UyirKadhaleUnakagave9

UyirKadhaleUnakagave9

காதலின் நினைவலைகள்….

7.4.2010

காலநிலை மாறுமடி காதல் மாறுமா…
மாறுவது உண்மையுள்ள காதலாகுமா??
என் எண்ணத்தில் பல வண்ணங்கள்
இது உன்னால் வந்ததே…
நீயில்லாமல் அது ஒவ்வொன்றும்
கண்ணீர் சிந்துதே…
என் காதல் ஓடம் கரை சேராமல்
கடலில் நிற்குதே…!

உலகில் உள்ள வலிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு பெயர் வைத்தால் அதுதான் காதல். என்னை ஒரே நேரத்தில் அழவும் சிரிக்கவும் வைக்கிறது இந்த இம்சையான காதல்.

என்னவளின் முகத்தை மனக்கண்ணில் நினைத்தவுடன் புன்னகைக்கும் உதடுகள், அவள் வசப்படாத வானம் என்பதை உணர்ந்ததும் கண்ணீர் சிந்தும் கண்கள். ஏக்கத்தைத் தேக்கிய நெஞ்சம். என்னைக் கொல்லாமல் கொல்லும் அவள் நினைவுகள்.

மாதவியின் ரிசப்ஷன் முடியவும் மேலும் ஒரு வருடம் வேலையை நீட்டித்துக் கொண்டு நியூயார்க் சென்றவன் தற்போது ஆச்சி தாத்தாவின் சதாபிஷேகத்துக்குதான் மதுரைக்கு வந்திருக்கிறேன்.

மாதவிக்கு ஏக வருத்தம் என்மேல். இதோ இப்போதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் திரிகிறாள். அவளது புகுந்த வீட்டுக்கு நான் இதுவரை வரவில்லையாம். எப்படி வருவேன் நான்? என் நிலையைப் புரிந்து கொள்ளாத கோபம் அவளுக்கு.

மாதவியின் ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்து அனைவரையும் மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தவன், எவ்வளவு வற்புறுத்தியும் அவர்களோடு செல்ல மறுத்துவிட்டேன். அந்த கோபம் அவளுக்கு.

நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவளின் மனம் கோணாத வகையில் சமாதானங்கள் செய்தபோதும் ஏற்காமல் முறுக்கிக் கொண்டவளை வினோத்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

“உங்களுக்குத் தெரியாதுங்க. ஆனந்தன் இப்படி இருக்கற ஆளே கிடையாது. நம்ம கல்யாணத்துல இருந்தே இவன் சரியில்ல. எதுலயிருந்தோ தப்பிச்சுப் போறவன் மாதிரி யார் பேச்சையும் கேட்காம மறுபடி வெளிநாட்டுக்கு ஓடிட்டான்.

என் வளைகாப்புக்குக்கூட வரலை. இப்பவும் ஆச்சிக்காகதான் வந்திருக்கான். எனக்கு கூடப் பொறந்த பொறப்பா அவனைதான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா அவன் எனக்கு மறுவீட்டு சடங்குக்குகூட வரமாட்டேன்னுட்டான்.”

கண்கள் கலங்க பொறிந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன். “லூசு… இந்த நேரத்துல போய் கண்கலங்குற. இப்ப என்ன? உங்க ஊருக்கு வரனும் அவ்வளவுதான, வரேன்.”

“அதுமட்டுமில்ல, நீ வெளிநாட்டுக்குப் போகக்கூடாது. நினைச்சா உன்னைப் பார்க்க முடியற மாதிரி இந்தியாக்குள்ளதான் இருக்கனும்.”

தள்ளாத வயதிலும் உணவைப் பிசைந்து எடுத்து வந்து ஊட்டிய ஆச்சியும் அதையே கேட்டதால், சற்று யோசித்தாலும் அவர்களது மனம் கோணாமலிருக்க சம்மதம் சொன்னேன்.

ஆனால், இதோ இப்போது விசேஷ வீட்டில்கூட வந்து இறங்கியதும் என் கண்கள் தன்னிச்சையாக பூரணியைதானே தேடியது. இத்தனை உறவினர்கள் கூடியிருக்க, அவளைக் காணாமல்தானே தவிக்கிறது.

