MarandhupoEnManame_2_Epi10

மறந்துபோ என் மனமே(2) -அத்தியாயம் 10:

 

தண்ணீர் மேலேப் பட்டவுடன் அவள் திருப்பிப்பார்க்க “நம்ம சின்ன வயசுல எப்படி இருந்தோமோ அப்படி இருக்கனும். இவளோ நாள் மிஸ் பண்ணத நம்ம ரெண்டுபேரும் இனிமே மிஸ் பண்ண கூடாது. டீல்?” புன்னகையுடன் க்ரிஷ் கேட்க….

அவன் அருகில் வந்தவள் அவன் தலையைக் கையால் தள்ளி “இதுக்கு நான் எப்படி நோ டீல் சொல்ல முடியும் மக்கு” என்றாள் விரிந்த புன்னகையுடன்.

சொல்லிவிட்டு அவள் ஓட “என்னது மக்கா?” என்று அவள் பின்னே அவனும் ஓடினான். அவள் கீழே செல்ல அவனும் பின்தொடர்ந்தான்.

“ஹே போதும். ரொம்பப் பசிக்குது” என்று சொல்லிக்கொண்டே கிட்சனுள் சென்றவன் என்ன இருக்கிறது என்று பார்த்தான்.

“ஆமா எனக்கும் பசிக்குது” அவளும் உள்ளே கேபினட் மேல் ஏறி உட்கார்ந்தாள்.

“மொதல்ல சூடா ஏதாச்சும் குடிக்கலாம். அப்பறம் லன்ச் செய்யலாம்” என்றவன் கண்களில் காபி brewing மெஷின் தெரிந்தது.

“காபி” என்று அவன் போட ஆரம்பிக்க “ஐயோ காபியா நீயா… யக் (yuck)… நல்லாவே இருக்காது. அந்தப்பக்கம் போ” என இறங்கி வந்து அவனைத் தள்ளினாள்.

அவன் மனதில் பழைய நினைவுகள் வர “நான் இப்போ கத்துக்கிட்டேன் சுஷி. நல்லா போடுவேன்” முகத்தைப் பாவம் போல் வைத்துக்கொண்டு சொன்னான் ஆனால் சிரிப்புடன்.

“தெய்வமே தள்ளு… முன்னாடி நீ போட்டு நான் குடுச்சு, நான் பாத்ரூமே கதின்னு இருந்தது போதும்” அவனை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு அவள் தலைமுடியை தூக்கி முடிந்துகொண்டிருந்தாள்.

“சரி… உனக்குச் செய்யத் தெரிஞ்ச ஒன்னே ஒன்னு இது தான். அதையாவது செய்” என்று அவள் அருகில் மேடைமேல் உட்கார்ந்துகொண்டான்.

அவனைப் பார்த்து முறைத்தவள் “உனக்கு நாளைக்குக் கண்டிப்பா fish fry இருக்கு. விடமாட்டேன்” முடியைக் கட்டிவிட்டு காபி போட ஆரம்பித்தாள்.

“சுஷி” ஆச்சர்யத்துடன் அழைக்க என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

கீழே குதித்தவன் அவள் அருகில் வந்து “உனக்கு இன்னும் இந்தச் சின்ன முடி இருக்கா?”

அவளின் அடித் தலையில் இருந்த சிறு சிறு ரோமங்கள் அவளின் கழுத்தில் படர்ந்திருக்க, அதை மெதுவாக அவன் விரல்களால் வருட, சட்டென்ன தள்ளிக்கொண்டவள்…

“டேய் டான்க்கி கைய எடு… கூசுது” என்று அங்கிருந்த ஒரு கரண்டியால் அவனின் தலையில் அடித்தாள்.

“ஆஹ் லூசு… வலிக்குது” தலையைத் தேய்த்துக்கொண்டு “அத பாத்தா கை பரப்பரங்குது சுஷி… என்னசெய்ய… பழக்க தோஷம்” என்று சலித்துக்கொண்டே மறுபடியும் மேடைமேல் ஏறி உட்கார்ந்துகொண்டான் அவள் போடுவதைப் பார்த்துக்கொண்டு.

சிறுவயதில் இருந்து அவர்கள் பிரியும் முன் வரை, அவள் எப்பொழுது போனிடைல் போட்டாலும், அவன் அவள் பின்னந்தலையில் அந்தச் சிறிய அடிமுடியைப் பிடித்து இழுப்பது, அவளைக் கோவப்படுத்துவது அவனுடைய வழக்கமாகவே இருந்தது.

அதை நினைத்தவள் மனதில் சிரிப்பு வர, அது அவள் முகத்தில் தெரிந்தது.

