KM-FINAL

                                                           14

 

அன்று இரவு இருந்த கோபத்தில் பங்கஜம் சாப்பிட வராமல் இருந்துவிட, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. சொல்லப் போனால் அவள் வராதது யாரும் கவனிக்கவில்லை.

மணமக்களை அழைத்துக் கொண்டு போய் சேர்த்து அமர்த்தி உணவு பரிமாறி, கேலி கிண்டலுடன் பந்தி நடந்து கொண்டிருந்தது.

அர்விந்த் ரகு பக்கத்திலும், வைஷு அணுவின் பக்கத்திலும் அமர்ந்திருக்க , அர்விந்த் தன் செல்போனில் செல்பி எடுத்தான். நால்வரும் அதில் பதிய, வைஷு பொதுவில் சகஜமாகவே போஸ் கொடுத்தாள்.

அவளை தன் மொபைலில் போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அர்விந்த் எல்லோரையும் சேர்த்து எடுத்ததே.

அவளுக்கும் ஓரளவு அது புரிந்தது.

கை அலம்பும் இடத்தில் அவளைக் கண்டவன் , “தேங்க்ஸ்” என்கவும்,

அவனை சீண்ட நினைத்து , “ உங்க கிட்ட பேசணும், எல்லாரும் தூங்கின பிறகு பொண்ணு ரூம் பக்கத்துல இருக்கற பால்கனிக்கு வாங்க” முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொல்ல,

அவனுக்கு வாயெல்லாம் பல். “கண்டிப்பா பேபி” என குதுகலித்தான்.

“ஹலோ பாஸ். அவ்ளோ சீன் வேண்டாம். உங்க போன் ல இருக்கற என்னோட போட்டோ வ எடிட் பண்ணும். என்னை கட் பண்ணிட்டு அந்த போட்டோ வ சேவ் பண்ணனும். அதுவும் எனக்கு முன்னாடி பண்ணனும். வந்துடுங்க..” கையை துடைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அவனுக்கு மனம் லேசாக வலிப்பது போல இருந்தது.

இருந்தாலும் அடக்கிக் கொண்டு அவளை சந்திக்கும் போது எதாவது செய்து அந்த போட்டோவை யாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

அன்றிரவு புதிதாக கல்யாணம் ஆன பெண்கள் ,  அனு ரகு விற்கு முதலிரவு அறையை தயார் செய்து கொண்டிருக்க, வைஷு அங்கே வந்து எட்டிப் பார்த்தாள்.

 

“ஹே! நீ எல்லாம் இங்க வரக் கூடாது.. போ போ “ என ஒருத்தி விரட்ட,

“அட, என்ன தான் பண்ணிருகீங்கன்னு பாக்கறேன் பா.” உள்ளே பார்க்க,

மிகவும் மெலிதான அலங்காரமாக செய்திருந்தனர். பூக்களை அள்ளிக் கொட்டி மயக்கம் வர வைக்காமல், ரோஜா இதழ்களை மெத்தையில் அழகாக பரப்பி, நான்குபுறமும் கட்டிலை சுற்றி மல்லிகை தொங்கவிட்டு அழகு படுத்தி இருந்தனர்.

ஏ சி யின் குளுமை அங்கே ஒரு ரம்மியமான சூழலை உண்டாக்கி இருந்தது.

“நல்லா இருக்கு” என வைஷு உள்ளே வரப் பார்க்க, அங்கே வந்த நடுத்தர வயது பெண்மணி

“ஒய் சின்ன பொன்னே! கெளம்பு நீ” என விரட்ட,

“போறேன் பெரிய பொன்னே” என நக்கலாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

“அடிக் கழுத” என அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டு சொல்ல, வைஷு ஓட்டமாக அங்கிருந்து சென்றாள்.

செல்லும் வழியில் பங்கஜத்தின் அறையிலிருந்து யாரோ முனகும் சத்தம் கேட்க,

அங்கேயே நின்று விட்டாள். கதவில் காதை வைத்துக் கேட்க,

பங்கஜம் தான் முனகுவது போல இருந்தது.  என்னவோ ஏதோ என சற்று பயந்து தான் போனாள் வைஷு. யாரை அழைப்பது ?

கல்யாணத்திற்கு வந்த முக்கால் வாசி பேர் கிளம்பி விட்டனர்.

