Oviyam 2

Oviyam 2

சி. எம். ஹாஸ்பிடல்’நகரின் அந்தப் பிரபலமான ஹாஸ்பிடல் காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மாதவி. இள நீலவண்ண யூனிஃபார்ம். தலையில் வெள்ளை நிறத்தில் சின்னதாக ஒரு கெப். முன்புறத்தை முழுதாக மறைத்தது போல வெள்ளை நிற ஏப்ரன்.  முழங்காலைத் தொட்ட வெள்ளை நிற ஸாக்ஸ், ஷூ.

“குட்மார்னிங் மாதவி.” இது சந்திரமோகன்.

“குட்மார்னிங் டாக்டர்.”

“இன்னைக்கு ட்யூட்டி எங்கம்மா?”

“ஜெனரல் வார்ட் தான் டாக்டர்.”

“ஓகேம்மா.” புன்னகை முகமாக நகர்ந்த மனிதரைப் பார்த்து மாதவி எப்போதும் வியப்பதுண்டு. கை ராசியான டாக்டர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நிருவாகி.‌ தனக்குக் கீழ் வேலை செய்யும் அனைவரையும் ஒரு புன்னகையால், சின்னதொரு நலன் விசாரிப்பால் கட்டியாளத் தெரிந்த கெட்டிக்காரர்.

நேரம் ஒன்பதைத் தாண்டி இருந்தது. மாதவியின் வார்டில் இருந்த ஒரு நோயாளியின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை ரிசப்ஷனில் கொடுக்கவேண்டி இருந்ததால் அதை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.ஒரு டீ குடித்தால் தெம்பாக இருக்கும் போல இருந்தது. ஆனாலும் அதற்கு நேரம் இருக்கவில்லை. வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

“ரஞ்சிதா… இந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டைக் கலெக்ட் பண்ண இன்னைக்கு பேஷன்ட்டோட ரிலேட்டிவ்ஸ் வருவாங்க.” ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் மாதவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த மனிதன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். 

நெடுநெடுவென்று பனை மரம் போல வளர்ந்திருந்தான்.‌ செதுக்கி வைத்தாற் போல முகம். சீராக ட்ரிம் பண்ணிப் பேணப்பட்டிருந்த அந்த முகம் பேரழகியையும் சுண்டி இழுக்கும். பெண்களுக்கு இருப்பதைப் போல அத்தனை அடர்த்தியாக இருந்தது அவன் புருவங்கள்.

அந்தக் கண்கள்! அடேங்கப்பா! ஆண்களின் கண்களில் கூட இத்தனை வசீகரம் இருக்குமா? அவன் கண்களில் இருந்ததே! எதிரே நடந்து வந்து கொண்டிருப்பவன் பெண்ணாகப் பிறந்திருந்தால்… பல ஆண்கள் தேவதாஸாக மாறி இருப்பார்கள்.

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!” ஆழ்ந்து ஒலித்த அந்தக் குரலில் இதுவரை அவனை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்த ரஞ்சிதா நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதோ இப்போதுதான் அவனைப் பார்ப்பது போல பாவனை பண்ணிக்கொண்டு.”சார்…‌ ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.” என்றவள் மாதவியிடம் திரும்பினாள்.

“சொல்லுங்க சிஸ்டர்.” ரஞ்சிதாவின் நடிப்பில் மாதவி மிரண்டு போனாள். என்றைக்கு இவள் என்னை இத்தனை மரியாதையாக ‘சிஸ்டர்’ என்று அழைத்திருக்கிறாள்!

“மாதவி… திருதிருன்னு முழிச்சு என்னைக் காட்டிக் குடுத்துடாதே. ஒரு அஞ்சு நிமிஷம் பயபுள்ளையை நான் சைட் அடிச்சுக்கிறேனே. வெயிட் பண்ணட்டும். நீ உன்னோட மேட்டருக்கு வா.” ரகசியம் பேசினாள் ரஞ்சிதா

.”ரஞ்சி… ஒருவேளை இந்த ரிப்போர்ட்டைக் கலெக்ட் பண்ணத்தான் வந்திருக்காங்களோ என்னவோ? வம்புல மாட்டிக்காத.”

“ஏய் கிழவி! சும்மா பொலம்பாத.‌ ஆத்தீ… எதுக்குடீம்மா இவன் இம்பூட்டு அழகா இருக்கான். பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே!” 

