Kandeepanin Kanavu-22

Kandeepanin Kanavu-22

                                           காண்டீபனின் கனவு – 22

 

மலையின் மீது ஏற ஏற களைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. மற்ற மலைகளில் ஒரே மூச்சாக ஏறினர். ஆனால் இதில் அப்படி ஏற முடியவில்லை. மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

ஆங்காகே நின்று நின்று தான் சென்றனர். ஒரு வழியாக மலையின் உச்சியை அடைந்தனர்.

“யப்பா… இன்னிக்கு ரொம்ப டயர்ட்டா இருக்குல்ல” வருண் கூற,
“ஆமா இந்த மலை ரொம்ப செங்குத்தா இருக்குன்னு நினைக்கறேன்.” வருண் தன் எண்ணத்தைக் கூறினான்.

மூவரும் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டனர்.

“இந்த மலைல தான் நிறைய நாம தெரிஞ்சுக்கப் போறோம்னு தோணுது. இந்த இடமே மேகத்தால மூடி ஒரு தனி தீவு மாதிரி இருக்கு.”  வீரா சுற்றி நோட்டம் விட்டான்.

“ஆமா. வாங்க அப்படியே நடந்து போய் பார்ப்போம்.” சாம் அவனை எழுப்பினாள்.

“ஆமா நேரத்த கடத்தாம சீக்கிரம் திரும்பிப் போகலாம்.”வருணும் எழுந்து கொள்ள,

நேற்று இரவு முதல் வருண் மீது ஒரு சந்தேகப் பார்வை வைத்துக் கொண்டிருந்த வீரா அவனது ஆர்வத்தை கவனிக்கத் தவறவில்லை.

அங்கிருந்த மரங்களும் செடிகளும் புதிதாகத் தோன்றியது. இது போன்று உலகில் வேறு எங்கும் கண்டிராத வகைத் தாவரங்கள்.

புதிய நிறங்களில் உள்ள பழங்கள், அதன் இலைகள் ஒவ்வொன்றும் வீரா படமெடுத்துக் கொண்டான்.

சம்ரக்க்ஷாவிற்கு அதைக் கண்டதும் உண்ணவேண்டும் போலத் தோன்றியது.

“எனக்கு இத டேஸ்ட் பண்ணிப் பார்க்கணும் போலத் தோணுது வீரா.” அவனிடம் தன் விருப்பத்தைக் கூறினாள்.

“ஹே எதையாவது திண்ணு வைக்காத. எது எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. விஷமா கூட இருக்கலாம்.” வீரா அவளிடம் சொல்லும் போது அவள் ஒரு பழத்தைப் பறித்துவிட,

“அத தூக்கி ஏறி.” மிரட்டினான்.

“ஏன் இன்னிக்கு ஒரே டென்ஷனா இருக்க..?” வருண் அருகில் வந்தான்.

“அதெல்லாம் இல்ல. இது நமக்குத் தெரியாத இடம். சோ நாம பார்த்து நடந்துக்கணும். அதுக்கு தான் சொல்றேன்.” அவன் சொன்ன தோரணையில் சாம் அதை தூக்கி எறிந்தாள்.

சற்று தூரம் நடந்த பிறகு அந்த மலை உச்சி ஒரு காடு போலத் தெரிய ஆரம்பித்தது.

ஆங்காங்கே குகைகள் போன்ற அமைப்பு இருந்தது. வீரா வெகு வேகமாக அங்கே சென்று பார்க்கலானான்.

இப்போது குளிர் அதிகமாக ஆரம்பித்தது. வீரா ஒரு குகையிலும் சாம் ஒரு குகையிலும் இருந்தனர்.

வருண் வெளியே நின்று கொண்டிருந்தான்.

“சின்ன குகை ஏதோ கோயில் மாதிரி இருக்குல்ல” சாம் கூறினாள்.

வீரா இருந்த குகையில் இப்போது குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருக்க, அப்போது தான் அது ஒரு பனி குகை என்பதை உணர்ந்தான்.

உள்ளே இருக்கும் தூண்கள் போன்ற அமைப்பு அனைத்தும் பனிக்கட்டிகள்.

“இது பூரா பனி யா இருக்கு பாருங்க.” இருவரையும் அழைத்தான் வீரா.

சாம் அங்கே ஓடிவர, வருணும் வந்தான்.

“எஸ். இது எல்லாமே பனி லிங்கம்.” வருண் கூறினான்.

“என்னது லிங்கமா?” சாம் உற்று நோக்கினாள்.

“ஆமா. இப்போ தான் எனக்கும் அப்படித் தெரியுது.” ஒத்துக்கொண்டாள்.

