UUP–EPI 19 (ANDRU)

அத்தியாயம் 19

குலுகோகன் (glukogan) எனும் இந்த ஹார்மோன் மற்ற ஹார்மோன்களோடு இணைந்து நமது உடலில் குலுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

அன்று

“ஏன்டா ஜீன்ராஜூ! என்னடா என் தங்காச்சி மீனாச்சி வூட்டு கதவு பூட்டிக் கெடக்கு?”

பார்வதியின் சொந்தத்தில் நடந்த திருமணம் ஒன்றுக்கு சென்னைக்கு சென்றிருந்தவர்கள் அன்றுதான் ஊருக்கு வந்திருந்தார்கள். பிள்ளைகள் இருவரும் வெளியூரில் இருக்க, தனியாக இருக்கும் மீனாட்சியை அவ்வப்பொழுது போய் பார்த்து ‘தங்கச்சி நல்லாருக்கியா?’ என கேட்டு வருவதை தனது கடமையாக வைத்திருந்தார் பரமு. ஊருக்கு வந்தவுடன் கடமை தவறாமல் சரக்கை ஏற்றிக் கொண்டவர், அடுத்த கடமையாக மீனாட்சியின் வீட்டின் முன் சின்ராசுவுடன் நின்றிருந்தார்.

“தெரியலையேப்பா! அன்னிக்கு ஊருக்குள்ள ஒரு கார் வந்துச்சு! இவங்கலாம் கிளம்பிப் போனாங்க! எங்க போனாங்கன்னு தெரியலை. நான் திரும்ப வந்திருப்பாங்கன்னு நெனைச்சேன். ஆனா கதவு இன்னும் பூட்டிக் கிடக்குதே!” என இவனும் தலையை சொறிந்தான்.

“தலையை ஜொறியறத உட்டுட்டு பக்கத்து வூட்டு கதவ தட்டுப் போ! இவன நம்பி வெளியூர் போன என் புத்திய!!!!”

பக்கத்து வீட்டுப் பெண்மணி வெளியே வந்து,

“என்னாண்ணா? என்ன விஷயம்?” என கேட்டார்.

“தங்கச்சி, மீனாச்சி எங்கம்மா?”

“அண்ணா, அவங்களாம் அரியலூர் போயிருக்காங்க! அன்னைக்கு புதுசா ஒரு காரு வந்துச்சு. அதுல சண்மு அவ வேலை பார்க்கற பொண்ணு கூட வந்து இறங்கனா! அப்புறமா இன்னொரு காரு சர்ருன்னு வந்துச்சு. அதுல அந்தப் பையன் கண்ணாவும் அவன் கூட இன்னொரு வாட்டசாட்டமான பையனும் வந்து இறங்கனாங்க. என்ன பேசனாங்க, என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் தெரியல. திடீர்னு கெளம்பிட்டாங்க. போகிற முன்னே மீனாட்சி, சண்முவுக்கு திடீர்னு கல்யாணம் ஏற்பாடாயிருச்சு. வந்து ஒரு வரவேற்பு வைக்கிறேன்னு சொல்லிட்டுப் போகுது. ஒன்னு மண்ணா பழகி என்ன இருக்கு? ஒரு கல்யாணம் காட்சிக்கு நம்மள அழைக்கல பாருங்களேன்!” நீட்டி முழக்கி ஒரு வழியாக சொல்லி முடித்தார்.

“என்னாம்மா சொல்லற? என் மம்மவளுக்கு கல்யாணமா?” அதிர்ந்து போனார் பரமு. மகன் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவன் கண் பார்த்து அவனின் காதலை அறிந்து வைத்திருப்பவராயிற்றே, பதறித்தான் போனார்!

“தற்தலை! ஒன்ன நம்பி வெளியூரு போனதுக்கு என் கொலவிளக்கே தவற விட்டுட்டீயேடா!” தோளில் இருந்த துண்டால் சின்ராசுவை அடிக்கப் போனவர், போதையில் அவரே ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்து தட்டுத் தடுமாறி எழுந்து நின்றார்.

பரிதாபமாக சின்ராசுவைப் பார்த்தவர்,

“என் மவனுக்கு ஜொல்லனும்டா! கதிருக்கு ஜொல்லனும்” என சொன்னவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ப்பா, அழாதீங்க! வாங்கப்பா! நம்ம வீட்டுல போய் என்ன செய்யறதுன்னு பேசலாம்! ரோட்டுல எல்லாரும் பார்க்காறாங்க! என் தப்புத்தான்! எங்கயோ வெளிய போறாங்க, வந்துருவாங்கன்னு அசால்ட்டா நினைச்சுட்டேன்! தப்புத்தான், மன்னிச்சிருங்க!” பரமுவை அணைத்தவாறே வீட்டிற்கு அழைத்து சென்றான் சின்ராசு.

