Katre-16

மலை ராணிகளுக்கு பின்னால் தூங்கி கொண்டிருந்த சூரியன் தன் துயில் கலைந்து மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேறி வந்து தன் கதிர்களை சுற்றிலும் பரப்ப அந்த வெளிச்சத்தில் மெல்ல கண்களை திறந்து கொண்டாள் தேன்மதி.

தேன்மதி சற்று அசைவது போல இருக்கவும் அவசரமாக எழுந்து அமர்ந்த சம்யுக்தா
“மதி ம்மா எழுந்துட்டியா? காஃபி போட்டு தரவாடா?” என்று கேட்கவும்

வேண்டாம் என்று தலை அசைத்தவள்
“அப்பா, மாமா, அத்தை எல்லாம் எங்கேம்மா?” என்று கேட்டாள்.

“ஜானகி கிச்சனில் இருக்கா அப்பாவும், மாமாவும் ஹாலில் இருக்காங்க அவங்களை இங்கே வர சொல்லவா?” சம்யுக்தாவின் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“நானே வெளியில் வர்றேன் மா” என்றவாறு தேன்மதி அந்த சாய்வான இருக்கையில் இருந்து இறங்கி கொள்ள அவள் கைகளை பற்றி கொண்ட சம்யுக்தா தன் தோளோடு சேர்த்து அவளை அணைத்தவாறு ஹாலுக்கு அழைத்து சென்றார்.

தேன்மதி சம்யுக்தாவோடு நடந்து வருவதைப் பார்த்து அவசரமாக சுரேந்திரனும், நரசிம்மனும் அவர்கள் அருகில் வர அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகத்து கொண்டவள் சம்யுக்தாவின் உதவியோடு அங்கிருந்த கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“மதி கண்ணா! உடம்புக்கு எதுவும் பண்ணுதாடா?” தேன்மதியின் அருகில் அமர்ந்து கொண்ட சுரேந்திரன் அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்கவும் அவரைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்தவள் அவர் தோளில் சாய்ந்து கண் மூடி கொண்டாள்.

“மதி தூங்கி எழுந்துட்டியாம்மா?” என்று கேட்ட ஜானகியின் குரலில் சட்டென்று தன் கண்களை திறந்து கொண்டவள்

“அத்தை!” என்று கூவலோடு அவரை தாவி அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க ஜானகியோ ஒரு நிலைக்கு மேல் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேன்மதியின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தார்.

“ஜானகி நீ தானே அவளுக்கு ஆறுதல் சொல்லணும்? அதை விட்டுட்டு நீ இப்படி அழலாமா?” நரசிம்மன் ஆதரவாக ஜானகியின் தலையில் கை வைத்து கேட்கவும் தன் கண்களை துடைத்து கொண்டே தேன்மதியின் முகத்தை பார்த்தவர் அவளது கண்களை பார்த்து கொண்டே வேண்டாம் என்று தலை அசைத்தவாறே அவளது கண்களை துடைத்து விட்டார்.

“அத்தை! கவி!” என்றவளின் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலை அசைத்த ஜானகி அவள் கை பிடித்து அங்கிருந்த கதிரையில் அமரச் செய்து விட்டு தன் சேலை முந்தானையால் அவளது முகத்தை துடைத்து விட்டார்.

“நீ முதல்ல போய் குளிச்சுட்டு வாம்மா தேன்மதி இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்துடுவாங்க” என்று சம்யுக்தா கூறவும் சரியென்று அவர்களைப் பார்த்து தலை அசைத்தவள் மெல்ல அடியெடுத்து வைத்து தன் அறையை நோக்கி சென்றாள்.

அத்தனை நேரம் சிரமப்பட்டு தன் வாய் மூடி அழுது கொண்டு நின்ற ஜானகி தேன்மதி அறைக்குள் நுழைந்து கொண்ட அடுத்த கணமே நரசிம்மன் தோளில் சாய்ந்து கதறி அழ அவரை ஆறுதல் படுத்தும் வழி தெரியாமல் நரசிம்மன் கலங்கி போய் நின்றார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் கவலையுடன் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா தேன்மதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

“வாங்க! டாக்டர் வாங்க!” அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்டு சம்யுக்தா விருத்தாசலத்தை பார்த்து கூறவும் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்த விருத்தாசலம் புன்னகையோடு அவர்களைப் பார்த்து தலை அசைத்தார்.

