Kalangalil Aval Vasantham 25

25

மெல்லிய விளக்கொளியில் குளித்திருந்தது அந்த ரெஸ்ட்டோபார்.

ரெஸ்டாரன்ட் மற்றும் பார் இரண்டும் சேர்ந்தது தான் ரெஸ்டோபார். மூங்கிலால் வேயப்பட்டது போன்ற இன்டீரியர் டிசைன் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது. மெல்லிய இசை, மனதை நிறைக்க, ஆடம்பரமான ரெஸ்டாரன்ட்டுக்கே உரிய மணம்!

“சரண் சர் கிட்ட பேசினீங்களா ரவி சர்?” சைலேஷ் கையில் மதுபானத்துடன் கேட்க,

“ம்ம்… எஸ். என்னாச்சுன்னு கேட்டா மனுஷன் மழுப்பறார் சைலேஷ். சரியான பதில் இல்ல.” என்றபடி விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான்.

ரவியை பொறுத்தவரை குடிப்பது என்பது வெகு அளவுதான். உடன் குடிப்பது போல தோன்றினாலும், அளவை மீற மாட்டான். வைஷ்ணவியின் முன் அவனது நிலை சற்றும் கீழிறங்கக் கூடாது என்று நினைப்பவன்.

மற்ற வசதியான வீட்டுப் பெண்களை போல இல்லை வைஷ்ணவி. அவளுக்கு ஆடம்பரமாக செலவழிக்க பிடிக்காது. பார்ட்டிக்கு போக பிடிக்காது. அப்படியே கணவனின் வற்புறுத்தலுக்காக வேண்டி, பார்ட்டி போக நேர்ந்தாலும், குறைந்தபட்சம் ஒயின் கூட அருந்த மாட்டாள். அவர்கள் மட்ட ஆட்களுடன் நன்றாக பேசுவாள் ஆனால் நெருங்கி பழக மாட்டாள்.

அவளுண்டு, அவளது வேலையுண்டு, மகனுண்டு என்று இருப்பவள். அது தான் ரவிக்கு பிடித்த ஒன்றும் கூட! அவனுடைய மனைவி அப்படி இருப்பதில் சந்தோஷமே! அதனால் அவளை பெரும்பாலும் இதுபோன்ற இடங்களுக்கு வர வற்புறுத்துவதில்லை.

அவனது பக்க குடும்பப் பெண்கள் கூட பார்ட்டி, மதுபானம், மற்ற தொடர்புகள் என்று சுற்றி நிறைய பார்த்துவிட்டான். ஆனால் வைஷ்ணவி, அதிலெல்லாம் கொஞ்சமும் நாட்டம் கொண்டதில்லை. எவ்வளவு பணமிருந்தாலும் அதை கொஞ்சம் கூட காட்டிக் கொண்டதில்லை. தவறான பழக்கவழக்கங்களையும் சேர்த்துக் கொண்டதில்லை.

அதுதான் ஸ்ரீமதியின் வளர்ப்பு!

நடுத்தர குடும்பத்தில் எப்படி குழந்தைகளை வளர்ப்பார்களோ, அப்படித்தான் வளர்த்திருந்தார் அவர். கண்டிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் வாங்கியவர் அவர். அவரது கட்டுபாட்டிலிருந்து அவனிடம் கொண்டு வர கஜகர்ணம் போட்டிருக்கிறான், திருமணத்துக்கு முன்!

எல்லாவற்றை காட்டிலும் ரவி என்ன சொன்னாலும் முழுக்க நம்பி விடுவாள். அவளது உலகமே அவன் தான். எது எப்படி இருந்தாலும், காதலென்ற ஒன்று அவனது வாழ்க்கையில் இருந்தால், அது வைஷ்ணவிக்காக மட்டுமே! ஆனால் அவனது அகராதியில், காதலும் கூட பணத்தால் அளக்கப்பட்டது தான் என்பது வருத்தமான ஒன்று!

