KarisalKattuPenne16(1)

கரிசல் காட்டுப் பெண்ணே 16(1)

 

ஊர் வாயை மூட முடியுமா என்ன? அரிதான காரியம் தான். ஆனால் சாதித்து இருந்தான் ஸ்ரீராம்.

சீதாவையும் அவனையும் பற்றி இஷ்டபடி இட்டு கட்டி பேசிய வாயெல்லாம், கீர்த்தி, ஸ்ரீராமை ஜோடியாக பார்த்ததும் தானாய் அடைத்துக் கொண்டன.

கீர்த்திவாஷினியின் நாகரீக தோற்றமும், அவளின் துறுதுறு பேச்சும், இருவரும் கைக்கோர்த்து, ஊர் முழுக்க சுற்றி திரிவதும் அந்த கிராமத்து மக்களை மொத்தமாக கட்டி போட்டிருந்தது.

மறுபுறம் சீதாமஹாலட்சுமியின் நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்தேறிக் கொண்டிருந்தன. மரகதம், சங்கரன் தம்பதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் நேராக சென்று மகளின் நிச்சய விழாவிற்கு அழைப்பு விடுத்து வந்திருந்தனர்.

காலையில் இருந்தே விழாவிற்கான வேலைகள் தொடங்கி இருந்தன.
மரகதம் உறவுக்கார பெண்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்க, சங்கரன், ஸ்ரீராம் வெளி வேலைகளை கவனித்தப்படி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

நிச்சய தேதி குறிக்கப்பட்டதில் உற்றார், சுற்றார் என அனைவரின் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்து சீதாவின் முகமும் தன்னால் புன்னகையைப் பூசிக் கொண்டது.

ஏனோ இந்த திருமணத்தை மறுக்கும் எண்ணம் அவளுக்கு இதுவரை எழுந்ததில்லை. அதைப்பற்றி யோசிக்கும் வாய்ப்பு அவளுக்கு தரப்படவில்லை என்று சொல்ல வேண்டுமோ!

அந்த கிராமத்து வழக்கப்படி மாலை ஆறு மணியளவில் நிச்சய நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

சீதாவை தேடி அவளின் அறைக்குள் வந்த ஸ்ரீராம் ஒரு நொடி திகைத்து, பின் தலையில் அடித்துக் கொண்டான். அங்கே கீர்த்திக்கு சீதா பின்னலிட்டு கொண்டிருந்தாள்.

“ஹே என்ன நடக்குது இங்க?” அவன் கேட்க, துள்ளி எழுந்த கீர்த்தி, “நான் எப்படி இருக்கேன் ஸ்ரீ?” என்று தன்னை ஒருமுறை சுற்றி காட்டினாள்.

அடர் சிவப்பு நிறத்தில் இளமஞ்சள் பூக்கள் விரைந்து இருந்த பட்டுசேலையில், கைநிறைய கண்ணாடி வளையல்கள், காதில் ஜிமிக்கி கம்மல், கழுத்தில் அட்டிகை, தளர்வான பின்னலில் கனகாம்பரம் மலர்சரம், நெற்றியில் வட்ட பொட்டு என அவள் முற்றிலும் மாறி நிற்க, அவளை மேலும் கீழுமாக பாரத்தவன், “என்ன டெடி திடீர்னு அழகா தெரியுற” புருவம் உயர்த்தி கேட்க, “உன்ன போய் கேட்டேன் பாரு, போடா இடியட்” இரண்டு அடிகள் அடித்து அவனை முறைத்து நின்றாள்.

“சீதாவ ரெடி பண்ண சொன்னா, நீ ரெடியாகி நிக்கற? எங்கேஜ்மென்ட் உனக்கா இல்ல அவளுக்கா?” அவனும் முறைக்க, சீதா அவர்களை விழிகள் விரிய பார்த்து நின்றாள்.

“கீர்த்தி அக்காவ திட்டாத சின்னா, நான் தான் நல்லாயிருக்கும்னு சேலை கட்டி விட்டேன், பாரேன் அம்மன் கோயில் சிலை மாதிரி எவ்வளவு அம்சமா இருக்காங்க” சீதா ரசனையாக சொன்னாள். உண்மையில் சேலையில் கீர்த்திவாஷினி அத்தனை அழகாக மிளிர்ந்தாள்.

