உயிர் தேடல் நீயடி 20

கேள்விப்பட்ட செய்தியில் அதிர்ந்த காவ்யதர்ஷினியின் கண்களும் முகமும் கலக்கத்தை பூசிக்கொண்டன. விபீஸ்வரை அதிர்ச்சியோடு பார்த்து நின்றாள் அவள்!

விபீஸ்வர் அவளின் முகமாற்றத்தை கவனித்தும், சட்டை செய்யாமல் ஆடை உற்பத்தி ஆலையின் பொறுப்பாளரோடு பேசியபடி நடந்தான். காவ்யா ஒருவித பதற்றத்துடன் அவர்களை தொடர்ந்தாள்.

இன்று அவர்கள் ஆடைகள் உற்பத்தி ஆலையை மேற்பார்வையிட வந்திருந்தனர். எங்கும் ராட்சத இயந்திரங்கள் இயங்கி கொண்டிருக்க, வழக்கமான வேலைகள் தோய்வின்றி நடைந்தேறி கொண்டிருந்தன. எங்கும் வண்ண வண்ண நூல்கள் இயந்திர தறியில் வண்ண ஆடைகளாக உருவாகிக் கொண்டிருந்தன. அவற்றின் ஊடே அனைத்தையும் கவனித்தபடி நடந்து வந்த மூவரும் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.

அந்த அறை சிறிதாயினும் தேவையான வசதிகளுடன் நேர்த்தியாக அமைந்திருந்தது. மேலும் சில வேலைகளையும் கோப்புகளையும் அவர்கள் சரிபார்த்திருக்க, காவ்யா விபீஸ்வரை வித்தியாசமாக சற்று கலவரமாக பார்த்திருந்தாள்.

தன் பணியை முடித்து கொண்டு ஆலை பொறுப்பாளர் வெளியே நகர்ந்து விட,
“என்னை அப்படி குறுகுறுன்னு பார்க்காத கவி! அப்புறம் ம்ம்…” விபீஸ்வர் குறும்பாக இழுக்க,

“விளையாடுற விசயமா சர் இது, ஓர் உயிர் போயிருக்கு சர்!” அவள் முகத்தில் அதிர்ச்சியும் கலவரமும் போட்டியிட்டது.

“நீ இவ்வளவு டென்ஷன் ஆக அவசியம் இல்ல காவ்யா, அந்த மாணிக்கம் கருணா கிட்ட இருந்து தப்பிக்கிறேன் பேர்வழின்னு அந்த ஓல்ட் பில்டிங் மேல இருந்து குதிச்சிருக்கான். ஸ்பாட் அவுட்” அவன் சாதாரணமாக விளக்க,

“எவ்வளவு ஈஸியா சொல்லிட்டிங்க சர், இதுக்கு பேர் கொலை…! அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அதுக்காக உயிரை எடுக்கிறது பாவம் சர்” அதைப்பற்றி நினைக்கவே இவள் உள்ளம் நடுங்கியது.

விபி தன் இடத்தில் இருந்து எழுந்து வந்து அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எனக்கும் உயிரோட வேல்யூ தெரியும், அதான் அவன் உடம்புல உயிரை மட்டும் விட்டு வைக்க சொல்லி இருந்தேன். இப்ப அங்க நடந்தது தற்கொலை. நீ வீணா குழப்பிக்காத” என்றவனின் கைகள் புது பழக்கமாய் அவள் கரத்தை பற்றி ஆறுதலாக அழுத்தின.

“இந்த ஒருவாரமாவா அந்த மாணிக்கத்தை அடைச்சு வச்சிருந்தீங்க! ஏன் சர்?” அவள் கேள்வி திகைப்பாக வந்தது.

“பின்ன, உன்ன கைநீட்டி அடிச்சவனை அப்படியே விட சொல்றீயா?” என்ற அவன் முகத்தில் ஏறிய கடுமைக்கு சற்றும் பொருந்தாமல்‌ அவன் மற்றொரு கரம் அவளின் அறைவாங்கிய கன்னத்தில் மென்மையாக பதிந்தது.

காவ்யா தனக்குள் ஏதோ தடுமாறுவதை போல் உணர்ந்தாள். அவனின் உரிமையும் இத்தனை நெருக்கமும் அவளுக்கு வேறேதோ உணர்த்துவதாய்,
மூளைக்குள் பொறி தட்ட சட்டென எழுந்து விலகி நின்றாள்.

முன்பு போல் அவளின் விலகலை இப்போது ஏற்றுக் கொள்ள முடியாமல், “கவி…!” கண்டனமாக அவன் குரல் ஒலித்தது.

