மகிழம்பூ மனம்
மனம்-8
காலையில் எழும்போதே ஏதோ புதுமையான, இதுவரை அணுகியிராத, உடல் உபத்திரவத்தை உணர்ந்தாள், பெண்.
ஆனாலும், புதிய உணர்வின் புரிதல் இல்லாமையால், என்ன செய்யவேண்டும் எனத் தெரியாமல், அன்றைய பணிகளை ஆயாசத்தோடு அணுகியிருந்தாள்.
கணவனை, ஒருவழியாக வேலைக்கு அனுப்பியவளுக்கு, ஏனோ… என்றுமில்லாமல் மனம் படுக்கையை நாடியது.
அதேவேளை அகோரப் பசியும் எடுக்க, ‘முதலில் உண்ணலாமா? இல்லை படுக்கலாமா?’, என்று ஜீவனில்லாது ரோசத்துடன் நடந்து திரிந்தவளுக்குள், மனப்போராட்டம்!
அதையே, படுக்கையில் படுத்தபடியே யோசிக்க, அசதியும், சோம்பலும், பசியோடு போட்டியிட்டு, முதலிரண்டும்… பசியைத் தோற்கடிக்க, பஞ்சாயத்து இல்லாமலேயே… படுக்கை வென்றது!
படுத்தவளுக்கு ஏனோ, மனம் சொர்க்கத்தை நினைவுறுத்தியது.
நிம்மதியான உறக்கத்தில், சங்கடங்கள் உடல்நிலையில் இருந்தாலும், சலனமில்லாத ஆழ்ந்த உறக்கம்.
மனதின் ஆசுவாசம், அவளை உறங்கச் செய்திருந்தது.
உடல் நாடிய ஓய்வை உடனே கொடுத்திருந்தால், இத்தகைய பின்விளைவு இருந்திருக்காது.
நீண்ட நேரம் அதனுடன் போராடியதால், உடல் மிகவும் சோர்ந்து, உறக்கம் அவளை தாலாட்டியிருந்தது.
உடலின் உன்னதம் அளவிடற்கரியது!
உடலுக்குள் நுழைந்த அந்நிய பொருளை(எதுவாகினும்), ஒருநாளும் தனக்குள் வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை.
குறிப்பிட்ட நாட்களுக்குள் இயற்கையாகவே அவற்றைத் வெளித் தள்ளும்! இல்லை தனது மறுப்பினை எவ்வகையிலாவது உடலில் காட்டி நிற்கும்.
உடலின், முதல் முயற்சியில் பெருந்தோல்வி பெற்றிருக்க, வந்தவொன்று(வித்து) வகையான உரிய, உன்னத இருப்பிடம்(கருப்பை) தேடி, வாகாக அமர்ந்ததில், உடல் பெருங்கோபம் கொண்டிருந்தது.
உண்ட உணவை ஏழு தாதுவாக்கும் பணிக்கு, ஏக நாட்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
பணிகளின் பாரத்தால், தனக்கு தேவையற்றதை எடுத்து வெளியில் வீசக்கூட இயலாது என உடலின் அறிவு யூகித்தது.
அதனால் உரியவள் உண்டதையே வெளித்தள்ளி, தனது பணியிடைவெளிக்கான பாதையை அடைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.
ஆம், யுகேந்திரனின் விதை, யாழினியெனும் நிலத்தில் துளிர்த்திருந்தது.
அதை ஏற்க இயலாமல் என்பதைவிட, தனக்குள் வந்து விழுந்த விதை, தனக்கு ஆக்கு செய்யுமா? இல்லை தன்னையே அழிக்குமா? எனப் புரியாமல், உடல் நடத்தும் தற்காப்புத் தாக்குதல் தொடங்கியிருந்தது.
நடக்கும் போரின் தன்மை அறியாத போர்க்களம் துவம்சமாகி, துவண்டிருந்தது.
பெண் துவண்டிருந்தாள்!
வந்தவன் போட்டியில் வெல்லும்வரை (பெண் பிரசவிக்கும் காலம் வரை), போர்க்களம் தடுமாற்றத்தையே சந்திக்கும்.
சந்ததி வெளிவரும்வரை சத்தமில்லாத சதிராட்டங்கள் தொடரும்!
காலை பத்தரை மணிக்குமேல், ஆத்திரத்திலும் அடக்க முடியாதவனின் உந்துதலால், படுக்கையிலிருந்து எழுந்தாள் பெண்.
நேரம் பார்த்தவளுக்கு இரண்டு மணிநேரம் தன்னை மறந்து உறங்கியதை எண்ணி ஆச்சர்யம் வந்தது!
அத்தோடு காலையில் செய்திருந்த இட்லியை வேண்டா வெறுப்பாக உண்டிருந்தாள்.
உடலின் முடிவுடன், அவற்றின் வெறுப்பு தந்த விரையமும் சேர்ந்திருந்தது. இருவரும் கைகோர்த்து உணவை வெளித் தள்ளியிருந்தனர்.
உடலில் மொத்த சக்தியும், வடிந்து, வாடித் தோய்ந்தாள் பெண்!
தொண்டையின் வழியே வெளியேறியவர்கள் பொறுமையின்றிப் பயணித்ததன் விளைவால் உண்டான, வறட்சி ப்ளஸ் எரிச்சல் தணிக்க, வெந்நீரை வைத்து, இரண்டு மிடறு இறக்கினாள்.