மாற்றி மாற்றி கதிருக்கும் சண்முவுக்கும் அவர்கள் அழைக்க, இருவரின் லைனுமே கிடைக்காமல் போனது. அவள் போன் தொலைந்துப் போய் சதி செய்தது என்றால் இவன் எங்கேயோ ஒரு காட்டில் இருந்தது அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

பரமுவுக்கு பயம் பீடித்துக் கொண்டது. எங்கே தன்னைப் போல தன் மகனும் காதல் தோல்வியில் குடிமகனாக ஆகிவிடுவானோ என! நேராக பார்வதியிடம் போய் நின்றார் மனிதர்.

“பாழும்மா!”

“ஹ்ம்ம்!”

“கொஞ்சம் காசு வேணும்மா!”

“ஏன், எதுக்கு? கலையில தான் ஊத்திக்க துட்டு அழுதுட்டேன்ல! இன்னும் என்ன? பணம், பணம், பணம்!  திருடி அழிச்சது எல்லாம் போதாதா? இப்போ தைரியமா என் கிட்டவே கேக்க வந்தாச்சா? சள்ளிக்காசு குடுக்கமாட்டேன் நான்”

“குடிக்க இல்லடி பாழு! நம்ம குடி முழுகி போகாம இழுக்கடி. ப்ளீஸ் பாழு, குடு!”

சண்முவைக் கண்டுப்பிடிக்க அரியலூர் வரை போக முடிவு செய்திருந்தவர் செலவுக்கு தன் மனைவியிடம் கையேந்தி நின்றார். சண்முவுக்காக, அவள் திருமணத்தை நிறுத்துவதற்காக என சொன்னால் கண்டிப்பாக பாரு பணம் தர மாட்டார் என்பதால் தான் காரணம் சொல்லாமல் பணம் கேட்டார் பரமு.

“உனக்கு என்னய்யா செலவு? கட்டிக்கற வேட்டியில இருந்து, கொட்டிக்கற சாப்பாடு வரைக்கும் நான் வாங்கித் தரேன். குடிக்கவும் தெனம் ஒரு அமவுண்டு குடுத்து தொலைக்கறேன். அதையும் மீறி அப்பப்போ வீட்டுலயே மொள்ளமாறித்தனம் பண்ணி காசு அடிக்கற! இன்னும் எதுக்கு காசு? காசு என்ன மரத்திலா காய்க்குது, புடுங்கி குடுக்க? ஒத்தப் பொம்பளையா நின்னு போராடி இந்தக் குடும்பத்த நடத்தறேன் நானு! என்னைக்காச்சும் வீட்டு ஆம்பளையா நடந்துருக்கியா நீ?” என கத்த ஆரம்பித்தவர், அதிர்ந்துப் போய் நின்றார்.

அவர் அதிர்ச்சிக்குக் காரணம் பட்டென தன் காலில் விழுந்திருந்த பரமுதான். சட்டென நகர்ந்துக் கொண்ட பாருவுக்கு கண்ணில் முணுக்கென நீர் கோர்த்துக் கொண்டது.

“ஏன்யா ஏன்? காலாகாலமா பொம்பள தான் ஆம்பள காலுல விழனும்னு சாங்கியம் சொல்லுதுய்யா! இப்ப என் காலுல விழுந்து எதுக்குய்யா என் பாவ கணக்க ஏத்தி விடற? எந்தப் பொண்டாட்டிக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வரக் கூடாதுய்யா, வரக் கூடாது! காசு தானே வேணும்! இந்தா, வச்சிக்கோ!” கையில் இருந்த பர்சில் வைத்திருந்த அன்றைய வட்டி வசூலை அப்படியே எடுத்து கீழே விழுந்துக் கிடந்த பரமுவின் தலைமட்டில் வைத்தவர், அழுகையுடன் குடுகுடுவென தனதறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டார்.

பணத்தை எடுத்துக் கொண்ட பரமு, ஓடிப் போய் போதை தெளிய தலைக்கு அவசர அவசரமாய் ஊற்றிக் கொண்டு வந்தார். பார்வதி சாத்திக் கொண்ட கதவை பார்த்தவர், வந்து சமாதானம் செய்து கொள்ளலாம் என கிளம்பிவிட்டார். துணைக்கு சின்ராசுவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.

