Kadhal 32 (pre – final)

ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு செல்வதற்காக சித்தார்த் தனது குடும்பத்தினருடன் தயாராகிக் கொண்டிருக்க மறுபுறம் மேக்னாவும், நர்மதாவும் தங்கள் வீட்டில் தயாராகிக் கொண்டு நின்றனர்.

இள லாவண்டர் நிற சேலை அணிந்து அதற்கேற்றார் போல மிகவும் எளிமையான ஒப்பனையுடன் ஒற்றைக் கல் பதித்த தோடு மற்றும் மெல்லிய செயின் அணிந்து நடந்து வந்த மேக்னாவை பார்த்து
“அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிய படியே நர்மதா கூறவும்

அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்
“என்னை விட நீதான் ரொம்ப அழகா இருக்க நர்மதா! இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு! அப்படியே ஏஞ்சல் மாதிரி!” என்று கூற

அவளோ சிறிது வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டே
“போங்கக்கா விளையாடாம!” என்று கூறினாள்.

“சரி! சரி! நாம ரெண்டு பேரும் நல்ல அழகாகத்தான் இருக்கோம் இப்போ வா கிளம்பலாம் நேரமாச்சு!” என்றவாறே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறவும் மறுபுறம் சித்தார்த் தன் குடும்பத்தினரோடு வெளியே வரவும் சரியாக இருந்தது.

இத்தனை நாட்களாக வெகு எளிமையான தோற்றத்திலேயே அவளைப் பார்த்திருந்த சித்தார்த் இன்று எளிமையான ஒப்பனையுடன் தயாராகி வந்தவளை பார்த்து அசந்து போய் நின்றான் என்றால் மிகையாகாது.

அவள் மிக எளிமையான விதத்தில் தான் தயாராகி வந்திருந்தாள் ஆனாலும் அந்த எளிமையான ஒப்பனையே அவனது கண்களுக்கு பேரழகாக பட்டது.

கடைசியாக அன்று தெருவில் வைத்து சித்தார்த்தைப் பார்த்து பேசியதன் பிறகு இன்று தான் மேக்னா மீண்டும் அவனை நேரில் பார்க்கிறாள்.

தன் மனதிலிருக்கும் எல்லா விடயங்களையும் இன்று எப்படியாவது ஒன்று விடாமல் அவனிடம் கூறி விட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டவள் அவனை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

“கிளம்பலாமா சித்தார்த்?” யசோதாவின் கேள்வியில் அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் மேக்னாவையும் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு ஜெஸ்ஸியின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

நிச்சயதார்த்தம் நடக்கும் வீடு தான் என்றாலும் தன் ஒரே மகளின் திருமணம் நடக்க போகும் இடம் என்பதால் ஜெஸ்ஸியின் தந்தை வில்லியம்ஸ் அவர்கள் வீட்டை பல வகையான பூக்களினால் அலங்காரப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருந்தார்.

அவர்களது வீட்டின் தோற்றத்தையும், பிரம்மாண்டத்தையும் பார்த்துக் கொண்டே நடந்து சென்ற மேக்னா
“ஹாய்! மேக்னா!” தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள்.

மெரூன் நிறத்திலான லெஹங்கா அணிந்து தலைமுடியை எந்த தடையுமின்றி விரித்து போட்டு அது காற்றில் ஆடியபடி இருக்க முகம் நிறைந்த புன்னகையுடன் ஜெஸ்ஸி அவள் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

“இன்ஸ்பெக்டர் மேடம்! இந்த ட்ரெஸ்ஸில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” மேக்னா அவளைப் பார்த்து இயல்பாக புன்னகைத்த படியே கூறவும்

பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்
“ரொம்ப தேங்க்ஸ் மேக்னா! அப்புறம் வெரி வெரி சாரி! நான் நேரடியாக வந்து உங்களை நிச்சயதார்த்தத்திற்கு சொல்ல முடியாமல் போய் விட்டது” என்று கூற

அவளைப் பார்த்து மறுப்பாக தலைலை அசைத்தவள்
“ஐயோ மேடம்! அதெல்லாம் நான் எதுவுமே நினைக்கல இவ்வளவு விஷயங்கள் நடந்ததற்கு அப்புறமும் நீங்க எல்லோரும் மீண்டும் என்னோடு சாதாரணமாக பழகுறீங்களே! நியாயமாகப் பார்த்தால் நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் இதற்கு முதல் நாள் நடந்துகிட்ட எல்லா விடயங்களுக்கும் ஐ அம் ரியலி சாரி மேடம்!” தன் மனம் வருந்தி அவளிடம் மனதார மன்னிப்புக் கேட்டாள்.

