Kanavu 7

Kanavu 7

கனவு – 7

“ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா நியாபகத்துல வச்சி என்னமோ அப்பப்ப பேசுறா.. அவ இத்தனை இயர்ஸ் –ஆ எடுத்துக்கற டேபிளட்ஸோட எஃபக்ட்.. டேபிளட்ஸ் நிறுத்த வேண்டிய பீரியட் வரும் போது இது எல்லாம் தானா சரியா போகும்..” என்றான் திரவியம்.

“அம்மு சொல்லுற கனவு, திடீர் திடீர்னு அவ கத்தி கலாட்டா பண்ணுற விஷயம் இது எல்லாம் டேபிளட் எஃபெட் –னு சொல்லுற.. சரி.. ஆனால் இன்னைக்கு அம்மு அந்த அனேகனோட அப்படி நின்னது..? அவ மயங்கி விழுந்தது..?” என்று கண்ணீர் குளமாய் இருந்த கண்களை துடைத்தவாறு கேட்டாள் ஆஷ்ரிதா.

“எல்லாம் அந்த பொறுக்கி நாயி வேலையாதான் இருக்கும்.. அவன் என்னத்த பண்ணி தொலச்சானோ யாருக்கு தெரியும்..?” என திரவியம் சொல்லவும் பட்டென அவனை திரும்பிப் பார்த்து முறைத்த ஆஷ்ரிதாவிடம்

“ஹேய்.. அம்மு –வ தப்பு சொல்லல.. அம்மு மயங்கி விழுந்தானு சொல்லுற, எழுந்ததும் அவளுக்கு ஒன்னும் நியாபகம் இல்லைனு சொல்லுற.. அவன் டாக்டர் வேற.. என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா..? அதை தான் சொன்னேன்.. நீ ஆளு யாருனு மட்டும் காட்டு எனக்கு.. நான் பார்த்துக்கறேன் அவன..” என தான் அணிந்திருந்த சட்டையின் கையினை மணிக்கட்டு வரை மடக்கிவிட்டவாறு கூறினான் திரவியம்.

அனேகனுக்கும் ஆஷ்ரிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக் கொண்டிருந்தாலும் அவன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஆஷ்ரிதாவுக்கு மனதளவில் வந்தது இல்லை என்பதே உண்மை. ஆண்கள் இல்லா வீடு பதம் பார்த்து விடலாம் என மற்றவர் தங்களை நினைத்துவிட கூடாது என்பதற்காக யாரையும் எதனையும் நம்பாதவளாய் தன்னை காட்டிக் கொள்ள குறுக்கு கேள்விகளும் அடாவடி பேச்சுமாக இருப்பாலே தவிர வேறு எந்த எண்ணமும் ஆஷ்ரிதா மனதில் இதுவரை இருந்ததில்லை.

திரவியம் “அவன் என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா..?” என்று கூறும் பொழுது அனேகன் அத்தனை கீழ் தரமானவன் இல்லை என ஆஷ்ரிதாவின் மனம் அடித்து கூறியது. அதை இவனிடம் எப்படி சொல்லுவது என எண்ணியவள்

“இல்லை திரு.. நான் பார்த்துக்கறேன்..” என கண்டிப்போடு கூறினாள். இதை கேட்ட திரவியத்திற்கு ஆஷ்ரிதாவின் மீது கோபம் தான் வந்தது.

“என்னத்த பார்த்துக்க போற நீ..? நீ பார்த்த லட்சணம் தான் தெரியுதே.. எவனோ வந்தானாம், முன்ஜென்மம் -னு சொன்னானாம், கட்டிப்புடிச்சிட்டு நின்னானாம் அவன் கூட ஹாயா உட்கார்ந்து பேசிட்டு வந்தாளாம்.. இனி நான் சொல்லுறத..” அடுத்த வார்த்தையை அவன் சொல்லுவதற்கு முன்னால் பளார் என அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்திருந்தாள் ஆஷ்ரிதா.

ஏற்கனவே நடந்தவற்றில் மனம் முழுவதுமாக உடைந்திருந்தவளுக்கு எது உண்மை எது பொய் எதை நம்ப வேண்டும் என்ற எல்லா குழப்பங்களுடன் சேர்ந்து அம்ரிதாவை எப்படி சரி செய்ய போகிறோம் என்ற அச்சமும் வாட்டிக் கொண்டிருக்க, ஆரம்பத்தில் தான் சொல்வதை கேட்டு சிரித்ததோடு மட்டும் இல்லாமல் இப்போது உரிமை என்னும் பெயரிலும் அக்கறை என்னும் பெயரிலும் அவன் பேசிய இத்தகைய கடுமையான வார்த்தைகள் ஆஷ்ரிதாவின் நெஞ்சில் கீறல்களை ஏற்படுத்தியது.

அவளிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்த்திடாத திரவியம் அதிர்ச்சியில் அசையாது நின்றுக்கொண்டிருந்தான். அவனை அறைந்த கையின் விரல்களை மடக்கி இறுக்கிக் கொண்டு, கண்களை மூடி பல்லை கடித்துக்கொண்டு பெறுமூச்சு ஒன்றை வெளியே விட்ட ஆஷ்ரிதா அவனை ஏறிட்டும் பார்க்காமல் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

நேராக தன் வீட்டிற்கு வந்த ஆஷ்ரிதா குளியலறைக்குள் சென்று ஷவரை திறந்துவிட்டவள் அதிலிருந்துக் கொட்டும் தண்ணீரில் நனைந்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்னம்மாவுக்கு அந்த காட்சியை கண்டதும் மனம் பதறிப்போனது.

“அய்யோ.. என்ன பாப்பா ஆச்சு.. எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?” என்று திறந்திருந்த குளியலறையை நோக்கி ஓடினார்.

“வாங்க பாப்பா.. வெளியில வாங்க.. உடம்புக்கு ஏதாவது வந்திடப்போகுது.. சொன்னா கேளுங்க..” என ஆஷ்ரிதாவை வெளியில் இழுத்து வர முயன்றுக் கொண்டிருந்தார் பொன்னம்மா.

“என்ன விடு பொன்னம்மா.. தலை வெடிச்சிரும் போல இருக்குது.. இந்த தண்ணீல நனஞ்சாலாவது தலையில இருக்கற சூடு கொஞ்சம் குறையுதானு பார்க்கிறேன்..” என்று அழுதவாறே கூறினாள்.

பொன்னம்மாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்ன விஷயம் என்றும் புரியவில்லை. இப்படி மனம் உடைந்து அழும் ஆஷ்ரிதாவை இந்த சமயத்தில் அதிகம் கட்டாயப்படுத்த விரும்பாத பொன்னமா அங்கிருந்து அகன்று சமயலறைக்குள் சென்றார். சூடாக தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தவர் ஆஷ்ரிதாவை தேடிப் பார்த்தார்.

இன்னும் அவள் குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை என்றதும் அங்கு சென்ற பொன்னம்மா, அழுது அழுது சோர்ந்தவளாய் லேசான மூச்சிறைப்புடன் ஸ்வப்த நாடிகளும் அடங்கி போய் அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டார்.

இத்தனை வருடத்தில் தான் கண்டிராத இத்தகைய காட்சி அவரின் மனதை பிழிந்தெடுக்க, “ஆத்தா.. பேச்சியம்மா.. உனக்கு கண்ணு இல்லையா.. இந்த புள்ளைங்கள ஏன் இப்படி போட்டு படுத்தற..? ஒருத்தரையும் ஒரு சொல்லு சொல்லாத இந்த புள்ளைங்களுக்கு எதுக்கு இப்படியெல்லாம் நடக்குது..?” என்று தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுதவாறு ஆஷ்ரிதாவை நெருங்கினார்.

“பாப்பா.. உள்ள எழுந்து வாங்க.. இப்படியே தண்ணிக்குள்ள உட்கார்ந்திருந்தா உடம்பு என்ன ஆகுறது..? வாங்க..” என ஒரு கையால் ஆஷ்ரிதாவை தூக்கிய பொன்னம்மா மறு கையால் ஷவரை அடைத்தார். கைத்தாங்கலாக ஆஷ்ரிதாவை அவளது அறைக்கு அழைத்து வந்த பொன்னம்மா மாற்று உடையை எடுத்துக் கொடுத்து அதை மாற்றிவிட்டு வரும் படி கூறினார். ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிப்படாது பேயறைந்தாற் போல நின்றிருந்தாள் ஆஷ்ரிதா.

அவளை தோள் பற்றி பொன்னம்மா உலுக்கிட, அவரது கை நடுக்கத்தை உணர்ந்த ஆஷ்ரிதா வயதானவரை தான் மிகவும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என எண்ணி தன் நிலை மீண்டாள். பொன்னம்மாவின் கைகளில் இருந்த உடைகளை வாங்கியவள் அதனை மாற்றிக் கொண்டு வெளியே வந்து சோஃபாவின் மீது பொத்தென்று அமர்ந்து தன் முதுகை மொத்தமும் சோஃபாவின் சாய்விடத்தில் சாய்தவளாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.

