Nan Un Adimayadi–Epi 10

அத்தியாயம் 10

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!!! (தவமங்கை)

 

வெளியே நின்றிருந்தவரை குழப்பத்துடன் பார்த்திருந்தான் காளை.

“சார் யாருன்னு தெரியலையே!” என்னவோ மங்கையின் குடும்பத்தையே தனக்கு தெரிந்த மாதிரியும் இவரை மட்டும் தெரியாமல் போய் விட்ட மாதிரியும் கேட்டான் அவன்.

அதற்குள் வெளியே வந்ததிருந்தாள் தவமங்கை. டாக்சி அருகே நின்றிருந்தவரைப் பார்த்தவளுக்கு கண்ணில் முனுக்கென கண்ணீர் வழிந்தது.

“அம்மும்மா!”

“ப்பா!!!” ஓடிப் போய் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள் மங்கை.

மகளின் கண்ணீர் துடைத்தவர்,

“எப்படிம்மா இருக்க? என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியலம்மா. நம்ம வீட்டுக்கே போயிடலாமா அம்மு?” என கேட்டார்.

‘என்னாது!!!! வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போறாரா? என் எலிச என் கிட்ட இருந்து எஸ்கேப் ஆக வைக்க எம்டன் வந்துட்டானா? சேச்சே! என்னா இருந்தாலும் எலிசோட அப்பா! எம்டர் வந்துட்டாரா’ நொந்துப் போனான் காளை.

தன் தந்தையில் நெஞ்சில் சலுகையாய் சாய்ந்திருந்தவள், அவர் வீட்டுக்கு அழைக்கவும் மெல்ல விலகி நின்றாள்.

“வீட்டுக்கு வந்துட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமாப்பா? உங்க வைப் என்னை வாரி எடுத்து அணைச்சு உச்சி முகர்ந்து வாம்மா ராசாத்தின்னு கூப்ட்டுருவாங்களாப்பா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

மெல்லிய குரல் என்றாலும் பாம்பு காது காளைக்கு நன்றாகவே கேட்டது. கலங்கிய தன் எலிசின் குரல் என்னவோ செய்ய,

“என்ன டீச்சர், வெளியே நிப்பட்டி பேசிட்டு இருக்கீங்க! அப்பாவ உள்ள கூப்புடுங்க!” என மூக்கை நுழைத்தான்.

“டீச்சரப்பா! உள்ளே வாங்க” என தன் பங்குக்கு அழைத்தவன், வந்தவர் தடுக்க தடுக்க டாக்சிக்கு தானே பணம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

“உள்ள வாங்கப்பா!” என அழைத்தவள் காளையை தன் தகப்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“இவரு வீட்டுக்காருப்பா. பேரு மிஸ்டர் முத்துக்காளை”

வீட்டுக்காரர் எனும் பதத்தில்

‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’

என சிறகே இல்லாமல் வானத்தில் பறந்தான் காளை. இங்கே வீட்டுக்காரர் என்பவர் ஹவுஸ் ஓனர் மட்டுமே என இந்தக் காளையிடம் யார் போய் சொல்லுவது!

“வணக்கம் தம்பி!” என சிரித்தமுகமாக சொன்னார் அஜய்குமார். (இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், அஜய்குமார்னு பேரு வச்சா அது அப்பாவா இருக்கக் கூடாதா யுவர் ஹானர்? அதுக்குள்ள எத்தனை எத்தனை கற்பனை! ஹிஹிஹி. ஜாலியா இருந்துச்சு நீங்க மிஸ்டர் அஜய்க்கு வச்ச பொங்கல படிக்க)

அறிவுக்களை சொட்ட, கண்ணில் கண்ணாடியுடன் அழகாய் நின்றிருந்த மங்கையின் அப்பா, தன்னைப் பார்த்துத்தான் சிரித்த முகமாய் வணக்கம் வைத்தாரா என ஆச்சரியமாகப் பார்த்திருந்தான் காளை. அவன் அப்படியே நிற்க, அவனை நெருங்கி கையைப் பிடித்துக் குலுக்கினார் அஜய்குமார்.