“ரஞ்சிதா… ப்ளீஸ். நான் யூனிஃபார்ம்ல இருக்கேன். இப்படியெல்லாம் பேசாத.”

“இல்லாட்டி… நீ வெட்டி முறிச்சிடுவே… போவியா…” இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருக்கச் சற்றுத் தள்ளி நின்றிருந்த இளஞ்செழியன் கண்களில் ஒரு சுவாரசியம் பிறந்தது. அதற்கு மேலும் ரஞ்சிதா தாமதிக்கவில்லை.

“யெஸ் சார். ஹௌ கான் ஐ ஹெல்ப் யூ?” இப்போது அவள் குரலில் தேன் சொட்டியது.”டாக்டர் சந்திரமோகனைப் பார்க்கணும்.””நீங்க…””செழியன் வந்திருக்கார்னு சொல்லுங்க.””ஓகே சார்.” ரிப்போர்ட்டை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு நகரப்போன மாதவியைத் தடுத்தாள் ரஞ்சிதா. அதற்கிடையில் சீஃப் டாக்டரோடு தொலைபேசியில் பேசி இருந்தாள்.

“சிஸ்டர்… இவங்களுக்கு சீஃப் டாக்டர் ரூமைக் கொஞ்சம் காட்டுறீங்களா? ப்ளீஸ்.”

“ஷ்யூர்… வாங்க சார்.” மாதவி அழைக்கவும் ஒரு புன்னகையோடு அந்தச் செதுக்கிய சிற்பம் அவளைப் பின் தொடர்ந்தது.

 “ம்… யாருக்குக் குடுத்து வெச்சிருக்கோ!” பெருமூச்சு விட்ட ரஞ்சிதாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மேனகா.

“என்னாச்சு ரஞ்சி? என்னமோ தீஞ்ச வாடை அடிக்குது.” இருவரும் தான் ரிசப்ஷனில் மாறி மாறி இருப்பார்கள். நல்ல கலாட்டாப் பேர்வழிகள்.

“அதையேன் கேக்கிற மேனு. சூப்பரா ஒரு ஐட்டம் வந்துது. அதைப்பார்த்துத்தான் மயங்கிப் போய் நிக்கிறேன்.”

“அட! இது எப்போ?‌ அப்ப நான்தான் மிஸ் பண்ணிட்டேனா?”

“சீஃபைப் பார்க்கப் போயிருக்கு. திரும்பி வரத்தானே வேணும். அப்போக் காட்டுறேன்.”

“ஓகே ஓகே.”மாதவி டாக்டர் சந்திரமோகனின் அறையை அந்தப் புதியவனுக்குக் காட்டிவிட்டு ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டாள்.

சீஃபுக்கு வேண்டப்பட்டவர் போலும். அத்தோடு நின்று போனது அவள் சிந்தனை.ஆனால் சற்று நேரத்தில் எல்லாம் கான்ஃபரன்ஸ் ஹாலில் அவசர மீட்டிங் ஒன்றை சீஃப் ஏற்பாடு பண்ணவும் என்னவாக இருக்கும் என்று எண்ணியபடியே போனாள் மாதவி.

புதிதாக வந்திருந்த அந்த மனிதனைப் புன்னகை முகமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் சீஃப்.

“மை டியர் ஸ்டாஃப் உங்க நேரத்தை அதிகமா நான் எடுத்துக்க விரும்பலை. நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிற புதிய ‘கார்டியலாஜிஸ்ட்’ மிஸ்டர். இளஞ்செழியனை உங்க எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன்.” அவர் சொல்லி முடிக்கவும் கூடியிருந்த அனைவரும் கைதட்டித் தங்கள் வரவேற்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ரஞ்சிதா முகம் வெளுக்க மாதவியைத் திரும்பிப் பார்த்தாள். மாதவிக்கு வியர்த்துப் போனது.இளஞ்செழியனின் குறும்புப் பார்வை அந்த இரு பெண்களையும் தொட்டு மீண்டது. விட்டால் போதுமென்று ரஞ்சிதா ஓடிப் போனாள். மாதவியும் வார்டுக்கு மெதுவாக நகர்ந்து விட்டாள்.

