Uyir kadhal 15

Uyir kadhal 15

உயிர் காதலே உனக்காகவே… 15
“ஏய்… இந்தாப்பா, பார்த்துப்போ… எங்க வந்து வண்டிய விடற?” மீன்பாடி வண்டியோட்டுபவனின் எரிச்சலும் கோபமும் கலந்த குரலில் சற்று சுதாரித்து தனது பல்சரை வளைத்தான் தனா. ஏதோ நினைவில் வண்டியைத் தாறுமாறாக நடுவே விடத்தெரிந்த முட்டாள்தனத்தில் சங்கடப்பட்டு மன்னிப்பு கேட்டான்.

“சாரிங்க…” வண்டியை நகர்த்திக் கொண்டு வந்தவனுக்கு இன்னுமே மனநிலை தெளியவில்லை. சற்று முன்பு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டு வாசலில் வந்து நின்ற ஹரிணியைப் பார்த்ததும் ஏனோ உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை வெலவெலத்துப் போனது அவனுக்கு.

வருடத்திற்கு இரண்டு மூன்று முறை வந்து போகும் தங்கைதான்… ஆனால் இந்த முறை…? அவளது முகமும் வெறுமையான குரலும் உணர்த்திய செய்தி அவ்வளவு உவப்பாக இல்லை. மாலையில் இருள் வந்து சேரும் நேரம் வீட்டு வாயில்மணி ஒலிக்க வெளியே சென்று கதவைத் திறந்து பார்த்தவன் ஹரிணியை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவனது அதிர்ந்த தோற்றத்திலேயே தெரிந்தது.

“ஹ… ஹரிணி. வா… வாங்க. நீ… எப்படி? த… தனியாவா? எ… என்ன திடீர்னு?” அவளைப் பார்த்த அதிர்ச்சியில் கோர்வையாக இல்லாமல் வார்த்தைகள் தந்தியடிக்க நின்றவனைப் பார்த்தவள்,

“என்னண்ணா உளர்ற? தனியா எங்க வந்திருக்கேன்? சுஜிகூடதான வந்திருக்கேன். உன்னைப் பார்க்கனும் போல இருந்தது. அதான் கிளம்பி வந்தேன். பெரியம்மா பெரியப்பா எங்க காணோம்?”
பேசியபடி அவனை சட்டை செய்யாமல் வீட்டுக்குள் வந்திருந்தாள். சுஜியும் பின்னோடு வர, கதவை அடைத்து விட்டு வந்தவனோ, “அம்மாவும் அப்பாவும் குலதெய்வம் கோவிலுக்குப் போயிருக்காங்கடா. ஏன் சித்தி உன்கிட்ட சொல்லலையா?”
இரண்டு நாட்களுக்கு முன்பு அலைபேசியில் பேசும்போது தன் தாய் கூறியது நினைவுக்கு வந்தது அவளுக்கு. பெங்களூருவிலிருந்து கிளம்பும்போது அவளுக்கிருந்த குழப்பத்தில் அதெல்லாம் நினைவுக்குகூட வரவில்லை. ஒரு வேகத்தில் கிளம்பி வந்தாயிற்று.

“ம்ம்… சொன்னாங்க. எனக்குதான் நியாபகமில்ல. அதுவுமில்லாம நான் உன்னை பார்க்கதான் வந்தேன்.”

“எ… என்ன விஷயம் ஹரிணிம்மா?”

“பசிக்குதுண்ணா. முதல்ல சாப்பிட எதாவது வாங்கி வா. காலையில சாப்பிட்டது. மதியம்கூட எதுவுமே சாப்பிடல.”

“ச… ச… சரிடா” என்றவன் வெளியேறியிருந்தான். ஹோட்டலுக்குச் சென்று ஹரிணி விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளாகப் பார்த்துப் பார்த்து வாங்கியவனின் தலைக்குள் விடாமல் வண்டு குடைந்து கொண்டிருந்தது.

