Magizhampoo Manam9

மகிழம்பூ மனம்

மனம்-9

யாழினியின் இளைய தங்கைக்கு வளைகாப்பு விழா. விழாவினை விமரிசையாக நடத்த வேண்டி, யாழினியை, தனது கை உதவிக்கு, இரண்டு நாட்கள் முன்பே ஊருக்கு அனுப்பி வைக்குமாறு, அம்பிகாவிடம் கேட்டிருந்தார் சரிதா.

அம்பிகாவும், இதுவரை எதையும் தன்னிடம் கேட்டிராத சம்பந்திக்காக, தங்களால் ஆன உதவியைச் செய்ய முன்வந்திருந்தார்.

சரிதாவிற்கு சற்று உடல்நலக் குறைபாடு காரணமாக, மகளை உதவிக்கு அம்பிகாவிடம் கேட்டிருக்க, அம்பிகாவும் சரியென்றிருக்க, யாழினியாலும் தட்ட இயலவில்லை.

பிள்ளைகளோடு சென்றால், பிள்ளைகளைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதை அறிந்து, ‘சைலன்டா ஒன்னு, வயலன்டா இன்னொன்னுன்னு… கைக்கு ஒன்னா வச்சிட்டு, இந்த அம்மாவிற்கு உதவி செய்யனும்னா? எப்படி உதவி செய்ய?’ என எண்ணிக் குழம்பியிருந்தாள் யாழினி.

யாழினியின் முகவாட்டம் எதனால் என்பதை சரியாக யூகித்த, அவளது மாமியார், “இப்பவே எதுக்கு மனசைப் போட்டுக் குழப்பற, தோது எப்டியிருக்குனு அப்ப பாத்துக்குவோம்”, என்றுவிட்டார் அம்பிகா.

நாளும் நெருங்கவே, பிள்ளைகளை அம்பிகா பார்த்துக் கொள்வதாகச் சொல்ல, விழாவன்று காலையில், விரைவாக அனைவரையும் கிராமத்திற்கு கிளம்பி வந்துவிடுமாறு கூறிவிட்டு, யாழினி மட்டும் இரண்டு நாட்கள் முன்பே கிளம்ப முடிவு செய்திருந்தாள்.

 

கணவன் மற்றும் பிள்ளைகள் இருவரையும் மாமியாரிடம் விட்டுவிட்டு, தனியே ஊருக்கு செல்வதாக, திருமணத்திற்குப்பின் முதன் முதலில் திட்டமிட்டு இருக்கிறாள் யாழினி.

யாழினிக்கும் பிள்ளைகளைப் பிரிவதில் மிகுந்த வருத்தம்தான்.  ஆனால் வேறுவழியில்லாததாலும், இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்றும் தன்னையே சமாதானம் செய்திருந்தாள்.

முந்தைய நாள் இரவு படுக்கைக்கு செல்லும்போது, கணவனும், மகனும் முகத்தைத் தூக்கி வைத்திருக்க, புரிந்தாலும், புரியாதவளாக மகனின் அருகில் சென்று தலையைத் தடவியபடியே, “ஏன் அபி! நேரமாகுதே… உனக்கு இன்னும் தூக்கம் வரலையா?”, என்றும் விரைவாக உறங்கிவிடும் மகன், இன்னும் உறங்காமல், கன்னத்தை இரு கைகளாலும் தாங்கி, யோசனையோடு அமர்ந்திருக்க, அவனது கலக்கத்தை போக்க கேட்டாள்.

“ம்… டூ டேஸ்… நீங்க ஊருக்கு போயிருவீங்கனு, பாட்டி சொன்னாங்க, என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போயிருங்களேன்!”, என்று மகன் கெஞ்சல் குரலில், மனதில் தோன்றியதை மறையாமல் தாயிடம் கேட்க,

மனம் வருந்தினாலும் அதைக் காட்டாமல், “பாப்பாவை பாட்டியால மட்டும் கவனிச்சுக்க முடியாதுல்ல கண்ணா, அதான் உன்னையும் இங்க விட்டுட்டுப் போறேன்”, என்று மகனின் கன்னம் வழித்து கைகளில் திருஷ்டி எடுத்தவள், அவனது பொறுப்பைக் கூறியதோடு, அணைத்துக் கொஞ்சினாள்.

“ம்… ம்… ம்மா… எங்க ரெண்டு பேரையும், உங்ககூடவே கூட்டிட்டுப் போயிருங்களேன்”, என்று மகன் செல்லக் கொஞ்சலோடு கெஞ்ச,

“இல்லைடா கண்ணா!”

“அங்க சரிதா பாட்டிக்கு முடியலனு… ஹெல்புக்கு அம்மாவை கூப்பிடறாங்க!”

