KS 8

KS 8

காதல் சன்யாசி 8

வேலையின் நடுவே அலரிய தொலைப்பேசியை எடுத்து காதில் ஒற்றினான்.

“ஹலோ, ராகுல் கிருஷ்ணன் ஹியர்”

“கோதண்டராமர் பேசறேன் தம்பி”

“சொல்லுங்க அண்ணே, இந்த மாசம் டியூ இன்னும் கட்டலையா ண்ணே, சீக்கிரம் கட்டிடுங்க, இல்லன்னா உங்களுக்கு தான் வட்டிதொகை இன்னும் ஏறும்”

“விளையாட்டு புள்ளயா இருக்கீங்களே தம்பி, எனக்கு வாங்கி தான் பழக்கம், கொடுக்கற வழக்கம் இல்ல”

“எங்க வேலையே கொடுத்து ரெண்டு மடங்கா வாங்கறது தானே அண்ணே,
வெத்து வசனம் பேசாம லோன அடைக்கிற வழிய பாருங்க சர்” ராகுல் விளையாட்டு பேச்சை விட்டு நேராக பதில் பேச, மறுமுனையில் சிரிப்பு சத்தம் பெரிதாக கேட்டது.

“பின்னால ஒத்த லாரிய பார்த்ததும், பாதை மாத்தி நுழைஞ்சு தப்பி ஓடினிங்களா தம்பி, அத்தனை உயிர் பயம்” அவன் குரல் நக்கல் தோணியில் வர, அன்று தன்னை பின்தொடர்ந்த லாரி இவனின் ஏற்பாடு தான் என்பதை ராகுல் உள்வாங்கி கொண்டான்.

“என்னப்பா பேச்சே காணோம், அன்னிக்கு உங்களுக்கு காட்டினது சும்மா பூச்சி மட்டும் தான், என்னை அனுசரிச்சு போக மாட்டேன்னு இன்னும் அடம்பிடிச்சீங்கனா, நடக்குற சேதாரத்துக்கு நீங்க தான் போறுப்பு தம்பி, எப்படி வசதி?”

“நீங்க இனி பணம் கட்ட தேவையில்ல. நான் கேட்க வேண்டிய அவசியமும் வராது” ராகுல் நிதானத்துடன் சொல்ல, “இது பொழைக்கற புள்ளைக்கு அழகு” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ராகுல் முகம் தீவிர யோசனை காட்டியது. ‘லோன் கேட்டதுக்கு லாரி வச்சு தூக்குவானா? இவனென்ன அரை மெண்டலா? இவனை வச்சு செஞ்சா தான நம்ப மனசு ஆறும்’
என்று யோசித்தவன், உடனே அதற்கான வழிமுறையையும் செயல்படுத்தலானான்.

அந்த வேலைகளை முடித்து விட்டு வீடு வர சற்று தாமதமாகி இருந்தது அவனுக்கு.

தன் வீட்டு வாசற் கதவை திறந்துவிட்ட தமிழ்ச்செல்வியை பார்த்து வியந்து அவன் புருவம் மேலேறி இறங்கியது.

“ஏய், தமிழ் நீயா? உன்ன எத்தனை முறை வீட்டுக்கு வான்னு கூப்பிட்டு இருப்பேன். இப்ப தான் இங்க வர வழி தெரிஞ்சதா உனக்கு?” என்று வழக்கம் போல, அவளை பதில் பேச விடாமல், படபடத்து கொண்டே உள்ளே வந்தான்.

இந்த நேரத்தில், அறையில் சோர்ந்து படுத்திருந்த பார்வதியைக் கவனித்தவன், “என்னாச்சு ம்மா? உடம்புக்கு என்ன?” என்று பதைபதைத்து வினவ,

பார்வதி, “ஒண்ணுமில்ல டா, வர வழியில தலைசுத்தி கீழ விழுந்துட்டேன். நல்லவேளை தமிழ் என்னை பார்த்து ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போய், இங்க கூட்டிட்டு வந்தா” சற்று தளர்ந்த குரலில் நடந்ததை எல்லாம் சொன்னார்.

“கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம் இல்ல ம்மா. அப்ப மட்டும் தமிழ் வரலைன்னா என்னவாயிருக்கும்?” என்று தாயை கடிந்தவன்,

“டாக்டர் என்ன சொன்னார் தமிழ்?” என்று விசாரித்தான்.

“பயப்பட எதுவும் இல்ல டா. ரத்த அழுத்தம் குறைஞ்சதால மயக்கம் வந்திருக்கு. மாத்திரை கொடுத்திருக்கேன். கொஞ்ச ஓய்வெடுத்தா சரியாயிடும்” என்று தைரியம் சொன்னாள் அவள்.

