Kathiruntha kathaladi 5

5

ஆருஷின் நிலை வரையறுக்க முடியாத அளவிற்கு உணர்வுகளால் ஆட்டிப்படைக்கப் பட்டது. திடீரென்று கண்முன் இறைவன் தோன்றினால் பக்தனின் நிலை எப்படியிருக்கும்?

மெய் சிலிர்த்து அடங்கும். கால் மிதக்க பறப்பது போல தோன்றும். காண்பது மெய்யா இல்லை மாயையா என்ற சந்தேகம் வரும். ஆனாலும் ஒரு நொடிகூட இமைகள் முத்தமிட்டுக் கொள்ளாது.

நிழலோ? நிஜமோ? இந்த நொடி அதை இழக்க விரும்பாமல் பார்த்திருப்போம். அந்த நிலையில்தான் ஆருஷ் இருந்தான்.

சந்தோஷமா, அழுகையா எப்படிக் கூற! இதுவேறு ஒன்று…. உணர்வுகளின் வெளிப்பாடு அதிகப்படியான சந்தோஷமென்றாலும், துக்கமென்றாலும் கண்கள் நீரை சொறிந்துவிடும்.

இப்போதும் அப்படிதான் எல்லைமீறிய மகிழ்ச்சியின் விளைவால் கண்களிலிருந்து இதோ விழக் காத்திருக்கின்றன நீர்த் துளிகள்.

சுற்றி நிற்பவர்கள் இல்யூசனைப் போல் மறைந்து விட, மூளையானது காது, வாய் இவற்றின் இயக்கத்தை நிறுத்தி கண்களுக்கு மட்டும் பவர் வழங்கியது போல பார்வை அவளை மட்டுமே பார்த்தது.

ஆருஷ் இவ்வாறு அதிர்ந்தது சில நிமிடங்களே அடுத்த நொடி அவளின் நிலை புரிய, தன்மீது சாய்ந்திருந்தவளை கன்னத்தை மெதுவாக தட்டி, “ஹர்ஷி… ஹர்ஷி” என தொண்டை அடைக்க உயிரைத் தேக்கி அழைத்தான்.

அதற்குள் யாரோ தண்ணீரை கொடுக்க உணர்வு பெற்று அதை வாங்கி அவள் முகத்தில் தெளித்தவன், கொஞ்சமாக குடிக்கப் புகட்டினான்.

அதற்குள் கீழே வந்த தர்ஷியோ, “யார்டா இவன் தூக்கிட்டு வந்ததோட நிக்காம என்னமோ பொண்டாட்டிக்கு மயக்கம் வந்த மாதிரி இப்படி பண்றான்” என மனதுக்குள் அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள். பலபேர் சுற்றியிருக்க அவனை அதட்டவும் சங்கடம். இவனின் செயல்களைப் பார்த்து எரிச்சல் மீற, “ச்சே இந்த எரும எங்க போச்சு” என ஆதியை தேட, அவன் கண்களிலேயே படவில்லை.

இனியும் அமைதியாக இருக்க கூடாது என எண்ணி அவனை தடுக்க நினைத்தவள் அப்போதுதான் அவன் முகத்தை நன்றாக பார்த்தாள். மனதுக்குள் அதிர்வு. இது அவர்தானா! அன்று ஹாஸ்பிடல் அறையில் அறைகுறையாய் பார்த்தது. சரியாக நினைவில்லை. ஆனால் அவனது அழைப்பும், ஹர்ஷிக்கான தவிப்பும் இது அவன்தான் எனக் கட்டியம் கூறியது.

ஆருஷோ,”கடவுளே! இது எப்படி சாத்தியம். நான் கனவு காணுகிறேனா!” இல்லை, இது நிஜம் என அவனது கழுத்தில் மெல்லியதாய் படும் ஹர்ஷியின் மூச்சுக் காற்று உணர்த்தியது.

இல்லை…இல்லை..இது உண்மைதான். என் ஹர்ஷி வந்துட்டா…என்கிட்டயே வந்துட்டா… என ஆருஷ் தன் தோளில் துவண்டிருந்தவளை மேலும் இறுக்கமாக அணைக்க, மறு கை அவளது அவளை வருடியவாறு இருக்க, அவள் நெற்றியில் மென்மையிலும் மென்மையாய் தனது இதழ்களை ஒற்றியெடுத்தான்.

