Kandeepanin Kanavu-30

Kandeepanin Kanavu-30

                     காண்டீபனின் கனவு – 30

 

 வருண் தன் குடும்பத்தில் ஒருவன் என்பதை தாத்தாவாலும் சரி, கோடங்கியாலும் சரி, ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி சாத்தியம்? அதுவும் அவன் தன்னுடைய அண்ணன் சாயலில் இருப்பது பார்க்கப் பார்க்க வயிற்றைப் பிசைந்தது.

“வல்லையா இப்போ என்ன பண்றது?” தாத்தா அருகில் இருந்த ஒரு சோம்பு நீரைக் குடித்து மனதை ஆற்ற முயன்றார்.

“இன்னும் மூணு நாள்ல நமக்கு உகந்த ஏகாதசி. அதுனால கண்டிப்பா நாம நீலக் கல் பூஜைய நம்ம தம்பிய விட்டு செய்யச் சொல்லுவோம். அதுக்குள்ள அந்த வருண பத்தி எதுவும் தெரிய வாய்ப்பில்ல. ஆனா பூஜைக்குப் பிறகு உங்க அண்ணன் வருவேன்னு சொல்லிருக்காரு. அப்போ இந்த வருண் இருந்தா, எதாவது தெரியவரும்.” இருந்த ஒரே வழி அது தான் என்பது போல வல்லையா முடித்துக் கொண்டார்.

அன்று இரவு உணவிற்கு ஊரிலிருந்து வந்த மூவரும் வராமல் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, மற்றவர்களும் அவர்களை எழுப்பாமல் வேலைகளை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றனர்.

நள்ளிரவில் வயிறு பசி எடுத்து எழுந்தாள் சம்ரக்க்ஷா. மணி பதினொன்னரை எனக் காட்ட, அந்த வீடு அப்போது அவளுக்கு ஏனோ பயம் தருவதாக இருந்தது. இருந்தாலும் விளக்கை போட்டு விட்டு எழுந்து ஹாலுக்கு வர, அங்கே சுவிட்ச் எங்கே இருக்கிறது என தெரியவில்லை.

கையில் தன்னுடைய மொபைலை எடுத்து அதிலிருந்த டார்ச்சை எரியவிட்டு பக்கத்து அறையைப் பார்க்க அம்மா அப்பா என அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர்.

எழுப்பவும் மனமில்லை.

டைனிங் டேபிளில் எதாவது இருக்கிறதா என மெல்ல மெல்ல நடக்க சட்டென எதன் மீதோ மோதிக் கொண்டாள்.

“ஆ…” என மெல்லிதாக கத்திவிட்டு தொட்டுப் பார்க்க, அது அங்கிருந்த தூண்.

“ச்ச…” என நெற்றியை தேய்த்துக் கொண்டு அந்த டார்ச் ஒளியில் நடக்க, பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டது ஒரு கை.

பக் என பயந்து திரும்ப , மறுகணம் வீராவின் கைக்குள் இருந்தாள்.

“என்ன டி பண்ற இருட்டுல.” அவளைக் கட்டிக் கொண்டே கேட்டான்.

“நீ தானா..! இந்த வீடே பயங்கரமா இருந்துச்சு எனக்கு. பசிக்குது அதான் சாப்பிட எதாவது இருக்கானு பாக்க வந்தேன். சுவிச் எங்க இருக்குன்னு வேற தெரியல. நீ வேற இப்படி சத்தமில்லாம வந்து பின்னால தொட்டா என்ன பண்றதாம்.பயந்துட்டேன்…போடா..” என அவனைத் தள்ள முயன்றாள்.

“எனக்கும் இப்போ பசிக்குது.” அவள் காதோரமாகக் கூற,

“உனக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா டா…”

“முன்னாடி எப்படியோ.. இப்போ அர்ஜுனன்னு தெரிஞ்ச பிறகு.. அவன் புத்தி தானே வரும். அவன் பெண்கள் விஷயத்துல எப்படின்னு தெரியும்ல.” பேசிக் கொண்டே அவளது கழுத்து வளைவுகளை அளந்தான்.

“வீர்..நோ…. யாராவது பாத்தா…” அவள் இருட்டிலும் அக்கம் பக்கம் பார்க்க,

“அப்போ வா…” என அவளை ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு அவளது அறைக்குச் சென்று தாளிட்டான்.