“ரொம்ப தேங்க்ஸ் தமிழ்”

“நமக்குள்ள என்ன டா புதுசா தேங்க்ஸ் எல்லாம். இனிமேலாவது, வெட்டியா ஊர் சுத்தாம அம்மாவ பத்திரமா பாத்துக்கோ அது போதும்” என்று சொன்னவள் ஏதோ நினைவு வர, சமையலறை நோக்கி விரைந்தாள்.

காய்கறி சூப் வைத்து எடுத்து வந்தவள், அதை ராகுலிடம் கொடுத்து, “பதமா ஆற வச்சு அம்மாக்கு கொடுத்துட்டு இரு, இதோ வரேன்” என்று பணித்துவிட்டு மறுபடி உள்ளே சென்று விட,

ராகுல் பதிலின்றி தோள் குலுக்கி விட்டு, சூப்பை ஆற்றி பார்வதியிடம் கொடுத்து பருக வைத்தான்.

தமிழ் அவன் முன் காஃபி கோப்பையை நீட்ட, “ஏய், நீ தான் ஃப்ர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்க, நான் தான் இதெல்லாம் உனக்கு செய்யணும்” என்று அவன் சொல்ல,

“அந்த கஷ்டம் எனக்கு வேணாம்னு தான் நானே செஞ்சிட்டேன்” தமிழிடமிருந்து சட்டென பதில் வந்தது.

இவன் திருதிருவென விழித்து அவள் தந்த காஃபியை வாங்கி பேசாமல் பருக,
பார்வதி தன் சோர்வையும் மறந்து சிரித்து விட்டார். அவருக்கு தான் தெரியுமே சமையலுக்கும் தன் மகனுக்கும் வெகுதூரம் என்று.

“இன்னைக்கு அம்மாவுக்கு ஓட்டல் சாப்பாடு வேணாம். நான் சமைச்சு தரேன்” என்று தமிழ் மேலும் சொல்ல,

“பரவால்ல, நான் பார்த்துக்கிறேன் விடு தமிழ், எதுக்கு உனக்கு வீண் சிரமம்” என்று பார்வதி மறுக்க,

“இவனுக்கு மட்டுமில்ல, எனக்கும் நீங்க அம்மா தான். இன்னைக்கு ஒருநாள் நீங்க ரெஸ்ட் எடுங்க ம்மா” என்று பரிவாக சொல்லிவிட்டு நகர்ந்தாள் அவள்.

“இந்த பொண்ணு இன்னும் மாறவே இல்ல கிருஷ்ணா. முன்ன போல எல்லாருக்கும் இரக்கபடற மனசோட இருக்கா” என்று பார்வதி நெகிழ்ந்து சொல்ல,

“ஆமா ம்மா. ஆனா, அவ வாழ்க்கை தான் மாறி போச்சு” ராகுல் வாட்டமாய் சொல்ல, பார்வதியும் முகம் வாடி போனார்.

“கடவுளுக்கு கண்ணில்லன்றது உண்மை தான் போல, விவரம் தெரியறத்துக்கு முன்னையே இவளோட அம்மாவ பரிச்சிக்கிட்டான். இப்போ, இந்த சின்ன வயசுல வாழ்க்கையும் இழந்து நிர்கதியா நிக்கிறா” என்று அவர் தமிழ்ச்செல்வி மீது பரிதாபபட்டார். இவனாலும் தோழி நிலை எண்ணி பரிதாப பட மட்டுமே இயன்றது.

சமையலறையில், காய்களை அரிந்து வேக வைத்துவிட்டு, சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவள்,

ராகுல் அங்கே வர, “அம்மாக்கும் உனக்கும் என்னடா பிரச்சனை?” என்று சந்தேகமாக வினவினாள்.

“ப்ச் நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். அம்மா எங்க காதலை ஏத்துக்க மறுக்கிறாங்க தமிழ்” ராகுல் சொல்லிவிட்டு பெருமூச்செறிந்தான்.

அவன் நிலை புரிந்து மேலும் ஏதும் கேட்காமல் அமைதியாக தன் சமையலை கவனிக்கலானாள்.

ராகுல் சமையல் மேடையில் எகிறி அமர்ந்து கொண்டு அவள் சமைப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். தன் கைப்பேசியை நோண்டிய படியே.

அவனுக்குள் ஏதோ யோசனை தோன்ற, “தமிழ், எனக்கு சமைக்க கத்து தரியா?” என்று ஆர்வமாக கேட்டவனை விசித்திரமாக பார்த்து வைத்தாள் இவள்.