மொத்தம் இருந்ததே ஒரு முப்பது பேர் தான். அதிலும் சிலர் அனுவுடனும் சிலர் ரகுவுடனும் , இன்னும் சிலர் உறங்கச் சென்றும் விட்டனர்.

யாரும் கிடைக்காததால், வைஷுவே கதவைத் தட்ட நினைத்து அதன் மேல் கை வைக்க, அது திறந்து கொண்டது.

பங்கஜம் தான் கட்டிலில் படுத்திருந்தாள்.

“மாமி!  என்ன ஆச்சு?” அருகில் சென்று பதட்டமாக அவள் கேட்க,

“நீயா! இங்க எதுக்கு வந்த..?” இருந்த கோபத்தில் கத்த நினைத்து முடியாமல் மீண்டும் அசந்தாள்.

“என்ன ஆச்சுன்னு சொல்லுங்கோ!” அவள் பேசியதை கண்டு கொள்ளாமல் வைஷு கேட்க,

“நீ தான் என்னை சாயங்காலம் பாட்டுப் பாடி அசிங்கப் படுத்திட்டியே, அப்பறம் என்ன.. அதுனால தான் சாப்டாம வந்துட்டேன். இப்போ எல்லாம் சேந்து என்னவோ பண்றது” முடியாமல் பங்கஜம் அவளிடம் சொல்ல,

“அட! என்ன மாமி நீங்க! நான் ஏதோ விளையாட்டுக்கு பாடினேன், அதை போய் சீரியஸா எடுத்துண்டு இருக்கேளே! நீங்க என் அக்காவோட மாமியார். கல்யாணத்துல இந்த மாதிரி கலாட்டா பண்றது வழக்கம் தான. இதுக்கு போய் சாப்பிடாம இருப்பேளா!

நீங்களும் வேணும்னா என்னை பத்தி நாளைக்கு பாடுங்கோ. அதுக்காக இப்படி பண்ணாதீங்கோ” அவள் மேல் கோபத்தில் தான் பாடினாள் என்றாலும் , இப்போது அவரை சாப்பிட வைக்க வேண்டும் என்பது தான் வைஷுவின் எண்ணமாக இருந்தது.

 அவள் பேச்சு கொஞ்சம் பங்கஜத்தை தனிய வைக்க,

அவளை சந்தேகமாகப் பார்த்தார். ஆனாலும் பசி மயக்கம் நன்றாகவே அவரிடம் தெரிந்தது.

வைஷுவிற்கு அதைக் கண்டு பாவமாகப் போனது.

“என்ன மாமி, நம்பிக்கை இல்லையா..  நான் கொஞ்சம் கேலி கிண்டல் பண்ணுவேன். ஆனா மனசுல ஒன்னும் இல்ல. இருங்கோ நான் போய் உங்களுக்கு இங்கயே சாப்பாடு எடுத்துண்டு வரேன்”  அவள் எழுந்து செல்ல,

பங்கஜம் அவளை தடுக்கவில்லை.

ஒரு வேளை இவள் விளையாட்டுப் பெண் தானோ! நாம் தான் அதிகமாக நினைத்து விட்டோமோ என்று தோன்றியது.

அவள் அக்காவிற்காகவும், குடும்பத்திற்காகவும் தான் அவள் பேசினாள் என்று பசி மயக்கத்தில் ஞானோதையம் தோன்ற, அதற்குள் ஒரு பெரிய தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள் வைஷ்ணவி.

இவள் பெரிய தட்டை ஏந்திக் கொண்டு செல்வதைப் பார்த்த அர்விந்த், ‘என்னை வர சொல்லிட்டு இவ எங்க போறா’ என பின்னாலேயே வந்தான்.

தன் அம்மா இருந்த அறைக்குச் செல்வதைப் பார்த்ததும் அவனும் பின்னால் செல்ல,

அங்கே வைஷு பங்கஜத்திற்கு தட்டைக் கொடுப்பதைப் பார்த்து அவனுக்கு ஏனோ அவளை இன்னும் அதிகமாகப் பிடித்தது.

அதே நேரம் பங்கஜம் சற்று தெம்பில்லாமல் தெரியவும்,

“என்ன ஆச்சு மா ? ஏன் இங்க வந்து சாப்பிடற?” அக்கரையுடன் அருகில் வந்தான்.

