

மறுபுறம் சிறைச்சாலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெஸ்ஸி சித்தார்த்தை உண்டு இல்லை என வாங்கிக் கொண்டிருந்தாள்.

“சித்தார்த் உனக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, வெட்கம், மானம் ஏதாவது இருக்கா? ஒரு தப்பு பண்ண குற்றவாளி அவ அந்தளவுக்கு மிரட்டுறா நீ ஒரு போலீஸ் ஆபீஸர் அந்த மரியாதை கூட அவளுக்கு தெரிய வேண்டாமா? இது கொஞ்சம் கூட நல்ல இல்லை சொல்லிட்டேன் அவ மேல நியாயமே இருந்தாலும் உதவி செய்ய வர்றவங்களை முதலில் மதிக்க தெரியணும் அந்த பண்பு கொஞ்சம் கூட அவகிட்ட இல்லை இதுக்கு மேல நீ அவளுக்கு உதவி செய்ய போறதா இருந்தால் என்னை அழைக்காதே!” ஜெஸ்ஸி கோபமாக கூறவும்

அவள் முன்னால் வந்து நின்று அவள் கைகளை பிடித்துக் கொண்டவன்
“இங்க பாரு ஜெஸ்ஸி நீ சொல்வது எல்லாம் சரிதான் அவ பேசுவதைக் கேட்டு எனக்கும் கோபம் வந்தது உண்மை ஆனால் என் உள்மனது அவளுக்கு உதவி செய்யத்தானே சொல்லுது நான் என்ன பண்ணுறது?” சற்று கவலையுடன் தலையைக் குனிந்து கொண்டு கூற அவளோ அவனை எண்ணி தன் தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

“ஊரில் எவ்வளவோ பொண்ணுங்க இருக்காங்க ஆனா உனக்கு ஜெயிலில் இருக்கும் பொண்ணு மேல தானடா காதல் வரணும்?”

“அப்படி இல்லை ஜெஸ்ஸி எனக்கு எதனால் இப்படி தோணுதுன்னு தெரியல ஒரு வேளை என் சொந்தம் என்கிற ஒரு உணர்வால் அப்படி தோணுதோ தெரியல ஆனா அவளுக்கு உதவி செய்யத்தான் என் மனதிற்குள் தோணுது மேக்னாவை இங்கே இருந்து வெளியே கொண்டு வந்த அப்புறம் தான் அம்மா கிட்ட நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும் ப்ளீஸ் நீயாவது எனக்கு உதவியாக இரு” சித்தார்த் அவளை கெஞ்சும் குரலில் கேட்கவும் அவளால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியவில்லை.

“சரி! சரி! என்னமோ பண்ணி தொலைக்கிறேன் நர்மதா பற்றி தகவல்கள் எடுத்தியா?”

“ஆமா இதோ இருக்கு” தன் கையில் இருந்த காகிதத்தை அவளின் புறம் நீட்டியவாறே கூறினான்.

“சரி நர்மதாவை அழைச்சிட்டு வர்ற வேலையை நான் பார்த்துக்கிறேன் நீ அந்த தனபாலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பாரு நான் இந்த ஒரு வாரமாக சுதர்சனை பின் தொடர்ந்ததை வைத்து சொல்லுறேன் அந்த ஆளு ஒவ்வொரு நாளும் சாயங்காலம் ஆறு மணிக்கு ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பாழடைந்த கட்டட ஏரியாவுக்கு தனியாக போயிட்டு வந்து இருக்காரு எனக்கு என்னவோ அந்த கட்டடத்தில் தான் தனபாலன் தங்கி இருப்பார் என்று தோணுது நீயும் கொஞ்சம் அதை என்னன்னு பாரு எனக்கு இப்போ நேரம் ஆகுது நான் கிளம்புறேன்” சித்தார்த்தின் தோளில் தட்டி கூறிவிட்டு ஜெஸ்ஸி அங்கிருந்து புறப்பட்டு செல்ல

அவள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டே நின்றவன் வண்டியின் அருகில் வந்து நின்றவாறே
‘இந்த மேக்னாவை விட்டு என்னால் விலக முடியாமல் இருக்கின்றதே! எதனால் எனக்கு இப்படி இருக்கின்றது?’ மனதிற்குள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு தன் தலையை அழுந்த கோதிக்கொண்டே தன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான்.