அரியலூர் என்ன சின்ன இடமா, அங்கு போய் நின்று ‘மம்மவளே! லாஜாத்தி!’ என கத்தினால் சண்மு ஓடி வருவதற்கு! ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கிளம்பி இருந்தார் பரமு.

இதெல்லாம் சண்முவுக்கு திருமணம் நடக்க நான்கு நாள் இருக்கும் போது நடந்த விஷயங்கள்.

மகனை போனில் பிடிக்க முடியாமல், சின்ராசுவை வைத்து ‘சண்முவுக்கு கல்யாணம்! கிளம்பி வா’ என மேசேஜ் போட வைத்திருந்தார். அப்படியே எமெர்ஜென்சி என்றால் அழைக்க சொல்லி கதிர் கொடுத்த போன் நம்பருக்கு அழைத்து அப்பாவுக்கு சீரியஸ், சாக கிடக்கிறார் என சொல்ல சொன்னார். கல்யாணம் காட்சி என சொன்னால் விடுவார்களோ என்னவோ என இப்படி சொல்ல சொன்னார் சின்ராசுவை. மகன் உரிய நேரத்துக்கு வருவானோ இல்லையோ, தானாவது மீனாட்சியிடம் பேசி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என முடிவுடன் அரியலூருக்கு வந்திறங்கினார் பரமு.

குடித்து குடித்து மழுங்கிப் போயிருந்த மூளையை தட்டி தட்டி யோசித்து தான் ஒவ்வொன்றாக செய்தார் பரமு. அதற்கே ஒரு நாள் ஓடி இருந்தது. ஆனாலும் அந்த பெரிய நகரத்தில் மருமகளை எங்கே தேடுவது என மலைப்பாக இருந்தது. சரக்கு வேண்டும் என உடம்பு வேறு நடுக்கம் கொடுத்தது. மகன் வாழ்வுக்காக பல்லைக் கடித்து தன்னை அடக்கிக் கொண்டார்.

அங்கே ட்ரேக்கிங்கில் இருந்த கதிருக்கோ மனமே சரியில்லை. என்னவோ நடக்கப் போகிறது என உள்மனம் ஓலமிட்டுக் கொண்டே இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லாத வேளையில், கவனபிசகாக செங்குத்தான பகுதியில் ஏறும் போது எடுத்து வைத்த அடி சறுக்க, சரிந்து பள்ளத்தில் விழுந்திருந்தான் அவன். அந்த விபத்தில் இடது கை மூட்டு பிசகியதோடு நெஞ்சில் சரியான அடி. உடலெல்லாம் சிராய்ப்பு காயங்கள் வேறு. அதற்கு மேல் அவனை ட்ரெக்கிங்குக்கு அனுமதிக்காத பெரிய அதிகாரி கீழே மலையடிவாரத்துக்கு அனுப்பிவிட்டார். அங்கே அவர்கள் தங்கி இருந்த கேம்பில், சிகிச்சை வழங்கப்பட்டு, கைக்கும் கட்டுப் போடப்பட்டு ஓய்வெடுக்க அனுப்பப்பட்டான் கதிர். வலி உயிர் போக, நெட்வோர்க் இல்லாத போனையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் அவன். மருந்தின் வீரியம் கண்ணைக் கட்டினாலும், மனம் விழித்தப்படியே இருந்தது.

அப்பொழுதுதான் அவனுக்கு ரேடியோ தெலிகிராப்பில் மேசேஜ் வந்திருப்பதாக ஒரு தாளைக் கொடுத்து விட்டுப் போனார் அதிகாரி ஒருவர். மேசேஜைப் பார்த்தவன் பட்டென எழுந்து விட்டான். தந்தைக்கு சீரியஸ் என இருந்த அந்தத் தாளைப் பார்த்தவனுக்கு சகலமும் ஆடிப்போனது. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, நிலைமையை சொல்லி வீட்டுக்குக் கிளம்ப அனுமதி பெற்றான். ஏற்கனவே அடி வேறு பட்டிருந்ததால் வீட்டுக்கு செல்ல அனுமதி சாத்தியமானது.

அந்தக் காட்டில் இருந்து வெளியாகும் ஜீப்பில் அமர்ந்தவனுக்கு உடல் வலி கூட பின்னுக்குப் போனது. அப்பா, அப்பா என மனம் ஜபித்துக் கொண்டிருந்தது. வீட்டுத் தலைவனாக குடும்பத்தைத் தாங்கி, தனக்கு முன்மாதிரியாக இருக்காவிட்டாலும் பாசத்தை அள்ளிக் கொட்டி நெஞ்சில் நிறைந்திருந்தாரே பரமு. கலங்கிய கண்ணை ஒற்றைக் கையால் துடைத்தப்படியே அமர்ந்து வந்தான் கதிர்.