‘எதற்காக வந்திருப்பாள்?’ ஏதோ ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ளதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை தங்கையிடம் பகிர்ந்து கொள்ளும் தைரியம்தான் தனக்கிருக்கிறதா என்று தெரியவில்லை.

ஒருவழியாக தட்டுத் தடுமாறி வண்டியோட்டி வீடு வந்து சேர்ந்தவன், வாங்கி வந்த உணவுகளை மேஜையில் எடுத்து வைக்க, அவனுக்கும் தட்டு வைத்துப் பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடுண்ணா.”

“எ… எனக்கு வேணாம்டா. நீ சாப்பிடு.”

“கிட்சன்ல போய் பார்த்தேன் நீ சமைச்ச மாதிரியோ சாப்பிட்ட மாதிரியோ தெரியவே இல்லை… பெரியம்மா பெரியப்பா இல்லைன்னதும் சாப்பிட்டிருக்ககூட மாட்ட. உட்கார்ந்து சாப்பிடு.” என்றபடி சுஜிக்கும் உணவை வைத்துவிட்டு தானும் உண்ணத் துவங்கினாள்.

ஹரிணியையும் சுஜியையும் ஏதேனும் பேசுவார்களா என்று மாறி மாறி பார்த்தபடி, ஒருவழியாக உண்டு முடித்தான் தனா. மூவரும் உணவருந்தி முடித்ததும் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள் ஹரிணி.

தன்முன் ஒருவித பதட்டத்தை மறைத்த முகத்தோடு அமர்ந்திருந்த தனாவைக் கூர்மையாக பார்த்தவள்,

“ஹேப்பிண்ணா இப்ப எங்க இருக்காங்க?”
எதிர்பார்த்த கேள்விதான் என்றபோதும் பதட்டத்தில் வியர்த்தது தனாவுக்கு. “ஹே… ஹேப்பி ஃபாரின்ல இ… இருக்கான்டா.”

“நான் இன்னைக்கு காலையில மதுரைக்குப் போயிட்டு, அங்கேயிருந்து நேரா இங்க வரேன்.” ஹரிணி பேசும்போது சுஜி தனாவின் பதட்டத்தையும் முகபாவனைகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ம… மதுரைக்கா?” ஸ்பஷ்டமாக அதிர்ந்தான் தனா.

“ம்ம்… மதுரைக்குதான். ஹேப்பிண்ணா வீட்டுக்குப் போய் அவங்க எல்லாரோடையும் பேசிட்டுதான் வரேன்.”
ஈயாடவில்லை தனாவின் முகத்தில். சட்டென்று சுதாரித்து முகத்தைத் துடைத்துக் கொண்டவன், “அ… அது ஒன்னுமில்லடா. நீ சின்னப் பிள்ள. உன்கிட்ட சொல்ல வேணாமேன்னு…”

“ஆனந்தண்ணாவுக்கு என்ன ஆச்சு?” சுஜியின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஆ… ஆக்ஸிடென்ட் மா. அ… அவங்க வீட்லயே சொல்லியிருப்பாங்களே.”

“ம்ம்… சொன்னாங்க. பதினோரு மணிக்கு திருவண்ணாமலையில இருந்து கிளம்பினவரு நாலு மணிக்கு பெங்களூர் வந்து அவரோட ஃபியான்சிய கூட்டிக்கிட்டு சிக்மகளூர் போனப்ப ஆக்ஸிடென்ட் ஆனதா சொன்னாங்க. ஆனா… அது உண்மையில்ல. அவர் பெங்களூருக்கே எட்டு மணிக்கு மேலதான் வந்திருக்கனும்.”

“இல்லல்ல, அவன் நாலு மணிக்கு முன்னாடியே வந்து பூரணிய கூட்டிட்டு சிக்மகளூர் போயிட்டான். திருவண்ணாமலையில இருந்து நாலே மணி நேரம்தான பெங்களூருக்கு.” பதட்டத்தோடு வந்தது தனாவின் குரல்.

