Kathiruntha kathaladi 4

Kathiruntha kathaladi 4

4

ஆருஷ் நியூயார்க் சென்று வருவதற்குள் இங்கு நிலமை கைமீறியிருந்தது. சபரிநாதன் அதிக மன அழுத்தத்தால் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கப் பட்டார்.

அதனால் முடிக்க வேண்டிய டீலிங்கை தனது செயலாளரை அமெரிக்கா அனுப்பி தொடரச் சொல்லிவிட்டு, ஆருஷ் சென்னை வந்தான்.

விமான நிலையத்திலிருந்து நேரடியாக அவரைக் காண மருத்துவமணை வந்தவன், அங்கு கண்டது கண்களை மூடி அநாதரவாய் அமர்ந்திருந்த தீப்தியைதான்.

பார்த்தவுடன், “முட்டாள் பெண்” ஆத்திரத்தையும் மீறி பரிதாபம்தான் வந்தது அவனுக்கு. அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான். “தீப்தி” என மெதுவாக அழைக்க,

சட்டென விழித்து பார்த்தவள், அவன் கையை வளைத்து தோளில் சாய்ந்துக் கொண்டாள். கண்கள் நீரை வார்த்துக் கொண்டிருந்தன.

இவனும் அவள் கை மீது தன் கை வைத்து அழுத்திக் கொடுக்க,

“எல்லாம் என்னாலதான். நான் உன்னை பார்த்திருக்க கூடாது; மனசுல நினைச்சிருக்க கூடாது; நீதான் வேணும்னு வெட்கமில்லாம சொல்லியும், என்னை வேண்டாம்னு நீ மறுத்தப்ப, சன்னியாசம் வாங்கறேன்னு எங்கப்பாவ இப்படி படுக்க வச்சிருக்க கூடாது.” என்று தன்போக்கில் உளறிக் கொண்டே சென்றவளை எப்படி சமாதானப்படுத்துவது என அறியாமல் தவித்து நின்றான்.

அப்போது மருத்துவர் வரவும் தீப்தி வேகமாய் அவரை நோக்கி சென்றாள். “டாக்டர் அப்பாக்கு”

“உங்கப்பா கண் முழிச்சிட்டாரும்மா. செக் பண்ணிட்டு வந்து சொல்றேன்” என்றவர் அறையின் உள்ளே சென்று விட்டார்.

தீப்தி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, ஆருஷ் அமைதியாக நின்றிருந்தான்.

அவரை ஒரு தாய் ஸ்தானத்தில்தான் பார்ப்பான். உயிரைக் கொடுப்பவள் தாய் என்றால், இவனை அந்தக்கொடிய நாட்களில் இருந்து மீட்டு, இன்று இந்த சமுதாயத்தில் கௌரவமாய் வாழ வைத்தது அவர் அல்லவா! அந்த வகையில் அவனுக்கு மறுஜென்மம் அளித்த சபரிநாதனும் ஒரு தாயே.

அவருக்கு கைமாறு செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டதா! என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் வெளியில் வந்தார்.

“டாக்டர், அப்பாவுக்கு எப்படி இருக்கு, நல்லாயிடுவார்தானே!”

ஆருஷூம் அவர் பதிலுக்காய் காத்திருக்க, “அவருக்கு மன உளைச்சல்தாமா அதிகம். அது சரியானா தானா சரியாகிடுவார். தீப்தி தீப்தின்னு உங்க பேரைதான் சொல்லிக்கிட்டே இருக்கார்.

மருந்து மாத்திரை பாதிதான் குணப்படுத்தும் மீதி உங்க கைலதான் இருக்கு. அவர் வருத்தப்படற மாதிரி வச்சுக்காதீங்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு அவர டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்றவரை

“இப்போ அப்பாவ பாக்கலாமா”

“போய்ப் பாருங்க” என்றவர் அடுத்த நோயாளியைப் பார்க்க சென்று விட்டார்.

தீப்தி வேகமாக உள்ளே சென்று விட, ஆருஷ் நிதானித்தான். இப்போது அவர் இருக்கும் நிலையில், தான் மறுக்க கூடிய எதையும் அவர் கேட்கும்படி வைத்து விடாதே கடவுளே! என வேண்டிக் கொண்டே சென்றான்.

தீப்தி சபரிநாதனின் ஊசி ஏற்றப்படாத கையைப் பிடித்து அதில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள், அழவில்லை. அவள் எப்போதுமே அப்படிதான், இவனைத் தவிர்த்து பார்த்தாள் இரும்புப்பெண்தான் அவள்.

