UUP–EPI 2

அத்தியாயம் 2

 

எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் பெண்களின் உடலில் அதிகமாகவும், ஆண்களின் உடலில் குறைவாகவும் காணப்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்கள் பூப்படையவும், அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் காரணகர்த்தா. பெண்களை பெண்கள் என அடையாளம் காட்ட உதவுவது இந்த எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான்.

 

அன்று

 

மீனாட்சி கொல்லையில் களை எடுக்கும் வேலையில் இருந்தார். அவர்களின் வீடு தான் அந்த கிராமத்திலேயே மிக சிறிய வீடு. ஒற்றைப் படுக்கையறை, குட்டியாக சமையல் அறை, நாற்காலிகளை நகர்த்தினால் மூன்று பேர் பாய் போட்டு படுக்கும் அளவுக்கு இருக்கும் வரவேற்பறை, வெளியே தனியாக கட்டியிருக்கும் குளியலறை என் மூவர் வாழ பாந்தமான இல்லம். வீட்டை சுற்றி கொஞ்சம் தாராளமாக இடம் இருந்தது. அதில் கொஞ்சமாக காய்கறி, நிறைய மல்லிகைப் பூச்செடிகள் என வளர்க்கிறார் மீனாட்சி.

மல்லிகையை மொத்தமாக ஜெயங்கொண்டமில் உள்ள பூக்கடைக்கு கொடுத்து சம்பாதிப்பார். அது போக தையல் தொழில் வேறு செய்கிறார். அந்தக் கிராமத்தில் விஷேச நாட்களில் தைப்பதற்கு நிறைய வரும். மற்ற நாட்களில் கொல்லைதான் அவர்களுக்கு சோறு போட்டது. மகள் சண்முகப்ரியாவுக்கு அடுத்து நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தவன் கண்ணன். அவன் பிறந்த அடுத்த மாதமே மீனாட்சியின் கணவர் சிவராமன் பக்கத்து தெருவில் இருந்த ஒரு சின்ன பெண்ணுடன் கம்பி நீட்டி இருந்தார். போனது அவர் மட்டும் இல்லை, மீனாட்சியின் ஏழை பெற்றோர் கடனை உடனை வாங்கிப் போட்டிருந்த நகை நட்டும்தான். மீனாட்சி கதறி அழுதது இரண்டே நாட்கள்தான். மூன்றாவது நாள் வழக்கம் போல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். ஊர் மக்கள் மீனாட்சியை முன்னே விட்டு பின்னே பேசிய புரணியை, கேலிப் பேச்சுக்களை, நடு ராத்திரி கதவைத் தட்டிய கணவான்களை எல்லாம் நெருப்புப் போன்ற பார்வையாலும், சாட்டைப் போன்ற நாக்காலும் ஓரம் கட்டி பிள்ளைகளுக்காக வாழ்ந்தார்.

பிள்ளைகளிடமும் எந்நேரமும் கண்டிப்புத்தான். சின்னவன் கண்ணன் ரொம்பவும் அமைதி. ஆனால் சண்மு தினமும் இல்லாத வம்பை எல்லாம் இழுத்து வருவாள். ஊரில் யாராவது ‘ஓடிப்போனவன் பெத்தவ’ என சொல்லி விட்டால், ஆள் யாரென்று பார்க்க மாட்டாள் அடுத்த நிமிடம் அவர்கள் நெற்றியை இவள் எறிந்த கல் பதம் பார்த்திருக்கும். தினம் தினம் முதுகில் பட்டாசு வெடிப்பதால், சண்முவுக்கு மட்டும் வருடம் முழுக்க தீபாவளிதான்.

நான்கு வயது தம்பிக்கு சாம்பார் சாதத்தைப் பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தாள் சண்மு.