“என்ன? சார்க்கு புது வேலையில எல்லாம் இன்ட்ரஸ்ட் வந்திருக்கு?” என்று கிண்டலாக கேட்க,

“அது இல்ல தமிழ், இப்ப நான் சமைக்க கத்துகிட்டா கல்யாணத்துக்கு அப்புறம், நிவி பக்கத்தில இருந்து அவளுக்கு நானே சமையல் கத்து கொடுக்கலாம்ன்னு…” ராகுல் வழிச்சலோடு இழுக்க,

தமிழ் அவன் பக்கம் நேராக திரும்பி, “உனக்கு நல்லாவே கிறுக்கு புடிச்சிருக்கு டா” என்று கலாய்த்தாள்.

அவனுக்குள் இனம்புரியாத வெட்கம் பரவ, விரல்களால் தலையை கோதியபடி அசடு வழிய சிரித்து கொண்டான். அதோடு அவன் விரல்கள் தன்னிச்சையாக நிவி பெயரை திரையில் அழுத்த, கைப்பேசியை காதில் ஒற்றியபடி அங்கிருந்து நழுவினான்.

சமைத்த உணவுகளை உணவு மேசையில் எடுத்து வைக்க, “இன்னிக்கு என்னால உனக்கு ரொம்ப சிரமம்” என்றவாறே பார்வதி வந்து அமர்ந்தார்.

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல ம்மா, உங்களுக்காக எது செஞ்சாலும் அது எனக்கு சந்தோசம் தான்” என்று மலர்ந்த முகமாய் உணவு பரிமாறினாள் சின்னவள்.

பார்வதி ராகுலை தேட, அவன் தோட்டத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்து, “இவனுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியல. முதல் முறையா என் பேச்சை தட்டி பேச ஆரம்பிச்சுட்டான்” என்று கவலையோடு சொன்னார்.

தமிழ்ச்செல்வி தயக்கமாய், “என்னை தப்பா நினைக்காதிங்க ம்மா. ராகுலும், நிவேதா மேடமும் உயிருக்குயிரா பழகறாங்க” என்று சொல்ல,

பார்வதி, “நீயும் புரியாம பேசாத தமிழ். காதலுக்கு அப்புறமும் வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு. அதை அவங்களால சேர்ந்து சமாளிக்க முடியாது” மகனின் எதிர்காலம் பற்றிய பயம் அவர் பேச்சில் தெரிந்தது.

“அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமான வாழ்க்கையை அமைச்சிக்க முடியும்ன்ற நம்பிக்கை அவங்களுக்கு இருக்கும் போது, அந்த நம்பிக்கை அவங்க மேல உங்களுக்கு ஏன் ம்மா இல்லாம போச்சு?” தமிழ் அவர்களுக்கு ஆதரவாக வாதிட்டாள்.

“உன் ஃப்ரண்ட்டு தான் முன் கோபகாரனாச்சே, கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் முட்டிகிட்டு தான் நிப்பாங்க” பார்வதியும் விடாமல் எதிர் வாதம் புரிந்தார்.

“இல்ல ம்மா, இத்தனை மாச பழக்கத்தில ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்காம இருப்பாங்கன்னு நினக்கிறிங்களா? அதோட, நிவேதா மேடம் ரொம்ப பொறுப்பானவங்க, சுகமில்லாத தன் அப்பாவ சின்ன குழந்தை மாதிரி கவனிச்சிக்கிறாங்க. அதால ரெண்டு பேருக்கும் ஒத்து போகும்னு தான் எனக்கு தோணுது ம்மா.”

தமிழ்செல்வி விளக்கி சொல்ல, பார்வதி யோசனையோடு அமைதியானார்.

“ராகுல், நிவேதா மேடம் சந்தோசத்துக்காக நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க ம்மா” என்று கேட்டுக் கொண்டவள்,

“நேரமாச்சு, நான் அப்ப கிளம்பறேன், இனிமே தவறாம மாத்திரை எடுத்துக்கோங்க ம்மா” என்று விடைபெற்று வெளியே வந்தாள்.

அவள் போவதை பார்த்து ஓடிவந்த ராகுல், “சமைச்சு வச்சுட்டு சாப்பிடாம போனா என்ன அர்த்தம் மேடம்?” என்று கேட்க,

“இப்பவே நேரமாச்சு டா, நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன். பை” என்றாள்.

“சரி, நானே உன்ன ட்ராப் பண்றேன்” அவன் உதவும் நோக்கில் கேட்க,

“எனக்கு வீட்டுக்கு போக நல்லாவே வழி தெரியும். நீ அம்மாவ பக்கத்தில இருந்து கவனிக்கற வேலைய மட்டும் பாரு” என்று கட்டளையிட்டு, சாலையில் வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறி மறைந்தாள்.

உள்ளே வந்த ராகுல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த பார்வதியை கவனித்து, “வீணா, மனச போட்டு குழப்பிக்காம முதல்ல சாப்பிடு ம்மா” என்று அவரின் அருகில் அமர்ந்தான்.

