Kandeepanin Kanavu 7
Kandeepanin Kanavu 7
காண்டீபனின் கனவு 7
தாத்தா மீண்டும் ஊருக்குக் கிளம்பிச் சென்று, முருகன் குடும்பத்தைப் பார்த்தார். அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். முருகனின் மனைவி தாத்தாவைக் கண்டதும் அழுது கரைந்தாள்.
“வருத்தப் படாத மா. முருகன் நல்லவன் தான். அவனுக்கு இப்படி நடக்கும்னு யாரும் நினைக்கல.மனச தேத்திக்கோ.” ஆறுதல் கூறினார்.
“எல்லாம் விதிங்க ஐயா. கொஞ்ச நாளா அவர் போக்கே சரியில்ல.எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு இப்படி ஆயிடுச்சு போலிருக்கு” வாயில் புடவையைத் திணித்து அழ ஆரம்பித்தாள்.
“என்னம்மா சொல்ற? மூணு நாள் முன்னாடி கூட நல்லா தான இருந்தான். நான் இருந்த ஒரு வருஷம் நல்லா இருந்தானே!” தாத்தாவிற்கு இருந்த வரை சிறிதும் சந்தேகம் வரவில்லை அவன் மீது.
“கொஞ்ச நாளா யார் கூடவோ போன் பேசிட்டே இருந்தாரு. யாருன்னு எனக்குத் தெரியாதுங்க. எப்போ பணம் தருவீங்க அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்தாரு. அந்த போன் வந்தாலே வெளிய போய்டுவாரு. அந்த போன்ல பேசினவரு தான் அன்னிக்கு இவரோட கூட இருந்தாரு போலிருக்கு, அவருக்கும் கண் போச்சு. என்னத்த நான் சொல்றதுங்க” மீண்டும் அவள் அழ ஆரம்பிக்க,
அவளது கையில் ஒரு கணிசமான தொகையைக் கொடுத்தார்.
“இத வெச்சுக்கோம்மா.” எனவும்,
“இல்லங்க. என் மகன் இப்போ வெளியூர்ல இருக்கான். அவனோடவே வர சொல்றான். நான் அங்கேயே போய் இருந்துக்கலானு முடிவு செஞ்சிருக்கேங்க. பணம் வேண்டாமுங்க” மறுத்தாள்.
“பரவால்லா மா. என்ன தான் மகன் வீட்டுக்குப் போனாலும், உன் கைல கொஞ்சம் பணமிருந்தா தான் உனக்கு மதிப்புக் கிடைக்கும். வெச்சுக்கோ. முருகன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கான்.” அவளிடம் பணத்தைக் கொடுத்த பின்பே கிளம்பினார்.
நேரே மருத்துவமனைக்குச் சென்று அந்த கண் போனவரைப் பற்றி விசாரித்தார்.
அவர் ஐசியூ வில் கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறினான் அந்த வார்ட் பாய்.
“ஏன் பா என்ன ஆச்சு?”
“மொதல்ல வந்தப்ப கண் தாங்க போயிருந்துச்சு. அதுக்கப்றம் அவர் உடம்புலயும் அங்கங்க காயங்கள் இருக்கவே சோதிச்சு பாத்தாங்க. குடிப் பழக்கம் வேற, எல்லாம் சேந்து அன்னிக்கு ராத்திரி ஸ்ட்ரோக் மாதிரி வந்துருச்சு. பெரிய டாக்டர் அவர் பொழைக்க மாட்டாருன்னு சொல்லிட்டாங்க.” அதிர்ச்சியாகக் கூறினான்.
“நான் பாக்கலாமா?” தாத்தா கேட்க,
“போங்கையா” கதவைத் திறந்து விட்டான்.
