Katre-18

கவிகிருஷ்ணாவை அருகில் பார்த்ததுமே தேன்மதியின் முகமோ அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

அவளது அந்த முக மாற்றத்தை பார்த்து மனதளவில் நொறுங்கி போனவனோ எதுவும் பேசாமல் தன்னருகில் நின்ற நர்ஸிடம்
“அவங்களை செக் அப்க்கு ரெடி பண்ணி அழைச்சுட்டு வாங்க” என்று விட்டு சென்று விட ஜானகியோ சிந்தனை வயப்பட்டவராக அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்றார்.

“அத்தை நீங்களும் வர்றீங்களா?” தேன்மதியின் கேள்வியில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவர் அவளைப் பார்த்து புன்னகையோடு சரியென்று தலை அசைத்து விட்டு அவளுடன் இணைந்து நடந்து சென்றார்.

‘இது என் கவி கிடையாது அப்படி இருந்தும் ஏன் எனக்கு இவரை பார்த்து இவ்வளவு தயக்கம்? எனக்கு என்ன ஆச்சு? இந்த இரண்டு, மூன்று வாரத்தில் நான் அவர் பக்கமாக போயிட்டேனா?’ தன் மன சிந்தனையை எண்ணி அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே சிலையென உறைந்து நின்றாள் தேன்மதி.

“என்ன ஆச்சு தேன்மதி?” ஜானகி தன் தோளில் கை வைத்து கேட்கவும்

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவள்
“ஆஹ் ஒண்ணும் இல்லை அத்தை காலில் ஏதோ இடிச்சுடுச்சு அது தான் நின்னேன் வேற எதுவும் இல்லை” என்று விட்டு முன்னால் நடந்து செல்ல

ஜானகியோ தன் மனதிற்குள்
‘இடித்தது காலிலா? மனதிலா? கூடிய சீக்கிரம் உனக்கே புரியும் கண்ணா’ என்றெண்ணிக் கொண்டு புன்னகையோடு அவளை பின் தொடர்ந்து சென்றார்.

கவிகிருஷ்ணா தேன்மதியை பரிசோதித்து பார்ப்பதற்காக எல்லா கருவிகளையும் தயார் படுத்திக் கொண்டு இருக்க அவளோ முயன்று தன் பார்வையை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி கொண்டு நின்றாள்.

நொடிக்கு ஒரு தடவை கவிகிருஷ்ணாவின் பார்வை தேன்மதியை தழுவி செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற ஜானகியோ மனதிற்குள் வேறு ஒரு திட்டம் தீட்டத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் தேன்மதிக்கு செக் அப் ஆரம்பித்து விட ஜானகி அந்த அறைக்கு வெளியே வந்து நின்று யோசித்து கொண்டு நின்றார்.

‘என் பையன் தான் இந்த உலகத்தை விட்டு சின்ன வயதிலேயே போயிட்டான் அவன் மேல் ஆசை வைத்த காரணத்திற்காக தேன்மதி தனியாக கஷ்டப்பட வேண்டுமா?’ மனதிற்குள் எழுந்த கேள்வியை மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு ஜானகி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க மறுபுறம் வேதவல்லி சம்யுக்தாவின் வீட்டின் முன்னால் அவர்களது வருகைக்காக காத்துக் கொண்டு நின்றார்.

சிறிது நேரத்தில் அவர்களது கார் வருவதைப் பார்த்ததும் வேதவல்லி ஆவலுடன் அவர்கள் வருவதைப் பார்த்த வண்ணம் நிற்க
“என்னங்க வாசலிலேயே நிற்குறீங்க? உள்ளே போய் இருந்து இருக்கலாமே?” சம்யுக்தாவின் கேள்விக்கு புன்னகைத்து கொண்ட சொன்ன வேதவல்லி தயக்கத்துடன் சம்யுக்தாவை ஏறிட்டு பார்த்தார்.

“காலையில் கிருஷ்ணா இங்க வந்து எதுவும் பேசுனானா?” வேதவல்லியின் கேள்வியில் தயக்கத்துடன் தன் பின்னால் நின்ற சுரேந்திரன் மற்றும் நரசிம்மனை திரும்பி பார்த்தார் சம்யுக்தா.

“நீங்க பேசிட்டு இருங்க எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை பார்த்துட்டு வர்றோம்” என்று விட்டு சுரேந்திரனும், நரசிம்மனும் அங்கிருந்து சென்று விட சம்யுக்தா கவலையுடன் வேதவல்லியை திரும்பி பார்த்தார்.