“இந்த நேரத்துல இப்படி ஆக்சிடென்ட் ஆகி படுத்துட்டாரே மனுஷன்…” சைலேஷுக்கு வருத்தமாக இருந்தது.

“ம்ம்ம்…”

“அவர் இல்லாம நாம என்னைக்குமே டீலிங் பண்ணிருக்கோம் ரவி சர்?” என்றார் சைலேஷ்.

“இட்ஸ் நாட் எ பிக் டீல் சைலேஷ். டீம் செலெக்ஷன் மீட்டிங் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான். பார்த்துக்கலாம்.” தைரியமாக இருந்தான் ரவி.

ஆனால் அவனுக்கும் உள்ளுக்குள் பயம் இருந்தது. அவர் மூலமாகத்தான் அனைத்து டீலிங்கும் அவர்களை வந்தடையும். பெட்டிங்கின் மையம் சரண் சிங். ரவி, டீம் ஆள் என்பதால் யாரையும் நேரடியாக சந்திக்க மாட்டான். முதல் நிலை ஏஜென்ட்களை நிர்வகிப்பது முதல், அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து பாதுகாப்பாக வைப்பது வரை சரண் சிங்கின் பொறுப்பு. பெட்டிங் உலகத்திற்கும் அவனுக்குமான தொடர்பு சரண் சிங் மூலமாகத்தான். சரண் சிங் இவனுக்கான பங்கு பணத்தைக் கொடுத்து விடுவார். அவர் மட்டுமில்லை. இன்னும் நிறைய ஏஜென்ட்களும் உண்டு, ஆனால் அனைவருமே சரண் சிங்கை மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அவர் மூலமாக மட்டுமே டீலிங் பேச முடியும்.

அதனால் தான் அவர் இல்லாதது அவனை பொறுத்தவரை பெரும் இழப்பாக உணர்ந்தான். சைலேஷ் அப்படியல்ல… அவரது தொடர்புகளும் ரவியின் தொடர்புகளும் கிட்டத்தட்ட ஒன்று தான். அத்தனை அரசியல்வாதிகளும் அவரது பாக்கெட்டில். அவர்களின் வரவு செலவுகள் சைலேஷின் மூலமாக!

“இப்ப முக்கியமா எந்தெந்த ப்ளேயர்ஸ் டீமுக்குள்ள வருவாங்கங்கற பெட்டிங் தான் போயிட்டு இருக்கு ரவி சர்…” சைலேஷ் சிறிய குரலில் கூறினார்.

“ம்ம்ம்… ஆனா இந்த தடவை ரிஸ்க் ரொம்பவும் அதிகம்…” என்று கூறியவனின் நெற்றி சுருங்கியிருந்தது.

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இந்த ஷான் உள்ள வருவான்னு நினைக்கல சைலேஷ். அவன் டீம் ஆக்ஷன்க்கு வந்தா கண்டிப்பா நாம நினைக்கற டீம் எடுக்க முடியாது… அதான் என்ன பண்ணி அவனை காலி பண்றதுன்னு யோசனையா இருக்கு.”

“ஷான் விஷயத்துல நாம கொஞ்சம் ஓவர்போர்ட் போய்ட்டோம் ரவி சர். தூண்டி விட்ட மாதிரி ஆகிருக்குன்னு நினைக்கறேன்.”

“இல்ல. அவனுக்கு விஷயம் எதுவும் தெரியாது. ஸ்வேதா மேல தான் கடுங்கோபத்துல இருக்கான். அவளை மட்டும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணுங்க சைலேஷ். லவ்வு மண்ணாங்கட்டின்னு ஏதாவது உளறிட்டு இருக்க போறா…”

“அப்படித்தான் மாயாகிட்ட சொல்லிட்டு இருந்திருக்கா போல. ஆனா இப்ப ரொம்ப சைலன்ட் ஆகிட்டா ரவி சர். இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாதுன்னு அவளுக்கே புரிய வந்திருக்கும்.”