“வாயப் பெருசா தொறடா கண்ணா! குருவி கணக்கா தொறந்தா நான் எப்போ ஊட்டி முடிச்சுட்டு வெளாட போறது!” வாய் சலித்துக் கொண்டாலும்  கை பொறுமையாக தம்பிக்கு ஊட்டியது. உட்கார்ந்த இடத்திலேயே மெல்ல வாய் திறந்து உணவை வாங்கிக் கொண்ட கண்ணன் பொறுமையாக மென்று முழுங்கினான். ஒரு கையை சாதத்திலும், மறு கையை தட்டைப் பிடித்தப் படி இருந்தவள்,

“டேய் கண்ணா! அக்காவுக்கு முதுகு அறிக்குதுடா! சொறிஞ்சு உடு!” என தம்பியை உதவிக்கு அழைத்தாள். காடு மேடு என பயம் இல்லாமல் சுற்றி வருபவள், தெருப்புழுதியில் விழுந்து புரள்பவள், குளிக்க சொன்னாள் ஊரையே கூட்டுபவள் இந்த சண்மு. உடல் முழுக்க சொறி சிரங்கு. மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து நகர விடாமல் இழுத்து சென்று குளிப்பாட்டி விடுவார் மீனாட்சி. வேப்பிலை, மஞ்சள் என அரைத்து சண்மு கதற கதற தேய்த்து விடுவார். ஆனாலும் அடங்க மாட்டாள் மகள். குளித்து முடித்த அரை மணி நேரத்தில் ஆள் விளையாடப் போயிருப்பாள். மீனாட்சிக்கு பெரும் தலை வேதனையே இவள் தான். அடித்து அடித்து சண்முவுக்கு உடல் மரத்து போனதோ இல்லையோ, மீனாட்சிக்கு கைகள் மரத்துப் போனது.

தன் பிஞ்சுக் கரங்களால் அக்காவின் முதுகை சொறிந்து விட்டான் கண்ணன்.

“அங்க இல்லடா! லெப்டுக்கா வா! அங்க இல்ல! இன்னும் கொஞ்சம் கீழ இறக்கு! ஆங் அங்கத்தான்! நல்லா சொறிடா!”

அம்பானி கூட சொறிவதற்கு அசிஸ்டேன்ட் வைத்திருக்க மாட்டார். நம் சண்மு வீட்டில் முதுகு சொறிவதற்கு கண்ணனையும், வெளியே போனால் அந்த வேலையைப் பார்க்க கதிரையும் நியமித்திருந்தாள். தம்பியையாவது பாசமாக கூப்பிட்டு சொறிய சொல்லுவாள். கதிரிடம் என்றுமே அதிகாரம்தான்.

கதிரும், சண்முவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இப்பொழுது ஒன்றாகவே கவர்மேண்ட் பள்ளியில் படித்தார்கள். ரவுடி பேபியான சண்முவிடம் மற்ற பிள்ளைகள் விளையாட தயங்குவார்கள். கதிரின் கண்கள் அப்படி இருப்பதால் அவனைக் கண்டால் ஊர் பிள்ளைகளுக்கு இளக்காரம். அவனைக் கேலி எனும் பெயரில் அடிப்பது, தள்ளி விடுவது என அழ வைத்துத் தான் அனுப்புவார்கள். தனித்து நின்ற இவர்கள் இருவரும் கைக்கோர்த்து நண்பர்கள் ஆனார்கள். என்னதான் கதிரை கேலி, கிண்டல், மிரட்டல் என படுத்தி எடுத்தாலும், மற்றவர்கள் அவனை வம்பிழுத்து விட்டால் எகிறி குதித்து சண்டைக்குப் போவாள் சண்மு. பார்வதிக்கு இவர்கள் நட்பு பிடிக்காவிட்டாலும், மகனுக்கு விளையாட வேறு யாரும் இல்லையே என கண்டும் காணாமல் இருந்து விடுவார்.

தம்பிக்கு உணவு ஊட்டி முடித்தவள், மெல்ல நடந்து தனது அன்னை என்ன செய்கிறார் என எட்டிப் பார்த்தாள். அவர் மும்முரமாக தோட்ட வேலையில் இருக்கவும், சத்தம் செய்யாமல் சமையல் அறைக்கு சென்றாள் சண்மு. உளுந்து டப்பாவை சத்தம் இல்லாமல் எடுத்து திறந்து உள்ளே கைவிட்டு அலசினாள். கையில் தட்டுப்பட்ட சில்லறையை தனது பாவாடை பாக்கேட்டில் போட்டுக் கொண்டாள். அப்போது வந்த லேட்டஸ்ட் பாட்டான உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு பாட்டை சீழ்க்கை அடித்தப்படியே தம்பியைத் தூக்கிக் கொண்டாள்.

