KS 5

KS 5

காதல் சன்யாசி 5(a)

மாலை நடந்ததை அவன் மனம் அலசிக் கொண்டிருந்தது. அவன் வங்கியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு லாரி அவனை தொடர்ந்து வந்தது. தான் பாதை விட்ட பிறகும் போகாமல் பின்னால் வர, அப்போதுதான் அவனுக்கும் சந்தேகம் தோன்றியது.

முதல் வேலையாக தன் வண்டியின் வேகத்தை குறைத்து மிதமான வேகத்தில் செலுத்தினான்.

தன் பார்வையை கூர்மையாக்கி சுற்றிலும் கவனிக்க, எதிரே சற்று தூரத்தில் வேறோரு லாரி அவன் வழியை மறித்து நிற்க, இவன் முன்னமே சுதாரித்து வேறு பாதையில் நுழைத்து வண்டியை செலுத்தலானான்.

மறுபடி திரும்பி பார்க்க, அந்த லாரி பின் தொடரவில்லை. அப்போதிலிருந்தே அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.
மாலை நடந்தது கொலை முயற்சியா அல்லது யதார்த்தமான நிகழ்வை, தானே அதீத கற்பனை செய்து கொள்கிறோமோ? என்று.

தன்னை கொலை செய்வதால் யாருக்கும் பெரிதாய் லாபமில்லை என்பதால் அதை எதார்த்தமான நிகழ்வென்ற முடிவிற்கு வந்ததிருந்தான்.

மிஸ்டர் கோதண்டராமரின் வெத்து வேட்டு மிரட்டலை அவன் பெரிதாக எடுத்து கொள்வதாயில்லை.

தன் மடிகணினியில் வழக்கமான வேலைகளை முடித்து விட்டு,
கொட்டாவி விட்டபடியே நேரத்தை பார்க்க, கடிகாரமுள் பன்னிரண்டை தாண்டி கொண்டிருந்தது.

சோர்ந்திருந்த கண்களை துடைத்துக் கொண்டு, மடிக்கணினியை அணைத்து விட்டு படுத்தான்.

அந்த நேரத்தில் தன் அலைபேசி ஒலிக்க சோர்வுடன் எடுத்து பார்த்தவன், அடுத்த நொடி படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தான். அவன் கண்ணிலிருந்து உறக்கம் எங்கோ பறந்து போனது.

உற்சாகமாய் அலைபேசியை உயிர்ப்பித்து, “ஹலோ” என்றான் மென்மையாய்.

மறுமுனையில் எந்த பதிலும் இல்லை நிசப்தமாய் இருந்தது.

குறும்பாக உதடு சுழித்து கொண்டவன், “என்னால மௌன மொழி எல்லாம் புரிஞ்சிக்க தெரியாது. நீங்க கொஞ்சம், வாய் திறந்து பேசினா எனக்கு உதவியா இருக்கும்” என்று அவன் இழுக்க,

அவன் வார்த்தை ஜாலத்தில் நிவேதா சிக்கிக் கொள்ள தான் செய்தாள்.

“தைரியமா ஃபோன் நம்பர் வாங்கினா மட்டும் போதாது, ஃபோன் செஞ்சு பேசவும் அதே தைரியம் இருக்கணும்” நிவேதா ஏளனமாகவே பதில் தந்தாள்.

அவன் இதழ் மடிப்பிற்குள் சிரித்து கொண்டான். “என்கிட்ட உன்னோட நம்பர் இருந்துச்சு, உன்னோட பேசணும்னு என் மனசும் அடிச்சுகிச்சு, ஆனா, ‘உன்னிடம் பேச என்னிடம் வார்த்தைகள் தான் இல்லாமல் போனது'” என்றான் தவிப்பாய்.

நிவேதா உருகி தான் போனாள்.

“இப்படி பாலிஷ் பண்ணி பேசறவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது தெரியுமா? மிஸ்டர் ராகுல் கிருஷ்ணன்” அவள் பொய் கோபம் காட்ட,

ராகுல், “எனக்கும் இப்படி பாலிஷா எல்லாம் பேச தெரியாது. ஏன்னு தெரியல, உன்கிட்ட பேசும்போது மட்டும் எனக்கு இப்படி தான் பேச வருது, நிவி” என்று பிதற்றினான்.

‘என்ன மாயம் இது?
அவன் எதை உளரினாலும்,
அது என் மனதை தைக்கிறது!

இது என்ன புது உணர்வு?
என்னை சிறகின்றி,
காற்றில் மிதக்க செய்கிறது!

எப்படி இருந்தவள் நான்?
அப்படி என்ன செய்து விட்டான்,
அவன் என்னை?

முதல் முதலாய் என் பெண்மையை பூக்க செய்து விட்டான்!’

இனம்புரியாத பரவசத்தில் அவள் பேதை மனம் பித்தாகியது.

“இந்த நேரத்தில ஃபோன்? ஏதாவது, முக்கியமான விசயமா?” ராகுல் கேள்வியை முடிக்காமல் இழுக்க,

இதற்கான பதிலை நிவேதா முன்பே யோசித்து வைத்திருந்தாள். “தமிழ்செல்வி என்னை பத்தி உன்கிட்ட என்ன சொன்னாங்கன்னு, நீ சொல்லவே இல்லையே?” அதை கேட்க தான் அழைத்ததைப் பொல சொன்னாள்.

