Kalangalil aval vasantham 23(1)

காலை மணி ஏழரை

சரண் சிங் மாங்கு மாங்கென்று ஜிம்மில் எக்சர்சைஸ் செய்து கொண்டிருந்தார். வியர்வை வழிந்தது. அதை அவ்வப்போது துடைத்தபடி உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். சதை போடவே கூடாது என்பதை விட, ஜிம்பாடியை கட்டிக் காக்க வேண்டும் அவருக்கு. அவரது அந்த ஜிம்பாடிக்கு ரசிகைகள் ஏராளம்.

பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் அவ்வப்போது பிட்னஸ் வீடியோ வேறு ரிலீஸ் செய்து இளைஞர்களின் மனதுக்குள் பொறாமைத் தீயை பற்ற வைப்பார்.

இளையவர்களுக்கு நிகராக உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறேன் பார் என்று ஷோ காட்டுவதற்காகவே தோள் சதைகளை இறுக்கிப் பிடித்த ஷார்ட் ஸ்லீவ் டீ ஷர்ட், ஷார்ட்ஸ் என்று வலம் வருவார்.

அன்றும் அதே வெறியோடு பயிற்சியை மேற்கொண்டிருந்தாலும், மனதுக்குள் புதிய மோகம் பற்றிக் கொண்டிருந்தது.

அது ப்ரீத்தி!

அவளை பார்த்தது முதல் அவள் நினைவு மட்டுமே!

கனவிலும் நனவிலும் அவர் கண்முன் அவள் தான் நடமாடிக் கொண்டிருந்தாள். யார் முகத்தைப் பார்த்தாலும் அவளைப் பார்ப்பது போலவே தோன்றியது. இப்படி காதல் தீயை ஏன் பற்ற வைத்தாள் என்று சரண் சிங்குக்கு புரியவில்லை. ஐம்பத்தி ஆறு வயதில் இருபது வயது பையன் போல, காதலில் உருகிக் கொண்டிருந்தார்.

அவளைப் பற்றி விசாரிக்க வேறு சொல்லி இருந்தார்.

கிடைத்த தகவல் அனைத்தும் அவருக்கு சாதகமாக தான் இருந்தது. அவளது வீட்டின் பொருளாதார நிலைமை, அதை சமாளிக்க ஷானிடம் அவள் வாங்கியிருக்கும் கடன். தந்தையின் பொறுப்பின்மை. அவளுக்கு அடுத்து இருக்கும் சகோதரியை படிக்க வைக்க வேண்டிய நிர்பந்தம் என, அனைத்தும் அவருக்கு சாதகமானவையே!

இது போல இருப்பவர்களுக்கு எல்லாம் லேசாக பணத்தைக் காட்டினாலே காலடியில் விழுந்து விடுவார்களே என்ற அதீத நம்பிக்கை அவருக்கு இருந்தது. அப்படி இருக்கும் போது அவரது மனதை கவர்ந்த ப்ரீத்தியை பணத்தால் குளிக்க வைக்க மாட்டாரா என்ன?

கண்டிப்பாக!

விட்டால் அந்த மும்தாஜுக்காக இவர் ஷாஜஹானாக மாறவும் தயாராக இருந்தார்.

ஏசி குளிர் சுகமாக படர்ந்திருந்தது. ஒரு பக்கம் முழுக்க கண்ணாடி பதிக்கபட்டிருந்தது. வியர்வை வழிந்தது. ஜிம் மியுசிக் சிஸ்டமில் வாத்தி கம்மிங் முடிந்து வாத்தி ரெய்ட் ஆரம்பித்து இருந்தது.

நிக்காத நிக்காத மறுபடி சிக்காத சிக்காத

ஒருமுறை தொட்டாலே கெட்டானே பதிலடி பக்கவா வெப்பானே

இது வர பொறுத்தோம் சும்மா அடி விழும் இனிமே கும்மா

கண்டம் கண்டம் கதறும்டி நண்டும் சிண்டும் ஒதரும்டி

உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி

பிளாக்கு தங்கம் டி காட்டு சிங்கம் டி நவுரு

இது பீஸ்ட் மோட்!

அந்த பாடலுக்கு ஏற்றபடி தாளமிட்டபடி உள்ளே நுழைந்தாள் ப்ரீத்தி!