“உங்களை எங்கூட அழைச்சிட்டுப் போனா… அம்மாவால அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது” “ஃபங்சன்கு இன்னும் டூ டேஸ்தான” 

“அன்னிக்கு நீங்க எல்லாரும் அங்க மார்னிங்கே வந்திருங்க, சித்தி ஊருல போயி ஃபங்சன் முடிச்சிட்டு, ஈவினிங் எல்லாரும் சேந்தே இங்க ரிட்டனாகிரலாம்” 

“நீங்க ரெண்டு பேரும் ரொம்பச் சமத்துதான!”, என்ற தாயின் பேச்சில் அரைமனது சமாதானத்துடன் அமர்ந்திருந்த மகனைக் கட்டிக் கொண்டு, “சரிதா பாட்டி பாவம்தான! இந்த ஒரு முறை மட்டும், நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க, இனி அம்மா உங்களைத் தனியா விட்டுட்டு எங்கையும் போகமாட்டேன், என்ன சரியா?”, என்ற கேள்வியோடு உறுதி கூறினாள் மகனிடம்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டு, வேலை செய்ததான பாவனையுடன், லேப்பின்(Laptop) முன் இருந்த கணவனைப் பார்த்தவள், “என்ன அபி அப்பா!  ஞாயித்துக்கிழமை காலையில சீக்கிரமா கிளம்பி, மார்னிங் ஃபிரேக்ஃபாஸ்டுக்கு அங்க இருக்குறமாதிரி வந்திறீங்களா?”, என்ற மனைவியின் பேச்சில், கணவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல்போகவே,

“என்னங்க… உங்களைத்தான்… நான் சொல்றது உங்களுக்கு கேக்கலையா?”, என்று கணவனைப் பார்த்துக் கேட்க, மனைவியின் முகம் பாராது, கோயில் மாடுபோல, தலையை மட்டுமே ஆட்டினான் யுகேந்திரன்.

ஏனோ மனதில் மின்னல்போல தேவேந்திரனின் செய்கை வந்துபோக, ‘குலத்துக்கே இப்டி.. ஆட்டு ஒரல்ல மாவட்டற மாதிரி தலையாட்டற குணமா?  நான் என்னமோ அவரு மட்டுந்தான் அப்டினுல்ல நினைச்சேன்’, என மனதிற்குள் எண்ணியவளாய், நீண்ட நாட்களுக்குப்பின் மனதில் வந்துபோன தேவாவை மனதை விட்டு ஒதுக்கினாள்.

யுகேந்திரனின் செயலில், இவளின் பேச்சின் மீதான, அவனது விருப்பமின்மையை உணர்ந்தாலும், அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை.

மூத்த தங்கையின் இரண்டாவது குழந்தை கைப்பிள்ளையாக இருக்க, அவளாலும் தன் தாயிக்கு வந்து உதவமுடியாத நிலை.  ஆகையால் தான் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில், இந்த இரவு நேர மாநாடு, படுமந்தமாக படுக்கையறையில் நடந்து கொண்டிருந்தது.

கணவனின் தன்னை நிமிர்ந்தும் பாராத தலையாட்டல் சொன்ன சேதியில் அறிந்துகொண்ட விருப்பமின்மையை உணர்ந்தவளுக்கு, ‘வெரி கேரிங் பெர்சனா இருந்த வாத்தி, வரவர ரொம்ப போரிங் பெர்சனா மாறிங்’, என தனக்குள் எண்ணிக் கொண்டபடியே, மகனை தன் மடியில் படுக்கவைத்து, தட்டி உறங்க வைத்திருந்தாள்.

கணவனின் தயவில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கையில் மகள் முன்பே உறங்கியிருந்தாள். இருவர் படுக்கும் வகையிலான அந்தப்படுக்கை அருகில் அமர்ந்து மகனை உறங்கச் செய்தவள், மகன் உறங்கியதும், மடியில் இருந்த மகனைத் தூக்கி, படுக்கையில் நன்றாக படுக்க வைத்தாள்.

ஊருக்கு செல்ல வேண்டியவற்றை எடுத்து வைத்துவிட்டு, காலைச் சமையலுக்குரிய சில பணிகளை முடித்துவிட்டு, படுக்கைக்கு வந்தாள்.

அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டு, பணி செய்வதாக அமர்ந்திருந்த கணவனை, தொந்திரவு செய்யாமல் வந்து, அவர்களது படுக்கையில் படுத்திருந்தாள்.

தனித்து ஊருக்குச் செல்வதை எண்ணியவளுக்கு, உறக்கம்… ஊர் தாண்டி ஓடியிருக்க, யோசனையோடு கண்களை மட்டும் மூடிப் படுத்திருந்தாள்.