அவள் பொய் காரணம் அவனிதழின் மென்னகையை விரிய செய்தது.

“தமிழ் உன்ன பத்தி நிறைய சொன்னா, அதை எல்லாம் கேட்டதுக்கு அப்புறம் ஒரு விசயம் மட்டும் எனக்கு நல்லாவே புரிஞ்சது”

“என்னது?”

“நீ வானத்தில இருக்கிற நட்சத்திரம். உன்ன என்னால பார்த்து ரசிக்க தான் முடியும். பறிக்க முடியாது” இதழ் மடித்து சற்று தோய்வாக அவன் சொல்ல,

“தனிமைபட்டிருக்கும் இந்த விண்மீனுக்கு ஒரு துணை வேணாமா?” மிக ரகசியமாய் ஒலித்த அவள் குரலில் ஏக்கமும் கலந்திருந்தது.

“விண்மீனுக்கு மின்மினி பூச்சி துணையாகுமா! என்ன?”

ராகுல் அவள் மனதின் ஆழம் அறியவென வேண்டுமென்றே விட்டத்தியாய் பேச, நிவேதா முகம் வாடி போனாள்.

“ராகுல், தூங்காம இன்னும் என்ன செய்யற?” பார்வதியின் குரல் மகனை கண்டிக்க,

“அது, இல்ல ம்மா, ஃப்ரண்ட் கிட்ட பேசிட்டு இருக்கேன்! கொஞ்ச நேரம் ம்மா” என்றான் கெஞ்சலாய்.

“தூக்கத்தை விட்டுட்டு அப்படி என்ன தான் ஃபோன்ல பேச்சோ?” என்று அலுத்தபடியே அவர் உறங்க சென்றார்.

அவர்கள் பேசுவதை எதிர் முனையில் கேட்டு கொண்டிருந்த நிவேதா, “ஏன் ராகுல் பொய் சொன்ன? என்கூட தான் பேசறேனு உண்மைய சொல்ல வேண்டியது தான” என்று கேட்டாள்.

“அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணு கிட்ட பேசறேன்னு, அம்மாகிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் தைரியம் வரல” ராகுல் உண்மையை அப்படியே ஒப்புக் கொண்டான்.

“ஏன்? அம்மாகிட்ட அவ்வளவு பயமா? இல்ல, உனக்கு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் யாரும் கிடையாதா! என்ன?” நிவேதா விடாமல் கேட்க,

“அம்மா மேல பயமில்ல, மரியாதை, அன்பு தான் இருக்கு! என் மத்த கேர்ள் ஃபிரண்ட்ஸும் நீயும் ஒண்ணாகுமா என்ன?” என்று இழுத்தான் அவன்.

“ஏன்? நான் உன் ஃபிரண்ட் இல்லையா?” நிவேதா வாட்டமாய் கேட்க,

ராகுல், “இல்ல… அதுக்கும் மேல” என்றான் மெதுவாய் அவன் இளமனதின் துள்ளலோடு.

நிவேதாவின் கன்னங்கள் வெட்கத்தில் விடியல் வானம் போல சிவந்து போனது.

தனக்கான அவளின் நாணத்தை அவனால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவளின் மௌனத்தின் பொருளை அவனால் இப்போது நன்றாகவே உணர முடிந்தது.

# # #

நிவேதா மனம் நெகிழ்ந்து ராகுல் கிருஷ்ணனைப் பற்றி சொல்ல சொல்ல கேட்டு கொண்டிருந்த இருவரும் வாய் பிளந்தனர்.

“உனக்கென்ன பைத்தியமா நிவி! எத்தனை பிஸ்னஸ் மென், கோடிஸ்வரங்க, ஃபாரினர்ஸ், உன்கிட்ட ப்ரோஃபோஸ் பண்ணாங்க. அப்ப எல்லாம் பிடிவாதமா மறுத்துட்டு, இப்ப வந்து யாரோ ஒருத்தனை லவ் பண்றதா சொல்ற?” ரேணுகா ஆதங்கமாய் படபடத்தாள்.

நிவேதா மென்னகை மிளிர, “நீ ராகுலை நேர்ல பார்த்தது இல்ல, அதனால தான் இப்படி பேசற. நீ சொன்ன இந்த பணக்காரங்க கிட்ட எல்லாம் இல்லாத ஏதோவொரு ஸ்பெஷல் என் ராகுல் கிட்ட இருக்கு. அவனோட முதல் பார்வையிலேயே நான் விழுந்துட்டேன்! தெரியுமா?”
என்றாள் அவள்.

“வெறும் மாச சம்பளம் வாங்கிறவன் அவன், எப்படி உன் லைஃப்ல? உனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு நிவி. அதையும் கொஞ்ச யோசிச்சு பாரு” ரேணுகா தன் தோழிக்கு புரிய வைக்க முயன்றாள்.