ஜீப் காட்டை விட்டு கொஞ்சம் டவுன் பக்கம் வரவும் டவர் கிடைக்க ஆரம்பித்தது. டிங் டிங்கென மேசெஜ்கள் வந்து குவிய ஆரம்பித்தன. அதை பார்க்காமல் முதலில் அப்பாவின் செல்லுக்கு அழைப்பெடுத்தான். முதல் ரிங்கிலேயே போனை எடுத்து விட்டார் பரமு.

“ராஜா, கதிரு!”

“அப்பா,அப்பா! என்னாப்பா ஆச்சு? எப்படி இருக்கீங்க? உடம்புக்கு முடியலைன்னு தகவல் வந்துச்சேப்பா!” தொண்டை அடைக்கக் கேட்டான் மகன்.

“மவனே! எனக்கு ஒன்னும் இல்லடா! குத்துக்கல்லாட்டாம் நல்லாதான் இருக்கேன். ஆனா நம்ம சண்மு”

“அப்பா! அப்பா! சம்முவுக்கு என்னப்பா? என்ன?” படபடத்து விட்டான் கதிர்.

“நாம மோசம் போயிட்டோம்டா கதிரு! என் மருமகளுக்கு, என் ராஜாத்திக்கு கல்யாணம் வச்சிட்டாங்கலாம்டா!”

“என்னப்பா? என்ன சொல்றீங்க? அதெல்லாம் இருக்காதுப்பா! என் சம்மு என் கிட்ட சொல்லாம… இதெல்லாம் சாத்தியமே இல்லப்பா!”

“அடேய் மவனே! உங்கம்மா மேல சத்தியமாடா! கல்யாணம் இன்னும் மூனு நாளுல! அலைஞ்சி திரிஞ்சு எந்த மண்டபத்துல கல்யாணம் நடக்குதுன்னு கண்டுப்புடிச்சிட்டேன்! ஆனா நம்ம சண்முவ எங்க வச்சிருக்காங்கன்னு தெரியலடா கதிரு! பையன் வீட்டு அட்ரெஸ் மட்டும் அங்கிருந்து தெரிஞ்சுகிட்டு போனேன்! பெரிய இடம்டா அவங்க! உள்ள கூட போக முடியல! ஆள் அம்புன்னு பெரிய இடம்டா சாமீ! சீக்கிரம் வாடா கதிரு! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா!”

தந்தை சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தன்னிடம் சொல்லாமல் எதையும் செய்யாத தன் சம்முவா திருமணம் வரை போயிருப்பாள் என மனம் நம்ப மறுத்தது. தன்னைக் கேட்காமல் திருமணம் செய்ய மாட்டேன் என கையில் அடித்து சத்தியம் செய்த அந்த அழகு முகம் கண் முன்னே மின்னி மறைந்தது கதிருக்கு. சட்டென தன்னை உலுக்கி நடப்புக்கு வந்தவன், சம்முவின் கதிராய் இல்லாமல் ட்ரைனிங்கில் இருக்கும் போலீசாய் நடக்க முற்பட்டான்.

தகப்பனிடமும் பக்கத்தில் இருந்த சின்ராசுவிடமும் ஆதியில் இருந்து அந்தம் வரை எல்லா விஷயத்தையும் கேட்டுக் கொண்டவன் மடமடவென காரியத்தில் இறங்கினான்.

தகப்பனை சமாதனப்படுத்தி போனை வைத்தவன், சண்முவின் போனுக்கு முயன்றான்.  லைன் போகாததால், கண்ணனுக்கு ட்ரை செய்தான். லைன் சென்றது ஆனால் அவன் எடுக்கவில்லை. விடாமல் இவன் முயல, அந்தப் பக்கம் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

“கண்ணா டேய்! போனை ஏண்டா அடைச்சிட்ட! பரதேசி! என் கையில் மாட்டுன மச்சான்னு கூட பாக்க மாட்டேன். அடிச்சே கொன்னுடுவேண்டா.” அவன் சத்தத்தில் ஜீப் ஓட்டுனர் திரும்பிப் பார்க்க, தன்னை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