 

“நான் பாட்டுப் பாடினதால கொஞ்சம் சங்கடப் பட்டுட்டு சாப்பிடமா இருந்துட்டாங்க. அதான் இங்கயே எடுத்துண்டு வந்தேன்.

நீங்க சாப்பிடுங்கோ மாமி. உங்கள கஷ்ட படுத்திருந்தா மன்னிச்சிடுங்கோ. நான் வரேன். அம்மா வ பாத்துக்கோங்கோ” என்று விட்டு அவள் எழும்ப,

“நில்லு மா. நானும் வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம , சின்ன பொண்ணு கூட மல்லுக்கு நின்னுட்டேன். மன்னிப்பெல்லாம் வேண்டாம். போயிட்டு வா” சிரித்த முகமாக அவளை அனுப்ப,

 

அது ஏனோ அரவிந்துக்கு சற்று மன நிம்மதியைக் கொடுத்தது. செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வைஷு கதவின் அருகில் சென்றதும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

வாட்ச்சை காட்டி பத்து நிமிடம் என்று ஜாடை சொல்ல,

அவனும் தாடியை தடவிக் கொண்டே , கண்களால் சரி என்றான்.

பங்கஜம் உண்டு முடித்ததும்,

“அம்மா யாருக்காகவும் நீ சாப்டாம இருக்காத. அவ சின்ன பொண்ணு. அத போய் பெருசா எடுத்துண்டு…. “ அட்வைஸ் செய்ய வர,

“ஆமா டா.” அசடு வழிந்தாள்.

“சரி நீ ரெஸ்ட் எடு. தூங்கினா சரி ஆயிடும். நான் கதவ சாத்திண்டு போறேன்” என்று அவசரமாக அங்கிருந்து சென்றான்.

அதற்குள் அனைவரும் ரகுவையும் அனுவையும் ஆசிர்வதித்து முதலிரவு அறைக்குள் அனுப்பினர்.

அவர்களின் வாழ்வு ஆனந்தமாக ஆரம்பமாக கல்கண்டும் குங்குமப்பூவும் கலந்த பாலை கொடுத்து அனுப்பினர்.

அனைவரும் இங்கே இருக்க, வைஷு அந்தப் பக்கம் பால்கனிக்குச் சென்றாள்.

தன் இணையைத் தேடிய அரவிந்தும் அவளின் பின்னால் சென்றான்.

 விளக்கெல்லாம் அணைத்த அந்த இடத்தில்  நிலவொளி வெளிச்சம் கொடுக்க, காற்று வீசி அவர்களை எதிர் கொண்டது.

வைஷு மெல்லிய காட்டன் சுடிதாரில் அழகாக நின்றிருக்க, உடலோடு ஒட்டிய அந்த உடை அவளின் எழிலைக் காட்டியது.அந்த சூழல் அரவிந்தை சற்று கிறங்க வைத்தது.

அவன் வரும் அரவம் கேட்டு அவள் திரும்ப,

அவன் நெருங்கும் முன்பே நான்கடி தள்ளியே அவனை கை காட்டி நிறுத்தினாள்.

“போன் எங்க?” மிரட்டும் குரல்.

“அது இருக்கட்டும். க்ரூப் போட்டோ தான, விடு” அவள் அருகில் வந்து நின்றான்.

“ஹலோ அதெல்லாம் முடியாது, போன் எடுங்க… “ அவள் குரலை உயர்த்த,

“என்ன நீ, நடு ராத்திரில ஒரு சின்ன பையன மெரட்டற “ அவன் அருகில் நெருங்கி வந்தான்.

“நான் தான் ரவுடி பேபி ஆச்சே, அப்டி தான் பேசுவேன்” அவன் அருகில் வந்ததை கவனித்தாலும் அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 அங்கிருந்த சுவரின் மேலே கை வைத்து நின்றிருந்தாள். அவள் கையைப் பற்றிக் கொள்ளும் ஆசை அவனுக்கு இருந்தும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.

முன்பு போல கலாட்டா மட்டும் செய்யும் அர்விந்தாக இருந்தால் , இந்நேரம் என்ன செய்திருப்பானோ தெரியாது.

ஆனால் இந்தக் காதல் வந்த பிறகு அவனுக்குள் தயக்கத்தையும் விதைத்து விட்டது.

“ சரி எனக்கு பதில் சொல்றேன்னு சொன்னியே , சொல்லு”  அர்விந்த் கேட்க,

அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை ஈர்த்தது.

