UUP–EPI 3

அத்தியாயம் 3

 

கொர்டிசெல்(cortisol) ஹார்மோனை மன அழுத்த ஹார்மோன் என அழைப்பார்கள். நமக்கு மன அழுத்தம் ஏற்படு போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. பின் மன அழுத்தம் குறைந்ததும் ஹார்மேன் லெவல் சரியாகி விடுகிறது. அடிக்கடி இது சுரக்கும் பட்சத்தில் நமக்கு டிப்ரெஷன், தலைவலி, தூக்கமின்மை, இதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

அன்று

 

“கதிரு! கதிர் டேய்!”

மெல்லிய சத்தத்தில் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தான் கதிர். அவனுக்கு கண் ஆபரேஷன் முடிந்து பத்து நாட்கள் ஆகி இருந்தன. இன்று காலைதான் சென்னையில் இருந்து வந்திருந்தனர் அவனும் அவன் அம்மாவும்.

சென்னையில் ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் தான் கதிரைக் காட்டி வந்தார் பார்வதி. முதலில்  வீட்டிலேயே மருந்து மட்டும் கொடுத்து கண்களை ஆபரேஷனுக்கு தயார் செய்ய சொல்லிய டாக்டர், அறுவை சிகிச்சையை சென்னையில் வைக்க ஏற்பாடு செய்திருந்தார். கதிருக்கு வலது கண்ணில் மட்டும்தான் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இடது கண்ணை அதற்குறிய பயிற்சிகளின் மூலமே சரிப்படுத்தி விடலாம் என சொல்லி விட்டார் டாக்டர்.

சென்னைக்கு கிளம்பும் முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான் கதிர்.

“ம்மா! வலிக்குமாமா? சம்மு சொன்னா கண்ணுக்கு உள்ள மாட்டு ஊசி போடுவாங்களாம்! ஆமாவாமா?”

கண் சரியாக வேண்டும் என ஆர்வம் இருந்தாலும், அந்த வயதிற்குரிய பயமும் இருந்தது. அதில் இன்னும் எண்ணெயை ஊற்றி எரிய விட்டிருந்தாள் சண்மு.

“அவ கிடக்கறா ராங்கி புடிச்ச கழுதை! இப்போ நீ பரிட்சைல ஒன்னானா வரல, அந்தக் கழுதை கடைசியா வருதுல, அதனால பொறாமைடா அவளுக்கு! கண்ணு நல்லா போச்சுன்னா நீ இன்னும் நல்லா படிப்பல்ல, அது வேணான்னு தான் உன்னை பயம் காட்டி விடறா! அவ கூட சேராதன்னு சொன்னா எங்கடா கேக்கற நீ”

“என் சம்முக்கு பொறாமைலாம் இல்ல” அழுகை அடங்கி கோபம் வந்திருந்தது.

“கதிரு!!!”

“அவள பத்தி பேசனதுமே மூக்கு வேர்த்துருச்சு! வந்துட்டா பாரேன்” கடுப்பாக திட்டினார் பார்வதி.

கதிர் ஓட்டமாய் ஓடி வாசலில் நின்றான்.

“கெளம்பிட்டியா கதிரு கண்ணுக்கு ஊசி போட?” என கேட்டாள் சண்மு.

“ஹ்ம்ம். காரு இப்போ வந்துரும்”

“அப்பாடா கரேக்டா வந்துட்டேன். உனக்காக வேண்டிக்க கோயிலுக்கு போனேனா, பூசாரி குளிச்சிட்டு வான்னு தொரத்தி விட்டுட்டாருடா! ஓடிப் போய் குளிச்சிட்டு மறுக்கா வேகமா கோயிலுக்குப் போனேன். நல்ல வேளை நீ இன்னும் கிளம்பல!” என்றவள் மடக்கிப் பிடித்திருந்த கையை விரித்தாள். உள்ளங்கை வியர்வையில் திருநீறு நனைந்துப் போய் கிடந்தது. அப்படியே அள்ளி அவன் நெற்றியில் பூசி விட்டாள் சண்மு.

