Kadhal 4

Kadhal 4

சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி மேக்னாவின் வருகைக்காக அந்த சிறைச்சாலையின் பார்வையாளர்கள் பகுதியில் காத்து நின்றனர்.

உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாத தன்னை பார்க்க யார் வரப்போகிறார்கள் என்ற யோசனையோடு நடந்து வந்த மேக்னா தடுப்புக் கம்பிகளின் மறுபுறம் நின்று கொண்டிருந்த தன் வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெஸ்ஸியையும், அவளருகில் நின்று கொண்டிருந்த புதியவனையும் யோசனையோடு பார்த்து கொண்டே அவர்கள் முன்னால் வந்து நின்றாள்.

“ஹலோ மேக்னா! ஐ யம் ஜெஸ்ஸி”

“தெரியும் இன்ஸ்பெக்டர் மேடம்”

“ஓஹ்! ஞாபகம் இருக்கா? பரவாயில்லையே! இது என் பிரண்ட் சித்தார்த் ஆவடி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கான் உங்க கிட்ட உங்க கேஸைப் பற்றி கொஞ்சம் பேசணும்னு சொன்னான் பேசலாமா?” ஜெஸ்ஸியின் கேள்வியில் தயக்கத்துடன் அவளையும், அவளருகில் நின்று கொண்டிருந்த சித்தார்த்தையும் திரும்பி பார்த்தவள்

“அது தான் கேஸ் முடிஞ்சுடுச்சே மேடம்” சூசகமாக தனக்கு பேச விருப்பமில்லை என்பதை போல கூறவும்

புன்னகையோடு அவள் முன்னால் வந்து நின்றவன்
“நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம் மிஸ். மேக்னா ஜஸ்ட் உங்க கேஸைப் பற்றி தகவல் தெரிஞ்சுக்க தான் நான் இங்கே வந்திருக்கேன்” என்று கூற அப்போதும் அவளது முகத்தில் இருந்த தயக்கம் குறையவில்லை.

“நீங்க பயப்படுற அளவுக்கு நாங்க ஒண்ணும் ரௌடியோ, தாதாவோ இல்லை ம்மா வீ ஆர் போலீஸ் ஆபிஸர்ஸ் ஷோ பயப்படாமல் எங்க கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க போதும்” சித்தார்த் எப்படியாவது அந்த வழக்கு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் மேக்னாவின் முகத்தை பார்த்து கொண்டு நின்றான்.

“மேடம் தானே என் கேஸை டீல் பண்ணாங்க உங்களுக்கு என்ன தகவல் தெரியணும்னாலும் அவங்க கிட்டயே கேட்கலாமே!” அவன் அருகில் நின்று கொண்டிருந்த ஜெஸ்ஸியை சுட்டிக் காட்டி மேக்னா கூற

“அவங்க சொல்ற தகவல்கள் எல்லாம் உங்களை தெரிஞ்சதா சொல்றவங்களோடதும், பல பேர் கதையை கேட்டு ஒரு புது கதையை சொல்றவங்களோடதும் தகவல் பட் எனக்கு வேண்டியது உண்மையான நிலவரம் அது உங்க கிட்ட மட்டும் தான் இருக்கு” அவனோ அவளிடம் இருந்து அவள் மூலமாக தகவல்களை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று உறுதியோடு நின்று கொண்டிருந்தான்.

“மேடம் நடந்த எல்லா விஷயங்களும் உங்களுக்கு தெரியும் உங்க பிரண்ட்க்கு அதை எல்லாம் சொல்லுங்க வீணா இப்படி வந்து குறுக்கு கேள்வி கேட்டு அவர் நேரத்தை வீணடிக்காமல் இருக்க சொல்லுங்க”
தன் பொறுமையை இழந்து சித்தார்த்தின் முகத்தையே வெறித்துப் பார்த்து கொண்டு அவள் கூற

ஜெஸ்ஸியும் அவளது மறுப்பை உணர்ந்தவளாக அதற்கு மேல் அங்கு நிற்பது சரி இல்லை என்பதை புரிந்து கொண்டு அவனருகில் வந்து
“அது தான் அந்த பொண்ணு அந்த கேஸைப் பற்றி பேச விருப்பமில்லைன்னு சொல்லுறா தானே அதற்கு மேலும் நீ இப்படி துருவித்துருவி கேள்வி கேட்குறது சரி இல்லை சித்தார்த் வா போகலாம்” அவன் கை பற்றி இழுக்க அவனோ அந்த இடத்திலேயே அசையாமல் நின்றான்.

