manam4

மகிழம்பூ மனம்

மனம்-4

 

நடந்த விடயத்தின் வீரியத்தால், உணர்வுகள் மரித்து எதையும் யோசிக்கும் திராணியற்றவர்களாக, ஆளுக்கொரு திசையில் நெடுநேரம் படுத்திருந்தனர். 

கண்களிலிருந்து வழிந்த வெந்நீரில், படுக்கையே நனைந்துபோகும் அளவிற்கு ஊமையாக அழுததில், மனஅழுத்தம் குறையப்பெற்று, சற்றே மனம் தெளிந்திருந்தனர்.

 

யாழினியின் பெற்றோருக்கு அழைத்துப் பேசிவிட்டு, யுகேந்திரனை அழைத்திருந்தார் முருகானந்தம்.

 

யுகேந்திரன் கூறிய, ‘தேவேந்திரன் விருப்ப மாற்றல் வாங்கிக்கொண்டு ஹைதராபாத் அலுவலக கிளைக்கு சென்றுவிட்டான்’, எனும் செய்தியை மகனின் வாயிலாக சுருக்கமாகக் கேட்டறிந்தவர், “சரிப்பா, நீ நேருல வா… வீட்ல பேசிக்கலாம்”, என்று அலைபேசியை வைத்திருந்தார்.

——————

நடந்ததை எண்ணியே, தன்னையும் வருத்தி, பிறரையும் நோகச் செய்யும் மனித இனத்திற்கு மத்தியில், மதியவேளையைக் கடந்தும், தனக்குப் பசியாதபோதும், வயோதிகம் மற்றும் அதனால் உண்டான உடல்நலக்குறைபாடு காரணமாக தொடர்ச்சியாக மாத்திரைகளை உட்கொள்ளும் பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை கொண்டவளாய், அவர்களுக்கேனும் தன்னால் இயன்றதை செய்துதர எண்ணியவளாய் அடுக்களைக்குள் நுழைந்தாள் யாழினி.

தன்னைத்தானே சமாதானம் செய்து அறையிலிருந்து ஒட்டு மொத்த சோகத்தின் உருவமாக வெளிவந்த யாழினியைக் கண்ட அம்பிகா, ‘அடுக்களைக்குள் சென்றவளை, என்ன செய்கிறாள்?’ என ஹாலில் இருந்தபடியே கவனித்தார்.

இதுநாள்வரை அப்படிப் பார்த்தவரல்ல.  ஆனால் நடந்த விடயத்தின் வீரியம், தவறான முடிவுகளை யாழினியை எடுக்கச் செய்துவிடக் கூடாதே என்னும் விழிப்புநிலை காரணமாக, தான்அசதியாக உணர்ந்தபோதும் உறங்காமல் அவ்வப்போது மருமகளின் மீது ஒரு கண்வைத்து கண்கொத்திப் பாம்புபோல இன்று கவனித்து வருகிறார்.

பத்து நிமிடங்களாகியும் அடுக்களையில் இருந்து வெளிவராதவளை, என்னவோ ஏதோ என எண்ணித் துணுக்குற்றவராக எழுந்து அவளிருக்குமிடம் தேடி வந்திருந்தார்.

வாசலுக்கு வந்தவருக்கு, யாழினியின் கடமையுணர்ச்சி தவறாத வேலை கண்ணில்பட,

“என்னம்மா… என்ன செய்யப்போற?”, என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தார்.  தனது மாமியாரை முற்றிலும் அங்கு எதிர்பாராதவள்,

“அத்தை! மாமாவும், நீங்களும் மாத்திரை போடணுமே, மதிய சமையல் எதுவும் இன்னும் நான் செய்யல. ஏதோ திடீர்னு நடந்த இந்த விசயத்தை நினைச்சு அப்டியே இருந்துட்டேன்.  அதான்…  தோசை மாவு இருக்கு, சட்னிக்கு ரெடிபண்ணிட்டு இருக்கேன்.  தோசை வார்த்து எடுத்துட்டு வரேன்.  நீங்க போயி ரெஸ்ட் எடுங்க அத்தை”, என்ற மருமகளின் பதிலைக் கேட்டு, அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த அம்பிகா,

“ஒரு வேளை சாப்பிடாம, மாத்திரை போடாம இருந்தா ஒன்னும் ஆகாது!  அவன் செஞ்சதை நினைச்சே… வயிறு நொம்பிருச்சு!  இருக்கட்டும்… இப்போ எதுவும் வேணாம்.  அப்புறம் பாத்துக்கலாம்!”, என்று அம்பிகா உணவை மறுத்திருந்தார்.