அவனது அச்செயலில் அதிர்ந்த தர்ஷி சுற்றியிருந்தவர்களை சங்கடத்தோடு பார்க்க, அவர்களோ, ” பொண்டாட்டி மேல பாசம் அதிகம் போல, அதான் அந்த பையன் இப்படி தவிக்குது” என கூறி வைத்ஙனர். “இதென்னடா வம்பா போச்சு, அந்த ஆதி எரும வந்தா அவ்ளோதான். அதவிட இந்த விசயம் அப்பா அம்மா காதுக்கு போச்சு மறுபடியும் ஜெயில் வாழ்க்கைதான் ஹர்ஷிக்கு” என நினைத்தவள் சட்டென ஹர்ஷியின் மறுபக்கம் அமர்ந்து அவளை தனது தோளுக்கு இடம்மாற்றினாள்.

தாயின் தோளில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை யாரோ மூன்றாம் நபர் வெடுக்கென பிடிங்கியது போல, சட்டென கோபம் மூண்டது ஆருஷிற்கு.

ஆருஷ் தர்ஷியை கடுமையாக முறைத்துத் தள்ளியவன், கோபமாக ஏதோ கூற வாயெடுக்க அதற்குள் ஆதித்யா வந்துவிட்டான்.

ஹர்ஷியின் மயக்க நிலையைக் கண்டு பதறியவனாய், “ஹேய் என்னாச்சு ஹர்ஷிக்கு…ஹர்ஷி..ஹர்ஷி” என அழைக்க மெதுவாக கண் விழித்தாள் அவள். தர்ஷி நடந்ததைக் கூறினாள்.

கண்விழித்தவள் தன் முன் கூட்டமாக சிலர் நிற்பதை கண்டு, ஏன் என்று யோசிக்க அப்போதுதான் தான் விழுந்தது ஞாபகம் வந்தது, “சாரி, அது கவனிக்காம” இப்படியா விழுந்து வைப்பாய் ஹர்ஷி என தன்னிரக்கத்தில் தடுமாற,

அவளருகில் மண்டியிட்டவன், “இட்ஸ் ஓ.கே. உனக்கு ஒண்ணுமில்லயே! ஹாஸ்பிடல் போகலாம் வா” என அழைத்தான்.

“நோ..ஆதி ஐ அம் ஆல்ரைட்…நோ நீட் டு கோ. ” என தெளிவாக உரைத்த பின்னரே விட்டான்.

ஆருஷிற்கு ஒன்றும் புரியவில்லை.ஆதித்யாவிற்கும், ஹர்ஷிக்கும் எப்படி பழக்கம் என புருவம் நெளித்து யோசிக்க தொடங்க, அவன் யோசனை நின்ற இடம் அவ்வளவு உவப்பாக இல்லை.

இல்லை, அப்படி இருக்காது என உறுதியாக நம்பியவன் அவர்களையே பார்த்திருந்தான். நொடியில் ஹர்ஷியிடம் இருந்து அந்நியமாக்கப் பட்டது போல தோன்றியது. கைகளை மூடிக் கோபத்தைக் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான்.

ஆதி ஹர்ஷியிடம் விசாரித்தவன், பக்கத்தில் இருந்த ஆருஷைப் பார்த்து, “ஹே .. வாட் அ ஸர்ப்ரைஸ் ஆருஷ், நீ எங்க இங்க!” என சம்பிரதாயமாய் கேட்க,

ஆருஷ் பதில் சொல்வதற்குள் தர்ஷியே, “இவர்தான் அக்காவ தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்ணினார்” என சமாளித்தாள் .

தங்கையின் பதிலில் ஹர்ஷி திரும்பி பார்க்க, ஆருஷ் அவளைத்தான் கண்களில் எதிர்பார்ப்போடு பார்த்திருந்தான். தன்னை ஏந்த மாட்டாளா என தன் அன்னையை ஏக்கத்தோடு பார்க்கும் குழந்தையைப் போல் இருந்தது அவன் தோற்றம்.

அவன் பார்வையின் தவிப்பைக் கண்டு சிலிர்த்தவள், “என்ன பார்வை இது ” என பயந்து தர்ஷியின் புறம் திரும்பிக் கொண்டாள். அதைப் பார்த்த ஆருஷ் இதயத்தை யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததைப் போல துடித்தான்.