“எல்லோரும் கிளம்புங்க நேரமாச்சு! கிளம்புங்க! கிளம்புங்க! பாசத்தை எல்லாம் இன்னைக்கே கொட்டி முடிக்காமல் கிளம்புங்க! நாளைக்கும் வேணும்” என்றவாறே அந்த சிறைச்சாலையின் காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் பார்வையாளர்கள் நேரம் முடிந்ததற்கு இணங்க அங்கு நின்று கொண்டிருந்த கைதிகளின் உறவினர்களை எல்லாம் வெளியே அனுப்பி கொண்டிருந்தனர்.

“அம்மா உனக்கு வேறயா சொல்லணுமா? கிளம்புமா சார் உங்களையும் தான் கிளம்புங்க” சாதாரண உடையில் நின்று கொண்டிருந்த சித்தார்த்தையும், ஜெஸ்ஸியையும் அடையாளம் கண்டு கொள்ளாத காவலாளி அவர்களையும் அங்கிருந்து அனுப்ப எத்தனிக்க மேக்னாவும் எதுவும் பேசாமல் மறுபுறம் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“மேக்னா நீ இப்போ வேணா உண்மையை மறைக்கலாம் ஆனா நர்மதா பற்றி
எனக்கும் தெரியும் என்கிற விஷயம் தெரிஞ்சதற்கு அப்புறமும் உன்னால உண்மையை மறைக்க முடியாது” சித்தார்த்தின் கூற்றில் உடல் நடுங்க, முகமெங்கும் வியர்வை துளிகள் பூக்க அந்த இடத்திலேயே ஆணியடித்தாற் போல நின்றாள் மேக்னா.

“டேய் சித்தார்த்! யாருடா அது நர்மதா? இங்க என்னடா நடக்குது?” குழப்பமாக ஜெஸ்ஸி சித்தார்த்தின் தோள் பற்றி உலுக்கி கேட்கவும்

அவளது கையை தன் தோளில் இருந்து எடுத்து விட்டவன்
“மேக்னா நல்லா கேட்டுக்கோ அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சரியாக இதே நேரம் நானும், ஜெஸ்ஸியும் வருவோம் நீ உண்மையாகவே இந்த கொலையில் என்ன நடந்ததுன்னு சொல்லுற இல்லை இல்லை சொல்லுவ நான் வர்றேன்” என்றவாறே யாரின் பதிலையும் எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி செல்ல

அவளோ
“டேய் சித்தார்த்! நில்லு!” என்றவாறே அவனைப் பின் தொடர்ந்து ஓடிச்சென்றாள்.

“இந்தா பொண்ணு! அது தான் டைம் முடிஞ்சுடுச்சுலே இன்னும் எதுக்கு இங்க நிற்குற கிளம்பு கிளம்பு” வார்டன் பெண்மணி வந்து மேக்னாவின் தோளில் தட்டி கூற

“ஆஹ்! ஹான்! இதோ போறேன்” என்றவள் சில்லிட்டு போய் இருந்த தன் கைகள் இரண்டையும் இறுக்கமாக கோர்த்து கொண்டு மீண்டும் தனது சிறை அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

“டேய் சித்தார்த்! என்னடா நடக்குது இங்க? அந்த கேஸைப் பற்றி தெரிஞ்சுக்கணும்னு சொன்ன நானும் எல்லாம் சொன்னேன் அதற்கு அப்புறம் அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் டீடெய்ல்ஸ் கேட்கணும்னு சொன்ன அதையும் பண்ணேன் இப்போ என்னடான்னா அந்த பொண்ணு கிட்ட நர்மதா பற்றி தெரியும்னு சொல்ற, அடுத்த வாரமும் வருவோம் நீ பதில் சொல்லணும்னு ஆர்டர் போடுற நீ என்ன தான்டா உன் மனசுல நினைச்சுட்டு இருக்க?” ஜெஸ்ஸி மடை திறந்த வெள்ளமாக கேள்விக்கணைகளை சித்தார்த்தை நோக்கி கேட்க அவனோ புன்னகையோடு தன் கைகளை கட்டி கொண்டு அவளை பார்த்து கொண்டு நின்றான்.