சட்னிக்குரிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தவள், அதை அப்படியே வைத்துவிட்டு,

“அப்ப… பால் இருக்குத்தை, வேணா… டீ போட்டுத் தரவா?”, உணர்வறுந்த நிலையில் பேசினாள் யாழினி.

விடாத அழுகையினால் முகமெங்கும் வீங்கி, இரத்தச் சிவப்பாகக் காட்சியளித்த மருமகளின் வதனத்தை யோசனையோடு பார்த்தபடியே, “நீ இப்படி எல்லாம் எங்களை பாத்து, பாத்து கவனிக்கறதை பாக்குறப்போ, இன்னும் குற்ற உணர்ச்சியில குறுகி போறமாதிரி இருக்கும்மா எனக்கு, என்ன மனுசன் அவன்!  இப்டி அவன் செஞ்சுட்டு போன காரியத்துக்கு, என்ன பிராயச்சித்தம் செய்யப்போறோம்னு நினைச்சாலே கண்ணைக் கட்டுது”, என்றவாறு தனது சேலைத்தலைப்பை வாயில் வைத்தவாறு குனிந்து கொண்டிருந்தார். விட்டிருந்த அழுகையையைத் துவங்கியதை, அவரின் குனிந்திருக்கும் முதுகு குலுங்குவதைக் கண்டு உணர்ந்தாள் யாழினி.

சற்று நேரம் அமைதியாகப் பார்த்திருந்தவள், தன் மனதில் தோன்றியதைக் கூறத் துவங்கினாள், “அழுகறதால… நடந்தது எதுவும் மாறப்போறது இல்ல அத்தை. அழுது எதுக்கு வீணா உடம்பைக் கெடுத்துகறீங்க… அத்தை! 

அவங்கவங்க நியாயம் அவங்கவங்களுக்கு!  நமக்கு தப்பா தோணற விசயம், அவங்களுக்கு சரியா தோணியிருக்கே! 

நடந்தத விட்டுட்டு… முதல்ல எதாவது சாப்பிட்டு மாத்திரை போடுங்கத்தை…!

முதுமைக்கும், நோயாளிக்கும் மத்தவங்களோட நியாய அநியாயம், தெரியாது! புரியாது!

இப்பவே மணி மூனு ஆகுது.  அப்புறம் உடம்புக்கு முடியலனா ரொம்பச் சிரமம் அத்தை!”, என்ற மருமகளின் வார்த்தைகளைக் கேட்டவர், முகத்தை நன்றாக சேலைத்தலைப்பில் துடைத்தபடியே, முந்தியை எடுத்துச் சொறுகியவாறு,

“நீ அந்த ஸ்டூல்ல போயி முதல்ல… அப்டியே உக்காரு!”, என்று மருமகளின் கையிலிருந்தவற்றை வாங்கி மேடைமீது வைத்தவர், அடுக்களையின் ஒரு ஓரத்தில் இருந்த ஸ்டூலைக் கைகாட்டி அதிகாரமாக யாழினியை அமருமாறு கூறினார்.

மாமியாரின் சற்றே மாறியிருந்த தொனியில், மறுத்து எதுவும் பேசாமல் சொன்னதைச் செய்தாள் யாழினி.

அம்பிகாவே பாலை எடுத்து காய்ச்சத் துவங்கியதைப் பார்த்த யாழினி, எழுந்துவர முயற்சிக்க, “ஸ்… பேசாம அப்டியே உக்காரு!  டீ போட்டா நான் தேஞ்சிற மாட்டேன், என்ன… ஓன் அளவுக்கு மெனக்கடமாட்டேன்.  அதனால சுமாராத்தன் இருக்கும்”, என்று மீண்டும் அதே இடத்தில் மருமகளை அமரச்செய்தவர், தனது பணிகளில் மூழ்கியவாறே மருமகளிடம் பேச்சுக் கொடுத்தார்.