தொண்டை இதமாக உணர்ந்தது!
உடலின் தெளிவு விழிப்புநிலை! அதனால் அதையும் உடனே அதிவேகமாக வெளித் தள்ளியிருந்தது.
இருமுறை அடுத்தடுத்த வந்த வாந்தியினால், மிகுந்த களைப்பாக உணர்ந்தாள்.
களைப்பைக் களைய முகத்தைக் கழுவியவளுக்கு, ஏனோ மனதின் ஓரத்தில் பயம் முளைவிட்டது.
‘ஃபூட் பாய்சனா? இல்லையே நேத்து சாப்பிட்டவைங்க யாரும் வெளிவரலயே! அப்போ ஏன் எனக்கு திடீர்னு இப்டி நடக்குது, என்னவாக இருக்கும்? எதனால் இப்படி வாந்தி?’ என யோசனை ஒரு புறம்!
மனம் நினைத்தாலும், அதற்கு மேல் திராணியில்லாததால் எதையும் நினைக்கத் துணியவில்லை.
அசதி மறுபுறம்!
நடக்கவே திராணியற்றவள் போல, நடந்து வந்து படுக்கையில் படுத்திருந்தாள்!
யுகேந்திரனை அழைக்க… மனம் எண்ணினாலும், பணிக்கிடையே தொந்திரவு செய்ய மனமில்லாமல், தாயிக்கு அழைத்திருந்தாள் யாழினி.
“அம்மா…!”, என்ற மகளின் ஜீவனில்லாத்தாத அழைப்பில் அரண்டிருந்தார், சரிதா.
“என்னம்மா? என்ன செய்யுது?”, சரிதாவின் குரலில் பதற்றமிருந்தது.
காலையில் இருந்து தற்போதுவரை, தனது உடலுக்கு நேர்ந்த ஊறுகளை, ஒருவழியாக தாயிடம் கூறினாள் யாழினி.
மூன்று மக்களைப் பெற்றவர். மகளின் பேச்சில், அவளின் அடுத்த அத்தியாயத்திற்கான பிள்ளையார் சுழி இட்டதை உணர்ந்தவர், நாள் கணக்கை கேட்டு, கணித்துவிட்டார்.
யூகமாக கணித்தவர், அத்தோடு இல்லாமல் மகளிடம், “கிட்டு மெடிக்கல்ல கிடைக்கும். முடிஞ்சா உங்க வீட்டுக்காரர்கிட்ட வாங்கிட்டு வரச்சொல்லி, செக் பண்ணு!”, என்று கணிப்பை உறுதிசெய்யும் வழிமுறையைக் கூறியிருந்தார்.
“நாளைக்கு வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன். உடம்பை பத்திரமா பாத்துக்க!”, என்று கூறிய சரிதா, மகிழ்ச்சியில் மனம்விட்டு மகளோடு சற்றுநேரம் பேசிவிட்டு, “உங்க மாமியார்கிட்ட இப்போ எதுவும் சொல்லாத… கிட்டுல பாசிட்டிவ்னு வந்தாலும், டாக்டர்கிட்ட போயி காமிச்சிட்டு வந்து சொல்லிக்கலாம்”, என்றுவிட்டு அலைபேசியை வைத்திருந்தார்.
கணிப்பை பெரியவர்களிடம் கூறி, உண்மை வேறாக இருந்தால், அதனால் உண்டாகும் கசப்பை, உறவுகளுக்கு இடையே வளர்த்துக் கொள்ள பிரியமில்லாததால், அனுபவம் அவரை, மகளிடம் அவ்வாறாகக் கூறச் செய்திருந்தது.
அலைபேசியை வைத்தவுடன், சற்றுநேரம் படுக்கையில் படுத்திருந்தாள்.
விடயம் அறியாதவரை மனதில் இருந்த குழப்பம், விடயமறிந்தபின் போயிருந்தது.
இலேசாக உணர்ந்தாள்!
இருப்பு கொள்ளாமல் தவித்தாள். உடனே உண்மையறிய உள்ளம் ஆவலாய்ப் பறந்தது.
முன்பெல்லாம் தனித்து மார்க்கெட் சென்றுவரும் வழியில், ஏதேச்சையாகக் கண்டிருந்த மெடிக்கல் ஷாப் மனதில் வந்திருந்தது.
ஏறக்குறைய பத்து நிமிட நடையில் அடைந்து விடும் தூரத்தில் மெடிக்கல்ஷாப் இருப்பது நினைவிலாட, உடலசதியைப் புறந்தள்ளி, உற்சாகமாகவே எழுந்து கிளம்பியிருந்தாள், யாழினி.
////
வீட்டைப் பூட்டியவள், தங்களது ஃபிளாட் இருந்த இடத்திலிருந்து இருபக்கப் பாதைகளில், ஒருபக்க கிளைப் பாதை வழியே கிளம்ப, அதேநேரம் மறுபக்கத்தில் இருக்கும் முக்கிய சாலையில் இருந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் யுகேந்திரன்.
யாழினி சென்ற பாதையினை, பெரும்பாலும் யுகேந்திரன் பயன்படுத்தியது கிடையாது. வந்த நாள்முதலாய் முக்கிய சாலைப் பாதையை மட்டுமே யுகேந்திரன் பயன்படுத்தி வந்தான்.