“முதல்ல இந்த பல்லை காட்டுறத நிறுத்து” அவனது புன்னகை முகத்தை பார்த்து கோபம் கொண்டவள் அதட்டலாக கூறிய பின்பும் அவன் தனது புன்னகை நிறைந்த முகத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

“எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற ஜெஸ்ஸி? ரிலாக்ஸ்”

“மண்ணாங்கட்டி! இங்க என்ன நடக்குதுனே எனக்கு ஒண்ணுமே தெரியல இதில் ரிலாக்ஸ் ஒண்ணு தான் குறை”

“சரி இப்போ உனக்கு என்ன தெரியணும்? நான் மேக்னா கிட்ட சொன்ன நர்மதா யாரு அது தானே?”

“அது மட்டும் இல்லை நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இந்த கேஸைப் பற்றி விசாரிக்குற? அதுவும் தெரியணும்”

“சரி சொல்லுறேன் முதல்ல நீ பைக்கில் ஏறு” பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு அதை ஸ்டார்ட் செய்தவன் ஜெஸ்ஸியையும் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

“சொல்லு சித்தார்த் என்ன நடக்குது?”

“எனக்கு அந்த பொண்ணை இதற்கு முன்னாடி தெரியவும் தெரியாது அவ டீடெய்ல்ஸும் தெரியாது கோர்ட்டில் பர்ஸ்ட் நீ காட்டும் போது தான் தெரியும்”

“நான் என்ன கேட்டேன் நீ என்ன பேசுற?”

“அட கொஞ்ச நேரம் பொறுமையாக இரும்மா ஆரம்பத்தில் இருந்து சொன்னா தானே உனக்கு புரியும் இடையில் இருந்து சொன்னா நீ மறுபடியும் மறுபடியும் ஆயிரம் கேள்வி கேட்ப”

“ஏய்!”

“இப்போ உனக்கு பதில் வேணுமா? வேணாமா?”

“வேணும் வேணும் நீ சொல்லு நான் எதுவும் குறுக்க பேசல”

“அது!” புன்னகையோடு கண்ணாடி வழியாக ஜெஸ்ஸியைப் பார்த்து தலை அசைத்தவன் அவளது கேள்விகளுக்கு பதில் கூற தொடங்கினான்.

கோர்ட்டில் வைத்து மேக்னாவை பார்த்ததில் இருந்து சித்தார்த்திற்கு அவளைப் பற்றியும்,அந்த வழக்கைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வெகு ஆர்வமாக இருந்தது.

ஜெஸ்ஸியிடம் வார இறுதி நாள் பேசுவதாக கூறி இருந்த பின்பும் அவனது ஆர்வம் குறைந்தபாடில்லை.

அதனாலேயே அடுத்த நாள் அதிகாலை நேரம் கொலை நடந்ததாக கூறப்பட்ட அந்த இடத்தைப் பார்க்க சித்தார்த் புறப்பட்டு சென்றான்.

கொலை நடந்த இடம் என்பதால் வெளியாட்கள் யாரும் உள்ளே சென்று விட கூடாது என்பதற்காக ‘உட் செல்லத் தடை’ என அச்சிடப்பட்ட மஞ்சள் நிற பட்டி அந்த வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்தது.

சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டவன் அந்த தெருவில் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திய அடுத்த நொடி அந்த வீட்டிற்குள் உள் நுழைந்து கொண்டான்.

அங்கே கொலை நடந்து ஒரு மாத காலத்திற்கு மேலாகி இருந்தாலும் அந்த கட்டிடத்தில் நுழைந்ததுமே இரத்த வாடை அவனது முகத்தில் வந்து அடித்தது.