படுத்து ஐந்து நிமிடங்களுக்குப்பின், விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கைக்கு வந்தவன், அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்.

வேலை வேலை என்ற ஓட்டம் ஒருபுறம், மக்களின்(குழந்தைகள்) பின்னே மறுபுறம் என்று மாதம் முழுமையும் மாரத்தான் மனிதனாக இருந்தவன், நீண்ட நெடிய நாட்களுக்குப்பின், இன்று தன்னைத் தேடி, நாடிய விந்தை, பெண்ணிற்குப் புரியவில்லை.

விளக்கை வழமைபோல அணைக்கிறான் என்று எண்ணி, அசையாமல் விழிமூடிக் கிடந்தவளுக்கு, எதிர்பாரா கணவனின் அணைப்பில்… மனதில் சிரித்துக் கொண்டே, “என்ன துரை?  இத்தனை நாளா லேப்போட லைஃப் கண்டினியூ பண்ணவரு காத்து… இன்னிக்கு என்ன திடீர்னு எம்பக்கமா அடிக்குது!”, என்று யாழினி தன் மனஏக்கத்தை மறைத்த குரலில், கிண்டலாகக் கேட்க,

“எப்பவுமே காத்து உம்பக்கந்தான்…!  அது உனக்கு தெரியாததுக்கு என்னால ஒன்னும் செய்ய முடியாது”, என கிசுகிசுப்பான குரலில் கூறியவன்,

தன் அணைப்பிலிருந்தவளை விடாமல், “சரி… லேப்ல எப்டி லைஃப் கண்டினியூ பண்றதுனு எனக்கு சொல்லித் தாயேன்?”, என்று கேட்டான்.

“தோ பார்டா… வாத்திக்கே வாத்தியா நானு!”, என கணவனின் கையணைப்பில் சத்தமில்லாமல் சிரித்தாள்.

“ஆமாடி வாத்திச்சி!”, என காற்றோடு பேசினான் அந்தக் காதலன்.

“பெரும்பாலும் அதோடதான போகுது, உங்க லைஃப்! அதைச் சொன்னா… ரொம்பத்தான் பேசுறீங்க…”, என்று சிணுங்கலோடு சிரித்தாள் பெண்.

“என் லைஃப், என்னிக்குமே என் வைஃப்தான்!”, என்று காதுமடலருகே வந்து கூறியவனின், இதழ் தீண்டல் மற்றும் மீசையின் குறுகுறுப்பில், உறங்கிக் கிடந்த அப்பெண்ணின் உணர்வுகளை, உரசி, எழுப்பத் துவங்கியிருந்தான்.

“ஆஹான். ரைமிங்கா… சும்மா ஜோரா போகுதுபோல.. உங்க லைஃப்”, என்றவள் திரும்ப எத்தனிக்கும்முன், தோசையைத் திருப்புவதுபோல, தனது வலிமையான கரங்களால் மனைவியைத் தன்னை நோக்கித் திருப்பியவன், குட்டி முயல் போலஇருந்த பெண்ணின் மார்புகளுக்கு இடையில் முகம் புதைத்திருந்தான்.

கணவனின் செயலில், ‘ஆங்’ என சற்றுநேரம் திணறியிருந்தவள், தன்னை நிதானித்து,

“என்னாச்சு வாத்தி, அடைக்கலம் தேடி வந்தவகிட்டயே, வந்து அடைக்கலமாறீங்களே! என்ன விசயம்?”, என குறைந்த குரலில் கணவனின் தலையை, தனது மார்போடு அணைத்தபடியே மெல்லிய குரலில் கேட்டாள் பெண்.

“ஏன்னு தெரியல யாயு… மனசெல்லாம் ஏதோ செய்யுது! ஏதோ என்னைவிட்டுப் போற மாதிரி!”, என்றவனின் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோலக் கேட்டது. 

அது அவன் முகத்தை மார்புக்குள் புதைத்துக் கொண்டதாலா? இல்லை அவன் மனதின் தடுமாற்றத்தாலா? இல்லை வரப்போகும் நாட்களின் தாக்கத்தை உணர்ந்ததாலா? என அப்பெண்ணால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அவளும் அரைகுறையாக விழுந்த வார்த்தைகளை உள்வாங்க முயற்சிக்கவில்லை.

தலையை மெதுவாக வெளியே எடுத்தவன் மனைவியின் முகம் நோக்கி, “நானும் உங்கூடவே வந்திரவா?”, என்ற குரலைக் கேட்டவளுக்கு, “இது வளந்த வாத்திக்கு அழகில்ல, சின்னப்புள்ளை கணக்கா வந்து… நானும் கூட வரேன்னு சொன்னா… என்ன அர்த்தம்!”, என்று செல்லமாய் மிரட்டலோடு காதைப் பிடிக்க

“பொய்யில்லை யாயு… நிஜமாத்தாண்டி கேக்கறேன்!”, என்று சொன்னவனை சுனாமிபோல, வேகமாக தன்னோடு இழுத்து முழுவதுமாக ஆவேசமாக அணைத்திருந்தாள் பெண்.