“நம்ப முடியாது.” என்று மூச்சை இழுத்து விட்டவன், “நீங்க கண்டுக்காதீங்க. சைமனை வெச்சு நான் பார்த்துக்கறேன்.” என்று நிறுத்தியவன், “ஸ்டுடியோல நடந்த ஆக்சிடென்ட், சிசி டிவி ஃபுட்டேஜ் அழிஞ்சு போனது, இப்ப சரண் சர் ஆக்சிடென்ட், எல்லாம் கனெக்ட் பண்ணி பார்த்தா, ஏதோ தப்பு நடக்கற மாதிரி தோணுது சைலேஷ்…” என்று கேள்வி கேட்டவன், யோசனையாய் நெற்றியை சொரிந்தான்.

அவனுக்கு சந்தேகப்படவும் முடியவில்லை. சந்தேகப்படாமல் இருக்கவும் முடியவில்லை.

இவன் செய்யும் வேலைக்கு சிறு தவறும் வாழ்க்கையை அழித்து விடும்! டீலிங் செய்வதெல்லாம் பண முதலைகளின் பணம், அண்டர்கிரௌண்ட் தாதாக்களின் பணம், மிகப்பெரிய அரசியல்வாதிகளின் பணம். சற்று சறுக்கினாலும் சொர்க்கம் தான்.

அதனால் ஷானை கண்டிப்பாக நீக்கியாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான். எந்த காரணம் கொண்டும் அவனால் ஷானின் தலையீட்டை அனுமதிக்க முடியாது!

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன், “டீம் செலெக்ஷன் மேல எவ்வளவு பெட்டிங் போயிருக்கு சைலேஷ்?”

“இப்ப வரைக்கும் பைவ் தவுசண்ட் ஸி வரைக்கும் போயிருக்குன்னு நேத்து சரண் சர் சொன்னார். அதுக்கப்புறம் இன்னும் அப்டேட் பண்ணல.”

“ம்ம்ம்… யாரை எடுக்கறதுன்னு அவங்க எல்லாரும் தான் முடிவு பண்ணனும். டீம் ரீட்டைன்ஷன், ஓபன் ஆக்ஷன்ல யாரை விடறது, யாரை எடுக்கறதுன்னு எல்லாமே இந்த மனுஷன் வழியாத்தானே வரணும்? எப்படி லிஸ்ட் பண்ணிருக்காங்கன்னு நமக்கு தெரியாதே சைலேஷ்.”

பெட்டிங் லிஸ்ட் செய்வது என்பது, யார் மேல் அதிகபட்ச பெட்டிங் போயிருக்கிறதோ, அந்த நபரை டீமில் எடுக்க மாட்டார்கள்! இதை முடிவு செய்வது சரண் சிங் போன்ற பெரிய பெட்டிங் முதலைகள். இவர்கள் தான் புக்கீஸ் எனப்படும் ஏஜென்ட்ஸ். சென்னையிலேயே அது போன்ற பல முதலைகள் உண்டு. மிக முக்கியமான நட்சத்திர ஓட்டலின் அதிபர் கூட அது போன்றதொரு புக்கீ தான்.

இதுவும் குதிரைப் பந்தயம் போலத்தான். இந்த குதிரை தான் வரும் என்று அந்த குதிரை மேல் எல்லாரும் பணம் கட்ட, அந்த குதிரை வரவில்லை என்றால்? பணம் முழுக்க போய்விடும். ஆனால் அதுதான் ஏஜென்ட்களுக்கு லாபம். எந்த குதிரை மிகக் குறைந்தளவு பார்வை பெற்றிருக்கிறதோ, அந்த குதிரையை வெற்றியாளராக்கி விடுவார்கள் இவர்கள். இங்கு குதிரை என்பது கிரிக்கெட் வீரர்கள்.

டீமில் அவர்கள் வருவார்கள் என்று தானே பெட்டிங் செய்கிறார்கள், அதை ஒப்புக் கொண்டு அந்த நபரை டீமுக்கு அழைத்து வந்தால் ஒன்றுக்கு பத்து, ஒன்றுக்கு ஐம்பது என்று கொடுக்க நேரிடும். யாருக்கு குறைவாக பெட்டிங் போயிருக்கிறதோ அவர்களை கொண்டு வந்தால் இவர்களுக்கு லாபம்.

