Rainbow kanavugal-7

7

மதுபாலா.

தாமோதரன் நந்தினியின் ஒரே புதல்வி. தாமோதரன் கல்லூரி படிக்கும் காலத்திலேயே புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்று சுற்றி கொண்டிருந்தவர்.

தாமோதரனின் தாத்தாவோ சுதந்திர போராட்ட வீரர். அங்கிருந்து அவருக்கு முளைத்ததுதான் இந்த புரட்சி சிந்தனைகள். புரட்சியால் மாற்றங்கள் விளையும். ஆனால் தாமோதரன் விஷயத்தில் காதல் முளைத்தது

நந்தினிக்கு தாமோதரனின் சமூகசிந்தனையும் அக்கறையும் தவறுகளை தட்டிக் கேட்கும் பண்பும் பிடித்திருந்தது. அவர் கல்லூரியில் பேசும் உரைகளை கேட்டு கேட்டு காதல் வயப்பட்டாள் அந்த காரிகை. ஏதோ கல்லூரி காலத்தில் வயது கோளாறாக உருவானதல்ல அந்த ஈர்ப்பு.

தாமோதரனின் சிந்தனையின் பால் மலர்ந்தது. அந்த காதல். கல்லூரி காலம் முடிந்த பிறகு தாமோதரன் ஒரு பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். நந்தினி வீட்டிலும் முறைப்படி பெண் கேட்டார்.

புரட்சிக்காரர்களுக்கெல்லாம் என் மகளை கட்டி கொடுக்க முடியாது என்று நந்தினியின் அப்பா திட்டவட்டமாக மறுத்துவிட, எவ்வளவோ முயன்றும் அவர்களின் சம்மதத்தை வாங்க முடியவில்லை.

வேறுவழியில்லாமல் நந்தினியும் தாமோதரனும் அவர் தாத்தாவின் தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் வேலை கிடைப்பது கூட சுலபம். ஆனால் வீடு கிடைப்பது குதிரை கொம்புதான். அதுவும் தாமோதரனின் சம்பளத்திற்கு ஏற்றார் போல!

அப்படி தேடி தேடி கிடைத்ததுதான் அஜயின் தந்தை பாஸ்கரனின் வீடு. சின்னதாக வீட்டின் அருகிலேயே ஆட்டோ மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.

அவர்கள் அங்கே குடித்தனம் செல்லும் போது அஜய் அனன்னயா இருவருக்கும் மூன்று வயது.  சில காலங்களிலேயே பாஸ்கரனின் மனைவி ரேவதியும் நந்தினியும் நல்ல தோழிகளாக பழகியிருந்தனர்.

இரண்டு குடும்பமும் ஒரே குடும்பமாக மாறியது. அஜய் அனன்யா இருவருமே தாமுவையும் நந்தினியையும் மாமா மாமி என்றுதான் அழைப்பார்கள்.

நந்தினி அந்த வீட்டிற்கு சென்ற ஒரு வருடத்தில் கருவுற்றார். மதுபாலா பிறந்த பிறகு  நந்தினிக்கு அவள் பின்னே ஒடுவதற்கே சரியாக இருந்தது. மதுபாலா அவ்வளவு துருதுருப்பு!

அதேநேரம் அவளை பார்த்து கொள்ள ரொம்பவும் உதவியாக இருந்தது அஜய்தான். அவன் பள்ளியிலிருந்து வந்ததும் மதுவை தூக்கி கொண்டு தன் வீட்டிற்கு விளையாட சென்றுவிடுவான். அவனுக்கு மதுவை அவ்வளவு பிடிக்கும்.

மது தவழ்ந்தது நடந்தது குதித்தது ஓடியது என்று எல்லாமே அஜயின் வீட்டில்தான். அஜயின் கை பிடித்து கொண்டுதான். ஆனால் அனன்யா இவர்களோடு அதிகம் சேர மாட்டாள். அவள் உலகமே தனி. தன்னை அலங்கரித்து கொள்வதிலும் அழகுப்படுத்தி கொள்வதிலுமே அவளுக்கு அதிக ஆர்வம்.   