அவள் ஓடிச் சென்று கட்டிலுக்கு மறுபக்கம் நின்று கொள்ள,

“வீரா… இது தப்பு. நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்திருக்கோம். அப்போலாம் நீ இப்படி இல்ல.. இப்போ மட்டும் ஏன் இப்படி ஆன…” அவளது குரல் குழைய ஆரம்பித்தது.

அது ஒன்று போதுமே அவளது சம்மதம் தெரிந்துவிட,

“அது தான் நான் பண்ண தப்பு. அப்போவே ஏன் நீ கண்ணுக்குத் தெரியல.” அவளது அருகில் செல்வது போல சென்று, கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தான்.

அருகில் நின்றவளை ஒரே இழுப்பில் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

அவளும் அவன் கால் மேல் கால் நீட்டிக் கொள்ள, அவளது இடையோடு அனைத்து அவளது முதுகுப் புறமாக அமர்ந்து கழுத்தில் சாய்ந்து கொண்டான்.

“வீர்… இப்படி எல்லாம் பண்ணாத டா…!” தன்னுடைய கையால் அவனது கேசத்தை தடவி இறுக்கிப் பிடிக்க,

“வேணாம்னு வாய் மட்டும் தான டி சொல்லுது…” மெல்ல அவளது அழகு கழுத்தில் முத்தமிட்டான்.

அவனது முத்தம் அவளது மனம் முழுதும் அவனையே நினைக்கச் செய்தது. சுற்றம் மறந்தது.

கண்மூடி அவன் மேலேயே சாய்ந்து கொண்டாள். அவனும் அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.

அவள் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். அவனது கன்னத்தில் நெற்றியில் என முத்தமிட்டாள்.

அவனது உதட்டை நெருங்கும் சமயம்,

“வீரா…” என்றாள்.

“ம்ம்ம்…”

“நம்ம விஷயம் வீட்டுல எப்படி சொல்லப் போறோம். எல்லாரும் எப்படி எடுத்துப்பாங்க. அத நெனச்சா கொஞ்சம் கவலையா இருக்கு…” அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“ஹே… என்ன டா..இதுக்கு போயா ஃபீல் பண்ணுவாங்க..எல்லார் கிடையும் நான் பேசிக்கறேன். கண்டிப்பா சம்மதிப்பாங்க.” அவளது தலையை வருடினான்.

“நிஜம்மா…!” அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்க,

அவள் விட்டத்தை இப்போது இவன் முடித்தான். அவளது உதட்டில் முத்தமிட்டு

“நிஜ்ஜம்மா…” சிரித்தான்.

“ஆனா, எப்பவும் போல அவங்க முன்னாடி நடந்துக்கோ…”

“சரி..எனக்கு பசிக்குது டா..” குழந்தை போல சிணுங்கினாள்.

“வா.. எதாவது இருக்கும்.” என அழைத்துச் சென்றான்.

இருவரும் ஹாலுக்கு வந்து விளக்கைப் போட, அடுத்த இரண்டு நிமிடத்தில் வேதா எழுந்து வந்தார்.

“அத்தை எனக்குப் பசிக்குது…” சாம் அவரிடம் செல்லம் கொஞ்சினாள்.

“குழந்தைக்கு பாட்டில்ல பால் குடுங்க…” வீரா கிண்டல் செய்தான்.

சாம் அவனுக்கு அழகு காட்டினாள்.

“அவ குழந்தை தான் டா. வாங்க. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன். என்னை வந்து எழுப்ப வேண்டியது தான.” கூறிக் கொண்டே எழுந்து உணவினை சூடு பண்ணி எடுத்துக் கொண்டு வந்தார்.

இருவரும் பழையபடி போட்டி போட்டுக் கொண்டு உண்டனர்.

“எத்தனை நாள் ஆச்சு உங்க ரெண்டு பேரையும் இப்படி உட்கார வெச்சு சாப்பாடு போட்டு. இப்போ தான் சந்தோஷமா இருக்கு.” கண்கள் நனைந்தார் வேதா.