நிதானமானவள். ஆனால் இவனிடத்தில் மட்டும் அவளது நிதானம் நிதானமாகிவிட்டது.

“ப்பா..ப்பா..ப்பா..” என்று இடைவிடாது ஜெபித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். இப்போது அவளது மனதில் ஆருஷ் இல்லை. இவளது காதல் இல்லை. அவனது நிராகரிப்பு இல்லை. இவளின் சந்நியாசம் இல்லை. நினைவில் நின்றது தந்தை… தந்தை… தந்தை மட்டுமே.மகளின் வேண்டுதல் அவரை எட்டியதோ!

கண்மணிகள் அசைய மெதுவாக விழித்தவர் முதலில் கண்டது எதிரே நின்ற ஆருஷை தான். அவனை பார்த்து புன்னகைக்க இவனும் அருகில் வந்து ஆறுதலாய் அவர் கைப்பற்றினான்.

அவர் ஏதோ பேச வர,அவரை தடுத்த தீப்தி, “ப்பா…ப்ளீஸ் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க… நான் எங்கயும் போகல,எதுவும் பண்ணல, உங்ககூடவே இருக்கேன். நீங்க அதையே நினைச்சு வருத்தப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க. எனக்கு நீங்க வேணும்.. பழையபடி என்னோட ஃப்ரண்டா வேணும்….ஐ மிஸ் மை ஃப்ரண்ட்” என்றவள் ஆருஷைப் பார்த்து,

“சாரி ஆருஷ் இட்ஸ் மை மிஸ்டேக். அதால எல்லாருக்கும் கஷ்டம். இனி அப்படி இருக்காது. இனி உன்னை தொல்லை பண்ண மாட்டேன். நீ கம்பெனிய பாத்துக்கோ, நான் எங்கப்பாவ கூட்டிட்டு நாடு, நாடா சுத்தப்போறேன். அண்ட் அப்பா, நீங்க சீக்கிரம் குணமாகி உங்க பொண்ணு கூட உலகத்த சுத்திப்பாக்க கெளம்பறீங்க, ஓ.கே. ” என்றவள் அவர் கைகளுக்கு அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்து விட்டு

” நான் டாக்டர பாத்துட்டு வரேன்” எனக்கூறி சென்றுவிட்டாள்.

அங்கிருந்த இருவருக்குமே தெரியும் அவள் வெகுவாய் காயப்பட்டிருக்கிறாள் என்று. ஆனால் இதனால் ஆருஷ் எவ்வளவு நிம்மதியாய் உணர்கிறான் என்று வரையறுக்க முடியாது.

அவன் மூச்சே இப்பொதுதான் சீரானது. காதலுக்கும், நன்றியுணர்ச்சிக்கும் இடையே ஏற்படும் போட்டியில் காலம்காலமாய் நடப்பது போல நன்றியுணர்ச்சியே வென்றிருக்கும் என்பது திண்ணம். ஆனால் தீப்தி அந்த இக்கட்டிலிருந்து அவனை காப்பாற்றி விட்டாள். பார்க்கப்போனால் இவன் சுயநலக்காரன்தானோ! இருக்கட்டுமே பலர் நலம் காக்க சுயநலக்காரனாய் இருந்தால் தப்பில்லை.

மகளை நினைத்து அவர் கண்ணீர் சிந்த, “அங்கிள் கவலைப்படாதீங்க, தீப்தி என்னோட பொறுப்பு. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுக்கு அப்பறம்தான் நான் ஓய்வேன். இது சத்தியம். நீங்க உடம்ப தேத்திகிட்டு உங்க பொண்ணு கூட டூர் கெளம்பலாம்..கம் ஆன் அங்கிள். உங்களால முடியும்” என ஆறுதலும், தேறுதலும்கூறியவன் அவர் முகத்தில் புன்னகையை பார்த்த பிறகே சமாதானமானான்.

ஆதியின் வீட்டில் ஹர்ஷியும், தர்ஷியும் இரண்டு நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் ஓய்வெடுத்தனர். தர்ஷி ஹர்ஷிக்கு தெரியாமல் சில பல வேலைகளைப் பார்த்தாள்.

ஆதியும் அவன் போக்கில் பிஸியாக இருந்தான். ஒரு வாரத்திற்கு பிறகு ஆதி இரு சகோதரிகளையும் வெளியில் அழைத்துச் செல்ல வந்திருந்தான்.