“அதெல்லாம் ஒரு விடயமே இல்லை மேக்னா! அதை விடுங்க! அப்புறம் நர்மதா மேடம்! எப்படி இருக்கீங்க?” மேக்னாவின் அருகில் நின்று கொண்டிருந்த நர்மதாவின் தலையை மெல்ல கலைத்து விட்ட படியே அவள் கேட்கவும்

“நான் நல்லா இருக்கேன் மேடம்!” வெட்கப் புன்னகையோடு அவளை பார்த்து பதில் அளித்தவள் மேலும் தன் அக்காவுடன் ஒன்றிக் கொண்டாள்.

“சரி வாங்க உள்ளே போகலாம்” ஜெஸ்ஸி இயல்பாக பேசியபடியே அவர்களை உள்ளே அழைத்து செல்ல

சற்று தள்ளி நின்று அவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற சித்தார்த்
‘இன்னைக்கு என் கேள்விக்கான பதில் எல்லாம் கிடைத்து விடும் அதோடு என் குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க போகிறது!’ தன் மனதிற்குள் எண்ணிய படியே அங்கிருந்து செல்ல அவனுக்கு தெரியவில்லை அவனுடைய ஒட்டுமொத்த கனவும் இன்னும் சிறிது நேரத்தில் சுக்கு நூறாகி போவது.

சிறிது நேரத்தில் ஜெஸ்ஸி மற்றும் ஜார்ஜின் நிச்சயதார்த்த நிகழ்வுகள் ஆரம்பித்து விட நண்பர்களினதும், உறவினர்களினதும் கேலியிலும், பேச்சிலும் அந்த இடமே நிறைந்து போய் இருந்தது.

தன்னுடைய இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கை பயணத்தில் இதற்கு முன்னர் இவ்வாறான எந்தவொரு நிகழ்வுகளிலும் மேக்னா கலந்து கொண்டதில்லை.

முதல் முறையாக உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இருக்கும் இடம் அவளுக்கு மிகவும் விசித்திரமான, அழகான ஓர் இடமாக தென்பட்டது.

ஒன்பது வயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவளுக்கு தெரிந்தது எல்லாம் ஆசிரமமும், பாடசாலையும், அவள் படித்த கல்லூரியுமே.

அவள் படித்த பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி அவளுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் இருந்ததில்லை.

அவள் ஆசிரமத்தில் இருந்து வந்தவள் என்பதால் என்னவோ அவளுடன் யாரும் பெரிதாக பழகியதும் இல்லை, பழக விரும்பியதும் இல்லை.

ஆனால் இன்று இந்த இடத்தில் இத்தனை பேர் ஒன்றாக சிரித்து சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் அவள் மனதிற்குள் இனம் புரியாத ஆசை ஒன்று உருவாக ஆரம்பித்தது.

தானும் இப்படி ஒரு பெரிய குடும்பத்தில் திருமணம் முடித்து சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தவள் தன் மன எண்ணத்தை நினைத்து சிரித்து கொண்டே சுற்றிப் பார்க்க அவளின் கண்களில் பட்டது தன் தம்பிகளுடன் சேர்ந்து பேசி ஜெஸ்ஸியுடன் சிரித்துக் கொண்டிருந்த சித்தார்த் தான்.

அவனை பார்த்ததுமே அவன் தனக்காக இதுவரை செய்த விடயங்களும், தன் மனதை அவளிடம் வெளிப்படுத்திய தருணங்களும் என எல்லா நிகழ்வுகளும் மாறி மாறி அவள் நினைவுக்கு வரவே அவள் இதழ்களில் மந்தகாசப் புன்னகை ஒன்று வந்து குடியேறிக் கொண்டது.

தன் இதழில் தவழ்ந்த புன்னகையுடன் அவனைப் பார்த்து கொண்டு நின்றவள் அவனையே சில நொடிகள் பார்த்து கொண்டு நின்றாள்.

சித்தார்த்துடன் சிரித்தவாறே பேசிக்கொண்டு தற்செயலாக திரும்பிய ஜெஸ்ஸி இதழில் தவழும் மந்தகாச புன்னகையுடன் நின்று கொண்டிருந்த மேக்னாவைப் பார்த்து விட்டு தனக்குள் சிரித்தவாறே அவனைப் பார்த்து ஜாடை காட்ட அவனும் அவள் காட்டிய புறம் திரும்பிப் பார்த்தான்.

தன்னையே பார்த்துக்கொண்டு புன்னகையுடன் நின்று கொண்டிருந்த மேக்னாவைப் பார்த்ததும் சித்தார்த்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இறக்கை விரித்து பறக்க ஆரம்பித்தன.