“சாமி! கதிருக்கு ஒன்ரை நல்லா போய் ரெண்டா ஆகிறனும் கண்ணு. ஊசி போடறப்போ வலிக்கக் கூடாது! ஓம், ஓம், ஓம்!!!” என சொல்லியபடியே பூசி விட்டாள். உள்ளங்கையில் மீதி இருந்த திருநீறை தன் நாக்கால் வழித்து வயிற்றுக்குள் அனுப்பினாள் சண்மு.

“தேங்க்சு சம்மு! இந்தப் பாவாடை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு சம்மு” என நூறாவது முறையாக சொன்னான் கதிர்.

அது கதிர் கொடுத்த மஞ்சள் சேலையில் தைக்கப்பட்ட பாவாடைதான். மகன் கொடுத்து விட்டான் என்பதால் மனதுக்குள் கோபம் இருந்தாலும், பரவாயில்லை என விட்டு விட்டார் பார்வதி. அதை சண்மு அணியும் போதெல்லாம் பாராட்டி விடுவான் கதிர். அவளும் அந்தப் பாவாடையை அடிக்கடி அணிந்து ஊரில் உள்ள பிள்ளைகள் முன்னே, தனக்கும் அழகான உடை இருக்கிறது என்பது போல மிதப்பாக நடப்பாள்.

அவள் அங்கே இருக்கும் போதே பார்வதி வாடகைக்கு அமர்த்தி இருந்த கார் வந்து ஹாரன் அடித்தது.

“கதை பேசனது போதும், கெளம்புடா கதிரு!”

“அப்பா வர்ட்டும்மா! சொல்லிட்டுப் போலாம்”

“பெத்த பையன் ஆபரேசனுக்குப் போறான்னு ஒரு அக்கறை இல்ல உங்கப்பனுக்கு! இந்நேரம் எந்த ரோடுல விழுந்து புதையல வாரிட்டு இருக்காறோ! நீ வாடா” என மகனின் கையைப் பிடித்தார்.

“போய்ட்டு வரேன் சம்மு! பத்திரமா இரு! ஸ்கூலுல யார் கிட்டயும் சண்டை போடாத! பாடம் புரியலனா நான் வந்து சொல்லித் தரேன்.” அவன் அம்மா கையைப் பிடித்து நடத்திக் கொண்டே போக, திரும்பிப் பார்த்து இவளிடம் பேசியபடியே போனான் கதிர்.

“போ, போ! எனக்கு எல்லாம் தெரியும். மொதல்ல உன் கண்ணை நல்லாக்கிட்டு வா! மறுபடி ஒன்ரையாவே வந்தனா, நான் உங்கூட சேராம பக்கத்து பெஞ்சு பெருமாள் கூட கூட்டாளி ஆகிருவேன், சொல்லிட்டேன்!” மிரட்டி அனுப்பினாள் சண்மு.

அவன் பதில் சொல்வதற்குள் கதிரை காரில் ஏற்றி இருந்தார் பார்வதி.

கை ஆட்டி விடை கொடுத்தாள் சண்மு. கார் வீட்டில் இருந்து நகரும் நேரம் நேராக காரின் முன் வந்து நின்றார் பரமு. தள்ளாடியவாறே,

“நித்து, நித்து…கார நித்துடா! என் மொவன பாக்கறதுக்குள்ள ஒன்ன ஆரு கார எடுக்க ஜொன்னா? நித்து!” என சத்தம் போட்டார். கார் நிற்கவும், கதிர் இறங்கி தகப்பனிடம் ஓடி வந்தான்.

“ப்பா! போய்ட்டு வரேன்! நான் இல்லன்னு சாப்டாம இருகாதப்பா! சின்ராசுட்ட சொல்லிருக்கேன். அவன் சாப்பாடு குடுப்பான். ஒழுங்கா சாப்டனும்! என்ன?”

