Kadhalil sothappuvathu eppadi 2

அத்தியாயம் – 2

அவனையே பார்த்துக் கொண்டு தனது சீட்டில் அமர்ந்து, தனதுபேக்கைஅதற்குரிய இடத்தில்வைத்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் மீண்டும் கலைப்பதாய்,

“இரண்டு லட்சம், உன் அழகிற்கு சரியான விலை தான்” கூறியபடியே பலமாக சிரித்தான் அவன்.

அவனை ஒருமாதிரியாக பார்த்தவள் தனது கையில் ஒரு புக் எடுத்துக் கொண்டாள்.

அணிந்திருந்த கிளாஸை கழட்டியவன், அவளை மேலிருந்து கீழாக தன் லேசர் பார்வையால்படம் பிடித்துக் கொண்டான்.

ஏதோ உணர்த்த நிமிர்ந்து பார்த்த மிது அந்த கண்களை கூர்ந்துப் பார்த்தாள் ‘யப்பா…! என்னா பார்வைடா சாமி! ஆளை துளைப்பது போன்ற பார்வை! இதுவரைஅவள் யாரிடமும் கண்டிராத பார்வை அது!

அந்த விழிகளில் சிறிது கருணையோ? சாந்தமோ? இல்லாமல்ஏதோ ஒரு கள்ளத்தனம் அவன் கண்களில் தெரிய மிரண்டுப் போனாள் மிது.

‘தவறான இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமோ?’ மிரண்டவள் தன்னை தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ‘என்னை மீறி எது நடந்து விடும்’ அலட்சியமாக அவனை எதிர் கொண்டாள்.

அவள் பார்வையை கண்டவன், அவளை விட அலட்சியமாய் தன் பைகளை துளாவி சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

புகை விட்டவாறு நெற்றியை தட்டி யோசிப்பது போல் நெற்றியைப் பிடித்தவன் உன் கூட பெரிய வயிற்றைக் கொண்டு ஒரு பெருசு வந்துதே, “அவர் பேர் என்ன சொன்ன?” என்றான் யோசிப்பதுப் போல்.

“கந்து மாமா” பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.

“ஒஹ்… கந்து மாமா… சொங்கு மாமா… தொப்பை மாமா… ரைமிங்கா நல்லா இருக்குல்ல”கூறியபடியே பெரும் குரலெடுத்து சிரித்துக் கொண்டான் அவன்.

அவனையே விசித்திரமாக தான் பார்த்தாள் ‘கொஞ்சம் லூசாய் இருப்பானோ?’

நிறைய பணம் சேர்ந்ததும் சில பணக்கார வர்க்க லூசுகளை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள். ‘அந்த லிஸ்டில் இவனும் இருப்பானோ?’ சிந்தித்தப்படி அவனை பார்த்துக் கொண்டாள்.

“என்ன? சரியான லூசாய் இருப்பான் என்ற நினைப்பு மனதில் ஓடுகிறதோ?” முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி சிரித்தபடிக் கேட்டான்.

எவ்வளவு, துல்லியமாக தன் மனவோட்டத்தை படிக்கிறான்! இவன் சாதரணமானவன் இல்லை! மிரட்சியாகஅவனைப் பார்த்திருந்தாள்.

அவள் விழிகளை உற்றுப் பார்த்தவன், “உன் மை தீட்டிய அழகு விழிகள், இந்த மருண்ட படப்படப்பான பார்வை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” சாதரணமாக உரைத்தான்.

இப்பொழுது அவனை ஆச்சரியமாக பார்த்தாள் மிது. இத்தனை நேரம் இருந்த அவன் பார்வையும், இப்பொழுது பேசும் சாதாரண வார்த்தையும் அவளை குழப்பியது. எது அவனது உண்மையான முகம்… அவள் இதுவரை இப்படி யாரையும் பார்க்கவில்லை மிகவும் வித்தியாசமானவனாக இருந்தான் இவன்.