“கண்ணா! குச்சி ஐஸ் வாங்க போலாமா?”

கண்கள் மலர சரி என தலையாட்டினான் அவன். நான்கு வயதானாலும் ஊட்டமான உணவு இல்லாமல் குட்டியாகத்தான் இருப்பான் அவன். சண்முவோ பழைய கஞ்சியாக இருந்தாலும் வஞ்சகமில்லாமல் சாப்பிடுவாள். அதோடு கதிர் வேறு அவன் வீட்டுப் பலகாரங்களை பார்வதிக்கு தெரியாமல் எடுத்து வந்துக் கொடுப்பான். அதையும் முழுங்கி விட்டு,

“என்னடா கதிரு, கொஞ்சமா எடுத்துட்டு வர. அடுத்த முறை நெறையா கொண்டு வரனும்! சரியா?” என கேட்டு வாங்கி சாப்பிடுவாள். அதனாலேயே கொஞ்சம் சதைப்பிடிப்புடன் கொலுக் மொலுக்கென இருப்பாள் சண்மு.

பள்ளி முடிந்து வந்ததும் கதிர் தூங்கி விடுவான். கண்களுக்கு நிறைய வேலைக் கொடுப்பதால், மதிய தூக்கம் அவனுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தூங்கி எழுந்ததும் தான் சண்முவைத் தேடி வருவான். கதிர் தூங்கும் நேரத்தில் இவள், அம்மாவுக்கு கொல்லையில் உதவி செய்வாள், தம்பியையும் பார்த்துக் கொள்வாள்.

கண்ணனை இடுப்பில் சுமந்தவாறே திருட்டுத்தனமாக கடையை நோக்கி எட்டுப் போட்டாள் சண்மு. கையில் இருந்த பணத்துக்கு ஒரு ஐஸ் மட்டும்தான் வாங்க முடிந்தது. அக்காவும் தம்பியும் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த குச்சி ஐசை சப்பியபடியே வந்தனர். கடைக்கு அடுத்து இருந்த தெருமுனையில் ஒரு உருவம் கீழே விழுந்துக் கிடந்தது. நமக்கு ஏன் வம்பு என அப்படியே போகாமல், கிட்டப் போய் பார்த்தாள் சண்மு.

அந்த உருவம் வேறு யாருமில்லை, கதிரின் அப்பா பரமுதான். மதிய உணவாக சரக்கைப் போட்டுவிட்டு நிதானம் தெரியாமல் ரோட்டில் விழுந்து கிடந்தார். தம்பியை இறக்கி அவர் பக்கத்தில் அமர்த்தியவள், அவரை தட்டி எழுப்பினாள். சண்முவுக்கு பார்வதியைத்தான் பிடிக்காது, பரமு என்றால் கொள்ளைப் பிரியம். அவரும் நிதானத்தில் இருந்தாள் மருமகளே என கொஞ்சுவார்.

“கதிரப்பா! ஏந்துருங்க!” என கையைத் தட்டினாள். கீழே விழுந்ததில் கை சிராய்த்து ரத்தம் வந்தது அவருக்கு. உடனே டர்ரென தன் பாவாடையைக் கிழித்தவள், அந்தத் துணியைக் கொண்டு அவருக்கு கட்டுப் போட்டுவிட்டாள். அவளுக்கு இருப்பதே நான்கு பாவாடைதான். அதில் ஒன்றை கிழித்ததிற்கு தன் முதுகு தோல் இன்று கிழியும் என அவளுக்குத் தெரியும். ஆனாலும் தன் கதிரப்பா ரத்தக் காயத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவளால். மெல்லிய முனகல் அவரிடம். அவர் வாயருகே தன் காதை வைத்துக் கேட்டாள் சண்மு.