அம்பிகா எழுப்பிய கேள்விகளை எதிர்பார்த்திராத யாழினி, யோசித்து, திணறலோடு பதில் கூறத் துவங்கியிருந்தாள்.

அடுப்பை சிம்மில் வைத்தபடியே, தேநீரை நிதானமாகத் தயாரித்திருந்தார், அம்பிகா.

திருமண வாழ்விற்குள் அடியெடுத்து வைத்திருந்தவர்களின், தாம்பத்திய வாழ்க்கை இதுநாள் வரை எப்படி இருந்தது என்பதை காலங்கடந்து யாழினியிடம் கேட்டறிந்த அம்பிகா இறுதியாக, “இதையெல்லாம் நீ எங்கிட்ட சொல்ல கூச்சப்பட்டிருந்தாலும், உங்க அம்மாகிட்டயாவது சொல்லியிருக்க வேணாமா…?

என்ன பொண்ணும்மா நீயி…!

கல்யாண அலைச்சல்ல, அசதில… அன்னிக்கு ஒருநாள் கண்டுக்காம தூங்கிட்டவனையே புரிஞ்சிக்காம, அடுத்தநாளே… அமளி துமளியாக்கி, கட்டுனவனை அசிங்கப்படுத்தி, தன்னோட நியாயத்தை நிலைநாட்ட, நாட்டமை பண்ணுற புள்ளைகள் இருக்குற… இந்தக் காலத்துல, இப்டியும் ஒரு புள்ளையா… இருந்திருக்க?

ரெண்டு மாசமா… எதையும் பேச்சிலயோ, நடத்தைலயோ, இல்லை… முகத்துலகூட காமிக்காம, சிரிச்சிகிட்ட வளைய வந்திருக்க! என்ன புள்ளைம்மா நீ!”, என கடிவது போல மெச்சிக் கொண்டார்.

இதற்கிடையில் அவர் தயாரித்த தேநீரை, மருமகள் மறுத்தும் கட்டாயப்படுத்தி குடிக்கச் செய்தார்.

பிறகு, தனக்கும் கணவருக்கும் எடுத்துக் கொண்டு ஹாலிற்குள் வந்தவர், “என்னங்க கொஞ்சம் இந்த டீய மட்டுமாது குடிங்க!”, என்று படுக்கையில் படுத்து உறங்காது, யோசனையோடு இருந்தவரை எழுப்பி தேநீரைக் கொடுத்திருந்தார், அம்பிகா.

ருசியைக் கூட உணர இயலாத நிலையில், மாமியார் போட்டுத் தந்த டீயை குடித்தவள், மீண்டும் தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டாள் யாழினி.

கணவரிடம் சற்று நேரம் நின்று பேசியவர், மீண்டும் அறைக்குள் நுழைந்தவளைத் தேடி அறைக்கே வந்திருந்தார்.

வெறுந்தரையில் படுத்திருந்தவள், அம்பிகாவின் வருகைக்குப் பின் எழுந்து அமரவும், அம்பிகா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, விட்டுப்போனவற்றை மீண்டும் விசாரிக்கத் துவங்கியிருந்தார்.

அரைமணித் தியாலத்தில், திருமணத்திற்குப் பிறகான இருவரின் புரிந்துணர்வு, தாம்பத்தியம் மற்றும் அனைத்தையும் மருமகளின் வாயிலாக கேட்டறிந்தவர், மகனின் இப்போதைய செயலில் தங்களுக்கும் மறைமுகப் பங்குண்டு என்பதை அறிந்து, அமைதியாக சற்று நேரம் அமர்ந்திருந்தார்.

————————-

அலைபேசியில் முருகானந்தம் கூறிய சில நாழிகையில் ஊரிலிருந்து கிளம்பி நேரில் வந்திருந்தனர், யாழினியின் பெற்றோர்.