அவனையே பார்க்க, இப்பொழுது அவளை, அவன் உற்றுப் பார்க்க தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

அவளின் அந்த வெட்கத்தை ரொம்பவும் ரசித்துப் பார்த்தான்.

கொஞ்சம் நேரம் அவளையே பார்த்திருந்தவன், வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஏதோ நினைவு வந்தவனாக “என் பெயர் என்னன்னு உனக்கு தெரியுமா?” கேள்வி எழுப்பினான் அவன்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், பின் தன் கையில் இருந்த புக்கில் பார்வையை திருப்ப,

“ஏய்?” என அவளை சொடக்கு போட்டு அழைத்தான் அவன்.

நிமிர்ந்துப் பார்க்க, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் அவன்.

இருபக்கமும் தலையாட்டினாள் மிது.

“தலையாட்டினால் போதாதுங்க மேடம். தங்கள் வாயை திறந்து பதிலைக் கூறவும்?”

“தெரியும்” என்றாள் வேகமாக.

“அப்படியா சொல்லு பார்ப்போம்?”

“தெரியும் அவ்வளவு தான்”

தலையை வேகமாக அசைத்தவன் “நான் என் பெயரை சொல்ல சொன்னேன்?’ என்றான் கொஞ்சமாய் முகத்தை சுளித்தபடி.

ஒரு கணம் திடுக்கிட்டு பார்த்துவிட்டு அவன் பெயரை “அ…ர…வி…ந்…த்…” என மெல்ல உச்சரித்தாள்.

“ஆங்… இது தான்… இதை தான் எதிர் பார்த்தேன்… என் பெயரை உன் சின்ன ரோஜா இதழ்கள் உச்சரிக்க வேண்டும். பெண்கள் என் பெயரை உச்சரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்… பிடிக்கும் என்பதை தாண்டி அதில் ஒரு போதை இருக்கு” மீண்டும் அதே சிரிப்பு சிரித்தான் அவன்.

‘சரியான லூசா தான் இருப்பான் போல, இவன் பாட்டியை பார்க்க சம்மதித்தது பெரும் தவறோ?’ மீண்டும் எண்ணிக் கொண்டாள்.

மிக பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டோமோ? முதல் முறையாக மிதுனா மனதில் பயம் எழுந்தது.

“பயபடாதே நான் லூசு இல்லை” அதற்கும் பதில் கொடுத்தான் அரவிந்த்.

‘மறுபடியும் மனதை படித்துவிட்டான். என்ன ஒரு அபார சக்தி. இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

இவனிடம்பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது’ எண்ணியவள் பார்வையை வெளியில் திருப்பிக் கொண்டாள்.

ஆனால், அரவிந்த் அவளை விடுவதாய் இல்லை போலும், சொடுக்கிட்டு அவளை தன் பக்கமாய் திருப்பினான்.

“மிதுனா? ம்ம்… உன் அழகுக்கு ஏத்த பெயர் தான்” ஒரு கணம் யோசித்தவன் போல் நிறுத்தியவன், “இங்க பார் மிதுனா நீ முதலில் என்னை நல்லா புரிஞ்சுக்கணும், அப்போ தான் நாம நட்பா பழக முடியும்?

சங்ககால நட்பு படிச்சிருக்கியா? நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும். இதுக்கென்றே திருக்குறள் நான்கு அத்தியாயங்களை தனியா ஒதுக்கிருக்கு. உனக்கு தெரியுமா?

அதனால் நீ சீக்கிரம் என் உணர்வுகளை புரிந்துக் கொள் அப்போ தான் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா நெருங்க முடியும்” அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

‘நல்லா நெருங்க முடியும்’ என்ற அவனது வார்த்தை அவளை துணுக்குற செய்தது. இதில்‘திருக்குறளை வேற இழுக்கிறானே, சரியான இலக்கிய கிறுக்கனா இருப்பானோ?’