ஆம், அவர்கள் அவர்களுடைய வீட்டில்தான் தங்கியிருந்தனர். அங்கு முன்பு அவர்களிடம் வேலை செய்த முத்தம்மா மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இவை அனைத்தையும் ஆதியே பார்த்துக் கொண்டான்.

ஹர்ஷி இதனை கவனிக்கவில்லை. அவள் ஏதோ எண்ணங்களில் கட்டுண்டவள் போல அமைதியாகவும், உறங்கிக்கொண்டுமே இருந்தாள்.

ஆனால் தர்ஷி இதை அவனிடமே கேட்டுவிட்டாள். “எப்படி எங்க வீட்டுல ஏழு வருஷத்துக்கு முன்ன வேலை செஞ்சவங்களகூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்று ஐயமாய் கேட்க,

பார்றா இந்த சைனாசெட்டு என்னமா கவனிக்குது என நினைத்தாலும், “அது உங்கப்பாதான் சொன்னாங்க” என அவன் கூறிய பதிலை அவள் நம்பத்தான் இல்லை.

தனது தந்தைக்கு உறவுகளின் பெயரே தகிடதோம் போடும். இதில் பல வருடங்களுக்கு பின் வேலையாளின் பெயர், முகவரி எல்லாம் ஞாபகம் வைத்துச் சொன்னதாக கூறினால் எப்படி நம்ப முடியும்!

அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நம்பிட்டேன்” என்று சொன்ன அந்த தொனியே சொன்னது அவள் நம்பவில்லை என்பதை. அன்றிலிருந்து இவனை சந்தேக கண்ணோடே பார்க்கும் அவளை “போடி” என்ற ஒரு பாவனையில் கடந்துவிடுவான்.

சகோதரிகள் வந்ததிலிருந்து எங்கேயும் செல்லாமல் இருப்பதால் ஆதியின் தாய் கூறியதின் பேரில் இன்று அவர்கள் இருவரையும் பிரபல மால் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.

ஏற்கனவே இவர்கள் பழகிய இடம்தான். இருந்தாலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. மாற்றத்தை தவிர்க்க இயலாதல்லவா!

ஆதித்யா இதோ வருகிறேன் என்றுக் கூறி இவர்களை விட்டு விலகிச் செல்ல, “தர்ஷ் இங்க நிறைய மாறிடுச்சுல்ல ” என ஆர்வமாக சுற்றிப் பார்த்துக் கொண்டே ஷர்ஷி கூறினாள்.

“ம், ஆமா ஹர்ஷ் நிறையவே மாறியிருக்கு. கண்ணுக்கு அது சரியா தெரியலன்னாலும், மனசு அத புரிஞ்சுக்கும்” என பூடகமாக பேச,

அவளை குழப்பத்துடன் பார்த்த ஹர்ஷினி, “என்ன தர்ஷ் என்னவோ சொல்ற எனக்குப் புரியல”

அந்த மாலைச் சுற்றிக் காட்டியவள், “இங்க என்னென்ன மாறியிருக்குன்னு உன்னால சொல்ல முடியுமா?” எனக் கேட்க

ஹர்ஷியும் சுற்றிப் பார்த்தாள், சரியாக தெரியவில்லை. முன்பு இருந்தது போலவும் இருந்தது, இல்லாதது போலவும் இருந்தது. அதையே தங்கையிடம் கூறவும் செய்தாள்.

“பாத்தியா கண்ணுக்கு என்ன மாறியிருக்குன்னு சரியா தெரியல, ஆனா உன் மனசு ஏதோ மாறியிருக்குன்னு அதை உனக்கு உணர்த்தியிருக்கு, அதே மாதிரிதான் முன்ன இருந்த ஹர்ஷ்க்கும் இப்ப இருக்கற ஹர்ஷ்க்கும் இருக்கற வித்தியாசம் உனக்கு எதாவது புரியுதா” என தோளைப் பற்றிக் கொண்டு என பட்டென கேட்டுவிட்டாள்.

அவளை திகைப்பாய் பார்த்த ஷர்ஷி, “தர்ஷ் ஏன் என்னென்னவோ பேசற, நான் நல்லாதான் இருக்கேன்” என கூறினாலும் குரலில் அந்த உறுதி இல்லை.

