NNA22(PF)

நீயும் நானும் அன்பே

அன்பு-22 (ஈற்றியல் பதிவு)

 

‘இங்க எப்டி இவன்?’, என்று வெற்றியின் மனம் கேட்ட வினாவிற்கு

 

‘அவந்தானா…! இல்லை அவனை மாதிரியே வேற யாருமா? அவனை மாதிரியே அச்சு அசலா இருக்கானே?, என்று மனம் சொன்னதை எண்ணியவாறே அவ்விடத்தை நிதானமாகக் கடந்திருந்தார் வெற்றி.

 

யோசனையோடு, ஒருமுறை வாசலில் நின்றவனை திரும்பிப்  பார்த்தபடியே கடந்த வெற்றி, ‘பய  முழியப் பாத்தா ஏதோ வில்லங்கந்தான்போல! என தனக்குத்தானே மனதில் நினைத்தவாறே நடந்தார்.

 

வெற்றியைக் கண்ட சாந்தனு மனதில் அதிர்ச்சி வாங்கினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, கண்டும் வெற்றியைக் காணாததுபோல இருக்க முயன்று நின்றிருந்தான்.

 

அதேவேளையில் சாந்தனுவின் மாற்றத்தைக் கண்ணுற்ற உடன் வந்திருந்தவளோ, நடப்பவற்றைப் பற்றிய உண்மை அறியாதவளாக, ‘நேத்து ரூமுக்குள்ள நுழைஞ்சதுல இருந்து… இப்பவரை நல்ல மூட்ல இருந்துட்டு, ஏன் சாந்தனு வகேட் பண்ணிட்டு கிளம்புனவுடனே டல்லான மாதிரி இருக்க?, என்று தங்களது பிரிவை எண்ணிய வாட்டம் என தனக்குச் சாதகமாக எண்ணியவளாக சாந்தனுவிடம் கேட்டாள்.

 

வினாயெழுப்பிய பெண்ணின் குரல் தேய்ந்து வெற்றியின் காதிலும் விழ, ஒலித்ததைக் கேட்டவாறே ‘அப்டிப் போடு…! எவன்னு குழம்பிகிட்டே திரியனுமானு பயந்து போயிருந்தேன். இப்டி உண்மைய கேக்காமலேயே சொல்ல… கூடவே அந்தப்புள்ளையவும் கூட்டிட்டு வந்திருக்கான் பய! என்று இளநகையோடு நடையை எட்டிப் போட்டார் வெற்றி.

 

‘அப்டி ஒரு தினுசா கண்ணுமுன்னே வளந்தவன், இப்டி மாறிப் போயிட்டானா? அடக் கேவலப் பயலே! ஊரு விட்டு ஊரு வந்து இப்டி பண்ணா யாருக்கும் தெரியாம இருக்கும்னு நினைக்கிறானோ? இவனைப் போயி எம்புள்ளைக்கு கட்டி வைக்க நினைச்சேனே? என்னைய முதல்ல என் செருப்பால அடிச்சுக்கனும்!, என்று மனம் கூனிக் குறுகியது மனிதருக்கு.

 

‘இவனுக்காக எம்புள்ளையே வேணானு ஒதுக்கீ இருக்கேனே! நல்லவேளை எம்புள்ளைய நான் கும்பிடுற பிள்ளையார்பட்டி விநாயகருதான் காப்பாத்தி கரை சேத்துருக்காரோ…!, என்று மனம் சற்றே ஆறுதல் அடைந்தாலும்…

 

மற்றொரு மனம், ‘இவனே இப்டி பண்ணான்னா…! தாஸூ மயன் இவனுக்கு மேல என்ன எல்லாம் பண்ணக் காத்திருக்கானோ… தெரியலையே?’, என இனிவரக்கூடிய காலத்தில் எதையெல்லாம் காண வேண்டி வருமோ என்று அச்சம் எழ, அதே சிந்தனையோடு சென்னையை நோக்கிக் கிளம்பியிருந்தார் வெற்றி.

 

வெற்றியின் மனதில் சாந்தனுவும், அவனைச் சந்தித்த தருணமும், அலைக்கழித்து சோர்வடையச் செய்திருந்தது.

 

வெற்றியைப் பொருத்தவரை, பெண்ணோடு பேசுவது, பணி நிமித்தமாக இணைந்து வெளியில் உடன் செல்வது, இன்னும் அலுவலக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தவறு என்று எண்ணும், நாட்டு நடப்பை உணராத ரகமல்ல! 

 

பணி நிமித்தம் அவரோடு பணிபுரியக்கூடிய பெண்களோடு, வேலையின் நிமித்தமாகப் பேசுவது, வெளியில் செல்வது அனைத்தையும் ஒரு வரைமுறையோடு இன்றுவரைக் கடைபிடிப்பவர்.

 

ஆனால் இன்று சாந்தனு வேறொரு பெண்ணுடன் பூட்டியிருந்த ஒரே அறையிலிருந்து வெளிவந்ததைக் கண்டவருக்கோ, நிச்சயமாக அதுநாள்வரை சாந்தனு மீது இருந்த நல்ல அபிப்ராயம் முற்றிலுமாக மாறியிருந்தது.

 

முந்தைய தினம் இரவு தனக்கு முன்பாக நடந்து சென்று, அந்த அறைக்குள் நுழைந்த இருவரையும் ஏதேச்சையாக தொடர்ந்து வந்தவர், வேறொரு அறையில் தங்கியிருக்கும் சகதோழரின் அழைப்பில் பின்தங்கியிருந்தார்.