மதுபாலா யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அஜயிடம் மட்டும் அவள் அடங்கி ஒடுங்கிவிடுவாள். பாடம் கற்று கொள்வதில் ஆரம்பித்து விளையாடுவது முதற்கொண்டு அவன்தான் அவளுக்கு குரு தோழன் எல்லாமே!

அஜய் அவளைவிட பெரியவன் என்ற போதும் அவனுக்கு மரியாதை தந்து அழைக்கும் பழக்கமே அவளுக்கு கிடையாது. அதுவுமில்லாமல் அவளுக்கு யாரையுமே அப்படி அழைக்கும் வழக்கம் கிடையாது.

‘நந்து தாமு’ என்று தன் அம்மா அப்பாவையே பெயரிட்டுதான் அழைப்பாள். அவள் மழலையான அந்த அழைப்பை மாற்ற விருப்பமின்றி அவர்களும் அப்படியே விட்டுவிட்டனர். இன்றுவரையில் அவள் அந்த பழக்கத்தை மாற்றி கொள்ளவேயில்லை.

அஜய் எது செய்தாலும் அதை அப்படியே பார்த்து அதை போலவே செய்வது அவளுக்கு வழக்கம். தீபாவளியின் போது அஜய் மிளகாய் பட்டாசுகளை கையில் கொளுத்தி போட்டதை பார்த்த மது வேகமாக ஒரு சரவெடியை எடுத்து கையில் கொளுத்தி போட்டுவிட்டாள்.

அது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெடித்து சிதறியதையும் எல்லோரும் ஆளுக்கொரு மூலையாக தெறித்து ஓடியதையும் இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு பீறிட்டு கொண்டு வரும். அதுதான் மதுவின் வால்தனத்திற்கு உச்சக்கட்டம்.

அஜயும் அனன்யாவும் வளர வளர பாஸ்கரனின் தொழிலும் வளர்ந்தது. மதுபாலா வளர வளர தாமோதரனின் புரிட்சிகரமான சிந்தனைகள் வளர்ந்தன. அதன் விளைவாக அவர் ‘அக்னி’ என்ற ஒரு பத்திரிக்கை சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார்.

குற்றங்களை தட்டி கேட்பதும் களைவதும்தான் அந்த பத்திரிக்கையின் நோக்கம். ஆனால் அந்த பத்திரிக்கையின் மூலமாக பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை.

கிசுகிசு பத்திரிக்கைக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளுக்கும் இருக்கும் மவுசு இந்த மாதிரியான சமூக அக்கறை சார் சிந்தனைகள் கொண்ட பத்திரிக்கைக்கு இல்லை என்பது  மிக கசப்பான உண்மை.

ஆனாலும் தாமோதரன் தளராமல் அந்த பத்திரிக்கையை இன்று வரை நடத்தி கொண்டிருக்கிறார். பணம், பெயர், புகழ் என்று எதுவுமே கிட்டாவிடிலும் சமூக மாற்றத்திற்கான தன்னுடைய பங்கை அக்னியின் மூலமாக அவர் இன்றுவரை தந்து கொண்டிருக்கிறார்.

இப்படியான கால ஓட்டத்தில் மதுவும் அஜயும் பிரிய வேண்டிய கால சூழ்நிலையும் உருவாகியது. நந்தினியின் தந்தை இறப்பதற்கு முன்னதாக மகளுக்கு அவர் எழுதி வைத்த வீடுதான் இப்போது அவர்கள் வசிப்பது.

சுயமரியாதை காரணமாக தாமோதரன் அவற்றை மறுத்தாலும் அவர் தன் மகளுக்கு கொடுக்கும் சொத்தை அவரால் வேண்டாமென்று மறுக்க முடியவில்லை. காலப்போக்கில் அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வீட்டிற்கு அவர்கள் குடிபெயர நேரிட்டது.