வீராவைப் பார்க்க, அவன் எங்கோ உள்ளே நடந்து கொண்டிருந்தான்.

“வீரா எங்க போற.?” அவன் பின்னோடு சென்றாள்.

அந்த குளிரில் இப்போது நடுங்க ஆரம்பித்தது அவர்களின் உடல்.

“இங்க பாரு ஏதோ பாதாள சுரங்கம் மாதிரி இருக்கு!” ஓரிடத்தில் நின்று எட்டிப் பார்த்தான்.

சாமும் எட்டிப் பார்க்க,

“ஹே இங்கல்லாம் நிக்காத. ஒண்ணுமே தெரியல உள்ள. பெரிய பள்ளமா கூட இருக்கும். நாம ஏறி வந்த மலையின் உயரம் இருக்கும் போல தோணுது. வா இங்கிருந்து போகலாம்.” அவனை இழுத்தாள்.

வீரா நகர்வதாக இல்லை.

“இத மலைல இதத் தவிற வேறு எதுவும் நாம தேட இல்ல. இங்க தான் ஏதோ இருக்கும். நான் போய் பார்க்கறேன்.” வீரா அங்கேயே நின்றான்.

“லூசா நீ. மொதல்ல வா.” அவள் திரும்பி நடந்தாள்.

அவனும் முன்னேறிச் சென்றான்.

“வேண்டாம் வீரா. இங்க ஏதோ ஆபத்து இருக்கும் போல தோணுது. போகாதே!” அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அந்த சுரங்கத்துள் இறங்க ஆரம்பித்தான்.

“வருண். இங்க வாங்க. வீரா கேட்காம இதுக்குள்ள போறான்.” அவள் கத்தியதில் வருண் உடனே வர,

“நீ கவலைப் படாத நான் அவன் கூட போறேன்.” வருணும் இறங்க ஆரம்பித்தான்.

வீரா அவனை பார்த்துவிட்டு மீண்டும் இறங்கலானான்.

இருவரும் உள்ளே செல்வதை அவள் விளக்கடித்துப் பார்த்தாள்.

“நான் மட்டும் இங்க இருந்து என்ன செய்யப் போறேன்.” சிறிதும் தாமதிக்காமல் அவளும் இறங்கினாள்.

அங்கிருந்த சில கற்களைப் பிடித்து வீரா உள்ளே இறங்கிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைத்தான்.

வருண் வேகமாக இறங்குவது தெரிந்தது.

“வருண் மெதுவா வா. கொஞ்சம் அழுத்தி அடிய வச்சாலும் இந்த கற்கள் உடைஞ்சிடும் போலிருக்கு.” வீரா சொல்வதைக் கேட்காதது போல வேகமாகவே இருந்கினான் வருண்.

“நோ வருண்.” வீரா அவனைப் பார்த்துக் கொண்டே அடுத்த அடி வைக்க, அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்காமல் காலை வைத்தான்.

அங்கே கற்களும் இல்ல. வைத்து நடக்க பாதையும் இல்லை. வெட்டவெளி.!

“அ..ஆஅ…!!!” சறுக்கினான் வீரா.

“சாம் மேலே போ. வராத.!” கத்திய படியே விழுந்தான்.

அவன் பின்னே வருணும் குதித்தான்.

இருவரும் எங்கு சென்று விழப் போகிறோம் என்பதை அறியாமல் கீழே விழுந்து கொண்டிருந்தனர்.

சாம் அதிர்ந்தாள். தன்னை விட்டு அவன் மட்டும் எங்கோ போவதா என்ற சங்கடம். விடக்கூடாது என்றெண்ணியவள்,

“வீரா, நானும் வரேன். செத்தாலும் உன்கூடவே சாகறேன்!” அவனது குரலில் கலங்கிப் போய் அவளும் வேகமாக குதித்தாள்.

வீராவும் வருணும் ஆழ்கடலின் மீது விழுந்து அதன் அடி ஆழத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

சற்று நேரம் கழித்தே சம்ரக்க்ஷா கடலினில் விழுந்தாள்.

வீராவிற்கு சங்கடம் என்பதை பூஜையில் இருந்த கோடங்கி தன் சக்தியால் அறிந்து கொண்டார். எப்படி இதை சரி செய்வது என்று அவர் யோசித்த அதே நேரம்..

“வீரா…..!! என்ன டா ஆச்சு உனக்கு… வீரா!!!! அப்பா… வாங்க… என் வீராக்கு ஏதோ ஆயிடுச்சு…. !” மோகன் கொல்லைப் புறத்தில் அலறினார்.