கிளம்பியவள் மிகவும் நிதானமாகவே நடந்து சென்று, கிட்டை வாங்கித் திரும்பினாள்.
போகும்போது இருந்த வேகம், வரும்போது அவளிடம் இல்லை. ஆகையால் அரைமணித் தியாலத்திற்கும் அதிகமான நேரம் கடந்தே வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.
அதுநேரம் வரை, யாழினியை எதிர்பார்த்திருந்தவன், வராதவளைக் காண, வீட்டைப் பூட்டிவிட்டு, கீழே வந்திருந்தான்.
தான் வந்த பாதையை நோக்கி நின்றவாறு, மனைவியின் வரவை எதிர்பார்த்து, கண்ணுக்கெட்டும் தூரம்வரை கண்களால் மனைவியைத் துளாவியிருந்தான்.
அதேநேரம் மறுபுறமிருந்த பாதையின் வழியே வீட்டிற்கு வந்தவள், பூட்டிய வீட்டைத் திறந்து, நேராக தங்களது அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
கிட்டின் உதவியோடு, கணிப்பை உறுதிசெய்ய முயன்று, பாசிட்டிவ் என அறிந்து கொண்டாள்.
மகிழ்ச்சியின் மனமெங்கும் பூரிப்பு!
கணவனைக் காண மனம் ஏங்கியது!
குழந்தை விடயத்தைக் கூறி, அவனின் தோளில் இளைப்பாற, மனம்… கொண்டவனைத் தேடியது!
கை,கால் அலம்பிய புத்துணர்வோடு, மனதில் உண்டான மகிழ்ச்சியும் சேர, உடல் அசதியோடு வந்து படுக்கையில் படுத்திருந்தாள்.
படுத்தவள் உடனே அசந்து உறங்கியிருந்தாள்!
கண்ணுக்கெட்டும் தூரம்வரை காணாதவளை நொந்தவாறு, “வெயில்ல போயி, உடனே வாங்கற அளவுக்கு என்ன அவசரம்? வந்தவுடனே எங்கிட்ட சொன்னா வாங்கித் தரப்போறேன்”, என்று தன்னவளை ஏசியபடியே வீட்டிற்கு திரும்பியிருந்தான் கணவன்.
பூட்டிய அறைக்குள் யாழினி உறங்குவதை அறியாமல், கதவைத் திறந்து வந்து, ஹாலில் மீண்டும் அமர்ந்தவன் உள்ளம், அமைதியில்லாமல் இருக்கவே, கையில் இருந்த அலைபேசியில் மனதைத் திருப்பியிருந்தான்.
இருபுறத்திலிருந்தும் பூட்டித் திறக்கும் வகையில் செய்யப்பட்ட கதவு என்பதால், இருவராலும், மற்றவர் வந்ததை கண்டு கொள்ள இயலவில்லை.
யாழினி அடுக்களை அல்லது டைனிங்டேபிளின் பக்கம் சென்றிருந்தால், கணவன் வீட்டிற்கு வந்ததை அறிந்து கொண்டிருப்பாள்.
வெளியிலிருந்து வந்தவுடன், நேராக தங்களது அறைக்குள் சென்று முடங்கியவளுக்கு எதுவும் தெரியாமல், உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
யுகேந்திரனோ, அறைக்குள் செல்லும் எண்ணமோ, தேவையோ இல்லாததால், ஹாலில் கிடந்த சோஃபாவிலேயே அமர்ந்திருந்தான்.
அறைக்குள் உறங்குபவளைப் பற்றி அறியாதவன், மேலும், ஒரு மணித் தியாலம் கடந்தும், வெளியே சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என்ற குழப்பத்தோடு, தனது வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு, வெளியே கிளம்ப ஆயத்தமானான்.
அதேநேரம் அறைக்குள் இருந்த, யாழினியின் அலைபேசியின் அழைப்பின் ஒலி கேட்டது.
யாழினியின் அலைபேசியை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றது நினைவில் இருக்க, ‘இந்த அம்மாவா கால் பண்றது? வெளிய போனவ… போனை வீட்ல வச்சிட்டு போயிருக்கா. இப்போ அவ எங்கனு கேட்டா நான் என்னனு பதில் சொல்றது?’, என்ற யோசனையோடு தனது தலையில் அடித்தபடியே, மனைவியின் செயலை எண்ணி கோபம் கொண்டவனாக, ஒருபக்கமாகச் சாத்தியிருந்த தங்களது அறைக்கதவைத் திறந்தவனுக்கு,
தங்களது படுக்கையில் படுத்து அயர்ந்து உறங்கும் மனைவியைப் பார்த்து, அதிர்ந்து, திகைத்திருந்தான்.
‘இவ? இங்க எப்டி? எப்போ வந்தா? நா இங்கதான இருந்தேன்! வீட்டுக்குள்ள எப்டி வந்தா?’, என்ற பல கேள்விகளோடு, ‘ஒரு வேளை நாந்தான் அப்பவும் தூங்குறவளைக் கவனிக்காம வெளியல்லாம் போயி தேடினேனா?’, என்று குழப்பம் வந்தது.