அப்போது மதுபாலாவிற்கு பன்னிரண்டு வயது. அஜய்க்கு பதினேழு வயது நிரம்பியிருந்தது. அந்த பிரிவினால் ஒவ்வொருவரும் மனதளவில் வருந்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டது மதுவும் அஜயும்தான்.

அது அவர்கள் இருவருக்குமே தெரியாது. மது நிறைய அடம்பிடித்தாள். அழுதாள். ஆனால் மாற்றங்களும் பிரிவுகளும் எல்லோர் வாழ்கையிலும் மாற்ற முடியாத சாசுவதமான ஒன்று.

ஒரு சில வருடங்களிலேயே அந்த இரு குடும்பத்திற்கான தொடர்பு அற்று போனது. பாஸ்கரனும் தன் தொழிலில் வளர்ந்து பழைய வீட்டை மாற்றி கொண்டு  சென்றுவிட்டார். காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் மாறி போனது. ஆனால் மறந்து போனது என்று சொல்ல முடியாது.

மது தன் மனநிலையை மாற்றி கொண்டு அவள் தான் வசிக்கும்  வீட்டினை சுற்றியிருப்பவர்களோடு பழக ஆரம்பித்தாள். நட்பாக ஆரம்பித்தாள்.

சரவணனின் தந்தை அவள் வீட்டிற்கு எதிரேதான் மளிகை கடை நடத்திவந்தார். மது அங்கே பொருள் வாங்க போகும் போதுதான் சரவணன் வீட்டிலுள்ள எல்லோரும் அவளுக்கு பழக்கமானார்கள்.

சரவணனும் இவளும் ஒரே வயது. ஒரே பள்ளியும் வகுப்பும் கூட. ஆனால் அவனிடம் அவ்வளவாக அவளுக்கு பழக்கம் கிடையாது. ஆனால் சரவணனின் தமக்கை வீணாவுடன் இருந்தது.

இருவரும் சதாசர்வகாலமும் வீட்டை சுற்றி விளையாடி கொண்டிருப்பார்கள். நகரத்தின் தோற்றமே மாறி கொண்டிருந்த  சமயத்தில் மிஞ்சியுள்ள ஒரு சில பழைமயான வீடுகளில் அதுவும் ஒன்று. வீட்டின் முன்சுவரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து என்று வருஷமெல்லாம் பொறிக்கப்பட்டு எப்போது இடிந்து விடுமோ என்று மிகவும் மோசமான நிலைமையில்தான் அதன் அமைப்பே இருந்தது.

அவர்களுடையது மிக பழமையான வீடு என்பதால் பெரிய பின்கட்டு கிணறு எல்லாம் இருந்தது.

மதுபாலாவின் துருதுருப்பு காரணமாக ஒரு முறை விளையாடி கொண்டே அவள் பின்கட்டிலிருக்கும் கிணற்றை எட்டி பார்த்து கொண்டிருக்கும் போது கால் இடறி உள்ளே விழ போனவளை சரவணன்  காப்பாற்றினான். ஆனால் காப்பாற்றிய வேகத்தில் அந்த கிணற்றின் மீது சாய்ந்து அதன் சுவறு  இடிந்துவிழுந்து அவன் உள்ளே தவறி விழுந்துவிட்டான்.

“அம்ம்ம்மம்ம்மம்ம்ம்மா” என்ற  பயங்கரமான அலறல்தான் அவன் குரலிலிருந்து வெளி வந்த கடைசி வார்த்தை!

வேகமாக விழுந்ததில் பின்மண்டையில் காயம்பட்டது. அவன் பெற்றோர் துர்காவும் மாதவனும் சுற்றாத கோவிலும் இல்லை. அவனுக்கு பார்க்காத மருத்துவும் இல்லை. எல்லாமே அவன் வரையில் பொய்த்து போனது. அதற்கு பிறகு அவனால் பேச முடியாமலே போனது.