யாரிடமும் அவளைப் பற்றி விசாரிக்கக்கூட முடியாமல் தவித்தபடி இருந்தவன், பூரணியின் அம்மாவிடம் நலம் விசாரிப்பது போலதான் விசாரித்தேன்.
“பசங்களை கூட்டிட்டு வரலையா ஆண்ட்டி?”

“இல்லப்பா… பூரணிக்கு டுவெல்த் பப்ளிக் எக்சாம் டைம். அவ படிச்சிட்டு இருக்கா. அருண் அவளுக்குத் துணையா இருக்கான். அதான்பா அவங்க வரலை.”

உள்ளே ஏமாற்றம் கவ்விய போதும், அவள் வராததும் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டேன்.

“பூரணி டாக்டராகனும்னு கஷ்டப்பட்டு படிக்குதுப்பா. மாதவி வளைகாப்புக்குக்கூட வரல.” என்று ஆரம்பித்து ஒரு வருடக் கதை முழுவதையும் கூறிமுடித்தார் என் அத்தை.

‘மருத்துவம் படிக்கப் போகிறாளா?’ என்னவளைப் பற்றி காதில் வந்து விழுந்த செய்திகளைப் பொக்கிஷமாகப் பதிந்து கொண்டேன்.

பேச்சோடு பேச்சாக என் திருமணப் பேச்சை என் சகோதரிகள் ஆரம்பிக்க, ஆவலோடு என் முகம் பார்த்த அம்மாவையும் ஆச்சியையும் தவிர்த்துவிட்டு விலகி வந்தேன்.

இதற்காகத்தானே வெளிநாடு ஓடிப்போனேன். திருமணத்தைத் தவிர்த்துத் தள்ளிப் போடத்தானே விலகி இருந்தேன்.

கண்ணில் படாதது கருத்தில் நிலையாது என்று எண்ணியிருந்தேனே… அவளைப் பார்க்காமல் இருந்தால் மறந்துவிட முடியும் என்று எண்ணியிருந்தேனே… ஆனால்,
கடந்த ஒரு வருடமும் முழுமையாக வேலைக்குள் என்னை புதைத்துக் கொண்டாலும் அவள் முகத்தை மறக்கமட்டும் என்னால் முடியவே இல்லை. அதில் வெற்றிகரமாகத் தோற்றுதான் போனேன்.

மறக்கும் இடத்தில் அவளும் இல்லை. அவளை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை என்பதை இந்த ஒரு வருடம் எனக்கு நன்கு உணர்த்தியிருந்தது.

அவள் நியாபகம் என்னுள் அழியாமல் நிறைந்திருக்கிறது. அவள் நியாபகங்களுடன் நான்தான் அழிந்து கொண்டிருக்கிறேன். இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் நான் பித்தாவது உறுதி.

எனக்கே என்நிலை புரிகிறது. அவளை மறக்க எனக்கொரு போதை வேண்டும். கண்மண் தெரியாமல் அதற்குள் நான் மூழ்க வேண்டும். புதிதாக என்னை செதுக்கிக் கொள்ளும்படி… முற்றிலும் நான் மாறி விடும்படி ஏதாவது ஒன்று… எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்…

நினைத்தால் வரமுடியாத தொலைதூரத்தில் இருந்தபோதே இந்த நிலை… இன்னும் இங்கேயே வந்துவிட்டால்… என்னை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா?
ஒரு நொடிகூட எதையும் சிந்திக்காமல் நான் மூழ்கிப் போகும்படி எதையாவது செய்ய வேண்டும். எனக்கோ என் குடும்பத்துக்கோ மரியாதைக் குறைவான செயல்களை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். அது எனக்குத் தெரியும்.

நான் எடுக்கப் போகும் முடிவுகள் யாரையும் பாதிக்காத விதத்திலும் இருக்க வேண்டும்… குடும்பத்தினர் மனதை சங்கடப் படுத்தவும்கூடாது, அதே நேரத்தில் குறைந்தது இரண்டுமூன்று வருடங்களுக்காவது என் திருமணப் பேச்சை யாரும் எடுக்காமல் இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி இருந்த போதுதான், எதிர்பாராமல் என் நெருங்கிய பால்ய நண்பன் சேகரை வெகுநாட்கள் கழித்து சந்தித்தேன். என்னுடைய விசா சம்பந்தமான பணிகளை முடிக்க சென்னை வந்தபோதுதான் அவனைப் பார்த்தேன்.

