Uyir kadhal pre – final

மிக நிசப்த இரவில் கடிகார டிக்டிக், காகிதப் படபடப்பு தவிர வேறு ஓசையில்லை. தனாவை ஹாலில் காணாமல் தேடியபடி அறைக்குள் நுழைந்தவள் முதலில் கண்டது விரைத்துத் தொங்கிய அவனது கால்களைத்தான்.
கண்கள் பார்த்ததை மூளை கிரகித்து உணரும் முன் இதயம் உணர, கண்களில் கண்ணீர் கரகரவென வழிய, நடுங்கிய விரல்களால் வாயைப் பொத்தியபடி அதிர்ந்து நின்றுவிட்டாள் ஹரிணி.

தனா… பிறந்ததிலிருந்து அவள்மீது கரைகாணா பாசத்தைச் செலுத்திய ஜீவன். அவன்மீது மலையளவு கோபம் இருக்கிறதுதான், ஆனால் அவன் இறப்பு…? அவனது இந்தக் கோலம் தாங்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது அவளுக்குள்.

கத்தவில்லை கதறவில்லை… நெஞ்சையடைக்கும் உணர்வில் மூச்சுகூட விடமுடியவில்லை. மூளை சொல்லும் செய்தியை முழுதாய் உள்வாங்கக்கூட முடியவில்லை. நம்ப மறுத்து இதயம் போராடிக் கொண்டிருக்கிறது. கண்ணீர் மட்டும் நிற்காமல் அவனுக்காய் வழிந்தபடி…

ஹரிணியைப் பின்பற்றி வந்த சுஜியுமே, “தனாண்ணா…” என்றபடி அதிர்ந்து நின்றுவிட, இருவரின் அரவம் கேட்டு தனாவின் மீதிருந்த பார்வையை விலக்கி இருவரையும் பார்த்தான் ஆனந்தன்.

‘இறந்தவனை வெறித்தபடி அழுது கொண்டிருக்கும் இந்தப் பெண் அன்று காட்டுக்குள் சந்தித்தவள் அல்லவா? இவள் எப்படி இங்கே? அன்று என்னை ஏற்கனவே தெரிந்தவள் போல கேள்விகள் கேட்டாளே…!’ விழிகளை விலக்காமல் ஹரிணியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

பின்னே நின்று நடுக்கத்தோடு தன் தோள் தொட்ட சுஜியின் தொடுகையில் அடிவயிற்றிலிருந்து கேவல் வெடிக்க, “சுஜி… தனாண்ணா பாரு…” என்று கதறி அழுத ஹரிணியைப் பார்த்து சுஜிக்கும் தாங்க முடியாத அழுகை வந்தது.

“என்னாலயா? சுஜி… என்னாலதான் தனாண்ணா இந்த முடிவு எடுத்தாங்களா? நானே பேசிப்பேசிக் கொன்னுட்டேனா அவங்கள?” ஹரிணியால் தாளவே முடியவில்லை.

“ஹரிணி ப்ளீஸ்… இப்படிலாம் பேசாத. நீ என்னடி தப்பு பண்ண?” ஹரிணியோடு சேர்ந்து அழுத சுஜியையும் தனாவின் முடிவு வெகுவாக பாதித்திருந்தது.
பழகக்கூடாதவர்களோடு பழகி செய்யக்கூடாத தவறைச் செய்து, தன் உயிர் நண்பன் வாழ்க்கை அழியக் காரணமாகி, வாழ்ந்த நாள்வரை அந்தக் குற்றவுணர்ச்சியிலே கூனிக்குறுகி இன்று உயிரையும் அநியாயமாய் விட்டவனைப் பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை.

“ஹைய்யோ! பெரியப்பா பெரியம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? தனாண்ணா ஏன்டி இப்படிப் பண்ணாங்க?” கதறி அழுதவளை அணைத்துக் கொண்ட சுஜி தாமதிக்காமல் அலைபேசியில் சரணைத் தொடர்பு கொண்டாள்.

“சொல்லு சுஜி.”

“அண்ணா… தனாண்ணா செத்துட்டாங்க… சூசயிட் பண்ணிக்கிட்டாங்க…” அழுகையும் கேவலுமாக சுஜியின் குரலைக் கேட்ட சரண், “வாட்…?” பெரிதாக அதிர்வதையும் கிரீச்சிடலோடு அவனுடைய வண்டி நிற்பதையும் சுஜியால் உணர முடிந்தது.