கண்டிப்பாக இவர்கள் இருப்பார்கள் என்ற வாய்ப்புகளுக்கு எல்லாம் ஒன்றுக்கு ஒன்று என்று மட்டுமே பெட்டிங் போகும். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக இடம் பிடிப்பவர்கள் என்ற வகையில் வருபவர்கள்.

எதிர்பாராத முடிவை எதிர்பாருங்கள் என்பது போல வருவது எல்லாம் இது போலத்தான். யாருமே எதிர்பார்க்காத வீரர்கள் டீமில் இடம் பிடிப்பதும் இது போலத்தான். ஆனால் ஏஜென்ட்களை பொறுத்தவரை லாபம் ஒன்று தான். வந்தாலும் போனாலும் கமிஷன் உண்டு.

“ஓகே ரவி சார். நான் கிளம்பிக்கறேன். நாளைக்கு சரண் சாரை போய் பார்த்துட்டு என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் சர்…” என்று முடித்துவிட்டு எழுந்தார் சைலேஷ்.

“ம்ம்ம் ஓகே சைலேஷ். இந்த மாயாவையும் ஸ்வேதாவையும் ஒரு பார்வை பார்த்துக்கங்க. செக்யுரிட்டி அதிகம் பண்ணுங்க. ஷான் கூட அவ எதுவும் பேசிட கூடாது. ஜாக்கிரதையா பார்த்துக்கங்க…” ரவி தீவிரமான குரலில் கூற, சைலேஷ் அதை ஆமோதித்து தலையாட்டினார்.

“ம்ம்ம் எஸ் ரவி சர்…” என்றவர், “ஓகே சர். டேக் கேர்…” என்று அவனோடு கை குலுக்கியபடி, வெளியே வந்தார். கூடவே ரவியும்!

“சைலேஷ் நேரா வீட்டுக்குத்தான?”

“இல்ல ரவி சர். போரடிக்குது. ரேண்டமா எதையாவது பிக் பண்ணிட்டு போலாம்ன்னு இருக்கேன்.” என்று கூற,

“பாத்துய்யா… ஹெல்மெட் போட்டுக்கங்க தலை கவசம் உயிர் கவசம்…” சிரிக்காமல் கூறினான் ரவி.

பெரிய குரலில் சிரித்த சைலேஷ், “ஹெல்மெட் போடாம என்னைக்கு நாம வண்டி ஓட்டிருக்கோம் ரவி சர்?” என்று கேட்க,

“பாத்து ஓட்டுங்கய்யா… பில்லியன் ரைடருக்கும் போட்டு விட்ருங்க. நீங்க தான் வித்யாசமான வண்டியெல்லாம் ஓட்ற ஆளாச்சே!”

“வண்டின்னு வந்துட்டா எல்லாமே ட்ரை பண்ண வேண்டியதுதான்…” என்று சிரித்தவர் விடைபெற்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் பார்க் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த அந்த போர்ஸ் ட்ராவலரில் அமர்ந்து கொண்டு ஸ்பை ரெக்கார்டர் வழியாக கேட்டுக் கொண்டிருந்தான் ஷான். உடன் ப்ரீத்தியோடு மகேஷ்.

தன்னுடைய தலையீடு எந்தளவு ரவிக்கு தலைவலியாக மாறுகிறது என்பதை அவன் வாய் வழியாகவே கேட்டவனுக்குள் சில யுக்திகள் தோன்றின.

வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும்?!

ஆல்வின் இன்னொரு காரில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தான். அவனிடமும் ஷான் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தான். அவர்களது அடுத்த குறி சைலேஷ், அதற்காக காத்துக் கொண்டிருந்தனர்!