அரசுப் பணிக்கான தேர்வுகளை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தான் அவன். அதிலும் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுக்காக தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான்.

“சாப்பிடத் தூங்கக் கூட முடியலடா. எப்படியாவது வேலை வாங்கிடனும்னு வெறியோடப் படிக்கிறேன். மைண்டு எதுக்குமே போக மாட்டேங்குது. ஊருக்குப் போயே பலமாசமாச்சு.” அவனுடைய புலம்பல் எனக்கு நல்ல வழியைக் காட்டியதாக எண்ணிக் கொண்டேன்.

மூன்று மாதகாலம் மீதியிருந்த என்னுடைய பணியை நியூயார்க்கில் முடித்துக் கொண்டு வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியவன், பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தேன்.

அலையடிக்கும் …

உயிரின் வேட்டை…

சரணின் அலுவலக அறை… கடிகார ஓசையைத் தவிர்த்து வேறு ஓசையில்லாமல் நிசப்தமாயிருந்தது. ஒற்றைப் புருவத்தை இடதுகை ஆள்காட்டி விரலால் வருடியபடி தனது மடிக்கணிணியை வெறித்திருந்தது அவன் பார்வை.

உள்ளுக்குள் இந்த வழக்கைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சிறு எவிடன்ஸ் கூட கிடைக்கவில்லை. அந்த மாலின் கார்பார்க்கிங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளிலும் கொலைகாரனின் உருவம்தான் விழுந்திருக்கிறதே ஒழிய அவனது முகம் துளிக்கூடத் தெரியவில்லை.

ஆனால் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் ஹரிணியின் வாக்குமூலமும் இரண்டு கொலைக்கும் காரணமானவன் ஒருவனே என்று உறுதியாகக் கூறிவிட்டது. கலெக்டர் கிஷாருக்கு விழுந்த அதே அளவு ஆழமான காயம் ஜனார்த்தனனுக்கும் இருந்தது. கூடுதலாக அவருடைய இரண்டு கைகளின் மணிக்கட்டும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஜனார்த்தனன் இறப்பதற்கு முன் கொலையாளியோடு போராடியிருப்பது தெளிவாக சிசிடிவி பதிவுகளில் தெரிகிறது. இருவரும் சண்டையிட்டிருக்கின்றனர். ஜனார்த்தனன் கொலையாளியை பலமாகத் தாக்கியிருக்கிறார்.

கொலையாளி வர்மக்கலையை உபயோகப்படுத்தி அவரது கைகளை செயலிழக்கச் செய்து பிறகு கூரான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறான் என்பது தெளிவாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஜனார்த்தனனின் வீட்டிற்குச் சென்று முறையாக விரிவான விசாரணை நடத்திவிட்டு வந்திருந்தான் சரண். அவருடைய இளமைப் பிராயத்திலிருந்து தற்போது கடைசியாக அவர் விசாரித்துக் கொண்டிருந்த வழக்கு விபரம் வரை அவனது கைகளுக்கு வந்திருந்தது.

இரண்டு அரசு அதிகாரிகள், அதுவும் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல். மண்டை காய்ந்தது அவனுக்கு.
உயர் அதிகாரிகளும் அரசியல் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் பிரஷர் ஒருபக்கம், செய்திகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் வரும் செய்திகள் ஒரு பக்கம் என்று மிகுந்த டென்ஷன் அவனுக்கு.

“சைக்கோ கொலைகாரனா?” “அரசு அதிகாரிகளைக் குறிவைத்துக் கொல்லும் கொலையாளி யார்?” “மக்கள்நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த கொலைகள்”

“போலீஸ் தூங்குகிறதா?” விதவிதமான தலைப்புகளில் விவாதங்களும் செய்திகளும்….
டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில் வரும் செய்திகளும் விவாதங்களும் மிகவும் கடுப்பாக்கியிருந்தது அவனை. அதுமட்டுமில்லாமல் மேலதிகாரிகளின் பிரஷர் வேறு…

கொலைக்கான ஒரு சிறு புள்ளி கிடைத்தாலும் போதும். ஏதேனும் சிறு தடயம், கைரேகை எதுவுமே கிடைக்காமல் என்ன செய்வது?