வேலை அன்று அவளை நிற்க நேரமில்லாமல் விரட்டிக் கொண்டிருந்தது. ஜெனரல் வார்டில் அன்று ஒரு வாலிபனைக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றிருந்தான் பையன்.பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. மாதவிக்கு ஓங்கி ஒரு அறை விடலாம் போல ஆத்திரம் வந்தது. ஆனால் முடியாதே. வயிற்றைச் சுத்தப்படுத்தி வார்டுக்கு மாற்றி இருந்தார்கள்.

மாதவிதான் நொந்து போனாள்.பையன் புலம்பியபடியே இருந்தான். மிகவும் ஆழமாக அந்தப் பெண்ணைக் காதலித்திருப்பான் போலும். அவன் பேச்சிலிருந்தே மீண்டும் ஒரு முறை அவன் செய்த தவறைத் திரும்பச் செய்வான் என்று தான் தோன்றியது மாதவிக்கு. பேச்சுக் கொடுத்தபடியே இருந்தாள்.ஹாஸ்பிடலை செழியனுக்குச் சுற்றிக் காட்டிக்கொண்டிருந்த சந்திரமோகன் இறுதியாக வார்டுக்கு வந்திருந்தார். மாதவியைத் தூரத்தில் கண்ட அவர் விழிகள் மலர்ந்து போனது.

“செழியா!‌ இந்தக் கேரக்டரை நீ கண்டிப்பா மீட் பண்ணணும். பெயர் மாதவி. இங்க ரெண்டு வருஷமா வேலை பண்ணுறா. எந்த இடத்துல அவ ட்யூட்டி பார்க்குறாளோ அந்த இடத்தை நான் கண்காணிக்கத் தேவலைன்னு அர்த்தம்.‌ அவ்வளவு பர்ஃபெக்ஷன். பொறுமைன்னா என்னன்னு இந்தப் பொண்ணுக்கிட்ட இருந்து கத்துக்கணும்.”

“நான் ஏற்கனவே மீட் பண்ணிட்டேன் அங்கிள்.”

“அப்படியா? எங்கே?”

“ரிசப்ஷன் ல.”

“ஓ… ரிசப்ஷன் ல நின்னதுங்க வாலாட்டி இருக்குமே?”

“ம்… செமையா நிக்க வெச்சு சைட் அடிக்குதுங்க.”

“ஹா… ஹா… கலாட்டா பேர்வழிங்க தான். ஆனா நல்ல பொண்ணுங்கப்பா. இது ஹாஸ்பிடல் எங்கிறதையும் தாண்டி என்னோட குடும்பம் செழியா. இங்க நீ நல்லா என்ஜாய் பண்ணுவ. அதுக்கு நான் கேரண்டி.”

“பார்க்கலாம் அங்கிள்.” பேசியபடியே இருவரும் மாதவி இருந்த இடத்தை நெருங்கி இருந்தார்கள்.தற்கொலைக்கு முயன்றிருந்த அந்தப் பையனுக்குத் தன்னால் முடிந்தளவு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தாள் மாதவி.

சீஃப் வந்ததை அவள் கவனிக்கவில்லை. செழியன் பேஷன்ட்டின் ரிப்போர்டை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மாதவி… பையன் என்ன சொல்லுறான்?” அந்தக் குரலில் சட்டென்று எழுந்தாள் மாதவி. 

“சீஃப்…” ஏதோ சொல்ல வந்தவள் செழியனைக் காணவும் வெலவெலத்துப் போனாள். காலையில் நடந்த சம்பவத்தை சீஃபிடம் சொல்லி இருப்பாரோ?”

“சொல்லுங்க மாதவி… ஏதோ சொல்ல வந்தீங்களே?” சந்திரமோகன் கேட்க, இப்போது அவள் கண்கள் அந்தப் பையனைத் திரும்பிப் பார்த்தது. பேச்சு பேஷன்ட் சம்பந்தப்பட்டது என்று சந்திரமோகனுக்குப் புரிந்தது.

“மாதவி… எங்கூட வாங்க.” சற்றுத் தள்ளி மாதவியை அழைத்துக் கொண்டு போனார் சந்திரமோகன்.

“இப்போ சொல்லுங்க மாதவி. பேஷன்ட்டை டிஸ்சார்ஜ் பண்ணிடலாமா?”

“இல்லை டாக்டர்.”

“ஏன்? எல்லாம் நார்மலாத்தானே இருக்கு?” இது செழியன்.