“சுஜி என்ன சொல்ற? ஹரிணி… ஹரிணி எங்க?”

“ஹரிணி அழுதுகிட்டு இருக்கா. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே புரியல. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க.”

“வரேன் சுஜி. வந்துகிட்டே இருக்கேன். சீக்கிரம் லோக்கல் போலீசை அங்க வரச்சொல்றேன். அவங்க வந்து எல்லா ஃபார்மாலிட்டியையும் பார்த்துக்குவாங்க. நீ… நீ முதல்ல தனாவோட பல்ஸ் செக் பண்ணு.”

“ம்ம்…” என்றபடி மெல்ல நகர்ந்து நடுங்கிய கரங்களால் தனாவின் தொய்ந்த கரங்களைத் தொட்டபோதே தெரிந்து போனது சுஜிக்கு, அவன் உயிர் இவ்வுலகில் இல்லை என்பது. சில்லிட்டுப் போயிருந்த அவனது கரம் அதை அவளுக்கு உணர்த்தியது. மெல்ல நாடி பிடித்துப் பார்த்து அதை உறுதி செய்தவள் சரணுக்கும் அதைத் தெரிவித்தாள்.

ஒற்றைக்கையால் தலையைப் பிடித்துக் கொண்டு வண்டியில் அமர்ந்திருந்த சரணுக்குமே இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

‘ஹரிணி எவ்வாறு இதைத் தாங்குவாள்? இந்த நொடி நான் அவளருகே இல்லாமல் போனேனே’ தனக்குள் நொந்து கொண்டவன்,

“சுஜி… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் அங்க வந்துடுவேன். சீக்கிரம் போலீசையும் வரச்சொல்றேன். ஹரிணியைப் பார்த்துக்கோ.”
அலைபேசியை அணைத்தவன் தீரனுக்குத் தகவலைச் சொல்லி,

லோக்கல் போலீசை உடனடியாக அங்கே அனுப்பச் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான். வாகனம் அதிவேகமெடுத்தது.

சரணிடம் பேசிவிட்டு நிமிர்ந்த சுஜியின் விழிகளில், அவர்களையே அசையாத பார்வையோடு பார்த்திருந்த ஆனந்தன் விழுந்தான். பார்த்தவுடன் திடுக்கிட்டாலும் அவனை யாரெனப் புரிந்து கொண்டாள். ‘இவர் எப்படி இங்கே?’ என மனம் கேட்க, ஹரிணியின் கரங்களை அழுத்திப் பார்வையால் ஆனந்தனைக் காட்டினாள்.

சுஜியின் பார்வையை உணர்ந்து ஆனந்தனைப் பார்த்த ஹரிணியின் உடலும் திக்கென்று முதலில் அதிர்ந்தாலும், அடுத்துத் தாங்க முடியாத அழுகையே அவளுக்கு வந்தது. வாய்விட்டு அழுத ஹரிணியை ஆதரவாய் தோள் பற்றிக் கொண்டாள் சுஜி.

“ஹரிணி ப்ளீஸ்…” அவளுக்குமே என்ன ஆறுதல் சொல்வதென்றேத் தெரியவில்லை.

‘யார் விட்ட சாபம் இது? வாழ்க்கை எதற்காக இப்படி வஞ்சித்தது இவர்களை? நினைவு தெரிந்த நாளிலிருந்து உயிர் நண்பர்களாய் பழகியவர்களை நேரெதிர் எதிரிகளாய் மாற்றியதோடு அல்லாமல் இருவரது வாழ்க்கையையுமே சின்னாபின்னமாக்கிவிட்டதே!’ மனதே ஆறவில்லை ஹரிணிக்கு.

அழுகையை அடக்க முயன்றும் முடியாமல், அவளையும் மீறி கேவல் ஒன்று வெடிக்க. பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தனுக்கு என்ன தோன்றியதோ! சற்று பாவமாய் பார்த்தான் அவளை.

‘சற்று முன் இறந்தவன் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹரிணி இவளாய்தான் இருக்க வேண்டும். அவனுடைய தங்கை’ மனம் எண்ணிக்கொண்டது.

“இவன் என் நண்பனா?”
சூழ்நிலையின் கணத்தைக் கிழித்து ஒலித்த கரகரப்பான அவனது குரலில் விதிர்விதிர்த்து, கேள்வியின் அர்த்தம் புரியாமல் திகைத்து, நீர் சேர்ந்த விழிகளோடு அவனைப் பார்த்தனர் சுஜியும் ஹரிணியும்.