சரிதா, ராஜேஷ் தம்பதியினருக்கு யாழினிதான் மூத்தவள். அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கவே… எதையும் நிதானமாக யோசித்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர்.

விவசாயத்தை நம்பியிருந்த குடும்பம்.  அதனால் குறைந்தபட்ச கல்வித்தகுதியை கொடுத்து, முறையாக திருமணம் செய்து கொடுக்க எண்ணியே, இந்த தூரத்து சம்பந்தத்தை பேசி முடித்து, திருமணம் செய்திருந்தனர்.

வந்தவர்களை வரவேற்ற அம்பிகா, இருவரையும் அமரும்படி கூறிவிட்டு, அறைக்குள் அடைந்திருந்த யாழினியை அழைத்தார்.

மாமியாரின் அழைப்பைக் கேட்டு வெளிவந்த மகளின் முகம் சொன்ன செய்தி, சரிதாவை அரை உயிராக்கி இருந்தது.

மருமகளை அழைத்து “குடிக்க… அம்மா, அப்பாவுக்கு, எதாவது கொண்டு வந்து குடும்மா!’ எனக் கூறினார், அம்பிகா.

பயணக் களைப்பு ஒருபுறம் அசதியைத் தந்திருந்தது. ரகசியம் போல இதுவரை வெளியில் சொல்லப்படாத மகள் சார்ந்த விடயம் எத்தகையது? என இருவரும் மனதிற்குள் பாறாங்கல்லை வைத்து அழுத்திய வேதனையைச் சுமந்தபடியே, சம்பந்தி இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

மனம் உலைக்கலன் போல கொதித்திருக்க, மகளை நேரில் பார்த்தவுடன் மயக்கமே வந்திருந்தது, யாழினியின் தாயாருக்கு.  அத்தோடு அவளை பணித்த மாமியாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பத் திரும்பியளை, “ஒன்னும் வேணாம்மா…! நீ இப்டி வந்து உக்காரு… உடம்புக்கு என்ன செய்யுது?”, என சரிதா ஒருகனம் பதறி எழுந்து, மகளை தன்னோடு அணைத்திருந்தார்.

அம்பிகாவிற்கே யாழினியின் நிலை கண்ணைக் கரித்துக் கொண்டுவரும் நிலையில், பெற்றவருக்கு தலையில் இடியை இறக்கியதுபோல உணர்ந்திருந்தனர்.

யாழினியின் தந்தை, முருகானந்தத்தை அணுகி, “என்ன விசயம்னு சொல்லுங்க…! எங்களாலயும் எதையும் யூகிக்க முடியல…! நீங்க என்னனு சொன்னாத்தானே தெரியும்!”, என்று கூறவே

அதேநேரம் மகளை அணைத்தபடியே அமர்ந்துவிட்டார், சரிதா.

முருகானந்தம், மெதுவாக அவர்களிடம், மூத்த மகனின் தவறை, முறையற்ற செயலை, தயங்கியபடியே கூறத் துவங்கியிருந்தார்.

விடயம் அறிந்த பெண்கள் இருவரும், முருகானந்தம் கூறுவதைக் கேட்டு, மீண்டும் தங்களுக்குள் மௌனமாக அழுகையைத் தொடந்திருந்தனர்.

புதியதாகக் கேட்ட இருவருக்கும், காது கேளாமையோ, இல்லை, பயணம் செய்து வந்த அசதியினாலோ, முருகானந்தம் சொன்ன விடயத்தை எளிதாக உள்வாங்க இயலாத நிலையில் அமர்ந்திருந்தனர்.

இருந்தாலும், நடந்ததை ஒருவாராக உள்வாங்கியவர்களால், சீரணிக்க இயலாமல், இருவரும் ஒரே இடத்தில் சமைந்திருந்தனர்.

தாங்களும் நம்பி ஏமாந்ததை, மறைக்காமல் கூறினார், முருகானந்தம்.