கொலைக்கான மோட்டிவும் பிடிபடவில்லை. கொலைசெய்யப்பட்ட இருவருக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் இருவரும் இளம் அரசு அதிகாரிகள். பிறப்பால் தமிழர்கள். நல்ல வசதியான பின்புலம் உடையவர்கள். இருவருமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி பணிக்கு வந்தவர்கள் அவ்வளவுதான்.

ஆனால் தமிழர்களாயிருந்தாலும் இருவரும் பிறந்தது வெவ்வேறு இடங்களில். வயது வெவ்வேறு. இருவருடைய பள்ளி கல்லூரி காலங்கள் வெவ்வேறு இடங்களில். இருவரும் பணிக்கு வந்த வருடங்கள்கூட வெவ்வேறு. இருவரும் பணிக்கு வரும்முன் சந்தித்திருக்கக்கூடிய வாய்ப்புகள்கூட குறைவுதான்.

முப்பத்து நான்கு வயது கிஷோர் பிறப்பால் தமிழனாக இருந்தாலும் இளமைப் பருவம் படித்தது அவ்வளவும் பெங்களூருவில்தான். சிவில் சர்வீஸ் தேர்வில் நல்ல ரேங்கிங்கில் தேர்வாகி முதலில் மணிப்பூரில் உதவி கலெக்டராக இருந்தவர், இரண்டு வருடங்களுக்குப் பிறகு குஜராத்தில் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார்.

பெங்களூரு சிட்டி கலெக்டராக பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இருந்த இடங்களில் எல்லாம் ஆரசியல் தலைகளுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். பெரிய அளவிலான சர்ச்சைகள் எதிலும் சிக்கியிருக்கவில்லை.

ஜனார்த்தனனைப் பொருத்தவரை அவருடைய இளமைப் பருவமும் தொடக்கக் கல்வி உயர்கல்வி கல்லூரிப் படிப்புகள் அனைத்துமே ஹைதராபாத்தில் முடித்திருக்கிறார். முதலில் சொந்த மாவட்டத்தில் மூன்று வருடங்கள் பணியில் இருந்தவர், தற்போது மூன்று வருடங்களாக பெங்களூருவில் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வயது முப்பத்து இரண்டு.

இருவருமே அரசியல்வாதிகளோடு இணக்கமாகவே இருந்திருக்கின்றனர். பெங்களூருவில் இருவரும் இணைந்து பணியாற்றிய கடந்த இரண்டு வருடங்களில் இருவரும் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளின் விபரங்களையும் எடுத்து அதைதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

வெகுநேரம் கணிணியை முறைத்துப் பார்த்து, மண்டை சூடாவது போல உணர்ந்தவன், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான். கண்களை மூடியதும் மனம் தன்னவளின் நினைவுக்குப் போனது.

காலையில்தான் அவளைக் கொண்டு கல்லூரியில் விட்டுவிட்டு வந்திருந்தான். தனியே எங்கேயும் போகாதே என்று அறிவுருத்தியிருந்தான். சுஜியிடமும் எச்சரித்திருந்தான்.
அவள் போகுமிடமெல்லாம் அவளுக்கு செக்யூரிட்டி போடுவது என்பது இயலாத காரியம். ஆகவே கவனமாக இருக்கும்படி கூறியிருந்தான். சரியாக ஹரிணி செல்லும் இடங்களில் எப்படி கொலைகள் நிகழ்ந்தது என்பது இதுவரை புரியவில்லைதான்.

கலெக்டர் கிஷோர் கொலையின் போது ஹரிணி ஜாக்கிங் சென்றவள்தான் எதிர்பாராமல் கொலையைப் பார்த்து பயந்து ஓடி வந்திருக்கிறாள். அதே போல ஜனார்த்தனனை ஹரிணி அந்த மாலுக்குப் பார்க்கப் போவது ஹரிணி சுஜி ரேணு ஜனார்த்தனன் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

கொலையாளி ஜனார்த்தனனை பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும், தனிமையில் கார்பார்க்கிங்கில் வாய்ப்பு கிடைத்ததும் கொன்றிருக்க வேண்டும். அந்த இடத்துக்கு எதிர்பாராமல் அவரைத்தேடி வந்த ஹரிணி கொலையாளியைப் பார்த்திருக்க வேண்டும்.