இருவருக்கும் போட்டுவிட்டு அவனுக்குக் கொடுக்க, அதைப் பருகியவன் “இந்த coffee’கு தான் இவளோ சீன் போட்டயா… நான் போட்டா இதைவிட நல்லா இருக்கும்” என அவளை வம்புக்கு இழுத்தான்.

“அப்படியா… நீ ஒன்னும் குடிக்க வேணாம் குடு. நீயே போட்டுக்கோ உனக்கு ” என்று அவன் கையில் இருந்து கப்’பை அவள் பிடுங்க செல்ல “சரி சரி ஃபீல் பண்ணாத. நல்லாத் தான் இருக்கு… குடிக்கிறேன்” மறுபக்கம் திரும்பிச் சலித்துக்கொண்டே குடிப்பவன் போலக் குடித்தான்.

************

இருவரும் சோர்வுடன் இருந்ததால் அன்றைய தினத்தைப் பெரிதாக எதுவும் செய்யாமல் டிவி பார்த்துக் களித்துக்கொண்டிருந்தனர்.

இரு நிலவு அதன் சுவடைக் காட்ட ஆரம்பிக்க, ஆகாயத்திலிருந்து சிறு துளிகள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது.

சோபாவில் உட்கார்ந்து தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க “க்ரிஷ் மழை வருது…” என்றாள் வெளியே பார்த்துக்கொண்டு கண்கள் விரிய.

“ஹ்ம்ம் ஆமாம். அதுக்கென்ன?” என்றான் உம்மரமாகப் பார்த்துக்கொண்டு. “அதுக்கு… எ…ன்னவா…?” என்று சட்டெனத் திரும்பி ரிமோட் எடுத்து ஆப் செய்தவள் “நான் பால்க்கனி’க்கு போறேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் செல்வதைப் பார்த்துப் புன்னகைத்தவன், பின்னே சென்றான்.

அவள் மழைச் சாரலில் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து… உள்ளே சென்று போர்வையை எடுத்து வந்தான்.

“லூசு மழைல நனையாத. காய்ச்சல் வந்துரும்” அவளை இழுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த சோபாவில் உட்காரவைத்துப் போர்வையைக் கொடுத்தான்.

அவளும் போர்த்திக்கொண்டு உட்கார அவள் ஆகுகில் அவனும் உட்கார்ந்தான் அவனுடைய போர்வையுடன்.

அந்த மழையின் சாரல் மற்றும் அதனுடன் வந்த காற்று அவர்கள் மேல் பட்டும் படாமல் செல்ல அவள் போர்வையை இறுக்கிக்கொண்டாள். அதைப் பார்த்தவன் “ரொம்பக் குளுருதா?” எனக் கேட்க “ஹ்ம்ம்” என்றாள்.

அவனுடைய போர்வையை அவளுடன் சேர்த்து அவன் போர்த்திக்குள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டு

“மழை வர்ரப்பலம் உன் ஞாபகம் வரும் க்ரிஷ்… உன் வீடு… பால்கனி… ரெண்டுபேரும் நனையறது. அப்பறம் இந்த மாதிரி மழைய ரசிக்கிறது” என்று சொல்லிமுடிக்கும் முன்

“அம்மாவோட பஜ்ஜி” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவனைப் பார்த்து முறைத்தவள் “தின்னி பண்டாரம்… ஆனா கரெக்ட் தான். சூடா ஆண்ட்டி செய்ற போண்டா பஜ்ஜி” என்று புன்னகைத்துக்கொண்டே அவன் மேல் சாய்த்துக்கொண்டாள்.

அவன் மனதில் காலையில் இருந்து நெருடிக்கொண்டிருப்பதை அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்க, அவன் அறியாமல் “உன் மனசுல இன்னும் ராம் இருக்கானா சுஷி?” கேட்டான் அவன் நினைத்ததை.

அவன் மேல் இருந்து எழுந்தவள் அவன் கண்களைப் பார்த்து “இப்போ எதுக்கு இந்த க்வெஸ்டின்” எனக் கேட்டுக்கொண்டே மறுபடியும் சாய…

“காலைல நம்ம பேசிட்டு வந்தப்ப உன் கண்ணுல தெரிஞ்ச கண்ணீர். இதுக்கு முன்னாடி ஒரு டைம் அவன் உன்ன ஏமாத்திட்டான்னு சொன்ன. அதா…” என இழுத்தான்.

அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு “நான் மிச்சிகன்’ல இருந்து அப்போ தான் வந்துருந்தேன் படிப்பு முடிச்சு. என் லைஃப்ல பெரிய பிடிப்பு இல்லாதப்ப, என்னோட வெறுமையை நிரப்ப… நான் தேர்ந்தெடுத்த ஒரு பெர்சன்… ராம்”

“வீட்டுக்கு அடிக்கடி வந்தான் அப்பாகூட வேல பண்ணதால. எனக்கு இன்னோரு க்ரிஷ் மாதிரி தெரிஞ்சான். அவனோட அணுகுமுறை, என்கிட்ட பேசின விதம் எல்லாமே உன்ன மாதிரி… அப்பறம் பிடிச்சுடுச்சு. லவ் அப்படி இப்படினு இருந்தேன்”

“அவனுக்கு திடீர் கல்யாண ஏற்பாடு பண்ணாங்க, அவன் வீட்ல. மனசு சுக்கு நூறா ஒடஞ்சது. ஏன் எனக்குப் பிடுச்சது எதுவுமே நிலைக்க மாட்டேங்குது’னு கோவம்… வருத்தம்… மன அழுத்தம். எல்லாத்தையும் மறக்க இங்க வந்தேன்”

“ட்ரிங்க்ஸ் எடுக்க ஸ்டார்ட் பண்ணேன். நான் நினச்ச மாதிரி பழசை மறக்க அது உதவியா இருந்துச்சு. ஆனா அவன்… அவனோட வைஃப் கூடச் சந்தோஷமா இருந்தான். அவளுக்காக எல்லாம் செய்றான், என்ன மறந்துட்டு”

“நான் மட்டும் ஏன் இப்படி இருக்கேன்’னு தோணுச்சு. அவனை மறக்க முடியாமலா இப்படி இருக்கேன்னு எனக்குள்ளேயே ஒரு கேள்வி. கண்டிப்பா இல்லை. அந்த பழைய நினைப்பு எதுவும் எங்கிட்ட இல்ல. என்னோட முகத்தைப் பார்க்கிறப்ப எனக்கே கோவமா வந்துச்சு”

“என்ன விட்டுட்டு போன அவன் சந்தோஷமா இருக்கான். அவன் போய்ட்டான், சரி… நான் சந்தோஷமா இல்லனாலும் பரவால்ல என்ன கஷ்டப்படுத்திக்கக் கூடாதுனு ஸெல்ஃப் டிடாக்ஸ்க்கு என்ரோல் பண்ணேன்” என்று சொல்லும்போது அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்திருந்தது.

அவள் கண்களைப் போர்வையால் துடைத்தவன் அவள் மேல் சாய்ந்துகொண்டான்.

“காலைல நான் என்ன சொன்னேன் க்ரிஷ்? உன்ன மறக்க நான் ச்சூஸ் பண்ண எல்லாமே தப்புனு. மைகேல்ல ஆரம்பிச்சு… கடவுள் அவனுக்காச்சும் நல்ல தண்டனை குடுத்தாரு” என்று பெரு மூச்சு விட்டு சொல்லி முடுத்தாள்.

“என்ன ஆச்சு அவனுக்கு” என அவன் கேட்க “நான் மிச்சிகன் போனப்பறம் ஏதோ ஆக்ஸிடென்ட்’டாம். மூணு வாரம் பெட் ரெஸ்ட்ல இருந்தான்னு கேள்வி பட்டேன்” என்றாள்.

“அத ஆக்ஸிடென்ட்னு நீயும் நம்பிட்டயா?” அவன் கேட்க… சில வினாடிகள் கழித்துச் சட்டென எழுந்தாள் அதில் இருந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு.

அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “உன்ன தள்ளிவிட்ட மார்கயே அடிச்சவன் நான். உன்ன ஏமாத்துனவன சும்மா விடுவேனா?”

இறுகிய முகத்துடன், மழையைப் பார்த்துக்கொண்டு “வெகேஷன்’க்கு Peoria வந்தேன். நீயும் அப்போ அங்க இல்ல. எந்த தைரியத்துல பண்ணேன்னு தெரில. என் முன்னாடி அவன் உன்ன பத்தி தப்பா பேசுனது மட்டும் தான் தெரிஞ்சுது. கௌஷல்’ல கூப்டுட்டேன் கூட வரச்சொல்லி”

“ஹாலோவீன் அன்னிக்கு அவன் எப்பவும் போற பார்’ல இருந்தான்… ஒரு 30 அடிக்கு மேல இருக்கும் பேஸ்பால் பேட்ல… அவனைப் பத்தி அவன் அம்மா அப்பாக்கு நல்லாவே தெரியும். அதுனால விஷயம் பெருசு பண்ணாம விட்டுட்டாங்க.”