“ஸ்டேட்ஸ் பார்த்து வந்தா அது பேரு காதல் இல்லயே ரேணு, கிருஷ்க்கும் எனக்கும் நடுவுல இருக்க இந்த அந்தஸ்து பேதம் எங்களுக்கு பெரிய விசயமா தோணல, அவன் எந்த பந்தாவும் இல்லாம விளையாட்டா பழகறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

“ஏய், இப்பெல்லாம் சில மிடில் க்ளாஸ் பசங்க, வசதியான பொண்ணுங்கள கரெக்ட் பண்ணறதுக்காக என்னெல்லாம் ப்ளான் பண்ணி செய்றாங்க தெரியுமா?” ரேணுகா கோபமாக பேசினாள்.

“என்னோட கிருஷ் ஒண்ணும் அப்படி பட்டவன் கிடையாது” நிவேதாவின் பதில் சீறிக் கொண்டு வந்தது. “அவனோட நான் நிறைய பேசி பழகாம இருக்கலாம். ஆனா, இதுவரைக்கும் யாரையும் பார்த்து நான் இவ்வளவு தடுமாறியது இல்லை. கிருஷ் எனக்கு வேணும், இந்த கொஞ்ச நாள்ல என் மனசு முழுக்க அவன் தான் பதிஞ்சு இருக்கான்” பொம்மைக்கு அடம்பிடிக்கும் குழந்தையாக நிவேதா பிடிவாதம் பிடிக்க,

மேலும் ஏதோ கோபமாய் பேச வந்த ரேணுகாவை தடுத்த மாலினி, “போதும் ரேணு, நீ கொஞ்சம் பொறுமையா நிவியோட மனசை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அவ லவ் பண்றா. இத்தனை நாள் காதல்னா காத தூரம் ஓடினவ, இன்னைக்கு வார்த்தைக்கு வார்த்தை அவன் பேரத்தான் சொல்றா” என்றவள்,

நிவேதாவிடம், “உங்கள்ல யார் முதல்ல காதலை சொன்னது நிவி?” என்று அவர்களின் காதல் கதையை ஆர்வமாய் விசாரித்தாள்.

இல்லையென்று மறுப்பாய் தலையாட்டிய நிவேதா, “ப்ச் ராகுல் எப்ப என்கிட்ட அவன் காதலை சொல்லுவான்னு தெரியலையே” என்று ஏக்கமாக சொல்ல,

“நீ வசதியானவங்கற தயக்கத்தில ராகுல் சொல்லாம இருந்துட்டா?” மாலினி சந்தேகத்தை கிளப்ப, நிவேதா துணுக்குற்றாள்.

“வீட்டுக்கு ஒரே புள்ள, அம்மாவுக்கு அடங்கின புள்ளன்னு சொல்ற, அவனோட அம்மா வேற பொண்ண பார்த்து கட்டிக்க சொல்லி, ராகுலும் எதிர்த்து பேச முடியாம ‘சரி’ சொல்லிட்டா!” மாலினி மேலும் நிவேதாவின் மனதை குழப்பினாள்.

“இப்ப என்ன செய்யறது மாலி?” நிவேதா கலவரமாய் கேட்க,

“முதல்ல, உன் காதலை ராகுல் கிட்ட வெளிப்படையா சொல்லிடு” என்று அவள் யோசனை கூற,

“நான் எப்படி?” நிவேதா தயங்கினாள்.

“உனக்கு உன் ராகுல் வேணும்னா வேற எதைபத்தியும் யோசிக்காத” மாலினி அழுத்தமாக சொல்ல, நிவேதாவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது.

# # #

அந்த பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைந்தவனின் பார்வை அங்கே ஒருமுறை வலம் வர, அவன் ஒற்றை புருவம் உயர்ந்து பிரமிப்பை வெளிப்படுத்தியது.

மிடுக்கான சீருடை அணிந்த ஓர் இளம்பெண் விரிந்த புன்னகையுடன் அவன் எதிர் வந்து, அழகான பூங்கொத்தை நீட்டி, அவனை வரவேற்க, ராகுல் குழப்பத்துடன் அவளோடு நடந்தான்.

அங்கே பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த ஒரு ஹாலுக்குள் அவன் அழைத்து செல்லப்பட்டான்.

அந்த இடத்தை பார்த்து ராகுல் அப்படியே மலைத்து நின்று விட்டான்.

அலங்கார தூண்கள், உயர்தர திரைச்சீலைகள், வண்ண ஒளியுமிழ் விளக்குகள்.

அவன் முரட்டு பாதங்களில் மிதிபட என்றே நடக்கும் பாதையில் உதிர்த்து தூவி விட்டிருந்த சிவப்பு நிற ரோஜா பூவிதழ்கள்.

அந்த மலர் பாதை முடிவில் இருவர் அமர்வதற்கென அலங்கரிக்க பட்டிருந்த மேஜை, நாற்காலிகள்.

அங்கே ரம்யமாய் வீசிய இதமான சுகந்தம்.

அவன் நெற்றி சுருக்கினான்.

அந்த பெண் அவனை அழைத்து வந்து நாற்காலியில் அமர்த்திவிட்டு நகர்ந்தாள்.

ராகுல் என்னவென்று குழப்பத்துடன் யோசிக்க, திடீரென ஒலித்த வயலின் இசையில் அவன் திரும்பினான்.

அங்கே நிவேதா பேரழகு பெட்டகமாய் அவனிடம் வந்தாள்.

அவனுக்காகவே இன்று முதல் முறையாக, அவள் தங்க பூக்கள் வேய்ந்த வெளிர் சிவப்பு நிற சேலை அணிந்து வந்திருந்தாள்.