“தேன்மதி எங்கே?” விருத்தாசலம் கேட்கவும்

தேன்மதியின் அறையின் புறமாக திரும்பி பார்த்த சம்யுக்தா
“அவ குளிச்சுட்டு இருக்கா இருங்க டாக்டர் நான் போய் மதியை கூட்டிட்டு வர்றேன்” என்று விட்டு செல்ல விருத்தாசலம் சரியென்று விட்டு மற்ற பெரியவர்கள் மூவரையும் ஆராய்ச்சியாக நோக்கினார்.

விருத்தாசலத்தின் பார்வையை உணர்ந்து கொண்டாற் போல மற்ற மூவரும் தலை குனிந்து கொள்ள அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டவர்
“நாம் எல்லோரும் வயதிலும், அனுபவத்திலும் பெரியவங்க சின்ன பசங்க எல்லாம் நம்ம எதை செய்யுறோமோ அதை தான் பின்பற்ற பார்ப்பாங்க இப்போ நீங்க எல்லோரும் இப்படி ஆளுக்கொரு பக்கமாக யோசனையோடு அமர்ந்து இருந்தா அது தான் தேன்மதியின் நிலையாகவும் மாறும் தேன்மதி இப்போ தான் பெரியதொரு குழப்பத்தில் இருந்து மீண்டு வந்து இருக்காங்க இந்த நேரத்தில் நீங்க எல்லோரும் அவங்களுக்கு ஆறுதலாகவும், மன தைரியம் கொடுக்க கூடியவங்களாகவும் தான் இருக்கணும் வாழ்க்கையில் நிறைய இழப்புகள் வரும் அதை கடந்து போறது தான் இந்த உலகத்தில் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி” என்று கூற ஜானகி மற்றும் நரசிம்மன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“தேன்மதி முன்னால் மாத்திரம் சிறிது தைரியமாக பேச அவங்களுக்கு ஆறுதலாக இருக்க ட்ரை பண்ணுங்க” என்று விருத்தாசலம் கூறவும்

அவரைப் பார்த்து சரியென்று தலை அசைத்த சுரேந்திரன்
“நிச்சயமாக நாங்க அப்படி இருக்க ட்ரை பண்ணுறோம் டாக்டர்” என்று கூறினார்.

சிறிது நேரத்தில் சம்யுக்தாவோடு நடந்து வந்த தேன்மதியைப் பார்த்த கவிகிருஷ்ணா என்னவென்று சொல்ல முடியா ஓர் உணர்வில் சிக்கி தவித்துப் போனான்.

முதல் நாள் இரவு முழுவதும் தேன்மதியின் நினைவுகளோடு விழித்து கொண்டு இருந்தவன் எப்போது விடிந்தது என்று கூட உணர்ந்து கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தான்.

அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டே தன் சுய நினைவுக்கு வந்தவன் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே விருத்தாசலம் நின்று கொண்டிருந்தார்.

“டாக்டர்! நீங்க இங்கே? எப்படி? இவ்வளவு நேரத்துக்கு வந்துட்டீங்களா?”
என கவிகிருஷ்ணா ஆச்சரியமாக கேட்கவும்

தன் கையில் இருந்த கடிகாரத்தை அவனின் புறமாக காட்டியவர்
“நேரம் இப்போ ஒன்பது மணி இன்னைக்கு காலையில் மறுபடியும் தேன்மதியை பார்க்க வர்றதாக நேற்றே சொன்னேன் தானே மறந்துட்டியா?” என்று கேட்கவும்

தன் தலையில் தட்டி கொண்டவன்
“ஸாரி டாக்டர் கொஞ்சம் மறந்து போய் இருந்துட்டேன் நீங்க கீழே போய் ஒரு கப் காஃபி சாப்பிட்டு இருங்க அதற்குள்ள நான் ரெடியாகிட்டு வந்துடுறேன்” என்றவாறே அவரை ஹாலில் அமரச் சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்து கொள்ள விருத்தாசலம் புன்னகையோடு கவிகிருஷ்ணாவைப் பார்த்து கொண்டு இருந்தார்.