கொலையாளியின் நோக்கம் ஜனார்த்தனன் கிஷோரைக் கொலை செய்வது மட்டுமே, அதனால்தான் ஹரிணி கொலையை பார்த்தாலும்கூட அவளை எதுவும் செய்யாமல் கடந்திருக்க வேண்டும். அவ்வளவும் அவனுடைய யூகம்தான். தவறாகக் கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.

காலையில் ஹரிணியை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்குமுன் அவனுடைய அலுவலக அறைக்குதான் அழைத்து வந்திருந்தான். கிஷோர், ஜனார்த்தனன் இருவரும் பெங்களூருவில் இணைந்து பணிபுரிந்த இந்த இரண்டு வருடங்களில், இருவரும் சம்பந்தப்பட்டிருந்த முக்கியமான வழக்குகளில் பிடிபட்ட சந்தேகப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தான்.

அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அவளிடம் காட்டி அதில் அவள் பார்த்தக் கொலையாளி இருக்கிறானா என்று சொல்லச் சொல்லியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பொறுமையாக அனைத்துப் புகைப்படங்களையும் பார்த்துவிட்டு இதில் இருப்பவர்கள் யாருமில்லை என்று கூறியிருந்தாள் ஹரிணி.

கொலைசெய்யப்பட்ட இருவருக்கும் என்ன சம்பந்தம்? ஒரேமாதிரி ஒரே ஆளால் இருவரும் கொலை செய்யப்பட என்ன காரணம்? கேஸ் பற்றிய அனைத்து விபரங்களையும் ஹரிணியிடம் கூறியதில் அவளுக்குமே குழப்பமாக இருந்தது.

கொலையாளி மாலில் இருந்து வெளியேறி அரசுப் பேருந்து ஒன்றில் ஏறுவது வரை சிசிடிவி பதிவுகளில் தெரிகிறது. அந்த பேருந்து செல்லும் வழித்தடம் முழுக்க உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சோதிக்கும்படி ராகுலை அனுப்பியிருக்கிறான்.

சற்று கடினமான வேலைதான். ஆனால் வேறுவழியில்லை. அதிலும் வெறும் கறுப்பு ஜெர்க்கினும் ஹூடியும் அணிந்தவன் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு பெங்களூரு ஜனத்திரளில் அவனைத் தேடுவது, திருப்பதியில் மொட்டையடித்தவனைத் தேடுவது போலதான். எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது தெரியாது.

அடுத்து இது போன்ற சம்பவம் எங்கும் நடக்காமல் தடுக்க வேண்டும். இன்னும் ஒருமுறை இப்படி நடந்தால் பெரிய அளவில் சர்ச்சைகளும் விவாதங்களும் நடைபெறக்கூடும். தீயவர்களை ஒழிக்கிறேன் என்று ராபின்ஹூட் போல எவனும் கிளம்பி விட்டானா? கடுப்பாக வந்தது அவனுக்கு.

ஹரிணிக்கு அழைத்துப் பேசலாம் என்று அலைபேசியை எடுத்தவன் நிதானித்தான். தற்போது அவளுக்கு பாடவேளை நேரமாக இருக்கக்கூடும். தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணியவன், காலையில் அவளைக் கல்லூரிக்குக் கொண்டு சென்று விடும் முன்பு அவளிடம் ஒற்றை முத்தத்திற்காய் வம்பிழுத்ததை எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

விடாக்கண்டனாய் இவனும் கொடாக்கண்டனாய் அவளும் போராடியபோதும், வென்றது என்னவோ சரண்தான். மொத்தமாக முற்றுகையிட்டவனை விலக்கித் தள்ளி மூச்சுவாங்க நிமிர்ந்தவள், “இவ்வளவு ரணகளத்திலும் உங்களுக்கு குதூகலம் கேட்குதுல்ல…” அவனிடமிருந்து விடுபட முயன்றபடி முறைக்க,

“இப்படி அப்பப்ப குதூகலமா இருந்தாதான் எவ்வளவு ரணகளம் வந்தாலும் சமாளிக்க முடியும்டி ஹனிக்குட்டி.”

“இதுக்குதான் காலையிலயே கேஸ் விஷயமா பேசனும்னு கூட்டிட்டு வந்தீங்களா?”