“ஓ… அப்ப தன்னோட டைரியில, தன் கைப்பட, சம்பவம் நடந்த அன்னைக்கு காவிரி பிரச்சனைக்காக ஓசூர்ல கிட்டத்தட்ட அஞ்சு மணிநேரம் வெயிட் பண்ணதா எழுதியிருக்காரே ஆனந்தண்ணா, அது பொய்யா?”

“டைரியா…?” என அதிர்ந்தவன் முன்பு ஆனந்தனின் டைரியை எடுத்து வைத்தாள் சுஜி.

“இந்த டைரிய படிச்சுதான் ஆனந்தன் வாழ்க்கையில நடந்ததை எங்களால ஓரளவுக்கு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனா ஓசூர்ல இருந்து கிளம்பியதுக்கப்புறம் அவர் டைரி எழுதல. அதுக்கப்புறம் அவருக்கு ஏதோ நடந்திருக்கு.”

“அ…அதெல்லாம் எதுவுமில்லம்மா. எ… எனக்கு எதுவுமே தெரியாது.” வெகுவாக வியர்த்து வழிந்தது தனாவுக்கு.

“சமீபத்துல செத்துப்போன கலெக்டர் கிஷோர், டிஎஸ்பி ஜனார்த்தனன், ஃபாரஸ்ட் ஆபிசர் ஜார்ஜ், நீங்க, ஆனந்தண்ணா எல்லாரும் ஒரே வீடு எடுத்து தங்கியிருந்திருக்கீங்க. இந்த தகவலும் இந்த டைரில இருக்குது. நீங்க அஞ்சு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோவும் இருக்குது.
ஆனா ஆனந்தனை நான் பார்க்கவே இல்லைன்னு ஹரணிகிட்ட பொய் சொல்லியிருக்கீங்க. அவர்கூடவே தங்கியிருந்தது நீங்கதான். சோ… உங்களுக்கு எதுவும் தெரியாம இருக்கவே முடியாது.”
பேசிய சுஜியை இடைமறித்தவன்,

“ஹரிணிக்கு ஹேப்பி இறந்தது தெரிஞ்சா வருத்தப்படுவாளேன்னுதான் நான் பொய் சொன்னேன். மத்தபடி எ…எனக்கு எதுவுமே தெரியாதும்மா.”

“ஓ… உங்ககூட தங்கி இருந்தவங்கள்ல மூனு பேர் கொடூரமா கொல்லப்பட்டிருக்காங்க. அதுவாவது தெரியுமா?”

“அ… அது தெரியும்மா. அ… அவங்க ஒன்னும் உத்தமனுங்க இல்ல. அவனுங்களோட எதிரிங்க யாராவது கொன்னிருக்கலாம்.” சொன்ன தனாவின் கண்களில் இருந்தது என்ன? நிம்மதியா? திருப்தியா? சுஜி விடாமல் அவனைப் பார்த்திருந்தாள்.

“அவங்க மூனு பேரையும் கொன்னது ஹேப்பிண்ணாதான்.” இடையில் ஒலித்த ஹரிணியின் குரலில் அதிர்ந்து அவளைப் பார்த்தவனின் தலை மறுப்பாக ஆடியது.

“இ… இருக்காது. ஆ… ஆனந்தன் உயிரோட இருக்க வாய்ப்பேயில்லை.”

“நான் என் கண்ணால பார்த்தேன். மூனு கொலையையும் செய்தது ஹேப்பிண்ணாதான்.”
உறுதியான அவளது குரலில் உடல் முழுவதும் தடதடவென ஆட, நடுக்கத்தோடு எழுந்தவன்,

ஹரிணியின் அருகே சென்று அமர்ந்தான். முகம் முழுவதும் வார்த்தையில் வடிக்க முடியாத பதட்டம். “இல்லை ஹரிணிம்மா. வாய்ப்பே இல்லை. ஆனந்தன் உயிரோட இருக்க முடியாது. நீ பொய் சொல்ற?