அவரின் கைக்குலுக்கலில் தான் காளை எனும் சிலைக்கு உயிர் வந்தது. முகம் பூவாய் மலர,

“ஆத்தா! டீச்சரோட அப்பா வந்துருக்காரு” என குரல் கொடுத்தப்படியே வந்திருந்தவரின் குட்டி பேக்கைத் தூக்கிக் கொண்டான்.

“வாங்க, வாங்க! உள்ள வாங்க” என அழைத்துப் போனான்.

அதற்குள் வீட்டு முற்றத்துக்கு வந்திருந்தார்கள் காமாட்சியும் மச்சக்காளையும். அவர்களுக்கும் தன்னுடைய பெற்றவரை அறிமுகப்படுத்தினாள் மங்கை.

காபி, பலகாரம் என வரவேற்பு தூள் கிளப்பியது.

“அம்மு உங்களப் பத்தி அடிக்கடி போனுல சொல்லுவாம்மா! அவள நல்லா பார்த்துக்கிறீங்களாம், பாசமா இருக்கீங்களாம்! ரொம்ப நன்றிம்மா! தாய்ப்பாசம்னா எ…” என பேசிக்கொண்டிருந்தவரை,

“அப்பா! களைச்சுப் போய் வந்திருக்கீங்க. வாங்க கை கால் கழுவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” இடைவெட்டினாள் மங்கை.

“ஆமா தம்பி! போய் கொஞ்சம் ஓய்வு எடுங்க! அதுக்குள்ள பகல் சாப்பாடு தயார் ஆகிடும்” என ஒத்தூதினார் காமாட்சி.

‘எங்காத்தா தம்பின்னு கூப்புடுது! அப்போ எனக்கு மாமா மொறை வேணும்! கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எலிசு எனக்கு மாமா மக! கட்டிக்கற மொறை’ என மனதில் கணக்குப் போட்ட காளைக்கு முகம் பளிச் பளிச்சென மின்னியது.

“ரொம்ப சிரமப்படுதிக்காதீங்கம்மா” என இன்னும் பேச வந்தவரை,

‘அம்மாவா? இவருக்கு எங்காத்தா அம்மான்னா, எனக்கு இவர் அண்ணன், எலிசு எனக்கு அண்ணன் பொண்ணு! ஐயோ, மக மொறை ஆகுதே’ என பதறியவன்,

“டீச்சரப்பா! ஆத்தா தம்பின்னு நினைச்சு ஆசையா சமைச்சுப் போட ஆசைப்படறாங்க! அக்கா வீட்டு விருந்தா நினைச்சு சங்கடப்படாம சாப்பிடனும்! சொல்லுங்க டீச்சர்” என மங்கையை சப்போர்ட்டுக்கு அழைத்தான்.

மனசாட்சியோ,

‘டீச்சர் உங்காத்தாவ ஆத்தானு கூப்புடுது அது மட்டும் பரவாயில்லயா’ என காறி துப்ப,

‘மாமியார அம்மாவ நெனைச்சு அத்தைன்னு கூப்டாம அம்மான்னு கூப்டறது இல்லையா! இதுவும் அது மாதிரிதான்’ என அடக்கி வைத்தான் காளை.

“அப்பா சாப்பிட வருவாரு ஆத்தா!” என சொல்லியவள் தகப்பனை தனது அறைக்கு அழைத்து சென்றாள்.

பேக்கை வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார் அஜய்.

“அம்மு! உனக்கு எதுக்கும்மா இந்த தலை எழுத்து? இப்படி ஒரு கிராமத்துல, வசதி இல்லாம கஸ்டப்படவா நான் பொன்னாட்டம் உன்னை வளர்த்தேன்? என் அம்மாம்மா நீ! வந்துடுடா” என கெஞ்சினார் அவர்.