வழக்கத்தை விட இன்று அவள் அழகு கூடி தெரிந்தாள். அவள் முகத்தில் மிளிர்ந்த வெட்க புன்னகை அவனது குழப்பத்தை தெளிவிக்க, ராகுலின் பார்வை அவளை விட்டு நகர்வதாக இல்லை.

அவனெதிரில் வந்து அமர்ந்தவள், “ஹாய் ராகுல்” என்றாள்.

“ஹாய்”

அவனிடம் இந்த ஒற்றை வார்த்தை பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை.

தன் மனதை புரிந்து, எப்போதும் போல அவனே முதலில் வளவளப்பான் என்று தான் எண்ணியிருந்தாள்.

ஆனால், அவன் கல்லுளிமங்கன் போல அமைதியாய் இருக்க, வேறுவழியின்றி அவளே பேச தொடங்கினாள்.

“என்ன சாப்பிடலாம் ராகுல்?” என்று கேட்டவளின் சின்ன பார்வை அசைப்பில், எங்கிருந்தோ வந்த வெய்டர் அவர்கள் முன்பு பவ்வியமாக நின்றான்.

“இல்ல, எனக்கு எதுவும் வேணாம்” அவன் மறுக்க, அவளின் அடுத்த விழி அசைப்பில் அந்த வெய்டர் மரியாதையோடு நகர்ந்து சென்றான்.

இப்போதும் அவர்கள் பின்னணியில் வயலின் இசை மெல்லியதாக கசிந்து கொண்டிருந்தது.

நிவேதா வார்த்தை வராமல் அவள் மௌனம் நீள, “சொல்லு நிவி, ஏதோ முக்கியமா பேசணும்னு என்னை வர சொன்ன” ராகுல் பொறுமை இழந்து கேட்டான்.

“ஒண்ணுமே தெரியாத சின்னப் பப்பா மாதிரி பேசாத ராகுல், ஏன்? நான் தான் சொல்லணுமா? நீ சொன்னா என்னவாம்?” தன் தவிப்பை உணர்ந்தும் அவன் அசராமல் கேட்க, அவள் உரிமை கோபம் காட்டினாள்.

அவன் இதழில் சிறு புன்னகை விரிய, “ஹலோ மேடம், ஏதோ பேசணும்னு சொன்னது நீங்க நான் இல்ல” என்றான் அவன் அலட்டிக்கொள்ளாமல்.

“ரொம்ப தான் பிடிவாதம் டா உனக்கு. சரி, நானே சொல்லி தொலைக்கிறேன்” என்று உதடு சுழித்தவள்,

“இப்பல்லாம், என்னை நானே புதுசா பார்க்கறேன், உன்னால! எனக்குள்ள ஏதேதோ மாறி போச்சு, உன்னால! எனக்கு சரியா சொல்ல தெரியல. இதுதான் காதலான்னும் தெரியல” அவள் மென் குரல் மெல்ல மெல்ல தேய்ந்து ரகசியமாய் ஒலிக்க,

அவன் பார்வை எந்த மாற்றமும் இன்றி, நிர்மலமாய் அவள் முகத்தில் பதிந்து இருந்தது.

நிவேதாவின் பிறை நெற்றி சுருங்க, “எனக்கும் கூட தெரியல நிவேதா, நிஜமாவே நமக்கிடையில இருக்கறது காதல் தானா! இல்ல, சாதாரண க்ரஷ் மட்டுமா?” ராகுல் கிறுக்கு தனமாய் கேட்டு வைக்க,

“இப்ப என்ன உனக்கு இதுல சந்தேகம்?” அவள் அவனை முறைப்போடு கேட்டாள்.

பின்னே தன் காதலின் முதல் பரிமாற்றத்திற்கு அவன் பதில் கேள்வி, அவளுக்குள் சுணக்கத்தை ஏற்படுத்தியது.

“எனக்கு என்னவோ நாம ரெண்டு பேருமே அவசரபடறோமோனு தோணுது. எதுக்கும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாம்னு நினைக்கிறேன்!” ராகுல் யோசனையாக கூற,

“ஏன், இப்படி எல்லாம் பேசற ராகுல்? என் ஃபீலிங்ஸ் உனக்கு விளையாட்டா போச்சா?” தன் வாழ்வின் துணையாக வரித்துக் கொண்டவன் இத்தனை தடுமாறுவான் என்று அவள் நினைக்கவில்லை.

“நீயே யோசிச்சு பாரு நிவி, நம்ம வாழ்க்கையில நம்ம ஃபீலிங்ஸ்ஸ தவிர வேறு எதுவுமே ஒத்து போகல” என்று சொல்லி விட்டு ராகுல் நெற்றியை தேய்த்து கொண்டான்.

தன்னை வீழ்த்திய அதே உணர்வு, தன் மனங் கொண்டவளையும் சாய்த்திருக்கிறது என்பதை எண்ணி அவனின் ஆண் மனம் குதூகளிக்க தான் செய்தது. ஆனால், ஏதோ நெருடல் அவனை அலை கழித்து கொண்டிருந்தது.

இந்த நெருடலோடு தன் உயிர் காதலை ஏற்றுக் கொள்ள அவன் மனம் ஒப்பவில்லை.