“ஏன்? அந்த கார் ஆக்ஸிடென்ட் ஆகும்போது அதுல இருந்து அவர் தப்பிச்சிருக்கலாம்ல. ஹரிணி பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” சுஜியின் கேள்வியில் திகைத்து நிமிர்ந்தவனின் கண்கள் கலங்கி நீரைச் சுமந்திருந்தது.

“அப்படிமட்டும் எதாவது நடந்திருந்தா இந்த உலகத்துலயே முதல்ல சந்தோஷப்படறவன் நான்தான். ஆ…ஆனா அதுக்கு வாய்ப்பில்ல.”

“அதான் ஏன்? வாய்ப்பில்ல வாய்ப்பில்லைனு சொல்றீங்களே, அதான் ஏன்ங்கறேன்?” உயர்ந்த ஹரிணியின் குரலில் அவளைப் பார்த்தவன் உணர்வற்ற குரலில்,

“ஏன்னா… செத்துப் போன ஆனந்தனையும் பூரணியையும் கார்ல வச்சு மலைமேல இருந்து கீழ தள்ளி விட்டதே நான்தான்.” இனியும் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்பது புரிந்ததில் தனாவின் குரல் பிசிறில்லாமல் வந்தது.

உலகத்தின் மொத்த அதிர்ச்சியும் தன் தலைமேல் தாங்கியவள் போல தனாவின் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் அமர்ந்திருந்தாள் ஹரிணி. அவளால் அவ்வளவு சீக்கிரம் தன்னிலைக்கு வரமுடியவில்லை.

‘தனாவா? தனா அண்ணனா? என்னோட அண்ணனா இதைச் செய்தது?’ மனம் ஓலமிட்டது. நம்பவும் முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை.

சுஜிக்குமே இது அதிர்ச்சிதான். மற்ற மூவரும் செய்த கொலைக்கு தனா சாட்சியாக இருப்பான் என்று எண்ணியிருந்தவளுக்கு தான்தான் தள்ளியதாக தனா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்தது.

“எ… என்னண்ணா சொ…சொல்ற? ஏன்? எதுக்கு? எ…எதுக்கு அப்படிப் பண்ண?” கண்களில் கண்ணீர் வழிய கேட்ட ஹரிணியின் கரங்களைப் பிடித்து அழுத்திக் கொண்டவன்.

“ஹரிணிம்மா, ப்ளீஸ் அண்ணனைத் தப்பா நினைக்காதடா. எனக்கு அப்ப வேற வழி தெரியல. அவனுங்களோட பின்புலம் செல்வாக்குக்கு முன்னாடி சாதாரண மிடில் கிளாஸ் பையனா இருந்த என்னால எதுவுமே செய்ய முடியாம போச்சு. நான் பண்ணது பெரிய பாவம்தான். ஆனா, அதை நினைச்சு நினைச்சு இப்பவரை சாகாம செத்துக்கிட்டு இருக்கேன். நீயும் என்னைத் தப்பா நினைச்சா என்னால தாங்க முடியாதுடா.”
கைகளைப் பிடித்துக் கொண்டு கதறியவனைப் பார்த்த ஹரிணிக்கும் கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகியது.

“என்னதான் நடந்தது தனாண்ணா? ஆனந்தண்ணாவுக்கும் பூரணிக்கும் என்னதான் ஆச்சு?” சுஜியின் கேள்விக்கு பதில் தராமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“எட்டு வருஷத்துக்கு முன்னாடி, அந்த சம்பவம் நடந்த அன்னைக்கு ஆனந்தன் மதுரைக்குப் போயிருந்தான். மழை நல்லா விடாம பெய்துகிட்டு இருந்தது. நானும் எங்ககூட தங்கியிருந்த அந்த மூனு பேரும் நல்ல போதையில இருந்தோம். அப்ப…

“டேய் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மாடிக்குப் போங்கடா. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹேப்பி வந்துடுவான். வந்து இதையெல்லாம் பார்த்தா என்னைதான் திட்டுவான்.”
மிதமிஞ்சிய போதையில் குழறலாக உளறிய தனாவைப் பார்த்துச் சிரித்தனர் மூவரும். டீவியில் மூன்றாந்தர ஆங்கிலப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் அந்தப் படத்தில் லயித்திருந்தான் ஜார்ஜ்.