“ஜக்கலக்கா பேபி ஜக்கலக்கா பேபி, நோநோநோநோ” என மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தார். சண்முவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்து விட்டாள். அவளது கலகல சிரிப்பில் மெல்ல கண் திறந்தார் பரமு. சண்முவைப் பார்த்ததும் கண்கள் மெல்ல ஒளிர்ந்தன.

“மம்மவளே!”

“நான் ஒன்னும் உங்க மருமக இல்ல! அந்த ஒன்ரைய நான் கட்டிக்க மாட்டேன் கதிரப்பா” என முறுக்கிக் கொண்டாள் அவள்.

பரமுவுக்கு புன்னகை எட்டிப் பார்த்தது. மெல்ல முயன்று எழுந்து அமர்ந்தார்.

“ஒன்னை லாணி(ராணி) மாதிரி பாத்துப்பான் என் மவேன்(மகன்). என் ஜெல்லம்ல! கதிருப்பயல ஒன்னை வுட யாழு நல்லா பாத்துப்பா!” என எட்டு வயது சண்முவிடம் சம்மந்தம் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

“ஒன்னும் வேணா! கதிரப்பா, இப்படியே உட்காந்திருங்க! நான் போய் பாரும்மாவ கூட்டிட்டு வரேன். வீட்டுக்குப் போலாம். என்னால உங்கள தூக்க முடியாது” என சொன்னவள், தம்பியை மீண்டும் இடுப்பில் இருத்திக் கொண்டு ஓட்டமாக கதிரின் வீட்டுக்கு ஓடினாள்.

அந்த ஊரிலேயே பெரிய வீடு என அழைக்கப்படுவது கதிரின் இல்லம்தான். பல அறைகள், காற்றோட்டமான வரவேற்பறை, பெரிய சமையல் அறை, கதிருக்கென தனி ரூம் அட்டாச் பாத்ரூமுடன் என சகல வசதிகளையும் கொண்ட வீடு அது. வீட்டின் வாசலில் போய் நின்றாள் சண்மு. வீட்டின் உள்ளே போக மாட்டாள். போனால் பார்வதி பார்வையாலே எரித்து விடுவார்.

“கதிரு, டேய் கதிரு” என கத்தினாள் அவள்.

பாதி தூக்கத்தில் இருந்தவன், படக்கென கண் முழித்தான். எப்பொழுதும் தூங்கி எழுந்தால், கண் பார்வை வசம் வர சில நிமிடங்கள் பிடிக்கும் அவனுக்கு. மெல்ல கண் மூடி ஆழ மூச்சு விட்டவன், பின் கண்ணைத் திறந்தான். அதன் பிறகு குடுகுடு ஓட்டம்தான். அவனுக்கு முன்பே பார்வதி வாசலுக்கு வந்திருந்தார்.

“பார்த்து வாடா கதிரு! தூங்கி எழுந்ததும் மெதுவா வரனும்னு எத்தனை தடவை சொல்லறது? எங்கயாச்சும் இடிச்சுக்கிட்டனா யாருக்கு கஸ்டம்?” மெல்ல கடிந்துக் கொண்டவர், எட்டு வயது மகனைத் தூக்கிக் கொண்டார். தன் தோழியின் முன் சின்னக் குழந்தை மாதிரி தன் அன்னைத் தூக்கிக் கொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“எறக்குங்கம்மா, எறக்குங்க!” என மெல்ல திமிறியபடி கீழே இறங்கிக் கொண்டான் கதிர்.

“என்னடி ராங்கி? இந்த நேரம் கதிரு தூங்குவான்னு தெரியும் தானே! எதுக்கு அவனை எழுப்புன?” என சண்முவைக் கடிந்துக் கொண்டார் பார்வதி.

“கதிரப்பா ரோட்டுல விழுந்துக் கெடக்காரு! கைல ரத்தம்” என விஷயத்தை சொன்னாள் சண்மு.