“ஜெரிடா மவனே! என் ராசா! பத்தரமா போய்ட்டு வாடா! ஜெத்துப் போன எங்காத்தா ஜெவப்பாயி(சிவப்பாயி) உன்ன மேல இருந்து நல்லா பாத்துப்பா” என தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

“க்கும்! உசுரோட இருந்தப்பவே அந்தக் கெழவி ஒரு நல்லதும் செய்யாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு, அதோடது எல்லாத்தையும் பதுக்கிட்டு நம்ம கிட்ட புடுங்கித் தின்னும். இது மேல போய்தான் நல்ல மனசு வந்து என் மவன ஆசீர்வதிக்கப் போகுதாக்கும்! கெரகம்!” சத்தமாகவே முனகினார், காரில் இருந்து இறங்கி இருந்த பார்வதி.

முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து,

“பாழ்வதி என்னைப் பாழடி (பார்வதி என்னைப் பாரடி)

பூங்கொழி என்னைச் சேழடி” (பூங்கொடி என்னை சேரடி) என பாடி அழைத்த பரமு,

“பாழு, புள்ள பத்ரம்” என கேட்டுக் கொண்டார்.

“அக்கறை உள்ள ஆளு, இப்படி ஊத்திக்கிட்டு வராம நிதானமா வரனும்! எல்லா வூட்டுலயும் ஆம்பளைங்க எடுத்து செய்ய, இங்க நான் மட்டும் ஒத்தப் பொம்பளையா இருந்து அல்லாடுறேன்! எல்லாம் நான் வாங்கி வந்த வரம்” மூக்கை உறிஞ்சினார்.

“எங்காத்தா ஜத்தியமா நாளைல இழுந்து குடிக்க மாட்டேண்டி பாழு”

“அடச்சை! நீ பண்ண ஆயிரத்தெட்டு பொய் சத்தியத்துனாலதான்யா அந்தக் கெழவி சீக்கிரமா புட்டுக்கிச்சு” என அர்ச்சனை செய்தவர், மகனைக் காரில் ஏற்றி கிளம்பிவிட்டார்.

தனியே நின்றிருந்த சண்முவைப் பார்த்த பரமு,

“மம்மவளே, என் மவனே கட்டிக்க” என ஆரம்பிக்கும் முன்னே ஓடிப் போனாள் சண்மு.

அந்த ராத்திரியில் ஜன்னல் ஓரமாக சண்முவின் குரல் கேட்க மெல்ல எழுந்து தட்டுத் தடுமாறி நடக்கப் பார்த்தான் கதிர்.

“இருடா! ஒத்தைக்கண்ணுல கட்டுப் போட்டுருக்காங்க. நடக்காத, நானே வரேன்!” என திறந்திருந்த ஜன்னல் வழியாக எகிறி குதித்து ரூமுக்குள் நுழைந்தாள் சண்மு.

“சம்மு! நான் பகல்லயே வந்துட்டேன் தெரியுமா! நீ இப்பத்தான் வர என்னப் பார்க்க!” என கோபித்துக் கொண்டான் கதிர்.

“நான் ஒன்னப் பார்க்க வந்தேண்டா! பாரும்மாத்தான் நீ ரெஸ்ட் எடுக்கனும். தொந்தரவு பண்ணாம போன்னு சொல்லிட்டாங்க! வீட்டுல அம்மா தூங்கற வரைக்கும் வேய்ட் பண்ணிட்டு இப்ப ஓடி வந்தேன்.”

உள்ளே வந்து கதிரின் கட்டிலில் அமர்ந்தவள்,

“மெத்தை மெத்து மெத்துன்னு இருக்குடா! நான் படுத்துப் பார்க்கவா?” என கேட்டுப் படுத்துப் பார்த்தாள். பின் எழுந்து அமர்ந்தவள், கதிரின் கண்ணை ஆராய்ந்தாள்.

“கண்ணு சரியா போச்சாடா கதிரு? பேண்டேஜ் போட்டுருக்காங்க, எப்ப கலட்டுவாங்க?” என பட்டும் படாமல் கட்டைத் தொட்டுப் பார்த்தாள்.