தாத்தா உள்ளே சென்று அங்கிருந்தவரைக் கண்டதும், இவன் நிச்சயம் பிழைக்கப் போவதில்லை என தோன்றியது. கண்கள் கட்டப் பட்டிருக்க, ஆக்சிஜென் மாஸ்க் போடப்பட்டு, கைகளில் சலைன் ஏற்றப்பட்டு, அருகில் ஒரு மானிட்டரில் இதயத் துடிப்பை கணக்கிட வைத்திருந்தனர்.
அருகில் சென்ற தாத்தா, மெல்ல “தம்பி” என கூப்பிட்டுப் பார்த்தார்.
அந்த மெல்லிய சத்தம் ரமணாவிடம் அசைவை ஏற்படுத்தியது. மெல்ல கண் திறந்தார். கண்களில் ஜீவன் குறைந்து கொண்டே இருந்தது.
“நீங்க?” நடுங்கிய குரலில் ரமணா கேட்க,
“முருகன் எங்க வீட்ல தான் வேலை செஞ்சிட்டு இருந்தான்.” சுருக்கமாகச் சொல்ல,
ரமணாவின் கண்களில் ஒரு நொடி ஒளி மின்னியது.
“ஐயா. என்னை மன்னிச்சிடுங்க. உங்க குலதெய்வம் பத்தி கேள்விப் பட்டு அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தான் நான் முருகனை அணுகினேன். உங்க குடும்பத்தைத் தவிற யாரும் அதைப் பார்க்க கூடாது, பார்க்க முடியாதுன்னு இருக்கறப்ப, அந்த விதியை மீறி அப்படி என்ன இருக்கும்னு பேராசைப் பட்டுத் தான் நான் இந்த ஊருக்குள்ளே வந்தேன்.
முருகனும் நீங்க ஊருக்குப் போன பிறகு என்னை வர சொன்னான். அதுனால தானோ என்னவோ எங்களுக்கு இந்த நிலைமை. என்னை மன்னிச்சிடுங்க. உயிர் போறதுக்கு முன்னாடி ஒரு பாவ மன்னிப்பு மாதிரி உங்ககிட்ட கேட்கறேன். என்னை மன்னிச்சிடுங்க.” ஊசி குத்திய கையைத் தூக்கி வணங்கினார்.
“பரவால்லபா. இது வரை யாரும் இப்படி செஞ்சதில்ல. ஆனா தெரிஞ்சுக்கணும்னு நெனச்சவங்க யாரும் இப்ப உயிரோட இல்ல. முருகனுக்கும் அங்க என்ன இருக்குன்னு முழுசா தெரியாது. ஆனா காவல்காரனா இருக்க வேண்டியவனே இப்படி காட்டிக் குடுக்க நெனச்சதுனால தான் அவனுக்கு இந்த நிலைமை. நான் வரேன். நீங்க குணமடையணும்னு நான் வேண்டிக்கறேன்.” வருத்தத்தோடு கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அவருக்குத் தெரியும், நிச்சயம் ரமணா உயிர் பிழைக்க மாட்டாறென்று.
‘நம்ம குடும்பத்தைத் தவிற வேற யார் உள்ள வர நிச்சாலும் அவங்க உயிரோட இருக்க மாட்டாங்க.’ அவருடைய தாத்தா கூறியது நினைவிற்கு வந்தது.
தாத்தா ஊருக்குத் திரும்பிய கொஞ்ச நேரத்தில் ரமணாவின் உயிர் பிரிந்திருந்தது.
**
வீராவின் அலுவலகத்தில் அன்று பெரிய வாக்குவாதங்கள் நடைபெற்றது.
ரோமியும் டைசனும் அன்று வரவில்லை. ரோமிக்கு ஏதோ உடல் உபாதை என்பதால் அவன் நாளை காலை நேராகக் கிளம்பி வருவதாகக் கூறியிருந்தான்.
டைசன் அந்த இடத்திற்குத் தன்னால் வரமுடியாது, ஏனெனில் தன்னுடைய காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருப்பதாக மெயில் அனுப்பி இருந்தான்.