“இல்லப்பா! அது சரி வராது! வசதினா என்னப்பா? ஏசில உறங்கி, பிட்சா பர்கர்னு சாப்பிட்டு, ட்ரெண்டியா விதவிதமா உடை உடுக்கறதா? அந்த வசதி சத்தியமா இங்க இல்லத்தான்! ஆனா வீட்டு வாடகைக்கு வந்தவளுக்கு அன்பக் கொட்டிக் குடுக்கற வசதியான மனசு இங்கிருக்குப்பா! டீச்சர் டீச்சர்னு வீட்டுல இருந்து பலகாரம் கொண்டு வந்துக் கொடுக்கற புள்ளைங்களோட அன்பு இங்கிருக்குப்பா! ஸ்கூட்டி மக்கர் பண்ணி நடு ரோட்டுல நின்னா, நீங்க போங்க டீச்சர் நான் என்னன்னு பார்த்து வீட்டுக்கு கொண்டு வந்து விடறேன்னு சொல்லுற வெள்ளந்தி மக்களோட மரியாதை இங்கிருக்குப்பா! கொஞ்ச நாள் இதெல்லாம் அனுபவிச்சுகிறேனேப்பா! இங்க கிளம்பி வர முன்னே, கண்டிப்பா நீங்க சொல்லற மாப்பிள்ளையைக் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு வாக்குக் குடுத்திருக்கேனேப்பா! அதுல எந்த வித மாற்றமும் இல்லை. சோ, ப்ளீஸ் கிவ் மீ சம் பெர்சனல் ஸ்பேஸ்ப்பா” என துக்கத்தை உள்ளடக்கி சாதாரண குரலில் பேசினாள் மங்கை.

“சரிம்மா சரி! எல்லாம் உன் இஸ்டம்தான்! அப்பா ஒன்னும் சொல்லல, சரியா!”

“ஹ்ம்ம்! உங்க வைப் எப்படி இருக்காங்க?” என கேட்டாள் தவமங்கை.

“உங்கம்மா நல்லா இருக்காடா!” என பதில் அளித்தவர், பேக்கில் இருந்து துண்டை எடுத்துக் கொண்டார்.

“உன் ஞாபகமாவே இருந்துச்சுடா! உடனே கிளம்பி வந்துட்டேன். இந்த ரூமுல ரெண்டு பேரு தங்க வசதிப்படாது போலிருக்கே! அப்பா ஈவ்னிங் கிளம்பிடவா?” என கேட்டார் அஜய்.

மங்கையின் அப்பாவுக்கு தங்கள் தோட்டத்தில் இருந்து இளநீர் வெட்டி எடுத்து வந்திருந்த காளை, இவர்கள் பேசியதை முழுக்க வெளியே நின்றுக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

“டீச்சர்!” என அவன் குரலில் போய் கதவைத் திறந்தாள் மங்கை.

“டீச்சரப்பாவுக்கும் உங்களுக்கும் இளநீ வெட்டிட்டு வந்தேன்! காங்கையா கெடக்குதுல்ல! இது குடிச்சா கொஞ்சம் இதமா இருக்கும்” என சொல்லி இளநீரை நீட்டினான்.

ஏற்கனவே காபி குடித்து, விதவிதமாக பலகாரம் சாப்பிட்டு வயிறு தள்ளிக் கொண்டு நின்றது. இதை எப்படி குடிப்பது என விழித்தார் அஜய். இளநீரை வாங்கி மேசையில் வைத்தவள்,

“அப்புறம் குடிப்பாரு மிஸ்டர் காளை” என சொன்னாள்.

“சரிங்க டீச்சர்! இந்த ரூம் டீச்சரப்பா படுக்கக் கொள்ள வசதிப்படாதே! நைட்டுக்கு என் ரூமுல படுத்துகிட்டும். நான் இப்போ ஓடிப் போய் சுத்தம் பண்ணி ரூம்பு வாசனையெல்லாம் அடிச்சு வச்சிடறேன்” என அவர்கள் பிரச்சனைக்கு முடிவு சொல்லி விட்டுப் போய் விட்டான் காளை.

மகளைப் பார்த்தவர்,

“வெள்ளந்தி மக்கள்னு நீ சொன்னது சரிதான். வந்ததுல இருந்து விழுந்து விழுத்து உபசாரம் செய்யறாங்க! இத்தனைக்கும் ஒரு வார்த்தை சொல்லாம திடுதிப்புன்னு வந்திருக்கேன். ஒரு முக சுளிப்பு கூட இல்ல பாரேன்!” என வியந்தப்படியே மகள் காட்டிய பாத்ரூமுக்குப் போனார் அஜய்.

அதன் பிறகு அவர் மகள் கட்டிலில் படுத்து ஓய்வெடுக்க, இவள் காமாட்சியைத் தேடிப்போனாள்.