 

பின் பக்கமாகக் கண்டதில் சாந்தனுவை அவரால் அப்போது அடையாளம் காண இயலவில்லை. புதிதாக மணமுடித்தவர்கள் என்றே அவர்களின் நடை பாவனைகளைக் கண்டு அப்போது யூகித்திருந்தார்.

 

‘இப்டி ஒருத்தவனை வீட்டில வச்சிருந்ததை நினைச்சாலே அசிங்கமா இருக்கு…! இதுல இவனுக்கு எம்பொண்ணை வேற தரேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நின்னதை நினைச்சா… அதைவிடக் கேவலமா இருக்கு…!, என்று பெண் பிள்ளையைப் பெற்றவராக ஒரு கணம் மனம் வருந்தினார் வெற்றி.

 

தான் இதுவரை சாந்தனு திருமணம் பற்றி மனைவி கூறிக் கேட்டதைக்கூட நம்பாத நிலையில், தான் எதிர்பாரா வேளையில் கையும் களவுமாக என்பதுபோல, எதிர்பாரா சூழலில் சாந்தனுவை மாறான சூழலில் நேரில் காண நேரிட்டதை எண்ணி வெற்றிக்கு உடல் சிலிர்த்தது.

 

தன் கண்ணையே சாட்சியாகக் கொண்டு சாந்தனுவை வேறொரு பெண்ணோடு தங்கும் விடுதியில் வைத்துப் பார்த்ததில், சாந்தனுவைப் பற்றிய எண்ணம் வெற்றிக்கு மாறியதோடு, நடப்பிற்கு வந்திருந்தார்.

 

அதுவரை மகள்மீது இருந்த தனது விட்டேத்தியான மனநிலையில் இருந்து இளகுவான மனநிலைக்கு வந்ததோடு, மகளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனார்.

 

ஆனாலும், மனமோ… மகளது திருமணம் சார்ந்த தனது முடிவு தவறானதைத் தானாகவே சென்று மனைவியிடமோ, மகளிடமோ ஒத்துக் கொள்ள இயலாத மனித மனமாக இருந்ததால், மனதோடு வைத்துக் கொண்டு, தனது பணிகளில் ஈடுபட முயன்றார்.

/////////////

சாந்தனுவின் செயலை நேரில் கண்ட வெற்றி, வரலெட்சுமியின் நிலையை எண்ணியும் மனம் வருந்தினார். பொதுவான பேச்சினூடே தனது சகலையிடம்,

 

“புள்ளைகளக் கட்டிக் கொடுத்ததோட நம்ம பொறுப்பு முடிஞ்சிருச்சினு இருக்காதீக தம்பீ…! அப்பப்போ என்ன ஏதுனு புள்ளைக வீட்டுக்கு போயி, வந்து பாருங்க…!, என்றவர்

 

“என்னடா அவம்புள்ளைய பத்தி யோசிக்காம… நம்மள வந்து குழப்பறானேனு யோசிக்காதீங்க…! ஏதோ என் மனசுல சொல்லணும்னு தோணுச்சு!, என்று வெற்றி கூற

 

“அட இதுக்கு எதுக்குண்ணே வருத்தப்பட போறேன்.  பெரியவுக நீங்க.  நாளு இடம் போயி வரவரு.  எங்க நல்லதுக்கு நேரம் ஒதுக்கிச் சொன்னா… சரினு தோணுறத எடுத்துக்க வேண்டியதுதான!, என்று கலாராணியின் கணவரும் இதமாகப் பேசிட

 

சற்றே துணிந்து, “எல்லாக் காலத்துலயும் நல்லவனுகளும் கெட்டவனுகளும் இருக்கத்தான் செய்றாக…! ஆனா நம்மோட கவனக் குறைவால மனுசனுக பாதை மாறிட்டா பாதிக்கப்படறது நம்ம புள்ளையும், அதோட எதிர்காலமுந்தான்!, என்றவர்

 

“சொந்த பந்தமா இருந்தாலும்… ஒரு கண்ணு வச்சிருக்கனும்… சிலர் சம்பந்தகாரவன் வந்து கேப்பான்ங்கறதுக்காகவே, தப்பு, தண்டாவுக்கு இடம் கொடுத்துரக் கூடாதுன்னு ஒரு முறையோட நல்ல வாழ்க்கை வாழுவானுக…, என்று இழுத்த வெற்றி…

 

“நம்ம புள்ளைய ஒழுங்கா  மனங்கோணாம வச்சிப் பாக்குறானுகளானு… நாளு, கிழமைன நேரங்காலம் பாக்காம அப்பப்போ நாமளா போயி நேருல பாத்துட்டு வரணும்…! நீங்களும் நேரம் கிடைக்கிறப்போ அடிக்கடி போயி வந்து இருங்க!, என்று சாடைமாடையாக இக்கு வைத்துக் கூறி எச்சரித்ததோடு, மனம் இலேசாக உணர்ந்தார் வெற்றி.

 

வெற்றியின் பேச்சைக் கேட்ட கலாராணியின் கணவருக்கோ, சகலையின் பேச்சு தெளிவாகப் புரியாதபோதும், ஏதோ மறைமுகமாகக் கூற வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு, இரண்டு மருமகன்களையும் தனது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர முயன்றார்.