“காலையில் இருந்து எனக்கு மனதிற்குள் ஆயிரம் கேள்வியும், சிந்தனையும் ஓடிட்டே இருக்கு அதை தெளிவு படுத்த இந்த கேள்வி எனக்கு அவசியம்னு பட்டது அதற்காக தான் உங்க கிட்ட இதைப் பற்றி கேட்டேன்” வேதவல்லியின் முகத்தை பார்த்து மறுத்து பேச முடியாமல் சம்யுக்தா காலையில் நடந்தவற்றை கூற அவர் சொன்ன
செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து போய் நின்றார்.

“என்ன சொல்லுறீங்க சம்யுக்தா? கிருஷ்ணாவா அப்படி தேன்மதி கிட்ட கேட்டான்?”

“ஆமாங்க நாங்க கூட அந்த நேரத்தில் அதை எதிர்பார்க்கல எங்களுக்கு ஆரம்பத்திலேயே கிருஷ்ணா தம்பிக்கு மதி மேல ஒரு அபிப்பிராயம் இருந்தது தெரியும் ஆனா அவர் இப்படி அதை தடாலடியாக சொல்லுவார்னு எதிர்பார்க்கல அதற்காக நான் கிருஷ்ணா தம்பியை தப்பு சொல்லல நீங்க காலையில் கிருஷ்ணா இங்க வந்து எதுவும் சொன்னானானு திரும்ப திரும்ப கேட்டீங்க தானே? அதற்காக தான் நான் கிருஷ்ணா தம்பி சொன்னதை எல்லாம் உங்க கிட்ட சொன்னேன் வேறு எந்த தப்பான எண்ணத்திலும் இல்லைங்க”

“அய்யோ! அப்படி எல்லாம் எதுவும் நான் நினைக்கல சம்யுக்தா இப்போ தான் என் குழப்பத்திற்கு முழுமையாக பதில் கிடைத்த மாதிரி இருக்கு”

“ஹ்ம்ம்ம் நானும் உங்க கிட்ட இதைப் பற்றி பேச நினைத்து இருந்தேன் தேன்மதி கொஞ்சம் பிடிவாதமாக இருப்பா எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்தி அவளை செய்ய வைக்க முடியாது அவ கட்டுப்பட்டு நடக்குற ஆளுங்க இரண்டே இரண்டு பேர் ஒண்ணு கவியரசன் இன்னொரு ஆள் ஜானகி இந்த விஷயத்தை பற்றி நாங்க யாரும் அவ கிட்ட பேச முடியாது ஜானகி இங்க வந்த முதல் நாளே தேன்மதி கிட்ட இதைப் பற்றி பேசிப் பார்க்குறதாக சொன்னா நாங்க தான் அவ உடம்பு சரியானதும் பேசிக்கலாம்னு  இந்த விஷயத்தை தள்ளி போட்டோம் இப்போ இந்த விஷயம் இவ்வளவு தெளிவாக தெரிஞ்சதுக்கு அப்புறம் இனியும் அமைதியாக இருக்குறது சரி இல்லையே!”

“அப்படினா! சம்யுக்தா! நீங்க?” அதிர்ச்சியில் பேச வார்த்தைகள் இன்றி நின்ற வேதவல்லியின் கைகளை பற்றி கொண்ட சம்யுக்தா

“எங்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஒரு எண்ணம் இருக்கல ஜானகி தான் எங்களைப் பேசி பேசி இந்த முடிவை எடுக்க வைத்தா கவி இல்லைங்குறதுக்காக தேன்மதி தனியாக இருக்கணுமானு அவளுக்கு எப்போதும் கவலை இருந்துட்டே இருந்தது எப்போ கிருஷ்ணாவை ஊட்டியில் பார்த்தாளோ அப்போவே அவ முடிவு பண்ணிட்டா கடவுள் ஒரே மாதிரி இரண்டு பேரை எங்க கண்ணில் காட்டுனது இதற்காகத்தான்னு”

“சம்யுக்தா எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல!”

“இது நம்ம மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையே நம்ம முடிவு என்னனு நம்ம பேசிட்டோம் இனி எல்லாம் அவங்க இரண்டு பேர் கையிலும் தான்” சம்யுக்தாவின் கூற்றில் இருந்த நிதர்சனம் புரியவும் ஆமோதிப்பாக தலை அசைத்தார் வேதவல்லி.

ஹாஸ்பிடலில் செக் அப் முடித்து விட்டு தேன்மதி வெளியில் செல்ல போக
“தேன்மதி ஒரு நிமிஷம்” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றான் கவிகிருஷ்ணா.

