KATRE-10
KATRE-10
திடீரென்று கதவு திறக்கப்படும் சத்தத்தை கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க அங்கே வாயிலில் தேன்மதி கோபமாக நின்று கொண்டிருந்தாள்.
அவளை அங்கு அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் அனைவரது முகத்திலும் தெரிந்த அதிர்ச்சியே நன்கு விளக்கியது.
“அம்மா என்னம்மா நடக்குது இங்கே? கவி இங்க உங்க எல்லோருக்கும் முன்னால் குத்து கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கான் அத்தை என்னடான்னா கவி வரவே போறது இல்லைன்னு சொல்லுறாங்க கவி கூட என்னைப் பார்த்து விலகி விலகி போறான் வல்லி அம்மாவை என்னோட அம்மானு கவி என்கிட்டயே சொல்லுறான் என்ன தான் நடக்குது இங்க யாராவது சொல்லுங்க ப்ளீஸ்” தேன்மதி தன் தலையை பிடித்து கொண்டு சத்தமிட
வேகமாக அவளருகில் வந்த கவிகிருஷ்ணா
“தேன்மதி நீங்க இப்படி டென்ஷன் ஆகக்கூடாது உங்களுக்கு பல தடவை சொல்லி இருக்கு இல்லையா?” என்று கேட்கவும் கோபமாக அவனை முறைத்து பார்த்தவள் அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றி கொண்டாள்.
“மதி!” அதிர்ச்சியாக அங்கிருந்த எல்லோரும் சத்தமிட அதை சிறிதும் கண்டு கொள்ளாதவள்
“சொல்லு கவி எதற்காக நீ இப்படி எல்லாம் பண்ணுற? யாரும் உன்னை என்னோட கவின்னு நம்புறாங்க இல்லையே! ஏன்? இத்தனை வருஷமாக நம்ம பழகுனது, காதலிச்சது எதுவுமே உனக்கு மனசில் இல்லையா? ப்ளீஸ் கவி சொல்லு! ஏன் இப்படி பண்ண? ஏன்? ஏன்?” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது சட்டைக் காலரை பற்றி இருந்த தேன்மதியின் பிடி இறுக்கமாகிக் கொண்டே சென்றது.
சிறிது நேரம் அமைதியாக அவளை ஆழ்ந்து பார்வை இட்டவன்
அவளது கையை தன் சட்டையில் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவன் அவள் கையை பற்றிய இழுத்து கொண்டு வெளியே சென்றான்.
“டேய் கிருஷ்ணா! என்னடா பண்ணுற?” பதட்டத்துடன் கேட்டு கொண்டே வேதவல்லி அவன் முன்னால் வரப்போக
“வேண்டாம்” என்று அவரைப் பார்த்து கை காட்டி தடுத்தவன்
“தேன்மதி சரியாகணும்னா யாரும் இப்போ என் பின்னால் வர வேண்டாம் நான் கொஞ்ச நேரம் மதி கிட்ட தனியாக பேசணும்” என்று விட்டு யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் தன் கையில் பற்றி இருந்த தேன்மதியினது கையை பிடித்து கொண்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து வெளியேறி சென்றான்.
அங்கு நின்ற பெரியவர்கள் அனைவரும் சற்று கலவரத்தோடு ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்க்க விருத்தாசலம் மாத்திரம் ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகையோடு கவிகிருஷ்ணா சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றார்.
தேன்மதியின் கையை விடுவிக்காமலேயே தனது அறைக்குள் அவளை அழைத்து வந்தவன் அங்கிருந்த ஷோபாவில் அவளை அமரச் செய்து விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.
அவளோ தன்னை பற்றி இருந்த அவனது கையையும், சற்று சிவந்திருந்த அவனது முகத்தையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தாள்.
எதுவும் பேசாமல் இலக்கின்றி எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் தோளில் கை வைத்தவள்
“கவி!” என்று மென்மையாக அழைக்க அந்த அழைப்பில் அவளை திரும்பி பார்த்தவன் ஒரு கணம் அவளது முகத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
“கவி” மறுபடியும் சற்று சத்தமாக அழைத்தவள் அவனது தோளில் தட்ட கனவில் இருந்து விழிப்பவன் போல முழித்தவன் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு அவளைப் பார்த்து புன்னகத்தான்.
“நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் இப்போ என் கிட்ட உண்மையாகவே பதில் இல்லை மதி கொஞ்ச கால அவகாசம் கொடு நிச்சயமாக நீ கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்லுவேன் ஆனால் அதற்கு முன்னால் மற்றவங்க சொல்லுற எல்லாவற்றையும் நீ உன் மனசில் போட்டு குழப்பிக்காதே! சீஃப் டாக்டர் சொல்றதை மட்டும் பண்ணு அதை மட்டும் கேளு அது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அதற்கு அப்புறம் நான் ஏன் இப்படி சொன்னேன்னு உன் கிட்ட கண்டிப்பாக சொல்லுவேன் சரியா? அதற்கிடையே நீ வேற எதையும் உன் மைண்ட்க்கு உள்ளே எடுத்துக் கொள்ளாதே புரிஞ்சுதா?” கவிகிருஷ்ணாவின் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவள்
“அப்போ அம்மா, அப்பா, மாமா, அத்தை எல்லோரும் பொய் சொல்லுறாங்களா? அவங்க பேச்சையும் நான் கேட்க கூடாதா?” என்று கேட்க
அவசரமாக இல்லை என்று தலை அசைத்தவன்
“அப்படி இல்லை மதி அவங்க சொல்றதையும் கேளு பட் அதை மனதில் போட்டு காம்ப்ளீகேட் பண்ணிக்காதே! உன்னை இதை இப்படியே பாலோ பண்ண சொல்லல இப்போ கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் இப்படி இருக்க சொல்லுறேன் உன்னை சுற்றி நிறைய குழப்பங்கள் இருக்கு அது உனக்கு தெரியும் தானே?”
“ஆமா”
“அதனால் தான் சொல்லுறேன் நீ டாக்டர் சொல்றதை மட்டும் கான்ஸன்ட்ரேட் பண்ணு அப்புறம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தானாக உனக்கு கிடைக்கும்”
“ஓஹ்!” என்றவாறே அவனை யோசனையோடு பார்த்தவள்
“இதை ஏன் நீ அங்கேயே வைத்து சொல்லல?” என்று கேட்டாள்.
“மற்றவங்க சொல்லுறதைக் கேட்டு உன்னை குழப்பிக் கொள்ளாதேனு அவங்க முன்னாடி வைத்து சொன்னா மறுபடியும் நீ டென்ஷன்
ஆகிடுவ தனியா உன்னை உட்கார வைத்து பொறுமையாக பேசுனா நீ புரிந்து கொள்ளுவேன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று
கவிகிருஷ்ணா கூற
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள்
“சரி கவி நான் வேறு யார் என்ன
சொன்னாலும் என் மனசில் எடுத்து இப்படி கன்பியுஸ் ஆக மாட்டேன் பெரியவங்க ஆயிரம் பேசுவாங்க அது எதற்கு நமக்கு? என் கவி சொன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் இல்லையா?” என்றவாறே தேன்மதி அவன் பற்றி இருந்த கையை மேலும் இறுக பற்றி கொண்டு அவன் தோள் மேல் சாய
சட்டென்று தன் கையை உதறி கொண்டு எழுந்து நின்றவன்
“நோ மதி உனக்கு ட்ரீட்மெண்ட் முடியுற வரைக்கும் இது எல்லாம் வேண்டாம் ப்ளீஸ் ரீசன் கேட்காதே! இப்போ வா நாம அங்கே போகலாம் எல்லோரும் காத்துட்டு இருப்பாங்க” எனவும் முகம் வாட எழுந்து நின்றவள் சோகமாக அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
அவள் முகம் வாடி இருப்பதை பார்த்ததும் ஏனோ அவனால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளை சமாதானப்படுத்த அவன் கைகள் பரபரத்தாலும் அவள் தன் உரிமையானவள் இல்லை என்ற ஒரே எண்ணம் அவன் மேலெழுந்த கையை கீழே போடச் செய்தது.