“குடிக்கிற வரைக்கும் உனக்கு பயமில்லாம இருந்தது. ஃபுல்லா குடிச்சு மட்டையானதும் ஆனந்தன நினைச்சு பயம் வந்துடுச்சா. ஓசூர்ல கலவரமாம். ஆனந்தன் இப்பத்திக்கு ஊருக்குள்ள வரமுடியாது. பயப்படாம என்ஜாய் பண்ணு தனா.”
நிகழ்கால செய்தியில் அப்டேட்டாக இருந்த கிஷோரைப் பார்த்த ஜனார்த்தனன்,

“நிஜமாவா மச்சி? ஓசூர்ல கலவரமா?”

“ம்ம், பெரியளவுல இல்ல. எப்பயும் வழக்கமா வர்றதுதான்.”
இன்னும் கொஞ்சம் என்று ஊற்றிக் கொடுத்ததை வாயில் கவிழ்த்துக் கொண்டான் தனா. அவனது கண்கள் சொருகியது. தன்னிலை தெரியாத போதை.

நண்பர்களின் கும்மாளமும், டீவியில் ஓடிய படத்தைப் பார்த்து அவர்கள் அடித்த கமெண்ட்டுகளும் தனாவை உற்சாகத்தின் உச்சியில் வைத்திருந்தது. வாயில் உளறல்களாக வந்தன வார்த்தைகள்.

“எவ்வளவு நாள்தான் தியரியையும் விஷூவலையும் பார்த்து மனசைத் தேத்திக்கறது? பிராக்டிகலா டெஸ்ட் பண்ணிப் பார்க்கனும்டா.”
அவனது உளறலில் அட்டகாசமாகச் சிரித்தவர்கள், “டேய் தனா நீயாடா? எத்தனை தடவை கூப்பிட்டிருப்போம் வந்திருக்கியா நீ? இப்ப ஆனந்தன் பக்கத்துல இல்லைன்னதும் தைரியம் வந்துடுச்சா உனக்கு.”

“டேய், அசிங்கம் பிடிச்சவனுங்களா. நான் அதைச் சொல்லல. எனக்கு வீட்ல கல்யாணத்துக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. பிரிலிமினரி பாஸ் பண்ணியாச்சு. அதேமாதிரி மெயின் எக்சாமும் பாஸ் பண்ணிட்டு சீக்கிரம் ஒரு நல்ல போஸ்டிங்லயும் உட்கார்ந்துட்டு வீட்ல பார்க்கற பொண்ணுக்கு ஓகே சொல்லனும்.”
கலகலத்துச் சிரித்தவர்கள்,

“டேய், நீ அதுக்குச் சரிப்பட்டு வருவியா? டவுட்டா இருக்கேடா? டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?” மேலும் மேலும் நண்பர்களின் பேச்சுக்கள் தொடர… தனாவின் பதில்களும் தொடர… உற்சாகத்தில் இன்னும் சில ரவுண்டுகள் உற்சாகபானம் உள்ளே சென்றது.

தலையைக்கூடத் தூக்க முடியாத அளவுக்கு கிடந்தான் தனா. மற்ற மூவரும் டீவியில் ஆழ்ந்திருந்த போது, அழைப்பு மணியோசை கேட்டது.