“இன்னும் ஒரு வாரத்துல! அப்புறமா கண்ணு பயிற்சிலாம் சொல்லிக் குடுப்பாங்க! ரெண்டு கண்ணுக்கும் செய்யனும். அப்புறம் பாரேன்! நானும் உன்ன மாதிரியே நேரா பார்ப்பேன்”

“என்ன சொல்லுடா, ஒனக்கு ஒன்ரை தான் அழகு” என சொல்லியபடியே, அங்கிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிளை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தாள் சண்மு.

“ஒன்னும் வேணா போ! எனக்கு ஒன்ரையா இருக்கவும் தானே அந்தப் பெருமாளு பக்கத்துல போய் உக்காந்துக்கறேன்னு சொல்ர! இனிமே எனக்கு கண்ணு நல்லாயிரும். என் பக்கத்துல தான் நீ எப்பவும் உக்காரனும் சொல்லிட்டேன்.”

“சரி, சரி! உடனே முகத்தைத் தூக்கி வச்சிக்காதே! அந்தப் பெருமாளு கூடலாம் நான் சேரமாட்டேண்டா! நான் பக்கத்துல போனாலே மூக்கப் புடிச்சிக்குறான்! ராஸ்கல்! பூமர் பபள் கம்ம நல்லா மென்னுட்டு அத அவன் கணக்கு நோட்டு உள்ளார ஒட்டி வைக்கனும்டா கதிரு! புக்கு வீணாப் போகனும், வாத்தி அவன வெளுக்கனும், நான் சிரிக்கனும்!” பழிவாங்கும் ப்ளானை எடுத்து விட்டாள் அந்த ராத்திரியில்.

“நான் ஸ்கூலுக்கு வர வரைக்கும் வேய்ட் பண்ணு! ஒன்னா செய்யலாம் சம்மு”

“வேற வழி! நீதானே பூமர் வாங்கிக் குடுக்கனும். காசுக்கு நான் எங்கப் போவேன்!”

இருவரும் கதிர் ஊரில் இல்லாத போது நடந்த விஷயங்கள், சென்னையில் நடந்த ஆபரேஷன், பார்வதி கதிருக்கு வாங்கிக் கொடுத்த மூங்கில் புல்லாங்குழல் என விட்டுப் போன கதைகளை பேசித் தீர்த்தனர். தூக்கக் கலக்கத்தில் அவன் கட்டிலிலேயே தூங்கிப் போனாள் சண்மு. தூங்குபவளை எழுப்பாமல், தன் போர்வையால் போர்த்திய கதிர், அவள் அருகிலேயே உறங்கிப் போனான். மறுநாள் காலையில் சண்முவைப் பார்த்த பார்வதி, அவளைத் தேடி வந்த மீனாட்சி என இரு பெண்மணிகளும் அவளைப் புரட்டி எடுத்தது வேறு கதை!

 

இன்று

 

இரவில் கசிந்து வந்த புல்லாங்குழல் இசை அந்த வீட்டை ரம்மியமாய் தாலாட்டியது. கூடத்தில் அமர்ந்திருந்த பார்வதி ஆகட்டும், தன் அறையில் போதையில் முடங்கிக் கிடந்த பரமு ஆகட்டும் அந்த உயிர் உருக்கும் இசையை ஆசையாகக் கேட்டிருந்தனர்.

“காற்றின் அலை வரிசைக் கேட்கிறதா

கேட்கும் பாட்டில்

ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா

நெஞ்சு நனைகிறதா?” என புல்லாங்குழல் வழி வந்த இசை கேள்விக் கேட்டது. பரமுவின் விழிகளில் கண்ணீர் கசிந்தது மகனின் இசைக் கேட்டு. மகன் மனதறிந்தவராயிற்றே! அவன் வாழ்க்கையின் கருப்புக் பக்கங்களைக் கண்டவராயிற்றே!