“ஏன் சர், என்னோட விசயத்தில நீங்க தேவை இல்லாம இவ்வளவு இன்வால்வ் ஆகுறீங்க?” காவ்யா பதற்றமாக வினவ,
“ஏன்னா? நீ என்னோட கவி…!” அவளை நேர் பார்வையாய் பார்த்து விபீஸ்வர் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் தந்து தன் மனதை உரைக்க, அதிர்ச்சியில் கண்கள் அகல விரிய முகம் வெளிற நின்றாள் காவ்யதர்ஷினி.

தான் அப்படி சொன்னதும் இவள் கண்கள் இப்படி தான் விரியும் என்று நினைத்திருந்தவனின் எதிர்பார்ப்பு நிறைவேறிட அவனிதழ் குதூகலமாய் விரிந்தது.

“நான் நான் எப்படி? நீங்க… ஏதோ தப்பா…!” என்று பதறி திணறி நின்றவளின் முகம் நோக்கி இவன் கரம் வாஞ்சையோடு உயர, அவள் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டாள்.

உயர்ந்த தன் கரத்தை வேகமாய் உதறி விட்டு ஆழ மூச்செடுத்தவன், “நான் நீயாகி போய் ரொம்ப நாளாச்சு கவி, அதை நீதான் இன்னும் புரிஞ்சுக்காம இருக்க”

“…!”

“முன்ன காதலுக்கு ஸ்பெல்லிங் என்னனு கேட்டவனுக்குள்ள, இப்ப காதலை உணர வச்சது நீதான்!”

காவ்யா முதல் கட்ட அதிர்விலிருந்து விலகி தன்னை மீட்டுக் கொண்டாள். “காதலா? அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா சர் உங்களுக்கு? தினம் ஒரு பொண்ணு தேவைன்னு தேடுற உங்களுக்கு எல்லாம் காதல் எதுக்கு சர்?” என்று கோபமாக வார்த்தைகளை வீசினாள்.

அவளின் கேள்வியில் விபீஸ்வர் கண்களை அழுத்தி மூடி திறந்து தலையை குலுக்கிக் கொண்டான். “உன்ன பார்க்கிற வரைக்கும் அதெல்லாம் எனக்கு தப்பா தோணல கவி… நான் வளர்ந்த சிச்சுவேஷன்ல அதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸியா கிடைச்சது, நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்… நானா எதையும் தேடி போகல”.

“வாவ், எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டிங்க சர்…! இது உங்க லைஃப், நீங்க எப்படின்னா போங்க, அதுக்குள்ள என்னை ஏன் இழுக்க ட்ரை பண்றீங்க?” காவ்யா ஆதங்கமாக கேட்க,

“நானில்ல, நீதான்…! என் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் மாத்தி வச்சது நீதான்! என் ஃபீலிங்க்ஸ நான் சொல்லும் போதும் புரிஞ்சுக்காம அடம்பிடிக்கிறதும் நீதான்!” விபீஸ்வரும் அவளுக்கிணையாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

“நடு ராத்திரியில, குடி போதையில என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண முயற்சி செஞ்சீங்க இல்ல! அப்பவே உங்க கேவலமான ஃபீலிங்கஸ நல்லாவை புரிஞ்சிகிட்டேன் சர்” அவள் வெறுப்பான பதிலை வீசினாள்.

“எனக்கு அப்ப தெரியாதே, நீதான் என் காதல்னு! இனி என் மொத்த வாழ்க்கைக்கும் நீ மட்டும்தான்னு… தெரிஞ்சு இருந்தா அப்படி ஒரு முட்டாள் தனத்தை செஞ்சிருக்கவே மாட்டேன்…” அவனிடத்திலும் கசந்த பதில் தான் வந்தது.

“நான் உங்க காதல் இல்ல சர், மறுபடியும் அப்படி சொல்லாதீங்க… அந்த மாணிக்கத்துக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ரெண்டு பேரும் எங்கிட்ட… ச்சே ஆஆஅ…!” விபீஸ்வர் ஆவேசமாக அவள் கையை முதுகுபுறமாய் சுழற்றி மடித்து, அவள் முகத்தை தனக்கு நேராக கொண்டு வந்திருந்தான்.

“அந்த ராஸ்கலும் நானும் உனக்கு ஒண்ணா? சொல்லு காவ்யா?” விபீஸ்வரின் கோப பார்வை அவளை தகித்தது.

“…!”