என்ன உணர்விது?  அவளுக்குப் புரியவில்லை.  உடலெங்கம் அதிர்வை உணர்ந்தாள். மனம் ஏனோ எதையோ சாதித்தது போன்ற நிறைவான உணர்வு.  நிச்சயமாக அவளால் வார்த்தைகளால் கூற முடியாத, பகுத்துணர முடியாத, பதமான உணர்வு அவளைக் ஆட்கொண்டிருந்தது.

இந்த வார்த்தையை ஒரு பெண், தன் கணவனின் வாய்மொழியாகக் கேட்பது அவ்வளவு எளிதல்ல!

திருமண வாழ்வு அனைவருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை.

அவளின் பரிவு, பாசம், பண்பு போன்றவற்றை, பதவிசாக பத்து ஆண்டுகள், பார்த்துப் பார்த்து, விதைத்ததை, இன்று அவனின் வார்த்தைகள் மூலமாகவும், அவளைத் தேடும் அவன் உடல்மொழி வாயிலாகவும், உள்ளார்ந்து உணர்கிறாள்.

‘எம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’, என்று மனைவி வீட்டிலிருந்து ஊருக்குச் செல்வதாகக் கூறி, மறைந்த மறுநிமிடம் குதூகலிக்கும், குடும்ப வாழ்க்கை உணரா ஆண்கள் நிறைந்த சமுதாயத்தில், ஊருக்குச் செல்பவள் பின்னே, ‘நானும் உன்னுடன் வருகிறேன்’, என்று நிற்பவனிடம் என்ன சொல்வாள்?

“நாளைக்கு காலையில பத்து மணிக்குதான், நான் ஊருக்கு போறேன். நடுவில ஒருநாள்.  அடுத்தநாள் காலையில கிளம்பி எல்லாரும் அங்க வரப்போறீங்க?

இதுக்காக நீங்க லீவு போடனும்.  பசங்களுக்கு லீவு சொல்லனும். 

நாமெல்லாம் ஊருக்குப் போயிட்டா… அத்தையும், மாமாவும் மட்டும் தனியா இங்க இருப்பாங்கள்ல…!

நம்மகூட நாளைக்கு போகும்போது கூப்பிட்டாலும் வரமாட்டாங்க!

அதான்…! நான் இதப்பத்தி உங்ககிட்ட கேக்கலை!

இடையில ஒரு நாளு தான…! சமாளிங்க…!”, என்று கூறி நிறுத்தியவள், சில நொடிகள் யோசனைக்குப்பின்,

“இல்லை, கூடவே நீங்க வரதுன்னா… எனக்கு ஒன்னுமில்லை. 

ஆனா, அத்தையும், மாமாவையும் நம்ம கூடவே கூட்டிட்டுப் போயிரனும்!

அதுக்கு, உங்களுக்கு ஓகேன்னா… எனக்கும் ஓகேதான்!”, என்று தனது முடிவை, தனக்குள் மூழ்கி, முத்தெடுக்கத் துடிப்பவனிடம் கூறினாள்.

“ம்…”, என்று ஆமோதித்தவன், அதற்குமேல் வண்டி நிற்கப் பிரியமில்லாமல், பயணப் பாதையை நோக்கி தேடலோடு கிளம்பியிருந்தது.

தேடல் சுகமானது.

இல்லாத ஒன்றைத் தேடுவது!

தொலைந்ததைத் தேடுவது!

இருப்பதை(உள்ளதை)த் தேடுவது!

உணர்ந்ததைத் தேடுவது!

உணர்ந்ததை, மீண்டும் உணர தேடத் துவங்கினான்!

நிதான பயணத்திற்கு வாய்ப்புகள் இருந்தாலும், வசதிகள் குறைவு.

குழந்தைகளுடன் ஒரே அறையில் இருப்பதை உணர்ந்து, யாழினியெனும் நேசக்கடலில், விரைந்து, மூழ்கி, முத்தெடுத்துக் களைத்திருந்தான்.

களைத்தாலும், விடியும்வரை தனது கைவளைவிற்குள் தன்னை விடாமல் வைத்திருந்தவனைப் புரியாமல் பார்த்தாள் பெண்.

சிறுகுழந்தையின் விளையாட்டுப் பொருளை உறக்கத்திலும் விடாது பிடித்திருப்பது போன்று, கணவனின் கைவளைவில் தான் இருப்பதாகத் தோன்றியது யாழினிக்கு.