வீரா, வருண் மற்றும் கில்பர்ட் மட்டுமே இப்போது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“நான் ‘சாம்’ம கூட்டிட்டு என்னோட கார்ல வரேன்.” வீரா கூற,
கில்பர்ட் வருணை தன்னுடன் அழைத்தார்.
“பேசாம எல்லாரும் ஒரே ஜீப்ல போய்டலாமா?” வீரா தன்னுடைய எண்ணத்தைக் கூற,
“இல்ல வீர். ரெண்டு வண்டி இருக்கறது நல்லது தான். எதாவது எமர்ஜென்சினா தேவைப்படும்.” வருண் கூறினான்.
“அதுவும் கரெக்ட் தான். எங்க நாம கார் பார்க் பண்ணனும், அங்கேந்து எப்படி போறோம், எங்க டென்ட் போடணும், எல்லா டிடெய்ல்சும் இதுல இருக்கு. இதோட அந்த மலைய சுத்தி இருக்கற மேப் இது. எல்லாருக்கும் ஒரு காபி இருக்கு. இந்தாங்க” அனைவருக்கும் கொடுத்தான் வீர்.
“ரோமி எப்படி வரான்? நாம பிக் பண்றோமா?” வருண் கேட்க,
“அவனே வரேன்னு சொன்னான். அப்றமா அவன்கிட்ட நான் பேசறேன். ஓகே. டேக் ரெஸ்ட் அண்ட் கம் டுமாரோ. சி யூ. நான் உன்ன ஆறு மணிக்கு பிக்அப் பண்றேன் வருண். பை” கில் கிளம்பினார்.
வருணும் வீராவும் கூட கிளம்பினர். வீராவிற்கு கனவில் கண்டதை நேரில் காணப் போகும் ஆவல், அதே நேரம் வருண் தன்னுணர்வை வெளிக்காட்டாமல் இருந்தான். ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்துகொண்டான்.
இருந்தும் வீராவிடம் இதைக் கேட்டான்.
“என்ன வீர், ரொம்ப எக்சைடட்டா இருக்கற மாதிரி தெரியுது?”
வருணைப் பார்த்துப் பேசி இரண்டு நாள் தான் ஆனது. அதற்குள் அவனிடம் எப்படி தன் கனவைப் பற்றி கூறுவது. சம்ரக்க்ஷாவைப் போல இவனும் கிண்டல் செய்ய ஆரம்பித்தால் அது நன்றாக இருக்காது என யோசித்தவன்,
“எனக்கு கிராண்ட் கேனியன் பாக்கணும்னு முன்னாடியே ப்ளான் இருந்துச்சு. அதுலயும் இப்போ நமக்கு ப்ராஜெக்ட் அங்கன்னு தெரிஞ்சதும் இன்னும் ரொம்ப ஹாப்பி அவ்ளோ தான்” பொய்யும் இல்லாமல் உண்மையும் இல்லாமல் கூறினான்.
மெல்ல சிரித்தான் வருண். அவனது சிரிப்பு எதையோ அவன் தெரிந்துகொண்டு சிரிப்பது போல இருந்தது வீராவிற்கு. மேற்கொண்டு எதையும் கேட்காமல் வீட்டிற்குச் சென்றான்.
சம்ரக்க்ஷா அவனுக்கும் சேர்த்து பேக்கிங் செய்து கொண்டிருந்தாள்.
“எல்லாம் எடுத்து வச்சுட்டியா சாம்? வேற எதாவது வாங்கனுமா?” தன் உடமைகளை சரி பார்த்தபடியே கேட்க,
“அல்மோஸ்ட் எல்லாம் ஓவர். லாஸ்ட்டா ஒரு செக்லிஸ்ட் போடு, சரி பண்ணிடலாம்” என்றாள்.
“ஒரு காஃபி வேணும் சாம்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க,
“சான்சே இல்ல. நீ தான் பண்ணனும். நான் இதெல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கேன். சோ எனக்கும் சேர்த்து கொண்டு வா.” சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டாள்.