நிவேதா விக்கித்து போனாள். அவன் அலைபாய்தலில் இவள் காதல் இதயம் தாக்குற்றது.

“உன் பிராப்ளம் தான் என்ன ராகுல்? எனக்கு நீ பேசறது புரியல” அவள் தவிப்பாக கேட்க,

“ப்ளீஸ் நிவி, அந்த வயலின் சத்தத்தை நிறுத்த சொல்லு எனக்கு தலை வலிக்குது” என்றான் அவன், இத்தனை நேரம் இழுத்து பிடித்த அவன் பொறுமையை இழந்து.

நிவேதாவின் கையசைப்பில் வயலின் இசை நிறுத்தப்பட, அங்கே பேரமைதி சூழ, அவர்களின் மனதில் பேரிறைச்சல் ஏற்பட்டு இருந்தது.

காதல்! ஒரு கைக்குழந்தை போல! நாம் சொல்வதைப் போல ஆடவும் செய்யும். அதன் விருப்பம் போல நம்மை ஆட்டுவிக்கவும் செய்யும். ஆசையோடு அள்ளி அணைத்து கொண்டால் அழுது பதற வைக்கும்! வேண்டாமென்று விட்டு விலக முடியாமல் சிரித்து சிதறடிக்கும்!

இதுவரை ராகுல் நிவேதாவுடன் பழகிய நாட்களில், அவளிடம் சிறிதளவும் பணக்கார தனம் வெளிப்படவில்லை. அவளின் அந்த இயல்பான குணம் தான் அவனை மேலும் அவளிடம் ஈர்த்தது.

ஆனால் இன்று, அவளிடம் தெரிந்த ஆடம்பரம், அதிகார தோரணை அவனுக்குள் சலனத்தை உண்டாக்க செய்தது.

மனிதர்களின் ஏற்ற தாழ்வுகளில் இது போன்ற சஞ்சலங்கள் வருவது சகஜம் தான் என்றாலும், தனக்கான வாழ்நாட்கள் முழுக்க இத்தகைய சஞ்சலத்தை பற்றி கொண்டு வாழ அவனின் ஆணென்ற பிடிவாதம் இடம் தருவதாக இல்லை.

நிமிர்ந்தவன், நிவேதாவின் பரிதவித்த முகத்தை பார்க்க, அவன் உள்ளமும் தவிக்க தான் செய்தது.

ராகுல் சிறிது நிதானித்து, “எனக்கு உன்ன பார்த்ததும் ஜிவ்வுன்னு ஏறுச்சு, உன்னோட பேச, பழக ரொம்ப பிடிச்சது. லாங்க் லைஃப் நீ என்கூட வந்தா, நான் ரொம்ப ரொம்ப சந்தோசபடுவேன் ஆனா…?”

“…?”

“உன்னால என் வாழ்க்கை பூரா எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாம வர முடியுமா நிவி? உன் காதலோட மட்டும்”

ராகுல் வெளிப்படையாகவே கேட்க, இப்போது நிவேதாவுக்கு அவனின் தள்ளாட்டத்தின் காரணம் சரியாகவே புரிந்தது.

அவன் காதலை விட வேறேதும் அவளுக்கு உயர்வாக தோன்றவில்லை.

கசியும் கதிரொளியில் இதழ் விரிக்கும் பனிமலரைப் போல, அவள் முகம் சம்மதத்தோடு மென்மையாய் மலர்ந்தது.

அவள் மென்னகையில் ராகுலின் மனச்சுமை கறைய, அவளை பார்த்து ஒரு பக்கமாய் தலைசாய்த்து குறும்பாய் கண்ணடிக்க, நிவேதா செல்ல முறைப்போடு சிரித்து விட்டாள்.

தன் முன் நீட்டிய அவன் கையோடு, நெகிழ்வாய் தன் கை சேர்த்தவள், அவன் நெருங்கி வர, மனம் படபடக்க விழி விரித்தாள்.

“இப்பவாவது… ஏதாவது… சாப்பிடலாமே…” என்று திக்கி மொழிந்தாள் பேச்சை வளர்க்க முயன்று.

“ம்ம்” என்று ஆமோதித்து தலையசைத்த, அந்த கள்வனின் பார்வையும் விரல்களும் அவள் ஆப்பிள் கன்னத்தை வருடி கேட்க,

மனம் தாங்காத நாணத்தோடு அவள், தன்னவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

ராகுல், உலகையே வென்றுவிட்ட நெகிழ்வோடு தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

# # #

காதல் சன்யாசி 5(b)

வேலையின் நடுவே அலறிய கைப்பேசியை எடுத்து பார்த்த தமிழ்ச்செல்வியின் முகம் வாட்டமானது. அலைபேசியை உயிர்ப்பித்து பேசலானாள்.

“ஹலோ”

“எப்படி இருக்க தமிழு?” அதிக குழைவுடன் எதிர்முனையில் விசாரிப்பு வந்தது.

“நல்லாயிருக்கேன், சித்தி, என்ன விசயம் சொல்லுங்க?” தமிழ் சுற்றி வளைக்காமல் நேராக கேட்க,

“மாசம் பொறந்திடுச்சி, உன் அப்பாவ ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவணும், தம்பிக்கு காலேசு பீஸ் கட்டணும், சீக்கிரம் பணம் அனுப்பனேன்னா நல்லாயிருக்கும்” என்றாள் பதமாய்.