முகத்தை சுளித்துக் கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து முகத்தின் அரை வாசிப்பகுதி மறையுமாறு கட்டி கொண்டவன் அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களாக நோட்டம் விட்டு கொண்டு நடக்கத் தொடங்கினான்.

பலத்த சண்டை நடந்த இடம் போல பொருட்கள் எல்லாம் அங்கும் இங்கும் சிதறி கிடக்க அவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டு வந்தவனுக்கு அங்கே இருந்த எந்த பொருளும் அத்தனை உபயோகமானதாக இருக்கும் என்று தோணவில்லை.

‘இங்கே ஒண்ணும் அவ்வளவு யூஸ் ஃபுல்லா இல்லையே!’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டே வெளியே செல்லப் போனவன் கால்களோ தவறுதலாக கீழே விழுந்து கிடந்த ஒரு புகைப்படத்தில் மிதிபட்டது.

“அய்யய்யோ!” அவசரமாக தன் காலைத் தூக்கியவன் அந்த புகைப்படத்தை பார்க்க அதில் மேக்னாவோடு ஒரு வயதான ஆணும், பெண்ணும் இருக்க அவர்களுக்கு நடுவில் ஒரு சிறு பெண்ணும் இருந்தாள்.

“இது யாரு புதுசா இருக்கு? மேக்னா தன்னோட அம்மாவையும், அப்பாவையும் தானே கொலை பண்ணதாக சொன்னாங்க அப்படின்னா இந்த பொண்ணு யாரு?” யோசனையோடு அந்த புகைப்படத்தை தன் கையில் எடுக்காமல் சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றவன் வெளியில் வாகனங்களின் சத்தம் கேட்கவுமே அவசரமாக அந்த வீட்டில் இருந்து யாரும் கவனிக்கா வண்ணம் வெளியேறினான்.

சுற்றிலும் அந்த இடத்தை மறுபடியும் நோட்டம் விட்டவன் மேக்னாவின் வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு பெட்டி கடையை பார்த்து விட்டு அந்த கடையை நோக்கி நடந்து சென்றான்.

அப்போது தான் அந்த கடையை திறந்து கொண்டு இருந்தார் ஒரு வயதான மனிதர்.

“இந்த கடை உங்களோடதா தாத்தா?” தன் பின்னால் கேட்ட குரலில்

“ஆமா என் கடை தான் இப்போ என்….” என்றவாறே திரும்பிய அந்த வயதான நபர் காக்கி உடையில் நின்று கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் அவசரமாக தன் கையை எடுத்து கும்பிட்டு கொண்டே

“ஸார் உட்காருங்க ஸார்! காஃபி, டீ ஏதாவது போடட்டுமா?” என்று கேட்கவும் புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தவன்

“நல்ல ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க” என்றவாறே சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு தயக்கத்துடன் அவரின் முன்னால் சென்று நின்றான்.

“தாத்தா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் கேட்கவா?” சித்தார்த்தின் கூற்றில் பாலை அடுப்பில் வைக்கப் போனவர் குழப்பமாக அவனைப் பார்த்து கொண்டே

“என்ன விஷயம் ஸார்?” என்று கேட்டார்.

“ஒரு மாதத்திற்கு முன்னாடி அந்த வீட்டில் இரண்டு கொலை நடந்ததே உங்களுக்கு தெரியுமா?” மேக்னாவின் வீட்டை சுட்டிக் காட்டி அவன் கேட்க

ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“ஆமாங்க ஸார் தெரியும் போலீஸ் அடிக்கடி வந்து விசாரிச்சுட்டு எல்லாம் போனாங்க” அவனுக்கு டீயைப் போட்டு கொண்டே அவனது கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டு நின்றார்.

“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ஸார் அது கொலை பண்ணுணுச்சுனு சொன்னதை என்னால இன்னும் நம்ப முடியல அவங்க அம்மா, அப்பாவோட அவ்வளவு பாசமாக இருக்கும் அந்த பொண்ணு” பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே அந்த நபர் டீ நிறைந்த டம்ளரை அவனிடம் நீட்ட

“ஓஹ்!” என்றவாறே அதை வாங்கி கொண்டவன்

“அவங்களுக்கு இந்த ஒரு பொண்ணு தானா?” என்று கேட்டான்.