அவள் எண்ணியதை அறிந்தவன் போல் அவன் தொடர்ந்தான். “நான் கொஞ்சம் இலக்கிய கிறுக்கன் தான், என் ரசனையே தனி, என்னோட பொழுது போக்கும் வேற தான்”

‘அதான் பார்த்தாலே தெரிகிறதே, நீஒரு மார்க்கமான ஆளுன்னு’ எண்ணியவள் அசட்டு சிரிப்பை ஒன்றை அவன் அவனை நோக்கி வீசினாள்.

மேலும், ஏதோ சொல்லப் போனவன் சட்டென்று நிறுத்தினான்“வேண்டாம், இப்பொழுது வேண்டாம் நீயே போக போக என்னைப் பற்றி புரிந்துக் கொள்வாள், அப்பொழுது தான் சுவாரஸ்யம் இருக்கும்”மறுபடியும் அதே வெடி சிரிப்பு சிரித்தான் அரவிந்த்.

சிரித்து முடித்தவன், தனதுபேக்கை திறந்து மேகஸின் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான்.

‘அவன் இதோடு பேச்சை நிறுத்தினானே’ நிம்மதி அடைந்தவள் வெளியில் பார்வையை பதித்திருந்தாள். பின்னால் நோக்கி நகரும் இயற்கையை ரசித்து பார்த்திருந்தாள்.

தற்செயலாய்அவன் கையில் இருந்த மேகஸின் பக்கம் பார்வையை திருப்பியவள் அதன் அட்டைப் படத்தைப் பார்த்து மிரண்டுப் போனாள்.

அதுஒரு மாதிரியான மேகஸின் போல, அதன் அட்டை படமே ஒரு மார்கமான கோலத்தில் இருந்தது.

அவள் தன் கையில் உள்ள அட்டை படத்தைப் பார்த்து மிரள்வதைப் பார்த்த அரவிந்த் இதழ்களில் ரகசிய புன்னகை வந்தமர்ந்தது.

அவனின் ரகசிய புன்னகையை கண்டவள் உடனே சிலிர்த்துக் கொண்டாள்.

‘எதுக்கு பயப்படணும்… ஏன்பயப்படணும்?’சிலிர்த்துக் கொண்டாள்.

இந்த முறை அவன் அவளை கவனிக்கவில்லை போலும், அவளின் மன பேச்சுக்கு பதில் கொடுக்காமல் அந்த புக்கில் ஆழ்ந்துப் போனான்.

‘அந்த கருமம் புடிச்ச புக்கில் என்னதுதான் இருக்குதோ, இப்படி இருந்து படிக்கிறான்’ மனதில் புலம்பிக் கொண்டாள்.

ஒருகணம்‘இப்படி முன்ன பின்ன பழக்கம் இல்லாத ஒரு ஆடவனுடன் பயணிப்பது தவறோ?’ என நினைக்க ஆரம்பித்தது மனம்.

ஆனாலும், இரண்டு லட்சம்… முழுதாக இரண்டு லட்சம்? வேறு யாரும் அவளுக்கு கொடுக்க வில்லையே? இந்த புண்ணியவான் தானே தந்தான்.

அதனால் தானே தன் தாயை உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையும் ஆரம்பித்தது. பணம் கிடைத்ததும் அம்மாவின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம்’ அதை எண்ணி மனம் புன்னகையில் விரிந்தது.

அதே நேரம் ஆறு மாதம் இவனுடன் கழிப்பதா? வயதான பாட்டியுடன் இவன் இருந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா? வயதான பாட்டிக்காகவா முழுதாக இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தான்’ அதையும் மனம் சிந்தித்தது.

‘ஒரு வேளை தான, தர்மம் கொடுப்பது போல் முழுதாக கொடுத்துவிட்டானோ? ஒருவேளை பாரி வள்ளளோ?’ எண்ணியபடியே அவனை பார்த்தாள்.