தமிழ்ச்செல்வி, “நாளைக்கு அனுப்பிறேன், சித்தி” என்று சொல்ல,

“நாளைக்கு என்ன நாளைக்கு இன்னிக்கு அனுப்புனா தான் என்னவாம்?” அவரின் பேச்சின் வேகம் கூடியது.

“இல்ல சித்தி, நாளைக்கு தான் சம்பளம் வரும். உடனே அனுப்பிடறேன்.”

“அப்ப சரி, நான் வெக்கிறேன்” என்று சொல்லி வைக்க, தமிழ்ச்செல்வியும் கைப்பேசியை அணைத்தாள்.

“என்ன மேடம், உங்க சித்தியோட ஃபோன் தான?” அவள் அருகில் வந்த மேகலா சரியாக சொல்ல, தமிழ்ச்செல்வி ஆமோதித்து தலையசைத்தாள்.

“அதென்ன மத்த நாளெல்லாம் இல்லாம, மாசமாசம் ஒண்ணாந் தேதி மட்டும் சரியா உங்க சித்திக்கு உங்க ஞாபகம் வந்திடுது?” மேகலா சந்தேகமாக கேட்க,

“ஏன்னா, அன்னைக்கு தான மேடமோட சம்பள நாள், அதனால தான்” ராகவன் சிரித்து கொண்டே பதில் தந்தார்.

“அப்படியாவது, அவங்களுக்கு என்னோட ஞாபகம் வருதே, எனக்கு அதுவே சந்தோசம் தான் சர்” என்ற தமிழ்ச்செல்வி மெலிதாய் புன்னகைத்து நகர்ந்தாள்.

# # #

பச்சை பசேலென பனி தூவிய புல்வெளி விரிப்பு! சுற்றிலும் அழகு கொஞ்சும் வண்ண பூக்களின் வாசம்! சற்றே தள்ளி இருந்த குட்டி அருவியில் மெலிதாய் நீர் கசிந்தோடும் சத்தம் இனிமையாக ஒலிக்க, அந்த இடம் இயற்கையின் கொடையாகவே அமைந்திருந்தது.

மாலை கவிழ்ந்த இரவின் தொடக்க பொழுதில், வெண்ணிலவின் விளக்கொளியில், அந்த இடம் இன்னும் பேரழகாய் காட்சி தந்தது.

ராகுல் கிருஷ்ணன், நிவேதா கை பிடித்து அங்கே அழைத்து வர, விழி விரித்து வியந்து நின்றவளை காதலாய் ரசித்து நின்றான் இவன்.

மெல்ல மேனி உரசி செல்லும் உடல் விரைக்கும் குளிர் காற்றில், அவன் காதல் பார்வையில் இவள் மெல்ல தலைதாழ்த்தினாள்.

“நான் பொறந்து, வளர்ந்ததெல்லாம் கொடைக்கானல் தான். இங்க இவ்வளவு அழகான இடம் இருக்குன்னு எனக்கே தெரியாது. வந்த கொஞ்ச நாள்ல உனக்கு எப்படி இந்த இடத்தை பத்தி தெரிஞ்சது ராகுல்?” நிவேதா பேச்சை வளர்க்க முற்பட,

“வேறவழி, பிரபல பெண் தொழிலதிபர் நிவேதா இராமசந்திரன் மேல காதல் வந்ததால, நாயா அலைஞ்சு இந்த இடத்தை தேடி வேண்டியதா போச்சு”

“என்ன மிஸ்டர் ரொம்ப அலுத்துகிறீங்க போல?”

“பின்ன என்ன நிவி, டெ டைம்ல மீட் பண்ண முடியாது பிஸின்னு சொல்ற, அதுவும் மீட்டிங் டைம் கொடுத்திருக்க பாரு, ஈவினிங் செவனோ கிளாக்! அதோட பொது இடத்தில நம்ம சந்திப்பு இருக்க கூடாதுன்னு வேற உத்தரவு, உன்னோட இந்த ரூல்ஸ்க்கு எல்லாம் ஏத்தமாதிரி இடத்தை கண்டுபிடிக்க தேடி அலையணும் இல்ல” அவன் மூச்சு விடாமல் சொல்ல, இவளுக்கு மூச்சு வாங்கியது.

“இந்த இடத்தை பார்த்தா, நீ ஒண்ணும் அலைஞ்சு சலிச்சு தேடின மாதிரி இல்லையே, ரசிச்சு ரசிச்சு தேடின மாதிரி தான் இருக்கு” அவள் கண்கள் சுருக்கி சொல்ல,

“என் தேவதையை நான் சந்திக்கிற இடம், சும்மா அப்படி இப்படி இருந்தா நல்லாயிருக்குமா என்ன? அதனால தான்”

” அதோட என் எக்ஸ்ரே பார்வையில இருந்து, எந்த அற்புத அழகும் தப்பிக்க முடியாது, உன்ன மாதிரியே” ராகுல் குறும்பாய் அவள் நெற்றியை முட்டினான்.