“சேலைக்கடியில ஒளி வச்சிருந்த காச காணோம்னு பார்த்தப்பவே தெரியும் இந்தாளு இப்படி தான் பண்ணி வைக்கும்னு. எவன் எவனுக்கோ சாவு வரது! இந்தாளுக்கு வந்து தொலைய மாட்டுதே!” என புலம்பியவர்,

“எலே கதிரேசு!” என சத்தமிட்டு அழைத்தார். சின்ராசுவின் தகப்பன் தான் இந்த கதிரேசு. அவரின் குடும்பம் இவர்களின் பக்கத்து வீட்டில் தான் இருந்தார்கள். பார்வதிக்கு நெருங்கிய சொந்தம். வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து பெண் பார்த்துக் கட்டியும் கொடுத்தார். பார்வதியின் மேல் அளவுக்கடந்த விசுவாசம் அவனுக்கு.

“என்னக்கா?” என ஓடி வந்தான்.

“உங்க மாமா, ரோட்டுல விழுந்து பொரண்டு கோலம் போட்டுட்டு இருக்காறாம். இந்தக் குட்டிய கேட்டு எந்த ரோடுன்னு பாத்து அள்ளிட்டு வாடா”

“சரிக்கா” என சண்மு முன்னே போக பின் தொடர்ந்தார் கதிரேசு. அவர்களுடன் போகப் பார்த்த கதிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் பார்வதி.

“என் ராசால்ல! கண்ணுக்கு மருந்து விட்டுட்டு ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கனும்னு டாக்டரு சொன்னாருல! அப்போத்தானே வருஷ கடசில ஆப்பரேசன் பண்ணறப்போ எல்லாம் சரியா இருக்கும்! போய் தூங்குடா என் சாமி” என மகனைக் கெஞ்சினார் பார்வதி.

மற்ற விஷயத்துக்கு பிடிவாதம் பிடிக்கும் கதிர், கண் என வந்து விட்டால் சொன்னப் பேச்சை கேட்பான். அவனுக்கு கண் நன்றாக வேண்டும் எனும் வெறியே இருந்தது. மற்றவர்களைப் போல இரண்டு கண்ணும் ஒரே நேர்க்கோட்டில் பார்த்துக் கொள்ள வேண்டும், போலிசாக வேண்டும், சண்முவை தோழியாக பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும், ஒன்ரை என அழைப்பவள் கதிர்வேலன் என அழைக்க வேண்டும் என பல லட்சியங்கள் இருந்தன அந்தக் குட்டி இதயத்தில். சரி என தலையாட்டியவன், மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கண் மூடிக் கொண்டான்.

அன்றிரவு பிள்ளைகள் படுத்து விட, விளக்கை அணைத்து விட்டுப் படுக்க ஆயத்தமான மீனாட்சியின் காதில் மெல்லிய கதவு தட்டும் சத்தம் கேட்டது. கொஞ்ச நாளாக இல்லாத வழக்கம், மீண்டும் ஆரம்பித்ததில் மிரண்டுப் போனார்.

“யாரது? நேரங்கெட்ட நேரத்துல வாசக்கதவ தட்டுறது? அருவா முனையால வகுந்துருவேன் வகுந்து” என சத்தமிட்டார் மீனாட்சி.

“மீனாம்மா! நான் தான் கதிரு”

‘ராத்திரி நேரத்துல இந்தப்பய புள்ள இங்க என்னப் பண்ணுது!’ என யோசித்தவாறே போய் கதவைத் திறந்தார் மீனாட்சி. நண்பனின் குரல் கேட்டு சண்முவும் எழுந்து வந்திருந்தாள்.

“என்னடா கதிரு இந்த நேரத்துல?” என கேட்டார் மீனாட்சி. அவர் பின்னால் சண்மு தலையை சொறிந்தப்படியே நண்பனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“அம்மா இப்போதான் தூங்குனாங்க! அதான் நான் இப்ப வந்தேன்”

“எதுக்குடா?” என கேட்டாள் சண்மு.

“அப்பா கையில பாவாடைய கிழிச்சி கட்டுப்போட்டியா?”

அந்த விஷயத்தை இன்னும் மீனாட்சி கண்டுப்பிடித்திருக்கவில்லை. பயத்துடன் அவரை ஏறிட்டவள்,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என சத்தமாக மறுத்தவள் கதிரை முறைத்துப் பார்த்தாள்.