பொன்னம்மா தான் தயாரித்து வைத்திருந்த தேனீரை கொண்டுவந்து ஆஷ்ரிதாவிடம் நீட்டி “இத குடிங்க பாப்பா” என்றார். கண்கள் திறந்து பார்த்தவள் வேண்டாமென தலையை மட்டும் அசைத்திட பொன்னம்மாவின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்கியது. அப்படியே அசையாது தேனீரை நீட்டியவாறு அங்கேயே நின்றிருந்தார் பொன்னம்மா.

இதனை கண்ட ஆஷ்ரிதா “பொன்னாம்மா.. எதுக்கு இப்ப அழறீங்க.. கொடுங்க நான் குடிக்கிறேன்..” என வாங்கிக்கொள்ள தற்போது அவர் புன்னகை பூத்தார். “குடிச்சிட்டேன்.. இப்ப சந்தோஷமா..?” என ஆஷ்ரிதா கேட்கவும் இல்லை என மறுப்பாக தலையாட்டிய பொன்னம்மாவை என்ன என்பது போல பார்த்தாள் ஆஷ்ரிதா.

“என்ன ஆச்சு பாப்பா.. இதுவரை நான் உங்கள இப்படி பார்த்ததே இல்லை.. இவ்வளவு அழற அளவு என்ன நடந்தது..?” என கேட்டவாறு ஆஷ்ரிதாவின் காலுக்கு அருகே தரையில் அமர்ந்தார் பொன்னாம்மா. ஆஷ்ரிதாவிடம் பதில் எதுவும் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டதும் அவளுக்கு சொல்ல விருப்பமில்லை என்று எண்ணிய பொன்னம்மா அங்கிருந்து எழுந்துக் கொள்ள எத்தனித்தார். திடுமென அவரது தோளைப் பிடித்து நிறுத்திய ஆஷ்ரிதா “உங்களுக்கு மந்திரவாதி யாரையாவது தெரியுமா பொன்னம்மா..?” என்று கேட்டாள்.

“என்ன மந்திரவாதியா..??” அதிர்ச்சியும் குழப்பமுமாய் கேட்டார் பொன்னம்மா.

“ஆமாம் பொன்னம்மா” என்ற ஆஷ்ரிதா பொன்னமாவிடம் அம்ரிதாவுக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்து போவதாய் மட்டும் சொன்னவள் “ஏதாவது பூஜை புனஸ்காரம் செய்து பார்த்தால் என்ன என தோன்றுகிறது..?” என்கவும் ஒரு யோசனை பார்வை பார்த்த பொன்னம்மா “தெரியும் மா.. நான் வருகிற வெள்ளிக்கிழமை அவங்க கிட்ட உங்களை கூட்டிட்டு போறேன்..” என்றார்.

“சரி பொன்னம்மா” என்றவளுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது டாக்டர் பிரபாகரனை பார்க்காமலேயே தான் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டோம் என்று. உடனே தனது அலைப்பேசியை எடுத்தவள் அவருக்கு அழைப்புக் கொடுத்தாள். அழைப்பு மணி முழுவதுமாக ஒலித்து நின்றது மறு பக்கத்தில். “ப்ச்” என அலைபேசியை சோஃபாவில் தூக்கி எறிந்தவள் கண்களை மூடி அப்படியே சரிந்தாள்.

அத்தனை அழுத்தங்களையும் உள்ளடக்கியதால் சோர்ந்திருந்த அவளது மூளைக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. அதன் விளைவாய் நன்கு உறங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவை பார்த்த பொன்னம்மா அவர்களது தாய் யசோதையின் உருவ படத்திற்கு முன் சென்று விளக்கை ஏற்றி “உன் புள்ளைகள நீதான் பார்த்துக்கனும்.. அவங்களுக்கு துணை நீதான் தாயி” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை ஆஷ்ரிதாவை பார்த்தவர் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.

அதே நேரம் அனேகன் அவனது ஃபிளாட்டில் தனது மடிகணினியை வெறித்தவாறு அமர்ந்திருக்க வேகமாக உள்ளே வந்த மோகன்
“என்ன மிஸ்டர் அனேகன்.. உங்கள பார்க்கறதுக்கும் உங்ககிட்ட இருந்து ஒரு பதில வாங்குறதுக்கும் நாங்க நாய் மாதிரி உங்க பின்னால சுத்திக்கிட்டே திரியனுமா..? வேற வேலை இல்லையா எனக்கு?” என்று கத்தினான்.