“ஆமா ரொம்ப தான். அப்படியே ஓடிவந்து என்கிட்ட காதல் சொல்லிட்ட பாரு. நான் மட்டும் சொல்லாம விட்டிருந்தா, நீ ப்ரோப்போஸ் பண்றதுக்குள்ள நான் கிழவி ஆகி இருப்பேன்” என்று நொடிந்து கொண்டாள் அவள்.

ராகுல் வாய்விட்டு சிரித்து விட்டான். “நீ பண்ண மொக்க ப்ரோப்போஸலுக்கு பதிலா நீ சும்மாவே இருந்திருக்கலாம்” அவளை கலாய்க்க,

“அது என் ஃபிரண்ட்ஸ் கொடுத்த ஐடியா, ஏன் என் ப்ரோப்போஷலுக்கு என்ன குறைச்சல்? நீ தான் எல்லாத்தையும் சொதப்பிட்ட” என்று நிவேதா காட்டமாய் பதில் தர,

“முதல்ல உன் ஃபிரண்ட்ஸ காதல்னா என்னன்னு கத்துட்டு வர சொல்லு” என்றவன், “காதலை சொல்ல ஒத்த ரோஜா பூ போதும், ஒரு சின்ன கெஞ்சல் பார்வை போதும் நிவி, அவ்வளவு பெரிய பந்தா அவசியமே இல்ல” என்று அவளுக்கு பாடம் சொன்னான்.

“சரி தான், நீ தான் லவ்ல பிஎச்டி வாங்கினவன் ஆச்சே!” நிவேதா சொல்லி சின்னதாய் முறைக்க, ராகுலின் பார்வை அவளை ரசனையோடு வருடியது.

தன் கல்லூரி கால காதல் லீலைகளை எல்லாம் ராகுல் மறைக்காமல் சொல்லிவிட்ட பிறகும் கூட நிவேதா அதை பெரிது படுத்தாமல் விட்டது அவனுக்கு சற்று நிம்மதியாக தான் இருந்தது.

எதையும் மறைத்து பேசுவது அவன் சுபாவம் இல்லை என்பதால் தன்னவளிடம் அனைத்தையுமே உளறி கொட்டி இருந்தான் அவன்.

கடந்து போன நிகழ்வை பற்றி நிவேதா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. திறந்த புத்தகமாக இருக்கும் அவன் குணத்தின் மேல் மேலும் காதல் கூடியது அவளுக்கு.

“ஆஃபீஸ்ல டெர்ரர் மேம் நிவேதா, இப்ப என் முன்னாடி சின்ன குழந்தை மாதிரி சிணுங்கிட்டு இருக்கா” என்று அவன் சொல்லிவிட்டு அவள் மூக்கை நிமிட்டி விட,

அவன் கையை தட்டி விட்டவள், “ஆஃபீஸ்ல இப்படி நான் சிணுங்கிட்டு கிடந்தா, கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான்” என்றாள் மிடுக்காய்.

அவளின் மென் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டவன், “அப்ப, என்கிட்ட மட்டும் ஏன் நீ உன் கெத்தை விட்டுற நிவி?” என்று அவன் கண் சிமிட்டி கேட்க,

“நீ என் புருசன் டா! உன்கிட்ட மட்டும் எப்பவுமே நான் நானா தான் இருப்பேன்” அவள் பட்டென்று சொல்ல, ராகுல் அவள் காதலில் கரைந்து போனான்.

அவள் கையை அழுத்த பற்றி கொண்டவன், “ஐ லவ் யூ நிவி!” என்று அவள் விழி தடாகத்தில் மூழ்க எத்தனிக்க, நிவேதா அவன் காதலில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள்.

பதறாமல் பேசும் உன்
பார்வை போதும்!
சிதறாமல் வீசும் உன்
சிரிப்பு போதும்!
எட்டி நின்று பேச,
நான் எதுவாகி போனேன்!
நெருங்கி நீயும் வந்தால்
நான் நீயாகி போவேன்!

அவளின் காதல் மனம் கவிதை வரிகளை கிறுக்க, “இதையே எந்தனை முறை சொல்லுவ கிருஷ்?” என்று மேலே அலுப்பு காட்டினாள்.

“ஆயிரம், லட்சம், கோடி முறை சொல்லுவேன், என் வாழ் நாள் முழுக்க உன்ன காதலிச்சுக்கிட்டே இருப்பேன்!” ராகுல் துள்ளலாய் கத்தி சொன்னான்.

அந்த நிசப்தமான இரவு நேரத்தில் அவன் கத்த, “ஷ்ஷு ஷ்ஷு கிருஷ்” அவன் வாயை தன் கைகளால் பொத்த முயல, அந்த காதல் விளையாட்டில் மனம் நிறைந்த உற்சாகத்தில் இருவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்.

அவர்கள் காதலின் பொழுதுகள் தினம் ஒரு புது கவிதையாய் நகர்ந்து கொண்டிருந்தன.

விடிய விடிய வார்த்தையாடிய போதும் விடிந்த பின்னும் பேச மிச்சமிருந்தன அவர்களின் காதல் மொழிகள்.

அர்த்தமற்ற பேச்சுக்கள் சலிக்காமல் நீள, அர்த்தம் பொதிந்த மௌனங்கள் உள்ளத்து ஆசைகளை ஊற்றெடுக்க செய்தன.