“சரிதான், இவளுக்கு சேலை கட்டி விடுறது ரொம்ப முக்கியமா பாப்பு? இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்திடுவாங்க, நீ இன்னும் தயாராகாம இருக்க” அவன் துரிதப்படுத்த,

“இதோ நான் பத்து நிமிசத்துல தயாராயிடுவேன் சின்னா” சீதா சமாதானம் சொன்னாள்.

“மஹாவ ரெடி பண்றது என் பொறுப்பு, உனக்கு என்ன இங்க வேலை” கீர்த்தி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, “பாப்புக்கு பிரசன்ட் கொடுக்க வந்தேன், தள்ளு” என்றவன், பையிலிருந்த பரிசு பொருளை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதைப்பார்த்து கீர்த்தியின் விழிகள் ரசனையாக விரிய, சீதாவின் உள்ளம் நெகிழ்ந்து போனது.

நுணுக்க வேலைப்பாடுகளோடு தன்னை மறந்து உருகி பாடியபடி அமர்ந்திருந்த மீராவின் வெண்கலச் சிலை அது!

“வாவ் பியூட்டிஃபுல்” கீர்த்தி பாராட்ட, “உனக்கும் பிடிச்சிருக்கு தான சீதா?” ஸ்ரீராம் வினவினான்.

அந்த சிலையை மென்மையாக வருடியவள், “ரொம்ப நல்லாயிருக்கு சின்னா, தேங்க்ஸ்” என்றாள் மென்னகை விரிய.

“எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் பாப்பு” என அன்பாக சொன்னவன், கீர்த்தியிடம் சீக்கிரம் என பார்வை காட்டிவிட்டு வெளியேறினான்.

# # #

பகலோடு இரவு கைக்கோர்க்கும் நேரம்!

வாசலில் வாழைமரம், அலங்கார பந்தல், மலர் தோரணம், சீரியல் விளக்குகளின் வண்ண ஒளி என சங்கரன் வீடு விழா கோலம் பூண்டிருந்தது.

கிராமத்து வழக்கப்படி மாலை தாண்டிய இரவு பொழுதில் நிச்சயதார்த்த விழா முடிவாகி இருந்தது.

பெரிய பெரிய பாத்திரங்களில் விருந்து வகைகள் தயாராகி கொண்டிருக்க,‌ ஆண், பெண், குழந்தைகள் என விருந்தனர்களின் பேச்சு, சிரிப்பு, கூச்சல் என சந்தோச ஆர்பரிப்புக்கு இடையே, மாப்பிள்ளை வீட்டார் வரவும், விழா களைக்கட்டியது.

இளநீல நிற முழுக்கை சட்டை, அடர் வெந்தைய நிற பேண்ட் அணிந்து, கையில் தங்க பிரேஸ்லெட், கழுத்தில் தங்க சங்கிலி மின்ன, காரிலிருந்து இறங்கிய ராமகிருஷ்ணனை பெண் வீட்டார் முறைப்படி அழைத்து கூடத்தில் நாற்காலியில் அமரவைத்தனர். மாப்பிள்ளை நிமிர்வோடு அமர்ந்தவன் முகத்தில் திருமணகளை ஜொலித்தது.

“மாப்பிள்ள வந்தாச்சு பொண்ண அழைச்சிட்டு வாங்க” யாரோ குரல் கொடுக்க,

சந்தன பட்டில், தங்க ஆபரணங்கள் அணி செய்ய, பூரண அலங்காரத்தில் மிளிர்ந்த மெல்லியளை அழைத்து வந்து கூடத்தின் மறுபுறம் சேலத்து ஜமுக்காளம் விரிப்பில் அமர வைத்தனர். தாழ்ந்த தலை நிமிராது சீதா உட்கார்ந்து கொண்டாள்.