“வாத்தா! உங்க அப்பாரு என்ன சாப்புடுவாரு என்ன சாப்புடமாட்டாருன்னு சொல்லு! விருந்து சாப்பாடு போட்டு ஜமாய்ச்சிடலாம்”

“ஆத்தா, நமக்கு சமைக்கற மாதிரியே சமைங்க! தடபுடல் பண்ண வேணாம்!”

“என்னத்தா இப்படி சொல்லிட்ட! வீட்டுக்கு வந்த மக்கா மனுஷர நல்லா கவனிச்சு அனுப்பனும்த்தா! அதுதானே நம்ம பண்பாடு!”

“சரித்தா! நானும் உதவி பண்ணறேன்” என வந்தவளைத் தடுத்தார் காமாட்சி.

“அன்னைக்கு கைய சுட்டுக்கிட்டதுக்கே ஆட்டமா ஆடிட்டான் என் வூட்டு மவன். ஆத்துல விழுந்தானாம் ஆபத்துல, குளத்துல விழுந்தனாம் கோபத்துலங்கற மாதிரி அவன் காச்சு மூச்சுன்னு கத்தறத யாரு கேக்கறது! நீ இப்படி ஒரு ஓரமா உட்காருத்தா!”

“இது என்ன பழமொழி ஆத்தா? அர்த்தம் சொல்லுங்க”

“அட நீ வேறம்மா! பேச்சு வாக்குல எங்காத்தா சொல்லும்! அர்த்தத்துக்கு நான் எங்க போவேன்!” என சிரித்தார் அவர்.(அர்த்தம் தெரிஞ்சவங்க வந்து சொல்லிட்டுப் போங்க)

“சரித்தா! உங்க மகன் எங்க?”

“உங்கப்பாரு தங்கறதுக்கு ரூம ரெடி பண்ணறானாம்! நீ போய் கொஞ்சம் சரியா இருக்கான்னு பாருத்தா!”

சரி என சொல்லியவள், காளயைத் தேடிப் போனாள். அவனது ரூமில் மெத்தை விரிப்பை மாற்றிக் கொண்டிருந்தான் காளை. வாயில் அருகே நின்றவள்,

“உள்ள வரலாமா மிஸ்டர் காளை?” என கேட்டாள்.

“வாங்க டீச்சர், வாங்க டீச்சர்” என சிரித்த முகத்துடன் வரவேற்றான் அவன்.

உள்ளே நுழைந்தவள் கால்களையேப் பார்த்திருந்தவனுக்கு சந்தோஷ பெருமூச்சு வந்தது.

‘அப்பாடா! நம்ம ரூமுக்குள்ள மொத மொத வராங்க டீச்சர்! வலது காலுதான் எடுத்து வச்சி வந்தாங்க’ என மனம் குத்தாட்டம் போட்டது.

“அப்பாவுக்கு படுக்க இடம் அரேஞ் பண்ணிக் குடுக்கறதுக்கு தேங்கஸ் மிஸ்டர் காளை”

“எதுக்கு தேங்ஸ்லாம் சொல்லி அந்நியனா ஆக்குறீங்க டீச்சர்?”

“நீங்க எனக்கு அந்நியன் இல்லாம, பின்ன என்ன ரெமோவா?” என கிண்டலாகக் கேட்டாள் மங்கை.

“ரெமோவா? அது யாரு டீச்சர்?”

“நீங்க அந்நியன் படம் பார்க்கலியா காளை?”

“இல்ல டீச்சர்! பார்க்கப் புடிக்கல!”

“வாட்!! அவ்ளோ பேமஸ் படம் பார்க்கலியா?” ஆச்சரியமாகக் கேட்டப்படியே கட்டிலின் இன்னொரு பக்கம் போய் அவனுக்கு படுக்கை விரிப்பைப் போட உதவினாள்.

“அந்தப் பொண்ணு சதா, ஜெயம் படத்துல அவ்ளோ அழகா பாவாடை தாவணில கண்ணுக்கு குளிர்ச்சியா நின்னுச்சு! அந்நியன் படத்துல அதுக்கு உடம்பு தெரியற மாதிரி சொக்காப் போட்டு விட்டுட்டானுங்க படுபாவிங்க! என்னால தாங்கிக்கவே முடியல டீச்சர். நானாச்சும் போகுது போன்னு விட்டுட்டேன்! மொரட்டுக்காளை ராவோடா ராவா ஊருல உள்ள அந்நியன் பட போஸ்டர எல்லாம் கிழிச்சு தொங்க விட்டுட்டான்! சினிமா கொட்டகை ஸ்க்ரீனயும் டர்ருன்னு கிழிச்சுட்டான். மறுநாள் நான் தான் போய் தெண்டம் அழுதுட்டு வந்தேன் கொட்டகைக்காரனுக்கு!”