” என்னைத் தெரியவில்லையா? எதற்கடி இந்த பயம். நான் என்ன அரக்கனா?” என அலறிய மனதை நீவி நீவி சமாதானப்படுத்தினான்.

ஆதியோ, “ஓ..தேங்கஸ் மேன்” என அவனை எழுப்பிக் கட்டிக் கொண்டவன், விலகியவாறு, “இவங்க ஹர்ஷி…ஹர்ஷினி என்னோட ஃபியான்ஸே” என ஆருஷ் கனவிலும் கேட்க நினைக்காத ஒன்றைக் கூறினான்.

ஏன் சீதா தேவியை மட்டும்தான் இந்த பூமித்தாய் அழைத்துக் கொள்வாளா! என்னையும் இந்நேரம் தன்னுள் புதைத்திருக்க கூடாதா? என அழுதது அவன் மனம்.

அதன் பிறகு ஆதி பேசியது எதுவும் அவன் காதுகளை சென்றடையவில்லை. இறுதியாக, “கூடிய சீக்கிரம் இன்விடேஷனோட வரேன் ஆருஷ் ” என்றவன் வாங்க போகலாம் என்று சகோதரிகளை அழைத்துக் கொண்டு சென்றான்.

தர்ஷிக்கு ஆருஷைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அதீத அதிர்ச்சியில் ரத்தப்பசையற்று வெளுத்த அவன் முகத்தை காணவே சகிக்கவில்லை. அவனுக்கான மருந்து இருக்குமிடம் அவளுக்கு தெரியும். ஆனால் அதை அடையும் வழி? அவனைப் பாரத்துக் கொண்டே மௌனமாய் அவனைக் கடந்து சென்றாள். ஹர்ஷியும் மௌனமாக கடந்து செல்ல,

தன்னைத் தாண்டிச் செல்லும் ஹர்ஷியை இப்படியே இழுத்துக் கொண்டு செல்ல ஆசைதான். அவனால் அது முடியும்தான்.

ஆனால் அவள் தன்னை யாரென்றே தெரியாததைப் போல் நடந்துக் கொள்வது ஏன்? அதைவிட அவள் இறந்து போனதாய் ஏன் கூறினார்கள்? ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? என கேள்விகள் நாலாபுறமும் மண்டையை துளைக்க, திடீரென்ற அதிர்ச்சியில் தன்னைப் பிரிந்து செல்லும் ஜீவனை வெறித்தவனாய் நின்று கொண்டிருந்தான் ஆருஷ்.

ஆருஷின் பார்வை படபடக்கச் செய்ய, தங்கையை மேலும் நெருங்கி அவளை இறுக்கமாக பற்றிக் கொண்ட ஹர்ஷி, சிறிது தூரம் சென்று, நின்று திரும்பி பார்க்க ஆருஷ் இன்னும் அதே இடத்தில் அதை விட இன்னும் ஏக்கத்தைத் தேக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை ஏதோ செய்ய தர்ஷியின் கையை விலக்கி ஆருஷை நோக்கிச் சென்றாள். இவர்கள் நின்றதை கவனிக்காமல் ஆதி முன்னே செல்ல தர்ஷி ஒருவித எதிர்பார்ப்புடன் நின்றிருந்தாள்.

ஹர்ஷி ஆருஷின் அருகில் வந்தவள், அவன் கண்களோடு கலந்து “தேங்க்ஸ்” என நன்றியுரைத்துவிட்டு, சிறிது தயங்கியவள், “என்னை உங்களுக்கு தெரியுமா?” என எதிர்பார்ப்புடன் கேட்க,

அதில் இவன் கலங்கி முச்சை அடைத்தது , ‘என்னவாயிற்று இவளுக்கு, என்னைத் தெரியவில்லையா? கொல்லாதே பெண்ணே! உன் கேள்விக்கு என்ன பதில் கூறுவேன் தெரியும் என்றா? ஆனால் அந்த பதில் முழுமையானதாக இருக்காதே’ என நினைத்துக் கொண்டிருக்க,