எழுந்து தள்ளாடியவாறே கதிரின் அறை நோக்கிப் போனார். தன் அறைக் கதவைத் திறந்து தகப்பன் வந்தது கூட தெரியாமல் ஜன்னலில் தெரிந்த நிலவைப் பார்த்துக் கொண்டே குழலூதிக் கொண்டிருந்தான் இவன். யார் சொன்னார் கண்ணன் தான் குழல் ஊதுவான் என்று, இந்த வேலனும் குழலிசைப்பான். மன பாரம் தீர கதிர்வேலனும் குழலிசைப்பான்!

மெல்ல தன் மகனின் தோளைத் தொட்டார் பரமு. சட்டென இசை நின்றது. தன் முக பாவங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டவன், ஒட்ட வைத்தப் புன்னகையுடன் திரும்பினான்.

“தூங்கலையாப்பா?”

“நீ ஏன் லாஜா(ராஜா) தூங்கல? பழ்சுலாம் மழந்துரு(மறந்துரு) கதிலு. போனது போனதாவே இர்க்கட்டும்! மங்கே(மங்கை) ஒன்ன நல்லாப் பார்த்துக்குவா லாஜா. மழந்துரு, அல்லாத்தையும் மழந்துரு” மகனின் தாடையைப் பிடித்துக் கெஞ்சல் குரலில் பேசினார்.

“ப்பா! விட்டாச்சுப்பா! மனசுல இருந்து எல்லாத்தையும் தூக்கிப் போட்டாச்சு! மங்கைதான் இனி என் பியூச்சர்! நீங்க கண்டதையும் யோசிச்சு மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க! போங்க போய் படுங்க!” என தகப்பனை சமாதானப் படுத்தி அனுப்பினான்.

தகப்பனுக்கு சொன்னதை நிரூபிக்கும் வகையில், போனை எடுத்து வாட்சாப் டீபீயாக நிச்சயதார்த்தம் அன்று எடுத்த தங்கள் இருவரின் போட்டாவை வைத்தான். பேஸ்புக்கில் சிங்கிள் என இருந்ததை இன் அ ரிலேஷென்ஷிப் என மாற்றினான். தங்கள் இருவரின் போட்டோ போட்டு மங்கை தேக் பண்ணியிருந்த போஸ்டுக்கு ஹார்ட்டை அழுத்தினான். அந்த போட்டோவுக்கு ஹார்ட்டை அழுத்தும் போதே தன் ஹார்ட்டை யாரே அழுத்தி அமுக்குவது போன்ற உணர்வு வர, போனைத் தூக்கி கட்டிலில் எறிந்தான். அதற்கு மேல் தனியாக இருக்கப் பிடிக்காமல், ஹாலுக்கு வந்தான் கதிர். சோபாவில் அமர்ந்திருந்த பார்வதியின் மடியில் வந்துப் படுத்துக் கொண்டான்.

நாடகம் பார்த்துக் கொண்டே, மடியில் படுத்திருந்த மகனின் தலைக் கோதிக் கொடுத்தார் பார்வதி. கதிர் மெல்ல உறக்கத்தைத் தழுவ, தொலைக்காட்சியை நிறுத்தினார் அவர். சில வருடங்களாய் ஒரு எட்டு தள்ளியே நின்றவன், இன்று தாய் மடி தேடி வந்ததை நினைத்து மகிழ்வதா? அல்லது தாய் மடி தேடும் அளவுக்கு மகன் மனதை வாட்டும் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து வருந்துவதா என யோசனையாக மகனைப் பார்த்திருந்தார் பார்வதி.

அழகாய் சீரமைக்கப்பட்டு பெரிதாய் கட்டப்பட்டிருந்த தன் வீட்டில், தனது அறையில் விட்டத்தை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள் சண்மு. வெளியே தன் அம்மா, ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தம்பி கண்ணனிடம் போனில் பேசுவது காதில் கேட்டது. உதட்டில் விரக்தி சிரிப்பு நெளிய, மனம் மட்டும் ஒரு வாக்கியத்தை பாராயணம் செய்துக் கொண்டிருந்தது.

“இதுவும் கடந்து போகும்!”

“இதுவும் கடந்து போகும்!”

“இதுவும் கடந்து போகும்!”

 

(உயிர் போகும்)