‘இல்லை… அப்ப அவ நிச்சயமா வீட்டுக்குள்ள இல்லை’, என்று சுற்றத்தை நினைவு கூர்ந்து தானாகவே தெளிந்து, ‘இந்தப் புள்ளைய காணாம்னு ஒருத்தன் வெளியே உக்காந்து தவியா, தவிக்க… ஹாயா வந்து சத்தமில்லாம தூங்கறதப் பாரேன்!’, என்று அலைபேசி சத்தம் கேட்டும் எழாமல் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து, எண்ணம் மனதில் ஓட, அலைபேசியை எடுத்திருந்தான்.
நினைத்தவாறே அவனது தாயார்தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
அம்பிகாவின் அழைப்பை ஏற்றுப் பேசியவன், “சொல்லும்மா…”, என்க
எதிர்பாராத மகனின் இருப்பை உணர்ந்தவர், “என்னடா தம்பி இந்த நேரத்தில…! வீட்டுல இருக்க? இன்னிக்கு வேலைக்கு போகலையா?”, வழமையான கேள்வி
“ம் போயிட்டு வந்துட்டேன்மா”, என்று கூற
சற்றுநேரம் மகனிடம் பேசிவிட்டு, யாழினியிடம் போனைக் கொடுக்கச் சொல்ல, “அவ தூங்கிட்டு இருக்காமா!”, என்றான்.
“என்னடா சொல்ற? அந்தப் புள்ளை பகல்ல தூங்காதே! உடம்புக்கு ஏதும் முடியலையோ? என்னவோ? தொட்டுப்பாரு!”, என்க
தாயின் பேச்சைத் தட்ட இயலாமல், அசந்து உறங்குபவளை யோசனையோடு பார்த்தபடியே, அவளின் தலையில் மெதுவாக தனது கைவைத்துப் பார்த்தான்.
உடலின் இயல்பான வெப்பத்தை உணர்ந்தவன், “ஒன்னுமில்லை. சும்மாதான் தூங்குறாபோல! அவளை எழுப்பவா?”, எனுமுன்
பூட்டிய வீட்டிற்குள் இருந்த அரவத்தில், மிக அருகே கேட்ட பேச்சு சத்தமும், யுகியின் இதமான தொடுதலும் அவளை எழுப்பியிருக்க, பதறியெழுந்தாள் பெண்.
அதற்குள், “நான் அப்புறம் கூப்பிடறேன்மா!”, என்று அலைபேசியை வைத்துவிட்டு மனைவியை யுகி எதிர்கொள்ளும்முன்,
“நீங்க எப்ப வந்தீங்க?”, என்று கணவனைப் பார்த்துக் பதறிக் கேட்டவள், கணவன் உடைமாற்றியிருப்பதைக் கண்டு, கணவன் வந்து வெகுநேரம் ஆனதை உணர்ந்தாள். அத்தோடு அவன் வந்ததுகூடத் தெரியாமல் தான் உறங்கியதாக எண்ணி, “வந்தவுடனே என்னை எழுப்பறதுக்கென்ன?”, என்று கணவனையே அதட்டியிருந்தாள்.
“ஏய்…! முதல்ல… நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு! எங்கடீ நீ போயிருந்த? எப்ப வந்த? எப்டி வந்த?”, என்ற அடுத்தடுத்த கேள்விகளுடன் கூடிய கணவனின் அதட்டலில், யுகேந்திரனின் கோபமுகம் கண்டு பேசாமல் அமைதியாகியிருந்தாள்.
ஆனாலும் சிரித்த முகம் மாறாமல், கணவனைப் பார்த்தவளை, “மனுசனை பீதியாக்கி திரியவிட்டுட்டு, ஹாயா வந்து தூங்கினதும் இல்லாம, என்னையே கேள்வி கேக்குற?”, என்று கோபம் மாறாமலே யுகி கேட்க
‘நாம வெளியில போனதை இவருகிட்ட யாரு சொல்லியிருப்பா?’, என்ற எண்ணத்தோடே அமர்ந்திருந்தவள், கணவனின் பேச்சைக் கேட்டு, “திரிஞ்சீங்களா? எங்க போயீ திரிஞ்சீங்க? பாத்தா அப்டித் தெரியலயே?”, என்று பார்வையில் கணவனை ஆராய்ந்தவள், “அதெப்படி நான் வெளிய போனது உங்களுக்குத் தெரியும்?”, என்று குறைந்த குரலில் கணவனிடம் நேரடியாகக் கேட்டாள்.
தான் வந்தது முதல் நடந்ததை மனைவியிடம் கோபமாகவே கூறியவனின் வார்த்தைகளை முதலில் அமைதியாகக் கேட்டு, ஒருவழியாக உண்மைநிலை யூகித்தவள், தான் எதற்காக வெளியில் செல்லும்நிலை வந்தது என்பதை, தலைகுனிந்தவாறே நாணத்தோடு கூறியிருந்தாள்.
அதுவரை ருத்ரதாண்டவ கோலத்தில் காட்சியளித்தவன், மனைவியின் பேச்சில் உண்மை நிலை அறிந்து சாந்த சொரூப வேடம் தரித்து இலகுவாகியிருந்தான்.
கணவனின் திடீர் அமைதியைப் பார்த்தவள், “அதென்ன? இவ்வளவு நேரம் பயங்கர கோபமா இருந்துட்டு, டக்குனு ஆஃப் ஆயிட்டீங்க?”, கிண்டல்
கிண்டல் தொனியினை உணர்ந்தவன், “ம்… ஏன்னு சொல்லுவேன்!”, மறுகேள்வி கேட்டிருந்தான்.