அவசர அவசரமாக தயாராகி வந்தவன் வந்து சாப்பிடுவதாக வேதவல்லியிடம் சொல்லி விட்டு விருத்தாசலத்தோடு தேன்மதியின் வீட்டை நோக்கி செல்ல வேதவல்லியோ குழப்பத்தோடு கவிகிருஷ்ணா சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றார்.

“நேற்று என்னடான்னா கூப்பிட கூப்பிட கேட்காத மாதிரி கோபமாக போனான் இப்போ மறுபடியும் சாப்பிடக் கூட இல்லாமல் அவசரமாக போறான் இவன் கொஞ்ச நாளாக சரியாகவே இல்லை என்ன ஆச்சு இவனுக்கு? எப்போ இருந்து இப்படி இவன் பண்ணுறான்?” என்று யோசித்து பார்த்த வேதவல்லி தன் கேள்விக்கான பதில் கிடைக்கவுமே அதிர்ச்சியாக அவன் சென்ற வழியை நிமிர்ந்து பார்த்தார்.

விருத்தாசலத்துடன் நடந்து வந்த கவிகிருஷ்ணவோ இனி தேன்மதியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் சிந்தனை வயப்பட்டவனாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த அந்த நொடியே அவனது பார்வை அவனையும் அறியாமல் தேன்மதியை தேடி வலை வீசியது.

அவளை காணாமல் சோர்ந்து போன தன் மனதை எண்ணி கவலை கொண்டவன் சம்யுக்தா தேன்மதியை தேடி செல்லவும் அவர் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றான்.

இப்போது மறுபடியும் தேன்மதியை காணவும் அத்தனை நேரம் சோர்ந்து போய் இருந்த அவன் மனம் காலை வேளை சூரியனை கண்ட தாமரை போல பரவசத்துடன் துள்ளலோடு எழுந்து கொண்டது.

தேன்மதி அனைவரையும் பார்த்து சிறு புன்னகையோடு அங்கு வந்து அமர்ந்து கொள்ள கவிகிருஷ்ணாவோ அவளது ஒரு பார்வைக்காக அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

கவிகிருஷ்ணாவின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து கொண்ட தேன்மதியோ அவனை நிமிர்ந்து பார்க்க மன துணிவின்றி தன் கைவிரல்களையே தலை குனிந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

“குட் மார்னிங் தேன்மதி!” விருத்தாசலத்தின் குரலில் நிமிர்ந்து அவரைப் பார்த்து

“குட் மார்னிங் டாக்டர்” என்று புன்னகைத்தவள் மறந்து கூட கவிகிருஷ்ணாவின் புறம் திரும்பவில்லை.

அவள் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடும் என்று முதலிலேயே அவனுக்கு தெரிந்து இருந்தாலும் அந்த நிலை தற்போது நடக்கும் போது ஏனோ அவனால் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தன் நிலையை எண்ணி விரக்தியுடன் புன்னகைத்து கொண்டவன் அதன் பிறகு தேன்மதியின் புறமாக தன் பார்வையை நகர விடவில்லை.

தன் கவனம் முழுவதும் விருத்தாசலம் கேட்கும் கேள்விகளிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அதன் பிறகு விருத்தாசலத்தையே பார்த்து கொண்டு நின்றான்.

“தேன்மதி இப்போ உங்களுக்கு எதாவது குழப்பங்கள் இருக்கா? நேற்று இரவு நிறைய கேள்விகள் கேட்டீங்க இப்போ அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்ததா தேன்மதி?”

“ஆமா டாக்டர் எல்லாம் கிளியர் ஆகிடுச்சு இப்போ எனக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை என்னோட கவி இப்போ எங்க கூட இல்லை” அந்த கடைசி வசனங்களை சொல்லும் போதே தேன்மதியின் குரல் தழுதழுத்தது.

விருத்தாசலம் ஏதோ கூற வரவும் உடனே தன் குரலை செய்து கொண்டு அவரைப் பார்த்து புன்னகத்தவள்
“என்னால என்னை சுற்றி இருந்த பலபேருக்கு இந்த கொஞ்ச நாட்களாகவே நிறைய கஷ்டம் கொடுத்துட்டேன் டாக்டர் அதற்கு முதலில் எல்லோரும் என்னை மன்னிச்சுக்கணும்” எனவும் விருத்தாசலம் கேள்வியாக தேன்மதியை நோக்கினார்.