“இப்ப ஏன் பொய் சொல்லுற? அது உன் பாவாடை துணிதான். எனக்குத் தெரியும்! உங்கிட்ட இருக்கறதே நாலு பாவாடைதானே! அதான் மனசு கேக்கல. அம்மா புடவை ஒன்னு உனக்காக எடுத்துட்டு வந்தேன். இந்தா வாங்கிக்கோ” என இவ்வளவு நேரம் கையில் பிடித்திருந்த புடவையை அவளிடம் நீட்டினான் கதிர். மஞ்சள் கலரில் அழகான பட்டுப்புடவை இருந்தது அவன் கையில்.

மீனாட்சிக்கு பக்கென இருந்தது.

“இதெல்லாம் வேணாண்டா கதிரு” என அவர் சொல்வதற்குள் கை நீட்டி வாங்கி இருந்தாள் சண்மு. நண்பன் எது கொடுத்தாலும் வாங்கிப் பழகி விட்டாளே!

“திருப்பி குடுடி! அவன் ஆத்தா நம்மள திருட்டுக் கும்பல்னு சொல்லறதுக்கா!’ என மகளைத் திட்டினார் மீனாட்சி.

“வாங்கிக்குங்க மீனாம்மா! அம்மா நான் குடுத்தா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. சம்முக்கு பாவாடை சட்டை தச்சுக் குடுங்க.” என கெஞ்சினான் கதிர்.

“டேய் கதிரு! இதெல்லாம் ஒன்னும் வேணா! சேலைய எடுத்துட்டு கிளம்பு போ” என மிரட்டினார் அவர்.

உடனே அழ ஆரம்பித்து விட்டான் கதிர்.

“நீங்க எடுத்துக்கலனா நான் இங்க வாசலிலேயே படுத்துப்பேன். ரோட்டுல போற நாயெல்லாம் வந்து என்னைக் கடிக்கட்டும். நான் வீட்டுக்குப் போகவே மாட்டேன்” என அழுது அடம் பிடித்தான்.

“அம்மா, கதிரு அழறான்மா! அவன் கண்ணு வலிக்கும்மா! வாங்கிக்க, வாங்கிக்க” என மீனாட்சியின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுத்தவாறே மன்றாடினாள் சண்மு. தூங்க வேண்டிய நேரத்தில் சின்னவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்தில் கண்ணைக் கட்டியது அவருக்கு. மறுநாள் பார்வதியிடம் திருப்பிக் கொடுத்து விடலாம் என சேலையை வாங்கிக் கொண்டார்.

மீனாட்சி சேலையை எடுத்துக் கொண்டதும், பட்டென நின்றது கதிரின் அழுகை.

“சாப்டியாடா?” என கேட்டாள் சண்மு.

“சாப்டேன் சம்மு! ஆனா அழுததுல மறுக்கப் பசிக்குது” என பாவமாக சொன்னான் கதிர்.

“அம்மா சாப்ட என்ன இருக்கு?”

“ஆஹ்ன்! இட்லி, வடை, பொங்கல் இருக்கு! எவடி இவ! பழைய சோத்துல தண்ணீ ஊத்தி வச்சிருக்கேன்” என கடுப்பாக சொன்னார் அவர்.

“பழைய சோத்துல தண்ணியாம்டா! உனக்கு ஓகேவா?” என இவள் கேட்க, சரி என அவன் தலையாட்டினான்.

சண்முவே போய் உணவை எடுத்து வந்தாள். கீழே ஒழுக விட்டு அவன் சாப்பிடுவதைப் பொறுக்கமாட்டாமல், இவளே ஊட்டி விட்டாள். சிறுவர்கள் இருவரையும் ஒரு வித கலக்கத்துடன் பார்த்திருந்தார் மீனாட்சி!

‘இந்த நட்பு நிலைக்குமா?’ என மனம் அடித்துக் கொண்டது அவருக்கு.