“ஏங்க… நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, ஏங்கிட்டயே, நீங்க மாறுனதுக்கான காரணம் கேட்டா? என்னங்க அர்த்தம்?”, குழப்பம்
மனைவியின் தற்போதைய வார்த்தையில் கவனமில்லாமல் இருந்தவன், தங்களது வரப்போகும் வாரிசை எண்ணி, “ரொம்ப சந்தோசமா இருக்கு யாயு!”, என்று தனக்குத் தோன்றியதை, குடித்தவன் போல நிதானமில்லாமல் பேசத் துவங்கியவனை, “இப்பவே இப்டினா. ஜூனியர் வந்தா இன்னும் எப்டி ஆவீங்க?”, என்று சீண்டியிருந்தாள்.
சீண்டியவளை, தன் இதய ஓட்டத்தின் சத்தம் கேட்கும் வகையில். தன்னோடு இழுத்து அணைத்து, இதழால் இதமான அச்சாரங்களைத் தந்து விடுவித்தான்.
கணவனின் செயலில் செந்தாமரையாக முகம் மாறியிருக்க, மாறாத புன்னகையுடன், “துரை…! ஏமாத்து வேல நிறைய பாக்குறீங்க…! கேட்ட விசயத்துக்கு, இந்நேரம் வீட்டுக்கு கேக்கே வந்திருக்கனும். உம்மா குடுத்து, சும்மா ஏமாத்தக் கூடாது! இன்னும் பெருசா உங்ககிட்ட எதிர்பாக்கறேன்!”, என்று தனக்குத் தோன்றியதை மறைக்காமல் கேட்டாள்.
“உனக்கில்லாததா? எல்லாமே உன்னோடதுதான யாயு…! என்னல்லாம் வேணும்னு சொல்லு! சாயந்திரமா போயி வாங்கிரலாம்”, என்று அந்தக் கள்ளன் சிரித்தபடியே, இமயமலையின் அளவிற்கு, மனைவிக்கு ஐஸ் வைத்திருந்தான்.
“நல்லா பேசுறீங்க…! வாத்திசார்!”, என்று அவளும் அவனின் அணைப்பில் இருந்தபடியே கூற
“ஏய்… என்னடி? ஒரு நேரம் துரைங்கற, ஒரு நேரம் வாத்திசாருங்கற? வாத்தி வேற, சாரு வேறயா, ஏண்டி என்னை இந்தப்பாடு படுத்தற?”, என்று வினவ
“படுத்தறேனா? உங்களுக்கே இது அடுக்குமா? நீங்க என்ஜாய் பண்றது எனக்கு தெரியாதுன்னு அள்ளி விடாதீங்க!”, என்றவள், “எம்மனசுக்கு பிடிச்சமாதிரி ஆயிரம் முறை வச்சி கூப்பிடுவேன், அதையெல்லாம் ஏத்துக்கனும். இப்டி படுத்தறேன், கவுத்துறேன்னு வந்து, எதாவது பேசினா அப்புறம் அதை பிராக்டிகலா என்னனு காமிச்சிருவேன்!”, என்று சிரித்தபடியே மிரட்டியவள், கணவனின் அணைப்பைவிட்டு அகன்றாள்.
அதுவரை பசி உணர்வை உணராதவன், இப்போது உள்ள இலகுவான சூழலில், “சரி வா, சாப்பிடுவோம்”, என்றழைத்தான்.
கணவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்தவள், பசியெடுத்தாலும் உண்ணப் பயமான உணர்வோடு, உணவைக் கொரித்தாள்.
உணவுண்டு, அவன் எழவும், உண்ட உணவை இவள் வாந்தியெடுக்க டைனிங்கில் இருந்தவள் எழுந்து ஓடவும் சரியாக இருந்தது.
எழுந்து ஓடியவளைக் காணாதவன், அவளின் ஓங்கரிப்பு சத்தத்தில் அவளை நோக்கி, ஓடி வந்திருந்தான்.
எதை உண்டாலும், குடித்தாலும் வெளிவந்தது.
மனைவியின் நிலையை மாலை வரைப் பார்த்துப் பயந்தவன், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான். ‘நாளை செல்லலாம்’ என யாழினி எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை.
“டாக்டர், அவளுக்கு வாமிட் நிக்க எதாவது மாத்திரை கொடுங்க… எதுவுமே சாப்பிடல”, என்று துவங்கி, எதற்கும் யாழினி, யாழினியின் உடல்நிலை என்று பதறியவனைக் கண்ட மருத்துவர், “இப்டி சிலருக்கு இருக்கும் சார். அதுக்காக நீங்க ரொம்ப பயப்படாதீங்க”, என்று ஆறுதல் கூறி அனுப்பியிருந்தார்.
வந்தவள், அசதியில் படுத்தவுடன் உறங்கியிருந்தாள்.
அருகில் அமர்ந்து மனைவியைப் பார்த்தபடியே இருந்தவன், தாயிக்கு அழைத்து விவரம் கூறியிருந்தான்.
மகனின் பகிர்வில், மகிழ்ந்து போனவர், அடுத்த சில நாட்களுக்குப்பின் சென்னை கிளம்பி வந்திருந்தார்.