 

அவ்வப்போது மகள்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பின்றி மனைவியோடு நேரில் செல்வது, மகள்களிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து, ‘என்னம்மா எல்லாரும் சவுக்கியந்தானம்மா? என்ற பொதுவான வார்த்தைகளோடு,

 

‘மாப்பிள்ளை இருந்தா போன அவுககிட்ட குடும்மா! அவுககிட்டயும் நாலு வார்த்தை பேசிக்கிறேன், என்றதோடு, இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வைப்பதை வழக்கமாக்கியிருந்தார்.

 

மூத்த மருமகன் மாமனாரின் அணுகுமுறையில் மெய்சிலிர்த்திருந்தார்.

 

மாமனாரின் செயலை ஆமோதித்து, அதனை செயல்படுத்துவதில் எந்த தயக்கமும் இல்லாதவராக இயல்பாக இருந்தார்.

 

ஆனால் சாந்தனு அவ்வாறு இல்லை.

 

வெற்றியை பங்களூருவில் கண்டவனுக்கு, ஊருக்கு வரும்போதே திடமில்லா மனதோடு திரும்பியிருந்தான்.

 

ஆனால், வழமைபோல அனைவரும் தன்னோடு இணக்கமாக இருந்ததைக் கண்டு, அங்கு கண்டதைப் பற்றி மனிதர் யாரிடமும் கூறவில்லை என்பதை உணர்ந்து, ‘வயசாயிருச்சுல்ல… அதான் அடையாளம் தெரியாம விட்டுட்டாருபோல மனுசன் என சற்றே துணிவாகி இருந்தான்.

 

வந்த ஓரிரு நாள்களுக்குப்பின் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதை மாமனாரின் ஒரே மாதிரியான  இரண்டாவது அழைப்பில் அறிந்தவன், உடனே மனைவியிடம், “என்ன உங்கப்பா திடீர்னு எங்கிட்டல்லாம் பேசுறாரு…! என்ன விசயம்?  கல்யாணமாகி இவ்வளவு நாளா இல்லாத பாசம் திடீர்னு எங்கிட்டு இருந்து வந்தது?, என்று மனைவியிடம் கேட்கத் தவறவில்லை.

 

வராவும் அத்தோடு விடாமல், வாய் வளர்க்க வம்பு வளர்ந்தது. 

 

முடிவில், ‘நீங்க முன்னமாதிரி இல்ல மச்சான்!  வரவர எதுக்கெடுத்தாலும் வெடுக்கு வெடுக்குனு வார்த்தையால என்னைய கொட்டிக்கிட்டே இருக்கீக!, என கணவனின் மாறுபட்ட அணுகுமுறையில் அதிருப்தியடையத் துவங்கியிருந்தாள் வரா.

 

அடுத்த முறை பேசிய தந்தையிடம் பேசியவள், சாந்தனுவைப் பற்றி தந்தை வினவியதும், வீட்டில் இருந்த கணவனை அழையாது, ‘அப்பா… இப்பதான் அவுக ஹாஸ்பிடல் போயிட்டாகப்பா!, என்று கூறி வரா சமாளித்திருந்தாள்.

 

அடுத்தடுத்த முறையும் இதேநிலை தொடரவே, கலாராணியின் கணவருக்கு, வராவின் பேச்சோடு, நடவடிக்கையிலும் எதோ மறைப்பதைப் போன்ற மாற்றத்தைக் கண்டு, ஊருக்கு வந்தவளிடம் என்ன? ஏது? என்று துருவித் துருவி விசாரித்திருந்தார்.

 

மகளும் கணவனுக்கு பேசுவதா, இல்லை தந்தையிடம் உண்மையை உரைப்பதா என்று முதலில் தயங்கினாள்.

 

பிறகு பெரியவரின் வார்த்தையில் பயந்தவள், தயங்கி உண்மையை உரைக்கவே, பெண்ணிடம் இயல்பாகப் பேசிவிட்டு, சாந்தனுவை முன்பைக் காட்டிலும் அதிகம் நேரடியாகவே கண்காணிக்கத் துவங்கியிருந்தார்.

/////////////

வெற்றியோ, மகள் தன்னை மீறி எடுத்த முடிவை மகளுக்கு நன்மையாக இருந்தபோதிலும், தன்னை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக, அவளது திருமண விடயத்தில் நடந்து கொண்டதாகத் தோன்றியதாலும், மகளின் செயலால்… உறவுகள் அனைத்தும் தன்னை கேலியாக பார்த்தது, பேசியதை அனைத்தும் நினைவில் வந்துபோக, இளகிய மனம் மீண்டும் இறுகியது.

 

வயது, தன்முனைப்பு இரண்டும் தனது தவறை ஒத்துக் கொண்டு கீழிறங்கி, மகளோடு சமாதானமாகச் செல்வதை விரும்பாது முரண்டியது.

 

தனக்குள் இருந்த மகளின் மீதான பாசம், மகளிடம் தனது மாற்றத்திற்கான காரணங்களைப் பற்றி விவரியாமல், இணக்கமாக இருக்கத் தூண்டியது.

 

இரண்டு மனம் இறைவன் தந்திட, இரண்டிற்கிடையே அல்லாடிய மனதோடு சென்னையிலிருந்தவர், அதற்குமேல் அங்கு தங்க இயலாது, மாற்றம் வேண்டி… வாரம் கடந்தபின் காரைக்குடிக்கு கிளம்பியிருந்தார்.

 

வந்தவர், நேரடியாக எதைப்பற்றியும் விசாரியாமல், சுற்றி வளைத்து மகனிடம் சில விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார்.