 

இன்று

 

இரவெல்லாம் சரியாக தூங்க முடியாமல் அல்லாடியவன், காலைக் கருக்கலில் தான் தூங்க ஆரம்பித்திருந்தான். பத்து மணி வாக்கில் துயில் கலைந்து எழுந்தவனுக்கு, தலை விண்ணேன தெறித்தது. மெல்ல காலைக்கடன்களை முடித்தவன், ரூமில் இருந்து வெளியேறி கிச்சனுக்குப் போனான். நேற்று நிச்சயத்துக்கு வந்திருந்த சொந்தங்கள் இன்னும் அங்கங்கே அமர்ந்து கலகலத்தப்படி இருந்தனர். டைனிங் டேபிளில் அமர்ந்தவன்,

“அம்மா, காபி” என குரல் கொடுத்தான்.

“வரேண்டா!” என குரல் கொடுத்த பார்வதி மகனுக்குப் பிடித்த விதமாய் காபி கலக்கி டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்தார்.

சில்வர் தட்டை அவன் முன்னே வைத்தவர், இட்லியையும் பரிமாறினார்.

“நல்லா தூங்குனியா ராசா?” என கேட்டப்படியே அவனுக்கு இஸ்டமான காரப்பொடியை வைத்தார்.

சாப்பிட்டுக் கொண்டே தலையை மட்டும் ஆமேன ஆட்டினான்.

“நேத்து என் மருமக தங்க சிலையாட்டம் தகதகன்னு ஜொலிச்சால்ல! என் கண்ணே பட்டுருக்கும். என்ன அழகு, என்ன பதவிசு! அப்பப்பா காண கண் கோடி வேணும்டா ராஜா!” தவமங்கையை புகழ்ந்து தள்ளினார்.

மெல்லிய புன்னகை மட்டுமே அவனது பதிலாக இருந்தது. மகனின் தட்டில் இன்னொரு இட்லியை வைத்தவாறே,

“சீக்கிரம் கல்யாணத்த முடிச்சுப்புடலாம்னு சொன்னா, கால் குணமாகிற வரைக்கும் அந்தப் பேச்சே கூடாதுன்னு சொல்லிப்புட்ட. இப்பத்தான் வலி குறைஞ்சிருச்சே, கல்யாணத்த அடுத்த முகூர்த்தத்துல வச்சிக்கலாமா?” என பிட்டைப் போட்டுப் பார்த்தார் அவர்.

அதற்கு வேண்டாம் என மெல்லிய தலையாட்டால் மட்டும் வந்தது.

“அம்மா!”

“என்னடா ராஜா?”

“ஹ்ம்ம்! அவ ஏன் திரும்ப வந்துருக்கா?”

“அவன்னா எவ?”

“அதான் அந்த சண்முகப்ரியா!” விட்டேத்தியாக கேட்டான் கதிர்.

மகனை கூர்ந்து ஒரு கணம் பார்த்தார் பார்வதி. திரும்பி தாயை நேர் கொண்ட பார்வைப் பார்த்தான் கதிர்.

“ஊரு ஒலகம் மெச்ச வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு அந்த ஆத்திரேலியாக்காரனுக்கு(ஆஸ்திரேலியா) கட்டி வச்சாங்கல்ல, மூனே வருஷத்துல அவன் அத்துவுட்டுட்டான். இந்த ராங்கிக்காரிக்கு அடங்கி ஒடங்கி ஒருத்தன் கூட இருக்க முடியுமா! ஆத்தா வூட்டுக்கு, போன மச்சான் திரும்பி வந்த கதையா, வாழாவெட்டியா வந்து நிக்கறா!” என நீட்டி முழக்கினார் பார்வதி.

வாய்க்குக் கொண்டு போன கை அப்படியே அந்தரத்தில் நின்றது கதிருக்கு. நெஞ்சு இறுக்கிப் பிடிக்க, கண் கலங்குவது போல இருந்தது அவனுக்கு. கண்ணில் ஜீவன் அற்று, கொளுகொளு முகம் ஒட்டிப்போய், புஷ்டியான உடம்பு குறுகிப் போய், காற்றடித்தால் விழுந்து விடும் அளவில் இருந்த நேற்றுப் பார்த்த சண்மு மனக்கண் முன் வந்து நின்றாள்.

‘என்னடி சம்மு இதெல்லாம்?’ உள்ளம் ஊமையாய் அரற்றியது.

 

(உயிர் போகும்)