அம்பிகா ஒரு புறமும், சரிதா மறுபுறமும் யாழினியைத் தாங்க, அருகிலேயே வர இயலாதவனாக, பார்வையாலேயே மனைவியின் மாற்றங்களை பருகிய சந்தோசத்தைக் கொண்டு, நாட்களை சிரத்தையோடு கடத்தினான் யுகேந்திரன்.
“என்ன துரை…! வர வர… நீங்க மேன்லி லுக்குல அசத்துரீங்க! நான் லோன்லியா பீல் பண்ணி உங்களை நினைச்சே ஏங்கறேன்! கண்டுக்கங்க வாத்திசார்!”, என்று யுகேந்திரனின் மார்பில் முகம் புதைத்து சிரித்தவளை, வயிறு தடுக்க பின்னாலிருந்து கட்டிக் கொண்டான்.
“கண்டுக்காமலா இப்படியிருக்க?”, என்ற கணவனின் பேச்சைக் கேட்டவள்,
“அது அப்போ? இப்ப எங்க கண்டுக்கறீங்க? ரெண்டு பின்லேடியும், ஆளுக்கொரு பக்கமா உக்காந்துட்டு அதச்சாப்பிடு, இதச் சாப்பிடு, இப்டி செய்யாதனு என்னை வச்சு செய்யறதை பாத்து, கமுக்கமா சிரிச்சிட்டே எஸ்கேப்பு ஆகுறது, எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?”, என்று கணவனின் செயலைக் கண்டு கொண்டதை, அவனின் அடர்ந்து கருத்திருந்த மீசையை பிடித்து இழுத்தபடியே கூறினாள்.
“ஏய் வலிக்குதுடீ”, என்று அவளின் மீசையிலிருந்த கையைப் பிடித்து அதனிலிருந்து விலக்கியவன், அவளை விலக்காமல் கைவளைவில் விலங்கிட்டிருந்தான்.
தாயும், மாமியாரும், பார்த்துப் பார்த்துச் செய்தாலும், தனது பங்கினை விட்டுக் கொடுக்காமல், முன்வந்து செய்தான் யுகேந்திரன்.
ஏழு மாதம் நிறைவுபெறும் வரை, நிற்க இயலாமல், உண்டதை ஜீரணிக்க இயலாமல், துன்புற்றிருந்தவள், அதன்பிறகே சுற்றம் உணர்ந்து, தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ள முயன்றாள்.
சின்ன சின்ன தனது மாற்றங்களையும், கணவனை அழைத்துக் கூறி, அவனின் தனிமைத் துயர் போக்க முயன்றாள்.
நாட்கள் வேகமாகச் செல்ல, யாழினி, யுகேந்திரன் மனமொத்த வாழ்க்கைக்குரிய பரிசாக, அபினவ் எனும் ஆண்மகனை முதல் அதிசயமாகப் பெற்றிருந்தனர்.
முருகானந்தம், அம்பிகா இருவரும்… தனது பேரனைக் கவனிப்பதில் தங்களது பொழுதுகளை வண்ணமயமாகக் கழித்தனர்.
அவ்வப்போது சரிதா, ராஜேஷ் இருவரும் வந்து, தங்கள் மூத்த மகளின் மனமொத்த வாழ்வைக் கண்டு மனங் குளிர்ந்திருந்தனர்.
அபினவ், சேட்டை இல்லாமல், சுறுசுறுப்பு, துறுதுறுப்பு மிக்க குழந்தையாக இருந்தான்.
மகனுக்காக ஒவ்வொன்றையும், பார்த்து பார்த்து செய்து பரவசப்பட்டது பெண்மனம். மகன் வந்ததால் தனது எந்தப் பொறுப்பிலிருந்தும் விலகாமல், அனைத்தையும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டாள் யாழினி.
மகிழ்ச்சியும், குதூகலமும் குறைவில்லா நிலையில் குடும்ப வாழ்க்கை இனிதாக சென்றது.
//////////////
யாழினியின், இளைய தங்கைக்கு வரன் தேடும் படலம் துவங்கியிருக்க, பெற்றவர்களிடம், “என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த மாதிரியில்லாம, நல்லா மாப்பிள்ளைய விசாரிச்சு, பேசிப் பாத்து, எல்லாம் ஒத்து வந்தா, அப்புறம் கல்யாணத்தை முடிவு பண்ணுங்க”, என்று நேராகவே பேசியிருந்தாள்.
மகளின் மனதின் பழைய வலி, இவ்வாறு பேசச் செய்கிறது என்பதை உணர்ந்தவர்கள், யாழினியிடம் கருத்துகளை கேட்கத் துவங்கியிருந்தனர்.
ஒரு வழியாக வரனை தேர்வு செய்து, மூத்த மகளிடம் தெரிவிக்கவே, யாழினி, யுகேந்திரனிடம், ”ஏங்க, வாங்க நம்ம இரண்டு பேரும், அந்தப் பையன் வீட்டில நேருல போயி பாத்துட்டு வரலாம்”, என்று கணவனோடு கிளம்பிவிட்டாள்.
சென்றவள், கொஞ்சமும் தயக்கமின்றி, அனைவரையும், வைத்துக் கொண்டே, நேரடியாக, “எந்தங்கைய நீங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”, எனக் கேட்டாள்.