“நாங்க இருந்த காஸ்ட்டியூம், நாங்க யாருனே அவனுக்குத் தெரில” என்றான் கோவத்தின் வெளிப்பாட்டில் வந்த சிரிப்புடன், சோபாவில் நன்றாகச் சாய்ந்துகொண்டு.

அதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டிக்கொண்டிருக்க…

அவன் அருகே சென்று அவன் கையைக் கட்டிக்கொண்டாள். அவனுடைய ஒரு கையால் அவளைச் சுற்றி அணைத்துக்கொண்டான். அவளின் கண்ணீர் அவனுடைய சட்டைய நனைத்தது.

“இன்னொருத்தன் இருக்கான். அவனுக்கு அடுத்தவாரம் இருக்கு” என்று பற்களைக் கடித்துக்கொண்டு வார்த்தை வந்தும் வராமலும் சொல்ல அவன் மேல் இருந்து எழுந்தவள் “என்ன சொன்ன?” எனக் கேட்க “ஒன்னும் இல்லை” என்று முடித்தான்.

சிறிது நேரம் இவரிடத்தில் மௌனமே நிறைந்திருக்க அவன் மேல் சாய்ந்திருந்தவள் “ஏன் க்ரிஷ் மைகேல் மட்டுமா ஏமாத்தினான்? ராம் கூடத் தானே” என்று முகத்தைத் தூக்கி அவனைப் பார்த்துக் கேட்டவள்…

“ராம் உன் ஃபிரன்ட். அதுனால அவனை நீ கேட்கலையோ? எனக்காக அவன்கிட்ட சண்டையாச்சும் போட்டயா?” என்று தலைகுனிந்துக் கேட்க… அந்தக் கேள்வியை அப்போது எதிர்பார்க்காதவன் சில நொடிகள் கழித்து…

“ராம் என் ஃபிரன்ட்…. ஹ்ம்ம் ஆமா. அனா ஒரு சின்ன கரெக்ஷன். அவன் கூட நீ பழக ஸ்டார்ட் பண்ணதுக்கப்பறம் தான், அவன்கூட நானும் பழக ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி பெருசா இல்ல. அவன் பாரு அப்பாகூடத் தான் அப்போ ரொம்ப க்ளோஸ்”

“அவன் நெஜமாவே ரொம்ப நல்லவனா இருந்தான். Genuine. Perfect gentleman type. ஆனா அவன் திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்”

“கல்யானத்துக்கப்பறம் அவன மொதல்ல பாத்துருந்தேன்னா கண்டிப்பா என்ன நடந்துருக்கும்னு எனக்கே தெரில. ஆனா நான் மொதல்ல பாத்தது நந்தினிய”

“இன்னும் சொல்ல போனா இன்னொரு சுஷிய. ரொம்ப டெலிகேட். கண்ணுல எப்பவும் தெரியற ஒரு ஏமாற்றம், சோகம். யாரும் தெரியாத ஊருக்கு அவனை நம்பி வந்துருந்தா”

“அவனோட பாஸ்ட் கண்டிப்பா சொல்லிருப்பான்னு தெரியும். அது அவ முகத்துலயே தெரிஞ்சுது”

“உன்ன ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்க மாட்டான்னு ஏதோ மனசுல சொல்லிட்டே இருந்துச்சு. அவன்கிட்ட கேட்டப்ப தான் உனக்கும் அந்த விஷயம் தெரியும். ரெண்டுபேரும் எவ்வளவோ கல்யாணத்த நிறுத்த ட்ரை பண்ணீங்கனு”

“அப்போ எனக்கு ரொம்ப முக்கியமா தெரிஞ்சது ரெண்டு விஷயம். அந்தப் பொண்ண அவன் ஏத்துக்கணும். உன்கூட அதுக்கு மேல பழக்கம் வெச்சுக்கக் கூடாதுனு. நான் நினச்சா மாதிரியே அத அவன் பண்ணான்”

“நான் நினைக்காத ஒன்னு நீ இந்த லெவல்கு டிப்ரஸ்(depress) ஆகிருப்பனு. அது தெரிஞ்சவுடனே கிளம்பி வந்…” என்று சொல்ல வேண்டியதை விட அதிகமாக வார்த்தைகள் வந்துவிட்டது என எண்ணி நிறுத்த, மறுபடியும் அதிர்ச்சியுடன் எழுந்தாள் சுஷி.

வந்த வார்த்தைகளே போதும் சுஷிக்கு அவன் என்ன சொல்லவந்தான் என்று புரிவதற்கு.