முறுக்கி விடப்பட்ட அடர்ந்த மீசை. அதன் கீழ் கறுத்து, சிறு புன்னகையுடன் சுளித்திருந்த இதழ்களையே ஆச்சரியமாய் பார்த்திருந்தாள்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் அரவிந்த் அவளை கவனிக்கவில்லை… கவனிக்கவில்லை என்பதல்ல அவள் பக்கம் நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை அந்த மேகஸினில் மூழ்கிப் போனான்.

இப்பொழுது அவன் கையில் இருந்த அந்த ஒரு மார்க்க புக் மாறி, ஏதோ பைல் ஓன்று அமர்ந்திருந்தது. அதை கூர்மையாக பார்த்திருந்தான்.

‘ஆபிஸ் கணக்கு வழக்கை பார்க்கிறான்போல்’ அவளே எண்ணிக் கொண்டாள்.

ரயில் தமிழ்நாடு எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. அதிகமாய் இயற்கை வாசம் வீசியது.

‘சொந்த மண்ணையும், சொந்த ஊரையும் தாண்டி பணத்துக்காய் வேலைப் பார்ப்பது என்ன பிழைப்பு?’ எரிச்சலாய் இருந்தது.

‘தனது இயலாமையை பயன்படுதுகிறானோ?’ சிந்தனையாக அவனைப் பார்த்தாள்.

ஊரில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் விட்டு தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான்? இவனைப் பார்த்தால் அத்தனை நல்லவனாய் தெரியவில்லையே?’ யோசிக்க‘உனக்கு தானே பணம் தேவைப்பட்டிச்சு’ மனம்இடித்துரைக்க வெளியே பார்வையை திருப்பினாள்.

தன் முகத்துக்கு நேராக அவன் கைகள் நீண்டு வருவதைக் கண்டு திடுக்கிட்டு பார்க்க,

அவன் தான் அவளை அழைத்திருந்தான்.

“முட்டாள் தனமா யோசிச்சு மனசை சும்மா அலைய விடாதே?” அவன் தான் இலவச உபதேசம் வேறு.

அவன் தன் மனதை படித்து விட்டான் என்பதை விட தன்னை முட்டாள் என்று கூறியது அவளை சிலித்தெழ செய்தது.

முறைத்துக் கொண்டே அவனை பார்த்தவள் “மடையர்கள் ஏதாவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது?”

“நான் மடையனா? அட…! நல்ல பதிலடி தான்” ரசனையாக அவளைப் பார்த்து சிரித்தவன்,

“இதோ பார், உன்னுடைய அழகான தலையை சரித்து, கண்கள்சிமிட்டி எதையாவது நினைத்து கொண்டிருக்கிறாய் அதை தான் வேண்டாம் வீண் யோசனைகளை போட்டு குழப்பிக்காதேஎன்று சொன்னேன்”

அவள் பதில் பேசாமல் அவனை முறைத்தாள்.

“எப்படி முறைத்தாலும் நீ அழகு தான்… மிகவும் அழகு…. பேரழகு” சிலாகித்துக் கூறினான்.

பல டயலாக்குகளை அடித்து வீசியவன் அவளை ரசனையாக பார்த்து வைத்தான். மேலும் அவளை எரிச்சலூட்டுவது போல் பாடல்களை பாடி அவளை கடுப்பின் உச்சத்தில் ஏற்றி வைத்தான்.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்க, பழ வகைகளும், சிப்ஸ் வகைகளும், பிரட், ஒரு நாளிதழும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்தான் அரவிந்த்.

பழங்களை சாப்பிட அவளிடம் நீட்ட, “வேண்டாம்” என மறுத்தாள் மிதுனா.

“இன்னும்ஒரு நாள் முழுதாக பயணம் செய்யணும் பட்டினி கிடப்பதாய் உத்தேசமா?”

அவன் கேட்டதற்கு வேண்டும் என்றே பதில் கூறாமல், தலையை வெளியில் திருப்பிக் கொண்டாள்.

அவனும் அவளை கண்டுக் கொள்ளவில்லை.

அவன் பாட்டுக்கு உட்காந்து பழங்களையும், சிப்ஸ்பாக்கெட்களை பிரித்துகருக்முறுக்கென்றுதின்றுக் கொண்டிருந்தான்.