“ம்ப்ச், யோசி ஹர்ஷ், இது உனக்கான நேரம். தொலைச்சத கண்டுபிடி. இல்லனா நீயே தொலைஞ்சுடுவ.” எனக் கூறிய தர்ஷி, இனி இவளே யோசிக்கட்டும் என்று முன்னேச் சென்று விட்டாள்.

நான் மாறிவிட்டேனா! என்ன யோசித்தும் ஒன்றும் புரியவில்லை. அந்த இரண்டு வருட இடைவெளி! அதற்குள் அப்படி என்னதான் நடந்திருக்கும்.

ஆம்! ஹர்ஷினியின் நினைவுகளில் இருந்து சில பக்கங்கள் நீக்கப்பட்டன. அவளின் மனநிலையின் பேரில்.

‘அப்படி எதை மறந்தேன். இப்போது சில நாட்களாக தனக்கு வரும் நிழலுருவ காட்சிகள், அதில் வரும் அந்த உருவம் தனக்கும் அவனுக்கும் என்ன உறவு என அறிய ஆவல் ஏற்படுகிறதே! என்னவாக இருக்கும்’

இதோ இப்போது கூட தர்ஷினி கூறுவதைப் பார்த்தால் ஏதோ ஒன்று பலமாக இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமா? இல்லை அப்படியே விட்டுவிடவா? என மனம் அதன்போக்கில் செல்ல இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்திற்கு இறங்க எஸ்கலேட்டரில் கால் வைத்த போது, தடுமாறி கடகடவென கீழே உருண்டாள் ஹர்ஷி.

முன்னால் சென்ற தர்ஷி கூச்சல் சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தவள், ஹர்ஷியின் நிலை கண்டு, “ஐயோ ஷர்ஷ்! என பதறியவாறு கீழே இறங்க, அதற்குள் பாதி வழி உருண்டிருந்த ஹர்ஷியை அதில் பயணித்த ஒருவன் தாங்கி பிடித்திருந்தான்.

ஆருஷ் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி மாலுக்கு வந்திருந்தான். இரண்டாம் தளத்தில் அவனுக்கான பொருட்களை வாங்கியவன் எஸ்கலேட்டரில் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது மறுபுறம் ஒரு பெண் தன் சிறு குழந்தையை செல்லமாக அதட்டியவாறு சென்றுக் கொண்டிருந்தாள்.அக்குழந்தையின் முகத்தில் அவ்வளவு குறும்பு.

இதைப் பார்த்ததும் தானாக அவன் இதழ் விரிந்தது. அதனோடே அவள் ஞாபகமும்.

ஆருஷும், அவளும் கோவிலுக்கு வந்திருந்தனர். வெகுநேரம் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

அர்ச்சகர் பிரசாதம் கொடுத்துவிட்டுச் செல்ல, சற்று தள்ளி வந்தவுடன், ஆருஷ், “என்ன வேண்டிக்கிட்ட அவ்வளோ நேரமா” என தன் சந்தேகத்தைக் கேட்க

உடனே வெட்கப்பட்ட பெண்மை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்தது. இவனுக்கு முகத்தைக் காட்டாமல், “ஒ…ஒன்னுமில்லையே… சும்மா”

இவளின் பரிமாணங்கள் சுவாரசியமாக இருக்க, “ஹேய் ஷர்ஷி, வெய்ட். என்னைப் பாரு” என அவள் முகத்தை நிமிர்த்த இரு கைகளுக்குள் மலர்ந்த பூவாக அவள் முகம். மொட்டவிழும் முகத்தில் கண்கள் மட்டும் நிலம் பார்த்தது.

சன்னிதானத்தின் நடுவில் இவர்கள். மதிய நேரமாதலால் ஒருவரும் இல்லை. இவர்கள் இதுபோல வெளியில் வருவதெல்லாம் அபூர்வம்தான்.

அப்படியே வந்தாலும் தொட்டு, உரசி மற்றவர்களின் கவனத்தை கவரும் வகையில் நடந்துகொண்டதில்லை. அதில் இருவருமே எப்பொதும் கவனம்தான்.

தள்ளியே நிற்பவள் இப்போது, தான் இவ்வளவு நெருக்கத்தில் நின்றும் தள்ளி நிற்காமல் இருக்கிறாள் என்றால் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே சுற்றும் முற்றும் பார்த்தவன், “ஏய் ஹர்ஷி” கிசுகிசுப்பாக அழைக்க

“ம்”

“என்னைப் பாரு”

மெதுவாக கண்மலர்ந்தாள் பாவை. எதற்காக இவ்வளவு வெட்கம் என நினைத்தாலும் மெல்லிய சிரிப்புடன், “என்னடா” என்றான் கனிவாய்

“ஒன்னுமில்லையே”

“இல்ல என்னவோ! என்னன்னு சொல்லு சாமிகிட்ட என்ன வேண்டின” விடாமல் இவன் கேட்டு வைத்தான்.