கல்யாணத்திற்கு முன்பு பெண்ணையும் பிள்ளையையும் அருகே அமர வைக்கும் வழக்கம் இல்லை என்பதால் இருவருக்கும் தனித்தனியே சந்தன நலங்கு வைக்கப்பட்டது.

இரு குடும்பத்து மூத்த பெரியவர்கள் இருவர் மத்தியில் அமர்ந்து, ‘பெண் எனது, பிள்ளை உமது, பிள்ளை எனது, பெண் உமது’ என்று முறைப்படி வாக்கு கொடுத்து வெற்றிலைபாக்கு மாற்றி கொண்டு உறுதி கூறினர்.

அவ்வளவே தான் நிச்சயம் உறுதிப்படுத்தப்பட்டது.

“அவ்ளோ தானா எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதா?” கீர்த்தி, ஸ்ரீராமிடம் கிசுகிசுக்க, “வில்லேஜ்ல எல்லாம் இப்படி தான் டேடி” அவன் பதில் தர, “பாட்டு, டேன்ஸ்னு எந்த என்ஜாய்மென்டும் இல்ல சுத்த போர், உன் ஊர்” வெளிப்படையாக சலித்து கொண்டாள்.

சக்திவேல் காதில் ஏதோ சொல்லி அனுப்பிவிட்ட ஸ்ரீராம், “நீ கேட்ட பாட்டு இப்ப வரும் பாரு” என்றான்.

அனைத்து முகங்களிலும் சந்தோசமும் நிம்மதியும் தெரிய, கோதாவரி சீதாவின் அருகில் வந்து அமர்ந்து அவளின் கன்னம் வழித்து அணைத்து கொண்டார்.

சக்திவேல், கோதாவரி காதில் வந்து சொல்லிச் செல்ல, தன் மகனை ஒருபார்வை பார்த்துவிட்டு தயங்கினார்.

“என்ன கோதாவரி, இன்னும் மருமவள கொஞ்சிட்டு கிடக்குற, நாலு கேள்விய கேட்டு அவள முழி பிதுங்க வைக்க வேண்டாமா” ஒரு உறவுக்கார மூதாட்டி எடுத்து விட,

“அட போ ஆத்தாயீ, என் மருமவள நான் செல்லம் கொஞ்சுக்குவேன், உள்ளங்கையில தாங்கிக்குவேன்” கோதாவரியும் பதில் பேச,

“சரிதான், நீயே கொஞ்சுகிட்டா உனக்கு எப்படி பேர புள்ள வருமாம்” அவர் வம்பை விடாமல் வளர்க்க, சபை முழுவதும் சிரிப்பு சத்தத்தில் கலகலத்தது.

“ஏத்தி கூறு கெட்ட சிறுக்கி, என்ன பேச்சு பேசுத நீ” என்று அடக்கிய இன்னொரு பாட்டி, “ஏத்தா கோதாவரி சீதைய ஒத்த பாட்டு படிக்க சொல்லுத்தா, நாங்க காது குளிர கேப்போமில்ல” என்றார். அவரின் பின்னோடே பல குரல்கள் எழ, ராமகிருஷ்ணன் சரியென்று ஆமோதித்து தலையசைத்தான்.

“பாடு சீதாம்மா” கோதாவரி சொல்ல தலை நிமிர்ந்தவள், “என்ன பாட அத்த?” என்று சிறுகுரலாய் வினவினாள்.

அவளின் நினைவுகள் எல்லாம் வெற்று தாளாய் அழிந்திருக்க, இந்த நேரம் பார்த்து எந்த பாட்டும் அவளுக்கு நினைவில் வரவில்லை.

“இங்கன பாட்டுக்கா தாயீ பஞ்சம், நல்லதா ஒரு பாட்ட எடுத்துவிடு” பவுனு பாட்டி பதில் தர,

“எதுவும்… ஞாபகத்துல வரல…” என்றாள்.