 

யாழினியுடனான நல்உறவுக்குப் பின், முதல் பிரசவத்திற்குக் கூட யாழினியை தாய் வீட்டிற்கு அனுப்பாத, தயாளன் அவன்.

இரு குழந்தைகளின் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையில் மனைவியுடன் வந்து தங்கி, அவள் தோள் தாங்கியவன்.  சரிதாவும், அம்பிகாவும் இருந்தாலும், அவனது பங்கு அதிகமாகவே இருந்தது. இதுவரை எந்தக் குறையுமில்லாமல் கவனித்துக் கொள்பவன்.

இரு தங்கைகள் திருமணத்தின்போதும், குடும்பத்துடன் சென்று தங்கியிருந்து, நிறைவாக தங்களது பங்கினை, பக்குவமாக திருப்தியுடன் செய்து திரும்ப மூலமாக இருந்தவன்.

யாழினியும் இதுவரை எந்த விடயத்தையும், வாசல் தாண்டி வெளியில் எடுத்துச் செல்ல முயன்றதில்லை.

ஆடம்பரத்திற்கும், பகட்டிற்கும், பக்கமாக தலைவைத்துப் படுக்க விரும்பாதவள்.

இம்மெனுமுன் தாயின் வீட்டிற்கு கிளம்பும் பெண்களுக்கு மத்தியில், தனது, வாழ்வை, உரிமையை, அங்கிருந்து பொறுமையோடு, சாதித்துக் கொண்டவள் யாழினி.

நிறைவான வாழ்வினை, நிர்மூலமாக்க விதி செய்த சதி அறியாதவர்கள், நிஜத்தில் மகிழ்ந்திருந்தனர்.

///////////////

 

காலையில் பூமியின் மீது காதல் கொண்ட வருணபகவான், மழையாகப் பெய்திருக்க, இதமான சூழல்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியை பேருந்தில் ஏற்றிவிட்டு, பணிக்குக் கிளம்பியிருந்தான் யுகேந்திரன்.

யுகேந்திரன், காலையில் எழுந்ததும் போய் நின்றது, தனது தாயின் முன்புதான்.

தனது விருப்பத்தை நிறைவேற்ற, எவ்வளவோ முயன்றும், தோல்வியைத் தழுவி, முகம் வாடியிருந்தான்.

கணவனின் வாடிய முகமே, யாழினியால் அனைத்தையும் யூகிக்க முடிந்திருந்தது.

‘வாத்தி, ஓவரு ஹோப்புல போயி, ஆன்ட்டிகிட்ட ஆப்பு வாங்கிட்டாரு போலயே’, என நினைத்து, கணவனை நினைத்து வருந்தினாள் பெண்.  எதையும் தெரிந்ததுபோல காட்டிக் கொள்ளவில்லை.

வண்டியேற்றிவிட வந்தவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனிக்கும்போது, “உங்க ஊருக்குத்தான் அடிக்கடி பஸ்ஸிருக்கே யாயு”, என்றவனின் வதனத்தைக் கேள்வியுடன் நோக்கியவளைப் பார்த்து, அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் எங்கூடப் பேசிட்டு.. அடுத்த பஸ்ல போ யாயு!”, என்று கொஞ்சும் குரலில் கெஞ்சியவனிடம், முதன் முதலில் காதலனைக் கண்டாள், பெண்.

“வாத்தி… வர வர ஏதோ சரியில்லையே! என்னாச்சு திடீர்னு”, என்று கணவனைக் கிண்டல் செய்தாலும், மனதில் உண்டான மகிழ்ச்சி மழையில் உள்ளம் குளிர்ந்திருந்தாள்.

காதலிக்க வாய்ப்பில்லாதவள், அன்று காதலியாகப் பெருமை கொண்டாள்.

///////////

ஊருக்கு வந்தவள், கணவன் மற்றும் மாமியாருக்கு அழைத்து பேசிவிட்டு, பணிகளில் ஈடுபட்டிருந்தாள்.

காலையில் பேருந்தில் ஏற்றிவிட்டவன், இரவு எட்டு மணிக்குள், எட்டு முறைக்குமேல் அழைத்திருந்தான். கணவனை நேரில் முறைக்க முடியாமல், தலையை சுவற்றில் கொண்டு போய் முட்டும் அளவிற்கு போயிருந்தாள் பெண்.

“இதுக்கு நான் வராமலேயே அங்கேயே இருந்திருக்கலாம்.  மெனக்கெட்டு கிளம்பி வந்தும், ஒரு வேலை செய்ய விடல என்னை”, என்று நொந்திருந்தாள், கணவனின் அன்பான அழைப்பால்.