“இல்லை ஸார் இன்னொரு பொண்ணும் இருந்துச்சு திடீர்னு ஒரு நாள் அந்த பொண்ணு காணாமல் போயிடுச்சு”

“வாட்? காணாமல் போயிடுச்சா?” குடித்து கொண்டிருந்த டீ புரையேற தன் தலையை தட்டி கொண்டே அவரைப் பார்த்து சித்தார்த் கேட்கவும்

ஆமோதிப்பாக அவனை பார்த்து தலை அசைத்தவர்
“ஒரு ஆறு, ஏழு மாதத்திற்கு முன்னாடி அந்த சின்ன பொண்ணு ஸ்கூலில் இருந்து வரும் போது காணாமல் போச்சு ஸார் எல்லா இடத்திலேயும் தேடி பார்த்து கிடைக்கல”

“போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயிண்ட் பண்ணாங்களா?”

“அதெல்லாம் எவ்வளவோ முயற்சி பண்ணாங்க ஸார் ஒண்ணும் பண்ண முடியல” கவலையுடன் கூறவும் அவனது புருவங்களோ யோசனையில் முடிச்சிட்டது.

“அந்த பொண்ணு பேரு என்ன?”

“மேக்னா ஸார்”

“இல்லை இல்லை காணாமல் போன அந்த சின்ன பொண்ணு பேரு”

“அது…ஏதோ ஒரு ந னாவில் வர்ற மாதிரி வருமே…ஆன்! நர்மதா ஸார்! அந்த இரண்டு பொண்ணுங்களும் ரொம்ப தங்கமான பசங்க என்னை பார்க்கும் நேரமெல்லாம் தாத்தான்னு ரொம்ப பாசமாக கூப்பிடுவாங்க ஆனா இப்போ இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும்!” நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே அவர் கூற

“நர்மதா” ஒரு முறை அந்த பெயரை தனக்குள் கூறி பார்த்து கொண்டவன்

“இந்தாங்க டீக்கு காசு” என்று இருபது ரூபாய் நோட்டு ஒன்றை அவர் முன்னால் வைத்து விட்டு அந்த தெரு முனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

‘இந்த சின்ன பொண்ணு பற்றி எந்த தகவலும் இந்த கொலையை பற்றி பேசும் போது வரலயே’ மீண்டும் மீண்டும் அந்த விடயத்தை தன் மனதிற்குள் யோசித்து பார்த்தவன் ஜெஸ்ஸியிடம் இந்த வழக்கைப் பற்றி பேசும் போது அவள் ஏதாவது இது பற்றி கூறுகிறாளா பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அந்த விடயத்தை பற்றியும் இவனிடம் கூறியவள் அந்த சிறு பெண் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை அதனால் அந்த கேஸை முடித்து விட்டார்கள் என்று இதற்கு முன்னால் அங்கு வேலை பார்த்த இன்ஸ்பெக்டர் கூறியதாக கூற அவன் மனதிற்கோ ஏதோ ஒரு நெருடல் உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

ஜெஸ்ஸி அந்த கொலை நடந்த நேரத்தில் தான் இந்த போலீஸ் ஸ்டேஷனிற்கு மாற்றலாகி வந்து இருந்ததனால் அந்த சிறு பெண் பற்றி முழுமையான எந்த தகவல்களும் அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.

இப்போது மேக்னா தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று தங்களை தவிர்க்க வேறு வழியின்றி நர்மதாவின் பெயரை அவள் முன்னால் சித்தார்த் உபயோகித்து இருந்தான்.

அந்த பெயரை கேட்டதுமே மேக்னாவிடம் தெரிந்த மாற்றங்களை எல்லாம் குறித்து கொண்டவன் அதை வைத்தே இந்த கொலை வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான்.

“அடப் பாவி! அப்போ மேக்னா கிட்ட நீ பொய் சொன்னியா?” சித்தார்த் கூறியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ச்சியான ஜெஸ்ஸி அவனது தோளில் அடிக்க

புன்னகையோடு கண்ணாடி வழியாக அவளை பார்த்து கண் சிமிட்டியவன்
“யாஹ்!” என்று தலை அசைத்தான்.