தேன்மதி கவியரசனின் காதலி என்று இத்தனை நாளாக நினைத்து இருந்தவன் இன்று அவள் அவனது மனைவி என்பதை கேட்ட பின்பு மனதளவில் மொத்தமாக எதையோ இழந்ததைப் போன்று தவித்துப் போனான்.
தன் மனம் எதிர்பார்ப்பது என்ன என்று புரியாமல் தேன்மதியை அவள் வழக்கமாக இருக்கும் இடத்தில் விட்டு விட்டு நடந்து சென்றவன் விருத்தாசலத்திடம் தான் தேன்மதியிடம் கூறிய விடயங்கள் எல்லாவற்றையும் கூற சரியென்று அதை கேட்டு கொண்டவர்
“தேன்மதிக்கு இப்போ இருந்தே ட்ரீட்மெண்ட் பண்ண போறேன் ஷோ நீங்க எல்லோரும் கொஞ்ச நாளைக்கு ஊட்டியில் தான் தங்க வேண்டி வரும்” என்று சுரேந்திரனிடம் கூற
சரியென்று தலை அசைத்தவர்
“இங்க ஹாஸ்பிடல் பக்கத்திலேயே ஹோட்டல் ஒன்றில் நாங்க தங்கி இருப்போம் டாக்டர் எத்தனை நாளானாலும் பரவாயில்லை எங்க பொண்ணு குணமாக வந்தாலே போதும்” எனவும்
“ஹோட்டலா?” என்று கேள்வியாக அவர்களை பார்த்தார் வேதவல்லி.
“நீங்க யாரு? என்ன? எதுவும் எனக்கு தெரியாது தேன்மதியை பார்த்ததுமே எனக்கு என் பொண்ணு மாதிரி தான் ஒரு மன அபிப்பிராயம் வந்தது என் பொண்ணோட உறவுகளை நான் வெளியே தங்க அனுமதிப்பேனா? எங்க கெஸ்ட் ஹவுஸ் இங்க எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கு நீங்க அங்கே தான் வந்து தங்கணும் இனி நீங்களும் எங்க குடும்பம் மாதிரி தான் தேன்மதி முழுமையாக குணமாகும் வரை நானும் உங்களோடு எல்லா விடயத்திலும் உதவியாக இருப்பேன்” என்ற வேதவல்லியை கண்கள் கலங்க அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் பார்த்து புன்னகத்தனர்.
சிறிது நேரத்தில் தேன்மதியை விருத்தாசலம் சிகிச்சைக்காக அழைத்து செல்ல கவிகிருஷ்ணா தன் அறைக்குள் நின்று கொண்டு அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியே மலைகளையும், வானத்தையும் பார்த்து கொண்டு நின்றான்.
அவன் மனமும் முழுவதும் வெறுமையாக இருந்தது.
தேன்மதியைப் பார்த்து அவன் மனம் சிறிதளவு சஞ்சலமடைந்தாலும் ஏனோ அவனால் அதை அனுமதிக்க முடியவில்லை.
எவ்வளவு நேரமாக அப்படியே நின்று கொண்டிருந்தானோ அவனுக்கே தெரியாது.
கதவு தட்டும் ஓசை கேட்ட பின்பே தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன் கதவை திறக்க விருத்தாசலம் அவனை பார்த்து புன்னகத்து கொண்டே உள் நுழைந்தார்.
“மதி இப்போ எப்படி இருக்கா டாக்டர்? எதுவும் முன்னேற்றம் இருக்கா?” ஆவலாக கேட்டவனைப் பார்த்து புன்னகைத்தவர்
“யா நல்ல முன்னேற்றம் இருக்கு எதுவும் இல்லை இல்லைனு சொல்லியே நல்ல முன்னேற்றம் இருக்கு” என்று கூற
குழப்பமாக அவரை பார்த்தவன்
“என்ன டாக்டர் சொல்லுறீங்க? எனக்கு எதுவும் புரியல” என்று கூறினான்.