“எல்லாம் என் நேரம்” புலம்பினாலும் யோசிக்காமல் இரண்டு கப் எடுத்து பாலை ஊற்றினான்.
அவள் சொன்னபடி ஒரு துண்டுச் சீட்டில் என்னென்ன தேவை என்பதை எழுதி அவை அனைத்தும் எடுத்துக் கொண்டோமா என சரி பார்த்தனர்.
இரவு சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டுமென நினைத்து
“வீட்டுக்குக் கால் பண்ணு. இதுக்கப்பறம் ஒரு வாரம் ஆகும் நாம பேச, அங்க சிக்னல் எல்லாம் சரியா கெடைக்காது.” என்றான்.
இருவரும் பேச, அனைவரும் ஆயிரம் ஜாக்கிரதை கூறினார். கடைசியாக தாத்தாவிடம் பேச நினைத்து அவரை அழைக்க,
“அவர் அவரோட ரூம்ல த்யானம் பண்றாரு. அப்பறமா அவர் போனுக்கே கூப்பிட்டு பேசு. அவரும் பேசணும்னு சொன்னாரு.” சுஜாதா கூறி போனை வைத்தார்.
லைட்டாக இரவு உணவை முடித்துக் கொண்டு சம்ரக்க்ஷா அவளது அறைக்குச் செல்ல, வீரா தன் படுக்கையில் விழுந்தான்.
தாத்தாவிடம் பேசி ஆசி பெற எண்ணியவன், அவருடைய எண்ணிற்கு அழைத்தான்.
“காண்டீபா.. எப்படி இருக்க? கிளம்பிட்டீங்களா?” வாஞ்சையாக பேரனிடம் கேட்டார்.
“இப்போ ராத்திரி தாத்தா. காலைல தான் கிளம்பறோம். தியானம் முடிச்சுட்டீங்களா?”
“ம்ம் ஆச்சுப்பா. வீரா உன்கிட்ட தனியா பேசணும்னு தான் அப்போ அவங்களோட நான் பேசல.” மெல்ல ஆரம்பித்தார்.
“சொல்லுங்க தாத்தா. உங்ககிட்டேந்து நிறைய தெரிஞ்சுக்கணும். ஊருக்கு வரணும் போல இருக்கு. என்ன சுத்தி ஏதோ நடக்குது. கண்டிப்பா உங்களுக்குத் தெரியும். சொல்லுங்க..”, வீராவிற்கு அனைத்தும் அப்போதே தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்கியது.
“ உனக்கு இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது ப்பா. அப்படி ஒரு சூழ்நிலை. உனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும், அப்போ கண்டிப்பா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன். உன்கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும். உன்கூட இருந்து நான் பாதி தூரம் வழி நடத்துவேன்.”
“என்ன அது தாத்தா. எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.” வீரா விடுவதாக இல்லை.
“இந்த மலைப்பயணம் உனக்கு பல விஷயத்தை உணர்த்தும். அதன்பிறகு நான் சொல்றேனே. நானும் அதுக்குள்ள சில வேலைகள் செய்யணும். உனக்கு உதவ சில முன்னேற்பாடுகள் செஞ்சிட்டு உங்கிட்ட சொல்றேனே. தாத்தாக்கு கொஞ்சம் அவகாசம் குடு.” அவனது ஆர்வம் புரிந்து அமைதி காக்கச் சொன்னார்.
“சரி தாத்தா. நீங்க சொன்னா அதுல ஏதோ விஷயம் இருக்கும். வெய்ட் பண்றேன்.” சம்மதித்தான்.
“எத்தனை பேர் போறீங்க?” அதி முக்கியமான கேள்வியைக் கேட்டார்.