மகனின் தவறான முடிவை எண்ணி மன்னிப்பைக் கோரினார். “மன்னிப்புனு ஒரு சின்ன வார்த்தைக்குள்ள அடக்குற தப்ப… என் மகன் செய்யல…! ஆனா எங்களை பெரிய மனசு பண்ணி… தயவு செஞ்சு மன்னிங்க…!”, என காலில் விழவும் தயாராக இருந்தார், முருகானந்தம்.

விடயம் அறிந்தவர்கள், வாயில் துண்டை வைத்தபடி ராஜேஷூம், சேலை முந்தனையை கொண்டு கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி… சரிதாவும் தங்களது இன்றைய குடும்ப நிலையை, தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி… கண்ணீர் வடித்திருந்தனர்.

“யாரு இனி எம்புள்ளைக்கு நல்லது செய்வா!  இதுக்கா கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சோம்.  எல்லாம் எங்க தலையெழுத்து..! இதுல யாரை நாங்க நோக முடியும்.  இப்டியொரு எழுத்த(தலையெழுத்து) போட்ட ஆண்டவன், இன்னும் என்ன எம்புள்ளை தலையில எழுதியிருக்கான்னு தெரியலயே!

எங்க பொண்ணு குடுத்து வச்சது அவ்ளோதான்…! இதில விதிய நோகறதத் தவிர… வேற என்ன நாங்க செய்ய முடியும்!”, என தனது அழுகையினூடே… புவியில் புதைந்துபோனதாகக் கருதிய தனது மகளின் திருமண வாழ்க்கையை எண்ணிக் கண்ணீர் வடித்தார்.

“அவ பிராப்தம் அவ்வளவுதான்னு நினைச்சு… எங்ககூடவே கூட்டிட்டுப் போறோம் சம்பந்தி!”, என சரிதா மகளின் புதுவாழ்க்கையில் உண்டான திடீர் பூகம்பத்தால், மனதில் உண்டாகியிருந்த சுனாமியை, புலம்பலும், கழிவிரக்கமுமாகப் பேசி தனது மனதைக் கூறினார்.

யாழினியின் பெற்றோர் இருவரும் மிகவும் அமைதியானவர்கள்.  யாருடைய வம்பிற்கோ, வழக்கிற்கோ செல்லாமல் தானுன்டு, தன் வேலையுண்டு என இதுவரை இருந்த நல்லவர்கள்.

ஏறத்தாழ முருகானந்தம், அம்பிகா இருவரும் யாழினியின் பெற்றோரைப் போன்ற குணம் கொண்டவர்கள்தான்.

சாந்த குணமுடையவர்கள், எதையும் குரூரத்தன்மையுடனோ, பழிவாங்கும் உணர்வோடோ, சாபம்விடும் முறையிலோ, கொந்தளிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அறியாதவர்கள்.

இருபக்க பெரியோர்களும் ஒரே மாதிரியிலான குணத்தைக் கொண்டவர்கள். ஆகையால், யாழினியின் பெற்றோர் வீட்டிற்கு வரும்முன்னே, தங்களால் ஆன நல்லதை யாழினிக்கு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தனர், தேவாவின் பெற்றோர்கள்.

தற்போது, தங்களது அபிப்ராயத்தை யாழினியின் பெற்றோர் கூறியதைக் கேட்ட, தேவாவின் தாயார்,

“இவன் இப்டி நினச்சு இருந்தது, சத்தியமா எங்களுக்கு தெரியலயே… சம்பந்தி!

தெரிஞ்சிருந்தா நல்ல மகராசி வாழ்க்கைய… எப்டி தெரிஞ்சே நாங்க வீணாக்குவோம்…!

இப்டி பண்ணிட்டானே!

எதையும்… தயங்கி தயங்கியே அவங்கப்பாகிட்ட பேசறவன், இதப்பத்தி என் காதுலயாது போட்டிருந்தா… அவன் மனசு போல இருக்கட்டும்னு, அவன் விரும்பம்போல இருக்க விட்டுருப்போமே!”, என தனது மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் அம்பிகா.

“வருத்தம்னு மட்டும் சொல்லி… நாங்க தப்பிக்கற மாதிரியான விளையாட்டுப் புள்ளைங்க சண்டை விசயம் எதுவும் இங்க நடக்கல…!