அவர்களின் பார்வையைக் கண்டதும், அருகிருந்த மேசை மீதிருந்து தனாவின் இறுதிக் கடிதத்தை எடுத்தவன், அதனைப் பார்த்தபடியே மீண்டும் கேட்டான்,

“இவன் என் நண்பனா? நாங்க சின்னதுல இருந்தே நெருங்கிப் பழகியிருக்கோமா?”

“ஹே… ஹேப்பிண்ணா…” அவனது கேள்வி புரியாமல் தழுதழுத்த அவளது குரலில், சற்று விசித்திரத்தைத் தாங்கிய விழிகளோடு அவளை ஏறிட்டவன்,

“ஹேப்பிண்ணாவா…?” தனக்குள் முனுமுனுத்தவனுக்குள், ‘அன்றும் இவள் என்னை அப்படிதானே அழைத்தாள். எனக்கு மறந்துபோன என் கடந்த காலங்கள் இவளுக்குத் தெரிந்திருக்குமோ?’ எண்ணியபடி அவளையேப் பார்த்திருந்தான்.

“ஹரிணிங்கறது…?” மெல்லிய குரலில் கேள்வியாய் வினவ தான்தான் என மெல்ல ஆமோதித்துத் தலையாட்டினாள்.

“உனக்குதான் எழுதியிருக்கான்.” கண்களால் தனாவைக் காட்டியபடி கடிதத்தை நீட்ட நடுங்கும் விரல்களால் வாங்கிக் கொண்டாள். பிரித்துப் பார்க்கும் துணிவின்றி, பெருகும் கண்ணீரை அடக்க முடியாமல் கடிதத்தையே பார்த்திருந்தாள் ஹரிணி.

“ஹரிணி, பிரிச்சுப் படி.” சுஜியின் குரலில் கடிதத்தை மெல்லப் பிரித்தாள். முத்துக்களை கோர்த்தது போன்ற தனாவின் கையெழுத்து, அவன் கண்ணீர் பட்டு அங்கங்கே அழிந்திருந்தது… அதுவே அவளது கண்ணில் நீரைப் பெருக்கி பார்வையை மங்கலாக்கியது. இடது கையால் கண்ணைத் துடைத்துக்கொண்டவள் கடிதத்தில் பார்வையை ஓட்டினாள்.

ஹரிணிம்மா,

மன்னிப்புக் கேட்க மட்டுமில்ல உன் முகத்தைப் பார்க்கக்கூட அருகதையில்லாத பாவி நான்னு எனக்குப் புரியுதுடா.
ஆனா தன்னிலை திரிந்து, தவறுதலாய் தவறிழைத்துவிட்டு, துரோகத்துக்கு தண்டனையாய், இதுநாள்வரை தனித்து மருகி நிற்கும் பாவி நான். அதை மட்டும் புரிஞ்சுக்கோ ஹரிணிம்மா.

என் உயிர் நண்பனுக்கு நான் செய்த துரோகத்துக்கு என்னைக்கும் மன்னிப்பே கிடையாதுங்கறது எனக்கு நல்லாவே தெரியும். எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் எனக்கு இருக்கிறது.

ஆனா, உன் பார்வையில பழைய தனாவா நான் இனி என்னைக்குமே இருக்க முடியாதுங்கற நிதர்சனத்தைதான் என்னால தாங்கிக்கவே முடியல.

இந்த வாழ்க்கை நமக்கு முதல்ல தேர்வுகளை வைத்துவிட்டு அப்புறம்தான் பாடமே நடத்துகிறது. அந்தத் தேர்வில் படுகேவலமாய் தோற்றுவிட்டு இன்னைக்குவரைக்கும் நரக வேதனையோடு வாழ்க்கை பாடத்தைப் படிச்சிட்டு இருக்கேன்டா.

அந்த வயசுல அவனுங்களை எதிர்க்கத் துணிவில்லாமலும், எல்லா பழியும் என்மேல விழுந்துடும்கற பயத்துலயும், நம்ம குடும்பத்து மானம் போக நானே காரணம் ஆகிடுவேனோங்கற பயத்துலயும், கோழையா இருந்துட்டேன். தப்புதான்.