தன் செல்ல மகனின் முகத்தை வாஞ்சையோடு ஏறிட்டவர், “நிவேதாவ கல்யாணம் செஞ்சிக்கறதுல தான் உன்னோட சந்தோசம் அடங்கி இருக்குன்னா, உன் விருப்பப்படி நடக்கட்டும். எனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம் கிருஷ்ணா” என்று பார்வதி அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க,

ராகுல் ஆனந்த பரவசத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தன் அம்மாவின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, அவர் தந்த நான்கு செல்ல அடிகளையும் வாங்கி கொண்டு, “ஹுர்ர்ர்ரே ஹோய்ய் யா…” என்று
சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.

# # #

இருள் சூழ்ந்த இரவு வானில், முழு நிலவு மட்டும் தன்னந்தனியாக அலைந்து கொண்டிருந்தது.

அவனது ஆசை மனதை போல!

குளிருடன் கலந்த ஈரக்காற்று அவனை மெதுமெதுவாய் நனைத்து கொண்டிருக்க, பொறுமையை தொலைத்து அமர்ந்திருந்த ராகுலின் பின்னிருந்து இரு பூங்கரங்கள் அவன் தோளை உரசி, அவன் கழுத்தை மெல்ல இறுக்கின.

அந்த இதமான தீண்டலில் உன்மத்தமானான் அந்த காதலன்.

செம்மை படர்ந்த மலரிதழ்கள் மெத்தென்று அவன் கன்னத்தில் பதிந்து மீள, அது அவன் காத்திருப்பிற்கான வெகுமானமாய்.

தன் கழுத்திலிருந்த கைகளை பிடித்து அவன் சுழற்றி இழுத்த வேகத்தில், நிவேதா தடுமாறி அவன் மடியில் வந்து விழுந்தாள்.

தீரா காதலுடன் அவள் முகத்தை வெறித்தவன், “காத்திருக்கறதுல இவ்வளவு சுகம் கிடைக்கும்னா, உனக்காக காலம் பூரா காத்து கிடப்பேன் நிவி” என்று அவன் குறும்பாய் கண் சிமிட்ட,

வெட்கமும் தவிப்புமாய் அவன் மடியிலிருந்து எழுத்து நேராய் அமர்ந்தவள், “ம்ஹும், ‘காத்து கிடக்கிறது முட்டாளோட வேலை. எதுக்காகவும் காத்திருந்து நான் முட்டாளாக விரும்புல’ன்னு வாயடிக்கிற, மிஸ்டர் ராகுல் கிருஷ்ணன், நீங்களா இப்படி மாத்தி பேசிறிங்க” நிவேதா மிடுக்காய் அவனை கிண்டல் செய்தாள்.

நிவேதா தன்னை இத்தனை சரியாய் புரிந்து வைத்திருப்பதை எண்ணி ராகுல் மனதுக்குள் வியக்க, அவள் மீதான அவன் காதலும் கூடிக்கொண்டே போனது.

ராகுல் மறைத்து வைத்திருந்த பரிசு பொருளை அவள் முன் நீட்ட,

தாளாத ஆவலாய் அந்த பரிசை பிரித்து பார்த்த நிவேதாவின் கண்களும் முகமும் ஒன்றாய் மலர்ந்தன.

அழகான ஒற்றை கல் பதித்த தங்க மோதிரம் அது!

ராகுல் அவள் மென்கரம் பற்றி, “நாம சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கலாமா நிவி? இனியும் என்னால வெய்ட் பண்ண முடியும்னு தோணல” காதல் அவஸ்தையாய் அவன் வினவ,

“நம்ம கல்யாணத்துக்கு உன் அம்மாவோட சம்மதம் வேணுமே கிருஷ்” என்று குழந்தை போல சிணுங்கினாள் அவள்.

அவள் சிணுங்களை சிதறாமல் ரசித்தவன், “நம்ம கல்யாணத்துக்கு… அம்மா… சம்மதிச்சிட்டாங்க…” என்று உற்சாகமாய் கத்தி சொல்ல, நிவேதா சந்தோசத்தில் துள்ளி குதித்தெழுந்தாள்.

அவளின் காந்தள் மலர் விரலில் காதல் மோதிரம் அணிவித்தவன் அவள் புறங்கையில் அழுத்தமாய் முத்தமிட, நிவேதா அவனை ஆர தழுவிக் கொண்டாள்.

தங்கள் காதல் வென்றுவிட்ட மகிழ்ச்சியை அவர்களால் வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.

பெரிதாக அறிமுகம் ஏதுமின்றி முதல் பார்வையிலேயே ஜென்ம ஜென்ம பந்தமாய் அவர்களுக்கிடையே பூத்து விட்ட நேசம், இனி தங்கள் வாழ்நாள் முழுக்க வாசம் வீசும் என்ற பரவச உணர்வில் இருவருமே நிறைந்து போயினர்.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!