ஆனா அதையெல்லாம் விட பெரிய விசயம் நடந்திருச்சு! வேதனை மட்டுமில்ல. ஒரு பொண்ணோட எதிர்காலம், நம்பிக்கை எல்லாமே… இதுல போச்சு…

அவனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து வற்புறுத்தி வாழவச்சாலும்…. அவங்கவங்க மனசு வச்சாதான், வாழ்க்கை நல்லா இருக்கும்!”, என்று மகனின் செயலை நினைத்துக் குறுகியவாறு பேசியவர்

“சம்பந்தி சொல்றமாதிரி, வீட்டுக்கு கூட்டிட்டு போயி நாலுநாளு வச்சிருந்து அனுப்ப, பரீட்ச லீவுல இருக்குற சின்னப்புள்ளயா நம்ம யாழினி!

கல்யாணம் பண்ணிக் கொடுத்த வயசுப்புள்ள..! அதுமட்டுமில்லை!  எங்க வீட்டுக்கு வந்த மகாலெட்சுமி அது…! 

அந்த மடையனுக்கு வேணா… இந்த மகாலெட்சுமியப் பத்தின அருமை தெரியாம விட்டுட்டு எனக்கென்னனு போயிருக்கலாம்.  ஆனா இதை நான் அப்டியே விடறதா இல்ல…!

இப்ப கல்யாணம் முடிஞ்சு மூனு மாசங்கூட முழுசா முடியறதுக்குள்ள… உங்க வீட்டுக்கு, அது வாழலனு  கூட்டிட்டுப் போனா… ஊரு உலகம் அந்தப் புள்ளயத்தான் கண்டதையும் பேசும்!

இந்தப் பய பண்ண தப்ப தண்டோரா போட்டா நாம எல்லாருகிட்டயும் சொல்ல முடியும்? அப்டியொரு நல்ல காரியத்தையா செய்திருக்கான்?

ஒன்னை நாலா திரிச்சி பேசுற மக்கள் வாழற சமூகத்தில… அவன் பண்ண தப்புக்கு… எந்தத் தப்பும் பண்ணாத நம்ம புள்ளை ஏன் கஷ்டப்படனும்.

நாக்கு நரம்பில்லாதது! 

ஒரு சொல்லு கொல்லும், ஒரு சொல்லு வெல்லும்னு சொல்லுவாங்க…!

அப்டியிருக்கற நிலையில… ஊருல யாரும் நாக்குல நரம்பில்லாம பேச நாமயேன் இடங்கொடுக்கனும்?

ஏற்கனவே கல்யாண வயசுல ரெண்டு புள்ளைங்க வீட்டுல இருக்குதுக…!

நானும், இவளும் சேந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். நான் சொல்றத கேட்டு… நீங்களும் யோசிச்சு ஒரு நல்ல முடிவு சொல்லுங்க..!

ஒண்ணும் அவசரமில்ல. நிதானமா முடிவெடுங்க…!

யாழினி எங்க வீட்டுக்கு மருமகளா வந்திருந்தாலும்… எனக்கும் அது புள்ளதான்…!”, என முருகானந்தம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பியிருந்தான், யுகேந்திரன்.

 

தமையனின் தீடீர் பணிமாறுதல் மற்றும் யாரிடமும் முறையாகக் கூறாமல் வீட்டிலிருந்து சென்றது, எதனால் என யோசித்தவாறே, வீடு திரும்பியிருந்தான். தேவாவின் கடிதம் பற்றி இன்னும் அறிந்திராததால் அமைதியாக வீட்டில் நடப்பதை கவனிக்கத் துவங்கியிருந்தான்.

 

வீட்டின் மாற்றங்கள் புரிந்தாலும் புதிராக இருக்க, யோசித்தபடி அவனும் ஹாலில் இருந்த சேரில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

மகனை ஓரக்கண்ணில் பார்த்தபடியே தனது பேச்சைத் தொடர்ந்தார், நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தட்டச்சரான முருகானந்தம்.