“ஏன்டா இப்படி பண்ண? இப்போ அடுத்த வாரம் அந்த பொண்ணு நர்மதா பற்றி கேட்டா என்னடா சொல்லுவ?”

“ஏதாவது ஒரு கதையை சொல்ல வேண்டியது தான் அந்த பொண்ணு எங்க இருக்கா? எப்படி இருக்கான்னு தான் யாருக்கும் தெரியாதே! மேக்னாவிற்கு மட்டும் தெரிஞ்சு இருக்கவா போகுது?” சித்தார்த் சிரித்துக் கொண்டே ஜெஸ்ஸியைப் பார்த்து கண்ணடித்துக் கூற

பதிலுக்கு புன்னகத்து கொண்டே அவனது தோளில் தட்டியவள்
“நீ வசமாக எதிலேயாவது மாட்டிக்கப் போற அப்போ இருக்கு உனக்கு” என்று கூறவும்

அவனோ
“இந்த சித்தார்த் பிரச்சினையை தேடி போவானே தவிர அவனை தேடி எந்த பிரச்சினையும் வராது” என புன்னகையோடு கூற ஜெஸ்ஸி மட்டுமின்றி கடவுளும் அவனது நிலையை எண்ணி சிரித்துக் கொண்டார்.

மறுபுறம் தனது சிறை அறைக்குள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்த மேக்னாவின் முகமோ அச்சத்திலும், குழப்பத்திலும் நிறைந்து போய் இருந்தது.

“நர்மதா இருக்குற இடம் அந்த ஆளுக்கு எப்படி தெரியும்? யாரு அந்த ஆளு? அவனுக்கும் இந்த கேஸுக்கும் என்ன சம்பந்தம்?” பலத்த யோசனையோடு மேக்னா நடந்து கொண்டிருக்க அந்த வழியாக நடந்து சென்ற வார்டன் பெண்மணி அவளது அறை வாயிலில் தயங்கி நின்றார்.

“என்ன ஆச்சு மேக்னா?” திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவள் வார்டன் பெண்மணியைப் பார்த்ததும் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டே அவரின் முன்னால் வந்து நின்றாள்.

“என் பேரை சொல்லி என்னை தெரிந்த மாதிரி பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?” மேக்னா முகம் சிவக்க கோபமாக அவரை முறைத்து பார்க்க

அவரோ தன் தலையை குனிந்து கொண்டு
“ஸாரி மேக்…ஸாரி ம்மா நீ டென்ஷனாக இருந்திய்யா அது தான் கேட்டேன்” என்று கூறவும்

கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவள்
“போனை கொடுங்க” என்று தன் கையை அவரின் புறம் நீட்டினாள்.

அவளது கூற்றில் தயக்கத்துடன் சுற்றிலும் ஒரு முறை திரும்பி பார்த்தவர் தன் போனை மெல்ல அவளது கையில் வைத்து விட்டு யாராவது வருகிறார்களா? என்று நோட்டம் விடத் தொடங்கினார்.

போன் கையில் கிடைத்ததுமே அவசரமாக ஒரு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்ட மேக்னா சிறிது நேரம் பேசி விட்டு மறுபடியும்
போனை அவரிடம் வந்து கொடுத்தாள்.

“என்ன ஆச்சு ம்மா?” அவரது கேள்வியில் மேக்னா கோபமாக அவரை நிமிர்ந்து பார்க்க

அவரோ
“இல்லை இல்லை நான் எதுவும் கேட்கல” என்றவாறே அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.

கோபத்துடன் தன் முன்னால் இருந்த கம்பிகளை இறுகப் பற்றி கொண்ட மேக்னா
“நர்மதா இருக்குற இடம் எனக்கு மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் போது அந்த இன்ஸ்பெக்டர் என் கிட்டயே பொய் சொல்லி இருக்கான் வர்ற ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் இங்க அவன் வருவான் தானே நான் யாருன்னு அப்போ அவனுக்கு காட்டுறேன்” கண்கள் சிவக்க தன் மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டு நின்றாள்……

error: Content is protected !!