“அன்னைக்கு நைட் அத்தனை போதையிலும் நீ ‘ஓகே’ சொல்லணும்னு உன் ஒரு வார்த்தை பதிலை தான் கேட்டுட்டு இருந்தேன்… உனக்கு கைல அடிபடாம இருந்திருந்தாலும் நீ சம்மதம் தராம உன்ன நான் நெருங்கி இருக்க மாட்டேன், புரிஞ்சுதா?” அவன் கைகள் தந்த அழுத்தத்திலும் அவன் பார்வை வீச்சிலும் இவளின் தொண்டைக்குழி உலர்ந்து கண்கள் கலங்கியது.

அவளின் ஏறி இறங்கிய தொண்டைக்குழியிலும், கண் கண்ணாடிக்கு பின் கலங்கிய கண்களையும் பார்த்து இவன் முகமும் சுருங்கியது.

“இனி எப்பவுமே இப்படி பேசாத காவ்யா, உன்னால என் மனசை புரிஞ்சிக்க முடியலன்னா பரவால்ல, நான் உன்மேல வச்சிருக்க காதலை கொச்சபடுத்தாத… அன்னிக்கும் உன்கிட்ட இதைதான் கேட்டேன்… இப்பவும் உன்கிட்ட அதையே தான் கேட்கிறேன்! எனக்கு நீ வேணும் காவ்யா… என் வாழ்நாள் முழுக்க நீ எனக்கே எனக்கா வேணும்…!”

இவன் பார்வை அவளிடம் காதலை யாசிக்க, அவள் கண்கள் மிரண்டு விரிந்தன.

சின்ன சிரிப்பை சிதரவிட்டவன்,
“நானும் ஒருத்தி கிட்ட பிரப்போஸ் பண்ணுவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்ல, ஆனா இப்ப… லவ் யூ டி சோடாபுட்டி…!” என்று தன் காதலை சொன்னவன் பார்வை, இன்னும் தன் கைப்பிடியில் சிக்கி நிற்கும் பெண்ணவளின் அரும்பிதழில் பதிந்து நின்றது.

“நீ கோபபடுவன்னு தெரியும்… பட் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… சாரிடீ” என்றவன் அவளின் மென்னிதழில் அழுத்தமாய் முத்தமிட்டு விடுவித்தான்.

காவ்யா இருகைகளாலும் தன் வாய்மூடி அதிர்ந்து நின்று விட்டாள். அடுத்ததை யோசிக்க கூட இயலாமல் அவள் உள்ளும் புறமும் ஸ்தம்பித்து போயிருந்தன அந்த சில கணங்களில்…

ஒற்றை இதழணைப்பு!

விபீஸ்வரை பொருத்தவரை அது வெகு சாதாரண ஒன்று. தன் ஆழமான நேசத்தை வெளிப்படுத்தும் எளிய செய்கை. ஆனால் காவ்யதர்ஷினி துடிதுடித்து தான் போனாள். அவளுக்குள் பிரித்தறிய இயலாத பல உணர்வுகளின் பிரவாகம்!

தனக்கு நேர்ந்ததை முழுதாக உணரவும் அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. ஆத்திரம், கோபம், ஆவேசம், வெறுப்பு என்ற உணர்வுகளை தாண்டி அவளுள் கலக்கமும் ஒருவித பயமும் தான் பரவியது. அடுத்த நொடியே அங்கிருந்து வேகமாக அகன்றிருந்தாள்.

விபீஸ்வரின் அழைப்பு குரல் கூட அவளின் செவியை எட்டவில்லை. தான் எதிலேயோ சிக்கிக் கொண்டது போலவும் இப்போதே அதிலிருந்து விலகி ஓட வேண்டும் போலவும் அவளுள்ளம் பரிதவித்திருந்தது.

வீடு வந்து சேர்ந்தும் கூட அவளின் இதய துடிப்பின் வேகம் மட்டுபட மறுத்தது. பார்கவி கேட்ட கேள்விகளை கூட அவளால் புரிந்துகொள்ள இயலாத நிலை. அவனின் அத்துமீறலிலேயே அவளின் சிந்தனை சிக்கிக் கொண்டிருந்தது.

நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டவள், ஷவரை திறந்து விட்டு கொட்டிய நீரில் அப்படியே நின்றிருந்தாள். தன் இதழ் தகிப்பில் இருந்து அவன் தடத்தை அழித்துவிட முடியுமா என்று முயன்றாள். முடியவில்லை கலக்கமும் கண்ணீரும் மட்டும் தான் மிஞ்சியது.

காவ்யா தலையை வேகமாக அசைத்து சிதறும் தன்னம்பிக்கையை மீட்டுக் கொள்ள முயன்றாள். தன் இதழ்களை உள்ளங்கையால் அழுத்தி மீண்டும் மீண்டும் துடைக்க, உதடுகள் வலிக்க செய்தன.