தாடை இறுக மூச்சை அடக்கி கண்களில் வலியோடு நோக்குபவனின் துயர் அவளையும் தாக்கியது. ஏன் இத்தனை தவிப்பு அவனிடத்தில்…என்னால் இதை போக்க முடியாதா? அவனை உனக்குள் புதைத்து அவனுக்கு ஆறுதல் கொடு எனப் பாடாய்ப் படுத்தும் எண்ணங்களை அடக்க முடியாமல், “என்னாச்சு உங்களுக்கு, ஏன் அப்படி பாக்கறீங்க. நா…..ன் எதாவது செய்ய முடியுமா ” எனத் திக்கி தினறியபடி கேட்டாள். அவளது உள்மனம் எதாவது செய் என கட்டளை இட, தன்னால் என்ன செய்ய முடியும் என தெரியாமல் தவித்து நின்றிருந்தாள் ஹர்ஷி.

வெறும் பார்வை மட்டுமே அவனிடம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, எங்கே ஆதி மீண்டும் வந்துவிடுவானோ? இதைப் பார்த்தால் ஹர்ஷிக்கு எதாவது பிரச்சனை வருமோ? என நினைத்த தர்ஷி, “ஹர்ஷ் வா டைமாகுது” என அழைத்துச் சென்று விட்டாள்.

செல்லும் அவளை தடுக்க இயலா இயலாமையோடு அங்கேயே நின்றிருந்தான் ஆருஷ். ஹர்ஷியும் காந்தமாய் ஒட்டிக் கொண்ட அவன் பார்வையோடும், நினைவோடும் தர்ஷியுடன் சென்றாள்.

இருவரும் வருவதற்குள் ஆதி காரைக் கிளப்பி தயாராய் இருக்க இவர்கள் ஏறியதும் வண்டி வேகமெடுத்தது. ஹர்ஷி ஆருஷையும் அவன் பார்வையையுமே நினைத்துக் கொண்டு வர, தர்ஷியும் ஆருஷைப் பற்றிதான் யோசித்துக் கொண்டு வந்தாள்.

“ச்சே இந்த எரும மட்டும் இல்லனா இந்நேரம் அவரை பத்தி விசாரிச்சிருக்கலாம், எல்லாம் இவனால. இவன யாரு எங்க கூட வரச் சொன்னது. சரியான காட்டு எரும” என சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் ஹர்ஷி தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட, தர்ஷி ஹாலில் அக்கடாவென அமர்ந்தாள். அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது. வேலை செய்யும் பெண்மணி காலையும் மாலையும் தான் வருவார். அவர் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. ஆதி இவளருகில் நெருங்கி அமர்ந்தவன், “என்ன ரொம்ப காப்பாத்தற போல” என சீண்டலாக வினவ,

அவனது கேள்வியில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். “இல்ல உங்கக்காவ பாத்துக்கிட்டயே அதச் சொன்னேன்.” எனக் கூற, இப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது. இவன் எதாவது ஏடாகூடமாக பார்த்து வைத்து விட்டானா என அலறிய மனது இப்போது கோபத்தை ஏற்க, அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள்.

அன்று இரவு ஹர்ஷியின் கனவில் வரும் அந்த நிழலானவன், “ஹர்ஷி… என்னை மறந்துட்டயா! வா வந்துடு, என்னோட வந்துடு” என அழைக்க,

“இல்ல நான் வர மாட்டேன். நீ யாருன்னே தெரியாது, போயிடு இங்கயிருந்து…போயிடு”

“என்ன ஹர்ஷி என்னை தெரியலயா…நான்தான் ஆருஷ்” என ஆருஷின் உருவம் தோன்ற விதிர்விதித்து எழுந்தாள் ஹர்ஷி.

பேயைக் கண்டு அரண்டவள் போல மூச்சு வாங்க அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகள் நடுங்க வாயில் நீரைச் சரித்துக் கொண்டவள், சற்று நிதானம் வந்தவுடன், “என்ன இது இத்தனை காலம் நிழலாய் வந்த உருவம் இன்று அவனின் முகத்தை தாங்கி நிற்கிறதே” என்ற கேள்வியுடனே தூங்காமல் இரவைக் கழித்தாள்.

இங்கு ஆருஷோ அவனது வீட்டில் இருக்கும் ஹர்ஷியின் முன் நின்றிருந்தான். அவனது நினைவுகள் எட்டு வருடங்களுக்கு முன் நோக்கி பயணித்தது.