என் நண்பனுக்கு என் கண்முன்னாடியே நடந்த அநியாயத்தை எதுவுமே செய்யமுடியாம கையாலாகாத்தனத்தோட பார்த்துக்கிட்டு இருந்த பாவிதான் நான். ஆனா, அவனோட அந்த நிலைக்கு நானும் ஒரு முக்கிய காரணம்ங்கறதை நினைச்சு நினைச்சு இன்னைக்குவரை குற்றவுணர்ச்சியில குறுகிப் போய் இருந்தேன்டா.

உன்னோட கேள்விகள்தான் நான் செய்த துரோகத்துக்கு என்னோட இந்த குற்றவுணர்ச்சி எந்தவிதமான ஈடும் செய்ய முடியாதுன்னு எனக்கு புரிய வச்சது. எவ்வளவு மோசமான சுயநலவாதியா நான் இருந்திருக்கேன்னும் புரிய வச்சது.

ஹேப்பி உயிரோடதான் இருக்கான்னு நீ சொன்னதே எனக்கு போதும் ஹரிணிம்மா. இத்தனை வருஷமா என் மனசுக்குள்ள குடைஞ்சிக்கிட்டு இருந்த வேதனை கொஞ்சம் குறைஞ்சது. அவனைப் பார்க்கனும்னு ஆசையாதான் இருக்கு. ஆனா அவன் முகத்துல முழிக்கிற தகுதிகூட எனக்கில்லைன்னு எனக்குத் தெரியும்.

அவன் என்னைக்காவது என்னைத் தேடி வருவான். அதுவும் எனக்கு உறுதியா தெரியும். அவன் கையால என் உயிர் போச்சுன்னா அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு எதுவுமில்லை.

ஆனா, என் உயிர் நண்பன் என்னால செத்துட்டானேன்னு இத்தனை வருஷமா நான் அனுபவிச்ச மாதிரியான ஒரு குற்றவுணர்ச்சிய அவனுக்குக் கொடுக்க நான் விரும்பல. என்னைக் கொன்னு அவனுக்கு பாவம் சேர வேண்டாம்.

பல நேரங்களில் வாழ்க்கை நமக்கு நடத்தும் பாடங்களுக்கு சாட்சியாக நமது கண்ணீர்தான் வாழ்ந்துவிட்டுப் போகிறது. என்னைக்காவது அவன் என்னைத் தேடி வந்தால், நான் உயிரோடு இருந்த கடைசி நிமிடம்வரை அவனுக்காக கண்ணீர் சிந்தினேன் என்று மட்டும் சொல் போதும்.

இனி அடுத்த ஜென்மத்திலாவது என்னைப் பெற்றவர்களுக்கும் உனக்கும் என் நண்பனுக்கும் நல்லவனாக வாழ்ந்து நல்லவனாகவே இறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன்.

முடிந்தால் அண்ணனை மன்னித்துவிடு… முடியாவிட்டால் மொத்தமாய் என்னை மறந்துவிடு. நம் பெற்றவர்களைத் தாங்கிக் கொள்.

-தனா.

பின்குறிப்பு : சரணுக்கு, என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க முழுக்க என்னுடைய சுயநினைவுடன் எடுக்கப்பட்ட முடிவு இது.

கடிதத்தைப் படித்தவளின் உடல் மேலும் அழுகையில் குலுங்க, மடிந்து அமர்ந்து கதறுபவளைத் தாங்கிக் கொண்டாள் சுஜி. அவளுக்குமே தனாவின் இத்தகைய முடிவு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்திருந்தது.
குடும்பத்தைப் பொருத்தவரை அவன் நல்ல மகன், ஹரிணியைப் பொருத்தவரை மிகமிக நல்ல அண்ணன், அவனுடைய இழப்பு கண்டிப்பாக அவர்களுக்கு பெரும் இடியாக இருக்கும் என்பது புரிந்தது அவளுக்கு.

“இவனுடைய விதி என்னால் முடியனும்னுதான் தேடி வந்தேன்.” ரௌத்திரம் பொங்கிய ஆனந்தனது குரலில் இருவரும் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு,

“அதுக்குள்ள அவன் முடிவை அவனேத் தேடிக்கிட்டான். என் பூரணிக்காக நியாயமா நான் கொடுக்க வேண்டிய தீர்ப்பு இது.”
நியாயம்தான், பூரணியின் கள்ளமில்லாத முகம் மனதுக்குள் வந்ததும் கண்ணீர் வழிய கசங்கிய முகத்தோடு தலை கவிழ்ந்து கொண்டாள்.