தீஞ்சுவையாய் தித்திக்க வேண்டிய முதல் முத்தம் அவளுக்குள் கசப்பை தந்தது பரிதாபம் தான்.

அன்று இரவு முழுவதும் அவளின் தூக்கம் தூரமாகி போயிருந்தது. விபீஸ்வரின் தொடர்ந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளில் அவளின் அலைப்பேசியும் உயிரற்று போனது.

அன்று அவன் தேவைக்காக தன்னை நெருங்க முடியாமல் போக, காதல் பேரைச் சொல்லி இப்போது தன்னை நெருங்க முயல்கிறான் என்று தான் அவளறிவுக்கு தோன்றியது.

நேற்றைய கலக்கத்தை விலக்கி விட்டு, சிதறிய துணிவையும் தைரியத்தையும் திரட்டிக் கொண்டு இன்று வேலைக்கு போவோமா? வேண்டாமா? என்ற அலைப்புறுதலோடு காலை வேளையில் குழம்பி தவித்திருந்தாள் அவள்.

தன் நிலையை யாரிடம் சொல்வது புரியவில்லை. அம்மாவிற்கு தெரிந்தால் அவரால் தாங்கி கொள்ளவும் முடியாது. சிவா இப்போது தான் வேலையில் சேர்ந்து இருந்தான் தனக்கான வேறு வேலையும் கிடைத்தப் பாடில்லை. இன்னும் முழுதாக ஒரு மாதகாலம் விபி நிறுவனத்தில் பணியாற்றி தீர வேண்டிய கட்டாயம் வேறு உள்ளது… ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க அவள் தலை விண்விண்ணென்று வலி எடுத்தது.

காலை உணவையும் மறுத்துவிட்டு கைப்பையை எடுத்து கொண்டு வெளியே வந்துவிட்டாள். எங்கு செல்வது? இனி என்ன செய்வது? எதுவும் விளங்கவில்லை அந்த பேதைக்கு. விபீஸ்வர் என்னும் மலைக்கு முன் இவள் தன்னை சிற்றெரும்பாகவே எண்ணமிட்டாள். ‘அவன் புறம் தன் மனதை சரியவிட்டு விட்டேனா?’ என்று தன்னையே சுயபரிசோதனையும் செய்து பார்த்தாள். எதுவும் தெளிவாக புரியவில்லை.

எண்ணங்களின் மோதலில் தனது ஸ்கூட்டியை எடுத்து கொள்ளவும் மறந்து, ஆட்டோ, பேருந்து எதிலும் ஏறவும் நினைவற்று சாலையோரமாக அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

‘விபீஸ்வரிடம் தன் நிலையைப் பற்றி சொன்னால் அவன் புரிந்து கொள்வானா?’ அவளுக்கு யோசனை தோன்ற, ‘எப்படியும் பேசி தான் ஆகவேண்டும்!’ என்ற முடிவிற்கு அவள் வருவதற்கும் அவளின் குறுக்கே விபீஸ்வரின் கார் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

காவ்யா மிரண்டு விழிக்க, அவள் பக்க கார் கதவை திறந்து விட்டவன், ‘ஏறு’ என்பதாய் அவளை பார்த்தான்.

இறுகி தெரிந்த அவன் முகத்திலும் சிவந்திருந்த கண்களில் அழுத்தமான பார்வையிலும் காவ்யா ஆழ மூச்செடுத்து கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். அவன் கைகளில் கார் சாலையில் வேகமெடுத்தது.

“எங்க‌ போற?” விபியின் கேள்வி சீறலாக வர, அவள் பதில் மௌனமாக மட்டுமே இருந்தது

அவளை திரும்பி பார்த்தவன், “நடந்தே ஆஃபிஸ் வரதா பிளானா?” அவன் கோபம் அவனின் கேள்வியில் தெறித்தது.

“இல்ல சர்… அது”

“இனிமே என்னை சார்னு கூப்பிடாத, பேர் சொல்லி கூப்பிட பழகிக்க” அவன் குரல் கர்ஜனையாக ஆணையிட,
காவ்யாவின் பார்வை அவனை உறுத்து பார்த்தது. “முடியாது சர்… நீங்க முதலாளி, நான் உங்களுக்கு கீழ வேலை செய்ற ரொம்ப சாதாரணமான தொழிலாளி, இதை தாண்டி உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்ல… எதுவும் வேண்டாம்” காவ்யாவின் உறுதியான பதிலில் கார் திருப்பத்தில் வேகமாக திரும்பி ஒரு வேக குலுக்கலோடு நின்றது.