வீடே அந்த நிமிடம் விழித்துக் கொண்டது.

“என்னங்க…. என்ன ஆச்சு…!” வேதா பதறிப் போய் ஓடி வர,

தாத்தாவும் கூடவே கோடங்கி மற்றும் சுஜாதா கிருஷ்ணன் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

“மோகன்… என்னப்பா என்ன ஆச்சு?” தாத்தா கலங்கிப் போனார்.

“அப்பா.. என் மகனுக்கு ஆபத்து. ஒரு பெரிய ராட்ஷசன் என் மகன சாகடிக்கறான். என்னப்பா என் மகனுக்கு ஆச்சு? சொல்லுங்க… !!” அனைவரும் இருப்பதை மறந்து மோகன் கேட்க,

தாத்தா செய்வதறியாது தவித்தார்.

“மோகன். வா உள்ள போகலாம். ஏதோ கனவு கண்டிருக்க. அதான் ஏதோ உளர்ற..” தாத்தா கண் ஜாடையில் இங்கு வேண்டாமெனக் கூற,

கோடங்கியும் மோகனை உள்ளே அழைத்தார்.

“அப்பா… எனக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு இந்த திடீர் கல்யாணம். எனக்கு சொல்லுங்க.” மோகன் விடாப்படியாக அங்கேயே அமர்ந்து கேட்க,

இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூவரும் அதிர்ந்து போயினர்.

“அப்பா.. என்ன ப்பா விஷயம். அண்ணன் என்ன சொல்றாரு.” சுஜாதா தந்தையின் கை பற்றிக் கேட்க.

“ஒண்ணுமில்ல மா அவன் ஏதோ கனவு கண்டு உளர்றான். நீங்க போய் தூங்குங்க.” என்றாலும் வேதாவும் சுஜாதாவும் நம்ப முடியாமல் நின்றனர்.

கிருஷ்ணன் அருகில் வந்து மோகனை அழைத்துச் சென்றார்.

அனைவரும் உள்ளே செல்ல, கோடங்கி மாத்திரம் அந்த இடத்தில் எதுவோ உணர்ந்தார்.

கண்ணை மூடி அங்கேயே ஒரு நிமிடம் அமர, அவர் முந்தைய தினம் கண்ட ராட்ஷசன் அந்த இடத்தில் இருப்பது போல தெரிந்தது.

இது வீட்டில் அனைவருக்கும் தொல்லை தரும். இதனால் தான் மோகனுக்கு இப்படி ஒரு கனவு வந்தது என்பதை அறிந்து உடனே அந்த இடத்தில் ஒரு கட்டு மந்திரம் ஜபித்துக் அந்த இடத்தில் ஒரு எலுமிச்சையை புதைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தார்.

ஹாலில் அமர்ந்து மோகன் தன் மகனுக்கு என்ன ஆயிற்று என இப்போதே தெரியவேண்டும் என வாதம் செய்து கொண்டிருந்தார்.

தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை.

கோடங்கி உடனே மோகனிடம் சென்றான்.

“தம்பி. என்கூட வாங்க.” பூஜை அறைக்குள் சென்றார்.

மோகன் எழுந்து செல்ல, தாத்தாவும் கூடச் சென்றார்.

வேதா கண்ணில் நீருடன் பூஜையறையின் வெளியே நின்று கொண்டார்.

கோடங்கி அங்கிருந்த திருநீரை எடுத்து மோகனுக்குப் பூசினார்.

“தம்பி, பின் பக்கம் படுத்துத் தூங்கினதால உங்களுக்கு கெட்ட கனவு வந்திருக்கு. நம்ம காண்டீபனுக்கு ஒன்னும் ஆகாது. எதுவும் ஆக நான் விடமாட்டேன். நீங்க பயப் படத் தேவை இல்லை.என்னை நம்புங்க.” அவரை நேருக்கு நேர் பார்த்துக் கூற, மோகன் சற்று மட்டுப் பட்டார்.

மோகன் பின்பு எதுவும் பேசாமல் எழுந்து சென்றார். ஆனால் வேதாவிற்கும் சுஜாதாவிற்கும் ஏதோ சரியில்லை என்பது நன்றாகப் புரிந்து போனது.

திடீர் கல்யாணம், கோடாங்கியின் வரவு என புதிராகவே இருந்தது.

“மாமா. எனக்கு ஒரு உண்மை சொல்லுங்க.!” வெளியே வந்த தாத்தாவை வழி மரிக்க,

“எல்லாம் காலைல பேசிக்கலாம்ம்மா இப்போ போய் தூங்குங்க!” தன்னால் எதுவும் சொல்லமுடியாது என்பதால் அவ்வாறு கூறிச் சென்றார்.