‘என் சம்மு கண்டிப்பா முழு மனசோட இதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டா! என்னமோ நடந்துருக்கு. அந்த நெருக்கடியில அவள கட்டாயப்படுத்தியிருக்காங்க. இல்லைனா என் ரவுடி கிட்ட இந்த பாச்சாலாம் பழிக்காதே! சம்மு கொஞ்சம் பொறுத்துக்கடி, நான் வந்துடறேன். உன்ன என்னால யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாதுடி’

அந்த வனாந்திரத்தில் இருந்து அரியலூர் வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு நாளுக்கும் மேலானது கதிருக்கு. அங்கு வந்து சேரும் வரை உயிர் வாழ மட்டும் சாப்பிட்டான். பிழைத்துக் கிடக்க மட்டும் நீர் அருந்தினான். அடிப்பட்டிருந்த உடம்பு தன்னை மீறி களைப்பில் துவளும் போது மட்டும் தூங்கினான். சம்முவின் மதி முகம் கனவில் வர அடித்துப் பிடித்து எழுந்துக் கொண்டான். கிடைத்த வாகனத்தில் இரவு பகல் பாராமல் பயணித்து அவன் வந்து இறங்கிய தினம்தான் கல்யாண நாள்.

போலீஸ் ஆகியிருந்தாலாவது அங்கிருந்தபடியே எதாவது நடத்தி இருப்பான் கதிர். இன்னும் ட்ரைனிங்கில் இருந்தவனால் ஓரளவுதான் முயல முடிந்தது. தன்னோடு பயிற்சியில் இருக்கும் சக ஆபிசரின் தூரத்து உறவில் சித்தப்பா ஒருவர் அரியலூரில் போலிஸ் டிபார்ட்மெண்டில் இருந்தார். அவரைப் பிடித்து போன் வழியே உதவி கேட்க, பையனின் அப்பா அரசியல் செல்வாக்கு உள்ளவர், தன்னால் உதவ முடியாது என அவர் கை விரித்து விட்டார்.

வேறு வழியில்லாமல் சரியான நேரத்துக்குப் போய் விட்டால் போதும், திருமணத்தை நிறுத்தி விடலாம். சண்மு தன்னை மீறி எதையும் செய்ய மாட்டாள் எனும் நம்பிக்கையுடன் அடித்துப் பிடித்து கல்யாண மண்டபம் வந்திறங்கினான் கதிர். தன் மம்மவளையோ அவள் குடும்பத்தையோ நெருங்க முயன்று முடியாமல் மண்டபத்தின் வெளியேவே நின்றிருந்தார் பரமு.

மகனைக் கையில் கட்டுடன் பார்த்தவர் பதறி போய் ஓடி வந்தார்.

“கதிரு! என்னடா ஆச்சு?”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்ப்பா! சம்முவ பார்த்தீங்களா?”

அவன் கேள்விக்கு கண்ணில் நீர் மல்க,

“எல்லாம் முடிஞ்சதுடா கதிரு! என் மருமக வேற வீட்டுக்கு மருமக ஆகிட்டாடா” என அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி விட்டார்.

ஓய்ந்து போய் கண்ணில் நீர் வர கதிர் நின்றது இரண்டே நிமிடம்தான்.

“அவ என்னைக்குமே உங்க மருமகதான்பா” என சொல்லியவன், அவரை விலக்கி விட்டு மடமடவென மண்டபத்தின் உள்ளே நுழைந்தான். அங்கங்கே போலீஸ், கட்சி ஆட்கள் என பயங்கர காவலுடன் இருந்தது உள்ளே. அதனால்தானே பரமுவால் சண்முவையோ அவள் குடும்பத்தையோ நெருங்க முடியவில்லை.

மக்கள் பந்திக்கு சென்று கொண்டிருக்க, இவன் மணமகள் என போர்ட் போட்டிருந்த அறைக்கு விரைந்தான். வாசலில் பாதுகாப்புக்கு இருவர் நிற்க, அவர்களை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் கதவை வேகமாக தாள் போட்டான். உள்ளே சண்மு புது தாலி மினுங்க சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள். இவன் கதவைப் பூட்டிய ஒலியில் நிமிர்ந்துப் பார்த்தவள்,

“கதிரு!” என ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“சம்மு!சம்மு! சம்மு!” அவனால் அவள் பெயரை ஜபிக்க மட்டுமே முடிந்தது. வாயில் இருந்து வேறு எதுவும் வரவில்லை.

“என்னடா ஆச்சு? கையில என்ன கட்டு?” பதறினாள் சண்மு.