‘அவளுக்கு மேக்னான்னு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க சுற்றியிருக்கும் எல்லாரையும் காந்தம் போல இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள் விலகிப் போகவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவியாய் தவிப்பது என்னவோ அவளை சுற்றி இருப்பவர்கள் தான்’ தன் ஸ்டேஷனுக்கு போகும் வழி முழுவதும் மேக்னாவைப் பற்றி எண்ணிக்கொண்டே சென்று கொண்டிருந்தான் சித்தார்த்.

ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த பிறகு இருந்த நேரம் முழுவதும் அவனுக்கு ஸ்டேஷனிலிருந்த வேலைகளை செய்வதற்கே சரியாக இருக்க அதன் பின் அவன் அவளை பற்றி சிறு நேரம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

மாலை நேர வேலைகள் சற்று குறைவடைந்து இருக்க களைப்பு தாளாமல் சோம்பல் முறித்தவாறே தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தன் கடிகாரத்தில் திருப்பி பார்க்க அதுவோ மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது தான் அவனுக்கு காலையில் தன்னிடம் ஜெஸ்ஸி கூறியது நினைவுக்கு வந்தது.

சிறிதும் தாமதிக்காமல் உடனே தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு அவள் சொன்ன இடத்தை நோக்கி புறப்பட்டான்.

இருபது நிமிடப் பயணத்திற்குப் பின்னர் அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தவன் கண்களில் சுதர்சனின் கார் தென்பட்டது.

தன் வண்டியை ஓரமாக, மறைவான ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு மெல்ல அடி எடுத்து அந்த கட்டிடத்தின் அருகில் சென்றவன் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று சத்தமின்றி எட்டிப் பார்த்தான்.

அவன் எதிர்பார்த்து வந்தது போல அவனது நினைப்பே பொய்யாக்காமல் சுதர்சனோடு தனபாலன் பேசிக்கொண்டிருந்தார்.

அவர்கள் இருவரையும் மெல்ல தன் தொலைபேசியில் படம் பிடித்துக் கொண்டவன் எவ்வாறு யாரும் கவனிக்காமல் சத்தமின்றி அங்கு வந்து சேர்ந்தானோ அதேபோல அவ்வாறே திரும்பி சென்றான்.

அதன்பிறகு வந்த நாட்கள் முழுவதும் தனபாலன், சுதர்சன் இருவரைப் பற்றியும் பல தகவல் தேடித்தேடி பெற்றுக்கொண்டவன் நர்மதா மூலம் மேக்னா மீதான வழக்கை திரும்ப நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்குத் தேவையான வேலைகளை எல்லாம் ஜெஸ்ஸியுடன் இணைந்து பார்க்கத் தொடங்கினான்.

டி.சி.பி. எட்வர்ட் சொன்னதைப்போல நர்மதா மூலம் மனு தாக்கல் செய்து மேக்னாவின் வழக்கை சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி திரும்ப வாதாட உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதற்கிடையில் மணிவேல் இந்த வழக்கை பற்றி சுதர்சன் மற்றும் தனபாலனிடம் பகிர்ந்திருக்க அவர்கள் இருவருமோ அந்த விடயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து போயினர்.

தனபாலன் உயிருடன் இருக்கும் விடயம் சட்ட பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதற்கு துணையாக இருந்த சுதர்சனும் தண்டனை அனுபவிக்க வேண்டி வருவதுடன் அவர்கள் இருவருக்கும் உதவி செய்த தனக்கும் பிரச்சினை வரும் என்று மணிவேல் கூறியிருக்க அதைக் கேட்டவர்கள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றனர்.

மறுபுறம் வழக்கு விசாரணைக்கான நாள் இன்னும் ஒரு வாரத்தில் என்றிருக்க மேக்னாவோ அந்த ஒரு வாரமும், ஒவ்வொரு நாளும் தனபாலனை எப்படி பழி தீர்ப்பது என்று விதவிதமாக யோசித்து தன் வஞ்சத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

*********************************************

மேக்னா எதிர்பார்த்தது போல வழக்கு விசாரணைக்கான நாளும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக வந்து சேர்ந்தது.