“டூ இன் ஒன் ஹனிக்குட்டி. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கம்ப்யூட்டரை வெறிச்சுப் பார்த்து மண்டை சூடாச்சு இல்ல… இப்பப்பாரு எவ்வளவு சில்லுன்னு இருக்கு.”

“ம்ம்… இருக்கும் இருக்கும். காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சி. சீக்கிரம் கூட்டிட்டுப் போங்க.” சினுங்கியபடி வெளியேறியிருந்தாள்.

கல்லூரியில் ஹரிணியுமே இந்த நிகழ்வைத்தான் தனக்குள் ஓட்டிப் பார்த்து சிவந்து கொண்டிருந்தாள். காலை வகுப்புகள் முழுவதையும் மொத்தமாக கட் அடித்திருந்தனர் அவளது வகுப்பு மாணவர்கள்.

வெளியே எங்கேயும் போகாதீர்கள் என்று சரண் எச்சரித்துச் சென்றிருந்தாலும், வகுப்பு மொத்தமாக கட் செய்துவிட்டு ரேணுவைப் பார்க்க போகலாம் என்று மாணவர்கள் முடிவெடுத்தபோது, மறுக்க முடியாமல் உடன் சென்றிருந்தனர்.

கேஸ் பற்றிய விபரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று சரண் கூறியிருந்தபடியால் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டு வந்திருந்தனர்.

ரேணுவைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு அவளது அண்ணன் நல்ல உயர்பதவியில் இருக்கும் அதிகாரி என்பதில் ஏக பெருமை. அவள் பேசும் வார்த்தைகளில் பாதி அவளது அண்ணனைப் பற்றியதாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அண்ணனின் இழப்பு வெகுவாக பாதித்திருந்தது அவளை.

பெரிய அளவிலான வீடு, ஹாலின் மையத்தில் ஜனார்த்தனனின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு இடமும் அவர்களது செல்வச் செழிப்பை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

அவளது குடும்பத்தினர் அனைவருமே தளர்ந்து போயிருந்தனர். ஜனார்த்தனனுக்கு திருமணம் முடிவாகியிருந்ததால் கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டிய வீடு அவனது இழப்பால் சோகத்தில் மூழ்கியிருந்தது.

ரேணுவுமே ஹரிணியிடமும் சுஜியிடமும் சரியாக பேசக்கூட இல்லை. உங்களைப் பார்க்க வந்துதானே என் அண்ணனுக்கு இப்படி ஆனது என்று எண்ணியிருப்பாள் போலும். இவர்களுமே அதை உணர்ந்து ஒதுக்கமாகவே இருந்துவிட்டு வந்திருந்தனர்.

மதிய இடைவேளைக்கு இன்னும் நேரமிருப்பதால் லைப்ரரிக்கு வந்தவள் கைக்குக் கிடைத்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். சுஜியுமே அவளுக்குத் தேவையான புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து அதில் ஆழ்ந்திருக்க, ஹரிணியின் எண்ணம் முழுவதுமே சரணின் நினைவுகள். விரல்கள் அவன் அணிவித்த மோதிரத்தை வருடியபடி இருந்தது.

பெற்றவர் சம்மதத்தோடு திருமணமும் முடிவாகி இடைப்பட்ட காலத்தில் காதல் கொள்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. திருமணம் என்று முடிவான இந்த நான்கு நாட்களும் அவனை மட்டுமே நினைக்கச் செய்திருந்தான் கள்ளன்.

அவன்மீதான மையல் இன்னும் இன்னும் கூடிக்கொண்டே செல்வதை வெட்கத்தோடு உணர்ந்து கொண்டாள். சுஜிகூட வெகுவாக கிண்டல் செய்வதும் இதற்காகதான். காலையில் கல்லூரிக்கு வந்தவளிடம் ஏகத்துக்கும் வம்பிழுத்திருந்தாள்.

“நாலு நாளுக்கு முன்னாடி இருந்த ஹரிணிக்கு இப்ப இருக்கற ஹரிணிக்கும் எவ்வளவு வித்தியாசம். எங்கடி போச்சு உன் பயமெல்லாம்?”

“இட்ஸ் கான்… போயிந்தே… போயே போச்சு… போலீஸ்காரன் பொண்டாட்டி தைரியமா இருக்க வேணாமா?”