தன் கையை கன்னத்தில் இருந்த அவன் கை மேல் வைத்து அழுத்தியவாறு “எனக்கு”

“உனக்கு”

” அழகா, பொசுபொசுன்னு, அப்படியே உங்கள மாதிரி நிறைய குழந்தைங்க வேணும்னு வேண்டிக்கிட்டேன்” முகத்தில் அவ்வளவு மலர்ச்சி, மகிழ்ச்சி.

ஒரு இன்ப படபடப்பு அவனுள் ஆனால் அதை அவளுக்கு காட்டாதவாறு “ஓஹோ,அதான் முகம் அவ்ளோ டாலடிக்குதா… ஆமா! என்னோட பட்டுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமா” என சிலிர்த்து சிரித்தவாறே வினவ

“ம் ரொம்ப, அதுவும் நம்மோட குழந்தை என் வயித்துல சுமந்து நான் பெறப்போற குழந்தை… ” கூறிக்கொண்டே வந்தவள் அவனின் இமைக்காத பார்வையில் வெட்கமுற்று பட்டென்று அவன் கைகளை விலக்கிவிட்டு ஓட, இவனின் சிரிப்பு சத்தம் விடாமல் ஒலித்தது.

அதை எண்ணிப் பார்த்தவனுக்கு பெரும் வேதனை. சிறிது காலமே ஆனாலும் பொக்கிஷமான நினைவுகள் இன்றளவும் அவனிடம்.

அவளின் கனவு கனவாகவே போனதே! என எண்ணி மருகினான். அப்போதுதான் ஒரு பெண்ணின் அலறலும், பலரின் கூச்சல் சத்தமும் கேட்டு அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இவன் திரும்பி பார்க்கையில் பெண்ணொருத்தி எஸ்கலேட்டரில் உருண்டு கொண்டிருந்தாள்.

முதலில் அதிர்ந்தவன் பின் சுதாரித்தவனாய் தடதடவென உருண்ட பெண்ணவளை பாதுகாப்பாய் பிடித்தான். சுருள் முடிகள் முகம் முழுதும் மறைத்திருக்க, அவள் அதற்குள் மயங்கியிருந்தாள். கீழே இறங்கியதும் சில பெண்கள் உதவிக்கு வந்தனர்.

இவனே அவளை தூக்கி அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்த்தினான். அங்கிருந்தவர்களிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னவன், வாகாய் தன் தோளில் சாய்ந்திருந்தவளை அப்போதுதான் உணர்ந்தான். உடன் “ஹர்ஷ்” என்ற தர்ஷியின் குரலும்,

அந்தப் பெயர்!அந்த ஸ்பரிசம்! அந்த வாசனை! சில அதிர்வுகளை அவன் இருதயத்தில் உருவாக்கியது. ஒரு குழந்தைக்கு தாயின் வாசனை மறக்குமா? ஒரு தாய்க்கு தன் குழந்தையின் ஸ்பரிசம் மறக்குமா? லட்சம் குழந்தைகளில் தன் குழந்தைய கண்களைக் கட்டிக் கொண்டு தாயால் இனம்காண முடியும்.

அதுபோலதான் அவன் கண்டுகொண்டான்! ஆனால் நம்பதான் முடியவில்லை. முடிந்ததாக நினைத்த ஒன்று தொடருமா?

ஆனால் மனம் அடித்துச் சொன்னது. இவள் அவள்தானென்று. எப்படி? காற்றாகி போனதாக நினைத்தவள் கண்முன்னா!

மூளை இல்லையென்றது….. இதயம் ஆமாமென்றது…. தடுமாறினான்…. தத்தளித்தான்.. இதயத்தின் அதிவேக துடிப்பில் நெஞ்சு பலமாக அதிர்ந்தது.

முகத்தைத்தான் பார்க்க முடியவில்லை. அவளின் சுருள் கற்றைகள் மறைத்திருந்தன. கைகள் நடுங்க மெல்ல அவற்றை ஒதுக்கினான். அவள்தான், அவளேதான்! “ஹர்ஷினி” அவனின் ஹர்ஷி.

error: Content is protected !!