அன்றிலிருந்து மதுபாலா தன் சேட்டைகளை குறைத்து கொண்டாள். அவள் துறுதுறுப்பும் குறைந்து போனது. சரவணனின் அந்த நிலையை பார்க்கும் போதெல்லாம் உள்ளம் துடித்து போனாள். அவன் வீட்டிற்கு சென்று விளையாடுவதையே நிறுத்தி கொண்டாள்.

அவனை எதிர்கொள்வதில் அவளுக்கு ஏற்பட்ட தயக்கமும் குற்றவுணர்வும்தான் காரணம்.

“மது ஏன் இவ்வளவு அமைதியா இருக்கா?” என்று நந்தினியும் தாமுவும் மகளின் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் குழம்பி கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களிடம் கூட அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த உண்மையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு சிறு பெண்ணின் தவிப்பு. அதுவே அவள் மனதை மிகவும் பாரமாக அழுத்தியது. எப்படி பார்த்தாலும் மதுவும் சரவணனணும் ஒரே வகுப்பு என்பதால்  அவனை அங்கே எதிர்கொண்டேயாக வேண்டுமென்ற நிலைமை அவளுக்கு.

அதுவல்லாது சரவணன் பேச முடியாததாலும் அவன் செய்கையால் பேசுவதையும் பள்ளியில் சிலர் கேலி செய்தனர்.

“சரோவை அப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க” என்று மது அவர்களிடம் மல்லுக்கு நிற்க,

“அப்படிதான் பண்ணுவோம்… நீ உன் வேலையை பார்த்துட்டு போ” என்று அவர்கள் சொன்ன பிறகு அமைதியாக சென்றால் அது மது இல்லையே!

அவர்களையெல்லாம் ஒரு வழி செய்து முதலவர் முன்னிலையில் நிறுத்திவிட்டாள். ஆனால் தண்டனை கிடைத்தது என்னவோ அவளுக்கு. அவள் செய்த களேபரம் அப்படி!

அப்போதிலிருந்துதான் சரவணன் அவளை தன் நெருங்கிய தோழியாக பாவிக்க ஆரம்பித்தான். சரவணனும் அவளுக்கு உற்ற தோழனாக மாறியிருந்தான்.

 எந்த விஷயமாக இருந்தாலும் அவனிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வாள்.

 மதுவிடம் சரவணன் அடிக்கடி கேட்கும் ஒரே விஷயம் ‘நீ எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போக கூடாது மது’ என்பதுதான். அதற்கு அவனிடம் ஓர் அழுத்தமான காரணமிருந்தது.

அவனால் பேச முடியமால் போனதிலிருந்து அவன் நண்பர்கள் உடன் பிறந்தவர்கள் ஏன் பெற்றோர்கள் கூட அவனிடம் பேசுவதை குறைத்து கொண்டனர். ஆனால் மது அவனிடம் வாய் வலிக்க வலிக்க பேசுவாள். அவள் எவ்வளவு நேரம் பேசினாலும் அவனும் சலிக்காமல் கேட்பான். ஏனெனில் அவனால் பேச முடியாமல் போனதிலிருந்து அவனிடம் பேசும் ஒரே ஜீவன் அவள்தான்.

அவன் உடன் பிறந்தவர்கள் பெற்றோர்கள் கூட அவனிடம் ஏதாவது கேட்க மட்டுமே பேசினார்கள். ஒருவித தனிமையும் வெறுமையும் அவனை ஆட்கொண்டது. அதை அவனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. எப்படி பகிர்ந்து கொள்வதென்றும் தெரியவில்லை.

 அப்படி யாரவது நம்மிடம் பேச மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தவனுக்கு அவள் பேச்சும் நட்பும் ஒரு வரப்ரசாதம்தான்.

அவன் பதில் பேச மாட்டான் என்று தெரிந்தும் மது அவனிடம் பேசுவாள். அது அவளுக்கு ஒரு பழக்கமாகவே மாறியிருந்தது. அவள் ஒவ்வொரு நாள் நடக்கும் எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்வாள்.