உடலை கவ்வியிருந்த வொர்க் அவுட் கேப்ரி, ஷார்ட் ஸ்லீவ் டைட் டாப்ஸ், காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ, தீபிகா படுகோன் டாப் நாட் என மெழுகு பொம்மையாக உள்ளே நுழைந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தார் சரண் சிங்.

அன்று பார்த்த அதே ப்ரீத்தி தான்! ஆனால் உடைகள் மட்டும் தான் வேறு என்று அவர் உணர்வதற்கு சில நிமிடங்கள் பிடித்தன. ஒரு வேளை எப்போதும் போல மாயையோ என்றும் கூட தோன்றியது, அவள் அவரை பார்த்து வியப்பாக புன்னகைக்கும் வரை!

வெறும் புன்னகை மட்டும் தான்! அதற்கும் மேல் எதுவும் பேசாமல் வார்ம் அப் செய்யத் துவங்கினாள்.

ஜிம்மில் அப்போது வேறு யாரும் இல்லை.

பொதுவாக கூட்டமாக இருக்கும் நேரம் வேண்டாமென்று தான் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தார் அவர். ஆனால் இப்படியொரு அதிர்ஷ்டம் அடிக்குமென்று அவரே நினைக்கவில்லை.

ஒவ்வொரு முறை அவள் குனிந்து நிமிர்ந்த போதும் அவரது இதயம் நின்று துடித்தது.

“ஹாய் ப்ரீத்தி…” என்று அவள் அருகே போனார்.

வார்ம் அப் செய்வதை நிறுத்தியவள், “ஹலோ சர்… பேர் கூட ஞாபகம் வெச்சுருக்கீங்க?” என்று வியப்பாக சிரித்தாள்.

“ஒரு தடவை பார்த்தா எனக்கு லைஃப் லாங் மறக்காது ப்ரீத்தி…” ஆழ்ந்த குரலில் கூற, அவரது கண்களை பார்த்தாள்.

அதில் ஆசை வழிந்தது.

“ரொம்ப சந்தோஷம் சர். நீங்களும் இதே ஜிம் தானா?” இயல்பாக கேட்பதை போல, ட்ரெட்மில்லில் நடக்க ஆரம்பித்தாள்.

“எஸ். ஆனா இவ்வளவு நாள் உன்னை பார்த்ததில்லையே…” என்று கேட்க,

“டைமிங் வேற சர். இன்னைக்கு தான் மாத்தினேன்.” என்றவளை,

“வாவ்… சூப்பர். இனிமே இதே டைம் சூஸ் பண்ணு ப்ரீத்தி…” என்று அவர் வழிய,

“ஏன் சர்…?” என்று கேட்டாள்.

“எனக்கும் பேசிட்டு இருக்கலாம். உன்னை பார்த்தாலே பூஸ்ட் குடிச்ச மாதிரி பிரெஷ் ஆகிடுது…” என்றார். நேராகவே வழிகிறார் என்பது தெரிந்தது. ஆனால் இவை அனைத்தையும் ஷான் கேட்டுக் கொண்டிருப்பானே என்பதை நினைக்கும் போது தான் சற்று கலக்கமாக இருந்தது.

கிளம்பும் போதே ஆயிரம் பத்திரம் சொன்னான். செல்பேசியை அவனே எடுத்துக் கொடுத்து, ஏர்டாக் கூட அவனே வைத்தான்.

“பக்கத்துல தான் இருப்பேன். பயப்படாத. எமெர்ஜென்சின்னா உடனே அலாரமை ஆன் பண்ணிடு…”

“எமெர்ஜென்சி என்ன பாஸ் இருக்க போகுது ஜிம்ல? நான் என்ன அவன் கூட தனியா எங்கயாவது போறேனா?”

“இங்க பாரு… க்ளோஸ்ஸா வந்து பேசறது, மேல கை போடறதுலாம் கூட எமெர்ஜென்சி தான்… புரியுதா?” என்றான் கோபமாக!

“அதையெல்லாம் நான் ஹேண்டில் பண்ணிற மாட்டேனா?”

“பண்ணுவியே, என்னோட ஒரு அபென்ஸ் மூவ்க்கு உன்னால தாக்குபிடிக்க முடியல…”

“அது வேறு… இது வேறு அப்பனே…”

“அடிங்… பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை.” என்றவனை முதுகில் தட்டிக் கொடுத்தபடி,

“நான் பத்தரமா போயிட்டு வந்துடறேன். நீங்க பயப்படாம இருங்க…” என்று அவனுக்கு தைரியம் கூறிவிட்டு வந்திருந்தாள்.