அது சற்று வளர்ந்து வரும் ஏரியா. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் புதிதாக முளைத்தவண்ணம் இருந்த ஏரியா. அந்த மாலை நேரத்தில் மழை சற்று தூவானமாகத் தூறிக்கொண்டிருக்க, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
மழையைப் பொருட்படுத்தாமல் அந்த வீட்டு வாயில் முன் நின்றிருந்தாள் பூரணி.

அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டதும் வந்து திரைச்சீலையை ஒதுக்கி ஜன்னல் வழியாக பார்த்த ஜார்ஜின் போதையேறிய விழிகள் விரிந்தன. சற்று முன் பேசிய பேச்சுக்களும் பார்த்த காட்சிகளும் தன்னிலையில் வைத்திருக்கவில்லை அவனை.

பனியில் நனைந்த சிற்பம் போல நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்குள் பெரும் மாற்றங்கள் நிகழத் துவங்கியது.
ஓசையெழுப்பாமல் சைகையில் மற்ற இருவரையும் அழைத்து பூரணியைக் காட்டினான். அவன் கண்களில் மின்னிய வெறி மற்ற இருவருக்கும் புரிந்தது. கிட்டத்தட்ட அவர்களுமே அவன் நிலையில்தான் இருந்தனர்.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் கிஷோர். இயல்பாக கேட்டைத் திறந்து விட்டபடி, “வாம்மா, ஆனந்தனை பார்க்க வந்தியா?” என்க…

“ஆமாண்ணா, மாமா உள்ளயிருக்காங்களா?” என்று கேட்டபடி வீட்டினுள் வந்திருந்தாள் பூரணி.

இயல்பாக உள்ளே நுழைந்தவளுக்கு தனா கிடந்த கோலமும் டீபாயின் மேல் சிதறிக் கிடந்த பொருட்களும் டீவியில் ஓடிய காட்சிகளும் நிலைமையைச் சற்று புரிய வைக்க அங்கிருந்து வெளியே போகும் நோக்கோடு திரும்பியவளுக்கு, வேட்டைநாயின் தீவிரத்தைக் கொண்ட கண்களோடு தன்னை வெறித்தபடி கதவை மூடுபவர்களைக் கண்டதும் வெலவெலத்தது.

பெண்கள் எப்போதுமே சூழ்நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி நிகழ்பவைகளை கவனிக்கும் பக்குவம் வேண்டும். எப்பொழுதும் கதவைத் திறக்கும் மாமனோ தனாவோ வந்து கதவைத் திறக்காத போதே பூரணி சற்று சுதாரித்திருக்கலாம். அல்லது ஆனந்தனைக் கண்ணால் பார்க்காத போது, ஆண்கள் மட்டுமே தங்கியிருந்த அந்த வீட்டுக்குள் போவதைத் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு நாட்களாக மாமனைப் பார்க்காத தவிப்பு, இன்று கண்டிப்பாக வந்துவிடுவேன் என்று ஆனந்தன் கூறியிருந்த வார்த்தைகள். வழக்கமாக வந்து போகும் வீடுதானே என்ற அலட்சியம் என ஏதோ ஒன்று அவளை எதையுமே யோசிக்கவிடாமல் செய்திருந்தது. அவளது தலைவிதியையும் மாற்றி எழுதியிருந்தது.

“எ… என்ன பண்றீங்க? கதவைத் திறங்க நான் போகனும்.” என்றவாறு வெளியேற முயன்றவளை வளைத்துப் பிடித்தான் ஜார்ஜ்.

“தனாண்ணா…” என்று கத்தி தனாவை எழுப்ப முயன்றவளின் வாயைப் பொத்தியபடி அவளை உள்ளறைக்கு இழுத்துச் சென்றனர் மூவரும்.

கொடூரமான மூன்று பருந்துகளிடம் சிக்கிக்கொண்ட கோழிக்குஞ்சின் நிலையானது பூரணியின் நிலை. எவ்வளவு போராடியும் தப்பிக்க முடியாமல் மூர்ச்சையானாள் பெண்.

error: Content is protected !!