“என்னை முன்னமே தெரியுமா உனக்கு? பெங்களூருலயும் சிக்மகளூர்லயும் பார்க்கறதுக்கு முன்னாடியே?” அவனது குரலில் இருந்தது என்ன ஏக்கமா? இயலாமையா?
புரியாமல் அவனை ஏறிட்டவள் தழுதழுத்த குரலோடு,

“ஹேப்பிண்ணா, என்னை சுத்தமா அடையாளம் தெரியலையா உங்களுக்கு? நான் ஹரிணி. தனசேகர் தங்கச்சி.” நினைவுபடுத்திவிடும் வேகம் அவளுக்கு.
விரக்தியாய் சிரித்தவன்,

“என்னையே எனக்கு அடையாளம் தெரியல. என் பூரணியையும் அந்த கோரமான நாளில் நடந்த நிகழ்வுகளையும் தவிர வேற எதுவுமே எனக்கு நினைவில்ல. எனக்குள் ஆழமாய் பதிந்திருந்தது பூரணியும் அந்த நாலு பேரோட முகமும்தான்.

மூன்று வருடங்களாக இவர்களைப் பற்றிய செய்திகளை சிறுகச் சிறுக சேகரித்து, இப்பொழுதுதான் நெருங்க முடிந்தது. என் பழியையும் தீர்க்க முடிந்தது.”
அவனது வார்த்தைகள் சொல்ல முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது ஹரிணிக்கு. ‘தன் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், உறவினர் அனைத்தையும் மறந்து விட்டாரா? இது எவ்வளவு பெரிய கொடுமை?
இத்தனை வருடங்களாக இவர் இறந்து போனதாய் எண்ணி சிதைந்து கிடக்கும் இவரது குடும்பத்துக்கு என்ன நியாயம் செய்துவிட முடியும்? இந்த பாவத்தை எங்கு கொண்டு கரைக்க?’ அடக்க முடியாமல் மீண்டும் அழுகை வெடித்தது.

“ஹைய்யோ! இது என்ன கொடுமை? உங்களைப் பெத்தவங்களைக்கூட நினைவில்லையா?” கதறியவளுக்குத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அவள் அழுவதையே இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தவன்,

“என்னைப் பெத்தவங்க இருக்காங்களா? எங்க இருக்காங்க?” கரகரப்போடு வினவ…
மெல்லிய கேவலோடு பதில் கூறினாள், “மதுரையில இருக்காங்கண்ணா. உங்க ஊர் மதுரை.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சுஜி எழுந்து சென்று ஆனந்தனின் டைரியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். அவளுக்குமே ஆனந்தன் பழைய நினைவுகளை இழந்துவிட்டான் என்பது பெரிய அதிர்ச்சி. டைரியைப் பார்த்துவிட்டு அவளைக் கேள்வியாகப் பார்க்க,

“இது உங்க டைரிதான் அண்ணா. நீங்க உங்க கைபட எழுதியது. இதுல எதாவது உங்களுக்கு நினைவிருக்கா பாருங்க.”
கரங்கள் நடுங்க ஆவலோடு வாங்கிக்கொண்டான். முதல் பக்கத்தில் இருந்த அவனும் பூரணியும் இணைந்திருந்த ஃபோட்டோவில் பூரணியின் முகத்தை மெல்ல விரல்களால் வருடிக் கொடுத்தவனுக்கு, அவனுடைய முகம் புதிதாய் தெரிந்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டியவனுக்கு தன் வாழ்க்கையை தானே படிக்கும் ஆர்வம், அந்த டைரியில் மூழ்கிப் போனான்.

ஹரிணியும் தனக்குத் தெரிந்த அளவில் அவனது குடும்பத்தைப் பற்றியும் மதுரையில் அவனது இளமைக் காலத்தைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கூறி அவனுக்கு நினைவுபடுத்த முயன்றாள்.
அப்பொழுது அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டதும்,

திடுக்கிட்டு நிமிர்ந்தனர் சுஜியும் ஹரிணியும். சரண் அனுப்புவதாக சொல்லியிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும் என்று தோன்றியது அவர்களுக்கு.

சுஜி மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்து அதை உறுதி செய்ய, கதவைத் திறக்கும் முன் ஆனந்தனை அனுப்பிவிட வேண்டும் என்று தோன்றியது இருவருக்குமே.