 

“தேவாவ இனி எதிர்பாக்கறது எனக்கு நல்லதா படல. வேற ஒரு பொண்ணுகூட மனசுபோல வாழப்போறேன்னு சொல்லி எழுதிவச்சிட்டுப் போயிருக்கறவனை, வம்பு செஞ்சு கூட்டிட்டு வந்து, நம்ம புள்ளைகூட கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது!  அது நம்ம பொண்ணுக்கு அசிங்கம்.

அவன் ஹைதராபாத்துக்கு கிளம்பி போனதா… அவங்க ஆஃபீஸ்ல விசாரிச்சப்ப இன்னிக்கு மதியம்தான் எங்களுக்குத் தெரிஞ்சது.  சின்னவன்தான் போயி விசாரிச்சு சொன்னான்.

இந்த விசயத்தை நம்ம ஊரு தலைவருகளை வச்சு… வாரக்கூட்டம் நடக்கிற அன்னிக்குப் பேசிட்டு, அடுத்து என்னங்கறதை முடிவு செய்யலாம்.

அதுக்கு முன்ன அவனைப் பாத்து, நம்ம புள்ளைக்கு தீத்து விடற (விவாகரத்துக்கு செய்யறதுக்கான) விசயம் பத்தி முதல்ல பேசி முடிவெடுப்போம்”, என்று முருகானந்தம் கூற, அதுவரை அமைதியாக எதுவும் பேசாமல் இருந்தவர்கள்,

“இல்ல…! அது நடக்கும்போது நடக்கட்டும்.  இப்ப நாங்க… இன்னிக்கே யாழினியவும் வீட்டுக்கு எங்ககூட கூட்டிட்டுப் போறோம்”, என்று யாழினியின் தந்தை தனது முடிவில் மாறாமல் பேச

“கட்டிக் கொடுத்திட்ட பொம்பளப்புள்ள அது…! மாப்பிள்ளையோட எங்க போனாலும் அது மரியாதை.  இந்த நிலையில உங்க வீட்டுக்கு வந்தாலும்… சுத்தியிருக்கறவங்க என்ன? ஏதுன்னு கேப்பாங்க,  எவ்வளவு நாளைக்கு இதை மறைக்க முடியும்.  அதனால ஒரு நல்ல முடிவெடுக்கற வரையும் எங்க பாதுகாப்புல இங்கேயே இருக்கட்டும்.  நானும் எங்க வீட்டம்மாவும் அவளை நல்லா பாத்துக்குவோம்.

அதுக்குமேல, யாழினிய இந்த நிலைமையில உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனா… மத்த புள்ளைகளோட நிலமையவும் என்னாகும்னு… யோசிச்சு தான் செய்யணும்!

எடுத்தோம்… கவுத்தோம்னு… செய்ய இது விளையாட்டில்ல… வாழ்க்கை…!

ஏன்னா சட்டபூர்வமா… லேட்டானாலும், நாம நம்ம ஊரு பெரிய ஆளுகள வச்சி தீத்து வைக்க (விவாகரத்து வாங்க) முதல்ல முயற்சி செய்வோம்!

அவன தேடிக் கண்டுபிடிச்சு… அப்றம் நம்ம ஊரு பஞ்சாயத்துல சொல்லி, உடனே இதுக்கு ஒரு முடிவை எடுக்கலாம்.  அப்புறம் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து, நாங்களே அந்தப் புள்ளைக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுக்கறோம்.  அதுவரை நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க சம்பந்தி”, என முருகானந்தம் தனது மனதில் தோன்றியதை தயவாகவே யாழினியின் தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தார்.

முருகானந்தம் பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பிகா தவிர்த்து, மற்ற இருவரும் இடைவெட்டிப் பேச எத்தனிக்க

“நான் சொல்லி முடிச்சுக்கறேன்… அப்பறம் உங்க அபிப்ராயம் எல்லாம் சொல்லுங்க…

என்ன சரிதானா சம்பந்தி…?”, என்று அனுமதி கேட்டு அவர்கள் இருவரும் தலையாட்டியதைக் கண்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்திருந்தார், முருகானந்தம்.

“புகுந்த வீட்டில இருந்து பிறந்த வீட்டுக்கு வர பொண்ணு, நல்ல நிலையில வந்து போனாத்தான் ஊரும் சரி, நம்ம சாதி சனமும் சரி… மதிக்கும்.

