KarisalKattuPenne16(2)

கரிசல் காட்டுப் பெண்ணே 16(2)

 

மறுநாள் காலை உணவை முடித்து கைகழுவி கொண்டு திரும்பிய ஸ்ரீராம், சீதாவின் வாடி தோய்ந்திருந்த முகத்தை கவனித்து நின்றான்.

பின்புற மாட்டு தொழுவத்தில் கன்று குட்டியை வருடியபடி அமர்ந்திருந்தாள் அவள். நேற்று அவள் முகத்தில் இருந்த அழகும் ஒளியும் களையும் மொத்தமாக துடைத்து விட்டிருந்ததைப் போல துவண்டிருந்தவளை பார்த்தவன், “என்னாச்சு சீதா, ஏன் ஒருமாதிரியா இருக்க? உடம்பு சரியில்லையா?” ஸ்ரீராம் கேள்விக்கு ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

இவனுக்கு அவள் கலங்கி இருப்பது தெரிந்தது. ஆனால் காரணம் தான் புரியவில்லை.

இந்த ஊருக்கு வந்த புதிதில் தான் கலங்கி இருந்த போது அத்தையை அழைத்து வந்து தன்னை தேற்றிய சீதா கேளாமல் அவன் நினைவில் வந்து போனாள். இப்போது தன் முறை என‌ தோன்றியது அவனுக்கு.

உள்ளே வந்தவன், “அத்த, சீதாவுக்கு என்னாச்சு?” என்று விசாரிக்க,

“அதுவா, நேத்து நல்ல நாள் அதுவுமா செவுத்தில மோதி நெத்திய வீங்க வச்சிருக்கா, அதான் வலிக்கு முகம் வாடி கிடக்கா‍, வேற ஒண்ணும் இல்ல” என்று தான் ஊகித்த காரணத்தை அவனிடம் சொல்ல, அந்த பதில் ஏனோ இவனை சமாதானம்படுத்தவில்லை.

கீர்த்தியோடு பெரிய வீட்டிற்கு வந்தவனுக்கு சீதாவின் கலங்கி சிவந்திருந்த முகம் ஏனோ நெஞ்சை அரித்தபடி இருந்தது. தானும் ஒரு பெண்ணாய் பிறந்திருந்தால் அவளை பிடித்து உலுக்கி என்ன ஆனது என்று கேட்டிருப்பான். ஆணாய் போனதால் அவளை நெருங்கி பேசவும் தயங்கினான்.

முதலிலேயே ஒருமுறை நெருங்கிவிட்டு அவளிடம் வாங்கிய அறை இன்னும் நினைவிருக்க, தன் கன்னத்தை சிறு புன்னகையோடு தேய்த்துக் கொண்டான்.

வீட்டில் உட்கட்டமைப்பு அலங்காரங்கள் வசதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்க, கீர்த்திக்கு இன்டீரியல் வடிவமைப்பு வேலையில் அதிக ஆர்வம் என்பதால் ஒவ்வொருவரையும் விரட்டி வேலைவாங்கிக் கொண்டிருந்தாள்.

“எப்படியும் நாளைக்கு வாழ வர போற வீடில்ல, அதான் பார்த்து பார்த்து அம்மணி எல்லாத்தையும் செய்யுது” என்று அங்கு வேலை செய்யும் பெண்மணி கூற, கீர்த்தி அழகாய் சிரிப்பை உதிர்த்தாள். ஸ்ரீராமும் சிரித்தபடி அவளை பார்க்க, “ஆசபட்டவனை கட்டிக்கபோறன்னு சொன்னதும் எப்படி பூத்து போச்சு பாரு, அம்மணி முகம்” என்று அடுத்த பெண் வந்து அவளின் முகத்தை சுற்றி நெட்டிமுறிக்க, சட்டென வேறு யோசனை தோன்றியது ஸ்ரீராமிற்கு.

‘ராமகிருஷ்ணாவை மணந்து கொள்ளப்போகும் எந்தவித சிறு சந்தோசமும் சீதாவின் முகத்தில் தெரியவில்லையே’ என்ற கேள்வி எழ அவன் முகம் மாறி போனது. கீர்த்தியை இழுத்துக்கொண்டு பின்பக்கம் வழியாக சீதாவிடம் வந்தான்.

கிணற்றின் திட்டில் அமர்ந்திருந்த சீதாவின் முகத்தில் கலக்கத்தை தவிர மகிழ்ச்சிக்கான சிறு தடயமும் தென்படவில்லை.

“உனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் தானே சீதா?” ஸ்ரீராம் கேள்வியில் நிமிர்ந்தவள் முகம் சிவந்து கலங்கி இருந்தது.