***

“இவர் எந்த வண்டிய சொல்றார்?” இருவரின் பேச்சையும் கேட்டவள், ஷான் புறம் திரும்பி கிசுகிசுப்பாக கேட்க, திரும்பி அவளைப் பார்த்து குறும்பாக சிரித்தவன்,

“அவசியம் தெரிஞ்சே ஆகணுமா?” என்று கேட்க,

“ஏன் பாஸ்?” அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“தனியா வாங்க தலைவரே. அப்ப சொல்றேன். இங்க மகேஷ் இருக்கான்.” என்று கூறியவனின் குரலில் குறும்பு கொப்பளித்தது. அதை மகேஷ் கேட்டும் கேட்காதவன் போல புன்னகைத்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

“நீ சொல்றதே சரியில்லையே… வேற ஏதோ போல இருக்கே…” என்றவள், அதற்கும் மேல் எதற்கு வம்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

அவளது செல்பேசி அழைத்தது. மணி பத்தை கடந்திருந்தது.

இந்த நேரத்தில் யாரென்று பார்க்க, சீதாலக்ஷ்மி தான் அழைத்திருந்தார்!

பச்சையத்தை ஏற்றவள், “சொல்லும்மா…” என்றாள்.

“சாப்பிட்டியா அம்மு?” எப்போதும் போல ஆரம்பித்தார்.

“ம்ம்… இனிமேதான்மா…”

“ஏன் இவ்வளவு லேட் பண்ற அம்மு? அல்சர் வந்துராதா?”

“அதெல்லாம் வராதும்மா. வேலை இன்னும் முடியல.”

“இன்னுமாடி முடியல?” வெப்பமேறியது அவரது குரலில். இரவில் பணி இருப்பதாக கூறும் போதெல்லாம் இது போல கடிப்பது அவரது வாடிக்கை தான்.

“ம்மா. வேலை இருக்குன்னா செஞ்சு தான் ஆகணும். நீ என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லு…” பதிலுக்கு கடித்தாள் இவள்.

ஒரு நொடி தயங்கியவர், “உடம்பை பார்த்துக்க அம்மு.” என்று அவர் சிறிய குரலில் கூறுவதை கேட்கையில் ப்ரீத்தியின் மனம் கனத்து விட்டது.

“நல்லா இருக்கேன்மா.”

“உன் முதலாளி தம்பி எப்படி இருக்கார்?” என்று அவர் கேட்டதும் அருகிலிருந்த ஷானை மேலும் கீழுமாக பார்த்தவள்,

“அந்த ஆளுக்கென்ன? நல்லா தான் பராக்கு பார்த்துட்டு இருக்கார்…” என்று அவள் நக்கலாக கூறும் போதே தன்னைப் பற்றித்தான் கூறுகிறாள் என்பது புரிந்து அவளது மண்டையில் தட்டினான் ஷான்.

“ஏய் என்னடி? மரியாதையா பேசு. எவ்வளவு பெரிய மனுஷன்.” என்றவர், “அவரோட பிரச்சனையெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்க,

“அதெப்படிம்மா முடியும்? பிரச்சனையே இல்லைன்னா கூட தலைய நீட்டி, மூக்கை நீட்டி, கைய நீட்டி, இன்னும் பிஸ்டலை நீட்டி பிரச்சனைய விலை குடுத்து வாங்கற மனுஷனுக்கு பிரச்சனை முடிஞ்சுதான்னு கேக்கற?” என்று அவள் சிரித்தாள். ஷான் அவளைப் பார்த்து குறும்பாக முறைத்தான்.

“பாத்து ஜாக்கிரதையா இருக்க சொல்லு அம்மு…” என்று அவர் கவலையோடு கூற, அவள் தலையாட்டிக் கொண்டாள்.

“சரிம்மா…” என்றவள், “என்ன விஷயம்ன்னு சொல்லும்மா…” என்று கேட்க,

“காயத்ரிக்கு காலேஜ் ஃபீஸ் கட்டனும். இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்காம். அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்ன்னு கூப்பிட்டேன்…” சற்று தயங்கியபடி அவர் கூற, அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை.