“ஆனந்த் அண்ணா, போலீஸ் வந்திருக்காங்க. நீங்க பின்வாசல் வழியா வெளிய போயிடுங்க. இங்க போலீசை நாங்க சமாளிச்சிக்கிறோம்.” சுஜி கூற பதட்டத்தோடு அதை ஆமோதித்தாள் ஹரிணி.

“ஆமா, நீங்க போங்க. மதுரையில பாண்டியன் ஸ்டோர்ஸ்னு சொன்னாலே போதும்… உங்க வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுடுவான் ஆட்டோக்காரன். அந்த டைரியிலயே எல்லா தகவலும் இருக்கு. நீங்க கிளம்புங்கண்ணா. இங்க போலீசையும் சரணையும் நான் சமாளிச்சுக்கறேன்.”

“சரண்…?” பதட்டத்தில் பேசியவளைக் கேள்வியாக ஏறிட்டான்.

“என் வுட்பி. இங்கதான் வந்துட்டு இருக்கார். அவரும் போலீஸ் ஆஃபீசர்.”

“வரட்டும்.” என்றபடி மீண்டும் டைரியில் ஆழ்ந்தான்.

ஹரிணியும் சுஜியும் தவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அழைப்பு மணி வேறு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

“ஹேப்பிண்ணா, சொல்றதைக் கேளுங்க. நீங்க செய்ததுலாம் தப்பே இல்லை. அதெல்லாம் வதம். அவனுங்க உயிர் வாழவே தகுதியில்லாதவனுங்க. இத்தனை வருஷம் நீங்க அனுபவிச்ச தண்டனையே போதும். இதுக்கு மேல நீங்க போலீஸ்ல ஏன் மாட்டனும்? ப்ளீஸ் அண்ணா… நீங்க போயிடுங்க.”

“அவனுங்களைக் கொன்னதுக்காக நான் துளிகூட வருத்தப்படலை. ஆனா சட்டத்தை என் கையில எடுத்து நான் தீர்ப்பெழுதினது தப்பு. அதுக்கான தண்டனை எனக்குக் கிடைக்கனும்.

நான் போலீஸ்ல சரணடையனும்ங்கற முடிவோடதான் இங்க கிளம்பி வந்ததே. எனக்கு ஒரு உதவி மட்டும் செய். என்னைப் பெத்தவங்களை நான் பார்க்கனும் பேசனும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு.”

ஹரிணியிடம் பேசியவன் மெல்ல எழுந்து நடந்து சென்று வீட்டின் கதவைத் திறந்தான். அதற்குபின் காரியங்கள் யாவும் மளமளவென்று நடந்தன.

சரண் திருச்சிக்கு வந்து சேர்ந்த போது, தனாவின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்தது. ஆனந்தனும் போலீசாரிடம் செய்த குற்றங்களைச் சொல்லி சரணடைந்திருந்தான்.

வந்து சேர்ந்ததும் சரணின் கண்கள் ஹரிணியைத்தான் தேடியது. அழுது வீங்கிய முகத்தோடு நின்றிருந்தவள் அவனின் வாவென்ற விழியசைவில் ஓடிச் சென்று அவன் தோள்களில் சாய்ந்து கதற, அவள் துக்கத்தைக் குறைக்கும் பொருட்டு அவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான்.

அவள் மனபாரம் சற்று குறையும் மட்டும் அழவிட்டவன், “ஹரிணி, போதும்டா… நீயே இப்படி அழுதா உங்க பெரியப்பா பெரியம்மாவ, உன்னோட பேரண்ட்ஸை எப்படி சமாதானம் பண்ண முடியும். நீதான அவங்களுக்கு ஆறுதல் சொல்லனும். அவங்களுக்கு முதல்ல இன்ஃபார்ம் பண்ணுவோம்.”
பெற்றவர்களை நினைத்ததும் துக்கம் பொங்கினாலும், அவர்களுக்கு இன்னும் விஷயத்தை தெரிவிக்கவில்லையே என்பதை உணர்ந்தவள், கலக்கமாக சரணை ஏறிட. அவளைப் பெற்றவர்களுக்கு ஃபோன் செய்து சுருக்கமாக தகவலைக்கூறி உடனடியாக புறப்பட்டு வரச்சொன்னான் சரண்.

“ப்ளீஸ், ஹேப்பிண்ணாவ அரெஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க.” என்று கெஞ்சி அழுதவளை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி போனது அவனுக்கு.