“ஃபிஸிகலி ஓகே. ஆனா மென்டலி ரொம்ப டல்லா இருக்கார் டாக்டர்.”

“ஓ… கவுன்சிலிங் தேவைப்படுமோ?” செழியனின் கண்கள் மாதவியை நேராகப் பார்த்தது.

“அப்படித்தான் தோணுது. திரும்பவும் ஏதாவது பண்ணிக்க வாய்ப்புகள் உண்டு டாக்டர்.”

“ம்… அதுக்கு எதுக்கு நீங்க இவ்வளவு வொர்ரி பண்ணிக்குறீங்க சிஸ்டர்?” இப்போது செழியன் சிரிக்க சந்திரமோகனும் சிரித்தார்.

மாதவியும் பெயருக்குச் சிரித்தாள்.”யூனிஃபார்மைப் போட்டுட்டா நாமளும் ஜடம் தான். ஏன்னா நாம பார்க்குற தொழில் அப்படி. வரவுகள் கொடுக்கிற சந்தோஷத்தை விட இழப்புகள் குடுக்கிற காயங்கள் இங்க அதிகம் சிஸ்டர். அந்தப் பதினெட்டு வயசுப் பையன் ஜஸ்ட் உங்களைப் பொறுத்தவரை ஒரு கேஸ். அவ்வளவு தான்.” சொல்லிவிட்டு இளஞ்செழியன் புன்னகைத்தான். அவன் பேச்சிலிருந்த நியாயம் மாதவிக்கும் புரிந்தது. ஆனால் அவளால் அதை எப்போதும் பின்பற்ற முடிந்ததில்லை

.”ஓகே டாக்டர்.” பெயருக்கு ஏற்றுக்கொண்டவள் ஒரு தலை அசைப்போடு நகர்ந்து விட்டாள். சந்திரமோகனும் சிரித்துக் கொண்டார்.

***

கேன்டீனில் அத்தனை பேரும் அமர்ந்திருந்தார்கள். அத்தனை பேரும் என்றால் அருண், விஷால், காஞ்சனா, முல்லை. இவர்கள் நான்கு பேரும் ரொம்பவே நெருக்கம்.ப்ராக்டிகல் முடித்துவிட்டு வந்திருந்தார்கள்.

மனம் நிரம்பவே கனக்கவும் பெண்கள் இருவரும் கேன்டீன் வந்துவிட்டார்கள். அவர்களைத் தனியே விட மனமில்லாமல் அருணும், விஷாலும் கூடவே வந்திருந்தார்கள்.

மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து நிரம்பவே பார்த்து விட்டார்கள். இருந்தாலும் இன்று மனது மிகவும் கனத்தது. பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தை. இதயம் வேலை செய்த போதும் மூளை வேலை நிறுத்தம் பண்ணி இருந்தது.

அப்படி என்ன வேலை செய்து கிழித்துவிட்டதால் அந்த மூளை ஓய்வு பெற்றதோ படைத்தவனே அறிவான்.இதயம் துடித்த போதும் இப்போது அந்தக் குழந்தை வெறும் ஜடம் தான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அதன் பெற்றோர்களால் முடியவில்லை. பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. மருத்துவர்களுக்கு வெறும் கேஸாகத் தெரிந்த அந்த உயிர் அதன் குடும்பத்திற்குக் குலக் கொழுந்தாகத் தெரிந்தது.

பெண்கள் இருவரும் உடைந்து போனார்கள். அருணிற்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. யார் பெற்றால் என்ன? உயிரல்லவா?”ஏய் பாசமலர்! இங்க வா.” சூழ்நிலையை இலகு பண்ண அங்கே நடந்து போய்க்கொண்டிருந்த அர்ச்சனாவை அழைத்தான் அருண்.

முகம் கடுகடுத்த போதும் இவனை நோக்கி வந்தது பெண்.”மாலினி… அன்னைக்கு நான் சொல்லலை. அந்தக் கொழுப்பெடுத்த சீனியர் இதுதான்.” வாய்க்குள் முணுமுணுத்தாள் அர்ச்சனா.

“சரி விடு அச்சு. சும்மா தமாஷாப் பேசுவாங்க. எல்லாத்தையும் சீரியஸா எடுக்காதே.” இது மாலினி.

“ம்…” வேண்டா வெறுப்பாகச் சொன்னவள் அருணிடம் வந்திருந்தாள்.