பல நாட்கள் சிறைக்குள்ளேயே தன் நேரத்தை கழித்து இருந்தவள் அன்று பல நாட்கள் கழித்து வெளி உலகத்தை பார்த்ததும் ஒரு சில கணங்கள் தன்னை மறந்து போய் நின்றாள்.

சாதாரண ஒரு மனிதனைப் போல இயல்பான வாழ்க்கை வாழ தன்னால் முடியவில்லையே என்ற கழிவிரக்கம் தன் மனதிற்குள் எழ தன் கண் கலங்கிய கண்களை யாரும் அறியாவண்ணம் துடைத்துக்கொண்டவள் எப்போதும் போல தன் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தை நோக்கி நடந்து சென்றாள்.

விசாரணை தொடங்கி இருந்த சிறிது நேரத்தில் அரசு தரப்பு விவாதங்களும் மேக்னாவிற்கென நியமிக்கப்பட்ட வக்கீலின் விவாதங்களும் அந்த நீதிமன்றத்தை ஒரு சில நிமிடங்களிலேயே சூடு பிடிக்க செய்தது.

அந்த கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் மேக்னா இருக்க வில்லை என்பதற்கான கண்ணால் பார்த்த சாட்சிகள் ஒரு சிலர் அந்த இடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்க தனபாலன் தான் அந்த கொலையை செய்தார் என்று மேக்னாவிற்கான வக்கீல் வாதாடிக்கொண்டிருந்தார்.

சந்தர்ப்ப சூழ்நிலை, மற்றும் தான் அந்த இடத்தில் இல்லாமல் போன குற்றவுணர்வு இரண்டும் ஒன்று சேர்ந்ததால் தான் மேக்னா தான் கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார் என்று அவளது வக்கீல் வாதாட எதிர்த் தரப்பு வக்கீலோ அவள் தான் கொலை செய்துள்ளாள் என்று தன் தரப்பு வாதத்தை முன் வைக்க அதற்கான சாட்சிகள் வினவப்பட்டது.

தங்களிடம் அதற்கான சாட்சிகள் இல்லை என்று அவர் கூறவே அந்த வழக்கு மீண்டும் இழுபறி நிலைக்கு போய் விடுமோ என்று அங்கிருந்த அனைவருமே அச்சம் கொள்ள ஆரம்பித்தனர்.

தனபாலன் இறந்துவிட்டதாக அரசு தரப்பு வக்கீல் கூறவும் தங்களிடம் அவர் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்கள் இருப்பதாக எதிர்த் தரப்பு வக்கீல் தன் வாதத்தை முன்வைத்தார்.

தனபாலன் உயிருடன் இருப்பதற்கு சாட்சிகள் எல்லாம் அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றுவிட்டு நீதிபதி வழக்கை இன்னொரு திகதிக்கு தள்ளி வைத்திருக்க சித்தார்த்தும், ஜெஸ்ஸியும் தங்களுக்கு வேலை வந்துவிட்டது என்பதை போல ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

மறுபுறம் மேக்னா கண்கள் முழுவதும் ஆவல் நிரம்பி வழிய சித்தார்த்தைத் திரும்பிப் பார்க்க அந்த நேரத்தில் அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவளது முகத்தை பார்த்ததும் மனதிற்குள் அவள் மீது இருந்த‌ கோப உணர்வு எல்லாம் மறந்து புது உற்சாகம் பிறந்தது போல இருக்கவும் அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் “நான் இருக்கேன் டோண்ட் வொர்ரி” என்று சைகையில் கூற

அவளும் பதிலுக்கு
“நான் காத்துட்டு இருப்பேன் இன்ஸ்பெக்டர் ஸார்!” என சைகையில் கூறி விட்டு புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டே அங்கிருந்து நடந்து சென்றாள்.

மற்றைய புறம் இதைப் பார்த்துக்கொண்டு நின்ற ஜெஸ்ஸி
‘கடவுளே! இந்த அப்பாவி சித்தார்த்தை எப்படியாவது அவ கிட்ட இருந்து காப்பாற்றிடுப்பா’ தன் மனதிற்குள் வேண்டிக் கொள்ள
அவரோ நிலைமை எல்லாம் தன் கை மீறி போய் விட்டதே என்ற எண்ணத்தோடு சித்தார்த்தை எண்ணிக் கவலையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்……..