விபீஸ்வர் அவள் மேல் கரத்தை அழுத்த பற்றி தன் பக்கம் இழுத்து, “எதுவும் வேண்டாம்னா என்ன அர்த்தம்? எனக்கு நீ வேணும் காவ்யா! உன் காதல் வேணும்… நைட் ஃபுல்லா எத்தனை கால்ஸ், மெஸேஜ்ஸ் ஒரு சின்ன ரிப்ளே கூட பண்ண தோணல இல்ல உனக்கு… ஏன்டி?” அவன் ஆத்திரம் அடங்காமல் கேட்க, அவன் சிவந்த கண்களில் தெரிந்த கோபமும் அவன் பிடியின் அழுத்தமும் இவளை கலங்கடித்தது.

“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல… இப்ப கொஞ்ச நாளா தான் நாங்க சந்தோசமா இருக்கோம்… என் குடும்பத்தோட நிம்மதியை கலச்சிடாதீங்க… என்னை விட்டுடுங்க, பிளீஸ்…” அவள் சிறு குரலாய் தாழ்ந்து கேட்க, இவன் கரம் தானாய் தளர்ந்து விலகியது. தன்னவளின் கலங்கிய முகம் இவனை அசைத்து பார்க்க தான் செய்தது.

நேற்று போல இப்போதும் தன்னிடம் அத்துமீறி நடந்துக் கொள்வானோ? என்ற பயத்தில் காவ்யா பொறுமையாகவே அவனிடம் தன் நிலையை புரிய வைக்க முயன்றாள்.

“நம்ம காதலுக்கும் உன் ஃபேமிலிக்கும் என்ன சம்பந்தம்?”

“என் குடும்பம் தான் சர் என்னோட வாழ்க்கை, சந்தோசம் எல்லாம்… காதலுக்கும் எனக்கும் ஒத்து வராது, உங்களுக்கும் எனக்கும் கூட ஒத்து வராது. இனி இதைப்பத்தி பேசாதீங்க”

அவன் கண்கள் சுருக்கி ஆழ்ந்து அவளை பார்த்தான். “என்ன தான் பிரச்சனை உனக்கு?”

“நீங்க இவ்வளவு மோசமா என்கிட்ட நடந்துக்கிறது தான் சர், அதுவும் எம்மேல உங்களுக்கு காதல் வந்ததா வேற சொல்றீங்க! அதை என்னால நம்ப கூட முடியல”

“என் மனசுக்குள்ள இருக்க ஃபீலிங்ஸ எப்படி உனக்கு ப்ரூஃப் பண்றது?” விபீஸ்வர் புரியாமல் கேட்டு வைத்தான்.

“நீங்க எதையும் ப்ரூஃப் பண்ண தேவையில்ல சர், உங்க காதல் மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல… இனியும் காதல் பேரை சொல்லி என்னை நெருங்க முயற்சி பண்ணாதீங்க”.

தெளிவாக அழுத்தமாக சொல்லி விட்டு, இறங்கி வேகமாக நடந்து சென்றவளை காரில் அமர்ந்தபடியே பார்த்திருந்தான் விபீஸ்வர். அவளை தடுக்கவோ அழைக்கவோ தோன்றவில்லை அவனுக்கு.

அவள் ஒருத்தி தன் மனதில் ஏற்படுத்திய காதலின் தாக்கத்தை அவளுக்கு புரிய வைக்க வந்தவன், அவளின் மனதில் முழுவதுமாய் தான் எதிர்மறை தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தி இருப்பதை நினைத்து பேச்சற்று போயிருந்தான்.

அவன் மீதும் அவனின் காதல் மீதும் நம்பிக்கை இல்லை என்ற வார்த்தையில் அவன் உயிர் காதலை கேட்பாரற்று வீதியில் வீசி சென்றிருந்தாள் அவள்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி காவ்யா ஏறி போகும் வரை இவன் பார்வை அவள் மீதே படிந்திருந்தது.

அவன் முகம் ஏமாற்றத்தையும் இறுக்கத்தையும் அதை தாண்டிய யோசனையையும் மொத்தமாக பிரதிபலித்து கொண்டிருந்தது.

.
.
.

காவ்யதர்ஷினியின் ஒவ்வோரு உதாசீனமும் அலைகழிப்பும், அவள் தன்னை ஒரு பொருட்டாய் மதியாமல் விலகி செல்ல செல்ல விபீஸ்வருக்கு அவளின் மீதான பிடித்தம் மேலும் மேலும் கூடத்தான் செய்தது.

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!