சரவணன் பத்தாவது படிக்கும் போது அவன் தந்தை இறந்து போக, அவனால் இறுதி தேர்வு எழுத முடியாமல் போனது. படிப்பையும் தொடர முடியாமல் போனது.

வீட்டின் தலைமகனாக  பொறுப்புகள் அவன் கைக்கு மாறியது. அந்த இளம் வயதில் அவன் தன் குடும்ப பாரத்தை தன் தலையில் சுமக்க ஆரம்பித்தான். கடையின் பொறுப்பை எடுத்து கொண்டு தன் தமக்கையையும் தம்பியையும் படிக்க வைத்தான்.

அவன் படிப்பை நிறுத்தியதில் அதிகமாக வேதனைப்பட்து மதுதான். ஆனாலும் அவர்கள் நட்பில் எந்தவித இடைவெளியும் உண்டாகிவிடவில்லை. பள்ளி நேரம் முடிந்ததும் அவள் நேராக வந்து அவனிடத்தில் அன்று முழுவதும் நடந்தவற்றை ஒப்புவித்துவிடுவாள்.

நடத்திய பாடங்களை கூட கற்றுதருவாள். அவனை தபால் முறையில் அவள் படிக்க சொல்லி எவ்வளவோ கட்டயாப்படுத்தினாள்.

தந்தை வாங்கி வைத்திருந்த கடனால் கடையே அவர்கள் கைவிட்டு போகும் நெருக்கடியில் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேலை வேலையென்று அயராமல் உழைத்து கொண்டேயிருந்தான்.

மூன்று வருடங்களில் அவனால் தன் தந்தை வாங்கிய கடனை அடைக்க முடிந்தது. பின் தன்பழைய வீட்டை புதுப்பிப்பதில் தொடங்கி  தமக்கையை கல்லூரியில் சேர்ப்பது அவளுக்கு திருமணம் செய்வது என்று அவன் வாழ்க்கை  ஒரு மாரத்தான் ஓட்டமாக தொடர்ந்து கொண்டிருந்தது.

அதனால் வாழ்கையிலும் கடையிலும் பெரியளிவிலான வளர்ச்சியையோ முன்னேற்றத்தையோ அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் இத்தனை சோதனைகளிலும் அவன் வாழ்வில் மாறாமல் ஒன்று இருந்ததென்றால் அது மதுவின் நட்புதான்.

உணர்வுகளால் ஆழமாக பிணிக்கப்பட்டிருந்த அவர்களின் நட்பில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டது அஜய் மீண்டும் மதுவின் வாழ்க்கையில் பிரவேசம் செய்த பின்புதான்!

*******

சென்னை கேகே நகரிலுள்ள மிக பெரிய பங்களா அது.

செயற்கையாக அமைக்கப்பட்ட அந்த புல்தரை கம்பளமாக விரிய, அந்த தோட்டத்தின் நடைபாதையை ஒட்டி அமைக்கப்பட்ட செடிகளில் பூக்கள் வண்ணமயமாக கொத்து கொத்தாக பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்து படைத்தன.

ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைந்த மதுவோ இவற்றையெல்லாம் ரசிக்கவில்லை. அவள் நேர்பாதையில் வந்திருந்தாள்தானே. எதன் மீதேறி எப்படி குதித்து உள்ளே நுழைந்தாள் என்று அவளுக்குத்தான் தெரியும்.

விடியற் காலை என்பதால் யார் கண்களிலும் படவில்லை. நடை பயற்சி செய்யும் ஆசாமிகளை தவிர அந்த சாலையில் அதிகமாக யாருமில்லை.

அந்த பங்களாவின் ஒரு மூலையில் கார்கள் நிற்கவென்றே ஒரு தனியிடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் இந்தியாவின் விலையுர்ந்த கார்களின் பட்டியல்களில் இடம்பிடித்திருப்பன.