ஒன்றுமில்லை என தலையை மட்டும் ஆட்டியவன்,

“கிளம்புடி போகலாம்!” என அழைத்தான்.

“அடுத்தவன் பொண்டாட்டிய எங்க கூப்புடற கதிரு?” என கேட்டப்படி அவன் முன்னே வந்து நின்றார் மீனாட்சி. அவர் அருகிலேயே கண்ணனும் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் கதிருக்கு கோபம் கொப்பளித்தது. ஓங்கி விட்டான் ஓர் அறை பளாரென.

“என்னடா உனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு? அவன ஏன் அடிக்கற?” என மீனாட்சி கத்த,

“ஏன்டா போனை எடுக்கல? ஏன் எடுக்கல?” என இவன் ரௌத்திரமாய் நின்றான்.

“அது வந்துண்ணா…”

“அண்ணான்னு சொல்லாதே! சொல்லாதே! கொன்னுருவேன்” என அவனிடம் இரைந்தவன், மீனாட்சியிடம்

“காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் அடிச்சுட்டுப் போற மாதிரி என் சம்முவ, எப்படி மீனாம்மா இன்னொருத்தனுக்கு நீங்க தாரை வார்த்துக் குடுக்கலாம்? என்னைத் தவிர அவள யாரு நல்லா பார்த்துப்பா? எனக்கு என் சம்மு வேணும். நான் கூட்டிட்டுப் போறேன் அவள!”

காவலிருந்தவர்கள் கதவைத் தட்ட, கண்ணன் போய் வந்தவர் தங்கள் சொந்தம்தான் என சொல்லி மீண்டும் கதவைத் தாள் போட்டிருந்தான்.

காத்திருந்தவன் பொண்டாட்டி எனும் சொல்லிலே சண்மு அதிர்ந்துப் போய் நின்றாள். தன் நண்பனா இப்படி பேசுவது என அதிர்ச்சியாக அவனை வெறித்திருந்தாள்.

“என்ன பேச்சு பேசறேன்னு தெரியுதா கதிரு! சண்மு உன் தோழி மட்டும்தான். என்னமோ காதலி மாதிரி பேசற! வார்த்தைய அளந்துப் பேசு! கல்யாணம் ஆனப் பொண்ணுடா அவ!”

“மீனாம்மா! நான் நல்ல நிலைமைக்கு வந்ததும் என் காதல சொல்லி அவள கைப்பிடிக்கனும்னு நினைச்சேன். கல்யாணம்னா நமக்குல்லாம் தெரியாமலா இருக்கும்னு அசால்ட்டா இருந்துட்டேன். அதுக்குள்ள இப்படி அவசர கல்யாணம் நடத்திட்டீங்க! என்னால என் சம்முவ யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாது! நான் அவள என் கூட கூட்டிட்டுப் போறேன்! எங்கள விட்டுடுங்க”

கதிரின் வாயில் இருந்து உதிர்க்கப்பட்ட ஒவ்வொரு சொல்லும் கூர் ஈட்டியென சண்முவைப் பதம் பார்த்தது. இவ்வளவு நாள் நண்பனாய், தோழனாய், கல்மிஷமில்லாமல் தான் பழக, அவனோ மனதில் காதலை வைத்து கள்ளத்தனமாய் பழகி இருக்கிறானே என துடித்துப் போனாள். கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள அவன் கையைப் பற்றி இருந்தவளின் பிடி மெல்ல தளர்ந்தது. ஓரெட்டு நகர்ந்து நின்றவளை மீண்டும் கைப்பிடித்து தன் அருகே இழுத்துக் கொண்டான் கதிர்.

“கையை எடுடா”

“சம்மு!!!”

“கைய எடுடான்னு சொன்னேன்”

அவளின் கோப குரலில் பட்டென கையை விட்டான் கதிர்.

“வெளிய போ!”

“நீயில்லாம போக மாட்டேன் சம்மு”

“நான் உன் கூட வரமாட்டேன்!”

“நீ இல்லாம நானும் போக மாட்டேன் சம்மு!”

“ஆமாடா, போக மாட்டதான். இவ்வளவு நாள் நண்பன்னு நான் நம்பனவன் பொய்யாய் போய்ட்டான். அதையே என்னால தாங்க முடியல! நெஞ்சு வெடிக்கற மாதிரி இருக்கு! தாலி ஏறுன என்னை கூட்டிட்டுப் போ! ஊரே சண்முவுக்கு கள்ளக் காதல்னு சொல்லட்டும். நெஜமாவே நெஞ்சு வெடிச்சு செத்துப் போறேன்”

“சம்மு!!!” அதிர்ந்தான் கதிர்.