“அந்த ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும், சீதா தேவிக்கும் நடந்த கல்யாணத்தை பாடு சீதா… தெய்வங்களே மண்ணுல இறங்கி வந்து திருமணம் செஞ்கிட்ட வைபவத்தை பாடேன்… அங்க பூவெல்லாம் கூட கொண்டாடி தீர்த்துச்சாம், பார்த்தவங்க கண்ணெல்லாம் ஆனந்த கண்ணீரா வழிஞ்சதாம், சீதா,‌ ராமன் கல்யாண கோலத்தை பார்க்க ரெண்டு கண்ணு போதலையாம்…‌” கோதாவரி வழக்கம் போல ராமயணத்தை ஆரம்பிக்க, அவர் சொன்னவைகளை உள்வாங்கிக் கொண்டு கண்களை மூடி வார்த்தைகளை கோர்க்க முயன்றாள்‌ சின்னவள்.

சக்திவேல் அவள் கையில் வீணையை எடுத்து வந்து தந்தான்.

அவளின் மனக்கண்ணில் தெய்வாம்சமாய் சீதைராமனின் திருமணக்கோல காட்சி நின்றது!

இவளின் விரல்கள் வீணை தந்திகளில் சுவரங்களை கூட்டின. அவளின் தேன் குரலில் ஆத்மார்த்தமாய் பாட தொடங்கினாள்.

“சீதா, ராமன் கல்யாணம்…

பூக்களுக்கெல்லாம் கொண்டாட்டம்…

வீதிகள் தோறும் தேரோட்டம்…

விழிகளில் ஆனந்த நீரோட்டம்…

சீதை மீது கொண்ட காதலினால்

ராமனும் வளைத்தான்

வில்லினையே

ராமன் மீது கொண்ட அன்பினிலே

தன்னிலை மறந்தாள் சீதையுமே

ஸ்ரீ ராமன், பரந்தாமன்

அம்சம் அன்றோ…

சீதை, திருமகளின்

வடிவம் அன்றோ…

சீதாராமன்…

கல்யாண கோலம்…

கண்கோடி வேண்டும்…

கண்டிட யாரும்…”

பாடல் முடிந்தும் அந்த கூடம் முழுவதும் நிசப்தமாகவே இருந்தது. அவளின் தெய்வீக குரலில் பக்திசுவை சொட்ட அவள் பாடிய முறையும், உணர்ச்சி மிகு வார்த்தைகளும் கேட்பவர்களை ஒருநொடி கட்டிப்போட்டிருந்தன.

பாடி முடித்து கண்களை திறந்தவளின் இமையோரமும் ஈரம் துளிர்த்திருந்தது. அனைவரின் அமைதியை அவள் மிரட்சியோடு பார்க்க, ஸ்ரீராம் பாராட்டாக புருவம் உயர்த்தி கைகளைத் தட்டினான். அவன் பின்னோடே எழுந்த கரவொலிகள் அடங்க நேரமானது.

ராமகிருஷ்ணனின் புருவங்கள் நெற்றி மேடேறி இருந்தன. சீதா இத்தனை அற்புதமாக பாடுவாள் என்று அவனும் இதுவரை நினைத்திருக்கவில்லை. தன்னையும் மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தான்.

“உன் பாட்டுல அப்படியே ராமன், சீதா கல்யாண காட்சி எங்க மனக்கண்ணுல கொண்டு வந்துட்ட தாயீ, நல்லா பாடுறம்மா, மகராசியா இரும்மா” பெரியவர் ஒருவர் வந்து பாராட்டி ஆசி வழங்க, நன்றி இழையோட சிறிய புன்னகை தந்து தலைதாழ்த்தி கொண்டாள்.

கோதாவரி அவளை அணைத்து உச்சி முகர்ந்து பாராட்டினார்.

விருந்து தடபுடலாக ஆரம்பிக்க, கூட்டமும் மெல்ல மெல்ல குறைய துவங்கியது.

இரவு ஏற நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்திருக்க, விருந்தும் முடிய வாழ்த்துச் சொல்லி மற்றவர்களும் கிளம்பி இருந்தனர்.

கோதாவரி, குலோத்துங்கனும் நிறைவோடு அனைவரிடமும் விடைப்பெற, ராமகிருஷ்ணன், சீதாவிடம் சொல்லி வருவதாக அவளறைக்கு வந்தான்.