“நான் காலையில் அப்படி நடந்து இருக்கக் கூடாது ஏதோ ஒரு வேகத்தில் அப்படி நடந்துட்டேன் ஐ யம் ஸாரி” கவிகிருஷ்ணா கூறியதை நம்ப முடியாமல் விழி விரித்து அவனை ஆச்சரியமாக பார்த்தாள் தேன்மதி.

“நான் நடந்துகிட்ட முறைக்காக மட்டும் தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டேனே தவிர பேசிய விடயங்களுக்காக இல்லை”

“ப்ளீஸ் திரும்ப திரும்ப அதையே பேசி என்னை கஷ்டப்படுத்தாதீங்க என்னால அவ்வளவு சீக்கிரமாக எதையும் மறக்க முடியாது”

“நான் உன்னை மறக்க சொல்லலயே இந்த நிதர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள தானே சொல்றேன்”

“என்னால முடியாது அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும் ப்ளீஸ் இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேண்டாம் வீணாக உங்க லைஃப்பை வேஸ்ட் பண்ணாமல் இதை விட்டு வேறு எதையும் பாருங்க ப்ளீஸ் கிருஷ்ணா”
கடகடவென எல்லாம் சொல்லி விட்டு அவனைத் தாண்டி சென்றவள் வெளியே வந்து அங்கிருந்த இருக்கையில் சோர்ந்து போய் இருந்தாள்.

“என்னம்மா டயர்டா இருக்கா?” தேன்மதியின் முகம் வாடி இருப்பதை பார்த்ததும் அவளருகில் வந்து நின்று அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்டார் ஜானகி.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தை தலைவலிக்குது அது தான்”

“அய்யோ! நான் வேணும்னா டாக்டரை கூப்பிடவா?” அவசரமாக எழுந்து கொள்ளப் போன ஜானகியின் கை பிடித்து

“வேண்டாம் அத்தை” என்றவள்

“தலை வலிக்கு காரணமே அந்த டாக்டர் தானே!” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

“என்ன சொன்ன கண்ணா?” ஜானகி தேன்மதியின் உதட்டசைவைப் பார்த்து விட்டு கேட்கவும்

அவரை பார்த்து புன்னகத்து கொண்டவள்
“ஒண்ணும் இல்லை என் செல்ல அத்தையே! வாங்க போகலாம் எனக்கு தூக்கம் வருது” என்றவாறே எழுந்து கொள்ள ஜானகியும் அவளோடு இணைந்து நடந்து சென்றார்.

“உங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்குங்க அத்தை”

“ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்ட்க்கு வந்தது உனக்கு உன்னை உட்கார வைத்துட்டு என்னை தூங்க சொல்லுறியா? என்ன ஒரு பெரிய மனது உனக்கு?!” கேலியாக சிரித்துக் கொண்டே கூறிய ஜானகியை பார்த்து சமாளிப்பாக சிரித்த தேன்மதி

“சரி சரி விடுங்க விடுங்க” என்று விட்டு கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தவளை கேள்வியாக நோக்கிய ஜானகி
“என்னடா யோசிச்சுட்டு இருக்க?” என்று கேட்கவும்

“ஆஹ் சும்மா தான் அத்தை எப்போ ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போறதுனு யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவளை
‘அப்படியா?’ என்பது போல் பார்த்தார் ஜானகி.

“மதி கண்ணா நான் ஒரு விஷயம் கேட்பேன் உண்மையாக பதில் சொல்லணும் சரியா?”
ஜானகியின் கேள்விக்கு சரியென்று தலை அசைத்தவள்

“நீங்க கேட்கப் போறது என்னனு நான் கெஸ் பண்ணிட்டேன் இருந்தாலும் பரவாயில்லை கேளுங்க” என்று கூறினாள்.

“கவியை மறுபடியும் பார்த்தால் நீ என்ன பண்ணுவ?”

“அத்தை!”

“எதற்கு இவ்வளவு ஷாக் ஆகுற? கவியை மறுபடியும் பார்த்தால் என்ன பண்ணுவ சொல்லு?”

“……..”

“நீ ஆரம்பத்தில் கிருஷ்ணா…”

“அத்தை ப்ளீஸ் வேண்டாம் இந்த விஷயத்தை பற்றி இனி யாரும் என் கிட்ட பேச வேண்டாம் அதையும் மீறி நீங்க பேசினால் என் ஒரே பதில் என் கவியை நான் எப்போதும், யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்” உறுதியாக தேன்மதி கூறி கொண்டிருந்த வேளை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணா அந்த வார்த்தைகளைக் கேட்டு அப்படியே உறைந்து போய் நின்றான்.