“இல்ல அது அவங்க இல்லை இவங்களை நான் அது வந்து கவி இவங்க” என்று தடுமாறியவள் கைகளை ஆதரவாக தட்டி கொடுத்த விருத்தாசலம்

“நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுதும்மா எதுவாக இருந்தாலும் தயங்காமல், தடுமாறாமல் சொல்லும்மா தேன்மதி” எனவும் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு கொண்டவள் தன் கண்களை திறந்து கொண்டு எழுந்து கவிகிருஷ்ணாவை நோக்கி சென்றாள்.

“ஐ யம் ஸாரி க…டாக்டர் உங்களை பர்ஸ்ட் பார்த்ததுமே எனக்கு என்னோட கவியை பார்த்த மாதிரி இருந்தது அதுவும் இல்லாமல் அந்த நேரம் நான் யாரும் சொல்லுறதையும் கேட்கும் மனநிலையிலும் இல்லை அதோடு இடையில் நடந்த விஷயம் கொஞ்சம் எனக்கு மறந்து இருந்ததனால் அதை எல்லாம் சேர்த்து நான் உங்களை நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன் நேற்று தான் எனக்கு ஒவ்வொரு விஷயமாக தெளிவாக புரிய ஆரம்பித்தது என் கவி எப்படி எனக்காக ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பண்ணி கொடுப்பான்னு எனக்கு தெரியும் அந்த வித்தியாசத்தை நான் கொஞ்ச நாளாக நிறைய தரம் பீல் பண்ணி இருக்கேன் இருந்தாலும் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை உங்களை கவியாக நினைக்க வைத்துடுச்சு ஆனா இப்போ நான் முழுமையாக எல்லாவற்றையும் உணர்ந்துட்டேன் என்னோட கவி வேற நீங்க வேற இது நாள் வரைக்கும் நான் உங்களுக்கு கொடுத்த எல்லாக் கஷ்டங்களுக்கும் என்னை மன்னிச்சுக்கோங்க டாக்டர்” தன் இரு கரம் கூப்பி அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறியவளது கைகளை கவிகிருஷ்ணா கோபமாக தட்டி விட தேன்மதியோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

“உன் மனசில் என்ன நினைத்துட்டு இருக்க?” கோபமாக சத்தமிட்ட கவிகிருஷ்ணாவின் அருகில் வந்து அவன் தோள் மேல் கை வைத்த விருத்தாசலம்

“கிருஷ்ணா வேண்டாம் நீ இப்போ உன் நிதானத்துடன் இல்லை” என்று கூறவும்

அவர் கைகளை தன் தோளில் இருந்து விலக்கியவன்
“ஆமா டாக்டர் நான் என் நிதானத்துடன் இல்லை தான் இதோ நிற்குறாளே இவளை பார்த்த முதல் நாள்ல இருந்து நான் என் நிதானத்துடன் இல்லை தான் நீங்க அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா? தேன்மதி தவறாக என்னைக் கவியரசன்னு நினைத்து பழகுறாங்க அதை நான் என் காதலுக்காக பாவித்த மாதிரி ஆக்கிடாதேனு சொன்னீங்க அந்த ஒரு காரணமாக தான் நான் இவளை விட்டு கொஞ்சம் விலகி போனேன் ஆனா இப்போ இவ வார்த்தைக்கு வார்த்தை என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுறா நேற்று என் கண்ணில் பரிதாபத்தை மட்டும் தான் பார்த்ததாக இவ சொல்லுறா என்னால இதை எல்லாம் கேட்டுட்டு எப்படி டாக்டர் நிதானமாக இருக்க முடியும்?” என்று கேட்க அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.

தன் கண்களை இறுக மூடி தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் தேன்மதியின் புறம் திரும்பி அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டு அவள் கண்களைத் கூர்மையாக பார்த்தவாறே
“இப்போ என் கண்ணைப் பார்த்து சொல்லு தேனு! என் கண்ணில் வெறும் பரிதாபம் மட்டும் தான் உனக்கு தெரியுதா?” என்று கேட்க தேன்மதியோ அதிர்ச்சியில் விக்கித்துப் போய் நின்றாள்…….

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.