“நட்புன்றது எவ்வளவு புனிதமானது தெரியுமாடா! உன்னை எப்படிலாம் நம்பனேன்! கடைசில சராசரி ஆம்பள மாதிரி அதுக்கு காதல் வர்ணம் பூசிட்டல்ல! மடைச்சி மாதிரி நீ இப்போ கல்யாணம் வேணா சம்முன்னு சொல்றப்போலாம் என் நன்மைக்குத்தான் சொல்றேன்னு எவ்வளவு சந்தோசப்பட்டேன். எல்லாத்துலயும் உள்குத்து இருக்குல்ல! நீ என்னை தொட்டப்போ, தடவனப்போ, கட்டிக்கிட்டப்போ எல்லாம் நான் நட்பத்தான் பார்த்தேன். ஆனா நீ அதுல காதல புகுத்திட்டல்ல! போயிடுடா கதிரு! என் வாழ்க்கைய விட்டு ஒரேடியா போயிரு! இன்னும் நான் கண்டதையும் பேசி உன்னை ஹைர்ட் பண்ணறதுக்குள்ள போயிடு” அழுதபடியே சொன்னாள் சண்மு. இத்தனை வருட நட்பு சிதைந்து போன அதிர்ச்சியில் அவளால் ஒழுங்காக கூட பேச முடியவில்லை.

“சம்மு, இப்படிலாம் பேசாதடி! போ போன்னா, உன்னை விட்டுட்டு எப்படிடி போவேன். உன்னைக் காதலிச்சது தப்புன்னா, என் கூடவே இருந்து என்னை தினம் வார்த்தையால கொல்லு! தாங்கிக்கறேன்! இப்படி உன் வாழ்க்கையில இருந்து போக சொல்லாதடி!” சண்முவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் கதிர்.

“அவதான் காதல் இல்ல நட்புத்தான்னு சொல்லறால! போயிடு கதிரு! கட்டுன தாலியில ஈரம் கூட காயல, அவ வாழ்க்கையில மண் அள்ளிப் போட்டுடாத!” கையெடுத்துக் கும்பிட்டார் மீனாட்சி.

“முடியாது மீனாம்மா! சம்மு இல்லாம நான் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்”

“நீ போக வேணா! நான் ஒரேடியா போயிடறேன்! அதுக்கப்புறம் என் பொணத்துக்கிட்ட காதல சொல்லு! அதாச்சும் நட்புக்கு துரோகம் பண்ண உன்னோட காதல ஏத்துக்குதான்னு பார்க்கறேன்!” என்றவள் ரூமில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டில் ஒரு கோடு கிழித்தாள். குபுக்கென ரத்தம் வர பதறிவிட்டான் கதிர். வேகமாக நெருங்கியவனை,

“லேசா தான் கீறியிருக்கேன்! இன்னும் காதல், கல்யாணம்னு உளறிட்டு இருந்தா ஒரேடியா கிழிச்சிருவேன்டா கதிரு” என மிரட்டினாள். அவனை அருகே நெருங்கவே விடவில்லை.

கண்ணன்தான் அவசரமாக தான் அணிந்திருந்த வேட்டியைக் கிழித்து கட்டுப் போட்டுவிட்டான்.

சண்முவின் ரத்தம், கதிரின் மொத்தத்தையும் அசைத்துப் பார்த்திருந்தது. கண்களை இறுக ஒரு முறை மூடித் திறந்தவன்,

“வேணாண்டி சம்மு! எங்கிருந்தாலும் நீ உயிரோட இருந்தா போதும் எனக்கு! இத்தனை வருஷம் காதல மனசுல பூட்டி வச்சு செத்துகிட்டு இருந்தேன். இனி காதல் தோல்விய பூட்டி வச்சு காலத்த ஓட்டிருவேன்! இந்த துரோகிய முடிஞ்சா மன்னிச்சிரு சம்மு” என சொல்லி கல்லாய் கணத்த கால்கள் இரண்டையும் மெல்ல நகர்த்தி கதவை நெருங்கிப் போனான். கதவை திறக்கும் முன் திரும்பி, கலங்கிய கண்களை சிமிட்டி சரி செய்து தன் சம்முவை விழிகளில் நிறைத்துக் கொண்டான்.

அவன் வெளியேறியதும், மடங்கி தரையில் அமர்ந்த சண்மு ஓவென கதறி அழுதாள்.