“அவரே குற்றத்தை ஒத்துக்கிட்டு சரணடையறாரு. சட்டத்தோட பார்வையில அவர் குற்றவாளி ஹரிணிம்மா. சட்டத்தை மீறி நான் எதுவுமே செய்ய மாட்டேன். இந்த கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது நாம நல்ல வக்கீல் வச்சு வாதாடி ஆனந்தனை வெளிய கொண்டு வந்துடலாம்.”
பேசிப்பேசி ஹரிணியை ஒருவாறு சமாளித்து சுஜி வசம் ஒப்படைத்துவிட்டு, தனாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு அனுப்பியவன்,

சரணடைந்த ஆனந்தனையும் காவலில் வைக்கச் செய்தான்.

விஷயம் தெரிந்த உடனேயே தீரனும் திலகவதியும் பெங்களூருவிலிருந்து கிளம்பி விமானம் மூலம் விரைந்து வந்தவர்கள், மகனின் திடீர் மரணத்தையும் முகத்தில் அறைந்த அவனுடைய மறுபக்கத்தையும் தாங்க முடியாமல் தடுமாறித் தவித்த தனாவின் பெற்றவர்களைத் தாங்கிக்கொண்டனர்.

தனாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை ஹரிணியுடன் இருந்த சரண், வழக்கு முழுவதுமே பெங்களூருவில் இருந்ததால் நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆனந்தனை பெங்களூரு அழைத்துச் சென்றான்.
ஆனந்தனுக்கு எதிராக சாட்சி சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவளைப் பேசிச் சமாதானப்படுத்தி சாட்சி சொல்ல வைத்தான்.

“ஹரிணி, நீ உனக்குத் தெரிஞ்சதை, நீ பார்த்ததை மட்டும் சொல்லு. ஆனந்தனுக்குப் பெரிய தண்டனை இல்லாம சீக்கிரம் வெளிய கொண்டு வரவேண்டியது என்னோட பொறுப்பு.

அவருக்கு எதிரான பிரதிவாதி யாருமே இல்லாதது நமக்கு பெரிய பிளஸ். அவரோட மெடிக்கல் கன்டிஷன் அவரோட தண்டனையை வெகுவா குறைக்கும்.

அதுமட்டுமில்லாம அவருக்கு நடந்த அநியாயம் அவர்மீதான பரிதாபத்தை உண்டுபண்ணி அவரோட தண்டனைய கணிசமா குறைய வழி இருக்கு.

இதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். சிட்டியிலயே ஃபேமஸான வக்கீலை வச்சு வாதாடினா வழக்கு நமக்கு சாதகமாதான் இருக்கும். என்னை நம்பு ஹரிணிம்மா.

ஆனா, சட்டத்துக்குப் புறம்பா நீ எதையும் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன். நீ கண்டிப்பா சாட்சி சொல்லியே ஆகனும்.”
ஹரிணியிடம் வற்புறுத்திய சரண், அவளிடம் கூறியபடி கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற வக்கீல் ஒருவரை ஆனந்தன் சார்பில் வாதாட ஏற்பாடு செய்யவும், சரண் கொடுத்த நம்பிக்கையின் பேரில் ஆனந்தனுக்கு எதிராக சாட்சி சொல்லவும் ஒப்புக்கொண்டாள் ஹரிணி.

ஆனால், கலெக்டர் கிஷோர் கொலையை மட்டுமே அவள் நேரில் பார்த்தது. மீதி இருவரின் கொலை நடந்த இடத்தில் அவள் இருந்தாளே ஒழிய அவள் அதை நேரில் பார்க்கவில்லை.

கலெக்டர் கொலை நடந்த போதும் கொலையாளியின் முகம் முழுவதும் மூடி இருந்த நிலையில் கண்களை மட்டுமே நான் பார்த்தேன் என்ற அவளது சாட்சியம் வெகு ஈசியாக ஆனந்தனின் வக்கீலால் பிசுபிசுக்க வைக்கப்பட்டது.

அவளுடைய சாட்சியைத் தவிர வேறு வலுவான சாட்சியம் எதுவுமே ஆனந்தனுக்கு எதிராக அரசு தரப்பில் இல்லாதது ஆனந்தனுக்கு சாதகமாக வழக்கு நகர உதவி செய்தது.