பிள்ளைகள் ஒருபுறம், கணவன் மறுபுறம், என அலைபேசியில் அழைத்து, ‘ஏண்டா கிளம்பி தனியா வந்தோம்’னு அவளை யோசிக்க வைத்திருந்தார்கள்.

//////////

காதலில் சிக்குண்டவனைப்போல, பசியில்லை என்று படுக்கப்போன மகனை வற்புறுத்தி, “இந்தப் பாலையாவது குடிச்சிட்டு படு, யுகி”, என்று குடிக்க வைத்திருந்தார் அம்பிகா.

பிள்ளைகளைக் கவனித்து உறங்க வைத்திருந்தான் யுகேந்திரன்.

ஒன்பது மணிக்குமேல் மனைவிக்கு அழைக்க எண்ணியபடியே, தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.

பிஸிக்கலி பிரெசன்ட், மென்டலி ஆப்சென்ட் என்ற நிலையில் அமர்ந்திருந்தவனை, அந்நேரத்தில் எழுந்த அழைப்புமணியின் ஓசை காதுகளை எட்டவில்லை.  எட்டாத தூரத்தில் இருந்த மனம், எதையும் உணரவில்லை. அதற்குள் தாயின் “யுகீ…”, என்ற அழைப்பு அவனை நடப்பிற்கு கொண்டு வந்திருந்தது.

தாயின் சத்தத்தைக் கேட்டு, “என்னம்மா”, என்று எழுந்தவனை, “என்ன பண்ணிட்டு இருக்க யுகி? ரொம்ப நேரமா காலிங்பெல் அடிக்குதுனு போயி கதவைத் திறப்பன்னு பாத்தா… நாங்கூப்டறதும் கேக்காம.. என்ன செய்யுற”, என சலித்துக் கொண்ட தாயிடம்

“பாக்கறேன்மா… நீ எழுந்து வரதா…”, என்று போய் யுகேந்திரன் கதவைத் திறந்து, “யாரு வேணும் உங்களுக்கு” என்று கேட்கவும், மகனின் வித்தியாசமான செயலைக் கண்ணுற்று படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து மகனின் பின்னே வந்த முருகானந்தமும், யுகியின் பின்னே நின்றபடி, “யாரு இந்நேரத்தில?” என்று கேட்கவும் சரியாக இருந்தது.

வாசலில் நின்றிருந்த, மெலிந்த, தாடியால் முழுவதும் மறைந்திருந்த முகத்துடன், ஒளி குறைந்த கண்களுடன், பாசப் பார்வையோடு நின்றவனை, எங்கோ பார்த்த ஞாபகம் ஆனால் யாரென அடையாளம் தெரியாமல், யுகேந்திரன் நிற்க

என்ன பதில் சொல்லவெனத் தெரியாமல் எதிரில் நின்றவனை காண வேண்டி, வழியின் நின்ற யுகேந்திரனை விளக்கி, “யாரு வேணும் உங்களுக்கு?”, என்று முருகானந்தம் கணீர் குரலில் மீண்டும் கேட்டிருந்தார்.

 நீண்ட நேரத்திற்குப் பின், “அப்பா…!”, என்ற ஜீவனில்லாத குரல்.

எங்கேயோ கேட்ட குரல்!

அதிகமாகக் கேட்டிராத குரல்!

உயிர் தீண்டி, முருகானந்தம் விசுக்கென நிமிர்ந்து எதிரில் நிற்பவனை துளைக்கும் பார்வை பார்க்க, தன்னைவிட முதுமை அண்டிய தோற்றத்துடன், தனது எதிரில் நிற்பவனை, சட்டென அடையாளம் தெரியாமல், குரலால் கணித்து,

“நீ…”, என்று எதிரில் நிற்பவனைக் கைநீட்டிக் குரல் சண்டித்தனம் செய்ய… கேட்க முனைந்தார்.

“தேவாப்பா…!”, என்று மெதுவாகக் கூறியவன் குரலில் ஜீவன் வற்றியிருந்ததை உணர்ந்தார்.

தேடித் தேடி கிடைக்காமல், இருக்கிறானா? இல்லாமல் போய்விட்டானா என மனதிற்குள் வைத்துக் புழுங்கிய கேள்விகளுக்கு விடையாக, எதிர்பாராமல், எதிர்பாரா வேளையில் கண்முன் வந்து நிற்கிறான்.

ஒரு கனம் கனவோ என்று கண்களைச் சிமிட்டி, தன்னைத்தானே சோதனை செய்து கொள்கிறார் பெரியவர்.

குற்றுயிராக… தனது குலக்கொழுந்து எதிரில் நிற்பதைப் பார்த்து, “அம்பி… இங்க வந்து பாரு… யாரு வந்திருக்கானு… சீக்கிரம் வா”, என்று குழந்தைபோலக் குதூகலமாக அழைத்தவரை, ஆச்சர்யமாகப் பார்த்தான் யுகேந்திரன்.