ஷான் எட்டரை லட்சம் கொடுத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திரும்பவும் எப்படி கேட்பது என்று புரியவில்லை.

“எவ்வளவு ம்மா?” அவளது குரல் கீழிறங்கி விட்டது. அதையும் கவனித்தான் ஷான்.

“ஐம்பதாயிரம் ரூபாய்… கூட எட்டாயிரம் வேணுமாம்…”

“அது எதுக்காம்?” அவளது ரத்த அழுத்தம் சற்று கூடியது.

“ஏதோ கோர்ஸ் படிக்க போறாளாம் அம்மு. ஸ்காலர்ஷிப் போக, இவ்வளவு கட்ட சொன்னாங்களாம்?”

“என்ன கோர்ஸ்?”

“தெரியலம்மா.” என்றவர், “இரு அவ கிட்டயே குடுக்கறேன்.” என்று சட்டென காயத்ரியிடம் கொடுத்து விட்டார் சீதாலக்ஷ்மி.

“சொல்லுக்கா…” என்று கேட்ட காயத்ரியிடம்,

“என்ன கோர்ஸ் காயு?”

“பைத்தான்க்கா. படிச்சா வால்யூ இருக்கும்ன்னு சொன்னாங்க…” என்று கூற,

“அதெப்படி வெறும் எட்டாயிரத்துல பைத்தான் சொல்லித் தருவாங்க?”

“இது வேற மாதிரி ப்ரீத்திக்கா. எத்தனை பேரை கோர்ஸ்ஸுக்கு பிடிச்சு விடறேனோ… அவ்வளவு டிஸ்கௌன்ட்க்கா. நான் 13 பேரை பிடிச்சு விட்ருக்கேன். அதனால தான் கோர்ஸ் ஃபீஸ் இவ்வளவு கம்மியாச்சு. ஆனா மினிமம் இவ்வளவாவது கட்டணுமாம்…” என்றவள், “எனக்கு படிக்கணும். அவ்வளவுதானக்கா…” என்று கூறவும், ப்ரீத்திக்கு தொண்டை அடைத்தது.

“நீ என்ன படிக்கனும்ன்னாலும் படி காயூ. ரொம்ப கஷ்டப்படுத்திக்காத.” கனத்த குரலில் கூறினாள். தங்கையை நினைக்கையில் சற்று பெருமையாக இருந்தது. இன்னும் எவ்வளவு வேண்டுமென்றாலும் படிக்க வைக்க வேண்டும் என்று மனம் சொன்னது.

“கஷ்டப்படல ப்ரீத்திக்கா. இது மாதிரி ஆபர் இருந்தா என்ன வேணும்னாலும் படிக்கலாம்ல. உன்னையும் ரொம்ப படுத்தாத மாதிரி ஃபீல் ஆகும்…”

“ஏய் பெரிய மனுஷி… இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பணம் போட்டு விடறேன். கவலைப்படாத…” என்று சிறிய குரலில் கூறிவிட்டு வைத்து விட்டாளே தவிர, என்ன செய்வதென தெரியவில்லை.

இப்பொழுதே அதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று யோசித்தவள், ஸ்பை ரெக்கார்டர் ரிசீவரை கவனிக்கத் துவங்கினாள்.

ஷான், அவளை ஓரப்பார்வை பார்த்தவன், “அம்மாவா?” என்று கேட்க,

“ம்ம்ம்… கூடவே காயூவும்…”

“என்ன விஷயம்?”

“பெருசா ஒண்ணுமில்ல. அதே க்வஷின்ஸ். சாப்பிட்டியா? தூங்கினியா? உன் எம்டி நல்லா இருக்காரா?” என்றவள், லேசாக புன்னகையோடு, “அவ்வளவுதான்!” என்று முடிக்க, திரும்பி அவளைப் அர்த்தமாகப் பார்த்தான்.

“ஓ…” என்றவன், அதற்கு மேல் பேசவில்லை.

error: Content is protected !!