“ஆறு பேர்ன்னு இருந்துச்சு, நம்ம சாம்-ஐ யும் சேர்த்து. இப்போ அஞ்சு பேர் ஆயிடுச்சு. நாளைக்கு தான் தெரியும், அஞ்சா இல்ல நாலான்னு.. ரெண்டு பேர் உடம்பு சரி இல்ல.” எதார்த்தமாக வீரா கூற,
“எல்லாரும் உன்கூட வேலை பாக்கறவங்க தான?”
“ஒருத்தர் மட்டும் நேத்து தான் ஜாயின் பண்ணாரு. பேரு வருண்.” என்றான்.
“வருணா…!!?” தாத்தாவிற்கு பொறி தட்டியது.
“ஆமா, ஏன் தாத்தா?” வீர் புரியாமல் கேட்க,
“ஆங்..ஒண்ணுமில்ல.சும்மா தான், பேர சொல்லிப் பார்த்தேன். உனக்கு எல்லாம் வெற்றியா அமையும். பாத்து போயிட்டு வாங்க. சின்ன பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ.” மீண்டும் கூறினார்.
“சரி தாத்தா. நாங்க போயிட்டு வந்து போன் பண்றோம்.
வீரா தூங்கச் சென்றான். ஆனால் தாத்தாவின் தூக்கம் தொலைந்தது. உடனே தங்களுடைய குடும்பத்திற்கு வழி வழியாக ஜாதகம் பார்த்து குறி சொல்லும் கோடங்கியைக் காண எண்ணினார். அவரோ இப்போது கேரளாவில் இருந்தார். ஆனாலும் வேறு வழியில்லாமல் தாத்தா அவருக்குப் போன் செய்தார்.
“வல்லய்யா.. எப்படி இருக்கீங்க?”
“ஐயா, நீங்க எப்படி இருக்கீங்க? எதாவது செய்தியா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் வல்லய்யா கோடங்கி.
அவர் மை போட்டுப் பார்ப்பது, குறி சொல்வது, சோழி உருட்டுவது, அதுமட்டுமன்றி அவரது சிறப்பே, கைரேகை, கால்ரேகை, உதட்டுரேகை, உச்சந்தலை ரேகை என மொத்தமும் பார்ப்பார்.
அவர்கள் குடும்பத்தைப் பற்றி சகலமும் அறிந்த ஒரே வெளியாள் கோடங்கி மட்டுமே. அவருக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் இன்று நேற்றல்ல பரம்பரை பரம்பரையாக தொடர்புண்டு. கோடாங்கியின் குடும்பத்தினர் தான் இவர்கள் குடும்பத்தில் நடப்பதை கணித்துக் கூறுபவர்கள்.
வீரா பிறந்த போது அவன் தலையில் உள்ள அர்ச்சுன மச்சத்தை கண்களால் கண்டவர் அவர் மட்டுமே. இது அவருக்கும் தாத்தாவுக்கும் மட்டும் தான் தெரியும்.
தாத்தா இப்போது போன் செய்ததும், ஏதோ விஷயம் நடந்துவிட்டது என்பதை அறிந்து கொண்டார்.
“வல்லய்யா, பேரன் இப்போ வெளிநாடு போயிருக்கான். அங்க ஒரு மலை குகைல இந்த வாரம் வேலை. புதுசா ஒரு நட்பு சேர்ந்திருக்கு. பேரு வருணாம். அது மட்டுமில்ல, நம்ம வீட்டை காவல் காத்த முருகன் இறந்துட்டான், அவனோடு சேர்ந்த இன்னொருத்தனும் இறந்துட்டான். ரெண்டு உயிர் பலி வாங்கிடுச்சு. கொஞ்சம் உடனே ஊருக்கு கிளம்பி வாங்க.” விவரம் கூறினார்.
“நல்லது. தேவையானத எடுத்துக்கிட்டு நான் நாளைக்கே அங்க இருப்பேங்க. வச்சிடறேங்க.” கோடங்கி அன்று இரவே புறப்பட்டார்.
அதே நேரம் சாம், வீர் இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.