‘என்னை மன்னிச்சிருடா கதிரு! இப்போ நான் உன் தோழி இல்லடா! இன்னொருத்தன் மனைவி! எப்போ அந்தப் ப்ரதாப் என் கழுத்துல தாலிய கட்டுனானோ, இனி அவன் தான் என் உலகம்! என் வாழ்க்கை இனி அவன சுத்தித்தான் சுழலனும்! என்னை மன்னிச்சிருடுடா கதிரு! நட்பா போன நம்ம உறவுல காதல் நுழைய நான் எந்த வகையிலாச்சும் காரணமா இருந்திருந்தா என்னை மன்னிச்சிரு. என்னை மறந்துட்டு உன் வாழ்க்கைய பாருடா கதிரு’

மனம் ஊமையாய் ஓலமிட, கண்ணீர் தாரை தாரையாய் வழிய அப்படியே தரையில் சுருண்டு விட்டாள் சண்மு. விருந்தினர்களை உபசரித்து விட்டு அந்நேரம் தன் மனைவியையும் அவள் குடும்பத்தையும் சாப்பிட அழைக்க வந்த ப்ரதாப் கண்டது கண்ணீர் கரையுடன் சுருண்டுக் கிடந்த சண்முவையும் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்த மீனாட்சியையும்தான். முகம் சுருங்க யோசனையாக தன் மனைவியையே பார்த்தப்படி நின்றிருந்தான் சண்முகப்ரியாவின் கணவன்.

மகனை வீட்டுக்கு அழைத்துப் போகாமல், லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கினார் பரமு. கட்டிலில் படுத்தவன் தான் இவர் சாப்பிட அழைக்கும் போது கூட எழவேயில்லை கதிர். கண்களில் மட்டும் நீரருவி இறங்கியபடியே இருந்தது. பரமுவாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை மகன் படும் பாடு. சின்ராசுவை அவனுக்குத் துணையாக வைத்துவிட்டு போனவர், திரும்பி வரும் போது பாட்டிலோடு தான் வந்தார்,

சோகத்தை சரக்குப் போட்டு ஆற்றிக் கொள்ள முயன்றவரின் முன்னே இன்னொரு கிளாஸ் நீட்டப்பட்டது. நிமிர்ந்துப் பார்த்தவர், அதிர்ந்துப் போனார்.

“கதிரு”

“இன்னிக்கு ஒரு நாளைக்குக் குடுங்கப்பா, நான் சுயநினைவோட இருக்கக் கூடாது. என் சம்மு இன்னொருத்தன் பொண்டாட்டியா இன்னைக்கு வாழ ஆரம்பிக்கிறா. எத்தனை கனவு கண்டிருப்பேன் நான். அவ கூட எப்படிலாம் வாழனும்னு எத்தனை கற்பனை பண்ணீயிருப்பேன் நான்! அதெல்லாம் இன்னொருத்தன் கூட வாழப்போறா என் சம்மு! எனக்கு எல்லாத்தையும் மறக்கனும். ப்ளிஸ்ப்பா. குடுங்க”

கலங்கிப் போனார் பரமு!

“என்னைப் பெத்த ராசா! வேணாம்யா! இது ஒரு புதைக்குழி! விழுந்தா அப்படியே அமுக்கிரும்டா”

“இல்லப்பா! இன்னைக்கு மட்டும்தான்! தாங்க முடியலப்பா! கண்ண மூடுனாலே அவ கைய கிழிச்சுக்கிட்டதுதான் ஞாபகம் வருது! சத்தியமா இன்னிக்கு மட்டும் தான் குடிப்பேன்! நான் குடிகாரனா ஆகறத என் சம்மு விரும்பமாட்டாப்பா! அவளுக்குப் பிடிக்காதத நான் செய்ய மாட்டேன்! இன்னைக்கு மட்டும்ப்பா! ப்ளிஸ்பா!!” சின்ன பிள்ளையாய் மாறி கெஞ்சும் தன் மகனை கண்ணீர் மல்க பார்த்தார் பரமு. ஒரு பெருமூச்சுடன் எந்த தகப்பனும் செய்யக் கூடாத காரியத்தை செய்தார் அவர். பால் கொடுத்து வளர்த்த தன் மகனுக்கு அல்காஹால் ஊற்றிக் கொடுத்தார். அவன் மட்டையாகும் வரை ஊற்றிக் கொடுத்தார்.

மப்பில் கவிழ்ந்து கிடந்தவன் பாடிய மெல்லிய கீதம் பரமுவின் மனதில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது.

‘உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்’

(உயிர் போகும்…)