“டேய்! சித்! என் நிச்சயதார்த்தத்துக்கு வந்து உன் கல்யாண திகதியை குறிக்கப் போற போல இருக்கே! என்ஜாய்! என்ஜாய்!” ஜெஸ்ஸி நக்கலாக சிரித்தபடியே அவனது தோளில் தட்டி கூற எப்போதும் போல தன் புன்னகையையே அவளுக்கு பதிலாக கொடுத்தவன் மேக்னாவை நோக்கி நடந்து சென்றான்.

அத்தனை பேர் முன்னிலையில் சித்தார்த் தன்னை நோக்கி வருவதை பார்த்து விட்டு மேக்னா தன்னை தானே கடிந்து கொண்ட படி உடனே தன்னை சுதாரித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல அவனும் அவளை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.

அவனை விட்டு அவள் விலகி சென்ற ஒவ்வொரு நொடியிலும் சிறிது நேரத்திற்கு முன் யசோதா யாரோ ஒரு பெண்ணிடம்
‘என் பையன் சித்தார்த்திற்கு எந்த குறையும் இல்லாத ஒரு சின்ன புழு, பூச்சிக்கு கூட பாவம் நினைக்காத ஒரு பெண்ணை தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என் பையனோட தங்கமான மனசுக்கு அதே மாதிரி குணமுள்ள ஒரு பொண்ணு தான் கிடைப்பா!’ என்று கூறி கொண்டு நின்றதே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

‘நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை இன்ஸ்பெக்டர் சார்! நான் பாவம் பண்ணவ! நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை!’ தன் மனதிற்குள் புலம்பிய படியே வேக வேகமாக எட்டுக்களை எடுத்து வைத்து நடந்து சென்றவள் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளைப் பார்த்து விட்டு அதில் ஏறி சென்றுவிட சித்தார்த்தும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

மொட்டைமாடி யாருமே இன்றி வெறிச்சோடி போயிருக்க அதற்கு மேலும் சித்தார்த்திடம் இருந்து விலகி செல்ல முடியாது என்று எண்ணியபடியே மேக்னா தயக்கமாக தன் பின்னால் திரும்பி பார்த்தாள்.

மொட்டை மாடிக்கு வரும் வாயில் கதவருகே சாய்ந்து நின்றபடி கைகளை கட்டிக் கொண்டு புன்னகையுடன் நின்று கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்ததுமே அவள் தலை தானாக குனிந்து கொண்டது.

மேக்னாவின் அதட்டல், மிரட்டல், கண்டிப்பு, தடுமாற்றம், கோபம், அழுகை என எல்லா வகையான உணர்வுகளையும் இதற்கு முன்னர் பார்த்திருந்தவன் அவளது இந்த வெட்கத்தைப் பார்த்து சொக்கி தான் போனான்.

அழுத்தமாக அடி எடுத்து வைத்து அவள் முன்னால் வந்து நின்றவன் அவள் முகத்தை நிமிர்ந்த அவள் கண்கள் இரண்டுமோ சிவந்து கலங்கி போய் இருந்தது.

“என்னாச்சு மேக்…”

“வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார்! எதுவும் கேட்க வேண்டாம் முதலில் இந்த இடத்தில் இருந்து போயிடுங்க இல்லை நான் போறேன் வழியை விடுங்க!” அவனது கையை எடுத்து விட்டு விட்டு அவனைத் தாண்டி செல்ல போனவளின்‌ கரங்கள் மீண்டும் சித்தார்த்தின் கரங்களால் சிறை எடுக்கப்பட்டது.

“இன்ஸ்பெக்டர் சார்!” மேக்னா அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்க்க

“ஸாரி! ஸாரி!” அவளது கைகளில் இருந்து தன் கைகளை விலக்கி எடுத்து கொண்டவன் அவளை கூர்மையாக பார்த்த படியே அவள் முன்னால் வந்து நின்றான்.

“இன்னும் எத்தனை நாளைக்கு உன் மனதில் இருப்பதை மறைக்க உத்தேசம் மேக்னா?”

“…………”

“சொல்லு மேக்னா! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சொல்லு மேக்னா! சொல்லு!”

“நான் சாகும் வரைக்கும்!”

“மேக்னா!” அவளது வார்த்தைகளைக் கேட்டு சித்தார்த் ஸ்தம்பித்து போய் நின்றான்.

“மேக்னா! உனக்கு என்ன ஆச்சு?”

“வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார் என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம் போயிடுங்க என்னால உங்களுக்கு எந்த விதமான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது உங்க மனதில் இருக்கும் ஆசைகளை எல்லாம் இங்கேயே விட்டுட்டு போயிடுங்க அதுதான் உங்களுக்கு நல்லது”

“எதற்காக நான் போகணும் மேக்னா? என்ன காரணத்திற்காக நான் போகணும்? என் மனதில் இருக்கிற காதலை எதற்காக நான் விடனும்? நான் என் காதலுக்காக உன்னை கட்டாயப்படுத்தவோ, வற்புறுத்தவோ இல்லையே! அப்படி இருக்கும்போது ஏன் நான் இதையெல்லாம் மறக்கணும்? உன்னோட எந்த முடிவாக இருந்தாலும் நான் கட்டுப்படுவேன்னு சொன்னேன் அதை இப்போ வரைக்கும் கடைப்பிடித்து கொண்டும் வர்றேன் அதனால் உனக்கு என்ன தடங்கல் வந்தது? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் கண்ணில் என் மீதான காதலை பார்த்தேன் அந்த காதலைப் பார்த்த பிறகுதான் நான் இப்படி உன் முன்னால் வந்து நின்று பேசுறேன் இல்லைன்னா நான் இப்ப கூட உன்னை இந்த அளவுக்கு கேள்வி கேட்டிருக்க மாட்டேன் அதை நீ முதலில் புரிஞ்சுக்கோ!”

“ஐயோ இன்ஸ்பெக்டர் சார்! அது நான் என்னையும் அறியாமல் செய்த ஒரு விஷயம்! அதற்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்னால உங்க வாழ்க்கை வீணாக அழியக்கூடாது அதனாலதான் சொல்றேன் நீங்க போயிடுங்க நீங்க ரொம்ப நல்லவங்க உங்களுக்கு நான் தகுதியானவள் இல்லை இன்ஸ்பெக்டர் சார்!”

“தகுதியை பார்த்து காதல் வர்றது இல்லை மேக்னா! நான் உன்னோட கடந்த காலத்தை விரும்பலே உன்னைத்தான் விரும்புகிறேன் தகுதி என்பது ரொம்ப பெரிய வார்த்தை! நீ இது வரைக்கும் பண்ண எல்லா விடயங்களையும் தெரிந்ததற்க்கு அப்புறமாக தானே நான் என் காதலை உன் கிட்ட சொன்னேன்! நீ பண்ண ஒவ்வொரு விடயத்திற்கும் காரணம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான்!அதை நான் நம்புறேன் அப்புறம் என்ன சொன்ன? தகுதியா? நான் எந்த விதத்தில் உன்னை விட உயர்ந்தவன் சொல்லு? பணத்திலா? வசதியிலா? இல்லை அந்தஸ்திலா?”

“குணத்தில் இன்ஸ்பெக்டர் சார்!”

“மேக்னா!”

“ஆமா இன்ஸ்பெக்டர் சார்! நீங்க என்னை விட குணத்தில் ரொம்ப ரொம்ப உயர்ந்நதவரு! ஆனால் நான், என்னோட குணம் உங்களுக்கு கொஞ்சம் கூட ஒத்து வராது”

“இப்போதும் சொல்றேன் மேக்னா உன்னோட எண்ணம் ஒரு போதும் தப்பாக எனக்கு தெரியல ஆனா அதற்கு நீ தெரிவு செய்த வழிகள் தான் தப்பு! நீ எனக்கு ஒரே ஒரே ஒரு விஷயத்தை சொல்லு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு உன் மனதில் என்னைப் பற்றி எதுவும் இல்லைன்னு”

“இல்லை இன்ஸ்பெக்டர் சார்! நீங்க என்ன சொன்னாலும் சரி நான் உங்களுக்கு ஏத்த பொண்ணு இல்லை! நான் கொலைகாரி! இதோ இந்த கையால் நான் கொலை செய்து இருக்கேன் நான் கொலைகாரி! நான் கொலைகாரி இன்ஸ்பெக்டர் சார்!”
தன் கைகளில் அவள் தன் முகத்தை புதைத்துக் கொண்ட படியே கூறவும்

அவள் அருகில் வந்து அவள் கைகளை விலக்கி விட்டவன்
“நீ அந்த தனபாலனோட தம்பிக்கு பண்ணது கொலை இல்லை! அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை! அதை நீ தனியாளாக பண்ணி இருக்க அதுக்கு பெருமை தான் படணும் இப்படி வேதனை பட்டு பேசத் தேவையில்லை” என்று கூறவும்

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
“இல்லை இன்ஸ்பெக்டர் சார்! நான் அதை சொல்லல” என்று கூறினாள்.

“பின்னே வேற என்ன?” சித்தார்த் குழப்பத்துடனும், கேள்வியுடனும் அவளை நோக்க

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தவள்
“வள்ளி அம்மா, நடராஜன் அப்பாவை கொலை பண்ணது அந்த தனபாலன் இல்லை நான் தான்” என்று கூற
அவனோ அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்…….