 

தானறியாத பல விடயங்களை மகன் மூலமாக அறிந்து கொண்டவர், சங்கரின் மருத்துவமனை விவரத்தை அறிந்து மனதிற்குள் வருந்தினார்.

 

எப்படி வளர்த்த பெண், மனதாலும், அலைச்சலாலும், உறவுகள் என்று அனைவரும் இருந்தும், தாங்கள் யாரும் அருகில் இல்லாமல் சங்கடப்பட்ட நிலையினை எண்ணி, காலம் கடந்து மகளுக்காக வருந்தினார்.

 

மனைவியிடம், மகளைப் பற்றிக் கேட்க மனிதருக்கு சற்றே சங்கோஜமாக இருந்தது.

 

ஆண்டுகள் கடந்தபிறகு, தமக்கையைப் பற்றிய தந்தையின் விசாரிப்பைக் கண்டு நந்தாவிற்குமே மகிழ்ச்சி உண்டாகியிருந்தது.

 

இனி தமக்கை தங்களோடு பேச, தங்க, எந்தத் தடையும் இருக்காது என்று உள்ளம் உவகை கொள்ள, தந்தை கேட்டதைப் பற்றி, தனிமை கிட்டிய வேளையில் தாயோடு அனைத்தையும் மறையாமல் பகிர்ந்து கொண்டிருந்தான் நந்தா.

 

புஷ்பாவிற்கு, மனம் சந்தோசத்தில் திளைத்தாலும், எதையும் தெரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் கணவர்முன் வளைய வந்தார்.

///////////

 

மோனிகா குழந்தைப்பேற்றிற்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடந்த இரண்டு மாதமாகவே வந்து செல்கிறாள்.

 

வரும்போது சங்கரது வீட்டில் வந்து, தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டுவிட்டு கிளம்புவாள்.

 

அதேபோல இந்த முறை தங்கள் வீட்டிற்கு வந்த மோனிகாவிடம் இலகுவாகப் பேசுவதற்கு சற்றே வருத்தமாக இருந்தது நவீனாவிற்கு.

 

தாங்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்வதை மோனிகாவிடம் தெரிவித்துவிட்டு, மரியாதைக்காக ‘நீங்களும் வாங்களேன் என்று அழைக்க முடியாத தனது நிலையை எண்ணி, அறையை விட்டே வராமல் அத்தியாவசிய பொருள்களை எடுத்து வைப்பதாகக் கூறி அறைக்குள் முடங்கியிருந்தாள் நவீனா.

 

கணவன் இன்னும் அதே நிலையில் இருந்து மாறாமல் இருப்பதைக் காலை முதலே கண்காணித்து வந்தாள் பெண்.

 

மற்றவர்களிடம் இனிமையாக, இதமாக உரையாடினாலும், அறைக்குள் இரும்புத் திரையிட்டு என்றுமில்லாமல் புதிதாக இன்று தன்னோடு மல்லுக்கு நிற்பவனை என்ன செய்ய என்று புரியாமல் பெண் தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அனைத்தையும் சமாளித்து, தன்னையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவனின் சாமார்த்தியத்தை பெண் மெச்சியபோதும், அதை மனதிற்குள் வைத்துக் கொண்டாள்.

 

தங்களது காரிலேயே மதிய உணவிற்குப்பின் கிளம்பியவர்கள் இரவு ஒன்பது மணிக்கு ஊட்டியை வந்தடைந்திருந்தார்கள்.

 

நண்பனின் எஸ்டேட்டில் தங்க இருப்பதாக முந்தைய தினம் கணவன் கூறியதைத் தவிர வேறு எதுவும் பெண் அறிந்தாளில்லை.

 

அங்கு எஸ்டேட் பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக இருந்த மூவரில் ஒருவர் பெண்.  சமையல் மற்றும் வீட்டுப் பராமரிப்பு அனைத்தையும் பார்த்துக் கொள்பவள்.

 

இரவு உணவை பணிப்பெண் தயாரித்து சூடாக எடுத்து வந்து தந்ததை உண்டுவிட்டு, ஊட்டிக் குளிருக்கு ஸ்வெட்டர் அணிந்து படுக்கைக்கு வந்தவள், பயணக்களைப்பால் ரஜாயை இழுத்து தன்மீது போட்டுக் கொண்டு உடனே உறங்கியிருந்தாள்.

 

முந்தைய தின கணவனின் பாராமுகம் மற்றும் பயணக் களைப்பு பெண்ணை அவ்வாறு அயரச் செய்திருந்தது.

 

வந்தது முதல் தங்க இடமளித்திருந்த நண்பனோடும், தாய் மற்றும் பண்ணையில் உள்ளவர்களோடும் பேசியபடியே, மனைவியை ஓரக்கண்ணில் கவனித்தவாறே பணியை துரிதமாக மேற்கொண்டவன், அறைக்குள் வந்தவன் கண்டது உறங்கியவளைத்தான்.

 

பெண்ணோடுடனான முந்தைய நாள் துவங்கிய ஊடலிலிருந்து, மீளச் செய்யும் தந்திரங்களோடு ஆசையாக படுக்கைக்கு வந்தவனை அறியாமல்… பெண் அயர்ந்திருந்தாள்.

 

இதுவரை என்றுமே பெண்ணைக் கடிந்து கொள்ளாதவன், முதன் முறையாகக் கடிந்து கொண்டதில் சங்கருக்கும் வருத்தமே.