தனக்கு முன் வந்து நின்று காட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன் தன் வேலையிலேயே மூழ்கியிருந்தான்.

“டேய்.. உங்கிட்ட தான் டா கத்திக்கிட்டு இருக்கேன்..” என்று கோபம் கொந்தளிக்க கூறினான் மோகன்.

மடிகணினியின் திரையில் இருந்த தன் பார்வையை சற்றே நிமிர்த்தி மிகவும் அமைதியாய் மோகனை பார்த்தான் அனேகன். கோபத்தின் தீவிரம் கூடி மேலும் கீழுமாய் மூச்சை வேகமாக விட்டுக்கொண்டிருந்தான் மோகன். தான் அருகில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அனேகன் மோகனிடம் நீட்ட, அதனை வாங்கிப் பருகிக் கொண்ட மோகன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அனேகனுக்கு அருகே அமர்ந்தான்.

“டேய்.. அப்பா மேல இவ்வளவு பாசம் இருக்குதுல.. பின்ன ஏன் டா இப்படி என்ன அங்க இங்கனு சுத்த விடுற..? வயசான காலத்துல என்னால இப்படி உன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்க முடியுமா..? நம்ம வீட்டுல வந்து இருக்க சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க.. கால காலத்துல எனக்கும் உன் அம்மாவுக்கும் பேர புள்ளைங்கள பார்க்க ஆசை இருக்காதா?” என்று அடுக்கு மொழியாய் ஸ்ருதி பாட ஆரம்பித்தார்.

அனேகனோ அதற்கு விடையாய் ஒரே ஒரு பார்வையை தான் செலுத்தினான். அதை கண்ட மோகன் “புரியுது.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டனே அப்படீன்னு என்னை பார்க்கறது புரியுது.. ஆனால் பொண்ணு யாரு, எப்ப கல்யாணம் பேசலாம் எதுவும் சொல்லாம போய்ட்டியே பா” என்றார் பாவமாக.

அப்பாவி போல பேசிய மோகனை மிகவும் ஏளனமாய் திரும்பிப் பார்த்த அனேகன் “அப்பா.. உங்க மேல உள்ள பாசத்துல தண்ணி எடுத்துக் கொடுத்தேன்னு நினைச்சீங்களா..? அடுத்து நான் சொல்ல போற விஷயத கேட்டு டீஹைடிரேட் ஆகிற கூடாதேனு தான் கொடுத்தேன்..” என்றான்.

ஒன்றும் புரியாமல் அனேகனை பார்த்துக் கொண்டிருந்த மோகனின் அலைபேசி அங்கிருந்த அமைதியை சிதறடிக்கும் வண்ணம் அலற மோகனும் தான் அதிர்ந்து போனான். திடீரென ஏற்பட்ட சத்தத்தில் கை கால் பறக்க வியர்த்து கொட்ட ஆரம்பித்தது மோகனுக்கு.

“உடம்புல இவ்வளவு பிரஷர் –ஐ வச்சிக்கிட்டு இப்படி ஒரு ரிங் டோன் தேவையா உங்களுக்கு” என நக்கலாக கேட்டான் அனேகன். அதற்கு அசடு வழிந்தாற் போல சிரித்து வைத்த மோகன் யாரிடம் இருந்து அழைப்பு வந்தது என பார்த்துவிட்டு ஒரு கள்ள முழிப்போடு அங்கும் இங்கும் தன் கருவிழிகளை உருட்டியவன் மீண்டும் அலைபேசியை தன் பாக்கெட்டினுள் வைத்தான்.

“இதுக்கு தான் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் செய்ய கூடாதுனு சொல்லுறது.. இப்படி சிரமப்பட வேண்டிய அவசியம் இருந்துருக்காதுல..?” என்று அனேகன் கூற, அது ஏதோ இரு அர்த்தத்தில் அவன் கூறுவது போலவே தோன்றியது மோகனுக்கு. விஷயம் தெரிந்திருக்குமோ என ஒரு நிமிடம் மோகனின் மனம் பதபதைக்க, ‘இருக்காது இருக்காது.. நமக்கு குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்குது’ என தனக்கு தானே சமாதானம் செய்தவனது எண்ணம் அடுத்த நொடியே சுக்குநூறானது.

அனேகனுக்கு அருகில் வந்து அமர்ந்த மோகன் அவனது மடிகணினியை அப்போது தான் பார்த்தான். அதில் அம்ரிதாவின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்து பெரும் குழம்பத்தில் மூழ்கிப்போன மோகனின் மனம் தற்பொழுது வந்த அலைப்பேசி அழைப்பை சிந்தித்து மேலும் பீதியானான். இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “என்ன டா அனேகா.. இவ ஃபோட்டோ எப்படி உன்னோட லேப்டாப் –ல..? இவள உனக்கு தெரியுமா..?” என்றான் கரகரப்பான குரலில்.