“சொல்லுங்க சீனியர்.” முகத்திலும் சரி, குரலிலும் சரி பணிவு மருந்திற்கும் இருக்கவில்லை.

“என்னம்மா தங்கச்சி… நம்ம அண்ணாத்தே நீதான் உலகம்னு அன்னம் ஆகாரம் இல்லாம உயிர் வாழுறார். நீ என்னடான்னா கண்டுக்காம போறியே!” அருண் ஒரு தினுசாக இழுத்துப் பேசவும் காஞ்சனாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இங்க வா. நம்ம அண்ணாத்தே பக்கத்துல உக்காரு.” அருண் அவளை வற்புறுத்தவும் வேறு வழியில்லாமல் விஷாலின் பக்கத்தில் உட்கார்ந்தாள் அர்ச்சனா.”ஃபர்ஸ்ட் இயராப்பா?” இப்போது முல்லை கேட்கவும் தலையை ஆட்டினாள் அர்ச்சனா.

“ம்…”

“ஒன்னுமில்லைப்பா… இன்னைக்குப் பார்த்த கேஸ் கொஞ்சம் கஷ்டமாப் போச்சு. மனசு தாங்கலை. அதான் அருண் வேணுமின்னே கலாட்டாப் பண்ணுறான். நீங்கத் தப்பா எடுத்துக்காதீங்க.”

“இல்லை சீனியர், பரவாயில்லை. இன்னைக்கு என்ன கேஸ்?” 

“அதுவா…” காஞ்சனா ஆரம்பிக்கவும் இடையில் புகுந்தான் அருண்.

“அதான் மனசு தாங்கலைன்னு சொல்லுறா இல்லை. அதுக்கப்புறமும் என்ன கேஸுன்னு கேக்குறே… அறிவில்லை?”

“இல்லை… ஏன்? நீங்க குடுக்கப்போறீங்களா?” வித்தியாசமான குரலில் அர்ச்சனா கொஞ்சம் திமிராகக் கேட்கவும் அருணுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ தெரியாது.

உட்கார்ந்திருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு எழுந்து கொண்டான்.”ஏய்! என்ன வாய் ரொம்ப நீளுது!””அருண்! என்னடா பண்ணுற நீ?” விட்டால் அந்தப் பெண்ணை அறைந்து விடுவான் போல எழுந்து நின்ற அருணைப் பிடித்து இழுத்தாள் காஞ்சனா. 

“அர்ச்சனா நீங்க கிளம்புங்க.” இது விஷால். அப்போதும் முறைத்துக் கொண்டு நின்றிருந்த தோழியை மாலினி தான் இழுத்துக்கொண்டு அப்பால் போனாள்.

“அருண்! என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறே?”

“அவ பேசின மெத்தட்டைப் பார்த்தியா காஞ்சி?‌ எவ்வளவு திமிராப் பேசுறா? அன்னைக்கும் இப்படித்தான் முறைச்சிக்கிட்டேப் பேசினா. சீனியர் எங்கிற மரியாதை வேணாம்?”

“அதுக்கு? நீ இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா?””பின்னே… அவளைத் தூக்கிக் கொஞ்சச் சொல்லுறியா?” அருண் கோபமாகக் கேட்கவும் விஷால் வாய்விட்டுச் சிரித்தான்.

“என்னடா சிரிப்பு?”

“மச்சான்! இப்படி மோதல்ல ஆரம்பிச்சவங்க எல்லாம் முத்தத்துல தான் முடிச்சிருக்காங்க.” விஷால் விளையாட்டாகச் சொல்லவும் பெண்களும் கூடச் சேர்ந்து சிரித்தார்கள்.

“சரியாச் சொன்னே விஷால். நம்ம பையன் எங்க போயி நிக்குறார்னு பார்ப்போம். பொண்ணைப் பார்த்தாக் கொஞ்சம் பெரிய இடமாத்தான் தெரியுது…” இது முல்லை.

“ஏய் முல்லைக்கொடி… அடக்கி வாசி. போயும் போயும் இவளை யாராவது லவ் பண்ணுவாங்களா? திமிர் புடிச்ச கழுதை.”

“பார்க்கலாம் மச்சான்… இந்த முனிவரை அந்த ரம்பை மயக்குறாளான்னு.” நண்பர்கள் கூடிக் கேலி பண்ணவும் அந்த இடத்தை விட்டே நகர்ந்து விட்டான் அருண்.