 

பெண்ணிடம் முந்தைய தினமே இதமாக நடந்து கொண்டிருந்தால், தற்போது மொத்தக் குடும்பமும் தங்களைச் சுற்றி வழமைபோல, மதுரையில் இல்லாது ஊட்டியில் இருந்திருக்கும் என்பதை உணர்ந்தவன் பெண்ணிடம் போட்ட வேடத்தை கிளம்பும்வரை தொடர்ந்திருந்தான்.  கணவன் போட்ட நாடகமறியாதவள், களைப்பால் உறங்கியிருந்தாள்.

 

இரட்டைக் கட்டிலில், ஒரே ரஜாயிக்குள் சென்று மனைவியோடு நெருங்கிப் படுத்தவனுக்கு உறக்கமே வரவில்லை.

 

கடந்த இரு தினங்களாக, யோசனையோடு வலம் வந்த மனைவியை அப்படியே உறங்கவிட்ட வருத்தம், சங்கரை உறங்கவிடவில்லை.

 

அயர்ந்து உறங்குபவளை, எழுப்பி விடயத்தைக் கூறவும் விரும்பாது இதமான காலநிலையில், இதமில்லா மனதோடு மங்கையவளை பின்புறமாக அணைத்தபடியே உறங்க முயற்சித்தான்.

 

அணைப்பை உணராமல் உறங்குபவளை தொந்திரவு செய்யாமல், நீண்ட நேரத்திற்குப்பின் சிந்தனைகளுக்கு விடைகொடுத்து, உறக்கம் தழுவி உறங்க முற்பட்டிருந்தான் சங்கர். 

 

ஆழ்ந்த உறக்கம் கலைந்து எழுந்தவள், முதல் நாள் தனக்கு முதுகுகாட்டிப் படுத்தவன், தற்போது தன்னை பின்புறமாக அவன் மார்போடு அணைத்தபடியே உறங்குவதை  உணர்ந்தவள், திரும்பினால் எங்கு கணவனின் உறக்கம் கலைந்துவிடுமோ என்று அசௌகரியமாக உணர்ந்தபோதும், சிறு அணக்கத்தோடு பழைய நிலையில் மீண்டும் உறக்கத்தைத் தொடர விழைந்தாள்.

 

பெண்ணின் அணக்கத்தில் எழுந்தவன், அசதியில் உறக்கம் கண்ணைக் கட்டிய போதிலும், முன்பைக் காட்டிலும் பெண்ணோடுடனான அணைப்பை இறுக்கி தன்னை உணர்த்தினான்.

 

“ம்ம்ம்ஹூம், நவீனா

 

“என்ன ம்ஹூம் சங்கர்

 

“(BONE)போனெல்லாம் பெயினாகுது

 

“ஆகட்டும்…, என்று அந்த நேரத்திலும், குதூகலமாகக் கூறியவன்,

 

“ஏன் நான் வரதுக்குள்ள தூங்கிட்ட?, என ஏக்கம் நிறைந்த குரலில் வினவினான் சங்கர்.

 

எதையும் கண்டு கொள்ள இயலாமல், “அதுக்கு…, என்றவள் கணவனின் அணைப்பைக் காட்டி, “இது பனிஷ்மென்ட்டா…

 

“நான் ஹக் பண்ணுறது உனக்கு பனிஷ்மென்ட்டாடீ!

 

கணவனின் பேச்சைக் கண்டு, அடுத்த போருக்கு தான் ஆயத்தமாக இயலாது என்பதை உணர்ந்தவள், “… அமைதியாகி இருந்தாள்.

 

“வீனா…

 

“…

 

“வீனா… முன்னைக் காட்டிலும் சத்தமாக அழைத்தான்.

 

“என்ன?

 

“எம்மேல கோபமா?

 

“…

 

“அப்ப கோபந்தான்!”, பெண்ணின் அமைதியில் தானாகவே பதில் கூறினான் சங்கர்.

 

“….

 

“சாரிடீ!”, என காதுமடலை உதடுகளால் உரசியவாறே கூறினான்.

 

பெண்ணிற்குள் எழுந்த சிலிர்ப்பால், மனம் சிம்லாவையே மிஞ்சியது.

 

“சாரி சொல்ல நல்ல நேரம் பாத்தீங்க… பேசாம தூங்குங்க”, பெண் நிலைமை உணர்ந்தாலும், உணராதவள்போல ஒப்புக்கு கூறினாள்.

 

“எனக்குத் தூக்கம் வரலைடீ”, என்று பெண்ணைத் தன்னை நோக்கி வலுக்கட்டாயமாக திருப்பியவன்

 

“அப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்க!”, என்ற பெண்ணின் கேள்வியில்

 

“தூங்க ட்ரை பண்ணிட்டே இருந்தேன்!, என்று கண்ணை சிமிட்டினான்.

 

“இனிதான் எதாவது பண்ணணும், என்ற சங்கரின் உறவுக்கு முந்தைய உபசரிப்பான பேச்சை கண் சிமிட்டாது பார்த்திருந்தாள்.

 

“…, ‘ரெண்டு நாளா என்னைய கிறுக்காட்டிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசற பேச்சைப் பாரு, நவீனா

 

மனைவி அமைதியாக இருக்கக் கண்டவன், “உனக்குத் தூக்கம் வருதா?, சங்கர்

 

“தூங்கனவளை எழுப்பி தூக்கம் வருதானு கேட்டா என்ன சொல்ல?, வீனா சற்றே எரிச்சலோடு வினவ

 

“எனக்கு உங்கிட்ட பேசனுமே!”, காரியத்தில் முனைந்தான்.