“எனக்கு தெரியும்.. ஆனால் உங்களுக்கு தான் தெரியாது..” என்றான் அனேகன்.

“ஹாஹா.. நைஸ் ஜோக் மை மேன்.. உனக்கு தெரியும் எனக்கு தெரியாதா..? இவ என்னோட ஆஃபீஸ் –ல தான் வேலை செய்கிறாள்.. எனக்கு தெரியாம எப்படி.. ஹாஹா.. சரி காமடி பண்ணாம சொல்லு பா.. இவள ஏன் பார்த்துட்டு இருக்க..?” என தொப்பை குலுங்க குலுங்க சிரித்தவாறு கேட்டான் மோகன்.

அனேகன் பதில் எதுவும் சொல்லாமல் தன் இருக்கையில் இருந்து எழுந்து தான் அணிந்திருந்த டீ ஷர்ட்டை சரி செய்துக் கொண்டே கண்ணாடி முன் சென்றவன் தனது கைகளால் முடியினை சீவிக் கொண்டிருந்தான். மோகனும் எழுந்து அவனது அருகில் வர அவரை திரும்பி ஒரு முறை கண்ணடித்துவிட்டு சமயலறை நோக்கிச் சென்றவன் ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தான்.

அனேகன் கண்ணடித்ததை வைத்து தப்பு கணக்குப் போட்ட மோகன் “மறுபடியும் எனக்கு தண்ணியா..?” என கூறிவிட்டு ஹாஹா என பலமாக சிரித்தான். அவனது அருகில் வந்த அனேகன் “குடிங்க பா” என டம்ளரை நீட்டினான்.

“டேய் மகனே.. அப்பாக்கு புரிஞ்சிப்போச்சி டா.. ஹாஹா.. இதுக்கெல்லாம் எதுக்கு டா தண்ணி.. நான் டென்ஷன் ஆகல டா மகனே.. என் மகன்னு நிரூபிச்சிட்ட டா..” என்றவாறு அவனது தோள் மீது கைப்போட்டுக் கொண்டவர் அவனது காதருகே சென்று “பணக்கார இடத்துல இது எல்லாம் சகஜம் டா மகனே.. என்ஜாய்” என்றுவிட்டு மீண்டும் சத்தமாக சிரிக்கலானான்.

மோகனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனேகன் அவனது தோள் அணைப்பில் இருந்து மெல்ல நகன்று வந்து தனது மடிகணினியை தட்டிக்கொண்டிருந்தான். மோகனோ தன் பேச்சை நிறுத்தாதவனாய்

“ நீ உன் அம்மா மாதிரி ஆட் ஒன் ஒவுட் –னு நினைச்சிருந்தேன் டா.. ஆனால் நீ என் புள்ளனு ஃப்ரூவ் பண்ணிட்ட..சும்மாவா கம்பெனியெல்லாம் நடத்துறோம்.. இதுக்கெல்லாம் யூஸ் ஆகும் தானே.. ஹாஹா” என்று ஏதோ மகா சாதனை செய்தாற் போல் பெருமை ஓலம் போட்டுக் கொண்டிருந்தவனை சொடக்கு இட்டு நிறுத்தினான் அனேகன்.

என்ன சொல்லப்போகிறான் என விழித்துக் கொண்டிருந்த மோகனை நோக்கி மடிகணினியை திருப்பினான் அனேகன். அந்த திரை தற்போது காட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தை கண்டதும் மோகனின் இதயம் அதிவேகத்தில் அடித்திட, அத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் கொஞ்சம் கூட ஈயாடவில்லை இப்போது. தன் மேஜையில் வைத்திருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிக் கொண்ட அனேகன் கொஞ்சம் முன்பு தான் கொண்டு வந்த தண்ணீர் டம்ளரை எடுத்துக் கொண்டு மோகனின் அருகில் சென்றான்.

“இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன்.. இப்ப டென்ஷன் ஆகுதா..? இந்தாங்க தண்ணீர் குடிங்க” என டம்ளரை நீட்டினான் அனேகன். ஆனால் அதிர்ச்சி மாறாத மோகனோ மடிகணினியையும் அனேகனையும் மாறி மாறி பார்த்தவாறு இயந்திரமாய் நின்றுக் கொண்டிருந்தான்.

(களவாடுவான்)

error: Content is protected !!