அவன் சொல்லி முடிக்க, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கலகலவென நகைக்க ஆரம்பித்தாள் மங்கை. கண்ணில் நீர் வர சிரித்தாள் அவள்.

அவளது சிரிப்பை ஆசையாகப் பார்த்திருந்தவன்,

“டீவில போடற ஒவ்வொரு தடவையும் தகப்பா, கண்ணும் கண்ணும் நோக்கியான்னு ஒரே ஆட்டம் தான். ஆனா நான் பார்க்க மாட்டேனே! மேயின் சுவிட்ச அடைச்சுப்புட்டு கெளம்பி போயிடுவேன்” என சொன்னான்.

அவன் அட்டகாசத்தை நினைத்து இன்னும் சிரித்தாள் மங்கை.

“தேங்கஸ் காளை”

“ஏன் டீச்சர்?”

“அப்பா வந்ததுல இருந்து மனசு ரொம்ப இறுக்கமா இருந்துச்சு! நவ் ஐ பீல் பெட்டர்”

“உங்க அப்பாவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டீச்சர்”

“ஆமாவா?”

“ஹ்ம்ம்! படிச்சவங்களாம் என் கிட்ட பழகவே தயங்குவாங்க! காட்டுப்பய மாதிரி இருக்கேன்ல! அதே மாதிரி நடந்துப்பேன்னு நெனைக்கறாங்க போல! உங்கப்பா உங்கள மாதிரி ரொம்ப நல்லவரு டீச்சர்! நீங்க என்னைத் தள்ளி நிறுத்திப் பேசனாலும் உங்க கிட்ட அந்த மாதிரி அருவறுப்போ, முக சுளிப்போ என்னைக்கும் நான் பார்த்தது இல்ல. மொரட்டுக்காளை விஷயத்துல கூட கோபமா பேசனீங்களே தவிர, சீச்சீன்னு என்ன பார்க்கல! உங்கப்பாவும் கிராமத்தான் அப்படின்னு நினைக்காம சட்டுன்னு கையைப் புடிச்சுக்கிட்டாரு! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா டீச்சர்”

“காளைய யாரு அப்படி சீச்சீன்னு பார்த்தது?” என பாயிண்டைப் பிடித்துக் கேட்டாள் மங்கை.

“அது வந்து!!” தயங்கினான் காளை.

“சொல்லக் கூடாதுன்னா பரவாயில்ல காளை”

“உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன் டீச்சர்! நம்ம ராஜியோட வீட்டுக்காரு இருக்காருல்ல, அவருக்கு என்னைக் கண்டா ஒரு இளப்பம். அதான் பார்த்தீங்கல்ல, அக்கா மட்டும்தான் புள்ளைங்களோட வருவா. அவர் எதாச்சும் விஷேசம்னா வந்துட்டு காலுல சுடுதண்ணி ஊத்துனா மாதிரி கிளம்பிப் போயிடுவாரு! மனசு நோகப் பேசனது இல்லதான்! அப்படி பேசனா அக்கா வச்சி செஞ்சிருமே! ஆனா முகத்துல காட்டிருவாரு. மனசு ரணமா வலிக்கும் டீச்சர்! விவசாயின்னா அவ்வளவு கேவலமா டீச்சர்? நாங்க இல்லைனா பூவாவுக்கு என்ன செய்வாங்கா மக்கள்? இன்னிக்கு கூட டீவில காட்டனாங்களே, வைரசுனாலே அரிசிய பதுக்குறாங்க, தானியத்தைப் பதுக்குறாங்க மக்கள் உணவு பத்தாக்குறையால பீதியில கெடக்காங்கன்னு! அரிசி கிடைக்கலைன்னா பீதி பேதிலாம் வருதுல! அந்த அரிசிய விளைவிக்கற நாங்க வேர்வை சிந்தி, உழைக்காம கம்பேனி வேலைக்குப் போயிட்டா என்னத்த சாப்பிடுவாங்க? நாங்க வேர்வையில நாறிக் கெடக்கோம், சேத்துல ஊறிக் கெடக்கோம்னு கேவலமா பார்க்கறாங்களே, நாங்க உழைக்கலனா இவனுங்க சோறில்லாம வயிறு ஒட்டி நாறி நாத்தேமெடுத்துப் போயிடுவாங்கன்னு புரிலையா இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கறாங்களா?”