 

“இவ்வளவு நேரம் வேற என்ன பண்ணிட்டு இருக்கீங்க”, நறுக்கெனக் கேட்டது பெண்.

 

“இன்னும் ஆரம்பிக்கலை… பேசுவமா?”, வேண்டாமென்றாலும் விடமாட்டான் என்பது தெரிந்து, பெண் அடுத்த கட்ட பேச்சைத் துவங்கியிருந்தாள்.

 

“நேத்தெல்லாம் முகத்தை தூக்கிவச்சிட்டே இருந்துட்டு இப்பமட்டும் என்ன பேசப் போறீங்க?, என்று குரலில் வருத்தத்தோடு பேசியவளை

 

“நீயே என்னைப் புரிஞ்சிக்கலைனா… வேற யாருடீ புரிஞ்சிக்குவா?”, என்று நெற்றியில் இதமாக இதழ் பதித்தவனை

 

என்ன நடிப்புடா சாமி என்று மனதிற்குள் நினைத்தவாறே கணவனைப் பார்த்திருந்தாள்.

 

“புக்கு போடுங்க… படிச்சி புரிஞ்சிக்க ட்ரை பண்றேன், என வருத்தம் நிறைந்த பெண்ணின் குரலில் சங்கருக்குமே வருத்தம் வந்திருந்தது.

 

பெண்ணின் வருத்தம் சங்கரை சங்கடத்தில் ஆழ்த்த, அதைப் போக்க, நீண்டதொரு இதழ் முத்தத்தால் பெண்ணின் உணர்வுகளை தனக்கு சாதகமாக்க முயன்றான்.

 

முதலில் இளகாமல் இருந்தவள், நேரம் செல்லச் செல்ல கணவனின் அணுகுமுறையில் சற்றே உருகத் துவங்கியிருந்தாள்.

 

பெண்ணைப் படித்தவன், இனி பெண் தான் பேசுவதைக் கேட்க தயாராகிவிடுவாள் என்பதை உறுதிசெய்ததோடு, இதழ் வழி இளைப்பாறலுக்கு இடைவெளி விட்டான்.

 

“உன்னைக் கஷ்டப்படுத்தறேனா?”, சங்கர்

 

தலையை மறுத்து அசைத்தவளைக் கண்டு, “மேரேஜ் ஆனதிலேருந்து, இன்னிக்கு வர… தூங்கின நேரம் போக எனக்காக நீயும், உனக்காக நானும் ஒதுக்கின நேரம்னு… உன்னால குறிப்பிட்டு ஒரு ரெண்டு மணி நேரத்தைச் சொல்ல முடியுமா?”, மனம் திறந்து பெண்ணிடம் கேட்டான்.

 

சற்று நேரம் யோசித்தவள் , மீண்டும் மறுத்து தலையை அசைக்க…

 

“உனக்கு படிப்பு, எனக்கு காலேஜ், பண்ணை அப்டி, இப்டினு நேரம் போகுதே தவிர, நமக்குன்னு தனியா உக்காந்து பேசியோ, சிரிச்சோ இருந்த நேரம்னு ஒன்னு இதுவரை இருந்ததா எனக்கு ஞாபகமில்லை.  இப்பதான் படிப்பு அப்புறம் என்ரன்ஸ் எல்லாம் முடிஞ்சு நீ ஃபீரி ஆகிருக்க.  அடுத்து கவுன்சிலிங்ல உனக்கு பிஜி கிடைச்சா அடுத்து பழையபடி ஓட ஆரம்பிச்சிருவ… எதுக்கு இவ்ளோ தூரம் நிக்காம ஓடறோம்.  இப்டியே போனா நம்ம வாழ்க்கைய எப்ப வாழுவோம்?, என்று உணர்வு பூர்வமாகக் கேட்டவனின் மார்போடு, நெருங்கி தனது தலையைச் சாய்த்து முன்பை விட நெருங்கி தன்னவனை அணைத்துக் கொண்டாள் நவீனா.

 

“எல்லாம் இருந்தும் ஏன் நாம ஓடறோம். கமிட்மென்ட் வச்சிட்டு ஓடப் பழகிட்டோம்.  இந்த ஓட்டத்துக்கு நடுவிலயும், நமக்காக பிரைவஸியோட கொஞ்சம் நேரம், நாள் இப்டி செலவழிக்கனும்னு நான் நினைச்சது தப்பா?, நீண்டதொரு விளக்கத்தோடு கூடிய வினாவைக் எழுப்பியவனிடம்

 

நிமிர்ந்து முகம் பார்த்தவள், “தெரியாம ஏதோ கேட்டுட்டேன்.  இனி அப்டிக் கேக்க மாட்டேன்னு நேத்தே சொல்லிட்டேன்”, சரணடைந்தாள் மீண்டும் நவீனா.

 

“உனக்கு இப்டியெல்லாம் தோணலையா?”,  தன்னவளுக்கு தன்மீதான எதிர்பார்ப்பை அறிந்து கொள்ளும் ஏக்கத்தில் கேட்டான்.

 

“தோணுச்சு… அப்ப நான் ஸ்கூலிங்ல இருந்தேன், கிட்டயே வரவிடாம விரட்டுனீங்க!”, குற்றம் சுமத்தினாள் நவீனா,

 

“இப்ப…?