மாதவியின் முகம் மனக்கண்ணில் சட்டென்று தோன்றியது. ஒரு வருடம் தான் பெரியவள் என்றாலும் மாதவி அருணைப் போல விளையாட்டுப் பெண்ணல்ல. மிகவும் பொறுப்பான பெண். ஆண்களை விட பெண்களுக்கு அதிக பொறுப்புணர்வு எப்படித்தான் சின்ன வயதிலேயே வந்து விடுமோ!

கேன்டீனிற்குப் பக்கத்தில் இருந்த மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டான் அருண். கல்யாண வயதைத் தாண்டிக் கொண்டிருக்கிறாள் அக்கா. நல்ல வரன்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. குடும்பத்தின் நிலைமையை யோசித்து விட்டு இலகுவாக அனைத்தையும் நிராகரிக்கிறாள். அதில் அருணுக்கு அத்தனை உடன்பாடு இல்லை.மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறான்.

கூடிய சீக்கிரமே மாதவியை இந்தப் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்க வேண்டும். அப்பா பேங்க்கில் வேலை பார்ப்பதால் இலகுவாக லோன் வாங்க முடியும்.‌எப்படியாவது ஒரு லோனைப் போட்டு மாதவியின் திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும். அதன்பிறகு குடும்ப பாரத்தை அவன்தான் சுமக்க வேண்டும். போதும்!

அப்பாவும் உழைத்து உழைத்து ஓய்ந்து போனார். அப்பா அம்மாவை உட்கார வைத்து நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவரை இந்தக் காதல் கத்தரிக்காய் எதற்கும் அவன் வாழ்க்கையில் இடமில்லை. இவன் இப்படி இங்கே யோசித்துக் கொண்டிருக்க… அங்கே மாதவியின் வார்ட் ரணகளப் பட்டுக்கொண்டிருந்தது.

 தற்கொலைக்கு முயன்ற அந்தப் பையன் மாதவி அவனுக்குப் போடுவதற்காகக் கொண்டுவந்த ஊசியைப் பறித்து மணிக்கட்டைக் கிழித்திருந்தான். கொஞ்சம் ஆழமாகவே அவன் கீறியிருக்க மாதவியின் யூனிஃபார்மில் ரத்தக்கறை படிந்தது. துடித்துப் போனாள் பெண்.

“சிஸ்டர்!” மாதவியின் கூக்குரலில் அதே வார்டில் டியூட்டி பார்த்துக்கொண்டிருந்த மேலும் இரு நர்ஸுகளும் ஓடி வந்தார்கள். பையனின் மணிக்கட்டை மாதவி அழுந்தப் பிடித்திருந்தாள்.முதலுதவியில் ஒரு நர்ஸ் இறங்க டியூட்டியில் இருந்த டாக்டர் அவசரமாக ஓடி வந்தார். தகவல் சீஃபுக்கும் பறந்து போயிருந்தது. ஹாஸ்பிடலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அப்போதுதான் சந்திரமோகனும், செழியனும் கேன்டீனில் காஃபியோடு அமர்ந்திருந்தார்கள்.

தகவல் கேட்ட மாத்திரத்தில் சந்திரமோகன் சம்பந்தப்பட்ட வார்டுக்கு விரைந்து வந்திருக்க செழியனும் கூட வந்திருந்தான். மாதவி ஓய்ந்து போயிருந்தாள். அன்று முழுவதும் அவள் பொழுது அந்தப் பேஷன்ட்டோடு தான் கழிந்திருந்தது. நிறையப் பேசி இருந்தாள். தைரியம் கொடுத்திருந்தாள். இருந்தபோதும் கடைசியில் இப்படிப் பண்ணிவிட்டானே!

“சிஸ்டர்! போய் யூனிஃபார்மை சேன்ஞ் பண்ணிட்டு சூடா ஒரு கப் காஃபி சாப்பிடுங்க.” செழியன் சொல்லவும் சந்திரமோகனைப் பார்த்தாள் மாதவி.

“போங்க மாதவி.” என்றார் அவரும்.மாதவிக்குக் கை கால்கள் எல்லாம் கொஞ்சம் பலவீனப்பட்டாற் போல இருந்தது.