“நம்ம தேவாவா… இது?”, என்று அவனால் இன்னும் நம்ப முடியாமல் இமை சிமிட்டாமல் எதிரில் நின்றவனையே பார்க்கிறான்.

அதற்குள் அங்கு வந்த அம்பிகா முதலில் யாரென்று புரியாமல் விழிக்க, “அம்மா”, என்ற அழைப்போடு தாயின் கரம் பிடித்தவனின் குரல், கேட்ட மறுகனமே, “தேவா… வந்திட்டியா?  என்னப்பா… உனக்கு என்னாச்சு? ஏன் இப்டியாகிட்ட! எங்கிட்டோ சந்தோசமா இருக்கேன்னுல்ல நினைச்சிட்டு இருந்தேன். இப்டி வந்து நிக்கிறியே!”, என்று ஓடிச்சென்று மகனின் முகம் வருடி, இளைத்து, எலும்போடு ஒட்டிய தோலைத் தொட்டு, தொட்டுப் பார்த்து உயிர் வெறுக்கிறாள் அந்தத் தாய்.

அத்தோடு வந்தவனை பெரியவர்கள் வீட்டிற்குள் அழைக்க, தேவா மறுக்க, மறுக்க, முடிவில் பாசம் வென்றிருந்தது.

/////////////

சகஜமான வாழ்வு வாழ்ந்திருந்தவர்களை சங்கடப்படுத்த, நோயாளியாக திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தான், தேவா.

எதிர்பாரா நிலையில் மூத்த மகனைக் கண்ட பெற்றோர் இருவரும் மகனைக் கண்டு மகிழ்ந்திருந்தனர்.

அதேசமயம், நோயோடு உறவாடி, போராடி வந்தவனைக் கண்டு மகிழ்ச்சிக்கு இணையாக உள்ளம் நொந்திருந்தனர்.

யுகேந்திரன், உள்ளம் குமைந்து, குழப்பமாகியிருந்தான்.

குழந்தைகள் இருவரும் இலகுவாக இருந்தனர்.  பெரியவர்களின் நிம்மதி பறிபோயிருந்தது.

சென்னையில் உள்ள ஃபிளாட் தேவாவின் உழைப்பினால் வாங்கப்பட்டு, அவனது பெயரில்தான் இதுவரை இருந்தது.

தேவாவைக் கண்ட அம்பிகா, முருகானந்தம் இருவரும் மகிழ்ச்சியில் உறக்கத்தைத் தொலைத்திருந்தனர்.

ஏறத்தாழ, பத்து ஆண்டுகளுக்குப்பின், எதிர்பாராதவன், எதிர்பாரா நேரத்தில், எதிர்பாரா நிலையில் பூகம்பத்தைப் போல யுகேந்திரன் முன் வந்திருந்தான்.

ஒன்பது மணிக்கு மனைவியை அழைக்க எண்ணியிருந்த யுகேந்திரன், அவள் நினைப்பேயில்லாமல், தேவாவைப் பற்றி மட்டுமே சிந்தித்திருந்தான்.

 

வீட்டில் நடப்பதை எதுவும் அறியாதவள், தங்கையின் விழாவிற்கான ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.

விழா நாளோடு, விடியலும் வந்திருந்தது.

விழாவிற்கு செல்ல, சாக்குக் கூறி தவிர்த்த யுகேந்திரனை புரியாத பார்வை பார்த்த பெரியவர்கள், குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர்.

//////

விழாவிற்கு வராதவனை எண்ணியே, யாழினிக்கு மனம் தவித்திருந்தது.

“ஏன் அத்தை, அவருக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா?”, என்று கேட்க,

“ஏதோ வேலைன்னு கிளம்பினதால, இங்க வரமுடியலைனு உங்கிட்ட சொல்லச் சொன்னான்மா”, என்று மருமகளிடம் சமாளித்திருந்தார்.

மூத்த மகனின் வரவைப் பற்றி எதுவும் கூறாமலேயே, விழா முடிந்ததும், மருமகளுடன் சென்னைக்கு திரும்பியிருந்தனர்.

////

குழந்தைகளோடு, குதூகலமாக திரும்பியவளை வரவேற்க, திறந்திருந்த வீட்டில் கணவனை எதிர்பார்த்து நுழைந்திருந்தாள் பெண்.

எதிர்பாரா விருந்தாளி வீட்டில் இருப்பதை அறியாமலேயே, கணவனைத் தேடி நுழைந்தவளின் கண்ணுக்கு தென்பட்டது, ஹாலில் அமர்ந்திருந்த தேவாவைத்தான்.