செல்ல சண்டைகள், சின்ன தீண்டல்கள், பிள்ளை சிணுங்கள் அவர்கள் சந்திக்கும் நேரங்களை தித்திக்க செய்தன.

காலத்திற்கும் வாடாத காதலை பயிர் செய்ய முயன்றனர் இருவரும்.

# # #

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்த ராமசந்திரனை, தன் வீட்டு தோட்டத்தில் தள்ளியபடி மெல்ல நடந்தாள் நிவேதா.

அறையில் படுக்கையே கதியென இருக்கும் தன் தந்தையை நேரம் கிடைக்கும் போது, தோட்டத்திற்கு அழைத்து வந்து அவருடன் சிறிது நேரம் செலவிடுவது நிவேதாவின் வழக்கம்.

பங்களாவை சுற்றிலும் பரந்து நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருவதால், அந்த தோட்டத்தை ரசித்தபடி மகளுடன் சிறிது நேரம் கழிப்பது ராமசந்திரனுக்கும் பிடிக்கும்.

தங்கள் தோட்டத்தில் பூத்து குலுங்கும் வண்ண பனி மலர்களின் கொள்ளை அழகு, பச்சை கம்பள விரிப்பாய், அளவாக வெட்டி விடப்பட்ட புல்வெளி, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் செயற்கையான தண்ணீர் தடாகங்கள், ஆங்காங்கே நிமிர்ந்து நிற்கும் மரங்களின் உயரம், எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பதே இல்லை அவருக்கு.

“நிவி நிவி நிவிம்மா…”

ராமச்சந்திரன் உரக்க அழைத்தும் எந்த பதிலும் வராததால், பின்புறம் திரும்பி மகளை கவனித்தார்.

அவள் விழிகளை திறந்தபடி ஏதோ கனவுலகில் தொலைந்திருக்க, அவள் கையை அசைத்து, “என்ன டா, பலமான யோசனையில இருக்க போல?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டாட்” நிவேதா மறைத்து கூற, ராமசந்திரன் மகளை தன் முன்னால் அழைத்து கொண்டார்.

செல்ல மகளின் முகத்தை ஆராய்ந்த படியே, “யாரவன்?” என்று கேட்டு விட, நிவேதாவின் உடல் குப்பென வியர்த்து போனது.

தன் அப்பா தன்னை இத்தனை சரியாக எடை போடுவாரென்று, அவள் நிச்சயம் நினைக்கவில்லை. அவர் முன்பு விழிகள் அலைபாய மௌனமாக நின்றாள் நிவேதா.

ராமச்சந்திரன், “அவன் பேரை நீயா சொல்ல போறியா? இல்ல, என் ஏஞ்சலோட மனச கொள்ளையடிச்ச திருடனை நானே கண்டுபிடிச்சு சொல்லவா?” மேலும் சவால் விடுவதைப் போல கேட்டார் அவர்.

தன் அப்பாவிடம் இனிமேலும் எதையும் மறைக்க முடியாது என்று தோன்றியது நிவேதாவிற்கு.

எனவே, சற்று நாணமும் தயக்கமுமாய் அவன் பெயரை மென்மையாய் உச்சரித்தாள், “ராகுல் கிருஷ்ணன்” என்று.

# # #

ராகுல் புருவத்தை உயர்த்தி, “என்ன சொல்ற நீ?” என்று திகைத்தான்.

“உன்னபத்தி நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அப்பா உன்ன நேர்ல வந்து பார்க்க சொன்னார்” நிவேதா மறுபடி அழுத்தி சொன்னாள்.

“நான் உன் அப்பாகிட்ட என்ன பேசறது?” ராகுல் தயக்கமாக கேட்க,

“நம்ம கல்யாணத்தை பத்தி பேசு” நிவேதா பதில் நேராய் வந்தது.

“என்ன? கல்யாணமா?” ராகுலின் கண்கள் விரிந்தன.

நிவேதா அவன் அதிர்ச்சியைக் கண்டு முகம் சுருங்கியவளாய், “ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற? என்னை கல்யாணம் செய்துக்கிற ஐடியா இல்லையா உனக்கு?” என்று காட்டமாய் கேட்டாள்.

“ச்சே ச்சே நான் அப்படி சொல்லல நிவி” என்று அவசரமாய் மறுத்தவன்,
“இப்ப தான காதலிக்கவே ஆரம்பிச்சு இருக்கோம். அதுக்குள்ள கல்யாணமான்னு தான் யோசிக்கிறேன்” என்றான் தயக்கமாய்.

“அப்பாகிட்ட நானா எதுவும் சொல்லல கிருஷ். ஆனா, அவரே எல்லாம் தெரிஞ்சு கேட்கும் போது என்னால மறைக்க முடியல” என்று அவள் விளக்கம் தர, ராகுல் யோசனையுடன் அமைதியாக இருந்தான்.

“அப்பாவ பார்க்க நீ வர இல்ல?” நிவேதா சந்தேகமாய் கேட்க,

ராகுல் கிருஷ்ணன் சரியென்று மேலும் கீழுமாக தலையாட்டி வைத்தான்.

சட்டென அவளிடம் திரும்பி, “ஏய் நிவி, உன் அப்பாவோட கேரக்டர் எப்படி?” ஒருவித படபடப்புடன் அவளை விசாரித்தான்.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!