 

தன்னவனைப் பார்த்து, “அதல்லாம் தெரில!, என்ற பரிதாபமாகக் கூறியவள், மீண்டும் கணவனின் மார்போடு முகத்தைப் புதைத்துக் கொண்டு,

 

“என்னைய விட்டுட்டு அப்பப்பே ஊருக்கு போறது, இப்ப இரண்டு நாளா என்னைய அவாய்ட் பண்ணது, இப்டி சிலதைத்தான் என்னால தாங்க முடியல..”, ஏனோ அழுகை வந்தது பெண்ணுக்கு.

 

அதற்குமேல், “இனிமே அப்டி நடக்காது, என்று உறுதி கூறியவன் பெண்ணை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“அடுத்தடுத்து கமிட்மெண்ட் கூடிட்டே போகும்.  அடுத்து இதுபோல எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம இப்டி வந்து தங்க… வாய்ப்பு இருக்குமா?  இந்தத் துடிப்பு, எதிர்பார்ப்பு எதுவும் இருக்கும்னு சொல்ல முடியுமா?, என்றவன்

 

“ஆனா… ரன்.. ரன்னு ஓடி… ஓய இன்னும் முப்பது வருசம் ஆகும்.  நோயோட, முதுமையோட போராடற வேளையில என்னத்தை அனுபவிக்க இவ்வளவு தூரம் வரப்போறோம்? எல்லாத்துக்கும்மேல அதுக்குள்ள யாருக்கு என்னனு எப்டி சொல்ல முடியும்?”, என்று கேட்டவனின் வாயை, தனது கை கொண்டு மூடியவளின் உள்ளங்கையில் முத்தமொன்றைப் பதித்தான்.

 

கணவனின் ஆசைகளை அவன் கண்ணோக்கியவாறு கேட்க துவங்கி இருந்தாள்.

 

“எனக்கு நிறைய ஆசை இருக்கு.  உன்னை எப்டியெல்லாம் வச்சிக்கனும்னு கனவு இருக்கு.  அதுல நீயும் நானும் மட்டுந்தான் இருக்கோம். இருப்போம்.  புள்ளைங்க வந்திட்டாலும்… அவங்களோட இடம் வேற.. எதையும் குழப்பிக்கக் கூடாது.  தெளிவா இருக்கனும், என்றவனின் பேச்சைக் கேட்டபடியே

 

“ரெண்டு நாளா காலேஜ் போகலைன்னா நானா கிடைச்சேன், என்றவளின் உதட்டை தனது பற்களால் இதமாகக் கடித்தவனை, வலியில் தள்ளி விட்டாள் பெண்.

 

ஆனாலும் விலகாமல் விடாது பேசினான். “வறண்ட பாலைவனமா நான் வாழ்ந்த வாழ்க்கையில வசந்தமா வந்த நீ, என்னோட கடைசி மூச்சி வரை கூட வரணும்னு நினைக்கிறேன்.

 

உன்னோட, என்னோட கமிட்மெண்ட்ஸ் தனியா இருந்தாலும், நம்ம கமிட்மெண்ட்ஸ்ஸை சேந்தே சரிவரச் செய்ய நீ எனக்கும், நான் உனக்கும் ஒத்தாசையா இருக்கனும்.  அப்பதான் நீயும், நானும் நம்ம கமிட்மெண்ட்ஸோட, நம்ம லைஃபையும் பீஸ்ஃபுல்லா கொண்டு போக முடியும், என்று நீண்டதொடு விளக்கத்தைத் தர

 

அமைதியாக அனைத்தையும் கேட்டவள்,

 

“கல்யாணமாகி வருசங்கடந்து இப்டிக் கிளம்பி வரும்போது, உங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.  ஆனா அப்டி வந்த என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?, என்று கணவனிடமே கேட்டாள்.

 

“என்ன நினைச்ச என்ன? ஆயிரம் பேரு ஆயிரம் சொல்லுவாங்க. நினைப்பாங்கனு.. பாத்துகிட்டு,  ஒவ்வொருத்தவங்களுக்கும் போயி பதில் சொல்லிட்டா தெரிய முடியும்.  நம்ம வாழ்க்கைய நாம பிரியப்படற மாதிரி வாழ்ந்துட்டு போகனும். 

 

மோனிகாவுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருசமாச்சு.  அவங்களை இப்ப நம்மகூட கூட்டிட்டு வந்து நல்லபேரு வாங்கனும்னு நினைக்கறது மடத்தனம்.

 

எங்க போகப் பிரியப்பட்டாலும் எல்லா செலவையும் ஏத்துக்கறேன்னு சொல்லியும், எங்கயும் போகாம வாங்குன காச பேங்க் அக்கவுண்ட்ல போட்டுட்டு இருக்கறவங்களைப் பத்தி நாம எதுக்கு தேவையில்லாம யோசிக்கனும்?, என்று சங்கர் பேச

 

“அவ நம்ம வீட்டுக்கு வரலைனா எனக்கு ஒன்னும் தோணாது.  அவ இங்க வந்திருக்கும்போது உங்களோட கிளம்பி வந்தது ஒரு மாதிரியா இருந்தது, என்று தனது மனத்தோன்றலை நவீனா கூற

 

“ஏய், நான் உம் புருசன்டீ… எங்கூட வர உனக்கு ஒரு மாதிரியா இருந்ததுங்கற வார்த்தை இனி எப்பவுமே சொல்லாத…! யாரு என்ன நினைச்சாலும் புருசங் கூப்பிட்டா, கூட போறதுதான சரி…!