இப்டி ஒரு நிலையில நீங்க கூட்டிட்டுப்போனா… அந்தப் புள்ளைய ஒன்னுமில்லாம ஆக்கிருவாங்க. என்ன நடக்கும்னு நம்ம சொல்லவும் முடியாது. கணிக்கவும் முடியாது!

இங்க மட்டும்னு இல்ல, எல்லா நல்லதுலயும் அப்படிப்பட்ட பொண்ணை ஓரங்கட்டிருவாங்க..!

ஓரங்கட்டியே ஒண்ணுமில்லாம செஞ்சிரும் இந்த உலகம். காலம் முழுக்க மனசுக்குள்ள வச்சு புழுங்கியே வாழறதுக்கா இந்த வாழ்க்கை!

மீளவே முடியாம பண்ணிருவாங்க… சுத்தியிருக்கறவங்க. அதனாலதான் சொல்றேன்.

அதுக்குமேல உங்க பிரியம்”, என்று கூறி அமைதியாகிவிட்டார், முருகானந்தம்.

முருகானந்தத்தின் வார்த்தைகளை முழுமையாகக் கேட்ட இருவரும், தங்களின் முடிவில் பின்னடைந்திருந்தனர்.  அத்தோடு அடுத்தகட்ட நிகழ்வாக என்ன செய்யலாம் என நிதானமாக யோசிக்கத் துவங்கியிருந்தனர்.

சற்றுநேரம் அமைதியாக இருந்தவர்களைப் பார்த்திருந்தவர், “யுகேந்திரா வெளியில போயி எல்லாருக்கும் சாப்பிட எதாவது இட்லி மாதிரி வாங்கிட்டு வாப்பா”, என்று பணித்தார் முருகானந்தம்.

மகன் வாங்கி வந்ததை அனைவரையும் உண்ணச் செய்து, தானும் உண்டு, சற்று நேரம் அனைவரையும் இளைப்பாறச் சொன்னார்.

“ஒன்னும் அவசரமில்லாம, நிதானமா விடியறவரை யோசிங்க”, என்றவர், தங்களது ஊரின் பஞ்சாயத்துத் தலைவருக்கு அழைத்து, தேவாவின் செயலைப் பற்றி கூறினார்.

முருகானந்தம் அவர்களின் செயல்களைக் கவனித்தவாறே இருந்த, யாழினியின் தந்தை ராஜேஸூம், அவர்களது கிராமத் தலைவருக்கு அழைத்து விடயத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து வந்த நாட்களில் ஹைதராபாத் அலுவலகக் கிளைக்கு தொடர்பு கொண்டு பேசிய யுகேந்திரனுக்கு, இன்னும் தேவேந்திரன் பணியில் வந்து சேரவில்லை என்ற செய்தி கிடைக்கவே, அதைப் பெரியவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகும் அதே செய்தியைக் கேட்டவர்கள், நான்கு நாட்களுக்குப்பின் காவல்துறையிடம் காணாமல் போன தேவேந்திரனை கண்டுபிடித்துத் தரும்படி, தந்தையின் அறிவுரையின் பேரில் புகார்மனு அளித்தான், யுகேந்திரன்.

மேலும், ஹைதராபாத் கிளைக்கு வந்து பணியில் சேரும் தேவேந்திரனைப் பற்றிய தகவலை உடனே குறிப்பிட்ட முகவரி அல்லது அலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கும்படியும், கடந்த நான்கு தினமாக தேவேந்திரன் பற்றிய எந்தச் செய்தியும் அறியாததால் காவல்துறைக்கு தாங்கள் அளித்த புகார்மனுவின் நகல் ஒன்றையும் இணைத்து, தபால் அனுப்பியிருந்தான், யுகேந்திரன்.

 

தேவேந்திரன் நிலையென்ன? அவன் கிடைத்தானா?

இருகிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் எடுத்த முடிவு என்ன?

யாழினியின் நிலை?

அடுத்த அத்தியாயத்தில் காணலாம்…

————————-