தன் மன ஆதங்கத்தை தன்னவளாய் நினைப்பவளிடம் கொட்டினான் காளை. ராஜேஸ்வரியின் கணவர் ராஜாமணியும் அவளைப் போலவே படித்தவர். காலேஜில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பக்கத்து பக்கத்து கிராமம், ஒரே மக்கா மனுஷராகிப் போக திருமணம் தங்குத் தடையின்றி நடந்தது. கிராமத்தில் இருந்தாலும் அவர்கள் அரிசி ஆலை வைத்து கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள். அந்த செருக்கு கொஞ்சம் என்ன நிரம்பவே இருந்தது ராஜாமணிக்கு. ஆனால் மனைவியின் மேல் தீராதக் காதல்காரன். அவளுக்காகத்தான் காளையைக் கூடப் பொறுத்துப் போகிறான்.

முகம் கோபத்தில் ஜொலிக்கப் பேசிக் கொண்டிருந்தவனை அமைதியாய் பார்த்தாள் மங்கை

“தெரியல!”

அவள் திடீரென தெரியல என சொல்லவும் குழம்பிப் போனான் காளை.

“என்ன தெரியல டீச்சர்?”

“உங்க வேர்வை எனக்கு நாத்தமா தெரியல மிஸ்டர் காளை!” என சொன்னவள் வெளியே போய்விட்டாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள் மின்னலடிக்க, மனசுக்குள் சாரலடிக்க ட்ரீமுக்குப் போய்விட்டான் காளை. கனவில் கூட எலியை விடாமல்,

‘ஏலேஏலேலே

சண்டாளி உன் பாசத்தால

நான் சுண்டெலியா ஆனேன் புள்ள’ என தன் எலிசுடன் அழுக்கு வேட்டியோடு மாங்காய் தோப்பில் ஓடி ஓடி டூயட் பாடினான் காளை.(பட்ஜேட் இல்ல, அதான் மால்டிவ்ஸ்கு போகாம மாங்காய் தோப்புக்குப் போயிட்டான்)

சந்தோஷ வானில் சிறகடித்த காளை தன் மாமனாரை தரையில் நடக்க விடாமல் தாங்கு தாங்கென்று தாங்கினான். திடீரென அவர் வந்ததால் மங்கையால் லீவ் எடுக்க முடியாமல் போக, காலையில் இருந்து மங்கை வரும் வரை தன்னோடேயே அவரை கூட்டிக்கொண்டு தோட்டம் துரவு, ஆறு, ஏறி, குளம், குட்டை, கள்ளுக்கடை என ஊரில் இருந்த எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினான். அவரும் காளையிடம் கலகலப்பாக பழகினார். அவன் வாங்கித் தந்ததை பிகு பண்ணாமல் உண்டார். கள்ளுக்கடையில் அவன் ஊற்றிக் கொடுத்த ஒரு மரத்துக் கள்ளை ருசித்தார். மொத்தத்தில், பக்கா பிஸ்னஸ்மேன் பந்தாவே இல்லாமல் அவனுடன் பழகினார்.

செவ்வாய் காலையிலேயே கிளம்பி விட்டார் அஜய். கிளம்பும் முன் மின்னாமல் முழங்காமல்,

‘குண்டு ஒன்னு வெச்சிருக்கேன், வெடி குண்டு ஒன்னு வச்சிருக்கேன்’ என கொளுத்திப் போட்டுவிட்டுத்தான் போனார்.

என்ன குண்டு அந்தக் குண்டு?

குண்டு வெடிக்குமா இல்லை காளை மனம் வெடிக்குமா?

மங்கை கிடைக்குமா இல்லை காளை கதறி துடிக்குமா?

 

(அடி பணிவான்…..)

error: Content is protected !!