புறத்தோற்றம் புதிய நபராகத் தனக்கு அடையாளம் காட்டிட, யாரெனத் தெரியாததால், தயங்கி நின்றவள், உடன் வந்த மாமியாரிடம்,

“யாரது… புதுசா… நம்ம வீட்டுக்குள்ள உக்காந்திருக்கிறது அத்தை?”, என்று மெதுவாகக் கேட்டிருந்தாள் யாழினி.

“நம்ம தேவா.. தான்மா!”, என்ற மாமியாரின் பதிலில், பூமிக்குள் புதைவதுபோலவும், நழுவிச் செல்லும்போது உடலெங்கும் கூசிச் சிலிர்த்ததைப் போன்றும் உணர்ந்தாள் பெண்.

வாயிலிருந்து வராத வார்த்தைகளோடு போராடி, ஒருவழியாக, “வாங்க”, என்று வரவேற்று, தன்னை நிதானப்படுத்த முனைந்தாள்.

தேவாவும், யுகேந்திரனின் மனைவியாக யாழினியை அங்கு எதிர்பார்க்கவில்லை.

வேறு பெண்ணை யுகேந்திரனுக்கு மணமுடித்திருப்பார்கள் என்றே எண்ணியிருந்தான்.

யாழினியை பற்றிய எண்ணமே அவனுக்கு இல்லை.

யுகேந்திரன் யாழினி வீடுதிரும்பும் வரை வீட்டிற்கே வரவில்லை.

வந்தவன், யாழினிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்து கொண்டான் யுகேந்திரன்.

மகிழம்பூவைப் போல குடும்பத்தை இனிமையாகவும், மகிழ்ச்சியோடும் வைத்திருக்கும் தன்மனதால்… அனைவரின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவளான யாழினி, தேவாவைக் கண்டதும், நிலை குலைந்து போனாள்.

தேற்ற வேண்டியவன் அருகில் வரவே யோசித்தான். என்ன செய்வதென்று யாழினிக்குப் புரியவில்லை. 

நடந்ததை பக்குவமாக தேவாவிற்கு எடுத்துச் சொல்ல மனதை ஆயத்தப்படுத்தினார், முருகானந்தம்.

தந்தை கூறும் முன்னே, குழந்தைகளின் அழைப்பினாலும், யுகேந்திரன், யாழினி இருவரின் நெக்குருகிய நடத்தையிலும், நடந்ததை ஒருவாராக யூகித்திருந்தான், தேவேந்திரன்.

நிச்சலமான மனதுடன், எந்த அதிர்ச்சியும் இல்லாமல் அனைத்தையும் இலகுவாகப் புரிந்து கொண்டான், தேவா.

தேவாவிற்கு, யாழினியை, யுகேந்திரனுக்கு மணம் முடித்ததில் கடுகளவு வருத்தமும் இல்லை.  தேவா தெளிவாக இருந்தான். 

யாழினிக்கோ, தாலிக்குரியவன் முன், மாலையிட்டதால் மனம் கவர்ந்த யுகேந்திரனுடன் பேசவே, ஏனோ கூச்சமாக இருந்தது.

வீட்டின் அமைதி களவாடப்பட்டிருந்தது.

யாழினியும், யுகேந்திரனும் நேரில் பார்ப்பது கூட அரிதாகி இருந்தது.  எதிர்பாராமல் நெருங்கிய வேளைகளில்கூட ஒருவரையொருவர் தர்ம சங்கடத்தோடு கடந்தனர்.

அண்ணனுக்கு மணம் முடித்து, பொறுப்பைக் கழித்துச் சென்றதால், உரிய வழியில் விவாகரத்து செய்திருந்த யாழினியை, தான் மணாட்டியாக ஏற்றிருந்தாலும், தமையன் முன்னே,  எப்படி அவளை அழைக்க, என்ன பேச.. எப்படிப் பேச? என மறுகினான் யுகேந்திரன்.

இருவருக்குமிடையே இரும்புத்திரையை உண்டாக்கியிருந்தான்.

மனைவியின் இயல்பான பேச்சுக்களைக்கூட கேட்க இயலாதவனாக மாறிப் போன கணவனை, மாற்றும்வழி அறியாது மனங் கலங்கியிருந்தாள் பெண்.

யாழினி, இருதலைக் கொள்ளியாகி இருந்தாள்.

இதற்கிடையே அமைதியாக வீட்டிற்குள் வளைய வந்த தேவா திடீரென மயங்கி விழுந்திருந்தான்.

———————

தேவாவிற்கு என்ன ஆனது? யாழினி, யுகேந்திரன் வாழ்வில் மாற்றம் வந்ததா?

அடுத்த அத்தியாயத்தில்.