“தேன்மதி அதிர்ச்சியில் தான் இந்த மூன்று, நான்கு மாத சம்பவங்களை மறந்து இருக்கா அதுவும் இந்த நாட்களில் தான் அவ நிச்சயதார்த்தம், திருமணம், கவியரசன் மரணம் எல்லாம் நடந்து இருக்கு அவ வாழ்க்கையில் நடந்த மிகவும் முக்கியமான தருணங்கள் இது எல்லாம் நாளைக்கு தேன்மதியை ஊட்டியில் அவங்க தங்கி இருந்த ஹோட்டல் கூட்டிட்டு போக இருக்கேன் நீயும் என் கூட வா அங்கே வைத்து தேன்மதிக்கு ஏதாவது ஒரு சம்பவம் ஞாபகம் வந்தாலும் நமக்கு அது வெற்றி தான்” விருத்தாசலம் சற்று நம்பிக்கையோடு கவிகிருஷ்ணாவிடம் கூற கவிகிருஷ்ணாவின் மனதிலும் சிறிது நம்பிக்கை துளிர் விட்டது.
தேன்மதியை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று தான் அன்றொரு நாள் எடுத்துக் கொண்ட முடிவில் இருந்து பின் வாங்க கூடாது என்று முடிவெடுத்து கொண்டவன் நாளைய தினம் என்ன என்ன செய்ய வேண்டும்? என்று விருத்தாசலத்தோடு பேச ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் வேதவல்லியோடு சுரேந்திரன், நரசிம்மன் மற்றும் ஜானகி கிளம்பி செல்ல சம்யுக்தா மாத்திரம் தேன்மதியோடு தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கையாக கேட்டு கொண்டு அந்த ஹாஸ்பிடலிலேயே அவளோடு துணையாக இருந்தார்.
பல நாட்கள் கழித்து பார்த்த தன் மகளோடு ஆசை தீர சம்யுக்தா பேசிக் கொண்டிருக்க கவிகிருஷ்ணா அவர்கள் இருவரையும் புன்னகையோடு பார்த்து கொண்டு நின்றான்.
ஒரு சில வாரங்களுக்கு மேலாக தான் இந்த வைத்திய சாலையில் பார்த்த விடயங்கள் எல்லாவற்றையும் தேன்மதி புன்னகை முகமாக கூறிக் கொண்டு இருக்க அந்த புன்னகையில் கவிகிருஷ்ணாவின் மனம் மெல்ல மெல்ல அவனிடம் இருந்து எகிறி குதித்து அவளது காலடியில் சென்று வீழ்ந்தது.
அவனையும் அறியாமல் அவனது விழிகள் அவள் ஒவ்வொரு அசைவையும் கொஞ்சம் கொஞ்சமாக படம் பிடித்து கொண்டே இருந்தது.
ஒப்பனை எதுவுமே இன்றி சந்தோஷத்தில் ஜொலித்து கொண்டிருந்த அவளது முகம், பாவனை பேசும் அவளது விழிகள், ஓயாமல் பேசும் அவளது இதழ்கள் என பார்த்து கொண்டு வந்தவன் விழிகள் அவளது இதழ்களில் நிலை குத்தி நின்றது.
“தேனு!” ஆசையாக அவள் முகத்தை பார்த்து கொண்டே அவன் இதழ்கள் அவளை பெயர் சொல்லி அழைக்க சட்டென்று தன் பேச்சை நிறுத்தியவள் சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள்.
அவள் பார்வை தன் புறம் வருவதைப் பார்த்தவன் சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கொள்ள அவன் மனமோ தாறுமாறாக அடித்துக் கொண்டது.
“நான் மெதுவாக தானே அவளை கூப்பிட்டேன் அப்புறம் எப்படி அவளுக்கு கேட்டு இருக்கும்?” யோசித்து பார்த்தவன் தன் தலையில் தட்டி கொண்டான்.
“புத்தி போற போக்கை பாரு அவளை பார்க்கவே கூடாதுனு சொல்லிட்டு இப்போ ரசித்து பார்க்க சொல்லுது இன்னும் கொஞ்ச நேரம் நின்னா நான் நானாகவே இருக்க மாட்டேன் டேய் கிருஷ்ணா! வீட்டுக்கு கிளம்பிடுடா” என தனக்குத்தானே கூறிக் கொண்டவன் தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான் அங்கே காத்திருக்கும் விடயத்தை பற்றி அறியாமல்….
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.