ரயில் மறுபடியும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

மிதுனா ஜன்னல் வழியாக வெளிப்புறமே பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் தான் வெளியில் பார்ப்பது போல் நடிப்பது, போர் அடிக்க மீண்டும் உள்ளே பார்வை திருப்பினாள்.

எதிரேகுத்துக்கல்லாக அரவை மிசின் அமர்ந்திருந்து அதன் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தது.

இன்னும் அவனை எட்டிப் பார்த்தால் ‘ஏதாவது பேச்சு கொடுத்து மனுசனை சாகடிப்பான்’ எண்ணியவள் அந்த கூபேவையே சுற்றிப் பார்த்தாள்.

கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அவள் முன் சில பிரட் துண்டுகளை நீட்டினான் அவன்.

திரும்பி அவனை பார்த்தவளை,

“ம்ம்… சாப்பிடு?” என்ற அதட்டல் வேறு,

மிதுனா ஒன்றும் பேசாமல் கையில் வாங்கிக் கொண்டாள்.

“பாட்னா எங்கிருக்கிறது தெரியுமா?” குடோன் நிரம்பியதும் தானாக கேள்விகள் பறந்து வந்தன.

“எங்கிருந்தால் என்னக்கென்ன” அதிரடியாக பதில் வந்தது அவளிடமிருந்து.

அவள் பதில் கேட்டு ஒரு நொடி அவள் முகத்தையே கூர்ந்துப் பார்த்தான்.

“உனக்கு திமிர் ஜாஸ்தி தான்… முகத்தில் அப்படியே எழுதி ஒட்டி வச்சுருக்கு”

“புரிந்துக் கொண்டால் சரி”

“என்னிடமே விளையாடுகிறாய்… ம்ம்ம்… எப்படியாவது உன்னை அடக்கணுமே?”

“வீண் பகல் கனவுகளுக்கு நான் எப்பொழுதும் பதில் சொல்வதில்லை?”

“பகல் கனவா?” என்றபடி மீண்டும் அதே சிரிப்பு சிரித்தான் அவன். “பகல் கனவல்ல பேபி… இரவு கனவு… பாட்னாவா… நீ பார்க்க தானே போகிறாய்?” என்றான் ஒரு விதமான சுவாரஸ்யமாக.

கொஞ்சம் பயந்து தான் போனாள் மிது. ஆனாலும் பயத்தை அவனுக்கு காட்டாமல் ‘தன்னை மீறி எது நடந்து விடும், எதுவும் நடக்காது’ தனக்கு தானே தைரியம் கூறிக்கொண்டவள் அவனை ஏளன பார்வை பார்க்க தவறவில்லை.

ஆனால், அவளை எரிச்சல் படுத்த வேண்டும் என்பதற்காகவே அடுத்த வந்த நொடி முழுதும் அவளை விழுங்கும் பார்வையை தொடர்ந்தான் அரவிந்த்.

அவன் தன்னையே பார்ப்பது அவளுக்கு தாங்க முடியாத எரிச்சலாய் இருந்தது. “வேண்டும் என்றே செய்கிறான் ராஸ்கல்’ முணுமுணுத்துக் கொண்டாள்.

“முன்ன பின்ன பெண்களையே பார்க்காததுப் போல் இப்படி பார்க்கிற,‘பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வாயை பிளந்து பார்த்தானாம்’ அப்படி இருக்கு உன் பார்வை” என்றாள் ஏளனத்துடன்.

ஆனால் அவனோ வழக்கமான தனது புன்னகையை சிந்தி, ரசித்து, சிரித்து“நான் இப்படி பார்க்க வேறு ஒரு காரணம் இருக்கு” என்றான் கேலியுடன்.

“அப்படி என்ன காரணம்?”

அவளை ஒரு மாதிரியாக தலை முதல் கால் வரை வருடியது அவன் ஊசிப் பார்வை.