அவளிடமிருக்கும் கேமரா அனைத்தையும் படம் பிடிக்குமென்று தெரியும். ஸ்பை ரெக்கார்டர், பேச்சுகள் அனைத்தையும் ரெக்கார்ட் செய்து உடனுக்குடன் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் எனவும் தெரியும். ஏர்டாக் அவளது ஜிபிஎஸ் சை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். அதுவுமில்லாமல் ஆப்பிள் கிளௌடில் அவள் இருக்கும் இடம் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் தாண்டி ஜிம்மை சுற்றிலும் பத்து பேர் என அவள் நிலை பக்கா தான்.

ஆனாலும் எதையும் நம்பாமல், அவர்களது உரையாடலை முழுவதுமாக கேட்க அமர்ந்தவனை பார்த்து தலையில் கைவைத்தபடிதான் வந்தாள். இங்கு இந்த மனிதர் வழியும் வழிசலுக்கு கண்டிப்பாக குதிப்பான்.

தற்காலிகமாக ஷானை மறந்துவிட்டு அவரைப் பார்த்து சிரித்தாள்.

“வெரி கைன்ட் ஆப் யூ சர்…” என்றவள் தனது உடற்பயிற்சியை தொடர்ந்தாள்.

“நீ இங்க வருவன்னு நான் நினைக்கவே இல்ல ப்ரீத்தி…” என்று அவர் சிரிக்க,

“நானும் நீங்க இங்க இருப்பீங்கன்னு நினைக்கல சர்.” என்று அவளும் மென்னகை பூத்தாள்.

அந்த புன்னகை அவரை அப்படியே வாரி சுருட்டிக் கொள்வதை போல இருந்தது. சதை பற்றான ஆரஞ்சு சுளை உதடுகளும், ஆப்பிள் கன்னங்களும் அவரை கடித்து தின்று பார்க்க சொல்லின. அவளின் கரிய பெரிய மீன் விழிகள் சிந்தும் புன்னகையில் அவரது இதயம் வழுக்கி தொபுக்கடீர் என்று அவளது காலடியில் விழுந்தது. அவளின் வெண் சங்கு கழுத்தின் ஓரத்தில் இருந்த சிறு மச்சம், அவரை முத்தமிட வா என்று அழைப்பதை போலிருந்தது. அதற்கும் கீழே…

எண்ணவோட்டத்தை தடுப்பது போல, “உங்க வொர்க் அவுட்டை கண்டினியு பண்ணுங்க சர்…” என்று கூற, அவர் சிரமப்பட்டு பார்வையை நிமிர்த்தி கொண்டார்.

“முடிக்க போறேன் ப்ரீத்தி…” என்று கூறியவர், அவரது செல்பேசியை எடுத்துக் கொண்டார்.

“ஓகே சர்… அப்படீன்னா கிளம்பறீங்களா?” என்று சாதாரணமாக கேட்டவளுக்கு மறுப்பாக தலையசைத்தார்.

“சான்ஸே இல்ல. நானே உன்னை மீட் பண்ணனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் பேசிட்டு தான் கிளம்புவேன்…” என்றவரின் குரலில் ஆசை கொட்டிக் கிடந்தது.

“ஆஹா…” என்று சிரித்தபடி அவள் வொர்க் அவுட்டை செய்து கொண்டிருந்தாள்.

அங்கம் அங்கமாக அவர் விழுங்குவதை அவள் பார்த்துக் கொண்டு தானிருந்தாள். எரிச்சலாக இருந்தது. இதை மட்டும் ஷான் பார்த்தால், இவனுக்கு சங்கு தான் என்று நினைத்தவளுக்கு அவளையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.

“என்ன சிரிக்கற ப்ரீத்தி?” அவளையே கவனித்துக் கொண்டிருந்த சரண் சிங் கேட்க, அப்போதுதான் உணர்ந்தாள், தன்னையும் அறியாமல் சிரித்ததை!

என்ன சொல்வது?

“எப்படி சர், இந்த வயசுலையும் இப்படி ஃபிஸிக்க மெயின்டைன் பண்றீங்க? எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்கலாம்ல…” என்று அவள் கூறவும், அவருக்கு உற்சாகம் பீறிட்டது.

“உடம்புக்குத்தான் வயசாகும் ப்ரீத்தி. மனசளவுல நான் இன்னும் முப்பது வயசு பையன் தான்.” என்று கூற, அவள் ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தினாள்.