வரன் வாயைத் திறந்து, “எனக்கு சம்மதம் தாங்க”, என்று கூறிய பின்பும், அவனின் படிப்பு மற்றும் பணி பற்றி அனைத்தையும் அலசியிருந்தாள்.
யுகேந்திரனுக்கு, யாழினியின் செயலைக் கண்டு வருத்தமில்லை. அவள்பட்ட வேதனையை மற்றவர்களுக்கு நேராமல் காக்கும் விழிப்புமிகுந்த பெண்ணாகவே யாழினியைப் பார்த்தான்.
மனைவியின் செயல்பாடுகளை, மூன்று ஆண்டுகளில் ஓரளவு கணித்திருந்தான்.
அத்தோடு விடாமல், “ஏங்க. நீங்க அந்தப் பையனுக்கு போன் பண்ணி, வரச் சொல்லி, எல்லாரும் சேர்ந்து வெளியே எங்காவது போயி சாப்பிடற மாதிரி அரேன்ஞ் பண்ணுங்க”, என்றவளை புரியாமல் பார்த்தவனை,
“போயிட்டு வந்து சொல்றேன். இப்ப நான் சொல்றதை மட்டும் செய்யுங்க”, என்றுவிட்டாள் பெண்.
தங்கையையும் ஊரிலிருந்து அழைத்து வரச் செய்திருந்தவள், இருவரின் இயல்புத் தன்மை, உணவு முறை போன்றவற்றை ஆராய்ந்து, மனதில் இருந்த சிறுதயக்கமும் மறைந்தபிறகே திருமணத்திற்கு முழுமனதாக ஆதரவு தெரிவித்திருந்தாள்.
தங்கையின் திருமணத்தில் தங்களின் முதல் அதிசயத்தோடு, குடும்பமாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
பெற்றவர்களும், மகளின் நடவடிக்கைகளைக் கண்டு மனதிற்குள் மெச்சிக் கொண்டனர்.
அம்பிகா, முருகானந்தம் இருவருக்குமே, மருமகளைப் பற்றி சற்றே பெருமைதான்.
எதற்கெடுத்தாலும் ‘எங்க யாழினி அப்டி செய்யும்’, ‘எங்க யாழினிக்கு தெரியாத விசயமே இல்லை’, ‘எங்க யாழினி மாதிரி ஒரு புள்ளைய எந்த ஜில்லாவுலயும் பாக்க முடியாது’, என்று இன்னும் அதிகமான யாழினியின் புராணங்களை, செல்லும் இடம் அன்றி, பார்க்கும் அனைவரிடமும் கூறுவதில் இருவருக்குமே அதீத திருப்தி.
இருவரின் பாராட்டுதல், மெச்சுதல் தெரிந்திருந்தாலும், தலைக்கனம் இல்லாதவள். ஆகையால் எந்தப் பாராட்டுதலையும் தனது தலையில் ஏற்றிக் கொள்ளாதவள்.
இரண்டாவது மகளின் திருமணத்தினை, மூத்த மகளின் ஒத்துழைப்போடு இனிதாக நடத்தியதில், பரம திருப்தியுடன் இருந்தனர் சரிதா, ராஜேஸ் தம்பதியினர்.
ஆண்பிள்ளை இல்லாத வீட்டில், ஆண் பிள்ளையாகவே மாறி தனது பொறுப்புகளை தட்டாமல், தங்குதடையின்றி செய்திருந்தாள்.
குடும்பத்து உறுப்பினர்கள் அன்றி, கிராமத்தில் நடக்கும் விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும், தனது பங்கினை பாங்காக செய்வதில் ஈடு இணையற்றவளாகத் திகழ்ந்தாள்.
ஊரே வியக்கும் வண்ணம், தனது மனதாலும், அன்பான பேச்சாலும் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தாள்.
///////////
ஆண்டுகளின் வேக ஓட்டத்தில், அவர்களின் அன்னியோன்ய வாழ்க்கையின் அடுத்த அதிசயமாக பெண் மகவை ஈன்றிருந்தாள் யாழினி. அதற்கு தியாஸ்ரீ என்று பெயரிட்டிருந்தனர்.
அபினவ், யுகேந்திரனைப் போல சாயலில் இருந்தாலும், தாயுடன் அதிக ஒட்டுதலோடு வளர்ந்தான்.
தியாஸ்ரீ, தனது தாயைக் கொண்டிருந்தவளுக்கு… யுகேந்திரனைத் தவிர, வேறு யாரையும் தன்னுடன் அண்ட விடமாட்டாள்.
யாழினியின் கடைசித் தங்கைக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தனர், யாழினியின் பெற்றோர்.
மூத்த தங்கைக்கு செய்ததைப் போலவே, இளைய தங்கைக்கும் வரன் பார்த்ததில் இருந்து, ஒவ்வொரு நிலைகளிலும் தனது பங்காக, எந்தக் குறையும் வராமல் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாள் யாழினி.
யாழினியின் பெற்றோர் இருவரும், மாதம் ஒரு முறை சென்னை வந்திருந்து… பத்து தினங்கள் பெரிய மகளின் பிள்ளைகளோடு தங்கியிருந்து, நேரம் செலவளித்து மகிழ்ந்திருந்தனர்.