எத்தனையோ வலிகளைப் பார்த்திருக்கிறாள். சில ஜீவன்களின் கடைசி நேரத்தில் கூடவே இருந்திருக்கிறாள்.ஆனால்… இந்த இளம் வயது அவளை லேசாக அசைத்துப் பார்த்தது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து, அனுபவித்து முடித்தவர்களுக்கான இறைவனின் ஏற்பாட்டை ஒருவாறாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சின்ன வயதில் தனக்கான முடிவைத் தானே தேடிக்கொள்வது…

அத்தனை சுலபத்தில் ஏற்கக்‌ கூடியதாக இருக்கவில்லை.தாதிகளுக்கான பிரத்தியேக அறையில் யூனிஃபார்மை மாற்றியவள் கறை படிந்ததை சலவைக்கு அனுப்பிவிட்டு கேன்டீனிற்கு வந்திருந்தாள்.  தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் சூடான காஃபி வைக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.

இளஞ்செழியன் தான் நின்று கொண்டிருந்தான்.”காஃபியைக் குடிங்க சிஸ்டர்.”

“தான்க்யூ டாக்டர்.” நன்றியாகப் பார்த்தவளின் முகத்தில் இருந்த கவலை செழியனை நகர விடவில்லை. அவளெதிரே அவனும் அமர்ந்து கொண்டான்.

“காஃபி ஆறுது.” அவன் சொல்லவும் காஃபியைக் குடிக்க ஆரம்பித்தது பெண். அப்போதுதான் சந்திரமோகன் வந்து சேர்ந்தார். அவர் முகமும் குழப்பத்தைக் காட்டவும் செழியன் வாயைத் திறந்தான்.

“என்னாச்சு அங்கிள்? ஏன் டல்லாகிட்டீங்க. அதான் பையன் சேஃபா இருக்கான் இல்லை?”

“அப்படியில்லை செழியா. ஹாஸ்பிடல்ல இருக்கும் போது ஏதாவது ஆகிட்டா அது நமக்குத்தானே கெட்டப் பெயர்.‌ இந்தப் பையன் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணுறான்?”

“பையனோட பேரன்ட்ஸைக் கூப்பிட்டுப் பேசுங்க அங்கிள். பையனைத் தனி ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணுங்க. பேரன்ட்ஸை பையன் கூடத் தங்க பர்மிஷன் குடுங்க.”

“ம்… அப்படித்தான் பண்ணணும்.” 

“டாக்டர்…” தயக்கமாக சந்திரமோகனை அழைத்தாள் மாதவி.

“சொல்லுங்க மாதவி.‌ உங்களுக்கு ஏதாவது ஐடியாத் தோணுதா?”

“சம்பந்தப்பட்டப் பொண்ணைப் பார்த்துப் பேசினா…”

“அது நம்ம வேலையில்லை சிஸ்டர்.” அவளை முடிக்க விடாமல் பாய்ந்தான் இளஞ்செழியன்.

“இவன் பண்ணின முட்டாள்தனத்துக்குச் சம்பந்தமே இல்லாம ஒரு பொண்ணை எதுக்கு ஹாஸ்பிடல் வரைக்கும் இழுக்கணும்?”

“நான் அதுக்காகச் சொல்லலை டாக்டர். பையனோட பேசுன வரைக்கும் கெட்ட பையன் மாதிரித் தோணலை. பிரச்சினை என்னன்னு தெரிஞ்சா பையனை அவன் போக்குல போய் டைவர்ட் பண்ண முடியும். அதனாலதான்…”

 “பேசாம நீங்க ஒரு மேட்ரிமோனியல் ஆரம்பிங்க அங்கிள்.

” சூடாக வந்த செழியனின் பதிலில் மாதவி மௌனமாகிப் போனாள்.

“செழியா! கோபப்படாதே.” சந்திரமோகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாதவி எழுந்து விட்டாள்.

 “டியூட்டிக்கு டைம் ஆச்சு டாக்டர்.”

“மாதவி… வொர்ரி பண்ணிக்காதீங்கம்மா. நான் என்னன்னு பார்க்கிறேன்.” சந்திரமோகனின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை.

“சரி டாக்டர்.” லேசாகப் புன்னகைத்தவள் நகர்ந்துவிட்டாள்.

போகும் பெண்ணைப் புருவம் நெளியப் பார்த்திருந்தான் இளஞ்செழியன்.

error: Content is protected !!