“இதுக்கு ஏம்மா கண் கண்கறீங்க. இவள நாளைக்கு ரசம் வைக்க சொல்லுங்க. நான் அங்க தினமும் எவ்வளளோ கஷ்டப் பட்டேன்னு அப்போ தெரியும்.” வேண்டுமென்றே கிண்டல் செய்ய

“பாருங்க அத்தை…வெளிய போறப்ப எல்லாம் என்ன ரசம் செய்ய சொல்லுவான். நல்ல தின்னுட்டு, இப்போ வந்து நல்லா இல்லன்னு கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கான்.” அவள் பதில்லுக்கு பேச, இப்படியே உண்டு முடித்தனர்.

வேதா தூக்கம் கலையாமல் இருப்பது தெரிந்ததும்,

“அம்மா, நீங்க போய் தூங்குங்க. எங்களுக்கு இப்போ தூக்கம் வராது. நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு போய் தூங்கிக்கறோம். நீங்க போய் படுங்க.” என அனுப்பி வைத்தான்.

“எதாவது வேணும்னா கூபிடுங்க..” என்றவாறே உறங்கச் சென்றார்.

சிறிது நேரம் அந்த கிராமத்து வீட்டை இருவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தனர். வீரா அவளுக்கு சிறு வயதில் இங்கு இதை செய்தோம் , அதைச் செய்தோம் என ஒவ்வொரு இடத்திற்கும் கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்படியே அவர்கள் பின் புற வாசலை அடைய, வீரா எதையும் செய்யமுடியாமல் அப்படியே நின்றான்.

“என்ன வீர்? ஏன் இங்கயே நிக்கற…” சாம் அவனைப் பார்க்க,

அவனோ இமை கொட்டாமல் பின் வாசலில் தெரிந்த மலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாம், வீர் வீர் என அவனைத் துளைக்க,

“போய் படு.” சீறினான்.

“ஏன்.. என்ன ஆச்சு..” அவள் கம்மிய குரலில் கேட்கவும்,

“நேரமாச்சு. அதான் சொல்றேன். போய் தூங்கு கொஞ்ச நேரம்.” என அவளை விடாப்படியாக அவளது அறைக்கு அனுப்பினான்.

அவள் சென்ற பிறகு, வேகமாக பின் பக்கக் கதவைத் திறந்து அந்த மலையை நோக்கிச் சென்றான்.

அடிவாரம் வரை சென்றவன்,

“இங்க தான்.. இங்க தான் இருக்கு என்னோட சொத்து… என் கனவு…” என கீழே இருந்த மண்ணை கட்டிக் கொண்டு படுத்தான்.

அவனுக்குத் தெரியாமல் பின்னால் வந்த சாம், இதை பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவனது செயல் அவளுக்கு பைத்தியம் பிடித்தவன் போலத் தோன்றியது.

‘ஏன் இப்படி நடந்துக்கறான்.?’ புரியாமல் மறைந்து நின்று அவனைப் பார்த்தாள்.

“எங்க..இங்க ஒரு குளம் இருக்கணுமே! ஆ… நீலக் கல்..! ஆமா குளம் தெரிய நீலக் கல் பூஜை செஞ்சு இங்க கொண்டு வரணும். வரேன்.. வரேன்… உன்னை கையில எடுத்து கட்டிப் பிடிக்கணும்… ஆசை தீர என் தோளில் சுமக்கனும்.” அந்த நிலத்திற்கு முத்தமிட்டான்.

‘ஒரு வேளை இங்க தான் அந்த காண்டீப வில் இருக்கோ! இதைப் பார்த்ததும் அவன் அர்ஜுனனாவே மாறிட்டானோ!’ சாம் சரியாகவே யோசித்தாள்.

சிறிது நேரம் அங்கேயே படுத்துக் கிடந்தவன் எழுந்து வருவது தெரிந்ததும், அவசரமாக உள்ளே சென்றாள்.

அதற்குப் பிறகு அவனும் சென்று தன் அறையில் உறங்கிவிட, சாம்க்கு உறக்கம் கலைந்தது.

மறுநாள் காலை சற்று தாமதமாகவே எழுந்தனர் சாமும், வீராவும். ஆனால் வருண் அதற்குள் எழுந்து மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

வீராவைக் கண்டதும், “என்ன நல்ல தூக்கமா…?” என்றான்.

“நான் நைட் எழுந்து சாப்பிட்டு மறுபடியும் தூங்கினேன். நீ தான் நல்ல தூக்கம். அம்மா, காபி” ஹாலில் இருந்த சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

தூங்கி எழுந்த முகத்துடன் காஃபி குடித்துக் கொண்டிருந்தாள் சாம்.