பளிங்கு போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் பளபளக்க, திருட்டுத்தனமாக ஒளிந்து மறைந்து அந்த கார்களின் அணிவகுப்பிற்குள் மறைந்து கொண்டாள்.

அவள் தேடி வந்த காரும் அங்கேதான் இருந்தது. அதனை தொட்டு தடவி பார்த்தவள் தன் பேசியில் அவள் சேமித்து வைத்திருந்த புகைப்படத்தின் மூலம் அதன் எண்ணை சரி பார்த்தாள்.

சென்னையில் ஒரு சில பணக்கார தலைகளிடமும் சினமா நடிகர்களிடமும் மட்டுமே அந்த நவீனரக கார் சொந்தாமாகியிருந்தது.

அப்போது அவள் காதிலிருந்து ப்ளூட்டூத்தில் அவள் தோழி ரேகா ஒரு களேபரமே செய்து கொண்டிருந்தாள்.

“ஏதாச்சும் வம்புல மாட்ட போற நீ… எனக்கு பயமா இருக்கு டி… வந்திதிடுடி… பார்க்க பெரிய இடமா வேறுதெரியுது”

“கொஞ்ச நேரம் வாயை மூடுறியா?” என்று அவளை அடக்கியவள் அந்த காரின் வலது பக்கமாக மிகவும் மெலிதாக தெரிந்த அந்த கீறலை அமர்ந்த வாக்கில் ஒளிந்து கொண்டு தன் பேசியில் படம் பிடித்து கொண்டிருந்தாள்.

அப்போது வீலென்று ஒரு குழந்தையின் சத்தம் கேட்கவும் மது பயத்தில் தரையில் சரியவும் நேர்ந்தது.

“என்னடி மாட்டிகிட்டியா?” என்று அவள் தோழி ரொம்பவும் ஆவலோடு கேட்டு வைக்க,

“உன் வாயை வைச்சிட்டு சும்மா இரு பக்கி” என்றவள் என்ன சத்தமென்று மெல்ல வெளியே எட்டி பார்த்தாள்.

அப்போது ஒரு ஆடவன்  தன் தோள் மீது ஒரு கை குழந்தையைசா ய்த்து கொண்டு அந்த புல்தரையில் நடந்தபடி அதன் அழுகையை மட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

அவள் நிம்மதியாக பெருமூச்செறிய ரேகா மீண்டும், “உள்ளே நாய் கீ எதாச்சும் இருக்க போகுதுடி” என்று அவளை பயமுறுத்த, அவளுக்கு கடுப்பானது.  

“உன்னை கொல்ல போறேன்… வாயை மூடு” என்றவள் உண்மையிலேயே நாய்கள் ஏதாச்சும் இருக்குமா என்று பயபக்தியோடு அந்த இடத்தை ஆராய்ந்துவிட்டு திரும்ப, அத்தனை நேரம் குழந்தையோடு நின்றிருந்த ஆடவனை அங்கே காணவில்லை.

எங்கே என்று தேடியவள், ‘போயிட்டான் போல நல்லதா போச்சு’ என்றவள் எழுந்து நின்று பெருமூச்சு விடும் போது,

“யாரும்மா நீ?” என்று வெகுஅருகாமையில் கேட்டது அந்த குரல். அந்த ஆடவன்தான் இப்போது அவளருகே நின்று கொண்டிருந்தது.

ஹை பிட்சில் கத்திய இதய துடிப்பை சமன்படுத்தி கொண்டே, “நான்” என்று மது என்ன சொல்வதென்று திருதிருவென விழிக்க,

“போச்சு போச்சு செத்தோம் தொலைஞ்சோம்” என்று பின்னாடு இருந்து புலம்பி தள்ளினாள் அவள் தோழி.

‘எதாச்சும் ஐடியா யோசிக்க விடாம இப்படி புலம்பி தள்ளுறாளே’

“ஆமா எப்படி நீ உள்ளே வந்த… இங்க நீ என்ன பண்ற?” என்று அவன் அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு கொண்டே,

“வாட்ச் மேன்” என்று கத்தி தொலைத்தான்.