மோகன் ஏற்கனவே சத்தியம் வாங்கியதால் அவரால் அதைப் பற்றிப் பேசக் கூட இயலவில்லை.

சுஜாதாவும் வேதாவை தேற்றினார்.

“அண்ணி, நாம காலைல கேட்போம். இப்போ வேண்டாம்.” என உறங்க சென்றார்.

எல்லோரும் சென்ற பிறகு கோடங்கி தாத்தாவின் அறைக்குச் சென்றார்.

“என்ன வல்லய்யா?” விழித்தே இருந்தார் தாத்தா.

“ஐயா, மோகன் தம்பி கனவுல வந்தது நிஜம் தான்ங்க. நம்ம வீராவுக்கு அங்க இப்போ ஆபத்து தான்.” தலையில் இடியை இறக்கினார்.

“என்ன சொல்ற.. இப்போ நான் என்ன செய்வேன்.” பதறி எழுந்தார்.

“ஐயா, நாம இன்னும் ஏகாதசி வரைக்கும் காத்திருக்க முடியாது. உடனே தமயந்திய கூப்பிட வேண்டியது தான். வேற வழி எனக்குத் தெரியல.” கோடங்கி கூற,

“இன்னிக்கு எப்படி?” தாத்தா யோசிக்க,

“இந்த மாதிரி இக்கட்டான நிலைல, ஒரு வழி இருக்கு. ஒரு உயிர் பலி கொடுத்து தான் நாம இத செய்யணும்.” கோடங்கி தயங்காமல் கூறிவிட்டார்.

“வல்லய்யா.. வீட்ல இப்போ எல்லாரும் இருக்காங்க. இப்போ எப்படி?”

“நீங்க குளிச்சு தயாரா இருங்க. நான் போய் எதையாவது பிடிச்சுட்டு வரேன். தாமதிக்கக் கூடாது.” கோடங்கி உடனே கிளம்பினார்.

அந்த ஊரில் நாய் பூனை கூட அடங்கியிருந்தது. எங்கிருந்து எதைக் கொண்டுவருவது என்ற சிந்தனையில் செல்ல, வழியில் ஒரு வீட்டில் கோழி சத்தம் கேட்க,

யாருக்கும் தெரியாமல் அதைப் பிடித்து வந்தார். மீண்டும் அவசராமாக வீடு வந்து சேர்ந்தார்.

தாத்தா சொன்னது போல குளித்து முடித்து நீலக் கல் முன் அமர்ந்திருந்தார்.

“ஐயா, இத நான் செய்யறேன். நீங்க கல்லை எடுத்துக்கோங்க.” என்றான்.

இருவரும் பூஜை செய்துவிட்டு அந்தக் கோழியையும் நீலக் கல்லையும் எடுத்துக் கொண்டு பின்புறம் சென்றனர்.

பின்னால் இருந்த மலையடிவாரத்திற்கு வந்ததும் கோடங்கி ஒரு கையால் கோழியைப் பிடித்துக் கொண்டு மறுகையால் மண்ணை குவித்து அதில் இரண்டு காய்ந்த சருகைப் போட்டார்.

மந்திரம் ஜெபிக்க அந்த சருகுகள் எரிய ஆரம்பித்தது.

மலையை நோக்கி தாத்தாவும் கோடங்கியும் வணங்கி விட்டு பின் கோடங்கி அந்த கோழியின் கழுத்தைத் திருகினார். சத்தமில்லாமல் அது உயிரை விட்டது. அதன் ரத்தம் அந்த நெருப்பில் பட , பெரிய ஜ்வாலை உருவானது. அதில் நீலக் கல் ஒளிபெற்றது.

இம்முறை நேரம் கடத்தாமல் கல்லின் உஷ்ணம் ஜிவ்வென ஏறியது. தாத்தாவின் கைகள் சூட்டை உணர ஆரம்பித்தவுடன் “சக்க்ரவானா” என கத்தினார்.

குளம் தோன்ற, கல்லை அதிலே எறிந்தார்.

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சுஜாதாவும் வேதாவும் கண்டனர். பயத்தில் இருவரும் உடல் நடுங்க நின்றனர்.

மலை மீதிருந்து ஒரு உருவம் இறங்கி வருவதைக் கண்டதும் இருவருக்கும் இதயம் வெளியே வந்தது போல ஆனது.

வருபவர் ஆணா பெண்ணா என்ற கேள்வி இருவர் மனத்திலும் தோன்ற ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!