‘சம்மதம்?’ இதுவரை அவளிடம் யாருமே கேட்காத ஒரு வார்த்தை, இன்று அவன் கேட்டிட, கேவலாய் தேம்பி விட்டாள்.

கீர்த்தி அவளை ஆதரவாக அணைத்து கொள்ள, சீதா உடைந்தழுது விட்டாள். கீர்த்தி புரியாமல் ஸ்ரீராமை பார்க்க, ‘என்னாச்சுனு கேளு’ என்று உதட்டசைவில் சொன்னான்.

“என்னாச்சு மஹா? என்கிட்ட சொல்லு டா, தைரியமான பொண்ணு தான நீ, இப்படி கோழை மாதிரி அழலாமா?”
கீர்த்தி, சீதாவை தேற்றி காரணம் கேட்க, நிமிர்ந்தவள், அருகே ஸ்ரீராம் பார்த்து தயங்கினாள்.

அவளின் பார்வை மாற்றம் புரிந்து ஸ்ரீராம் அங்கிருந்து நகர்ந்து கொண்டான்.

மன அழுத்தத்தில் சிக்கி தவித்தவள் நேற்று ராமகிருஷ்ணன் நடந்து கொண்டதை தேம்பலுடன் கீர்த்தியிடம் சொல்லிவிட்டாள்.

“நேத்து… மாமா… என்கிட்ட… தப்பா… நான் பயந்து வேணான்னு சொன்னேன் க்கா, என்னை தள்ளி விட்டுட்டாரு” என்று கழிவிரக்கத்தோடு சொல்லி தேம்பினாள். அழுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு.

கீர்த்திக்கும் மனம் பிசையத் தான் செய்தது. இவர்களை பார்த்தபடி சற்று தள்ளி நின்றிருந்த ஸ்ரீராமை குழப்பத்தோடே பார்க்க,‌ ‘அவளுக்கு தைரியம் சொல்லு’ என்று உதட்டசைவில் சொன்னான்.

என்னவென்று தைரியம் சொல்ல இவளுக்கு புரியவில்லை. இந்த திருமணம் இவர்கள் இருவருக்கும் ஒத்து வரும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

சீதாவை தன் தோள் சாய்த்து தட்டி கொடுத்தப்படி ஆறுதல்படுத்த முயன்றவளின் உள்ளம் ராமகிருஷ்ணனின் கீழ்த்தனமான செயலால் கொதித்துக் கொண்டிருந்தது.

ஸ்ரீராமின் மனதிலும் கூட அத்தனை கோபம் தான் கழன்றது. ‘ச்சே என்ன மனிதன் இவன், தனக்கு உரிமையானவள் என்றால் இத்தனை மோசமாகவா நடந்து கொள்வான்?’

சீதா இன்னும் கீர்த்தியின் தோளில் தேம்பியபடி தான் இருந்தாள். அதை பார்த்தவன் மனதில் கேள்வி தான் சூழ்ந்தது. ‘ஒரு பெண்ணின் மனதையும் உடலையும் வதைத்து இப்படியொரு திருமண பந்தம் அவசியம் தானா?’

நேராக மரகதத்திடம் வந்தவன், “அத்த, மாமா எங்க?” என்று கேட்க, சங்கரனும் அப்போது தான் நேற்றைய வரவு, செலவுகளை முடித்துவிட்டு உள்ளே வந்தார்.

“மாமா, உடனே கிருஷ்ணாவையும் பெரிம்மாவையும் வர சொல்லுங்க” என்ற ஸ்ரீராமை இருவரும் விளங்காமல் பார்த்தனர்.

“கல்யாணத்துக்கு முன்ன அப்படி கப்புகப்புனு வர முடியாது ராமா” சங்கரன் சிரித்தபடி சொல்ல,

“கல்யாணத்துக்கு முன்னாடி சீதாவ அடிக்க மட்டும் செய்யலாமா? கிருஷ்ணா கிட்ட நியாயம் கேக்கணும்” என்றவனை இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“என்ன சொல்ற டா?” மரகதம் பதற, கீர்த்தி, சீதாவோடு அங்கே வந்தாள்.

“எங்க இருந்து புடிச்சீங்க ஆன்ட்டி அந்த காட்டுமிராண்டிய? இவ்ளோ கீழ்தனமாவா பிஹேவ் பண்ணுவான்?” கீர்த்தி கோபமாக பேச, “டெடி நீ அமைதியா இரு” ஸ்ரீராம் அவளை அடக்கினான்.

“நான் ஏன் ஸ்ரீ அமைதியா இருக்கணும்? பொண்ணுங்கனா அமைதியா போகணும், அடங்கி போகணும், அடிவாங்கிட்டு போகணுமா?”