“ஐயோ சார்… நான் பெர்மிஷன் கேட்டுதான் உள்ளே வந்தேன்” என்றதும் அவளை சந்தேகமாக ஏறஇறங்க பார்க்க,

“பெர்மிஷன் கேட்டு வந்தியா? யார் கிட்ட… ஆமா உள்ளே வந்தவ ஏன் இங்க நிற்குற?” என்று வினவினான்.

‘வசமா மாட்டினியா’ இது அவள் தோழியின் குரல்!

‘ஐயோ! இவ வேற சந்துல சிந்துபாடுறா?’ என்று மனகுரலில் புலம்பியவள்,

“இல்ல உள்ளே வந்துட்டே இருந்தனா… இந்த காரை பார்த்ததும் கிட்ட வந்து பார்க்கணும்னு தோணுச்சு… அதான்” என்று மழுப்பினாள்.  அப்போதும் அவன் சந்தேகம் தீரவில்லை.

“சரி நீங்க யாரை பார்க்கணும்? அதுவும் இவ்வளவு காலையில”

ரேகா உடனே, ‘ஏ மது! எனக்கு பயமா இருக்குடி… அப்படியே குதிச்சு ஓடி வந்திடு போயிடலாம்’

“ரேகா”  மது மைன்ட் வாய்ஸ் என்று எண்ணி சத்தமாக பேசிவிட,

“ரேகாவா? அப்படி யாரும் இங்கே இல்லையே” என்றான் அவன்.

“இல்ல ரேகா ன்னு சொல்லல… ஏ கே ன்னு சொன்னேன்… அவர் உள்ளேதானே இருக்காரு… பார்க்கலாம்தானே”

அவன் குழப்பம் தீராமல், “ஏ கே வை பார்க்கவா?” என்று கேட்டு கொண்டே அவளை பார்வையால் அளவெடுக்க, அவன் கையிலிருந்த குழந்தை வேறு அவன் காது மூக்கு வாயெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.

அவன் குழந்தையை சமாளித்து கொண்டே அவளை யோசனையாக பார்க்க, “நான் ஏ கே கிட்ட பேசுனேன்… அவர்தான் வர சொன்னாரு… இருங்க நான் போன் போட்டு தரேன்… நீங்களே பேசுங்களேன்” என்றதும் ரேகா எதிர்புறத்தில்,

“மவளே! எனக்கு ஆம்பள குரலெல்லாம் பேச தெரியாது சொல்லிட்டேன்” என்றாள். அதற்குள் அந்த ஆடவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக,

“இல்ல வேண்டாம்” என்றான்.

‘தப்பிச்சேன் டா சாமி’ ரேகாவும் மதுவின் மனசாட்சியும் ஒரே டைமிங்ல் சொல்ல, அந்த ஆடவன் மீண்டும் அவளை பார்த்து,

“எனக்கு புரிஞ்சு போச்சு நீங்க யாருன்னு” என்றான்.

மது குழப்பமாக  பார்க்க அவன் கொஞ்சமும் யோசிக்காமல், “நீங்கதான் ஏ கே வோட லவரா? நேத்து நைட் அப்போ அவன் சொன்னது உங்களைபத்திதானா?” என்று கேட்டான்.

அவள் முகம் வெளிறி போனது.

‘இந்த ஆளு சரியான லூசு கூமுட்டையா இருப்பான் போல… அவன் யாரை பத்தி சொன்னானோ… இவன் நம்மன்னு நினைச்சிட்டான் … சரி இதுவும் நல்லதா போச்சு… நம்மளும் ஆமான்னு சொல்லி அப்படியே ஒரு ப்ளோல போயிடுவோம்’ என்றவள் ஆமோதிப்பாக தலையசைத்து அசட்டுத்தனமாக புன்னகைத்தாள்.