“ம்ம் அதெல்லாம் உங்களுக்கே தெரியாதா..” கடுப்பைக் கொட்டினாள்.

“அப்போ என்னை உனக்குப் பிடிக்கலையா” முகம் சட்டென சுருங்கியது அரவிந்துக்கு.

‘பிடிச்சு தான டா உன்கூட இங்க வந்து தனியா பேசிட்டு இருக்கேன்.’ மனதில் சொல்லிக் கொண்டு,

“எனக்கு என்ன பைத்தியமா! அதுவும் உன்ன…” ஏளனமாக வந்தது பதில்.

அர்விந்த் உடைந்தே விட்டான்.அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச முடியாமல்,

“சரி நான் வரேன்!” என திரும்ப,

அவனது கையைப் பிடித்தாள் வைஷு.

அவன் ஒரு நொடி அவளை ஆர்வமாகப் பார்க்க,

“போன் குடுங்க” என்றாள்.

“ ஒரு போட்டோ தான மா , விடேன் இருந்துட்டு போகட்டும். அது இல்லனா உன்னை வேற எதுலையும் பார்க்க முடியாதா.. வீட்டுக்கு ஆல்பமே வர போகுது. என் போன் ல காபி பண்ணிக்க முடியாதா” விரக்தியாகப் பேச,

“அதெல்லாம் வேணாம். போன் குடுங்க” பிடித்த பிடியிலேயே நின்றாள்.

இதற்கு மேல் அவளிடம் மல்லுக்கு நிற்க அவனிடம் தெம்பில்லை. மனம் கனத்தது. போனை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி கேலரிக்குச் செல்லாமல், கேமிராவை ஓபன் செய்தாள்.

“அது இங்க இல்ல ..” என சொல்ல வந்தவனை,

ஒரு இழுப்பில் தன்னருகில் நிறுத்தினாள்.

அவன் மேல் சாய்ந்து கொண்டு தன் கையை உயர்த்திப் பிடித்து அவனது போனில் புகைப்படமெடுத்தாள்.

அவன் போட்டோவை பார்க்காமல் தன் மேல் சாய்ந்திருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது , அவள் சிரித்த படி போனைப் பார்த்ததும், அழகாக அந்த படத்தில் வந்தது.

இரவு நேரம் அந்த படத்தை மேலும் ரொமான்டிக்காக ஆக்கியது.

அவனை தள்ளி நிறுத்தி , “இந்த போட்டோ வ வெச்சிக்கோ, என் ஞாபகமா…” அவனிடம் கண்ணடித்து போனைக் கொடுத்தாள்.

அவன் கண்மூடி ஒரு நொடி அவள் செயலின் தாக்கத்தை உள்வாங்கி,

“ஏ .. ரவுடி பேபி.. என்னையே கதி கலங்க வெச்சுட்டியே டி..” என அவளது இடையை பிடித்து தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

“இது தான் ரவுடி ஸ்டைல்… எப்படி?” என அவனது தோளைச் சுற்றி மாலையாக கை கோர்த்துக் கொண்டு கேட்க,

“பிடிச்சிருக்கா என்னை…” நெற்றி முட்டினான்.

“கடிச்சி வைக்கற அளவு பிடிச்சிருக்கு…” பல்லைக் கடித்துக் காட்டினாள்..

“ அப்போ மயங்கிட்ட… ஹ்ம்ம் “ என பழைய கதையை நினைவு படுத்த,

“ டேய்… வேண்டாம்.. “

“வேணும் டீ… நீ மட்டும் மொத்தமா வேணும்.”

“ம்ம்ம்…. தாலி கட்டிட்டு எடுத்துக்கோ…”

 

வெட்கத்துடன் அவனைப் பார்க்க,

முன்னம் இருந்த கிறக்கம் இப்போது மேலும் அதிகரிக்க, அந்த சுவரில் அவளைச் சாய்த்து , அவள் மேல் தானும் மோதி நின்றான்.

“ தாலி கட்டி மொத்தமா எடுத்துக்கறேன். ஆனா இப்போதிக்கு இத எடுத்துக்கறேன் ….” அவளது இதழ்களை தனதாகிக் கொண்டான்.

அடுத்த கெட்டிமேளம் அவர்களுக்குத் தான்…..

 “கெட்டிமேளம் கெட்டிமேளம்…”

  ***************************முற்றும் ****************************