“ரொம்ப அழகா பாடின மஹா, உன்னோட வாய்ஸ்ல அப்படியொரு மெஸ்மரிஸிங் ஃபீல்…” என்று கீர்த்திவாஷினி சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தவள், ராமகிருஷ்ணன் வரவை உணர்ந்து அவர்களுக்கு தனிமை தந்து விலகினாள்.

அதுவரை புன்னகை மலர்ந்திருந்த சீதாவின் வதனம் ராமகிருஷ்ணனை கண்டதும் தன்னால் பயத்தை பூசிக்கொள்ள, தயக்கமாக எழுந்து நின்றாள்.

“இவ்வளவு நேரம் நல்லாதான இளிச்சிட்டு இருந்த என்னை பார்த்தும் ஏன் இப்படி உம்முணாமூஞ்சி மாதிரி சீன் காட்ற?” என்று அவன் சீண்ட, அவள் இன்னும் தனக்குள் ஒடுங்கினாள்.

சந்தன பட்டிலும் தங்க அலங்காரத்திலும் சீதாமஹாலட்சுமி இன்று அவன் பார்வைக்கு பேரழகாகவே தெரிந்தாள். அவளின் அழகில் இவனுக்குள் தாபம் தலைத்தூக்க, தனக்கானவள் என்ற உரிமையுணர்வில் அவளை நெருங்க முயன்றான்.

அவள் பதற்றத்துடன் விலகி பின்னால் நகர, அவளின் மேல் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “இன்னும் எதுக்கு பயந்து ஓடற? இப்பதான் நமக்குள்ள நிச்சயம் முடிஞ்சாச்சு இல்ல” என்று அவள் முகம் நோக்கி தாழ்ந்தான்.

முதலிலேயே பயந்து இருந்தவள், அவன் நெருக்கத்தில் மொத்தமாக வெளவெளத்து நடுக்கம் பரவ, “வே… வேணாம்… வி… விடுங்க” அவள் உடைந்த குரலில் கெஞ்சிட,

“இப்ப எதுக்கு அழற? கொஞ்ச நேரம் அமைதியா இரு போதும்” என்று அவளிடம் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைந்தவன், அவளின் மன நிலையையும் உடல் மொழியையும் புரிந்துக் கொள்ள தவறி இருந்தான்.

ஒருவித சகிக்கவியலாத மனநிலையிலும் தீவிர பயத்தின் நடுக்கத்திலும் அவனுக்கு உடன்பட மறுத்து பெண்ணவள் முரண்டு பிடிக்க, இவனுக்குள் சுறுசுறுவென ஏறிய கோபத்தில் அவளை வேகமாய் தள்ளி விட்டிருந்தான்.

“உன்னயெல்லாம் கட்டிகிட்டு நான்… ச்சே” கொதித்து விட்டு வெளியேறிவிட்டான்.

அறை மூலையில் இருந்த மர மேஜையின் முனையில் நெற்றி மோதி புடைத்து வீக்கமாகியது சீதாவிற்கு. நெற்றியை பிடித்தபடி எழுந்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு கண்ணீர் வழிந்தது. இப்போது முதல் முதலாய் இந்த திருமணம் தனக்கு வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை ரணமாக்கியது.

வீட்டில் காயத்தைப் பற்றி கேட்டவர்களுக்கு தெரியாமல் சுவரில் இடித்து கொண்டதாக பொய் சொன்னாள். ஏனோ உண்மையை சொல்வதை விட பொய் சுலபமாக வந்தது அவளுக்கு.

அந்த இரவு முழுவதும் எதிர்காலம் பற்றிய பயமும் கலக்கமும் மட்டுமே அவளை வதைத்து கொண்டிருக்க, மனதை தேற்ற வழிதேடி, எழுந்து தரையில் அமர்ந்து கந்தசஷ்டி கவசத்தை மனதில் நிறுத்தி ஓத ஆரம்பித்தாள். விடியும் மட்டும் சிறுகுரலாய் மீண்டும் மீண்டும் கந்தசஷ்டி கவசம் ஓதி கொண்டிருக்க, அதே அறையில் கீர்த்திவாஷினி ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து இருந்தாள்.

**********