“அடிப்பாவி… நீ பயந்த பயம் என்ன? கல்யாணம் வேண்டாம்னு சொன்னது என்ன? இப்படி சிங்கிள் புரபோசல்ல உன்னைக் கவுத்திட்டாரே உன் ஆளு.”

“ஹா… ஹா… நீ வேணும்னா பாரு இன்னோரு தடவை அந்தக் கொலைகாரன் மட்டும் என் கண்ணு முன்ன வந்தான் அவன் சட்டையப் பிடிச்சு, யாருடா நீ? எதுக்கு இப்படி பண்றன்னு கேட்காம வரமாட்டேன்.”

“அடிப்பாவி… நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்க. செய்தாலும் செய்வ.” சிரித்துக் கொண்டாள் சுஜி.

மதிய உணவு வேளைக்கான மணி அடித்ததும் லைப்ரரியில் இருந்து எழுந்து வந்தவர்கள், கேண்டீன் நோக்கிச் சென்றனர்.

“நிறைய புக்ஸ் வாங்கனும் சுஜி. மார்க்கட் ரோடு போகனும்.”

“ம்ம்… ஆமா இரண்டு நாளைக்கு முன்ன பாய் ஃபோன் பண்ணியிருந்தாரு. நாம கேட்டிருந்த புக்கெல்லாம் வந்திருக்காம். இந்த வாரம் போயிட்டு வருவோம்.”

எப்பொழுதுமே விலை அதிகமான புதிய புத்தகங்களை வாங்குவதை விட, பழைய புத்தகக் கடையில் சென்று சற்று மலிவாக வாங்குவது இவர்களது வழக்கம். சில நேரங்களில் அபூர்வமான புத்தகங்கள்கூட பழைய புத்தகக் கடையில் கிடைக்கக் கூடும்.

வழக்கமாக செல்லும் கடை ஆதலால், கடையின் ஓனரிடம் தேவையான புத்தகங்களின் பெயரை சொல்லி வைத்துவிட்டு வந்தால் கிடைத்ததும் ஃபோன் செய்வார். இவர்களும் சென்று வாங்கிக் கொள்வர்.

பேசிக்கொண்டே உணவை முடித்தவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்றனர்.

நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டலின் ஆடம்பரமான பார்… வெளியே பகலாக இருந்தாலும் உள்ளே அரையிருட்டில் மிதந்தது அந்த விஸ்தாரமான அறை…
ஹை சொசைட்டி மக்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பணக்காரகுடிமக்கள் அமர்ந்து தங்களுக்குத் தேவையானவற்றை பேரரிடம் ஆர்டர் செய்து போதையில் மிதந்து கொண்டிருந்தனர்.

மூச்சு முட்ட முட்ட குடித்திருந்தாலும் கண்களில் ஏறியிருந்த போதை மூளைக்கு எட்டாமல் மீண்டும் ஒரு கோப்பையை கையில் ஏந்தியிருந்தான் ஒருவன்.

“டேய் சஞ்சய்… போதும் உனக்கு ஏற்கனவே அதிகமாயிடுச்சி. கண்ட்ரோல் யுவர் செல்ஃப் மச்சி.”

“முடியலடா…”

ஆங்காரமாக கத்தியவனை அனைவரும் திரும்பிப் பார்த்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க, கூட இருந்தவனோ தவித்துப் போனான். பின்ன இவன் அடிக்கும் கூத்துக்கு பவுண்சர்கள் வந்தால் இருவரையும் அல்லவா குண்டுகட்டாகத் தூக்கி வெளியே வீசுவார்கள். பதறியபடி சஞ்சயை சமாதானப்படுத்தினான்.

“டேய், அவல்லாம் உனக்கு ஒரு ஆளா? விட்டுத்தள்ளு மச்சான்.”

“இல்ல… விடமாட்டேன் மகேஷ். நான் குறிவச்ச எவளையும் இதுவரை விட்டதில்ல. இத்தனை நாள் அவளை விட்டு வச்சிருந்தேன். இனி விடமாட்டேன். ஹரிணி… என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாதுடி.”

கண்களில் வெறியோடு கூறியவனை கலக்கமாகப் பார்த்திருந்தான் மகேஷ்.

வேட்டை தொடரும்…

error: Content is protected !!