“கீர்த்தி பிளீஸ், அத்தையும் மாமாவும் கிருஷ்ணா கிட்ட பேசட்டும்”

“அவன்கிட்ட இன்னும் என்‌ன பேச்சு வேண்டி கிடக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே மாட்ட அடிக்கிறமாதிரி அடிச்சு இருக்கான்? இன்னும்…” ஸ்ரீராம் அவள் வாயை பொத்தி இழுத்து கொண்டு நகர்ந்துவிட்டான்.

“நீ என்னடா உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றியா? மறுபடி அவனை பார்த்தேன் அவன் முகறகட்டையிலயே நாலு குத்து விடுவேன்” கீர்த்தி எகிற,

“ஹே முட்டாள், நீ பேசறது மாமாவோட சொந்த அக்கா பையன பத்தி, அவங்க வீட்டு பையனை பத்தி தப்பா பேசினா சும்மா இருப்பாங்கனு நினச்சியா?” ஸ்ரீராம் விளக்க, “போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் ஷிட்” வெறுப்பாக சொல்லிவிட்டு பெரிய வீட்டை நோக்கி சென்றாள்.

“நிஜமா? கிருஷ்ணாவா உன்ன அடிச்சது?” மரகதம் கலங்கி கேட்க,

“அடிக்கல மா, கீழ பிடிச்சு தள்ளி விட்டுட்டாரு” சீதா தேம்பலோடே சொன்னாள். அடுத்து ஏன் தள்ளிவிட்டான் என்று கேட்டால், என்னவென்று பதில் சொல்வது என்ற கழிவிரக்கம் அவளுக்குள். தன் நிலையை மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

இத்தனைக்கும் சங்கரன் அமைதியாகவே நின்றிருந்தார்.

“சாரி மாமா, கீர்த்திக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், உடனே ஃபோன் போட்டு வர சொல்லுங்க, பேசுங்க, இனி சீதாவ அடிக்க கூடாதுன்னு சொல்லுங்க” ஸ்ரீராம் மறுபடி வந்து அதையே வலியுறுத்தினான். மரகதம் வாய் பொத்தி அழ தொடங்கி இருந்தார்.

சங்கரன் முகமும் இருளடைத்து போயிருந்தது. ஒருபுறம் பெற்ற மகள், மறுபுறம் அக்காவின் மகன் இரு கண்களில் எதை குத்திக்கொள்ள என்ற நிலைமை அவருக்கு.

“நீயே போட்டு தா ராமா” என்று தோய்ந்து அமர்ந்து விட்டார்.

ஸ்ரீராம், குலோத்துங்கனுக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினான். இவன்‌ நிதானமாக விவரம் சொல்ல, மறுமுனையில் அவரும் கலவரமானார்.

“நீ சங்கரன் கிட்ட போனை கொடுப்பா” என்க, சங்கரன் காதில் ஒற்றி பேசினார்.

“சொல்லுங்க மாமா, நம்ம புள்ளங்க நல்லா இருக்கணும்னு நாம சேத்து வைக்க நினைச்சா, இப்படி எல்லாம் நடக்குதே மாமா” பெண்ணை பெற்றவர் உடைந்து போய் பேசினார்.

“ஒத்த புள்ளன்னு நாம தலையில தூக்கி வச்சிருக்கோம்ல அதான் திமிரேறி கிடக்கிறான் போல, நான் நாலு வார்த்தை சொல்லி அடக்கி வைக்கிறேன். நீ கவலபடாத சங்கரா” பிள்ளையை பெற்றவர் நிமிர்வோடே தீர்வு சொன்னார்.

“புள்ள முகத்த கண்கொண்டு பாக்க முடியல மாமா, பூவாட்டம் முகமெல்லாம் கண்ணி சிவந்து கிடக்கு, நிசத்தை கூட உடச்சு சொல்லாம செவுத்துல இடிச்சிகிட்டேன் சொல்லி வச்சிருக்கு மாமா” கலங்கி விட்டார்.

“சீதா எங்களுக்கும் பொண்ணு தான்யா, அவன் சீதா மேல கையோங்கினது இதான் முதலும் கடைசியும், நான் வாக்கு தரேன் நம்பு பா”

“உங்கள நம்பாம வேற யார நம்புவேன் மாமா, பார்த்து சொல்லி வைங்க”

“ம்ம சரி, இது வெளிய யாருக்கும் தெரிய வேணாம். முக்கியமா கோதாவரி காதுக்கு போகாம பாத்துக்க, சீதாக்கு ஒண்ணுனா அவளால தாங்க முடியாது புரிஞ்சதா, நான் கிருஷ்ணாவ ஒரு கை பார்த்துட்டு வந்து பேசுறேன்” என்று வைத்து விட்டார்.

# # #

வருவாள்…