‘நான் தான் தேவையில்லாமல் தேன்மதியை தொந்தரவு பண்ணிட்டு இருக்கேன் போல இனி அவளை கஷ்டப்படுத்தவே கூடாது’ மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டவன் சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.

மறுபடியும் மாலை நேரம் தேன்மதியை வந்து சந்தித்த விருத்தாசலம் அன்று எடுத்த செக் அப் ரிப்போர்ட் எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்து விட்டு தேன்மதி பரிபூரணமாக குணமாகி விட்டதாக கூற பெரியவர்கள் அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர்.

“நாளைக்கே நீங்க ஊருக்கு கிளம்பலாம் மிஸ் ஸாரி மிஸஸ். தேன்மதி உங்களை டிஸ்சார்ஜ் பண்ணுவதற்கு இப்போவே எழுதி தர்றேன்” என்று விட்டு விருத்தாசலம் சென்று விட தேன்மதியோ புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தாள்.

தனக்கு எப்போதும் துணையாக இருந்த பாட்டி முதல் அங்கிருந்த நர்ஸ் வரை எல்லோரிடமும் தான் ஊருக்கு போவதாக கூறி விட்டு வந்தவள் கவிகிருஷ்ணாவின் அறையின் முன்னால் வந்து தயங்கி நின்றாள்.

அவனிடம் சொல்வதா? வேண்டாமா? என்று மனதிற்குள் அவள் கேள்வி கேட்டு கொண்டு நிற்கையில் சட்டென்று அவனது அறைக் கதவு திறக்கப்பட்டது.

கதவு திடீரென்று திறக்கப்படவும் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்க்க கவிகிருஷ்ணாவோ ஆச்சரியமாக அதே நேரம் குழப்பத்தோடு அவளை நோக்கினான்.

“நான் நாளைக்கு ஊருக்கு போறேன் அதை சொல்லிட்டு போக தான் வந்தேன் நான் வர்றேன்” அவன் முகம் பார்த்து கூறியவள் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட அவனோ தன் முக வாட்டத்தை வெளிக்காட்ட துணிவின்றி மற்றைய புறமாக நடந்து சென்றான்.

சிறிது நேரம் அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன்
“இனி தேன்மதி தன் வாழ்வில் இல்லை அவளைப் பார்த்து பழகிய இந்த ஒரு மாத கால நினைவுகளே தனக்கு போதும்” என தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டான்.

வழக்கம் போல வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்த கவிகிருஷ்ணாவின் பார்வை தேன்மதி தங்கி இருந்த வீட்டின் புறமாக செல்வதை கண்டு கொண்ட வேதவல்லி
“என்ன கிருஷ்ணா வெளியிலேயே நிற்குற?” என்றவாறே வாசல் நோக்கி வர

அவரை பார்த்து புன்னகத்து கொண்டவன்
“ஒண்ணும் இல்லை ம்மா நாளைக்கு தேன்மதி வீட்டுக்காரங்க எல்லோரும் ஊருக்கு கிளம்புறதாக சொன்னாங்க அது தான் பார்த்தேன்” என்று கூற

“நாளைக்கா?” என அதிர்ச்சியாக கேட்டார் வேதவல்லி.

“ஆமா ம்மா இதை கேட்டு நீங்க ஏன் அதிர்ச்சியாகுறீங்க? ட்ரீட்மெண்ட்க்கு வந்தாங்க குணமானதும் போறாங்க அவ்வளவு தான் வாங்க உள்ளே போகலாம்” என்று விட்டு கவிகிருஷ்ணா வீட்டினுள் சென்று விட வேதவல்லியோ தன்னை கடந்து சென்ற கவிகிருஷ்ணாவைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றார்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாரோ அது அவருக்கே தெரியாது.

தூரத்தில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் தன் சுய நினைவுக்கு வந்தவர் கவிகிருஷ்ணா கூறிய விடயம் பற்றிய சிந்தனையோடு திரும்பி நடந்தார்.

“காலையில் சம்யுக்தா அப்படி சொன்னாங்க இவன் இப்போ எதுவுமே ஆகாத மாதிரி பேசிட்டு போறான் என்ன தான் நடக்குது இந்த வீட்டில்?” குழப்பத்தோடு உள்ளே நடந்து சென்ற வேதவல்லி குளித்து விட்டு தயாராகி படியிறங்கி வந்த கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டு நின்றார்……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.