இதற்கிடையில் ஆனந்தன் உயிரோடு இருக்கும் விபரம் அவனது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட, எட்டு வருடங்களுக்கு பிறகு மகன் உயிரோடு கிடைத்த செய்தி அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தது.
ஆனந்தனுக்கு யாரையுமே அடையாளம் தெரியாத போதும், தன்னைப் பெற்றவர்கள் இவர்கள்தான் என்ற உணர்வு உள்ளூரப் பெருகியதை உணர முடிந்தது.

அவனுடைய உடல்நிலைக்கு முறையான சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்ற அவனது வக்கீலின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரது மனநிலை பாதிப்புக்கான சிகிச்சைகள் தொடரும் பட்சத்தில் அவருக்கு பழைய நினைவுகள் திரும்பும் வாய்ப்பு அதிகம் என்ற மருத்துவரின் சாட்சியத்தால் அவனுக்கு நிபந்தனையுடன்கூடிய ஜாமீனும் ஏற்கனவே எடுத்துக்கொண்ட சிகிச்சைகளைத் தொடரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சரணின் உதவியோடு, ஜாமீனில் வெளிவந்தவன் வழக்கு முடிந்த பிறகு மதுரை வருவதாக பெற்றவர்களிடம் கூறிவிட்டு, சிக்மகளூர் வைத்தியசாலையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதாக சொல்லிவிட்டான்.

நாட்கள் இவ்வாறாக நகர, தனாவின் பிரிவை எண்ணி அவ்வப்போது ஹரிணி சோர்வில் சுருண்டு போக, துக்கத்தில் இருக்கும் அவளைத் தேற்றுவதும் சரணுக்கு முக்கிய வேலையாகிப் போனது… ஒரு சில மாதங்களுக்கு பிறகு திருமணத்தையும் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன்.

தனா இறந்த துக்கத்தில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக வைத்துக் கொள்வோம், என்று பெரியவர்கள் பேசி முடிவெடுக்க திட்டவட்டமாக மறுத்திருந்தாள் ஹரிணி. யாருடைய சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை அவள்.

“தனா அண்ணனோட இறப்பு என்னால தாங்க முடியலதான். ஆனா, அதைவிட ஹேப்பிண்ணாவோட நிலைதான் எனக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுக்குது.

அவருக்கு எந்த தண்டனையும் இல்லாம வெளிய கொண்டு வந்துடுவேன்னு சொன்னீங்க இல்லையா, அதை முதல்ல செய்ங்க. ஹேப்பிண்ணா விடுதலையானதும் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்.”
சரணிடம் தெளிவாக பேசியிருந்தாள் ஹரிணி. அவள் மனவேதனை சரணுக்குமே புரிந்ததால் அவளுடைய வாதத்தை ஏற்றுக் கொண்டவன், வழக்கு விசாரணையில் கவனத்தை செலுத்தினான்.

மூன்று கொலை வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற, கொலைக்கான காரணமாக ஆனந்தன் கூறியதை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த விபத்தில் எந்தவிதமான சோதனைகளும் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்பதை சரண் நிரூபித்ததில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

கிஷோர் மற்றும் ஜனார்த்தனனின் பெற்றோர்கள் மீண்டும் அந்த வழக்கை முடக்க நினைத்து செய்த செயல்கள் தீரன் மற்றும் சரணால் ஈசியாக முறியடிக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தடவியல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

எத்தனை வருடங்கள் ஆனாலும் எலும்புகள் சிதைவதில்லை என்பதால் பூரணியின் எலும்புத் துகள்களைத் தேடும் பணி தொடங்கியது. இயற்கை மாற்றங்களாலும், விபத்து நடந்து பல வருடங்கள் ஆனதாலும் அது சற்று சிரமமான பணியாகவே இருந்தது.

ஆனால், எவ்வளவு நாட்களாக அந்தப் பகுதி முழுவதையுமே அலசித் தேடியும் பூரணியின் எலும்புத் துகள்கள் கிடைக்காததில் மிகவும் குழம்பிப் போயினர் காவல் துறையினர். பூரணிக்கு என்ன ஆனது என்ற மிகப்பெரிய கேள்வி அவர்கள் முன் இருந்தது.

பூரணியின் முடிவு என்ன என்பது யாருக்குமே புரியாத புதிராகவே இருந்தது. வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது. ஆனால் இவ்வளவு வழக்கு விசாரணையின் போதும் ஆனந்தனின் முகத்தில் தென்பட்ட இனம் புரியாத அமைதி சரணைக் குழப்ப ஆனந்தனைச் சந்திக்க சிக்மகளூர் சென்றான் சரண்.

—தொடரும்.