 

எனக்கு, உன்னை எங்கூட கூட்டிட்டுப் போக ஒரு மாதிரியா இருக்குனு சொன்னா உனக்கு எப்டிடீ இருக்கும்?, என்று பெண்ணிடமே காட்டமாக தனது கேள்வியை வைத்திருந்தான்.

 

“வருத்தமாத்தான் இருக்கும்.  சரி அந்தப் பேச்சை இத்தோட விட்ருவோம், என்று பெண் சமாதானமாகி கணவனைத் அணைத்துத் தேற்றிட

 

“அப்ப… வந்த வேலைய ஆரம்பிப்போமா?, சங்கர்

 

பெண்ணும் இதமாகச் சிரித்தபடியே இதமான இதழொற்றலுடன் தனது சம்மதத்தைக் கூற, இனிமையாக துவங்கியது மோகலீலை.

 

ஊட்டிக் குளிருக்கு ரஜாயை மீறியும் தோலைத் துளைத்த உணர்விற்கு, இருவரின் உடல் வெப்பமும் ஒருவருக்கொருவர் இதத்தைத் தந்திட, மனமொத்திட்ட நிலையில் கூடலைக் கண்ட மஞ்சம் இதுவரை காணாத காட்சியைக் கண்டதாக இறுமாந்தது.

 

அமைதியான சூழலில், இதமான காலநிலையில், உரிய உறவுடனான நிதானமான கூடலின் சிறப்பினை வார்த்தைகளுக்குள் கொண்டு வர இயலாது.

 

சிற்றின்பம் இந்த நிலையில் சுவை கூடிப் போகும்.

 

அறுபத்து நான்கு வகை கூட்டோடு உண்ணும் விருந்தைக் காட்டிலும் அலாதி சுவை.

 

உலகின் நறுமணங்களைக் காட்டிலும் மணம் மிகுந்தது.

 

ஐம்புலன்களோடு, ஆன்ம நிறைவும், உலகையே சாதித்த நிறைவும் கிட்டும் தருணமிது.

 

பருவ வயதைக் காட்டிலும், வயது கூடக்கூட நிதானம் கூடி, முழுமையான நிறைவைத் தருவது.

*

நாளும் பொழுதும் ஓடியதே தெரியாமல், இயற்கையை ரசிப்பதா? காமனைத் துதிப்பதா? என்று குழப்பமின்றி, ‘நீயும் நானும் அன்பேஎனும் மந்திரத்தைத் தவிர, வேறு எதையும் சிந்தியாது, களித்து, களைப்பையும் மீறிய களிப்போடு, கூடுதலான புரிதலோடு, நிறைவாக ஊட்டியிலிருந்து திரும்பியிருந்தனர்.

 

//////

 

எதிர்வரும் நாளில் மகளோடுடனான இணக்கமான உறவு விரைவில் உறுதிப்படும் என்ற நம்பிக்கை, கணவரின் பேச்சு, செயலில் புஷ்பாவிற்கு வந்திருக்க, அதன்பின் வந்த நாளில் சசிகலாவிடம் பேசினார்.

 

நலம் விசாரிப்பிற்கு பிறகு, “எதுவும் விசேசமில்லையா அண்ணி?, என்று மகளைப் பற்றி மறைமுகமாகக் கேட்க

 

“நீங்களே அதுகிட்ட பேச வேண்டியதுதான அண்ணி, என்று கூறியவர், “ரெண்டு வருசமாகட்டும்னு சொல்லிச்சு நம்ம நவீனா.  அதுக்கப்பறமா நாங்களும் எதுவும் கேட்டுக்கலை… விசேசம்னா உங்ககிட்டச் சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறேன், என்று சசிகலாவும் தனது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

வெற்றியின் மாறுதல்களைப் பற்றி எதுவும் கூறாமல், “வயசு போகுதுல அண்ணி, காலா காலத்துல பெத்துக்கிட்டா… நாமளே வளத்து விட்ருவோம், என்று புஷ்பா பேச

 

“ஆமா அண்ணி, அதத்தான் அத்தையும் சொன்னாங்க…  உங்க மருமயந்தான் அதுக்கு படிப்பு முடியற வரை எதுவும் பேசாதிகன்னு சொல்லி வாயடைச்சிட்டான்”, சசிகலா

 

“அதான் படிப்பு முடிஞ்சிருச்சே… இன்னும் என்னவாம், என்று புஷ்பா தனது பங்கிற்கு எடுத்துக் கொடுக்க…

 

அன்னம்மாள் மூலமாக அனைவரின் எதிர்பார்ப்புகளும், உரியவர்களிடம் பகிரப்பட்டது.

 

சங்கருக்கும் வயது முப்பதுக்குமேல் ஆவதை அன்னம்மாள் குறிப்பிட, அதற்குமேலும் தங்களது விருப்பம்போல நாட்களைத் தள்ள முடியாத நிலை நவீனா, சங்கர் இருவருக்குமே.

 

அதற்கிடையே பெண் விரும்பிய முது மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தாள்.

 

பெண் பொது மருத்துவம் பயில விரும்பியது போலவே மதுரையிலேயே படிக்க இடம் கிடைத்து, மீண்டும் கல்லூரி செல்லத் துவங்கியிருந்தாள்.

 

அடுத்த மூன்றாம் மாதத்தில் நவீனா சூலுற்ற நற்செய்தியைக் கேட்டு அனைவருமே மகிழ்ந்திருந்தனர்.

 

புஷ்பா, வெற்றி இருவரும் தனது மகள் சூலுற்ற செய்தியறிந்து என்ன செய்தார்கள்… அடுத்த பதிவில்