வீராவின் மனநிலை இப்போது என்ன என்பதை அவனையே பார்த்துக் கொண்டு கணிக்க முயன்றாள். அவனோ சாதாரணமாகத் தான் இருந்தான்.

சுஜாதா காஃபியை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, அதை வாங்கி சுவைத்துக் கொண்டிருந்தான்.

“காண்டீபா… காஃபி குடிச்சுட்டு என் ரூமுக்கு வாப்பா.. சின்னபாப்பா நீயும் தான்.” என தகவல் மட்டும் கூறிவிட்டு சென்றார்.

“என்ன விஷயம் அத்தை…எதுக்கு தாத்தா கூப்பிடறாரு?” சுஜாதாவிடம் கேட்டான்.

“எல்லாம் நல்ல விஷயமாத் தான் இருக்கும் டா.. போங்க.” மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டுச் சென்றார்.

இருவரும் சிறிது நேரத்தில் அவரின் அறையில் இருந்தனர்.

“வாங்க.. இங்க வாங்க…” என அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அழைத்தார். இருவரும் சென்று அவருக்கு எதிரே அமர,

“காண்டீபா.. உனக்கு இப்போ எல்லா உண்மையும் தெரியும்னு நினைக்கறேன்.” தாத்தா கேட்க,

“ம்ம்ம்… ஆமா தாத்தா..அங்க போனபிறகு தான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். நீங்க ஏன் தாத்தா என்கிட்டே இதைப் பத்தி சொல்லல?” வீரா சங்கடமாகக் கேட்க,

“உன் அப்பா என்கிட்ட அப்போ சத்தியம் வாங்கிட்டான் பா. அதுனால தான் என்னால எதுவும் சொல்ல முடியல. ஆனா, நீ வெளிநாடு போனப்பவே நான் தெரிஞ்சுக்கிட்டேன். உனக்கு எல்லாமே தெரியவரும்னு. கோடங்கி மூலமா அங்க உனக்கு நடந்ததெல்லாம் எனக்கும் தெரியும். எவ்வளோ பெரிய கண்டத்துல இருந்தெல்லாம் நீ தப்பி இருக்க. அது பெரிய விஷயம்.

இன்னும் நமக்கு கஷ்டங்கள் முடியல. உனக்கு கண்டமும் தீரல.” கனத்த மனத்துடன் தாத்தா கூற,

“ஐயோ..அப்பிடீனா…உயிருக்கு ஆபத்தா தாத்தா…!” பதறினாள் சம்ரக்ஷா.

அவளது பதட்டத்தையும் , பயத்தில் அவள் வீராவின் கையைப் பற்றிக் கொண்டதையும் கவனித்தார்.

“ஆனா நீ அவன் பக்கத்துல இருக்கற வரைக்கும் அவனுக்கு எதுவும் ஆகாது.” தாத்தா கூறியதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தா..த்…தா..?! என்ன சொல்றீங்க…?” வீரா கேட்க,

“நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம். நம்ம வீட்டு ஆளுங்கள மட்டும் வெச்சு , ஊர்ல தெரிஞ்சவங்க நாலு பேர கூப்பிட்டு கல்யாணம் முடிச்சுடலாம். உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா இல்லையான்னு கேட்கற நிலைல கூட நான் இல்ல பா. ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க.” கும்பிட்டு, கண் கலங்கினார்.

“தாத்தா… எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க.. நீங்க சொன்னா நாங்க கண்டிப்பா கேட்போம்.எனக்கு சம்மதம் தான்.” அவரது கையைப் பிடித்துக் கூறினான்.

“எனக்கும் தான்” சாமும் சேர்ந்து கொண்டாள்.

தாத்தா… “ரொம்ப நன்றி” என்றார்.

அவர்களைக் கூட்டிச் சென்று ஹாலில் அனைவர்க்கும் அந்தச் செய்தியைக் கூறினார்.  மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தனர். இருந்தாலும் ஒரு புறம் ‘எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும்’ என்ற பதட்டமும் இருக்கவே செய்தது.

இதில் வருணும் தன் மகிழ்ச்சியை தெரிவித்தான். தாத்தா அவனைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் புழுங்கினார். 

திருமண ஏற்பாடுகள் அப்போதே துவங்கியது.

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!