“வாவ்… இந்த ஆட்டிடியுட் செம சர்…”

“எஸ். இப்ப இருக்க இருபது வயசு பசங்க எவ்வளவு வெய்ட் தூக்க முடியும்? நான் அசால்ட்டா ஐம்பது கிலோ தூக்குவேன்…” பெருமைகளை பீற்ற ஆரம்பித்தார்.

மறுபுறம் கேட்டுக் கொண்டிருந்த ஷான் பல்லைக் கடித்தான்.

“இதை இவனோட ஒய்ப் கேக்கணும்… தடிமாடு…” என்று அவன் கூறுவது அவளது இயர்பாட்ஸ் வழியாக கேட்க, “செம சர்… யூ ஆர் மார்வலஸ்…” என்று ஷானை கொஞ்சம் கடுப்பேற்றினாள்.

‘மவனே என்னோட லவ்வையா செக் பண்ணி பார்க்க சொன்ன? இந்தாடி வெச்சுக்க…’ என்று உள்ளுக்குள் கவுண்ட்டர் வேறு கொடுத்துக் கொண்டாள்.

ஷான் அருகில் அமர்ந்து கொண்டிருந்த மகேஷால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஒன் ஹவர் ஜாக்கிங், ஒன் அவர் ஜிம்… நான் செய்யற அளவு சின்ன பசங்களால கூட செய்ய முடியாது…” அவர் என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்பது புரிந்தவன், இன்னும் பல்லைக் கடித்தான்.

“மகேஷ், இவனுக்கு தனி ட்ரீட்மென்ட் தரனும். மேட்டர் பண்றதையே இவன் மறந்துடணும். அதுக்கு எதாவது ப்ளான் பண்ணு மேன்… டபுள் மீனிங்லயா பேசற…” என்று மகேஷிடம் அவன் கடிப்பது கேட்க, அவளால் பொங்கி வரும் புன்னகையை அடக்க முடியவில்லை.

“அது உங்க ஜிம் பாடிய பார்த்தாலே தெரியுது சர்…” என்று இன்னும் கொஞ்சம் அவரை ஏற்றி விட்டாள்.

‘செக் பண்ணுன்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் கோனார் நோட்ஸ் வேற கொடுத்தல்ல. மவனே இருடி… உனக்கு இருக்கு…’ மனதினுள் ஷானுக்கு கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டே இருந்தாள். எப்படி இருந்தாலும், தன்னிடம் வந்து தான் நிற்க போகிறான் என்று தெரிந்தாலும், அவன் கொடுத்த கோனார் உரை, அவளை அந்தளவு வெறுப்பேற்றி இருந்தது. காதலுக்கு இப்படியொரு விளக்கவுரையை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது என்ற எரிச்சல் வேறு.

“நீ எவ்வளவு நாளா ஜுபிடர்ல இருக்க ப்ரீத்தி?”

“ஏன் கேக்கறீங்க சர்?”

“ஜஸ்ட் சும்மா…” தோளை ஸ்டைலாக குலுக்கினார் சரண் சிங்.

“நான் படிச்சு முடிச்சதுல இருந்து அங்க தான் இருக்கேன் சர்.”

“என்ன உனக்கு ஒரு ட்வென்டி போர் இருக்குமா?” அவளை விழுங்கியபடி அவர் கேட்க, அவள் வாய்விட்டு சிரித்தாள்.

“சர், ஐம் ட்வென்டி செவன் கம்ப்ளீடட்…” என்றவளை ஆச்சரியமாக பார்த்தார்.

“ரொம்ப முக்கியம்.” என்று ஷான் அந்த பக்கம் கமெண்டரி கொடுக்க, சிரிப்பை அடக்க படாத பாடுபட்டாள் ப்ரீத்தி.

“ரொம்ப சின்ன பொண்ணா தெரியற…”

“ஆஹா தேங்க்ஸ் சர்…”

“ஷான் எப்படி ப்ரீத்தி? ரொம்ப உன்னை வேலை வாங்கறானோ?”

“அவர் சொல்ற வேலைய செய்றதுக்கு தான சர் சம்பளம் வாங்கறேன். அதை பத்தி எனக்கு ப்ராப்ளம் இல்ல…”

“இல்ல… நடுராத்திரில கூட வொர்க் பண்ணுவன்னு சொன்ன. அதான் கேட்டேன்…”