பிள்ளைகளும் சற்று வளர்ந்திருந்தனர். ப்ளே ஸ்கூல், கேஜி இவற்றில் குழந்தைகளை விட யுகேந்திரன் அனுமதிக்கவில்லை.
யாழினியும் கணவனின் சொல்லிற்கு மறுப்பு கூறவில்லை.
குழந்தைகளை கவனிக்க பெரியவர்கள் வீட்டில் இருக்க, தினசரி கோலாகலமாக, கொண்டாட்டத்துடன் நாட்கள் சென்றிருந்தது.
நீதிக் கதைகள், போதனைகள், இலகுவான எழுத்துப் பயிற்சி, ரைம்ஸ் படித்தல் என குழந்தைகளுக்கும் நாட்கள் புதுவிதமாகக் கழிந்தது.
பகல் முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால், மாலை வேளைக்குப் பின் யுகேந்திரன் பிள்ளைகளை வெளியே அழைத்துச் சென்று வருவான்.
குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள சிறுபிள்ளைகள் பள்ளிவேனில் எறி பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து, தாங்களும் பள்ளிக் செல்ல வேண்டி… அழுது, அடம்பிடித்தனர்.
ஆனாலும் யுகேந்திரன் அசைந்து கொடுக்கவில்லை. நாட்கள் அதன் போக்கில் சென்றன.
அபினவ்விற்கு, அவனின் ஆறு வயதில் நேரடியாக முதல் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தனர்.
BRTயாக பணிபுரிவதால், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தரம் உணர்ந்திருந்தான். இலகுவாகவே ஆரம்பக் கல்வியை முறையாக கொடுக்க எண்ணி, பள்ளி செல்ல ஏங்கிய மகனை, (KV)கேவியில் சேர்த்திருந்தான் யுகேந்திரன்.
கேவியில் சேர்ந்தவன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தவர்களைப் போல, மனதால் நிறைவாக எண்ணி, பள்ளி செல்ல துவங்கியிருந்தான், அபினவ்.
தினசரி பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளைத் தாயோடு பகிர்ந்து கொள்வான்.
பாட்டி, தாத்தாவிடம் கதைகள் கேட்ட காலம் போயிருக்க, அபினவ் கதை சொல்லிக் கேட்கும் காலம் வந்திருந்தது.
குறைவற்ற குழந்தைகள் இறைவனின் பரிசு. அக்குழந்தைகளை மாசற்றவர்களாய் வளர்ப்பதில் பெரும்பங்கு குடும்பங்களையே சாரும்.
பெரியவர்கள் நால்வரும், மாசற்ற மாணிக்கங்களாய் குழந்தைகள் வளர அஸ்திவாரத்தை ஆழமாகப் போட்டிருந்தனர்.
ஆர்வத்தோடு, ஆசையாகப் பள்ளிக்குச் சென்று வரும் அபினவ், நாளொரு புதிய விடயத்தை வீட்டில் பகிர்ந்ததைக் கேட்ட… அவன் தங்கை தியாவும், தன் தந்தையிடம் பள்ளியில் சேர்த்து விடக் கூறி மன்றாடினாள்.
தனது மகள் கூற அப்பீலே என்ற நிலையில் இருக்கும், யுகேந்திரன், இந்த ஒரு விடயத்தில் மட்டும் தனது முடிவை மாற்றிக் கொள்ள பிரியப்படவில்லை.
இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் தியாஸ்ரீ செய்த சேட்டைகளைக் கண்டு குடும்பமே பயந்திருந்தது. அவளின் நோக்கம் புரிந்தாலும், யாரும் தங்களது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த தியாஸ்ரீயும், குதூகலக் குயிலாக மாறியிருந்தாள்.
அதுவரை யுகேந்திரனோடு யுத்தமிட்டுத் தோற்றவள், அதன்பின் தந்தைக்கு முத்தமிட்டு தனது மகிழ்ச்சியைக் காட்டுகிறாள்.
குழந்தைகளின் வளர்ப்பிலும், கணவனின் அன்பிலும், பெரியவர்களின் அரவணைப்பிலும், அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்றவளாய், மலையளவு மகிழ்ந்திருந்தாள், யாழினி.
ஆரம்ப நிலைக் கல்வி, அவசரகதியில் இல்லாமல் அமைதியாக, இலகுவாகக் குழந்தைகள் கற்க ஏதுவாக வீட்டில் எளிமையாகவே பயிற்சி அளித்தனர்.
மாலை முழுவதும் கண்டிப்பாக விளையாட்டு. அதன்பின் ஒரு குளியல், படிப்பு, சாப்பாடு, உறக்கம் என பிள்ளைகளை பெரியவர்களின் வழிகாட்டலோடு… ஒழுங்கோடு வளர்ந்திருந்தனர்.
வீட்டிலேயே தாய், தந்தை இருவரும் பிள்ளைகளின் படிப்பைக் கவனித்துக் கொண்டனர்.
யாழினி, யுகேந்திரனின் திருமண வாழ்வு துவங்கி பத்து ஆண்டுகள் அமோகமாகச் சென்றிருந்தது.
யாரும் எதிர்பாரா நிகழ்வாக, பெரியவர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்யும் நிகழ்வு நடந்திருந்தது!
———————
நிகழ்வு எத்தகையது?
அடுத்த அத்தியாயத்தில்…